இருட்டில் இருந்து வெளிச்சத்தை நோக்கி...

Saturday, July 31, 2010

அந்த நாள் நிச்சயம் வரும்.

என்னை நீங்கள்தான் கொன்றீர்கள். நான் தற்கொலை செய்துகொண்டு இறந்திருக்கும் போதிலும் நீங்கள்தான் என் மரணத்துக்கு முழுக் காரணமும். உங்கள் விதிமுறைகளின் தடாகம் தூர்வாரப்படாமல் தேங்கி நஞ்சாகிப் போயிருந்தது. மீளும் காலடிச் சுவடுகள் இல்லா அந்த நச்சுப் பொய்கையில் தெரிந்தே நீரருந்தி இறந்த வெள்ளாடு நான். தாகம் என் வரம். நீங்கள் அதைச் சாபமாக்கிவிட்டீர்கள். இன்று நான் கரையோரம் நின்று வேடிக்கை பார்ப்பவர்களுக்கு ஓர் அபாய எச்சரிக்கை. விதிகளை மோதித் தகர்க்கவே முயன்றேன். மரித்த என் தேகமோ விதிகளின் மண்டபத்தைத் தாங்கும் கல் தூணாக ஆகிவிட்டிருக்கிறது. நீங்கள் தந்திரசாலிகள்தான் ஒப்புக்கொள்கிறேன்.

அது ஆரம்பித்தபோது உண்மையிலேயே அப்படி இருந்திருக்கவில்லை. அடர்ந்து வளர்ந்த மரத்தின் கிளையில் மலர்ந்த பூவாகத்தான் என் இளம் பருவம் இருந்தது. யார் கண்ணுக்கும் தெரியாமல் வாசத்தால் மட்டுமே மயக்கும் ஒன்றாக. எல்லாப் பூக்களையும் சூடிப் பார்க்கும் ஆசை கொண்ட அவன் தன் ஆவினங்களோடு சேரியில் குடிலமைத்ததும் அந்தப் பருவத்தில்தான். அவன் வந்து சேர்ந்த வசந்த காலத்தில், எங்கள் தொழுவத்துப் பசுக்கள் பின்னிரவு நேரங்களில் துணை தேடி அலற ஆரம்பித்திருந்தன. சேர்ப்புக் காளையின் திமிலைத் தடவியபடி அவன் பழையாற்றின் கரையேறி வந்தபோது என் வீட்டின் பின்வாசல் கதவுகளை அகலத் திறந்து வைத்தேன். தினவேறி நின்றவை தொழுவத்துப் பசுக்கள் மட்டுமே அல்ல என்பது அவனுக்கு வெகு சீக்கிரமே புரிந்தது. வார்த்தைகள், சைகைகள் எதுவுமே தேவைப்பட்டிருக்கவில்லை. என் செவ்விளம் மேனி அவனை வசீகரித்தது போலவே, அவனது கரிய இறுகிய உடல் என்னை வசீகரித்தது. மாமிசம் தின்று தின்று வலுவேறிய அவனது உடலும் அதில் வழியும் வியர்வை முத்துக்களும் வெண்ணிறப் பற்களும் தான் எங்கள் அக்ரஹாரத்துக்கும் சேரிக்கும் இடையில் ஓடிக் கொண்டிருந்த பழையாறை சிறு கால்வாயெனத் தாண்டச் செய்திருந்தன என்னை. ஆனால், உங்களுக்கு என்னைத் திரும்பி வர வைக்கத் தெரிந்திருந்தது. அப்போது கூட உங்களை எதிர்க்கத் தயாராகவே இருந்தேன். ஆயிரம் கைகள் உங்களுக்கு என்பதும் ஆயிரத்திலும் ஆயிரம் ஆயுதங்கள் என்பதும் நான் அறிந்த ஒன்றுதான். இருந்தும் உங்களை எதிர்க்கவே செய்தேன். ஏனென்றால், நீங்கள் எதிர்க்கப்படவேண்டியவர்கள்.

இருண்ட உங்கள் கோட்டையின் வாசலில் என்னை வழி மறித்தவரை வீழ்த்திய நான் கொத்தளத்தின் மறைவிலிருந்து விஷப்பாம்பெனச் சீறியவரை, மினுங்கிய கண்களைக் கொண்டே அடையாளம் கண்டு கொன்றுவிட்டு நூலேணி வழியாக கோட்டைக்குள் இறங்கினேன். அரியணையைக் குறிவைத்து அம்பெய்தபடி உள்ளே நுழைந்த நான் நெருங்கி வந்த போது பார்த்தது என்னை நிலை குலைய வைத்தது. நான் எய்த அம்புகள் தைத்து இறந்து கிடந்தது என் பெற்றோராக இருந்தனர். நீங்கள் அவர்களைக் கேடயமாக வைத்து உங்கள் வெற்றியைச் சாதித்துக் கொண்டிருக்கிறீர்கள். நான் உங்களை என்றுமே குறைவாக மதிப்பிட்டிருக்கவில்லை. ஆனால், என் அனுமானங்களுக்கும் அப்பாற்பட்ட தளங்களில் உங்கள் கொடிகள் பறந்து கொண்டிருப்பதை அன்று கண்டேன். உங்கள் யாகக் குதிரைகளை ஒருவராலும் கட்டிப் போட முடியாததன் ரகசியத்தை அன்று உணர்ந்துகொண்டேன்.

நான் கொன்ற தாய், ஒருகாலத்தில் எனக்கு எல்லாமுமாக இருந்தாள். தன் நிறைவேறாத ஆசைகள் நடப்பட்ட தோட்டத்தை என் பிஞ்சுக் கைகள் பற்றி சுற்றிக் காட்டியிருக்கிறாள். அங்கு பூத்துக் குலுங்கிய மரங்களின் கிளைகளினூடே கழிவிரக்கத்தின் பாடலைப் பாடிக் கொண்டிருந்த பறவைகளைப் பார்த்திருக்கிறேன். குற்ற உணர்ச்சி நாகங்கள் மறைந்திருந்த இருள் பொந்துகளைப் பார்த்திருக்கிறேன். விரக்தித் தேன் உறிஞ்சியபடி வலம் வரத் தொடங்கியிருந்த என் தனிமைப் பொன்வண்டுகளோ கனவுத் துகள்களைக் காலில் சுமந்தபடி ஒரு பூவிலிருந்து இன்னொரு பூவுக்குத் தாவத் தொடங்கியிருந்தன. அவள் தாவுதலைத் துரிதப்படுத்தினாள். என் தோட்டத்து இளம் செடிகளை, பற்றிக் கொள்ளக் கம்பின்றியே நிமிர்ந்து வளரச் செய்தாள். முடிவற்ற நிலத்தின் மேலே மிதந்தலையும் விதைகளை என் பூக்கள் உற்பத்தி செய்ய ஆரம்பித்திருந்தன. எப்போது நிலத்தடி நீர் உவர்ப்பாக மாறியது என்று நினைவில்லை. என் ஆசைத் தோட்டத்தை மரணத் தூளியில் இட்டுத் தாலாட்டத் தொடங்கிய கடலை அந்தப் பக்கம் நகர்த்தியது வேறு யருமல்ல என் தாயேதான். ஆரம்பத்தில் நீரூற்றி வளர்த்தவள் அவளையும் மீறி வளரத் தொடங்கியதும் அதை வெட்ட ஆரம்பித்தாள். உண்மையில் அவள் அல்ல அப்படி செய்தது. அவள் மூலமாக நீங்கள் அதைச் சாதித்துக் கொண்டீர்கள். அது எனக்குத் தெரியும்.

