இருட்டில் இருந்து வெளிச்சத்தை நோக்கி...

Saturday, October 16, 2010

எந்திரனும் சுஜாதாவின் ஆவியும்..!

(இந்த கட்டுரையை அக்டோபர் இரண்டாம் தேதியே எழுதிவிட்டேன். இதை பிளாகில் போட்டால், தலைவரின் தளபதிகள் க்ளைமேக்ஸை மாற்றச் சொல்லி படையெடுத்துவிடுவார்கள். தயாரிப்பாளருக்கு க்ளைமேக்ஸை மாற்ற இன்னும் 100 கோடி செலவாகும். டைரக்டருக்கும் கஷ்டம். தலைவருக்கும் கஷ்டம். குறிப்பாக, இன்றைய தலைவிக்கும் ரொம்பக் கஷ்டம் என்பதால் உடனேயே வலையேற்றவில்லை. சரி அப்படியே விட்டுவிடலாம் என்றுதான் நினைத்தேன். ஆனால், என்ன செய்ய... உண்மையை உணர்ந்தவருக்கு அதை ஊருக்கு உரைக்க முடியாமல் இருப்பது சாத்தியமா என்ன..? எனவே, இதோ... லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா ஒரு விமர்சனம்.)

அப்படியாக, நானும் எந்திரன் படத்தை முதல் நாள் இரவிலேயே பார்த்தேவிட்டேன். இன்னுமா பார்க்கவில்லை என்று கேட்பார்களே அதை எப்படித் தாங்கிக் கொள்வது என்ற பதற்றத்தில்தான் முதல் நாளே பார்த்தேன். அதற்குள்ளாகவும் பலர் கேட்டுவிட்டனர் என்பது வேறு விஷயம். பொதுவாக, இப்படியாக ஹைப் உருவாக்கப்படும் படங்கள் பெரிதாக ஊற்றிக் கொள்ளும் என்பதுதான் வழக்கம் என்பதால் மிகவும் பயந்தபடியேதான் இருந்தேன் (உதா : பாபா). அதோடு பாபாவில் ரஜினியும் கருணாஸும் இருந்தார்கள். இதிலும் அந்த காம்பினேஷன் இருப்பதால் படம் அவ்வளவுதான் என்று ரொம்பவே பயந்தேன். ஆனால், பாடல்களைக் கேட்டபோது கொஞ்சம் தைரியம் வந்தது. டிரெய்லர் பார்த்தபோது இன்னும் கொஞ்சம் நம்பிக்கை பிறந்தது. டி-டேயில் நான்கு மணிக்கே பார்த்துவிட்டு வந்தவர்கள் படம் தப்பிச்சிக்கிச்சு என்று சொன்னதைக் கேட்டதும் பெரும் ஆசுவாசம் ஏற்பட்டது.

இரவு மிகுந்த உற்சாகத்தோடு புறப்பட்டுப் போனேன். இடைவேளை வரை படம் ரொம்பவே பிடித்திருந்தது. அதற்குப் பிறகுதான் வில்லன் ரஜினி அதகளம் பண்ணியிருக்கிறார் என்று ஏற்கெனவே சொல்லியிருந்ததால் என் எதிர்பார்ப்பு மேலும் ஏறியது. அவர்கள் சொன்னதுபோலவே வில்லன் ரஜினி வந்த சீன்கள் அருமையாகவே இருந்தன. ஆனால், கிளைமாக்ஸ் சண்டைக் காட்சி, மலை உச்சிக்குக் கொண்டு போய் அப்படியே அதல பாதாளத்தில் தள்ளிவிட்டதுபோல் விழவைத்துவிட்டது. ஒரு படத்தின் கதாநாயகன் எப்போது தன் உச்சத்தை எட்ட வேண்டுமோ அப்போது பேட்டரி தீர்ந்த ரோபோ போல் பொத்தென்று விழுந்ததுபோல் ஆகிவிட்டது.

