என் பெயர் சமரவீரா... ராணுவ வீரன்.
சொந்த இனம் வந்த இனத்தால் வஞ்சிக்கப்பட்டதைப் பார்த்துக் கொண்டு நின்றவன். எம் முன்னோர்களை அடக்கி ஆண்டவன், எமது வீட்டில் கூலி வேலை செய்ய வந்தவன் வீட்டுக்கு வாரிசு என்று சொல்லிக்கொண்டு வருவதைப் பார்த்துக்கொண்டு நின்றவன். தேசிய கீதம் இரண்டு மொழிகளில் பாடப்படுவதைக் கேட்டு வளர நேர்ந்தவன். எனது தலைவர்களும், அமைச்சர்களும், பிரதம மந்திரிகளும், சகோதர சகோதரிகளும் கண் முன்னே கொல்லப்படுவதைப் பார்த்துக்கொண்டு இருக்க நேர்ந்தவன். அதனால், இனி பொறுப்பதற்கில்லை என்று பொங்கி எழுந்தவன்.
இந்தப் பிரச்னைக்கு யார் காரணம் என்ற கேள்வியே அபத்தமானது. சிங்களர்களின் சொந்த நாடான இலங்கையில் இரண்டுவிதமான தமிழர்கள்தான் இருக்கிறார்கள். ஒன்று பிரிட்டிஷார் காலத்தில், இலங்கைக்கு தேயிலைத் தோட்ட கூலி வேலைக்காக வலுக்கட்டாயமாகக் கொண்டுவரப்பட்டவர்கள். இன்னொரு பிரிவினர் தென்னிந்தியாவிலிருந்து வந்து எம் மக்களை அடித்துக் கொன்று வலுக்கட்டயமாக எங்களுடைய பகுதியை ஆக்ரமித்துக் கொண்டவர்கள். இரண்டு தரப்பினருக்கும் எமது பூமியில் இருக்கவே அதிகாரம் கிடையாது. இந்தநிலையில் தனி நாடு வேண்டுமென்று கேட்டால்..?
இன்னும் விரிவாகச் சொல்வதானால்... இந்த இரண்டு தரப்பினரையும் நாங்கள் ஏற்றுக்கொண்டு வாழப் பழகித்தான் இருந்தோம். ஏனென்றால், நாங்கள் பவுத்தத்தைப் பின்பற்றுபவர்கள். உலகுக்கே அஹிம்சையை போதித்தவரின் வழி வந்தவர்கள். உலகுக்கே அஹிம்சையை போதித்த புத்த பெருமானின் கைகளில் ஆயுதத்தைத் திணித்தது யார்..? இதற்கான விடை கிடைக்க வேண்டுமானால் நீங்கள் இலங்கை பற்றி ஓரளவுக்காவது தெரிந்துகொள்ள வேண்டும்.
1981-ல் கடைசியாக இலங்கையில் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதன் பிறகு ஒரு நியாயமற்ற போரை புலிகள் ஆரம்பித்துவிட்டதால் அதற்குப் பிறகு கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. ஆனால், போரை ஆரம்பித்தபோது புலிகள் சில காரணங்களைச் சொன்னார்கள். தமிழர்களுக்கு கல்வியில் உரிமை மறுக்கப்படுகிறது. மருத்துவ வசதிகள் போன்ற அடிப்படை விஷயங்கள் கிடைக்கவில்லை. உயர்மட்ட வேலைகள் தமிழர்களுக்கு மறுக்கப்படுகின்றன. தமிழர்கள் இரண்டாந்தரக் குடிமகனாக நடத்தப்படுகிறார்கள்... அதனால் தமிழர்களின் உரிமைகளை வென்றெடுக்க நாங்கள் போரை ஆரம்பித்திருக்கிறோம்...