அந்தியில் மலரும் பூக்களை வருடியபடி என் தாய் என் சிறு வயதில் கூறியவை எனக்கு இன்றும் நினைவுக்கு வருகின்றன. முன் பனிக்கால இரவொன்றில் தன் காதலனைப் பற்றிச் சொன்னாள். பொம்மைக் குதிரைகள் செய்பவர்கள் மத்தியில் அவன் உருளும் சக்கரங்கள் செய்பவனாக இருந்தான். கழுத்தில் புரளும் கேசத்துடன் கன்னிப் பெண்ணின் அடி வயிற்றைப் போல் இளம் சூடுள்ள கற்களில், அவனது நீண்ட உளி நர்த்தனமாடின. அவன் செதுக்கிய கல் மாலைகளை மொய்த்துக் கிடந்தன கரு வண்டுகள். பெரிய கோயிலில் சப்த ஸ்வரத் தூண்கள் செதுக்க வந்திருந்தவன் நதிக்கரை முருகன் கோயிலின் அருகில் குடிலமைத்துத் தங்கியிருந்தான். என் தாய் அவனை முதன் முதலாகப் பார்த்தது பற்றிச் சொன்னது இப்போதும் என் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறது. மாம்பூக்கள் மிந்தது செல்லும் நதியில் நீராடிவிட்டு, தாமரை இலையில் பொதிந்த மலர் சரத்தை சூடிக்கொண்டு பலிபீடத்தின் முன் செம்மண் கோலமிட்டுக் கொண்டிருந்திருகிறாள். அப்போது பாதி சாத்திக் கிடந்த பெரிய வாசலின் ஆளுயரக் கதவு வெண்கல மணிகள் சப்தமெழுப்ப திறக்கப்பட்டது. பின்னணியில் செந்நிறத்தில் சூரியன் உதிக்கத் தொடங்கியிருக்க, வீசும் குளிர் காற்றில் கேசம் அலைபாய ஒரு கந்தர்வனைப் போல் அவன் நின்று கொண்டிருந்திருக்கிறான். சிதிலமடைந்த கோயிலின் கரும் பாசி படர்ந்த படிக்கட்டுகளின் முன் நின்று கொண்டிருந்ததும் ஏதோ வனதேவதையைப் போல் அவனுக்குத் தெரிந்திருக்கவே கை கூப்பித் தொழுதிருக்கிறான். விளையாட்டாக தெய்வம் போல் அனுக்ரகித்துவிட்டு கருவறை நோக்கிச் செல்ல முற்பட்டிருக்கிறாள். அப்போது படி தடுக்கிக் கீழே விழுந்துவிடவே, எண்ணெய்க் களிம்பேறிய அகல் விளக்கின் மென் நுனி குத்தி நெற்றியில் கசியத் தொடங்கி இருக்கிறது ரத்தம். வாசலின் நின்றவன் இதைக் கண்டு பதறியபடி உள்ளே நுழைந்து அவளைக் கைத்தாங்கலாக அழைத்துக் கொண்டு போய் சுவரோரம் உட்காரவைத்துவிட்டு நாக சன்னிதியின் பின்புறம் இருந்த புதர்ச் சரிவில் இருந்து பச்சிலை பறிக்க ஓடியிருக்கிறான். பலிபீடத்தில் செவ்வரளியும் துளசி இலையும் தூவி நிவேதனத்தைப் படைக்க வந்த அர்ச்சகனும் நடந்ததைப் பார்த்துவிட்டு அவன் பின்னே ஓடியிருக்கிறான்.

அங்கே கண்ட காட்சியை அவன் அதிசயம் என்றுதான் வர்ணித்தான். புதர்ச் சரிவில் எழும்பிய சலசலப்பு கேட்டு புற்றுகுள் தூங்கிக் கொண்டிருந்த சர்ப்பம் ஒன்று சீறிப் பாய்ந்தபடி வெளியே வந்திருக்கிறது. அர்ச்சகன் சற்றுத் தொலைவிலேயே நின்றுவிட சிற்பியும் பதறிப் போய் மீள முயன்றிருக்கிறார். சுதாரிப்பதற்குள் சர்ப்பம் கையில் கொத்திவிட்டிருக்கிறது. சர்ப்பம் கொத்திய கையை விருட்டென்று பின்னிழுக்க, பல் கையில் பதிந்ததால் சர்ப்பமும் கூடவே பாதி உயரத்துக்கு எழுந்து வந்து, பின் கையில் இருந்து துள்ளி விழுந்து, காவி மதிலோரம் இருந்த மறைவிடத்துக்குள் சென்றுவிட்டிருக்கிறது. அதன் பின்தான் அந்த அதிசயம் நடந்தது. சிற்பியோ சிறிதும் பதறாமல், சர்ப்பத்தின் பல் பதிந்த தன் கையில், முத்துப் போல் இரு திவலைகளாக முளைத்து நின்ற ரத்தப் பொட்டுகளைப் புன்னகைத்தவாறே அர்ச்சகனிடம் காட்டிவிட்டு ‘நல்ல பாம்பு’ என்று அழுத்திச் சொல்லியிருக்கிறான். அதன் பின் எதுவும் நடவாததுபோல் பச்சிலைகளைப் பறிக்க ஆரம்பித்திருக்கிறான். அர்ச்சகன் மலைத்தபடியே அவனை நெருங்கி உன்னைத் தீண்டியது ஒரு விஷ நாகம் என்று சொல்லியிருக்கிறான். தெரியுமே என்று சொல்லியிருக்கிறான் சிற்பி பச்சிலைகளை ஆய்ந்தபடியே.

நடந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னும் நீங்காத அர்ச்சகன் உண்மையிலேயே நீ யார்..? நாக சாஸ்திரம் அறிந்த நிஷாதனா..? விண்ணிலிருந்து வந்த தேவனா..? என்று கேட்டிருக்கிறான். நான் நிஷாதனுமல்ல... தேவனும் அல்ல. கல்லைச் சிலையாக்கும் ஓர் சிற்பி அவ்வளவுதான் என்று சொல்லியபடியே முன் வாசல் தூணோரம் படுத்துக் கிடக்கும் என் தாயை நோக்கிப் போயிருக்க்கிறான். கிணற்றடிக் கல் தொட்டியில் இருந்து நீர் எடுத்து பச்சிலையை நனைத்து சாறு பிழிந்து காயம் பட்ட இடத்தில் பிழிந்தபோது கண் திறந்து பார்த்திருக்கிறாள் என் தாய். பின்னால் வந்த அர்ச்சகனோ சிற்பியைப் பார்த்து, உன்னைத் தீண்டியது விஷ நாகம். முதலில் உனக்கு சிகிச்சை செய்து கொள் என்று வற்புறுத்தியிருக்கிறார். முகத்தருகில் பச்சிலையைப் பிழிந்து கொண்டிருந்த கரத்தில் பொட்டுப் போல் பதிந்த பல் தடத்தில் தேங்கி நின்ற ரத்தத் திவலையைப் பார்த்துவிட்டு இவளும் மிரண்டிருக்கிறாள். சிற்பியோ நிதானமாக, கவலைப்படவேண்டாம். என்னைக் கொத்தியது விஷ நாகம்தான். ஆனால், அது என்னைக் கொல்லும் நோக்கில் கொத்தவில்லை. அது பயந்து போனதால் என்னை பயமுறுத்தும் நோக்கில் பொய்க்கடி கடித்துவிட்டுப் போயிருக்கிறது. அவ்வளவுதான் என்று சொல்லியிருக்கிறான்.

