இருட்டில் இருந்து வெளிச்சத்தை நோக்கி...

Saturday, October 2, 2010

புத்தம் சரணம் கச்சாமி - 18

உங்கள் காடுகள் அன்பானவை... சுள்ளி பொறுக்கக் காட்டுக்குச் செல்பவர்களை கிழங்குவகைகளும் சேர்த்துத் தந்து பத்திரமாக அனுப்பிவைத்துவிடும். எங்கள் காடுகளைப் போல் கண்ணிவெடி வெடித்து கால் கைகளை முடமாக்கிவிடாது.

உங்கள் அங்காடிகள் நேர்மையானவை. காலிப் பையும் காசும் கொண்டு சென்றால் காசை மட்டும் வாங்கிக் கொண்டு காய்கனிகளைப் பைகளில் நிரப்பி அனுப்பிவிடும். எங்கள் அங்காடிகளைப் போல் உயிரைக் காவு கேட்காது.

உங்களுடைய ஊரில் கல்லறைகள் என்பவை ஊருக்கு ஒதுக்குப்புறமாக சிறு தோட்டம்போல் அமைந்திருக்கும். ஒரே ஒரு வாசல்தான் இருக்கும். இறந்து போன ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக கல்லறைகள் எழுப்பப்பட்டிருக்கும். இறந்த தினத்தன்று நீங்கள் கறுப்பு உடை அணிந்து கொண்டு கையில் மலர் கொத்துடன் வந்து மெழுகுவர்த்தியை ஏற்றி முழந்தாளிட்டு இறந்தவருக்கு அஞ்சலி செலுத்திவிட்டுச் செல்வீர்கள். எங்கள் ஊரில் தனியாக கல்லறைத் தோட்டம் என்று எதுவும் கிடையாது. இறக்கும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியான கல்லறை கட்டுவதென்றால் கல்லறைத் தோட்டமாக அல்ல கல்லறை நகரமாகத்தான் அது இருக்கும். குடும்பத்துக்கு ஒரு கல்லறை மாடம்... கிராமத்துக்கு ஒரு கல்லறை ஸ்தூபி... இதுதான் இங்கு சாத்தியம். எங்கள் சமூகத்தில் சமூக நல்லிணக்கம் முழுவதுமாக நிலவுவதுண்டு. இந்துக்கள் புதைக்கப்படுவார்கள். கிறிஸ்தவர்கள் எரிக்கப்படுவார்கள். மதத்தின் கொடூர விதிகள் எங்களைக் கட்டிப்போடுவதில்லை.

உங்களுடைய பேருந்துப் பயணங்கள் சுகமானவை... பச்சைப் பசேலென்று பரந்து விரிந்த வயல் வெளிகளினூடே காற்றைக் கிழித்தபடி செல்லும். கூடவே அதிகாலைச் சூரியன் உடன் வர அல்லது தென்னை மரங்களினூடே முழு மதி மறைந்து மறைந்து கண்ணாமூச்சி ஆடியபடியே உடன் வர... என உங்கள் பேருந்துப் பயணங்கள் சுகமானவை. பாதுகாப்பானவை. எங்கள் பயணங்களிலோ போக வேண்டிய இடத்துக்கு நாங்கள் ஒரு போதும் போய்ச்சேர முடிந்ததில்லை.

உங்கள் நெடுஞ்சாலையில் தென்படும் சுங்க சாவடிகளில் நீங்கள் உங்கள் ஆவணங்களைக் காட்டினால் போக அனுமதித்துவிடுவார்கள். உரிய கட்டணம் செலுத்தினால் மரியாதையுடன் அனுப்பிவிடுவார்கள். எங்கள் சாலைகளிலோ காவல் அரண்கள் வந்ததென்றால் அனைவரும் இறங்க வேண்டும். ஒவ்வொருவராக சோதிக்கப்படுவார். அனைவரும் பார்க்க வயசுப் பெண்களின் உடலெங்கும் ஊரும் கைகளை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா..? நீங்கள் ஒரு தந்தையாக, தாயாக இருந்து பார்க்க வேண்டும் அந்த வலியை.

