என்னை நீங்கள்தான் கொன்றீர்கள். நான் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கும் போதிலும் நீங்கள்தான் என் மரணத்துக்கு முழுக் காரணமும். உங்கள் விதிமுறைகளின் தடாகம் தூர்வாரப்படாமல் தேங்கி நஞ்சாகிப் போயிருந்தது. மீளும் காலடிச் சுவடுகள் இல்லா அந்த நச்சுப் பொய்கையில் தெரிந்தே நீரருந்தி இறந்த வெள்ளாடு நான். தாகம் என் வரம். நீங்கள் அதைச் சாபமாக்கிவிட்டீர்கள். இன்று நான் கரையோரம் நின்று வேடிக்கை பார்ப்பவர்களுக்கு ஓர் அபாய எச்சரிக்கை. விதிகளை மோதித் தகர்க்கவே முயன்றேன். மரித்த என் தேகமோ விதிகளின் மண்டபத்தைத் தாங்கும் கல் தூணாக ஆகிவிட்டிருக்கிறது. நீங்கள் தந்திரசாலிகள்தான் ஒப்புக்கொள்கிறேன்.
அது ஆரம்பித்தபோது உண்மையிலேயே அப்படி இருந்திருக்கவில்லை. அடர்ந்து வளர்ந்த மரத்தின் கிளையில் மலர்ந்த பூவாகத்தான் என் இளம் பருவம் இருந்தது. யார் கண்ணுக்கும் தெரியாமல் வாசத்தால் மட்டுமே மயக்கும் ஒன்றாக. எல்லாப் பூக்களையும் சூடிப் பார்க்கும் ஆசை கொண்ட அவன் தன் ஆவினங்களோடு சேரியில் குடிலமைத்ததும் அந்தப் பருவத்தில்தான். அவன் வந்து சேர்ந்த வசந்த காலத்தில், எங்கள் தொழுவத்துப் பசுக்கள் பின்னிரவு நேரங்களில் துணை தேடி அலற ஆரம்பித்திருந்தன. சேர்ப்புக் காளையின் திமிலைத் தடவியபடி அவன் பழையாற்றின் கரையேறி வந்தபோது என் வீட்டின் பின்வாசல் கதவுகளை அகலத் திறந்து வைத்தேன். தினவேறி நின்றவை தொழுவத்துப் பசுக்கள் மட்டுமே அல்ல என்பது அவனுக்கு வெகு சீக்கிரமே புரிந்தது. வார்த்தைகள், சைகைகள் எதுவுமே தேவைப்பட்டிருக்கவில்லை. என் செவ்விளம் மேனி அவனை வசீகரித்தது போலவே, அவனது கரிய இறுகிய உடல் என்னை வசீகரித்தது. மாமிசம் தின்று தின்று வலுவேறிய அவனது உடலும் அதில் வழியும் வியர்வை முத்துக்களும் வெண்ணிறப் பற்களும் தான் எங்கள் அக்ரஹாரத்துக்கும் சேரிக்கும் இடையில் ஓடிக் கொண்டிருந்த பழையாறை சிறு கால்வாயெனத் தாண்டச் செய்திருந்தன என்னை. ஆனால், உங்களுக்கு என்னைத் திரும்பி வர வைக்கத் தெரிந்திருந்தது. அப்போது கூட உங்களை எதிர்க்கத் தயாராகவே இருந்தேன். ஆயிரம் கைகள் உங்களுக்கு என்பதும் ஆயிரத்திலும் ஆயிரம் ஆயுதங்கள் என்பதும் நான் அறிந்த ஒன்றுதான். இருந்தும் உங்களை எதிர்க்கவே செய்தேன். ஏனென்றால், நீங்கள் எதிர்க்கப்படவேண்டியவர்கள்.