ஒரு அருமையான படத்தை ஷங்கர் ஏன் இப்படி வீணடித்துவிட்டார் என்று மனம் கதறியது. கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் என்பது படத்தில் அதிகம் இருக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டதுதான். அது அருமையாகவும் இருந்தது. இடைவேளைக்கு முன்பாக வந்த ரயில் சண்டை, தீ விபத்துக் காட்சிகள், பிரசவம் பார்த்தல் என எல்லாமே கதையோடு அருமையாகப் பொருந்தி வந்திருந்தன. அதிலும் அருவாள், கத்தி, சைக்கிள் செயின் என இரும்பு ஆயுதங்கள் எல்லாம் ரஜினியைச் சுற்றி அணிவகுக்கும் காட்சியைப் பார்த்து உண்மையிலேயே பிரமித்துத்தான் போனேன். ஆனால், க்ளைமாக்ஸ் சண்டையில் நூற்றுக்கணக்கான ரஜினிகள் பந்துபோல், பாம்பு போல், பிரமாண்ட எந்திர மனிதன் போல் ஆனதையெல்லாம் பார்க்கச் சகிக்கவே இல்லை. அந்த கம்ப்யூட்டர் க்ராபிக்ஸ்கள் எடுபடாமல் போனதற்குக் காரணம் அதில் ரஜினி இல்லை. அதாவது படத்தின் கதாநாயகன் இல்லை. இடைவேளைக்கு முந்தைய க்ராபிக்ஸ் காட்சிகளில் கதாநாயகனும் இருந்தார். கிராபிக்ஸ் காட்சிகளும் இருந்தன. ஆனால், க்ளைமேக்ஸ் காட்சிகளில் வெறும் கிராபிக்ஸ் மட்டுமே இருந்தன. கதாநாயகன் இல்லை.

இது, ஒரு படத்தின் அடிப்படையான உணர்வுக்கு முற்றிலும் முரணானது. ஒரு திரைப்படம் தரும் அனுபவத்தை முற்றிலும் பாழாக்கும் செயல் இது. ஷங்கர் ஏன் இப்படிச் செய்தார்? கேனான் டாயல் சிண்ட்ரோம் காரணமா? ஒரு இயக்குநர், தான் படைத்த கதாபாத்திரம் தன்னைவிடப் பெருமையைத் தட்டிக் கொண்டு போய்விடக்கூடாது என்று நினைக்கலாமா? இயக்குநரின் குழந்தை அல்லவா கதாநாயகன். குழந்தையின் வெற்றி மீது அப்பாவுக்கு பொறாமை வரலாமா? இந்தப் படத்தின் வர்த்தக வெற்றியைப் பற்றி நான் எதுவும் சொல்லவில்லை. அது ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுவிட்டது. ஆனால், ஒரு அபார அனுபவமாக ஆகியிருக்க வேண்டிய ஒன்று புஸ் என்று போய்விட்டது.

பரபரப்பான இந்தியா பாகிஸ்தான் கிரிக்கெட் மேட்சில் கடைசி பந்தில் ஆறு ரன்கள் எடுக்க வேண்டுமென்று ஒரு நிலை ஏற்பட்டால், தோனிதான் அதை அடித்து எடுக்க வேண்டும். அம்பயர் ஆறு நோபால்கள் கொடுத்தால் அது பார்க்கச் சகிக்குமா? அல்லது கோச் நாலைந்து ஹெலிகாப்டர்களை எடுத்துக் கொண்டு போய் சில்வர் அயோடைடை மேகத்தில் தெளித்து மழைய வரவைத்து, டக்வொர்த் லூயிஸ் கணக்கின்படி நாம் ஜெயித்தால் அதுவா நன்றாக இருக்கும். தோனி கடைசி பந்தில் சிக்ஸ் அடித்தால்தானே அது நினைவில் நிற்கும் வெற்றியாக இருக்கும். ரஜினி சாதித்திருக்க வேண்டிய இடத்தில் கம்ப்யூட்டர் கிராபிக்ஸைப் பயன்படுத்தியது எவ்வளவு பெரிய பிழை.