உங்கள் கடல் பயணங்கள் இதமானவை. தூளியில் ஆடுவதுபோல் கடல் அன்னை உங்களைத் தாலாட்டியபடி அழைத்துச் செல்வாள். போய் வாருங்கள் என காற்றில் ஆடி விடைகொடுக்கும் கடலோரப் பனை மரங்கள்... சேருமிடம் வருகையில் வாருங்கள் வாருங்கள் என வரவேற்கும் கடலோர மரங்கள்... உங்கள் கடல் பயணங்கள் ரம்யமானவை. ஆனால், எங்கள் பயணங்களில் எங்கள் படகுகள் நடுக் கடலில் நிறுத்தப்படும். ஒரு அறையில் அனைவரையும் அடைத்துவைப்பார்கள். வாசலில் இருவர் துவக்குடன் நிற்பார்கள். ஒவ்வொருவராக விசாரணைக்கு வரச் சொல்வார்கள். ஒவ்வொருவரும் தங்கள் பெயரையும் ஊரையும் உரத்த குரலில் கத்தச் சொல்வார்கள். அலைகடல் மேலே தத்தளிக்கும் அந்தப் படகில் கொல்லப்படும் ஆண்கள் பாக்கியவான்கள்.

கயவர்கள் தவறு செய்தால் காவலர்களிடம் முறையிடலாம். காவலர்கள் தவறு செய்தால் நீதி மன்றத்தில் முறையிடலாம். நீதிபதிகள் தவறு செய்தால் அரசாங்கத்திடம் முறையிடலாம். காவலர்களும் நீதிபதிகளும் அரசாங்கமும் சேர்ந்து தவறு செய்தால்..? வில்லன்கள் மட்டுமே நடிக்கும் நாடகத்தில் கற்பைக் காப்பாற்றிக் கொள்ள கதாநாயகி யாரிடம் போய் முறையிடுவாள்..?

உங்கள் நாட்டில் சாலை விபத்தில் அடையாளம் தெரியாமல் இறக்கும் அநாதைகளுக்குக் கூட உரிய மரியாதையுடன் நடத்திவைக்கப்படும் இறுதிச் சடங்குகள். எங்கள் நாட்டிலோ உற்றாரும் உறவினரும் அனைவரும் இருந்தபோதும் காடுகளில் நாயும் நரியும் கழுகும் காகமும் தின்று தீர்த்த சடலங்களின் எண்ணிக்கை உங்களுக்குத் தெரியுமா..?

நினைத்துப் பாருங்கள்... நீங்கள் ஒரு கிராமத்தில் தலைமுறை தலைமுறையாக வசித்து வருகிறீர்கள். வயலிலோ, கடையிலோ, அலுவலகத்திலோ எங்கோ ஒரு இடத்தில் நீங்கள் வேலைசெய்துவருகிறீர்கள். திடீரென்று வானில் தாழப்பறந்தபடி பறக்கும் சில ஹெலிகாப்டர்கள். வந்திருப்பது தேவதூதர்கள் அல்ல என்பது உங்களுக்கு விரைவிலேயே தெரிந்துவிடும். அவர்கள் உங்களுக்கு கெடு விதிப்பார்கள். சுட ஆரம்பிப்பதற்கு முன் ஓடிப் போய்விடுங்கள் என்று அந்த அசரீரி ஒலிக்கும். நீங்கள் அலறி அடித்துக் கொண்டு காட்டுப் பக்கம் ஓடினால் அங்கு உங்களுக்காகக் காத்திருப்பார்கள் கையில் துவக்குகளுடன் சில காவலர்கள். அங்கிருந்து தப்ப படகுத்துறை நோக்கி ஓடினால் அங்கும் புன்முறுவல் பூத்தபடியே காத்திருப்பார்கள் வேறு சில காவலர்கள். வழியில் வரும் பஸ்ஸையோ காரையோ பிடித்து ஏறிச் சென்றால் சாலை ஓரத்தில் காத்து நிற்பார்கள் இன்னும் சில காவலர்கள். பள்ளியிலோ, கோயிலிலோ அடைக்கலம் தேடலாம் என்று ஓடினால் அங்கும் காத்திருப்பார்கள் உங்களுக்கான காலன்கள். எந்தத் துப்பாக்கியால் சுடப்பட்டு இறக்கலாம் என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளலாம். இல்லை நான் எங்குமே ஒடமாட்டேன் என்று வீட்டுக்குள்ளேயே இருந்தால் ஹெலிகாப்டர்களில் இருந்து வீசப்படும் குண்டுகளுக்குச் சிக்கி உயிரை விடலாம். நாளை அந்த படுகொலையில் தப்பிப் பிழைக்கும் உங்கள் குழந்தை வளர்ந்த பிறகு, இங்குதான் எங்கள் வீடு இருந்தது என்று அடையாளம் காட்டுவதற்கு பதிலாக இங்குதான் என் தந்தை கொல்லப்பட்டார் என்று அடையாளம் சொல்லும். உங்களுக்கு ஒன்று தெரியுமா..? நீங்கள் வேலையில் இருந்து ஓய்வு பெற்று உங்கள் சொந்த ஊருக்குச் சென்று வாழும் போது உங்கள் பேரக் குழந்தைகளுக்கு இதுதான் நான் படித்த பள்ளிக்கூடம்... இதுதான் நீ பிறந்த மருத்துவமனை... இந்தக் கோயிலில்தான் உனக்கு காது குத்தி மொட்டையடித்தோம் என்று மலரும் நினைவுகளைச் சொல்லி மகிழ்வீர்கள். எங்கள் நாட்டில் கற்பழிப்புக்கும் படுகொலைக்கும் கண்ணிவெடிகளுக்கும் தப்பிப் பிழைத்தவர்கள் ஒவ்வொரு இடத்தையும் எப்படி சொல்லிக் காட்டுவார்கள் தெரியுமா..? இந்தப் பள்ளியில் அடைக்கலம் புகுந்திருந்தபோதுதான் அண்ணனை விசாரணைக்கு அழைத்துச் சென்றார்கள். அதன் பின் அவன் திரும்பவே இல்லை. இந்த வயக்காட்டு வரப்பில்தான் அம்மா ஷெல் வீச்சுக்கு பலியானாள்... இங்குதான் முன்பு ஒரு கோவில் இருந்தது. அங்குதான் அப்பாவும் பெரியப்பாவும் கொல்லப்பட்டார்கள்... ஆம்... எங்கள் பூமியில் எந்த ஒரு இடமும் எங்கள் நினைவில் இப்படித்தான் பதிவாகி இருக்கின்றன.