இந்த வாதத்தில் எவ்வளவு உண்மை இருக்கிறது என்று நீங்கள் யோசித்துப் பார்க்கவேண்டும். நாங்கள் அடக்கி ஒடுக்கியதால் நீங்கள் ஆயுதங்களை எடுத்தீர்களா..? அல்லது நீங்கள் ஆயுதத்தை எடுத்ததால் நாங்கள் அடக்கி ஒடுக்க வேண்டி வந்ததா..? என்பது மிக முக்கியமான கேள்வி. இதற்கு விடை தெரியவேண்டுமானால் 1981 கணக்கெடுப்பை ஒருவர் நன்கு படிக்கவேண்டும்.
அப்போது இலங்கையில் பவுத்தர்கள் 70 சதவிகிதம் இருந்தார்கள். இனரீதியாகச் சொல்வதானால் அவர்கள் சிங்களர்கள். இந்துக்கள் அதாவது தமிழர்கள் 15 சதவிகிதம் இருந்தார்கள். எஞ்சிய 15 சதவிகிதத்தினரில் கிறிஸ்தவர்கள், முஸ்லீம்கள் இருந்தனர். தமிழர்களில் 66 சதவிகிதத்தினர் இலங்கையின் வடக்கு, கிழக்கு பகுதியில் இருந்தனர். எஞ்சிய 33 சதவிகித தமிழர்கள் அமைதியாக, அன்பாக இலங்கையின் எஞ்சிய பகுதியில் அதாவது சிங்களர்கள் அதிகமாக இருந்த பகுதிகளில் வசித்தனர். தமிழர்கள் பெரும்பான்மையாக இருந்த வடக்கு, கிழக்கு பகுதியில் 3% சிங்களர்கள் மட்டுமே வசித்தனர். அவர்களும் காலப்போக்கில் இடம்பெயர்ந்துவிட்டனர். அல்லது பெயர்க்கப்பட்டுவிட்டனர்.
கல்வி மறுக்கப்பட்டது என்றொரு கதை சொல்கிறார்களே அதற்கு வருகிறேன். சுமார் பதினைந்து சதவிகிதம் மட்டுமே இருந்த தமிழர்கள் மருத்துவம் (42%), கால்நடை மருத்துவம் (50%), பொறியியல் (35%), விவசாயம் (30), கட்டுமானப் பொறியியல் (37%), பல் மருத்துவம் (62), பயோ சயின்ஸ் (33%) என பல்கலைகழகத்தில் இடம் பெற்றிருந்தனர். இதையா சிங்கள ஒடுக்குதல் என்கிறீர்கள்..?
பொதுப்பணித்துறையில் அவர்களுடைய பங்கு என்னவாக இருந்தது தெரியுமா..? பொறியாளர்கள் (44%), சர்வேயர்கள் (30%), மருத்துவர்கள் (35%), பல் மருத்துவர்கள் (25%), விஞ்ஞானிகள் (42%), பல்கலைக்கழக ஆசிரியர்கள் (25%), நீதித்துறைப் பணியாளர்கள் (17%), அக்கவுன்டன்ட்கள் (33%) என சமூகத்தின் அனைத்து உயர் மட்டப் பணிகளிலும் அவர்களுடைய பங்கு அவர்களுடைய மக்கள் தொகை சதவிகிதத்தைவிட பல மடங்கு அதிகமாகவே இருந்தன. ஒரு சிறுபான்மை இனம் அதிகப்படியான பிரதிநிதித்துவத்தைப் பெற்றிருப்பதா அடக்குமுறை..?
1983-ல் 15 கேபினட் அமைச்சர்களில் 3 பேர் தமிழர்களாக இருந்தனர். சீனா, ஃபிரான்ஸ், பிரிட்டன், மேற்கு ஜெர்மனி மற்றும் பல நாடுகளின் இலங்கை அரசின் சார்பிலான வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்தவர்கள் அனைவரும் தமிழர்கள். சிங்களர்கள் தமிழர்களை நம்பினார்கள்... தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடினார்கள். அதைத்தான் அடக்குமுறை, ஒடுக்குமுறை என்று சொல்லி விடுதலைப் புலிகள் போர் பிரகடனம் செய்தார்கள். ஒரு பெரும்பான்மை இனம் சிறுபான்மை இனத்திடம் இதைவிட தன்மையாக நடந்துகொள்ளமுடியுமா..? பாம்புக்கு பால் ஊற்றி வளர்த்தாலும் அது கொத்தத்தான் செய்யும்... அப்படி அது செய்யும்போது அதுவரை பால் ஊற்றி வந்தவர்களே அதை அடித்தும் கொல்வார்கள். தவறு யார் மீது..?