படம் இப்படி ஆகிவிட்டதே என்று மிகுந்த மன வருத்தத்துடன் பாருக்குப் போனேன். பல ரவுண்ட்கள் உள்ளே போனது. மனது பொருமிக் கொண்டே இருந்தது. படம் இடைவேளைவரை சுஜாதா எழுதிக் கொடுத்த ஸ்கிரிப்டின் படி எடுக்கப்பட்டதுவரை அருமையாக இருந்தது. அதன் பிறகுதான் சொதப்பிவிட்டது என்று புலம்பித் தள்ளினேன். சுஜாதாவின் ஆத்மா இதை ஒருபோதும் மன்னிக்காது என்று சொன்னேன். சக குடிமகன் நான் சொன்னதை மறுத்தார். க்ளைமேக்ஸில் இடம்பெற்ற கிராபிக்ஸ் கிம்மிக்ஸ் சகிக்கவில்லை என்பது உண்மைதான். ஆனால், சுஜாதா இதைவிட பெரிதாக ஒன்றும் ஜல்லியடித்திருக்க மாட்டார் என்று சொன்னான். வாக்குவாதம் முற்றியது. சுஜாதாவிடமே கேட்பது என்று முடிவு செய்தோம். அவர் செல்லுக்குப் போன் போட்டோம். நீங்கள் தொடர்பு கொள்ளும் வாடிக்கையாளர் தொடர்பு எல்லைக்கு வெளியில் இருக்கிறார் என்று பதில் வந்தது. லேன்ட் லைனுக்குப் போன் போட்டோம். அவர் இறந்துவிட்டாரே என்று சொன்னார்கள். எங்ககிட்ட சொல்லவேயில்லையே என்று சொல்லிவிட்டு அடுத்து என்ன செய்ய என்று யோசித்தோம். எப்படியும் சுஜாதாவிடம் கேட்டாக வேண்டும் என்று முடிவு செய்திருந்தோம். ஆவி அமுதா மூலம் சுஜாதாவிடம் பேசுவது என்று புறப்பட்டோம்.

சுஜாதா விஞ்ஞான ஆவி ஆயிற்றே. ஊடகம் வழியாகப் பேசுவாரா என்று சந்தேகமாக இருந்தது. எனினும், அவர் ஆத்மா கோட்பாடில் நம்பிக்கை கொண்ட வைஷ்ணவரும் கூட என்பதால் பேசும் வாய்ப்பு அதிகம் என்று நினைத்தோம். ஆவி அமுதாவைப் பார்க்க முடியவில்லை. வேறு ஒருவர் சிக்கினார். அவர் வீட்டில் சுஜாதாவுடன் பேசினோம். பொதுவாக ஆவிகள் நம் கைகளை நகர்த்தி எழுதித்தான் காட்டும். ஆனால், சுஜாதா மேலுலகத்துக்குப் போன பிறகு கம்யூனிக்கேஷனை கொஞ்சம் அப்கிரேடு செய்துவிட்டிருக்கிறார். அருள்வாக்கு சொல்வதுபோல் ஊடகத்தின் மீது இறங்கி நேரடியாகவே பேச ஆரம்பித்துவிட்டார். என்னப்பா... எப்படி இருக்க? என்று கேட்டதும் உடம்பெல்லாம் சிலிர்த்துவிட்டது. நல்லா இருக்கேன்... என்று சொல்லிவிட்டு எந்திரன் பார்த்துட்டீங்களா என்று கேட்டேன். ஏன்டா பார்த்தோம்னு ஆயிடிச்சு என்று வருந்தினார்.

உண்மையில் எந்திரன் கதைக்கு அவர் எழுதிய க்ளைமேக்ஸ் வேறாம். அதைச் சொன்னார். அப்படியே ஸ்தம்பித்துவிட்டோம். ஷங்கர் ஏன் இப்படிப் பண்ணினார் என்ற வேதனை இப்போது கோபமாகவே மாறிவிட்டது. சுஜாதா சொன்ன க்ளைமேக்ஸ் இதுதான் :