இருண்ட உங்கள் கோட்டையின் வாசலில் என்னை வழி மறித்தவரை வீழ்த்திய நான் கொத்தளத்தின் மறைவிலிருந்து விஷப்பாம்பெனச் சீறியவரை, மினுங்கிய கண்களைக் கொண்டே அடையாளம் கண்டு கொன்றுவிட்டு நூலேணி வழியாக கோட்டைக்குள் இறங்கினேன். அரியணையைக் குறிவைத்து அம்பெய்தபடி உள்ளே நுழைந்த நான் நெருங்கி வந்த போது பார்த்தது என்னை நிலை குலைய வைத்தது. நான் எய்த அம்புகள் தைத்து இறந்து கிடந்தது என் பெற்றோராக இருந்தனர். நீங்கள் அவர்களைக் கேடயமாக வைத்து உங்கள் வெற்றியைச் சாதித்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் உங்களை என்றுமே குறைவாக மதிப்பிட்டிருக்கவில்லை. ஆனால், என் அனுமானங்களுக்கும் அப்பாற்பட்ட தளங்களில் உங்கள் கொடிகள் பறந்து கொண்டிருப்பதை அன்று கண்டேன். உங்கள் யாகக் குதிரைகளை ஒருவராலும் கட்டிப் போட முடியாததன் ரகசியத்தை அன்று உணர்ந்துகொண்டேன்.
நான் கொன்ற தாய், ஒருகாலத்தில் எனக்கு எல்லாமுமாக இருந்தாள். தன் நிறைவேறாத ஆசைகள் நடப்பட்ட தோட்டத்தை என் பிஞ்சுக் கைகள் பற்றி சுற்றிக் காட்டியிருக்கிறாள். அங்கு பூத்துக் குலுங்கிய மரங்களின் கிளைகளினூடே கழிவிரக்கத்தின் பாடலைப் பாடிக் கொண்டிருந்த பறவைகளைப் பார்த்திருக்கிறேன். குற்ற உணர்ச்சி நாகங்கள் மறைந்திருந்த இருள் பொந்துகளைப் பார்த்திருக்கிறேன். விரக்தித் தேன் உறிஞ்சியபடி வலம் வரத் தொடங்கியிருந்த என் தனிமைப் பொன்வண்டுகளோ கனவுத் துகள்களைக் காலில் சுமந்தபடி ஒரு பூவிலிருந்து இன்னொரு பூவுக்குத் தாவத் தொடங்கியிருந்தன. அவள் தாவுதலைத் துரிதப்படுத்தினாள். என் தோட்டத்து இளம் செடிகளை, பற்றிக் கொள்ளக் கம்பின்றியே நிமிர்ந்து வளரச் செய்தாள். முடிவற்ற நிலத்தின் மேலே மிதந்தலையும் விதைகளை என் பூக்கள் உற்பத்தி செய்ய ஆரம்பித்திருந்தன. எப்போது நிலத்தடி நீர் உவர்ப்பாக மாறியது என்று நினைவில்லை. என் ஆசைத் தோட்டத்தை மரணத் தூளியில் இட்டுத் தாலாட்டத் தொடங்கிய கடலை அந்தப் பக்கம் நகர்த்தியது வேறு யருமல்ல என் தாயேதான். ஆரம்பத்தில் நீரூற்றி வளர்த்தவள் அவளையும் மீறி வளரத் தொடங்கியதும் அதை வெட்ட ஆரம்பித்தாள். உண்மையில் அவள் அல்ல அப்படி செய்தது. அவள் மூலமாக நீங்கள் அதைச் சாதித்துக் கொண்டீர்கள். அது எனக்குத் தெரியும்.
