அதிலும் இந்த ஜனநாயகக் கூக்குரல்களை எழுப்பும் ஒருவன் பள்ளிக்கூட மைதானத்தில் கொடி மரத்தின் முன்னால் சீருடையில் சிதறிக் கிடந்த சிறுவர்களைப் பார்த்துவிட்டுச் சொல்ல வேண்டும். பால் அருந்திய மார்பில் ரத்தம் கசிவது புரியாமல் கதறிய பச்சிளம் குழந்தையைப் பார்த்துவிட்டுச் சொல்ல வேண்டும். ஷெல் வீச்சில் குழந்தை சிதறிப் போனது நினைவில்லாமல் அள்ளிக் குவித்த துண்டங்களை தூளியில் போட்டு தாலாட்டிக் கொண்டிருந்த சித்தம் கலங்கிய தாயைப் பார்த்துவிட்டுச் சொல்ல வேண்டும். பீரங்கி வண்டிகள் செம்மண் சாலையில் பதித்த தடங்களில் தேங்கிக் கிடந்த ரத்தத்தைப் பார்த்துவிட்டு அதில் நடுங்கிய நிலவின் பிம்பத்தைப் பார்த்துவிட்டுச் சொல்ல வேண்டும்.
ஒவ்வொரு நாட்டில் இருப்பவர்களையும் பொதுவாக இரண்டு பிரிவாகப் பிரிப்பார்கள். வறுமைக் கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள்; அதற்கு மேலே வசிப்பவர்கள் என்று. ஆனால், எங்கள் ஊரில் இருப்பவர்களை கொல்லப்பட்டவர்கள், கொல்லப்படப் போகிறவர்கள் என்றுதான் பிரிக்க முடியும். மரணம் என்பது மனித வாழ்வில் மிகவும் தவிர்க்க முடியாத ஒன்றுதான். ஒவ்வொருவரும் பிறந்த உடனேயே அவரவருக்கான மரணக் கழுகு அதி உயரத்தில் வட்டமிட்டபடி பின் தொடர ஆரம்பித்துவிடும். ஆனால், அதன் நிழலை 50-60 வயது வரை யாரும் பார்க்கவே முடியாது. அதன் பிறகுதான் முதல் முதலாகக் அந்தக் கழுகு கண்ணில் படும்படியாகப் பறக்கத் தொடங்கும். பிறகு மெதுவாக வீட்டின் பின்வாசல் மரத்தில் வந்து உட்காரும். பிறகு கிணற்றடியில் வந்து அமரும். மூடப்பட்ட பின் வாசல் கதவைத் தன் கூர்மையான நகங்களால் தட்டித் திறக்கும். உங்களுக்கு 70-80 வயது ஆன பிறகு ஒவ்வொரு அடியாக எடுத்து வத்தபடி வீட்டுக்குள் நுழையும். தத்தித் தத்தி குறுக்கும் நெடுக்குமாக நடக்கும். மெள்ளத் தலைமாட்டில் வந்து உட்காரும். அதன் சுவாசம் முதன் முறையாக உங்கள் சுருக்கம் விழுந்த முகத்தில் படும். இரவுகளில் தூங்கும் போது கண் விழித்தபடி பக்கத்தில் உட்கார்ந்தபடி உற்றுப் பார்த்துக் கொண்டிருக்கும். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் கால் விரல்களை உடல் முழுவதுமாக விரித்து உயிரை மட்டும் தூக்கிக் கொண்டு திரும்பி வரமுடியாத தேசத்துக்கு பறந்து சென்றுவிடும். இதுதான் உலகம் முழுவதுமான வழக்கம். ஆனால், ஈழத்தில் அப்படி அல்ல. மரணக் கழுகுகள் ஒவ்வொன்றும் ஒவ்வொருவருடைய தலைக்கு மேலே, வெகு அருகில் வட்டமிட்டுக் கொண்டிருக்கும். பிறந்த குழந்தைகளின் ஏன் கருப்பையில் இருக்கும் குழந்தைகளின் மீது கூட அது உட்கார்ந்து கொண்டிருக்கும். சிலரது தோளில் அமர்ந்து கொண்டிருக்கும். லேசாகத் திரும்பினால் அதன் கோரமான கண்கள் மின்னுவதைப் பார்க்க முடியும். அதன் மூச்சுக் காற்று பிடரியில் ஒவ்வொரு நிமிடமும் புஸ் புஸ் என்று ஒலித்துக் கொண்டிருக்கும். மரணக் கழுகுகளின் பரந்து விரிந்த சிறகுகளின் நிழல், ஈழத்தின் மீது நிரந்தரமாகக் கவிழ்ந்து கிடந்தது.