பொதுவாக உலகில் நீதி, நியாயம் குறித்து ஒரே கோணத்தில் பார்க்கப்படுகிறது. எளியவன், எண்ணிக்கையில் குறைவாக இருப்பவன் ஏதாவது தவறு செய்தால் அதை நாம் குற்றம் என்று சொல்வது கிடையாது. வலியவன், எண்ணிக்கையில் அதிகமானவன் நல்லது செய்தால் அதையும் நாம் பாராட்டுவது கிடையாது. சரியோ தவறோ எளியவனைத் தலையில் வைத்துக் கொண்டு கொண்டாடு... அதுதான் முற்போக்கு... நற்போக்கு... இந்த அணுகுமுறை சரியே கிடையாது. பெரும்பான்மைக்கு சேவகம் செய்யச் சொல்லவில்லை. பெரும்பான்மைக்கும் சம வாய்ப்பு கொடு என்றுதானே நாங்கள் கேட்டோம்.
இன்று உலகமெங்கும் சிங்கள பேரினவாத அரசு குறித்து திட்டமிட்டு பொய்யுரைகள் பரப்படுகின்றன. சிறுபான்மையினத்தை நாங்கள் அடக்கி ஒடுக்குகிறோமாம். பாம்பு எண்ணிக்கையில் மிகவும் சொற்பமானவை. ஆனால், அதை மடியில் போட்டுக் கொஞ்ச முடியாது. ஏனென்றால், பாம்பு தன் உமிழ் நீரை மற்றவர்களின் உயிரைப் போக்கும் விஷமாக மாற்றி வைத்திருக்கிறது. அடித்துக் கொல்லப்படுவதில் இருந்து அது தப்பிக்க முடியாது. அதனுடன் சுமுகமான உறவு ஒருபோதும் சாத்தியமில்லை. ஏதோ நாம் பாட்டுக்கு வாழ்ந்துவிட்டுப் போவோம். அது பாட்டுக்கு வாழ்ந்துவிட்டுப் போகட்டும் என்று நாம் ஒருபோதும் நினைக்க முடியாது. நாம் கொல்லாவிட்டால் கொல்லப்பட்டுவிடுவோம். பாம்பைக் கொல்லும்போது அதை மறைத்துவைத்துப் பாதுகாக்கும் புதருக்கும் தீ வைத்தாக வேண்டியிருக்கிறது. தீப்பந்தத்துடன் வரும்போது பூவும் பிஞ்சுமாக, இளந்தளிர்களைக் காற்றில் அசைத்தபடி இருக்கும் புதர் செடிகளைப் பார்க்கும்போது, இந்தத் தளிர்களையா நாம் எரியூட்டப் போகிறோம் என்று எமக்கும் வலிக்கத்தான் செய்கிறது. ஆனால், என்ன செய்ய பாம்புகள் பதுங்கியிருக்கும் புதர்கள் அல்லவா அது.