அர்ச்சகனுக்கும் அவளுக்கும் குழப்பம் தீராமல் இருக்கவே அர்ச்சகனைப் பார்த்துக் கண் சிமிட்டியபடியே, எனக்கு நாக பாஷை தெரியும். ஒரு நாகம் தன் தலையைச் சாய்த்துக் கொத்தினால்தான் விஷம் வெளியே வரும். நேராகக் கொத்தினால் பயப்படத் தேவையில்லை. இந்த சர்ப்பம் என்னை நேராகத்தான் கொத்தியது. என்று சொல்லியிருக்கிறான். பச்சிலையை நன்கு பிழிந்து எஞ்சிய சக்கையின் சிறு பகுதியை காயத்தின் மீது வைத்து அழுத்திக் கொண்டான். ஆசுவாசமடைந்த அர்ச்சகன் வியப்பு நீங்காமலேயே கோயிலுக்குள் நுழைய என் தாயும் மெதுவாக எழுந்து வீட்டுக்குப் புறப்பட்டிருக்கிறாள். தனியாகப் போய்விடுவீர்களா என்று கேட்டதற்கு வாசல் கதவு வரை போயிருந்தவள், அவனைக் கண்ணோடு கண் நோக்கி, துணை தேவைதான். ஆனால், இப்போது அல்ல என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறாள். அப்போது சிற்பியை இன்னொரு நாகம் தீண்டியது. அதுவும் அவனைக் கொல்லும் நோக்கில் தீண்டியிருக்கவில்லை. ஆனால், அவன் இறக்கத்தான் வேண்டியிருந்தது அதனால்.

அவன் சப்த ஸ்வரத் தூண்கள் செதுக்க வந்த போது, காலில் ஊரைக் கட்டி ஆடிய தேவ நர்த்தகிகளின் காலம் முடிந்துபோய்விட்டிருந்தது. ஒப்பனை அறையின் நிலைக் கண்ணாடிகள் ரசம் உதிர்ந்து கிடக்க நிருத்த மண்டபத்தில் மயில் உலவத் தொடங்கியிருதது. அவனுக்குக் கை வழியே கல்லில் ஸ்வரம் பிறக்க வைக்க நடனம் தெரிந்த பாதங்கள் தேவையாக இருந்தது. என் தாய் அந்த நர்த்தகியாக இருந்தாள். யாருமற்ற பின்னிரவுகளில் இருள் படர்ந்த கோயில் பிரகாரத்தில் கால் மாற்றி நின்று கொள்ளும் யானையில் சங்கிலி ஓசையோடு சலங்கைச் சப்தமும் கேட்க ஆரம்பித்தது. நினைவில் காடு அழியாத மயில் குளிர் காற்றின் தாளத்துக்கு ஏற்ப தன் தோகை விரித்து ஆடியபடி அகவியபோது, முருகா... முருகா... என அது அகவுவதாகத் தொழுது சென்ற பக்தர் கூடம், இரவு நேரச் சலங்கை ஒலியை பார்வதி தேவியில் பிரகார வலமாகக் கருதி மகிழ்ந்தது. சிற்பியின் உளி கல்லில் ராகங்களை எழுத ஆரம்பித்தது.

என் தாய் அப்போது ஒரு மான் குட்டி போல்தான் இருந்தாள். சிங்கத்தின் குகைக்குள் துள்ளிக் குதித்தபடியே நுழைந்துவிட்டு, ஐயைய்யோ எனக்குத் தெரியாதே என்று மருளும் குட்டி மான் குட்டிபோல்தான் இருந்தாள். நாம் ஒரு சிற்பியைத்தானே நேசிக்கிறோம் என அவள் நினைத்தாள். அனைவரையும் வருடிச் செல்லும் காற்று அவளிடம் சொன்னது, நீ செய்வது சரிதான் என்று. இரவில் மலரும் காட்டுப் பூக்கள் சொல்லின நீ செய்வது சரிதான் என்று. ஆனால், பின்னிரவுகளில் இரு கைகளாலும் ஆடையை மென்மையாகப் பற்றியபடி கொலுசுச் சய்தம் கேட்காமல், அடி மேல் அடியெடுத்துச் செல்லும் அவளைப் பார்த்து வன்மத்துடன் குரைத்தன அக்ரஹாரத்து நாய்கள். அவற்றின் குரைப்பையும் துரத்தலையும் மீறி இருள் நதிகளைச் சென்றடையும் சாமர்த்தியமும் அவளுக்குக் கைகூடியிருந்தது. ஏனெனில் நதிக்கரையோர முட்புதர்களிடையே பரிசலுடன் ஒருவன் காத்திருப்பான் என்பது அவளுக்குத் தெரியும். அக்ரஹாரத்து நாய்களின் குரைப்பொலி கூடக் கேட்க முடியாத தூரங்களுக்கு நதி நீண்டு கிடப்பதை அவன் அவளுக்குத் தெரிய வைத்திருந்தான். நிலவொளியில் பாம்புச் சடடைகள் மின்னும் முட்புதர்களினூடே அந்தப் பரிசல் மிதந்து சென்று வேறோரு உலகத்தில் முளைத்தெழுந்தது. அங்கு கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் நீர். அந்த வெள்ளித் தகடு அலைப் பரப்பின் மேலே ஒரு நிலா. அவ்வளவுதான் இருந்தன. அதில் சிறு மலரென மிதந்து சென்றது அவர்கள் பரிசல்.

ஆனால், இந்தச் சந்திப்புகள் நீண்ட காலம் நீடிக்கவில்லை. ஒரு வளர்பிறைக்கால இரவொன்றில் நதியின் கரையை அடைந்த என் தாய் கயிறு அறுந்து, முளைக் கம்பு முறிந்து கிடப்பதையும் ஒற்றைப் பரிசல் சுழல் ஒன்றில் சிக்கித் தவிப்பதையும் காண நேர்ந்தது. சிற்பக் கூடத்தை நோக்கி ஓடினாள். வழியில் சிற்பி, ஊருக்கு பயந்து ஓடிவருவது தெரிந்தது. அவர்கள் காதல் அடுத்தவர்களுக்குத் தெரிந்துவிட்டது. இருளின் எல்லா திசைகளில் இருந்தும் தீப்பந்தங்கள் முளைத்து வர ஆரம்பித்தன. கோயிலை நோக்கி ஓடினார்கள். அம்பு தைத்த விலங்கின் தடத்தை ரத்தத் துளிகளை வைத்தே கண்டுபிடித்துவிடும் வேடனைப் போல் உயிருக்கு பயந்து ஓடுபவர்களை கால் கொலுசொலியை வைத்தே அவர்களும் பின் தொடர்ந்தனர். ரகசியப் பாதையின் வழி கோயிலுக்குள் நுழைந்த என் தாயும் சிற்பியும் கோபுரத்தின் உள் தட்டுக்குள் பதுங்கிக் கொண்டனர். இருண்ட பிரகாரம் முழுவதும் தேடி அலைந்த அக்ரஹாரத்தினருக்கு தூணோரம் வீசி எறியப்பட்ட கொலுசுகள் மாத்திரமே கிடைத்தன. சோர்ந்து அவர்கள் திரும்பினர்.