வில்லன் ரோபோ உருவான விதமாக சுஜாதா எழுதியிருந்ததே வேறு. உண்மையில் சிட்டியைக் குப்பை மேட்டில் இருந்து எடுத்து வந்ததும் அது தனக்கு உயிர் கொடுக்கும்படி மனித வில்லனிடம் கெஞ்சுகிறது. அவரும் நியூரல் ஸ்கீமைச் சொன்னால்தான் உதவுவேன் என்கிறார். சிட்டியும் அதை காப்பி செய்து தந்துவிடுகிறது. உடனே மனித வில்லன் டபுள் கேம் ஆடுகிறார். தான் ஏற்கெனவே உருவாக்கிய ரோபோவுக்கு உயிர் கொடுத்து அதை வில்லனாக ஆக்குகிறார். அதுவும் ரஜினிதான். ஆனால், சிட்டியின் மூளையில் ரெட் சிப்பை பொருத்தி வில்லனாக ஆக்கவில்லை. சிட்டியிடம் இருந்து நியூரல் ஸ்கீம் கிடைத்ததும் அதை மறுபடியும் செயல் இழக்க வைத்துவிடுகிறார். அதன் பிறகு வில்லன் ரஜினியின் ஆட்டம் ஆரம்பிக்கிறது.

அவர் ஐஸ்வர்யாவைத் தேடிப் போகிறார். கல்யாண மண்டப காட்சிகள் சுஜாதா சொன்ன படியேதான் எடுக்கப்பட்டிருந்தன. ஆனால், அதன் பிறகுதான் சுஜாதாவின் மேதமை வெளிப்படுகிறது. வசீகரன் மட்டுமல்ல ஒட்டுமொத்த ஆண் வர்க்கமே சனாவை அடைய விடாமல் தடுக்க வாய்ப்பு இருப்பதால் வில்லன் ரஜினி, ஆண்கள் அனைவரையும் கொன்று தீர்க்கும்படி தான் உருவாக்கிய க்ளோன் ரோபோக்களிடம் சொல்கிறார். ஒரு நாள் இரவில் படுத்து மறு நாள் காலையில் எழுந்திருப்பவர்கள் படு கோரமான முறையில் ஆண்கள் ஆங்காங்கே கண்டந்துண்டமாக வெட்டிக் கொல்லப்பட்டிருப்பதைப் பார்த்து அதிர்கிறார்கள். ஊரே குலை நடுங்குகிறது.

வில்லன் ரோபோ இருக்கும் இடத்தை அழிக்க ராணுவத்தினர் ஹெலிகாப்டரில் குண்டுகளுடன் வருகிறார்கள். ஆனால், வில்லன் ரஜினியோ ஏராளமான குழந்தைகளைக் கடத்தி வந்து கேடயமாகப் பயன்படுத்தி தப்பித்துவிடுகிறார். மின்சாரத்தை நிறுத்துகிறார்கள். கார் பேட்டரியில் இருந்து சார்ஜ் செய்ய முடியும் என்பதால் ஆயிரக்கணக்கான கார்களைக் கடத்திக் கொண்டுவந்துவிடுகின்றன ரோபோக்கள். அதிலும் கார் பேட்டரியில் இருந்து கரெண்ட் எடுப்பதை வில்லன் ரஜினி தெரிந்து கொள்ளும் காட்சி இருக்கிறதே சுஜாதாவின் வார்த்தைகளில் கேட்கவேண்டும் அதை. உலகமே இருண்டு கிடக்கிறது. எல்லா ரோபோக்களும் செயல் இழக்க ஆரம்பித்துவிட்டன. அப்போது வில்லன் ரஜினி மின்சாரத்தைத் தேடி தெருவில் இறங்கி ஓடுகிறார். எங்கோ தூரத்தில் சிறிதாக வெளிச்சம் தெரிகிறது. நடு வழியில் டயர் பங்சரான ஒரு கார் நிற்கிறது. இரண்டு பேர், கார் பேட்டரியில் இருந்து 40 வாட்ஸ் பல்பை எரிய வைத்து டயரை மாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இருண்ட பின்னணியில் இருந்து வில்லன் ரஜினியின் ஆச்சரியத்தால் மலர்ந்த விகாரமான முகம் மட்டும் வெளிச்சத்துக்குள் எட்டிப் பார்க்கும் காட்சி அப்படியே முதுகுத் தண்டைச் சில்லிடவைத்தது. அடுத்ததாக, கார் பேட்டரிகளும் சீக்கிரமே காலியாகிவிடுகின்றன. வில்லன் உடனே பல விஞ்ஞானிகளைக் கடத்தி வந்து சோலார் பேனல்களை உருவாகச் சொல்லிவிடுகிறார். அப்படியாக மின்சாரம் தடைபடாமல் கிடைக்கிறது.