அந்தியில் மலரும் பூக்களை வருடியபடி என் தாய் என் சிறு வயதில் கூறியவை எனக்கு இன்றும் நினைவுக்கு வருகின்றன. முன் பனிக்கால இரவொன்றில் தன் காதலனைப் பற்றிச் சொன்னாள். பொம்மைக் குதிரைகள் செய்பவர்கள் மத்தியில் அவன் உருளும் சக்கரங்கள் செய்பவனாக இருந்தான். கழுத்தில் புரளும் கேசத்துடன் கன்னிப் பெண்ணின் அடி வயிற்றைப் போல் இளம் சூடுள்ள கற்களில், அவனது நீண்ட உளி நர்த்தனமாடின. அவன் செதுக்கிய கல் மாலைகளை மொய்த்துக் கிடந்தன கரு வண்டுகள். பெரிய கோயிலில் சப்த ஸ்வரத் தூண்கள் செதுக்க வந்திருந்தவன் நதிக்கரை முருகன் கோயிலின் அருகில் குடிலமைத்துத் தங்கியிருந்தான். என் தாய் அவனை முதன் முதலாகப் பார்த்தது பற்றிச் சொன்னது இப்போதும் என் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. மாம்பூக்கள் மிந்தது செல்லும் நதியில் நீராடிவிட்டு, தாமரை இலையில் பொதிந்த மலர் சரத்தை சூடிக்கொண்டு பலிபீடத்தின் முன் செம்மண் கோலமிட்டுக் கொண்டிருந்திருகிறாள். அப்போது பாதி சாத்திக் கிடந்த பெரிய வாசலின் ஆளுயரக் கதவு வெண்கல மணிகள் சப்தமெழுப்ப திறக்கப்பட்டது. பின்னணியில் செந்நிறத்தில் சூரியன் உதிக்கத் தொடங்கியிருக்க, வீசும் குளிர் காற்றில் கேசம் அலைபாய ஒரு கந்தர்வனைப் போல் அவன் நின்று கொண்டிருந்திருக்கிறான். சிதிலமடைந்த கோயிலின் கரும் பாசி படர்ந்த படிக்கட்டுகளின் முன் நின்று கொண்டிருந்ததும் ஏதோ வனதேவதையைப் போல் அவனுக்குத் தெரிந்திருக்கவே கை கூப்பித் தொழுதிருக்கிறான். விளையாட்டாக தெய்வம் போல் அனுக்ரகித்துவிட்டு கருவறை நோக்கிச் செல்ல முற்பட்டிருக்கிறாள். அப்போது படி தடுக்கிக் கீழே விழுந்துவிடவே, எண்ணெய்க் களிம்பேறிய அகல் விளக்கின் மென் நுனி குத்தி நெற்றியில் கசியத் தொடங்கி இருக்கிறது ரத்தம். வாசலின் நின்றவன் இதைக் கண்டு பதறியபடி உள்ளே நுழைந்து அவளைக் கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு போய் சுவரோரம் உட்காரவைத்துவிட்டு நாக சன்னிதியின் பின்புறம் இருந்த புதர்ச் சரிவில் இருந்து பச்சிலை பறிக்க ஓடியிருக்கிறான். பலிபீடத்தில் செவ்வரளியும் துளசி இலையும் தூவி நிவேதனத்தைப் படைக்க வந்த அர்ச்சகனும் நடந்ததைப் பார்த்துவிட்டு அவன் பின்னே ஓடியிருக்கிறான்.
அங்கே கண்ட காட்சியை அவன் அதிசயம் என்றுதான் வர்ணித்தான். புதர்ச் சரிவில் எழும்பிய சலசலப்பு கேட்டு புற்றுகுள் தூங்கிக் கொண்டிருந்த சர்ப்பம் ஒன்று சீறிப் பாய்ந்தபடி வெளியே வந்திருக்கிறது. அர்ச்சகன் சற்றுத் தொலைவிலேயே நின்றுவிட சிற்பியும் பதறிப் போய் மீள முயன்றிருக்கிறார். சுதாரிப்பதற்குள் சர்ப்பம் கையில் கொத்திவிட்டிருக்கிறது. சர்ப்பம் கொத்திய கையை விருட்டென்று பின்னிழுக்க, பல் கையில் பதிந்ததால் சர்ப்பமும் கூடவே பாதி உயரத்துக்கு எழுந்து வந்து, பின் கையில் இருந்து துள்ளி விழுந்து, காவி மதிலோரம் இருந்த மறைவிடத்துக்குள் சென்றுவிட்டிருக்கிறது. அதன் பின்தான் அந்த அதிசயம் நடந்தது. சிற்பியோ சிறிதும் பதறாமல், சர்ப்பத்தின் பல் பதிந்த தன் கையில், முத்துப் போல் இரு திவலைகளாக முளைத்து நின்ற ரத்தப் பொட்டுகளைப் புன்னகைத்தவாறே அர்ச்சகனிடம் காட்டிவிட்டு ‘நல்ல பாம்பு’ என்று அழுத்திச் சொல்லியிருக்கிறான். அதன் பின் எதுவும் நடவாததுபோல் பச்சிலைகளைப் பறிக்க ஆரம்பித்திருக்கிறான். அர்ச்சகன் மலைத்தபடியே அவனை நெருங்கி உன்னைத் தீண்டியது ஒரு விஷ நாகம் என்று சொல்லியிருக்கிறான். தெரியுமே என்று சொல்லியிருக்கிறான் சிற்பி பச்சிலைகளை ஆய்ந்தபடியே.