வெடிகுண்டு அல்லது துப்பாக்கி சூட்டில் உடனே இறப்பவர்கள். காயம் பட்டு சிறுகச் சிறுக இறப்பவர்கள்… பட்டினியால் இறப்பவர்கள். வழி முறைகள் வேறு வேறு. இறுதி விளைவு ஒன்றே.
அது சரி... புலிகள் யாரைக் கொன்றார்கள். துரோகிகளைக் கொன்றார்கள். உளவாளிகளைக் கொன்றார்கள். தனி நாடு வேண்டாம் என்று சொன்னவர்களைக் கொன்றார்கள். இலங்கை அரசு தருவதை வாங்கிக் கொண்டு வெந்ததை தின்று விதி வந்தால் சாவோம் என்று சொன்னவர்களைக் கொன்றார்கள். அதில் என்ன தவறு இருக்கிறது? எதிரியைவிட துரோகிகளும் துரோகிகளைவிடக் கோழைகளும் மோசமானவர்கள் அல்லவா. இத்தனை இழப்புக்குப் பிறகு ஈழம் வேண்டாம் என்று சொல்ல யாருக்கு உரிமை இருக்கிறது..? புலிகள் எடுத்த எடுப்பிலேயா தனி நாடு கோரினார்கள். எத்தனையோ கோரிக்கைகளை முன் வைத்து எதுவுமே கிடைக்காமல் போனதால்தானே தனி நாடு கோரிக்கையை முன் வைத்தார்கள். ஆள்வதற்கு ஐந்து தேசங்களைக் கொடு... முடியாதென்றால் ஐந்து ஊர்களையாவது கொடு... அதுவும் முடியாதென்றால் ஐந்து வீடுகளையாவது கொடு என்று கெஞ்சிக் கேட்டும் எதுவும் கிடைக்காமல் போனதால்தானே நிச்சயிக்கப்பட்டது குருக்ஷேத்திர யுத்தம்.யுத்தம் என்று ஆரம்பித்த பின் நேர்ந்த இழப்பைப் பார்த்துவிட்டு அந்த தருமன் கூடச் சொல்லவில்லையே, தருவதை வாங்கிக் கொண்டு போய்விடுவோம் என்று. அப்படிப் போவதாக இருந்தால் போரை ஆரம்பித்திருக்கவே வேண்டாமே... வேண்டுமென்றால் ஆரம்பித்து, போதுமன்றால் நிறுத்திக் கொள்ள இதென்ன விளையாட்டா... போர் நண்பர்களே போர்... இதில் ஒன்று அவன் வெல்ல வேண்டும். அல்லது நாம் வெல்ல வேண்டும். ஒன்று இந்த பூமியில் அவன் இருக்க வேண்டும் அல்லது நாம் இருக்க வேண்டும். அவன் இருந்தால் நாம் இருக்க முடியாது என்றான பின் நாம் இருக்க அவனை இல்லாமல் ஆக்கித்தானே ஆக வேண்டும். கடல் அலையற்று இருக்க நினைத்தாலும் காற்று விடுவதில்லையே... எதிர்த்தோம்... அதனால் அல்லவா இது நாள் வரை இருந்தோம்.
துரோகத்தின் வரலாறுகளைப் புரட்டிப் பாருங்கள்... புலிகளின் செயல்கள் உங்களுக்குப் புரியவரும்.
அனந்தன் : ராஜீவ் காந்தி அமைதி முயற்சிகளில் ஈடுபட்டு ஜெயவர்த்தனாவிடன் ஒப்பந்தம் செய்து கொண்டாரே. அந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டிருக்கலாமே..?