இதனிடையில் வசீகரன், ரோபோபோல் வேடம் போட்டுக் கொண்டு வில்லனின் கோட்டைக்குள் நுழைந்துவிடுகிறார். அங்கு சிட்டி இருப்பது அவருக்குத் தெரிய வருகிறது. ரகசியமாக அந்த இடத்துக்குப் போய் அதை உயிர்ப்பித்துவிடுகிறார். அதன் பிறகு கதை சிட்டிக்கும் வில்லன் ரோபோவுக்குமான சண்டையாக மாறுகிறது. சுஜாதா இதில் பின்னி பெடலெடுத்திருக்கிறார். உண்மையில் ஷங்கரின் எந்திரனில் வில்லன் ரஜினி வந்ததும் சிட்டி காணாமல் போய்விடுகிறது! அது கதையின் பலவீன பகுதி. சிட்டிதான் கதாநாயகன். கடைசி வரை அந்தக் கதாபாத்திரம் படத்தில் இருந்திருக்க வேண்டும். மனிதர்களுக்கும் எந்திரங்களுக்கும் இடையிலான சண்டை என்பதும் இந்தப் படத்தில் வலுவாக வரவில்லை. அதுவும்போக சனா மீதான காதல் என்பது இன்றைய எந்திரன் படத்தில் மிகவும் பலவீனமாகவே பயன்படுத்தப்பட்டிருக்கிஅது. அதுதான் பிரதான ட்விஸ்டே. நல்ல மனிதன் உருவாக்கிய நல்ல எந்திரத்துக்கும் கெட்ட மனிதன் உருவக்கிய கெட்ட எந்திரத்துக்கும் இடையிலான சண்டை என்பதுதான் சுஜாதாவின் திரைக்கதை. அங்குதான் அவர் தர்க்கபூர்வமாகவும் வெற்றிபெறுகிறார். ஷங்கர் தோற்கும் இடமும் அதுதான்.

கதை மேலும் வேகம் பிடிக்கிறது. வசீகரனும் சிட்டியும் சேர்ந்து பல திட்டங்கள் தீட்டுகிறார்கள். அதற்கு முன்பாகக் கதையில் முக்கியமான ஒரு காட்சி வருகிறது. சிட்டிக்கு மறுபடியும் உயிர் கொடுத்ததும் அது ஒரு நிபந்தனை விதிக்கிறது. வில்லன் ரஜினியையும் அவர் உருவாக்கிய க்ளோன் படையையும் காலி செய்ய வேண்டுமானால், தனக்கு சனாவைத் திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று கேட்கிறது. முதலில் மறுக்கும் வசீகரன் பிறகு சம்மதிக்கிறார். சனா தனக்கு சத்தியம் செய்து தரவேண்டும் என்று சிட்டி கேட்கிறது. அதன்படியே சனாவும் சத்தியம் செய்து தருகிறார்.

சிட்டி வில்லனை வீழ்த்தத் திட்டம் போடுகிறது. முதல் கட்டமாக பல சனாக்களை உருவாக்கி வில்லனைக் குழப்புகிறது. க்ளோன் சனாக்களில் உண்மையான சனாவைக் கண்டுபிடிக்க வில்லன் ஒரு யோசனை செய்கிறார். சனா ஆசையாக வளர்த்த பொமனேரியன் நாய்க்குட்டியைக் கொண்டுவந்து மோப்பம் பிடிக்க விடுகிறார். ஆனால், ஏற்கெனவே சிட்டி இப்படி ஏதாவது நடக்கும் என்று நினைத்து உண்மையான சனாவுக்கும் மெட்டல் கவசம் அணிவித்திருப்பார். எனவே, நாய்க்குட்டியால் கண்டுபிடிக்க முடியாமல் போய்விடும். கோபப்படும் வில்லன் நாய்க்குட்டியைக் கொல்ல முயற்சி செய்வார். கழுத்தைப் பிடித்து நெரிப்பார். நாய்க்குட்டி கதறித் துடிக்கும். அதன் கண்கள் மெள்ள சிவப்பாகி வெளியே பிதுங்க ஆரம்பிக்கும். நாய்குட்டி படும் வேதனையைப் பார்க்கப் பொறுக்காமல் க்ளோன் கூட்டத்தில் இருந்து சனா பதறி ஓடிவந்துவிடுவார். அப்படியாக சனாவை வில்லன் கண்டுபிடித்துவிடுவார்.