நடந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் நீங்காத அர்ச்சகன் உண்மையிலேயே நீ யார்..? நாக சாஸ்திரம் அறிந்த நிஷாதனா..? விண்ணிலிருந்து வந்த தேவனா..? என்று கேட்டிருக்கிறான். நான் நிஷாதனுமல்ல... தேவனும் அல்ல. கல்லைச் சிலையாக்கும் ஓர் சிற்பி அவ்வளவுதான் என்று சொல்லியபடியே முன் வாசல் தூணோரம் படுத்துக் கிடக்கும் என் தாயை நோக்கிப் போயிருக்க்கிறான். கிணற்றடிக் கல் தொட்டியில் இருந்து நீர் எடுத்து பச்சிலையை நனைத்து சாறு பிழிந்து காயம் பட்ட இடத்தில் பிழிந்தபோது கண் திறந்து பார்த்திருக்கிறாள் என் தாய். பின்னால் வந்த அர்ச்சகனோ சிற்பியைப் பார்த்து, உன்னைத் தீண்டியது விஷ நாகம். முதலில் உனக்கு சிகிச்சை செய்து கொள் என்று வற்புறுத்தியிருக்கிறார். முகத்தருகில் பச்சிலையைப் பிழிந்து கொண்டிருந்த கரத்தில் பொட்டுப் போல் பதிந்த பல் தடத்தில் தேங்கி நின்ற ரத்தத் திவலையைப் பார்த்துவிட்டு இவளும் மிரண்டிருக்கிறாள். சிற்பியோ நிதானமாக, கவலைப்படவேண்டாம். என்னைக் கொத்தியது விஷ நாகம்தான். ஆனால், அது என்னைக் கொல்லும் நோக்கில் கொத்தவில்லை. அது பயந்து போனதால் என்னை பயமுறுத்தும் நோக்கில் பொய்க்கடி கடித்துவிட்டுப் போயிருக்கிறது. அவ்வளவுதான் என்று சொல்லியிருக்கிறான்.
அர்ச்சகனுக்கும் அவளுக்கும் குழப்பம் தீராமல் இருக்கவே அர்ச்சகனைப் பார்த்துக் கண் சிமிட்டியபடியே, எனக்கு நாக பாஷை தெரியும். ஒரு நாகம் தன் தலையைச் சாய்த்துக் கொத்தினால்தான் விஷம் வெளியே வரும். நேராகக் கொத்தினால் பயப்படத் தேவையில்லை. இந்த சர்ப்பம் என்னை நேராகத்தான் கொத்தியது. என்று சொல்லியிருக்கிறான். பச்சிலையை நன்கு பிழிந்து எஞ்சிய சக்கையின் சிறு பகுதியை காயத்தின் மீது வைத்து அழுத்திக் கொண்டான். ஆசுவாசமடைந்த அர்ச்சகன் வியப்பு நீங்காமலேயே கோயிலுக்குள் நுழைய என் தாயும் மெதுவாக எழுந்து வீட்டுக்குப் புறப்பட்டிருக்கிறாள். தனியாகப் போய்விடுவீர்களா என்று கேட்டதற்கு வாசல் கதவு வரை போயிருந்தவள், அவனைக் கண்ணோடு கண் நோக்கி, துணை தேவைதான். ஆனால், இப்போது அல்ல என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறாள். அப்போது சிற்பியை இன்னொரு நாகம் தீண்டியது. அதுவும் அவனைக் கொல்லும் நோக்கில் தீண்டியிருக்கவில்லை. ஆனால், அவன் இறக்கத்தான் வேண்டியிருந்தது அதனால்.