எமது முன்னோர்கள் சிந்திய ரத்தத்துக்கு இன்று நாங்கள் பதிலடி கொடுக்கிறோம். இது ஒரு கவித்துவமான நீதி... தினையை விதைத்தவன் தினையை அறுப்பான். வினையை விதைத்தவன் வினையை..! ஒரு பிரபாகரனுக்காக ஒட்டு மொத்த விடுதலைப் புலிகளும் தங்களை அழித்துக் கொள்ளத் தயார் என்று சொன்னார்கள். நாங்கள் என்ன செய்ய..? உண்மையில் நாங்கள் தமிழர்களுக்கு எதிரிகள் அல்ல. ஈழப் பகுதியை மட்டுமல்ல ஈழத்தில் விடுதலைப்புலிகளின் பிடியில் சிக்கித் தவிக்கும் தமிழர்களையும் காப்பாற்றத்தான் நாங்கள் போராடினோம். தனி நாடு கேட்காத தமிழர்களை நாங்கள் ஒன்றும் செய்தது கிடையாது. இன்றும் கூட சிங்களர்கள் பெரும்பான்மையாக இருக்கும் கொழும்புவில் இருக்கும் தமிழர்கள் மிகவும் பாதுகாப்பாக இருக்கிறார்கள்.
இந்த நிகழ்ச்சியைப் பார்க்கும் தமிழர்களுக்குப் புரியும்வகையில் சொல்வதானால், உங்களுடைய தமிழகத்தை தெலுங்கர்கள் ஆட்சி செய்தனர். இன்றும் தமிழகத்தில் பல பகுதிகளில் அவர்கள் வசிக்கின்றனர். அந்தப் பகுதியில் வசிப்பவர்கள் எல்லாம் சேர்ந்து தனி நாடு கொடு என்று கேட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்..? ஆங்கிலேயர்கள் உங்களை ஆட்சி புரிந்தனர். இந்தியாவில் தங்கிவிட்ட ஆங்கிலோ இந்தியர்கள் வதவதவெனப் பெருகி நாட்டின் ஒரு பகுதியை அடைத்தபடி வளர்ந்துவிட்டு எமக்கு தனி நாடு கொடு என்று கேட்டால் நீங்கள் என்ன செய்வீர்கள்..? அதைத்தான் நாங்கள் செய்தோம்.
ஒரு நாடு உனக்குச் சொந்தமானதாக இருக்க வேண்டுமானால், உன் பரம்பரையின் ஆதி மனிதர் அந்த இடத்தில் பிறந்திருக்க வேண்டும். ஐநூறு வருடம் இருந்துவருகிறோம். அறுநூறு வருடம் இருந்து வருகிறோம் என்ற சரித்திரப் புரட்டுகள் போதாது.
இரண்டாம் தரக் குடிமகனாக நடத்தினார்கள்... அதனால்தான் தனி நாடு கேட்கிறோம் என்று ஒரு காரணம் சொல்கிறார்கள். ஆனால், உண்மையில் தமிழர்கள் எங்கள் தலையில் மிளகாய் அரைத்துக் கொண்டிருந்தனர். அரசு வேலைகளில், சொத்துக்கள் வைத்திருப்பதில், சமூக படிநிலைகளில் சொந்த இனத்தினரான சிங்களர்களைவிட பல மடங்கு உயரத்திலிருந்தனர்.
உலகில் எந்த ஒரு இடத்தையும் எடுத்துப் பாருங்கள். பெரும்பான்மை எப்போதுமே பந்தயத்தில் பின் தங்கி இருந்ததாக சரித்திரமே கிடையாது. நாங்கள் தோற்கப்பட்டிருந்தோம். வெற்றி பெற விரும்பினோம். எங்களுடைய நாட்டில் எங்களுக்கான உரிமையை நாங்கள் போராடிப் பெற வேண்டி இருந்தது. இதைவிடக் கேவலம் வேறெதுவுமே இருக்க முடியாது.
சிங்களர்கள் அதிகமாக இருந்த பகுதிகளில் இருந்த கல்வி நிலையங்களில் சிங்களம், தமிழ், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் படிக்கும் வசதி இருந்தது. ஆனால் தமிழர்கள் அதிகமாக இருந்த பகுதியில் இந்தக் கல்வி நிலையங்களில் தமிழ் மட்டுமே பயிற்று மொழியாக இருந்தது.