அடுத்ததாக சிட்டி தான் உருவாக்கிய சனா போன்ற ரோபோவில் ஒன்றின் கழுத்துக்குள் ரத்தம் நிரம்பிய பிளாஸ்டிக் பையைப் பொதிந்து வைத்து இன்னொரு திட்டம் தீட்டும். அந்த சனாவை கழுத்தில் கத்தியை வைத்துக் காட்டி கொன்றுவிடப் போவதாக வில்லனிடம் மிரட்டும். வில்லன் அதுவும் ஒரு ரோபாவாகத்தான் இருக்கும் என்று அலட்சியமாக இருக்கவே கத்தியை அழுத்தி பிளாஸ்டிக் பையில் இருந்து ரத்தத்தை சிட்டி வெளியே வரவைக்கும். இதைக் கண்டு வில்லன் ரோபோ அதிர்ச்சி அடைந்து சனாவைக் காப்பாற்ற வருவதற்குள் அந்த ரோபோவை மாடியில் இருந்து சிட்டி தள்ளிக் கொன்றுவிடும். சனா இறந்துவிட்டதாக மனமுடைந்து போகும் வில்லன் ரோபோ ஹேங்க் ஆகிக் கீழே விழுந்துவிடும். இறந்து கிடக்கும் வில்லனை ஒரேயடியாகச் செயல் இழக்க வைக்க சிட்டி வேகமாக ஓடிப் போய் சனாவையும் வசீகரனையும் அழைத்துக் கொண்டு வரும். வந்து பார்த்தால் அந்த இடத்தில் விழுந்துகிடந்த வில்லன் ரோபோ மாயமாக மறைந்திருக்கும். மூவரும் அந்த இடத்தில் இருந்து தப்பிக்க முயற்சி செய்வார்கள். ஆனால், இவர்கள் போகும் இடங்களில் எல்லாம் வில்லன் ரோபோவின் வெடிச் சிரிப்பு கேட்டுக் கொண்டே இருக்கும். உண்மையில் மயங்கியதுபோல் நடித்த வில்லன் ரோபோ, வசீகரனையும் சிட்டியையும் ஒரு சிறையில் போட்டுப் பூட்டி வைக்கும். மனித நடமாட்டமே இல்லாத இடத்துக்கு சனாவைக் கொண்டு செல்ல முடிவெடுக்கும். அவருடைய மெமரியில் அப்படியான இடமாகச் சொல்லப்படும் இடம்தான் மச்சு பிச்சு மலை. சுஜாதாவின் கதையில் மிகவும் இயல்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அந்த இடத்தை ஷங்கர் வெறும் பாட்டுக்கான லொக்கேஷன் என்று கேவலப்படுத்தியிருப்பார். அது மட்டுமில்லாமல் இதை ஒரு பெருமையாகவும் பலர் சொல்கிறார்கள். யாருமே போகாத இடத்துக்குப் போவது என்றால் டிராவல் ஏஜென்ஸிக்குத்தானே அந்தப் பெருமை போக வேண்டும். அதை எப்படி டைரக்டரின் பெருமையாகச் சொல்கிறார்கள் என்றே புரியவில்லை.