அப்போதுதான் அந்த அசம்பாவிதம் நடந்தது. கோபுர உள் அடுக்குகளில் தூங்கிக் கொண்டிருந்த புறாக்கள் பயந்து போய், ஓரிடத்தில் இருந்து பறந்து கோபுரத்தின் வேறொரு இடத்தில் தஞ்சமடைவதை ஒருவன் பார்த்துவிட்டான். அகாலத்தில் பறக்கும் புறாக்களைப் பார்த்த அவன் மெதுவாக கோபுரத்தில் உள் தட்டுகள் வழியாக ஏற ஆரம்பித்தான். அவன் வருவதைப் பார்த்த சிற்பியும் தாயும் கோபுரத்தின் உச்சிக்கு ஏற ஆரம்பித்தார்கள். கலவரம் அடைந்த புறாக்க்ள் நிலவொளியில் தூங்கும் வீடுகளின் மீது பதறியபடியே பறப்பதையும் வீதிகளில் ஆட்கள் தீப்பந்தங்களுடன் தேடுவதையும் கோபுர முகப்பின் வழியே பார்த்தபடி அவனும் மேலேறத் தொடங்கினான். அவன் வேறு யாருமல்ல. என் தாயின் தந்தைதான். அது நாள் வரையிலும் தர்ப்பைப் புல்லை மட்டும் தூக்கிய கரங்களில் அன்று தீப்பந்தம் இருந்தது. இடையில் ஒரு குறுவாளும். ஆனால், அதற்கு அவசியம் ஏற்பட்டிருக்கவில்லை. கோபுரத்தின் உச்சியில், பின்னகர முடியாத ஒரு மூலையில் என் தாயும் சிற்பியும் சிறைப்பிடிக்கப்பட்டனர். பயந்து நடுங்கியபடி ஒருவரோடு ஒருவர் நெருங்கி நின்றவர்களை ஒரு தீப்பந்தம் இரண்டாகப் பிரித்தது. அந்தத் தீப்பந்தம் சிற்பியை கோபுரத்தின் திறப்பு நோக்கி நகர்த்தியது. தீப்பந்தத்தின் சூடு தாங்காமல் பின்னால் சென்றவன் சிறகொடடிந்த பறவையைப் போல் கால் தவறி கீழே விழுந்து இறந்தான். அந்தக் கொலையை அவர்கள் வெகு லாகவமாக திசை திருப்பினார்கள். குல மகள் வேலி தாண்ட முயன்ற கதை மறைக்கப்பட்டது. ரிஷப வாகனத்தில் பிரகார வலம் வந்த பார்வதி பரமேஸ்வரனை சிற்பி கண்டதாகவும் மெய் மறந்து அவர்களைப் பின் தொடர்ந்து சென்ற சிற்பி கோபுரத்தின் உச்சியில் ஏறித் தன் பூதவுடலை இந்தப் பூமியில் விட்டுவிட்டு ரிஷபத்தின் வாலைப் பிடித்தபடி இறைவனுடன் கயிலைக்குச் சென்றுவிட்டதாகவும் கதை கட்டினர். அது போன்ற கதைகளின் மேகங்களால் அந்த நிலம் ஏற்கெனவே பல தடவை நனைக்கப்பட்டிருந்தது. இன்னொரு பருவத்தில் பெய்த இன்னொரு மழையாக சிற்பியின் மரணம் மண்ணில் பெய்து மறைந்தது. நிலம் வெகு சீக்கிரமே காய்ந்தது. ஆனால், நிலத்தடியில் சேகரமான நீர் வற்றாமல் ஒரு பாறைக் குடைவுக்குள் ததும்பிக் கொண்டிருந்தது. நான் அந்த வெதுவெதுப்பான நீரைக் குடித்து வளர்ந்தேன். இடையனோடு நான் தனித்திருந்த இரவுகளிலும் அக்ரஹாரத்து நாய்கள் குரைத்தன. ஆனால், இம்முறை நாங்கள் கோயிலை நோக்கி ஓடவில்லை. எதிர்த்திசையில் இருந்த சேரியை நோக்கி ஓடினோம்.

இம்முறை இரண்டில் ஒன்று பார்த்துவிடுவதென நாங்களும் முடிவு செய்திருந்தோம். மாட வீதிகளுக்கு பாலும் நெய்யும் கொண்டு செல்வதை நிறுத்தினோம். யாக குண்டங்களில் இடப்பட்ட சமித்துகள் நெய்யின்றிப் புகைய ஆரம்பித்தன. ஆராதனைக்கான விக்ரஹங்கள் அபிஷேகப் பாலின்றி காயத் தொடங்கின. மடி கனத்த பசுக்கள் கறப்பதற்கு ஆளின்றி கதறத் தொடங்கின. மேய்சலுக்கு அழைத்துச் செல்லப்படாமல் பசியில் தவித்த ஆவினங்கள் தொழுவங்களில் கட்டிப் போட்ட கயிறுகளை அறுக்க முற்பட்டன. வேத கோஷங்கள் காற்றில் மிதந்த வீதிகளில் பசுவினதும் கன்றினதும் கூக்குரல்கள் காதடைக்க ஆரம்பித்தன. ஆனால், கோட்டையை பலப்படுத்துவதற்கு முன்பாகவே ஆரம்பித்த ஒரு போராக அது ஆகிப் போனது. அக்ரஹாரத்தினர் அறுவடை செய்யப்பட்ட வயல்களில் இருந்த கால்நடைகளை அடித்து விரட்டினர். மேய்ச்சல் நிலங்களைச் சுற்றி வேலிகளை எழுப்பினர். குடிசைகள் பற்றி எரிந்தன. தீ சூழ்ந்த கிடைகளுக்குள் சிக்கிய ஆடுகள் வெளியே வரத் தெரியாமல் துடித்தன. நீர் நிலைகளில் நஞ்சு கலக்கப்பட்டன. வேதனையின் கரும் புகைகள் உச்சத்துக்குப் போனபோது இடையர் கூட்டம் என்னால்தான் இவ்வளவு அழிவும் என என்னைப் பழிக்க ஆரம்பித்தது. காட்டாற்றில் சிக்கியவன் கைக்குக் கிடைத்த ஒற்றை மரத்தைப் பிடித்துக் கொண்டு திணறுவதுபோல் நான் அவரைப் பற்றியிருந்தேன். அந்த ஒற்றை மரமும் ஆடத் தொடங்கியது. மேலும் என் அன்புக்குரிய குடும்பத்தை அவர்கள் வசம் விட்டுவிட்டு வந்திருந்தேன். அது நான் செய்த தவறு. அதை என்னால் தவிர்க்கவும் முடிந்திருக்கவில்லை. அது அவர்களுக்குப் போதுமானதாக இருந்திருக்கிறது. என் வீட்டைச் சுற்றி மாயச் சுவர் எழுபப்பட்டது. புரோகிதத் தொழில் மட்டுமே தெரிந்த என் தந்தை அதிலிருந்து விலக்கப்பட்டார். அவரது பொறுப்பில் விடப்பட்டிருந்த கோயில் நிலங்கள் பறி முதல் செய்யப்பட்டன. அவர்கள் முன் வைத்த ஒரே ஒரு நிபந்தனை : என் மரணம். குலப் பெருமைக்கு இழுக்கு ஏற்படுத்திய என் மரணம். என் கழுத்தில் இரண்டு கத்திகள் வைக்கப்பட்டன. என்னால் இழப்புகள் ஏற்படுவதைத் தடுக்க என் முன்னால் இருந்ததும் ஒரே வழிதான். நான் என் உயிரை மாய்த்துக் கொண்டேன். என் தாய் கொல்லப்பட்ட தன் காதலனை நினைத்து நினைத்து வேதனையுடன் வாழ்ந்து வந்தாள். நான் மனதுக்குப் பிடித்தவனுடன் துணிந்து வாழப் போய் இறந்தேன்.