உங்களுக்கு ஒன்று தெரியுமா... தாயகப் பகுதியான தமிழகத்தில் கூட தாய்மொழிக் கல்வி என்பது முழுவீச்சில் இருந்தது கிடையாது. சேயகமான ஈழத்தில் அது உச்சத்தில் இருந்தது. ஈழத்தில் பொறியியல், மருத்துவப் படிப்பை ஒரு தமிழர் தன் தாய் மொழியிலேயே படிக்க முடியும். அந்த அளவுக்கு அவர்களுக்கு உரிமையும், வளமும் வசதியும் இருக்கத்தான் செய்தது. ஆனால், சிங்களன் அப்போது தன் அடிப்படைக் கல்விகூடப் பெறமுடியாமல் தவித்துக் கொண்டிருந்தான்.
அப்படியான ஒரு நிலையில் சிங்கள தேசத்தில் சிங்களத்தை ஆட்சி மொழியாக அறிவித்தது தவறா..? சிங்கள பூமியில் சிங்களர்களுக்கு முன்னுரிமை என்று சொன்னது தவறா..?
ஆங்கிலேயர்கள் தங்களுடைய ஆட்சி காலத்தில் தங்களுடைய பிரித்தாளும் கொள்கையின் அடிப்படையில் தமிழர்கள் பகுதிகளில் ஏராளமான ஆங்கிலப் பள்ளிகளை ஆரம்பித்தார்கள். தமிழர்களுக்கு ஆங்கிலக் கல்வி எளிதில் கிடைத்தது. ஆங்கிலேய அரசாங்கத்தில் பதவியும் கிடைத்தது. மருத்துவம், பொறியியல், நீதித்துறை என சமூகத்தின் உயர்மட்ட பிரிவுகள் அனைத்திலும் தமிழர்களே ஆதிக்கம் செலுத்திவந்தனர். சிங்களர்கள் அடிமட்டப் பணிகளில் மட்டுமே நிறைந்திருந்தனர். 1981 கணக்கெடுப்பு வரையிலும் இதுதான் நிலமை.
தமிழர்களிடையே வேலையில்லா திண்டாட்டம் நிலவியது அதனால்தான் ஆயுதத்தை ஏந்தவேண்டி வந்தது என்றொரு புரட்டும் சொல்லப்படுவதுண்டு. உண்மையில் தமிழர்களில் வேலையில்லாமல் இருந்தவர்களின் எண்ணிக்கையைவிட சிங்களர்களில் வேலை இல்லாமல் இருந்தவர்களின் எண்ணிகைதான் அதிகம்.
அதுமட்டுமல்ல... தமிழர்கள் அதிகமாக இருந்த பகுதியில் இருந்த சிங்களர்களின் எண்ணிக்கை காலப்போக்கில் குறைந்துவந்தது. ஆனால், சிங்களர்கள் அதிகமாக இருந்த பகுதிகளில் இருந்த தமிழர்களின் எண்ணிகையோ அதிகரித்து வந்துள்ளது. யார் அழித்தொழிப்பு, இனச் சுத்திகரிப்பில் ஈடுபட ஆரம்பித்தனர்..? சிங்களர்களா..? விடுதலைப் புலிகளா..?
சிங்கள அரசின் ஆணைகள், பத்திரங்கள், தபால்தலை, அறிவிப்புப் பலகைகள் என அனைத்திலும் சிங்கள, தமிழ், ஆங்கிலம் என மூன்று மொழிகளும் இடம்பெற்றிருந்தன. இவையெல்லாம் 1983 வரையிலும் இருந்துவந்த நிலைமைதான். விடுதலைப் புலிகளின் ஆதிக்கத்தில் இருந்த பகுதிகளில் வசித்த தமிழர்களைவிட சிங்கள அரசின் ஆளுகையில் இருக்கும் பகுதியில் வசிக்கும் தமிழர்கள் நிம்மதியாக இருந்திருக்கிறார்கள். சிங்களர்களின் பெருந்தன்மையை, அன்பைப் புரிந்து கொள்ளாமல் போனதால்தான் இந்தப் பிரச்னை உருவாகியுள்ளது. அதிலும் தமிழர்கள் அனைவரையும் குற்றம் சொல்லுவது தவறுதான். தவறான தலைவனால் வழிநடத்தப்பட்டும் ஒரு பிரிவினரால் மற்ற அனைவருமே வேதனையை அனுபவிக்க நேர்கிறது.
