யாரைக் குற்றஞ்சாட்டுகிறீர்கள்…
படைத்த கடவுளையா..?
நல்ல வேடிக்கை…
ஊர் கூடி உதிரத் தேரை இழுப்பது நீங்கள்
பழி படைத்தவனின் மீதா..?
வன்முறையின் சாத்தானை பீடத்தில் ஏற்றினீர்கள்
பிரிவினையின் பதாகையை உச்சியில் கட்டிவிட்டீர்கள்
வெறுப்பின் பரிவட்டத்தை தலையில் கட்டிக் கொண்டு ஒருவர் கையசைக்க
ஊர் கூடி இழுத்தீர்கள் உதிரத் தேரை
ஒற்றைச் சார்பு சரித்திரங்களை சக்கரங்களாக்கி
எதிர் தரப்புப் பிழைகளைச் சாட்டையாக்கி
வேற்றுமையின் விரிசல்களை வடங்களாக்கி
உருண்டோடச் செய்கிறீர்கள் உங்கள் தேரை
கடவுளோ
அன்பின் விக்கிரகங்களை உங்களிடம் ஒப்படைத்திருந்தார்
பரஸ்பர நட்பின் கற்பூர ஒளியில் நீங்கள் தொழுதிருக்க வேண்டிய தெய்வம் அது.
அஹிம்சையின் முரசுகள் அதிர
கருணையின் வீதிகளில் ஓடியிருக்க வேண்டிய தேர்
வேறொன்று மனிதர்களே…
அவர் சமாதானத்தின் வெண் குதிரைகளை அனுப்பியிருந்தார்
அதை நீங்கள் வெறும் பொம்மையாக்கிவிட்டீர்கள்.
பன்முகத்தன்மையின் வண்ணமய ஆலவட்டங்களைப் பரிசளித்திருந்தார்
நீங்கள் வேதனையின் கறும் பூதகணங்களைச் செதுக்கிக் கொண்டீர்கள்
ஒரு கன்னத்தில் அறைந்தால் மறு கன்னத்தைக் காட்டச் சொன்ன
இயேசுவை அனுப்பினார்
இன்ன செய்தாரை ஒறுக்க அவர் நாண நன்னயம் பாராட்டச் சொன்ன
வள்ளுவரை அனுப்பினார்
போரே கூடாதென்று போதித்த
புத்தனை அனுப்பினார்.
நீங்களோ அவர்களைப் புறந்தள்ளினீர்கள்.
ஆயுதத்தை கையில் ஏந்தும் தமிழன்
வள்ளுவரையன்றோ கொல்கிறான்
வன்முறைப் பாதையில் போகும் பவுத்தன்
புத்தரையன்றோ மிதித்துச் செல்கிறான்
தந்திரங்களில் ஈடுபடும் கிறிஸ்தவன்
ஏசுவையன்றோ ஏமாற்றுகிறான்.
கடவுள்
குளிர் காய தீயைக் கொடுத்தார்
நீங்கள் உங்கள் குடில்களைக் கொளுத்திக் கொண்டீர்கள்
வழுக்கல் நிலத்தில் ஊன்றிக் கொள்ள கைத்தடிகளைக் கொடுத்தார்
நீங்கள் அதைக் கொண்டு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டீர்கள்.
பூமியை மட்டும் தான் படைத்தார்.
எல்லையில் முள் வேலி பதித்து
தேசங்களை உருவாக்கிக் கொண்டது நீங்கள்தான்.
மனிதர்களை மட்டும் தான் படைத்தார்
அகதிகளை நீங்கள்தான் உருவாக்குகிறீர்கள்
ஆணையும் பெண்ணையும் மட்டும் தான் படைத்தார்
சிங்களராகவும் தமிழராகவும்
இந்துவாகவும் இஸ்லாமியராகவும்
யூதராகவும் கிறிஸ்தவராகவும் பிரித்துக் கொள்(ல்)வது நீங்கள்தான்
பறத்தலை பறவைக்கு மட்டுமே விதித்திருந்தார்
கொத்து குண்டுகளை வீசும் விமானங்களை நீங்கள்தான் கண்டுபிடித்தீர்கள்
மரப்பொந்துகளையும் குழிகளையும் ஊர்வனவற்றுக்கே ஒதுக்கியிருந்தார்
பதுங்குகுழிகளை நீங்களே படைத்துக் கொண்டீர்கள்.
ஒலியை மட்டுமே உங்களுக்குக் கொடுத்தார்
வெறுப்பின் விஷம் தோய்ந்த வார்த்தைகளை உமிழ்வது நீங்கள்தான்.
கைகளை மட்டுமே கொடுத்திருந்தார்
அவை ஏந்திய துவக்குகள் அவர் கொடுத்தவை அல்ல.
நகங்களையும் பற்களையும் மட்டுமே கொடுத்திருந்தார்
ரத்தக்கறைகள் அவருடையவை அல்ல.
வெற்றுக் கழுத்தையும் விரிந்த இடையையும்தான் தந்திருந்தார்.
சயனைடும், பெல்ட் வெடிகுண்டும் அவர் தந்தவை அல்ல.
மழையைக்கூட ஒற்றைத் துளிகளாகத்தான் அனுப்புகிறார்
அணைகளைக் கட்டி வெள்ளத்தை வருவித்துக் கொள்வது நீங்கள்தான்.