இப்போது சொல்லுங்கள்... நாங்கள் துவக்கை ஏந்தியது தவறா..?

இரவுகளில் மின்சாரம் இல்லாமல் இருப்பதுகூடப் பெரிய விஷயமில்லை. ஆனால், பதுங்கு குழிக்குள் பள்ளிகள் நடத்த நேர்ந்ததை எங்களால் மன்னிக்க முடியவில்லை. எந்தவொரு போரிலும் பள்ளிகள், மருத்துவமனைகள், வழிபாட்டுத்தலங்கள், கலாசார மையங்கள் மீது தாக்குதல் நடத்தக்கூடாது என்பது சர்வதேசவிதி. ஆனால், இங்கு அந்த இடங்கள் மட்டுமே குறிவைத்துத் தாக்கப்பட்டன. அந்த இடங்கள் தாக்கப்படாது என்ற நம்பிக்கையில் எத்தனையோ அப்பாவிகள் அங்கு அடைக்கலம் தேடியிருந்தனர். அது தெரிந்த பிறகும் இன்னும் சொல்லப்போனால் அது தெரிந்ததனால்தான் அந்த இடங்கள் தாக்கி அழிக்கப்பட்டன.

இவற்றையெல்லாம் தட்டிக் கேட்ட விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளாம்... பிரபாகரன் குற்றவாளியாம். அது சரி... ஆதிக்க வெறி பிடித்த ஆங்கிலேயன் எழுதிய சரித்திரத்தில் வீரபாண்டியக் கட்டபொம்மனைக்கூடக் குற்றவாளி என்றுதான் எழுதினான். குற்றத்துக்கு தண்டனையாக தூக்கிலும் போட்டான். காலம் சரித்திரத்தை மாற்றி எழுதவில்லையா? செக்கிழுத்த செம்மல் தெரியுமா உங்களுக்கு... சுதந்திரக் கடலில் உரிமைக் கப்பலை மிதக்கவிட்டவன்... அவனுக்கு கிடைத்த பரிசு தெரியுமா..? மாடோடு மாடாக பூட்டப்பட்டு செக்கிழுக்க வைக்கப்பட்ட கொடூரம்... சொல்லுங்கள்... அவன் தீவிரவாதியா..? அவன் தண்டனை தரப்பட வேண்டியவனா..? வாஞ்சிநாதன் குற்றவாளி என்றால்... பகத் சிங் குற்றவாளி என்றால்... நேதாஜா சுபாஷ் சந்திர போஸ் குற்றவாளி என்றால்... தம்பி வேலுப்பிள்ளை பிரபாகரனும் குற்றவாளிதான்...