புலிகள்தான் மக்கள்... மக்கள்தான் புலிகள் என்று முழங்கினார்கள். இந்தப் புலிகள்தான் தமிழ் பேசிய முஸ்லீம்களை போட்டது போட்டபடி வீடு வாசல் நிலபுலன்களை விட்டுவிட்டு ஓடுவிடுங்கள்... இல்லாவிட்டால் கொன்றுவிடுவோம் என்று விரட்டினார்கள். கிழக்கில் இருப்பவர்களை அதிருப்தியின் விளிம்புக்குத் தள்ளினார்கள். பொது நீரோட்டத்தில் கலந்து இலங்கையின் இறையாண்மையை மதித்து அதன் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு தமிழர்களின் நலனைப் பாதுகாக்க முற்பட்ட பிற தமிழ் தலைவர்களை படுகொலை செய்ததும் இந்த விடுதலைப் புலிகள்தான். ஒரு ஆங்கிலப் பத்திரிகை கூட ஒரு முறை செய்தி வெளியிட்டிருந்தது... இலங்கை ராணுவம் கொலை செய்த தமிழர்களைவிட விடுதலைப் புலிகளால் கொல்லப்பட்ட தமிழர்கள் அதிகம் இருப்பார்கள் என்று. ஆனால், அவர்கள் சொன்னார்கள் புலிகள்தான் மக்கள். மக்கள்தான் புலிகள் என்று...
அவர்கள் சொல்வது சரிதான். ஈழத் தமிழர்களின் ஒரே தலைமை புலிகள்தான். மாற்றுக் கருத்து கொண்டவர்களைத்தான் கொன்றொழித்தாயிற்றே. ஒன்று தெரிந்து கொள்ளுங்கள்... புலிகளை ஆதரித்த ஒருவர் ஒன்று பயத்தினால் அதைச் செய்திருப்பார்... அல்லது அறியாமையினால் செய்திருப்பார். எங்களுக்கு புலிகள் குறித்து பயமும் கிடையாது. அறியாமையும் கிடையாது.
அவர்கள் முன்னால் நாங்கள் இரண்டு விஷயங்களை முன்வைத்தோம். போரா... அமைதியா... என்று. அவர்கள் போரைத் தேர்ந்தெடுத்துக் கொண்டார்கள். ஒருவகையில் இந்தப் போர் எங்கள் மீது திணிக்கப்பட்டது என்றுதான் சொல்ல வேண்டும். அவர்கள் எங்கள் குழந்தைகளைக் கொன்றதைக்கூட நாங்கள் பொறுத்துக் கொண்டோம். ஆனால், அவர்களுடைய குழந்தைகளையும் கொல்லும்படிச் செய்துவிட்டார்கள் அதைத்தான் தாங்கிக்கொள்ள முடியவில்லை. சில கதவுகளைத் திறக்கக்கூடாது. அவர்கள் திறந்துவிட்டார்கள். திரும்புதல் சாத்தியமில்லை.
மக்களுக்கும் இப்படியான ஒரு அழிவு தம் மீது கவிழும் என்று ஆரம்பத்தில் தெரிந்திருக்கவில்லை. ஏதோ நாம் கொஞ்சம் போராடினால் கேட்பதைக் கொடுத்துவிடுவார்கள் என்று நினைத்துவிட்டார்கள். தூங்கிக் கொண்டிருந்த சிங்கத்தை தட்டி எழுப்பிவிட்டார்கள். அது திசைகள் எல்லாம் கலங்கும்படியாக கர்ஜித்தது. என்ன செய்ய... தூக்கம் கலைந்த சிங்கத்திடம் வேறெதை எதிர்பார்க்க முடியும்...
(தொடரும்)
No comments:
Post a Comment