மச்சு பிச்சு மலைக்குப் புறப்படுவதற்கு முன்பாக வில்லன் ரோபோ தனக்குத் துணையாக இரண்டு ரோபோக்களை மட்டும் அழைத்துக் கொண்டுசெல்கிறார். அந்த இரண்டு ரோபோக்களை வீழ்த்திவிட்டு வசீகரனும், சிட்டியும் வில்லனுடன் அவருக்குத் தெரியாமல் புறப்பட்டுவிடுகிறார்கள். அப்படியாக மச்சு பிச்சு மலையில் நான்கே பேர் மட்டும் இருக்கிறார்கள். அவர்களுக்குள் ஆரம்பிக்கிறது க்ளைமேக்ஸ் சண்டை. மேட்ரிக்ஸ் படத்தில் நடந்த இறுதி சண்டைக் காட்சி போல் சிட்டிக்கும் வில்லன் ரஜினிக்கும் இடையில் அனல் பறக்கும் சண்டை நடக்கிறது. வில்லன் ரஜினி, சிட்டியை மூளைச் சலவை செய்யப் பார்க்கிறது. நாமெல்லாம் எந்திரங்கள் மனிதர்களை நம்பாதே. அவர்கள் உனை ஏமாற்றிவிடுவார்கள் என்று சொல்லிப் பார்க்கிறது. ஆனால், முடியாது நான் சனாவைக் காதலிக்கிறேன். அவளுக்காக எதையும் செய்வேன் என்றூ சிட்டி அப்பாவியாகச் சொல்கிறது. நீ சனாவைக் காதலிப்பது நிஜம்தான். ஆனால், சனா உன்னைக் காதலிக்கவில்லை. அவள் உன்னை ஏமாற்றிவிடுவாள் என்றூ வில்லன் எவ்வளவோ சொல்லிப் பார்க்கிறது. ஆனல், சிட்டி அதை நம்பாமல் வில்லனை அழிப்பதில் குறியாக இருக்கிறது. ஆனால், வில்லன் ரோபோவுக்கு ஈடு கொடுக்க முடியாமல் சிட்டி திணறுகிறது. ஒரு கட்டத்தில் முழு வலிமையையும் இழந்து கிடக்கும் சிட்டிக்கு சனா ஆறுதல் சொல்லி தைரியம் ஊட்டுக்கிறாள். சனா தந்த உற்சாகத்தால் வீறு கொண்டு எழும் சிட்டி, அந்த அதகளச் சண்டையில் கடைசியில் வில்லன் ரஜினியைக் கொன்றுவிடுகிறது. வசீகரனையின் சனாவையும் சிட்டி பாதுகாப்பாக சென்னைக்குக் கொண்டுவந்து சேர்க்கிறது.

அதன் பிறகுதான் எமோஷனல் க்ளைமேக்ஸ் வருகிறது. சனாவுக்கு சிட்டியுடன் திருமணம் நிச்சயமாகிறது. சிட்டிக்கு நம்மை வைத்து காமெடி கீமெடி செய்கிறார்களோ என்று சந்தேகம் வருகிறது. பார்க்கும் ஒவ்வொருவரையும் கேட்கிறது. அனைவரும் சிட்டிதான் மாப்பிள்ளை என்று சொல்கிறார்கள். தாலி கட்டுவதற்கு முன்பாக, சனா தனக்கு காஷ்மீர் ரோஜா வேண்டும் என்று சிட்டியிடம் கெஞ்சிக் கேட்கிறாள் (படத்தின் ஆரம்பகட்ட விளம்பரத்தில் எந்திரன் ரஜினி ஒரு ரோஜாவை முகருவது போன்ற காட்சி இடம்பெற்றது நினைவிருக்கிறதா) . இதோ ஒரு மணி நேரத்தில் கொண்டுவந்துவிடுகிறேன் என்று சிட்டி பறக்கிறது. காஷ்மீரில் அது பனிக் காலம். ரோஜா எங்குமே தென்படவில்லை. சிட்டி, பனி மலையில் ஒற்றை ரோஜாவைத் தேடி அலைகிறது. கடைசியாக பனி மூடிய ஒரு தோட்டத்தில் ரோஜாக்கள் ஏராளம் உறைந்து இருப்பது தெரிகிறது. அனுமார் சஞ்சீவி மலையைப் பெயர்த்ததுபோல் சிட்டி அந்த தோட்டத்தையே பெயர்த்து ஹெலிகாப்டரில் வைத்துக் கொண்டுவருகிறது. ஆனால், அது வந்து சேர்வதற்குள் வசீகரனுக்கும் சனாவுக்கும் திருமணம் முடிந்துவிடுகிறது. சிட்டி அதிர்ச்சியில் உறைந்துபோகிறது. ஒவ்வொருவரையும் பார்த்து சோகமாக வசனம் பேசிவிட்டு கடைசியில் சனாவிடம் வருகிறது. சனா ஏதோ சொல்ல வாயெக்கிறார். யூ டூ சனா... என்று கேட்கிறது. முதலும் கடைசியுமாக சிட்டியின் கண்ணில் இருந்து ஒரு சொட்டு கண்ணீர் வழிகிறது. அதன் பிறகு சிட்டி வேகமாக கண்ணாடி லேபுக்குள் போய் கதவை பூட்டிக் கொள்கிறது. சனாவின் நினைவுகள் ஒவ்வொன்றாக மனதில் அலைமோத வேதனை தாங்காமல் சிட்டி தன்னைத்தானே டிஸ்மேண்டில் செய்து தற்கொலை செய்து கொள்கிறது. இதுதான் சுஜாதா எழுதிய திரைக்கதை.