விடுதலைப் புலி : அவர்கள் செய்து கொண்ட 1987 ஒப்பந்தம் எதை முன்வைத்தது தெரியுமா... போராட்டக்குழுவினர் ஆயுதங்களைக் கீழே போடவேண்டும்... இலங்கை அரசு கிழக்கு வடக்கை இணைத்து தனி மாநிலமாக அறிவிக்கும். தமிழ் பகுதிக்கு சுய நிர்ணய உரிமையைத் தரவேண்டும். சம உரிமைக்கு வழி செய்து தரவேண்டும்... இந்திய அரசு தேவைப்பட்டால் இலங்கைக்கு ராணுவ உதவிகள் செய்து தரும்... இதுதான் இலங்கையில் அமைதி திரும்ப செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம்... தம்பியைச் சிறைப் பிடித்து அந்த ஒப்பந்தத்தை ஏற்றுக் கொள்ள வைத்தார்கள். இந்தியாவை நம்பி விடுதலைப் புலிகள் போர் நிறுத்தம் அறிவித்தனர்... இந்திய அரசு இலங்கைக்கு அமைதிப் படை என்ற பெயரில் ராணுவத்தை அனுப்பியது... ஆனால், சுய நிர்ணய உரிமையும் தரப்படவில்லை... சம உரிமைக்கு வழி செய்தும் தரவில்லை... அது மட்டுமா நடந்தது... நடுநிலை என்ற போர்வையில் களம் இறங்கிய இந்திய அமைதிப் படை தமிழர்களுக்கு எதிரான வன்முறையில் இறங்க ஆரம்பித்தது. இந்திய ராணுவத்திடம் இருக்கும் ஆயுதங்கள் தமிழர்களைக் காப்பாற்றும் என்ற நம்பிக்கையில்தான் விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களைக் கீழே போட்டனர். ஆனால், இந்திய ஆயுதங்கள் தமிழர்களை நோக்கித் திரும்ப ஆரம்பித்தன. இந்திய ராணுவம் தமிழ் பெண்களைக் கற்பழிக்க ஆரம்பித்தது. புலிகள் மீண்டும் ஆயுதங்களைக் கையில் ஏந்த வேண்டி வந்தது.
சிங்களக் காடை ஜெயவர்த்தனே தான் ஆரம்பித்த போரை அமைதிக்கான போர் என்று வர்ணித்தான்... உண்மைதான்... தமிழர்கள் அனைவரையும் கொன்று குவித்துவிட்டால் அதன் பிறகு அமைதி தானாகத் திரும்பிவிடுமே... இந்த நாசகரத் திட்டத்துக்கு நீயும் உடந்தையாக இருந்தாய். உனக்கான சந்தன மாலையின் கண்ணிகளை எண்ணி எண்ணிக் கோர்த்தது நீதானே... உமக்கான சவப் பெட்டிகளின் ஆணிகளை ஒவ்வொன்றாக எடுத்துக் கொடுத்தது நீவிர்தானே...
அனந்தன் : என்னதான் கருத்து வேறுபாடு இருந்தாலும் ராஜீவ் காந்தியைக் கொன்றது மிகப் பெரிய தவறுதானே
புலி : ராஜீவ் காந்தியின் மரணம் மிகவும் துரதிஷ்டகரமான நிகழ்வு. இதற்கு முன்னாலும் சிங்கள ராணுவ அணி வகுப்பின் போது ஒரு முறை அவர் மீது கொலை முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ரகசியமாகவெல்லாம் இல்லை. ஒட்டு மொத்த உலகமே பார்க்கும் நிலையில் மேற்கொள்ளப்பட்டது. இந்திராவைக் கொன்றது ஒரு சீக்கியர் என்பதால் சீக்கியர்கள் மேல் கட்டவிழ்த்துவிடப்பட்ட கொலை வெறித் தாக்குதலால் அவர் மீது கோபம் கொண்டவர்கள் எத்தனையோ பேர் இருந்தனர். இன்னும் சொல்லப்போனால் ராஜீவின் மரணத்தால் பலனடைந்த வேறு பலரும் இருக்கிறார்கள். அவர்களில் யார் வேண்டுமானாலும் அந்தக் கொலையைச் செய்திருக்கக்கூடும். ஆனால், திட்டமிட்டே புலிகள் மீது அவப்பழி போடப்பட்டது. அவரைக் கொல்வதற்கு புலிகளுக்கு 100 சதவிகித காரணங்கள் இருந்ததும் உண்மையே. அமைதிப் படை என்ற பெயரில் இந்திய ராணுவம் ஈழத் தமிழ் பெண்களைக் கதறக் கதறக் கற்பழித்ததற்கெல்லாம் கணக்குப் பார்த்து பழி தீர்ப்பதென்றால் ராஜீவ் இன்னும் பல ஜென்மங்கள் எடுத்து வர வேண்டியிருக்கும்.