ஆனால், தோல்வியின் சரித்திரம் இனியும் தொடராது. மேல்மாடக் கொடிகள், வீசும் குளிர் காற்றில் நடுங்கும் நடுச் சாமத்தில், புறக்கணிக்கப்பட்ட ஒரு தொழுவத்தில் அவள் பிறப்பாள். அவளது நிறம் கறுப்பாக இருக்கும். அதை நீலமாக மாற்ற ஒரு நாளும் முடியாது. பரிவின் சாயங்களை முகத்தில் பூசி மார்புக் காம்புகளில் துரோக நஞ்சைத் தடவியபடி பாலூட்ட நெருங்குபவளை அவள் உறிஞ்சியே கொல்லுவாள். ஆணவக் கொடி பறக்கும் அதிகாரத் தேர்களின் சக்கரங்களை அவள் தன் பிஞ்சுக் கால்களால் தகர்த்தெறிவாள். மெள்ளத் திரளும் மூர்க்கத்துடன் காலங்களைக் கடந்து வந்திருக்கும் கால்நடைகள் அவள் பின்னால் அணி வகுக்கும். மறதியின் கூட்டுக்குள் இனியும் அடைபடாது அவளது ஆவினங்கள். பழக்கத்தின் நுகத்தடியில் பிணிக்கப்பட்டாது அவளது காளைகள். இனி அவை இரவிலும் விழித்திருக்கும். அவற்றின் காலடி ஓசை கேட்டு குதிரைகள் மிரண்டோடும்.
அவள் தன் ஆவினங்களை தடைசெய்யப்பட்ட புல்வெளிகளில் மேயவிடுவாள். நீரில் நஞ்சைக் கலக்கும் நாகங்களின் மீது அவள் அழிவின் கோர நடனம் புரிவாள். ஆணவப் பெருமூச்சுகள் புயலாக மாறி வெறுப்பின் மேகங்களாகத் திரண்டு வன்முறை துளிகளாக அவளது நிலத்தை மூழ்கடிக்கச் சூழும் போது  ஆதார நிலத்தையே அடியோடு பெயர்த்தெடுத்துக் குடை பிடிப்பாள். அவள் பெயர்த்தெடுக்கும் நிலத்தின் மீது கட்டப்பட்டிருக்கும் கோயில்கள் இடிந்து விழத்தொடங்கும். இருண்ட பிரகாரங்களில் அடைந்து கிடக்கும் வெளவால்கள் அலறி ஓடும். பொற்றாமரைக் குளத்தின் கரைகள் உடைந்து போகும்.
வல்லவன் வகுத்த வாய்க்காலில் துள்ளிக் குதித்து விளையாடிக் கொண்டிருக்கும் மீன்கள் மண்ணில் துடி துடித்து சாகும். தர்க்கங்களின் ஆணி வேர் அறுந்து தத்துவ மரங்கள் சத்தமின்றி மண்ணில் சாயும். அதன் பின் சமத்துவத்தின் ராகங்களை அவளது இசைக்கருவிகள் இசைக்கத் தொடங்கும். காற்றெங்கும் தவழும் அவளது குழலோசை. அவள் புதியதொரு நகரை நிர்மாணிப்பாள். வெள்ளம் வடிந்த பின் பழைய கரைகளுக்குக் கட்டுப்பட்டுத்தானே போயாகவேண்டும் எல்லா நதிகளும் என்று அவளது எழுச்சியைக் கண்டு உள்ளுக்குள் மர்மப் புன்னகை புரிந்து ஒதுங்கி நின்று வேடிக்கை பார்ப்பவர்கள் அதிரும் வண்ணம் கரை நிரந்தரமாக உடைந்து நதியின் திசை என்றென்றைக்குமாக மாறும். அவள் அதை மாற்றுவாள். அந்த நாள் நிச்சயம் வரும்.

Thursday, July 29, 2010

குறும்படம் - 5

ஒரு மன வளர்ச்சி குன்றிய குழந்தை நம் வீட்டில் பிறந்து விடுகிறதென்றால் அப்போது நாம் எதிர் கொள்ள நேரும் பிரச்சனைகள் என்பதுதான் கதையின் மையம்.



ஒரு பழங்காலத்து பெரிய வீடொன்றில் பல குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். அந்த வீட்டின் உரிமையாளரின் மூன்றாவது குழந்தை மன வளர்ச்சி குன்றியதாகப் பிறந்து விடுகிறது. குழந்தைக்கு ஏழெட்டு வயதாகிறது. அவனால் அந்த வீட்டில் வசிப்பவர்கள் அனைவருக்குமே மிகவும் தொந்தரவாக இருக்கிறது. தினமும் காலையில் மாடியில் நின்று கொண்டு கீழே போகிற வருகிறவர்கள் மீது எச்சில் துப்புகிறான். யாராவது கோபப்பட்டு திட்டினால் அவர்கள் வீட்டின் முன்னால் சிறு நீர் கழித்துவிடுவான். அது மட்டும் இல்லாமல் குடித்தனக்காரர்கள் ஒவ்வொருவருடைய வீட்டு கதவையும் வெளிப்புறமாகத் தாழ்போட்டுவிடுவது, வீடுகளுக்குள் கல், மண் போன்றவற்றை போடுவது, வீட்டில் உள்ள பொருட்களை எடுத்துக் கொண்டுபோய் கிணற்றில் போடுவது என்று அவனால் ஏற்படும் பிரச்சனைகள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இரவு நேரங்களில் நாய்கள் ஊளையிட்டால் அவனும் பதிலுக்கு ஊளையிடத் தொடங்கிவிடுவான். இப்படியாக அவர்கள் பட நேரும் துன்பங்கள் அளவுக்கு மீறிப் போகவே அவனை மன நல காப்பகத்தில் விட்டுவிடுவதென்று முடிவு செய்கிறார்கள். ஆனால் அவனோ மனநல காப்பகத்தில் மிகவும் முரட்டுத்தனமாக நடந்து கொள்கிறான். மனநலக் காப்பகத்தினர் அவனை வீட்டில் கொண்டுவந்து விட்டுவிட்டுப் போகிறார்கள்.