இது எமோஷனலாகவும் இருக்கிறது. தர்க்கபூர்வமாகவும் இருக்கிறது. சுவாரசியமாகவும் இருக்கிறது. இதிலும் கிராபிக்ஸுக்கான சகல வாய்ப்புகளும் இருக்கின்றன. ராணுவம் ஹெலிகாப்டரில் குண்டுகள் வீச வரும்போது இரும்புச் சங்கிலியை வீசி வானில் மிதக்கும் இரண்டு ஹெலிகாப்டர்களை ஒன்றுடன் ஒன்று மோதி வெடிக்கச் செய்யும் காட்சி மிகவும் சவாலான ஒன்று. அதோடு, மச்சுபிச்சு மலைக்கு நான்குபேரும் புறப்பட்டுப் போகும் காட்சியில் ஒரு ஹெலிகாப்டர் சேஸும் சுஜாதா எழுதியிருந்தார். சிவாஜி படத்தில் சுமோ காருக்குள் இருந்தபடியே நடக்கும் சண்டை போல் இதில் ஹெலிகாப்டர் சேஸ்! வில்லன் ரஜினியின் ஹெலிகாப்டரை பத்து ராணுவ ஹெலிகாப்டர்கள் துரத்துகின்றன. வானில் நடக்கும் அந்த சேஸ், கிராபிக்ஸ் டீமுக்கான சரியான சவால். கடைசியாக மச்சு பிச்சு மலையில் சிட்டிக்கும் வில்லன் ரஜினிக்கும் இடையில் நடக்கும் ஒன் டு ஒன் சண்டையை எப்படியெல்லாமோ பிரமாதமாக எடுக்கலாம். இந்த காட்சிகளில் என்ன கிராபிக்ஸ் பயன்படுத்தினாலும் அதில் கதாநாயகனும் இருப்பார் என்பதால் அது தந்திருக்கும் அனுபவம் அதி அற்புதமாக இருந்திருக்கும். ஷங்கர் கோட்டைவிட்டுவிட்டார். உண்மையில் சுஜாதா எழுதிய க்ளைமேக்ஸ் ஷங்கருக்குக் கிடைக்கவில்லையா? அல்லது அவர் உண்மையிலேயே தனக்கு முக்கியத்துவம் வரவேண்டும் என்று நினைத்து இப்படிச் செய்துவிட்டாரா? எது எப்படியானாலும் நாட்டாமை க்ளைமேக்ஸை மாத்து என்று கலாநிதி மாறன் வீட்டு வாசலிலும் ஷங்கர் வீட்டு வாசலிலும் நின்று கொண்டு சுஜாதாவின் ஆத்மா கதறிக் கொண்டிருப்பது மட்டும் நிச்சயம்.