அவன் சப்த ஸ்வரத் தூண்கள் செதுக்க வந்த போது, காலில் ஊரைக் கட்டி ஆடிய தேவ நர்த்தகிகளின் காலம் முடிந்துபோய்விட்டிருந்தது. ஒப்பனை அறையின் நிலைக் கண்ணாடிகள் ரசம் உதிர்ந்து கிடக்க நிருத்த மண்டபத்தில் மயில் உலவத் தொடங்கியிருதது. அவனுக்குக் கை வழியே கல்லில் ஸ்வரம் பிறக்க வைக்க நடனம் தெரிந்த பாதங்கள் தேவையாக இருந்தது. என் தாய் அந்த நர்த்தகியாக இருந்தாள். யாருமற்ற பின்னிரவுகளில் இருள் படர்ந்த கோயில் பிரகாரத்தில் கால் மாற்றி நின்று கொள்ளும் யானையில் சங்கிலி ஓசையோடு சலங்கைச் சப்தமும் கேட்க ஆரம்பித்தது. நினைவில் காடு அழியாத மயில் குளிர் காற்றின் தாளத்துக்கு ஏற்ப தன் தோகை விரித்து ஆடியபடி அகவியபோது, முருகா... முருகா... என அது அகவுவதாகத் தொழுது சென்ற பக்தர் கூடம், இரவு நேரச் சலங்கை ஒலியை பார்வதி தேவியில் பிரகார வலமாகக் கருதி மகிழ்ந்தது. சிற்பியின் உளி கல்லில் ராகங்களை எழுத ஆரம்பித்தது.
என் தாய் அப்போது ஒரு மான் குட்டி போல்தான் இருந்தாள். சிங்கத்தின் குகைக்குள் துள்ளிக் குதித்தபடியே நுழைந்துவிட்டு, ஐயைய்யோ எனக்குத் தெரியாதே என்று மருளும் குட்டி மான் குட்டிபோல்தான் இருந்தாள். நாம் ஒரு சிற்பியைத்தானே நேசிக்கிறோம் என அவள் நினைத்தாள். அனைவரையும் வருடிச் செல்லும் காற்று அவளிடம் சொன்னது, நீ செய்வது சரிதான் என்று. இரவில் மலரும் காட்டுப் பூக்கள் சொல்லின நீ செய்வது சரிதான் என்று. ஆனால், பின்னிரவுகளில் இரு கைகளாலும் ஆடையை மென்மையாகப் பற்றியபடி கொலுசுச் சய்தம் கேட்காமல், அடி மேல் அடியெடுத்துச் செல்லும் அவளைப் பார்த்து வன்மத்துடன் குரைத்தன அக்ரஹாரத்து நாய்கள். அவற்றின் குரைப்பையும் துரத்தலையும் மீறி இருள் நதிகளைச் சென்றடையும் சாமர்த்தியமும் அவளுக்குக் கைகூடியிருந்தது. ஏனெனில் நதிக்கரையோர முட்புதர்களிடையே பரிசலுடன் ஒருவன் காத்திருப்பான் என்பது அவளுக்குத் தெரியும். அக்ரஹாரத்து நாய்களின் குரைப்பொலி கூடக் கேட்க முடியாத தூரங்களுக்கு நதி நீண்டு கிடப்பதை அவன் அவளுக்குத் தெரிய வைத்திருந்தான். நிலவொளியில் பாம்புச் சடடைகள் மின்னும் முட்புதர்களினூடே அந்தப் பரிசல் மிதந்து சென்று வேறோரு உலகத்தில் முளைத்தெழுந்தது. அங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் நீர். அந்த வெள்ளித் தகடு அலைப் பரப்பின் மேலே ஒரு நிலா. அவ்வளவுதான் இருந்தன. அதில் சிறு மலரென மிதந்து சென்றது அவர்கள் பரிசல்.