அவனது இம்சைகள் மேலும் தொடரவே வீட்டில் இருக்கும் பெரியவர்கள் முதல் அந்தக் குழந்தையின் வயதையொத்த சிறுவர்கள் வரை அனைவரும் அந்த மன வளர்ச்சி குன்றிய சிறூவனை விஷம் கொடுத்துக் கொன்று விடுவது என்று ஒரு குளிர் ஊடுருவும் இரவில் இறுகிய மனதுடன் முடிவெடுக்கிறார்கள்.



மொட்டைமாடியில் எல்லோரும் சுற்றி அமர்ந்திருக்கிறார்கள். இதமாகத் தென்றல் வீசிக்கொண்டிருக்கிறது. நிலவொளி பூமியை தாயின் கருணையோடு தழுவிக் கொண்டிருக்கிறது. மன வளர்ச்சி குன்றிய குழந்தையோ பசியால் துடிக்கிறது.. அவனுடைய கை சூம்பிப் போய் இருக்கும் என்பதால் யாரவது ஊட்டினால் தான் அவனால் சாப்பிட முடியும். ஒவ்வொருவருடைய அருகிலும் போய் நின்று கெஞ்சுகிறது. நடுவில் இருக்கும் பாத்திரத்தில் பிசைந்து வைக்கப்பட்டிருக்கிறது விஷம் கலந்த உணவு. எடுத்து ஊட்டுவதற்கான தைரியம் யாருக்கும் இல்லை. அந்த இரவு அப்படியே கழிகிறது.



கொல்வதற்குப் பதிலாக அந்தக் குழந்தையை எங்காவது கண்காணாத இடத்தில் கொண்டுபோய் விட்டுவிட்டு வருவதென்று முடிவு செய்கிறார்கள். பாம்பேக்குச் செல்லும் ரயில் ஒன்றில் அவனை ஏற்றி அனுப்பிவிடுவதெண்று முடிவுசெய்கிறார்கள். ஸ்டேசனுக்குப் புறப்படுகிறார்கள். காரில் முதல் ஆளாக ஓடிப்போய் ஏறிக் கொள்கிறான். அவனைப் பிரிவது குறித்த வருத்தமும் அவர்களுக்கு இருகிறது. அதே சமயம் அவனை அவர்களால் சகித்துக்

கொள்ளவும் முடியவில்லை. குழந்தைத்தனமாக எடுத்துக் கொள்ளப்பட்டிருக்க வேண்டிய அவனது விளையாட்டுகள் ஒவ்வொன்றாக அவர்களுக்கு நினைவுக்கு வருகிறது.



வெளியிடங்களுக்குப் போகும்போது குழந்தைகள் எங்காவது தொலைந்து போய்விட்டதென்றால் அப்பவின் பெயர், அம்மாவின் பெயர், வீட்டு முகவரி, தொலைபேசி எண் இவற்றை சொல்ல வேண்டும் என்று குழந்தைகளுக்கு கற்றுக் கொடுத்திருப்பார்கள். குழந்தைகள் அதை அடிக்கடி ஒரு விளையாட்டுபோல் சொல்லிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு இந்தக் குழந்தயை எங்கு



கொண்டுபோய்விட்டலும் திரும்பி வந்துவிடுமோ என்ற கவலை ஏற்படத்தொடங்கும். அவனது அப்பா சொல்லுவார், சனியனைத் தலை முழுகினதும் வீட்டையே மாத்திடனும்.





கார் ஸ்டேஷனைச் சென்று சேருகிறது. சிறிது நேரத்தில் ரயில் வந்து நிற்கிறது. அவனை ஏறச் சொல்கிறார்கள். தனியாக ஏற மாட்டேன் என்று அடம் பிடிக்கிறான். அப்பா அம்மாவும் பிற குழந்தைகளும் கூடவே ஏறிக்கொள்கிறார்கள். பிற குழந்தைகள் அவனுடன் கண்ணாமூச்சி விளையாட்டு விளையாடுகிறார்கள். அவன் ஒரு இடத்தில் போய் ஒளிந்து கொள்கிறான். ஒவ்வொருவராக மெல்ல டிரெய்னிலிருந்து இறங்குகிறார்கள். ரயில் புறப்படும் நேரம் வருகிறது. அப்பா மெதுவாக இறங்குகிறார். அவனது அம்மாவுக்கு இறங்க மனம் வர மாட்டேன் என்கிறது. அப்பாவோ வலுக்கட்டாயமாக அவளையும் இறக்கிவிடுகிறார். ரயில் மெள்ள புறப்படுகிறது. அது வரை விளையாடி கொண்டிருந்தவன் ஒளிந்திருந்த இடத்திலிருந்து வெளியே வருகிறான். ரயில் புறப்படுவது தெரிகிறது. அப்பா அம்மா என்று அழுதபடியே ஒவ்வொரு கம்பார்ட்மெண்டாக தேடிக் கொண்டு போகிறான். தான் ஏமாற்றப் பட்டுவிட்டது மெல்லப் புரிய ஆரம்பிக்கிறது. ஜன்னல் கம்பியில் முகத்தை புதைத்து ஸ்டேஷனை எட்டி எட்டிப் பார்க்கிறான். அவனுக்கு அழுகை பொத்துக் கொண்டு வருகிறது. அவனது பிஞ்சுக் கரங்கள் ஜன்னல் வழியாக வெளியே நீண்டு தன்னை இந்த நிலைக்கு ஆளாக்கிய இறைவனிடம் முறையிடுவது போல் காற்றில் யாசிக்கிறது. மெள்ள ரயில் திருப்பத்தில் மறந்து போகிறது.



அடுத்த ஷ்டேஷனில் டி.டி.ஆர். ஏறுகிறார். டிக்கெட் எங்கே என்று கேட்கிறார். அவன் இல்லை என்கிறான். உங்கூட யார் வந்திருக்காங்க, அப்பா அம்மா பேரு என்ன என்று கேட்கிறார். அவன் டாய்லெட் அருகில் உட்கார்ந்திருக்கும் ஊனமுற்ற சிறுவன் அருகில் போய் உட்கார்ந்து கொள்கிறான். அவர் மேற்கொண்டு எதுவும் கேட்காமல் போய்விடுகிறார். அந்த சிறுவன் அவனைப் பார்த்து ஸ்னேகமாக சிரிக்கிறான். உங்க அப்பா, அம்மா பேரு உனக்கு தெரியாதா என்று கேட்கிறான். மனவளர்ச்சி குன்றியவன் அப்பா பெயர், அம்மா பெயர், வீட்டு முகவரி, எல்லாவற்றயும் தனது மழலை மொழியில் சொல்கிறான். கை தட்டி சிரிக்கிறான். ஊனமுற்ற சிறுவன் உடனே டி.டி.ஆரைக் கூப்பிடுகிறான். அவர் அருகில் வந்ததும் எதுவுமே தெரியாதது போல் நடிக்கிறான். அவர் போனதும் மீண்டும் கைதட்டி சிரிக்கிறான். ஊனமுற்ற சிறுவன் அவனை ஆறுதலாக வருடியபடியே உங்க அப்பா அம்மாவ உனக்கு பிடிக்கலியா... என்று கேட்கிறான். பொங்கிவரும் அழுகையை அடக்கியபடியே அவங்களுக்குதான் என்னையப் பிடிக்கல என்கிறான்.