இத்தனைக்கும், ஈழத் தமிழர்கள் ஆரம்பத்தில் அமைதியாகத்தான் போராடினார்கள். சிங்கள அரசு ஒவ்வொரு அராஜக நடவடிக்கையில் ஈடுபட்ட போதும் ஈழத் தமிழ் போராளிகள் உண்ணாவிரதம் இருத்தல், அரசு அலுவலகங்கள் முன் சென்று கோஷங்கள் எழுப்புதல் என்று அமைதியாகத்தான் போராடிப் பார்த்தனர். சிங்களர் அரசு அடக்குமுறையின் அக்னி அஸ்திரங்களைப் பிரயோகித்த போதெல்லாம் தமிழ் போராளிகள் அஹிம்சையின் நீர் கொண்டுதான் அதை அணைத்து வந்தார்கள். ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல... ஆங்கிலேயர்களிடமிருந்து சுதந்திரம் கிடைத்ததில் இருந்து கிட்டத்தட்ட 35-40 வருடங்கள் அன்பின் பாதையில்தான் போராடி வந்தார்கள்.

யாழ் நூலகம் தெரியுமா... உலகிலேயே தமிழ் சமுதாயத்தின் மிகப் பெரிய நூலகம்... ஒரு நூலகம் உங்களை என்னய்யா செய்தது..? அதை ஏன் கொளுத்தினார்கள்..? அவர்கள் கொளுத்தியது வெறும் நூல்களை மட்டுமா... தமிழனின் ஆண்டாண்டு கால பாரம்பரிய அறிவைக் கொளுத்தினார்கள்... தமிழனின் கலாசாரத்தைக் கொளுத்தினார்கள்... தமிழன் சிங்களர்கள் மீது வைத்திருந்த நம்பிக்கையைக் கொளுத்தினார்கள்... நெல்லின் உமி சிறிது நீங்கிப் பிரிந்தாலே மீண்டும் ஒன்று சேர்க்க முடியாது... அவர்களோ நெல் வயலையே கொளுத்தினார்கள்..

தமிழன் ஆரம்பித்த அமைதிப் போராட்டங்கள் ஸ்படிக நீர் போல் பாய்ந்து கொண்டிருந்தன. சிங்களன் அதில் சிவப்பு நிறத்தைக் கலந்தான். புத்தன் அவர்களுக்கு காவி அங்கியைக் கொடுத்தான். அவர்களோ அந்த அங்கிக்குள் துவக்குகளை மறைத்துவைக்க ஆரம்பித்தார்கள். பூவும் பூஜையும் வேண்டாம் என்று சொன்ன புத்தனுக்கு ரத்தத்தால் அபிஷேகம் செய்தார்கள். புத்தனின் வெண் முத்துப் பல்லைப் போற்றிப் பாதூகாத்து வணங்கி வருகிறார்கள். அவன் சொன்ன அகிம்சை எனும் சொல்லைத் தூக்கித் தூர எறிந்துவிட்டார்கள். அதனால்தான் நவீனகாலத் தமிழன் புறநானூற்றுத் தமிழனாக ஆக வேண்டி வந்தது. சிங்களன் சிங்கமாக மாறியதால்தான் தமிழன் புலியாக மாறினான். போர்ப்பாதை புலிகள் விரும்பித் தேர்ந்தெடுத்த ஒன்றல்ல... அவன் மீது திணிக்கப்பட்ட ஒன்று. நாங்கள் கடைப்பிடித்துவந்த சுய ஒழுங்கே அதற்கான சாட்சி. புலிகள் போர் தர்மத்தை மீறி ஒரு செயலாவது செய்ததாகச் சொல்ல முடியுமா... தற்கொலைப்படை தாக்குதல் நிகழ்த்தியதெல்லாம் அதிகார வர்க்கத்தினர் மீதும் அவர்களுடைய கைக்கூலிகள் மீதும்தான். அப்பாவிகள் மீது அல்ல. பள்ளிகள், வழிபாட்டுத் தலங்கள், மருத்துவமனைகள், நூலகங்கள் என்று அவன் எந்த ஒன்றின் மீதாவது தாக்குதல் நடத்தியதாகச் சொல்ல முடியுமா..? பிறர் அந்த அராஜகங்களை நிகழ்த்திவிட்டு எங்கள் மேல் பழி போடும் கயமைதான் காணப்படுகிறது. உண்மையில் நாங்கள் வீரனைப் போல் போரிட்டோம். ஏனென்றால் நாங்கள் மாவீரர்கள்.