ஒற்றைக் கூரையின் கீழ் உங்களைப் படைத்தார்
நீங்கள் தனித் தனி வீடுகளைக் கட்டிக் கொண்டீர்கள்.
அணையா இரு விளக்குகளை எரியவிட்டார்
நீங்கள் அதன் ஒளியில் இருந்து உங்களை மூடிக் கொண்டீர்கள்.
உங்களை வாழ அனுப்பினார்
நீங்கள் செத்து மடிகிறீர்கள்
எரிமலைகளை உலகின் ஓரங்களில்தான் உறைய வைத்தார்
கண்ணிவெடிகளையும் வெடிகுண்டுகளையும்
காலடியில் பதித்துக் கொண்டது நீங்கள்தான்
நீங்கள் முறையிட வேண்டிய நீதிமன்றம் இது அல்ல…
குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டியவர் அவரல்ல
நேற்று ஹிட்லரை அனுப்பியதற்கு பதில் கேட்டீர்கள்
இன்று பிரபாகரனையும் ராஜபக்சேவையும் அனுப்பியதற்கு பதில் கேட்கிறீர்கள்
அற்ப மானிடர்களே…
ஹிட்லரையும்
பிரபாகரனையும்
ராஜபக்சேவையும் அனுப்பிய அதே கடவுள்தான்
காந்தியையும் அனுப்பினார்.
காந்தி…
நீங்கள் தொழ மறந்த தெய்வம்
பின்பற்றத் தவறிய வழிகாட்டி
அவர்
அடக்குமுறையின் தீயை அஹிம்சையின் நீரால் அணைக்கச் சொன்னார்.
அதிகாரத்தின் அந்தகாரத்தை அன்பின் சிறு அகல் விளக்கால் விரட்டச் சொன்னார்.
வெறும் வார்த்தையாக மட்டுமா சொன்னார்
வாழ்ந்தும் காட்டினாரே
அவரும் ஒரு போரைத்தான் முன்னெடுத்தார்
கத்தியின்றி…
ரத்தமின்றி…
அவரும் ஒரு போரைத்தான் முன்னெடுத்தார்.
ஆணவத்தின் சாம்ராஜ்ஜியங்களை
அன்பின் சாமான்யர்களைக் கொண்டு வெல்லும் ஒரு போரை அவர் முன்னெடுத்தார்
அவர் பிறந்த தேசத்தைவிட
அவர் விட்டுச் சென்ற தேசம் சிறப்பாக அன்றோ இருந்தது
அவரும் ஒரு மன்னன்தான்
அகம்பாவத்தின் கிரீடம் தரிக்காத தலையை உடையவர்
ஆணவத்தின் கவசங்கள் மூடாத மார்பை உடையவர்
தியாகத்தின் உடைவாளை இடையில் தரித்திருந்தார்
சமரசத்தின் சிம்மாசனத்தில் அமர்ந்திருந்தார்
சத்தியத்தின் கைத்தடியை ஊன்றி நடந்தார்
அவர் அமர்ந்த நாற்காலி சிம்மாசனமானது.
அவர் நடந்த பாதை ராஜ பாட்டையானது.
இந்தியாவும் உலகுக்கு ஒரு பாடத்தைக் கற்பித்திருக்கிறது.
இலங்கையும் ஒரு பாடத்தைக் கற்பித்திருக்கிறது.
காந்தி எப்படிப் போரிட வேண்டும் என்று காட்டினார்.
பிரபாகரனுன் ராஜபக்சேயும் எப்படிப் போரிடக்கூடாது என்று காட்டியிருக்கிறார்கள்.
கோயிலைவிட
கோயிலுக்கான பாதை பரிசுத்தமாக இருக்க வேண்டும் என்றார் காந்தி
நீங்கள் அவரைப் புறக்கணித்தீர்கள்.
குப்பை மேடுகளையும் சாக்கடைகளையும் கடந்து
தேவாலயத்தை அடையமுடியாது என்றார் அவர்
நீங்கள் அவரை மறுதலித்தீர்கள்.
மூன்று முறை அல்ல…
முன்னூறு முறைகள்…
மூவாயிரம் முறைகள்…
அவரை மறுதலித்ததன் மூலம் நீங்கள் கடவுளை மறுதலித்தீர்கள்
கடவுளை மறுதலித்ததன் மூலம் நீங்கள் உங்களையே மறுதலித்துக் கொண்டீர்கள்.
கடவுள் நல்லதொரு வீணையை மட்டுமே கொடுத்தார்
நலங்கெடப் புழுதியில் எறிந்தது நீங்கள்… நீங்கள் மட்டுமே…
மேடை அவருடையதுதான்
நாடகமோ உங்களுடையது…
திரைக்கதை
வசனம்
நடிப்பு எல்லாம் உங்களுடையது.
அவரோ பார்வையாளன்.
திரைச்சீலை விழும் நேரம் வரை
பிரமாண்ட அரங்கில்
தன்னந் தனியனாக அமர்ந்து பார்க்க நிர்பந்திக்கப்பட்ட
வெறும் பார்வையாளன்
(இறுதி பாகம் / முழு வடிவம் : விரைவில் புத்தக வடிவில்)
No comments:
Post a Comment