ரயில் பெருங்குரலெழுப்பியபடியே ஒரு குகைக்குள் செல்கிறது. ரயிலுக்குள் மெல்ல இருள் பரவுகிறது.

குறும்படம் - 4

ஒரு பசுமாடு மேய்ச்சல் நிலத்தில் இறந்து போகிறது. அதை எடுத்துக் கொண்டுபோக தாழ்த்தப்பட்டவர்களுக்குத் தகவல் போகிறது. சேரியில் இருக்கும் அனைத்து ஆண்களும் உற்சாகமாக போகிறார்கள். மாலைக்கு மேல்தான் தகவல் வந்தது என்பதால் அறுத்து எடுத்துக் கொண்டு வருவதற்குள் நள்ளிரவாகிவிடுகிறது. ஒரு மேல்சாதிக்காரன் ஆண் துணையின்றி இருக்கும் ஒரு சேரி பெண்ணிடம் தகாதமுறையில் நடந்து கொள்ள முயலுகிறார். எதேச்சையாக மாட்டுக் கறியைக் கொண்டுவர பாத்திரத்தை எடுக்க வந்த அந்தப் பெண்ணின் கணவன் அதைப் பார்த்துவிடவே சண்டை மூளுகிறது. உன் பொண்டாட்டிதான் என்னையை வரச் சொன்னா என்று அவள் மேல் பழியைப் போடுகிறான் அந்த மேல்சாதிக்காரன். அந்தப் பெண்ணுக்கு அதைக் கேட்டதும் கோபம் தலைக்கேறவே மேல்சாதிக்காரனை இருவருமாகச் சேர்ந்து அடித்துத் துரத்திவிடுகிறார்கள்.




மறுநாள் பஞ்சாயத்துக் கூட்டி இதுக்கு ஒரு முடிவு கட்டணுமென்று கணவன் சொல்கிறார். ஑நாளைக்கு என்ன ஆனாலும் அந்த மேல் சாதிக்காரரின் வயலில் தான் வேலைக்குப் போய் ஆகணும்... அவுகளைப் பகைச்சுக்கிட்டு இந்த ஊருல நம்மளால வாழ்ந்துட முடியாது... விஷயத்தைப் பெரிசு படுத்தாம இத்தோட விட்டுடு஑ என்கிறாள் அந்தப் பெண். ஆனால் அந்த மேல்சாதிக்காரனோ தன்னை அடித்தவர்களைப் பழிவாங்க முடிவு செய்கிறான். வீட்டில் உள்ள சில பொருட்களை ஒளித்துவைத்துவிட்டு திருட்டுப் பழியை அந்தப் பெண்ணின் கணவனின் மீது போடுகிறான். பஞ்சாயத்துக் கூடி அந்தப் பெண்ணின் கணவனுக்கு அபராதம் விதிக்கிறது. அவர் கட்டமுடியாது என்று மறுக்கிறார். அவர்களை ஊரில் இருந்து விலக்கி வைத்துவிடுகிறார்கள்.



நாட்கள் கழிகின்றன. அந்தப் பெண்ணின் தந்தை இறந்துவிடுகிறார். அந்த ஊரில் தாழ்த்தப்பட்டவர்கள் வீட்டில் நல்ல விசேஷமானாலும் சரி அல்லாதவைகளானாலும் சரி மேல்சாதிகாரர்களின் மொய்ப்பணம் வாங்கின் கொண்டுதான் ஆரம்பிக்கவேண்டும். இறந்து போனவரின் உடல் நடுவீதியில் கிடத்தப்பட்டிருக்க அந்தப் பெண்ணும் அவளது கணவனும் மேல்சாதியினரிடம் போய் விஷயத்தைச் சொல்லி உடலை எடுக்க அனுமதி கேட்கிறார்கள். பஞ்சாயத்து விதித்த அபராதப் பணத்தைக் கட்டினாத்தான் பொணத்தை எடுக்கவிடுவோம் என்று கறாராகச் சொல்லிவிடுகிறார்கள் மேல்சாதிக்காரர்கள். தங்களிடம் இப்போது அவ்வளவு பணம் இல்லை... ரெண்டு மூணு மாசத்துல உழைச்சுக் கொடுத்திடறோம் என்கிறார்கள் அந்தப் பெண்ணும் அவளது கணவனும். அப்போ அதுக்கு அப்பறம் உடலை எரிச்சாப் போதும் சொல்லிச் சிரிக்கிறார்கள் மேல்சாதியினர்.





பிற தாழ்த்தப்பட்டவர்களும் மேல்சாதிக்காரர்களிடம் கெஞ்சிக் கேட்கிறர்கள். இறுதியில், மேல்சாதிகாரர்கள் அத்தனை பேர் கால்லயும் விழுந்து மன்னிப்புக் கேளு. அப்பத்தான் பொணத்தை எடுக்க விடுவோம் என்று சொல்கிறார்கள். அவர்கள் சொன்னபடியே ஒவ்வொருவரது காலிலும் விழுந்து மன்னிப்பு கேட்கிறார்கள் அந்தப் பெண்ணும் அவளது கணவனும். அப்போது அவர்களை ஒரு கரம் தடுக்கிறது. நிமிர்ந்து பார்த்தால் அது ஒரு பாதிரியார். இதற்கு முன்னால் பல தடவை அவர் அந்த ஊருக்கு பிரச்சாரத்திற்கு வந்தபோது அந்த ஊர் மக்கள் அனைவரும் கூடி அவரை அவமதித்து துரத்திவிட்டிருகிறார்கள். அதை எல்லாம் பொறுத்துக் கொண்டு அவர்களுக்கு ஒரு துன்பம் என்றதும் உதவ அவர் முன்வந்திருந்தது தாழ்த்தபட்டவர்களிடையே அவர் மீது மிகுந்த மரியாதையை ஏற்படுத்துகிறது. அவர் காலில் விழும்ந்து கிடக்கும் அந்தப் பெண்ணையும் அவளது கணவனையும் எழுந்து நிற்க வைக்கிறார். அன்போடு அணைத்துக் கொள்கிறார். இனி நீங்க யார் கால்லயும் விழத் தேவை இல்லை. வாங்க... நாம போய் இறந்த உடலை அடக்கம் பண்ணப்போவோம். யார் தடுக்கறாங்கன்னு பார்த்துடலாம் என்று சொல்லி புறப்படுகிறார். பாதிரியாருடன் வந்த நாலைந்து பேர் இறந்த உடலைத் தூக்கிக்கொள்கின்றனர். பாதிரியார் முன்னால் நடக்க தாழ்த்தப்பட்டவர்கள் அவர் பின்னால் கம்பீரமாக நடக்க ஆரம்பிக்கிறார்கள்.