அனந்தன் : சக போராட்டக் குழுக்களை அழித்தீர்கள்... இஸ்லாமியர்களைத் துரத்தி அடித்தீர்கள்... மாற்றுக் கருத்து கொண்டவர்களைக் கொன்றீர்கள்... இவையெல்லாம் செய்யாமல் இருந்திருந்தால் பிரச்னை இந்த அளவுக்கு மோசமாகியிருக்காதே.

புலி : நீங்கள் ஒரு விஷயத்தை யோசித்துப் பார்க்க வேண்டும். போர்க்களம் என்பது மிகவும் கொடூரமான ஒன்று. அதிலும் சிங்கள காடைகள் இருக்கிறார்களே அவர்களைப் போன்ற கொடிய அரக்கர் கூட்டத்தை எதிர்த்துப் போராடும்போது மிகவும் எச்சரிக்கையாக, ஒற்றுமையாக இருந்தாக வேண்டியிருக்கிறது. நான் இறந்தால் என் கண்களை யாருக்காவது பொருத்துங்கள். அவர்கள் மூலம் மலரப் போகும் ஈழத்தை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சொன்ன குட்டிமணியின் கண்களை உயிருடன் இருந்தபோதே கதறக் கதறத் தோண்டி எடுத்து பூட்ஸ் காலில் போட்டு நசுக்கி கொன்றனர் கொடூரர்கள். கையில் துவக்குடனும் கழுத்தில் சயனைட் குப்பியுடன் பிறக்க நேர்ந்த தமிழ் தலைமுறை பற்றி உங்களுக்குத் தெரிந்திருக்கும்தானே...?

போராளிகளின் இருப்பிடங்கள், பணம் கிடைக்கும் வழிகள், ஆயுதங்கள் கிடைக்கும்விதம், தாக்குதல் நடத்த வகுக்கும் வியூகம், புலிகளுக்கு மறைமுகமாக உதவுபவர்கள் யார் யார்... என எத்தனையோ விஷயங்களை ரகசியமாகப் பாதுகாத்தாக வேண்டியிருந்தது. இந்த நிலையில் உளவாளிகளும் மாற்றுக் கருத்து கொண்டு பிரிபவர்களும் நிலத்தில் புதைக்கப்படும் கண்ணிவெடியை விட அபாயகரமானவர்கள். எந்த நேரத்திலும் அவர்கள் மூலம் ஆபத்து வரலாம். அந்த பயம் இருக்கிறதே அதைப் போல் கொடிய விஷயம் இந்த உலகில் வேறெதுவும் இருக்க முடியாது.

இலக்கும் தீர்மானிக்கப்பட்டுவிட்டது. வழிமுறையும் தேர்ந்தெடுத்தாயிற்று. எதிரி யார் என்பதும் நன்கு தெரியும். போர்க்களத்துக்கு வந்த பிறகு நீங்கள் செய்ய வேண்டியதெல்லாம் எதிரில் இருப்பவனை சுட்டு வீழ்த்த வேண்டும்... அவ்வளவுதான். அங்கு எந்த சந்தேகத்துக்கோ... கேள்விக்கோ... தயக்கத்துக்கோ, பின்வாங்கலுக்கோ இடம் கிடையாது. அப்படி உனக்கு தைரியம் இல்லை என்றால் நீ போர்க்களத்தை விட்டு வெளியே சென்றுவிடு. போர்க்களத்தில் ஆயுதத்துடன் இறங்கிவிட்டு எதிரியைச் சுடாமல், நான் என்ன சொல்ல வர்றேன்னா... என்று திரும்பிப் பார்த்து பேச ஆரம்பித்தால் பயம் வரத்தான் செய்யும். உன்னுடைய ஒவ்வொரு தயக்கமும் பின்வாங்கலும் இன்னொரு பேரழிவைக் கொண்டுவரும். எனவே, சில கடுமையான ஒழுங்கைக் கொண்டுவந்தாக வேண்டியிருக்கிறது.