பிரேமதாசன்... பேரைப் பாருங்கள். எவ்வளவு இனிமையான பெயர்... இந்தப் பெயரை வைத்துக் கொண்டு எத்தனை அராஜகங்கள் புரிந்தாய்... பிரேமத்தின் தாசனாக இருக்க வேண்டியவன் பிரேதத்தின் தாசனாக மாறியதால் அவனுக்கான தீர்ப்பு அவனது மொழியிலேயே வழங்கப்பட்டது.
இலங்கை அரசின் போர் யாரோடு... புலிகளோடுதானே... புலிகள் அதைத்தானே செய்தார்கள். அப்பாவிகளை அவர்கள் ஒருபோதும் தாக்கியதில்லையே... இலங்கை அரசு நியாயமான போரை நடத்தியது என்றால் சர்வதேச அமைப்புகளை ஏன் வெளியேற்றியது. நடுநிலையான பத்திரிகையாளர்களை ஏன் கொன்றது? பாதுகாப்பு வளையம் என்பது உண்மையிலேயே பாதுப்புக்கானது என்றால் நடுநிலையான பார்வையாளர்களை அங்கு அனுமதிக்க மறுத்தது ஏன்..? உலக நாடுகள் அனைத்தும் இதைக் கண்டித்த பிறகும் கூட இந்திய அரசு இந்த சதிவேலைகள் குறித்து எந்த விமர்சனமும் எழுப்பவில்லையே... ஏன்..? புலிகள் வசம் 70000 பேர் சிக்கி இருக்கிறார்கள் என்று சிங்கள அரசு சொன்னது. இந்திய உள்துறை அமைச்சரும் அதையே வழிமொழிந்தார். சர்வதேச அமைப்புகளும் பிற ஊடகங்களும் குறைந்தது அங்கு இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்கள் சிக்கி இருக்கக்கூடும் என்று சொல்லிவந்தது. அதை அன்று இந்திய அரசு பொருட்படுத்தவில்லை.
அதன் பிறகு இலங்கை அரசு எண்பதாயிரம் அப்பாவிகளை மீட்டதாகச் சொன்னது. இந்திய அரசும் அதை தனது ராஜாங்க நடவடிக்கைகளுக்குக் கிடைத்த வெற்றி என்று மார்தட்டிக் கொண்டது. எழுபதாயிரம் பேர் இருந்த இடத்தில் இருந்து 80000 பேரை எப்படி ஐயா மீட்டீர்கள். இன்னும்20000 பேர் அங்கு இருப்பதாகவும் அவர்களையும் மீட்டுவிடுவோம் என்றும் சொன்னார்கள். அப்படியானால் இதற்கு முன்னால் 70000 பேர்தான் இருப்பதாகச் சொன்னார்களே... எஞ்சிய நபர்களைக் கொன்று குவித்திட திட்டமிட்டிருந்தீர்களா..? அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகள் எச்சரித்ததும் பதுங்கிவிட்டார்களா..? இலங்கையின் இந்த கபட நாடகங்களைக் கண்டும் காணாததுபோல் ஏன் இந்தியா இருந்துவந்தது..? இந்த நாடகத்தை எழுதி இயக்கியதே இந்திய அரசிதானா..? இறையாண்மை குறித்து இயம்புவதெல்லாம் நாடகத்தின் நாசூக்கான வசனங்கள்தானா..? கணவன் ஒருவனைக் கொன்றதற்காக ஒட்டுமொத்த தமிழினத்தையும் பூண்டோ டு கருவறுக்கத் தீட்டம் தீட்டியதா தியாகத்தின் திரு உருவம்..? இத்தாலியப் பத்தினித் தெய்வம் இலங்கைத் தமிழர்களைப் பழி வாங்கியதா..? மார்பைத் திருகி எறிந்து சூளுரைத்த காவிய நாயகி கண்ணகி கூட அறவோர்களையும் அந்தணர்களையும் குழந்தைகளையும் பெண்டிரையும் முதியோரையும் விட்டுவிடச் சொன்னாளே அவள் உருவாக்கிய அழிவுத் தீயிடம்... இந்த நவீன கிராதகி ஒட்டு மொத்தத் தமிழினத்தையும் உயிரோடு கொல்ல உத்தரவிட்டாளா..?
(தொடரும்)
No comments:
Post a Comment