ஆனால், இந்தச் சந்திப்புகள் நீண்ட காலம் நீடிக்கவில்லை. ஒரு வளர்பிறைக்கால இரவொன்றில் நதியின் கரையை அடைந்த என் தாய் கயிறு அறுந்து, முளைக் கம்பு முறிந்து கிடப்பதையும் ஒற்றைப் பரிசல் சுழல் ஒன்றில் சிக்கித் தவிப்பதையும் காண நேர்ந்தது. சிற்பக் கூடத்தை நோக்கி ஓடினாள். வழியில் சிற்பி, ஊருக்கு பயந்து ஓடிவருவது தெரிந்தது. அவர்கள் காதல் அடுத்தவர்களுக்குத் தெரிந்துவிட்டது. இருளின் எல்லா திசைகளில் இருந்தும் தீப்பந்தங்கள் முளைத்து வர ஆரம்பித்தன. கோயிலை நோக்கி ஓடினார்கள். அம்பு தைத்த விலங்கின் தடத்தை ரத்தத் துளிகளை வைத்தே கண்டுபிடித்துவிடும் வேடனைப் போல் உயிருக்கு பயந்து ஓடுபவர்களை கால் கொலுசொலியை வைத்தே அவர்களும் பின் தொடர்ந்தனர். ரகசியப் பாதையின் வழி கோயிலுக்குள் நுழைந்த என் தாயும் சிற்பியும் கோபுரத்தின் உள் தட்டுக்குள் பதுங்கிக் கொண்டனர். இருண்ட பிரகாரம் முழுவதும் தேடி அலைந்த அக்ரஹாரத்தினருக்கு தூணோரம் வீசி எறியப்பட்ட கொலுசுகள் மாத்திரமே கிடைத்தன. சோர்ந்து அவர்கள் திரும்பினர்.
அப்போதுதான் அந்த அசம்பாவிதம் நடந்தது. கோபுர உள் அடுக்குகளில் தூங்கிக் கொண்டிருந்த புறாக்கள் பயந்து போய், ஓரிடத்தில் இருந்து பறந்து கோபுரத்தின் வேறொரு இடத்தில் தஞ்சமடைவதை ஒருவன் பார்த்துவிட்டான். அகாலத்தில் பறக்கும் புறாக்களைப் பார்த்த அவன் மெதுவாக கோபுரத்தில் உள் தட்டுகள் வழியாக ஏற ஆரம்பித்தான். அவன் வருவதைப் பார்த்த சிற்பியும் தாயும் கோபுரத்தின் உச்சிக்கு ஏற ஆரம்பித்தார்கள். கலவரம் அடைந்த புறாக்க்ள் நிலவொளியில் தூங்கும் வீடுகளின் மீது பதறியபடியே பறப்பதையும் வீதிகளில் ஆட்கள் தீப்பந்தங்களுடன் தேடுவதையும் கோபுர முகப்பின் வழியே பார்த்தபடி அவனும் மேலேறத் தொடங்கினான். அவன் வேறு யாருமல்ல. என் தாயின் தந்தைதான். அது நாள் வரையிலும் தர்ப்பைப் புல்லை மட்டும் தூக்கிய கரங்களில் அன்று தீப்பந்தம் இருந்தது. இடையில் ஒரு குறுவாளும். ஆனால், அதற்கு அவசியம் ஏற்பட்டிருக்கவில்லை. கோபுரத்தின் உச்சியில், பின்னகர முடியாத ஒரு மூலையில் என் தாயும் சிற்பியும் சிறைப்பிடிக்கப்பட்டனர். பயந்து நடுங்கியபடி ஒருவரோடு ஒருவர் நெருங்கி நின்றவர்களை ஒரு தீப்பந்தம் இரண்டாகப் பிரித்தது. அந்தத் தீப்பந்தம் சிற்பியை கோபுரத்தின் திறப்பு நோக்கி நகர்த்தியது. தீப்பந்தத்தின் சூடு தாங்காமல் பின்னால் சென்றவன் சிறகொடடிந்த பறவையைப் போல் கால் தவறி கீழே விழுந்து இறந்தான். அந்தக் கொலையை அவர்கள் வெகு லாகவமாக திசை திருப்பினார்கள். குல மகள் வேலி தாண்ட முயன்ற கதை மறைக்கப்பட்டது. ரிஷப வாகனத்தில் பிரகார வலம் வந்த பார்வதி பரமேஸ்வரனை சிற்பி கண்டதாகவும் மெய் மறந்து அவர்களைப் பின் தொடர்ந்து சென்ற சிற்பி கோபுரத்தின் உச்சியில் ஏறித் தன் பூதவுடலை இந்தப் பூமியில் விட்டுவிட்டு ரிஷபத்தின் வாலைப் பிடித்தபடி இறைவனுடன் கயிலைக்குச் சென்றுவிட்டதாகவும் கதை கட்டினர். அது போன்ற கதைகளின் மேகங்களால் அந்த நிலம் ஏற்கெனவே பல தடவை நனைக்கப்பட்டிருந்தது. இன்னொரு பருவத்தில் பெய்த இன்னொரு மழையாக சிற்பியின் மரணம் மண்ணில் பெய்து மறைந்தது. நிலம் வெகு சீக்கிரமே காய்ந்தது. ஆனால், நிலத்தடியில் சேகரமான நீர் வற்றாமல் ஒரு பாறைக் குடைவுக்குள் ததும்பிக் கொண்டிருந்தது. நான் அந்த வெதுவெதுப்பான நீரைக் குடித்து வளர்ந்தேன். இடையனோடு நான் தனித்திருந்த இரவுகளிலும் அக்ரஹாரத்து நாய்கள் குரைத்தன. ஆனால், இம்முறை நாங்கள் கோயிலை நோக்கி ஓடவில்லை. எதிர்த்திசையில் இருந்த சேரியை நோக்கி ஓடினோம்.