அமைதி நிலவும் நாடுகளில் நடக்கும் கட்சிகள், அமைப்புகள், நிறுவனங்கள் ஆகியவற்றில் உள் அரசியல்கள், அதிருப்திகள், போட்டுக் கொடுத்தல்கள், காலை வாருதல்கள், கட்சித் தாவல்கள் என எத்தனையோ நடந்துவருகின்றன. இன்று என் பக்கம் இருப்பவர் நாளை எதிர்பக்கம் போவதால் பெரிய இழப்பு ஒன்றும் நேர்ந்துவிடாது எனக்கு. அப்படி இருக்கும் நிலையிலுமே மாற்றுக்கருத்தை சகித்துக் கொள்ளமுடியாமல் வெட்டிக் கொல்வது, தீவைத்துக் கொல்வது என சம்பவங்கள் நடந்துவருகின்றன. ஆனால், போர்க்களமோ இதைவிட நூறு மடங்கு அபாயகரமானது. ரகசியக் கோட்டையின் ஒற்றைச் செங்கல் உருவப்படுகின்றதென்றால்கூட அது உள்ளே நடக்கும் அனைத்தையும் வெளியே தெரியவைத்துவிடும். கோட்டையின் விரிசல்கள் அது எத்துணை சிறியதாக இருந்தாலும் உடனடியாக சரி செய்யப்பட்டுவிடவேண்டும். பெரிய கப்பலை மூழ்கடிக்க சிறிய துவாரமே போதும்... இப்படியான நிலையில் ஒவ்வொருவரும் ஒவ்வொரு நிமிடமும் ஒவ்வொருவருக்கும் தங்கள் நேர்மையை நிரூபித்துக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. இலக்குக்கான விசுவாசத்தை உரத்து முழங்கிக் கொண்டே இருக்க வேண்டியிருக்கிறது. இதைச் செய்யத் தவறும் போது சில துரதிஷ்டவசமான நிகழ்வுகள் தவிர்க்க முடியாமல் போய்விடுவதுண்டு.

ஒரு இசை நிகழ்ச்சியை எடுத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு உகந்த கருவியைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உங்களுக்கு தரப்பட்டிருக்கும். ஆனால், உங்கள் முன்னால் இருக்கும் பலகையில் நீங்கள் வாசிக்க வேண்டிய குறிப்புகள் அழகாக, அழுத்தமாக அச்சிடப்பட்டிருக்கும். அனைவரும் ஸ... என்று இசைக்கும்போது நீங்களும் ஸ என்றுதான் இசைத்தாக வேண்டும். அப்போது பார்த்து ரீ என்று இழுத்தால் இசை நிகழ்ச்சி இம்சை நிகழ்ச்சி ஆகிவிடும். கேவலம் ஒரு இசை நிகழ்ச்சிக்கே இத்தனை இறுக்கமான விதிகளும் நடைமுறைகளும் இருக்கும்போது வாழ்வுக்கும் சாவுக்கும் இடையிலான மாபெரும் சங்கீதமான போரில் எத்தனை கண்டிப்பும் ஒழுங்கும் இருந்தாக வேண்டியிருக்கும்... அதில் நேரும் எந்தவொரு சிறிய இசைகேடும் ஒருபோதும் சரி செய்ய முடியாத அபஸ்வரமாகப் போய்விடும். போரை நடத்தும் தலைவன், அவன் விரும்பாவிட்டாலும் சர்வாதிகாரியாகத்தான் இருந்தாக வேண்டி இருக்கிறது. எல்லாரையும் சந்தேகக் கண் கொண்டு பார்த்தாக வேண்டியிருக்கிறது. அது அவனுடைய குற்றம் அல்ல... போரின் இயல்பு அது... இறக்க நேர்பவர்களைப் பற்றி அவன் கவலைப்பட்டுக் கொண்டிருக்க முடியாது. உயிருடன் இருப்பவர்களைப் பற்றித்தான் அவன் சிந்தித்தாக வேண்டிவரும்.

இஸ்லாமியர்கள் தமிழ்தான் பேசினார்கள். அந்த வகையில் அவர்கள் தமிழர்களின் போராட்டத்தைத்தான் ஆதரித்திருக்க வேண்டும். நாங்கள் முதலில் இஸ்லாமியர்கள். அதன் பிறகுதான் தமிழர்கள் என்றார்கள். அதுவே மாபெரும் தவறு.சிங்களர்களுக்கு உளவு வேலை பார்த்ததோடு நிற்காமல் ஆயுதங்களை ஏந்தி தமிழர்களைக் கொல்லவும் ஆரம்பித்தார்கள். அதனால், அவர்களை விரட்ட வேண்டி வந்தது. ஆனால், அந்த நிகழ்வுக்கு எத்தனை முறை மன்னிப்பும் கேட்டுவிட்டோம். போர்க்கால ஜனநாயகம் என்பது வேறு. சாதாரண கால ஜனநாயகம் என்பது வேறு.
(தொடரும்)

No comments:

Post a Comment