இம்முறை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவதென நாங்களும் முடிவு செய்திருந்தோம். மாட வீதிகளுக்கு பாலும் நெய்யும் கொண்டு செல்வதை நிறுத்தினோம். யாக குண்டங்களில் இடப்பட்ட சமித்துகள் நெய்யின்றிப் புகைய ஆரம்பித்தன. ஆராதனைக்கான விக்ரஹங்கள் அபிஷேகப் பாலின்றி காயத் தொடங்கின. மடி கனத்த பசுக்கள் கறப்பதற்கு ஆளின்றி கதறத் தொடங்கின. மேய்சலுக்கு அழைத்துச் செல்லப்படாமல் பசியில் தவித்த ஆவினங்கள் தொழுவங்களில் கட்டிப் போட்ட கயிறுகளை அறுக்க முற்பட்டன. வேத கோஷங்கள் காற்றில் மிதந்த வீதிகளில் பசுவினதும் கன்றினதும் கூக்குரல்கள் காதடைக்க ஆரம்பித்தன. ஆனால், கோட்டையை பலப்படுத்துவதற்கு முன்பாகவே ஆரம்பித்த ஒரு போராக அது ஆகிப் போனது. அக்ரஹாரத்தினர் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் இருந்த கால்நடைகளை அடித்து விரட்டினர். மேய்ச்சல் நிலங்களைச் சுற்றி வேலிகளை எழுப்பினர். குடிசைகள் பற்றி எரிந்தன. தீ சூழ்ந்த கிடைகளுக்குள் சிக்கிய ஆடுகள் வெளியே வரத் தெரியாமல் துடித்தன. நீர் நிலைகளில் நஞ்சு கலக்கப்பட்டன. வேதனையின் கரும் புகைகள் உச்சத்துக்குப் போனபோது இடையர் கூட்டம் என்னால்தான் இவ்வளவு அழிவும் என என்னைப் பழிக்க ஆரம்பித்தது. காட்டாற்றில் சிக்கியவன் கைக்குக் கிடைத்த ஒற்றை மரத்தைப் பிடித்துக் கொண்டு திணறுவதுபோல் நான் அவரைப் பற்றியிருந்தேன். அந்த ஒற்றை மரமும் ஆடத் தொடங்கியது. மேலும் என் அன்புக்குரிய குடும்பத்தை அவர்கள் வசம் விட்டுவிட்டு வந்திருந்தேன். அது நான் செய்த தவறு. அதை என்னால் தவிர்க்கவும் முடிந்திருக்கவில்லை. அது அவர்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கிறது. என் வீட்டைச் சுற்றி மாயச் சுவர் எழுபப்பட்டது. புரோகிதத் தொழில் மட்டுமே தெரிந்த என் தந்தை அதிலிருந்து விலக்கப்பட்டார். அவரது பொறுப்பில் விடப்பட்டிருந்த கோயில் நிலங்கள் பறி முதல் செய்யப்பட்டன. அவர்கள் முன் வைத்த ஒரே ஒரு நிபந்தனை : என் மரணம். குலப் பெருமைக்கு இழுக்கு ஏற்படுத்திய என் மரணம். என் கழுத்தில் இரண்டு கத்திகள் வைக்கப்பட்டன. என்னால் இழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க என் முன்னால் இருந்ததும் ஒரே வழிதான். நான் என் உயிரை மாய்த்துக் கொண்டேன். என் தாய் கொல்லப்பட்ட தன் காதலனை நினைத்து நினைத்து வேதனையுடன் வாழ்ந்து வந்தாள். நான் மனதுக்குப் பிடித்தவனுடன் துணிந்து வாழப் போய் இறந்தேன்.
ஆனால், தோல்வியின் சரித்திரம் இனியும் தொடராது. மேல்மாடக் கொடிகள், வீசும் குளிர் காற்றில் நடுங்கும் நடுச் சாமத்தில், புறக்கணிக்கப்பட்ட ஒரு தொழுவத்தில் அவள் பிறப்பாள். அவளது நிறம் கறுப்பாக இருக்கும். அதை நீலமாக மாற்ற ஒரு நாளும் முடியாது. பரிவின் சாயங்களை முகத்தில் பூசி மார்புக் காம்புகளில் துரோக நஞ்சைத் தடவியபடி பாலூட்ட நெருங்குபவளை அவள் உறிஞ்சியே கொல்லுவாள். ஆணவக் கொடி பறக்கும் அதிகாரத் தேர்களின் சக்கரங்களை அவள் தன் பிஞ்சுக் கால்களால் தகர்த்தெறிவாள். மெள்ளத் திரளும் மூர்க்கத்துடன் காலங்களைக் கடந்து வந்திருக்கும் கால்நடைகள் அவள் பின்னால் அணி வகுக்கும். மறதியின் கூட்டுக்குள் இனியும் அடைபடாது அவளது ஆவினங்கள். பழக்கத்தின் நுகத்தடியில் பிணிக்கப்பட்டாது அவளது காளைகள். இனி அவை இரவிலும் விழித்திருக்கும். அவற்றின் காலடி ஓசை கேட்டு குதிரைகள் மிரண்டோடும்.
அவள் தன் ஆவினங்களை தடைசெய்யப்பட்ட புல்வெளிகளில் மேயவிடுவாள். நீரில் நஞ்சைக் கலக்கும் நாகங்களின் மீது அவள் அழிவின் கோர நடனம் புரிவாள். ஆணவப் பெருமூச்சுகள் புயலாக மாறி வெறுப்பின் மேகங்களாகத் திரண்டு வன்முறை துளிகளாக அவளது நிலத்தை மூழ்கடிக்கச் சூழும் போது ஆதார நிலத்தையே அடியோடு பெயர்த்தெடுத்துக் குடை பிடிப்பாள். அவள் பெயர்த்தெடுக்கும் நிலத்தின் மீது கட்டப்பட்டிருக்கும் கோயில்கள் இடிந்து விழத்தொடங்கும். இருண்ட பிரகாரங்களில் அடைந்து கிடக்கும் வெளவால்கள் அலறி ஓடும். பொற்றாமரைக் குளத்தின் கரைகள் உடைந்து போகும்.
வல்லவன் வகுத்த வாய்க்காலில் துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருக்கும் மீன்கள் மண்ணில் துடி துடித்து சாகும். தர்க்கங்களின் ஆணி வேர் அறுந்து தத்துவ மரங்கள் சத்தமின்றி மண்ணில் சாயும். அதன் பின் சமத்துவத்தின் ராகங்களை அவளது இசைக்கருவிகள் இசைக்கத் தொடங்கும். காற்றெங்கும் தவழும் அவளது குழலோசை. அவள் புதியதொரு நகரை நிர்மாணிப்பாள். வெள்ளம் வடிந்த பின் பழைய கரைகளுக்குக் கட்டுப்பட்டுத்தானே போயாகவேண்டும் எல்லா நதிகளும் என்று அவளது எழுச்சியைக் கண்டு உள்ளுக்குள் மர்மப் புன்னகை புரிந்து ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் அதிரும் வண்ணம் கரை நிரந்தரமாக உடைந்து நதியின் திசை என்றென்றைக்குமாக மாறும். அவள் அதை மாற்றுவாள். அந்த நாள் நிச்சயம் வரும்.
No comments:
Post a Comment