குறும்படம் - 3

மதம் மாறியது புரியாமல் ஒரு சிறுவன் தின்னூறு இட்டு விடும்மா என்று அடம்பிடிப்பதிலிருந்து ஆரம்பமாகிறது குறும்படம். அந்தச் சிறுவனின் அம்மா அவனைப் போட்டு அடிக்கிறாள். சிறூவனின் அக்கா ஆசை ஆசையாக பூ, பொட்டு வைத்துக் கொள்ள் முய்ற்சி செய்கிறாள். அந்தக் குழந்தையையும் அடித்து பூவைத் தூக்கி எறிகிறார்கள். அந்த ஊரில் மாரி அம்மன் கோவில் திருவிழா நடக்கிறது. எல்லா சிறுவர்களும் துள்ளிக் குதித்து சந்தோஷமாக கோவிலில் விளையாடிக் கொண்டிருக்க பெந்தேகோஸ்தேவுக்கு மாறிய குடும்பத்தினரின் குழந்தைகள் மட்டும் ஏக்கத்துடன் தொலைவில் இருந்து அவர்களைப் பார்த்தபடி இருக்கின்றன. இப்படியாக சம்பவங்கள் நடந்து கொண்டிருக்க ஒருநாள் அரசுப் பணி ஒன்றுக்கு தேர்வு நடக்கவிருக்கும் தகவல் வருகிறது. பெந்தேகோஸ்தேவைச் சேர்ந்த ஒருவரும் வின்ணப்பிக்கிறார். இந்து-ஆதிதிராவிடர் என்று இருப்பவர்களுக்கு மட்டும்தான் சலுகை உண்டு. கிறிஸ்தவ-ஆதிதிராவிடருக்கு சலுகை கிடையாது என்று அரசு அலுவலகத்தில் சொல்லிவிடுகிறார்கள். பெந்தேகோஸ்தேவைச் சேர்ந்தவர் இந்து ஆதிதிராவிடர் என்று போலிச் சான்றிதழ் தயாரித்துக் கொடுத்துவிடுகிறார். தாசில்தார் அலுவலகத்தில் இருந்து சோதனைக்கு வரப்போகிறார்கள் என்ற செய்தி அவர்களுக்குக் கிடைக்கிறது. பெந்தேகோஸ்தேயினர் வீட்டில் இருக்கும் ஏசுநாதரின் படங்கள், காலண்டர்கள், ஸ்டிக்கர்கள் அனைத்தையும் பிய்த்து எறிகிறார்கள். அந்த நேரம் பார்த்து பாதிரியார் அவர்களது வீட்டுக்கு வருகிறார். பிய்த்து எறியப்பட்ட ஏசுநாதர் படங்களை கையில் எடுத்தபடியே அந்த வீட்டுக்காரர்களை கூர்ந்து பார்க்கிறார். அவர்கள் அவமானத்தால் தலை குனிந்து நிற்கிறார்கள். உங்களுக்கு இப்படிச் செய்யறதுல கொஞ்சம் கூட வெக்கமோ வேதனையோ இல்லையா..? கேவலம் ஒரு வேலைக்காக கர்த்தரையே தூக்கி எறிஞ்சிட்டீங்க இல்லியா என்று அவர்களைத் திட்டுகிறார். நாங்க காலகாலமா கும்பிட்டு வந்த மாரியாத்தாவையும் மதுரை வீரனையும் எங்க மனசில இருந்தே தூக்கி எறியச் சொன்னீங்களே அது மட்டும் சரிதானா என்று கேட்கிறார் திண்ணையில் படுத்திருக்கும் கிழவி. பாதிரியார் அதிர்ச்சியில் உறைந்து போகிறார்.

ரயிலும் ரயில் சார்ந்த நிலமும்

இருக்கைகள் இருந்தும்

படியோரமாக அமர்ந்து செல்லும் நரிக்குறவர்கள்



கழுத்தை நெரிக்கும் நெரிசலிலும்

ஒரு கையால் கம்பியைப் பிடித்தபடி

விவிலியம் படிக்கும் விசுவாசி



தொலைதூர ரயில் பயணிகளின்

சூட்கேஸ்களைச் சுமந்து செல்ல

பிளாட்ஃபாரத்தில் காத்திருக்கும் தோழர்கள்



ஆளற்ற பெட்டியில்

‘ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது’

என்று பாடியபடியே கையேந்திச் செல்லும் பார்வையற்றவர்



வாடகைக்கு வாங்கிய தாங்கு கட்டையுடன்

‘ஊனமான’ காலை கைலியால் மூடியபடி

படியோரம் அமர்ந்து பயணிக்கும் பிக்பாக்கெட்காரர்



இருபது வருடங்களுக்கு முந்தைய படியோரப் பயணத்தில்

கூவம் ஆற்றுக்குள் கை தவறி விழுந்த பச்சிளம் குழந்தையை

குச்சியால் கிளறித் தேடிக் கொண்டிருக்கும்

சித்தம் கலங்கிய தாய்



லெவல் கிராஸிங் தடுப்புக் கம்பிக்கு கீழாக

குனிந்து சிரமப்பட்டுக் கடப்பவர்களைப் பார்த்து

அலட்சியப் புன்னகையுடன்

தலை நிமிர்ந்து கடக்கும் குட்டிப் பையன்



இரந்து பெற்ற உணவை

மனநிலை குன்றிய சிறுவனுடன் பகிர்ந்து கொள்ளும்

ஃபிளாட்பார மூதாட்டி



பிறக்கப்போகும் குட்டிப் பாப்பாவுக்கு

ஸ்வெட்டர் பின்னிக் கொண்டு வரும் முதல் வகுப்பு ஆன்ட்டி



பள்ளிச் சீருடையுடன்

பூ விற்கச் செல்லும் மகளை

திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே

தன் கூடையுடன் அடுத்த கேரேஜுக்குச் செல்லும் பூக்காரம்மா



புறப்படும் இடமும் சேரும் இடமும் ஒன்றுதான்

என்றாலும்

எல்லோருடைய ரயிலும் ஒன்றல்ல

Wednesday, July 28, 2010

குறும்படம் - 2

ஒரு பிராமணப் பெண்ணிற்குத் திருமணம் நடத்தப்படுகிறது. அதே நேரத்தில் ஒரு ஆடு மேய்க்கும் பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது. சில மாதங்கள் கழிந்ததும் இரு பெண்களது கணவன்களும் எதிர்பாராதவிதமாக இறந்துவிடுகிறார்கள். பிராமணர்கள் ஊர்கூடி பிராமணப் பெண்ணின் தலையை மழித்து குங்குமத்தை அழித்து கை வளையல்களை உடைத்து வெள்ளைப் புடவை கட்ட வைக்கிறார்கள். ஆடு மேய்ப்பவர்களோ இறந்து போனவனின் தம்பியையே அந்தப் பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். மறுநாள் அவர்கள் அக்ரஹாரத்தின் பின்புறம் வழியாக ஆடுகளை ஓட்டிக் கொண்டு போகிறார்கள். அக்ரஹாரத்தில் விதவையாக்கப்பட்ட பெண்ணின் தாய் தந்தையும் சிறு வயது தங்கையும் நதிக்கரை முருகன் கோவிலில் இருந்து திரும்பி வருகிறார்கள். ஆடுகளை ஆற்றின் மறுகரைக்குப் பத்திக் கொண்டிருக்கையில் பக்கத்தில் இருப்பவரிடம் தன் மருமகளுக்கு தன் இரண்டாவது மகனைத் திருமணம் செய்து வைத்தது பற்றி சொல்கிறார் ஆடு மேய்ப்பவர். மருமகளும் மகனும் ஆடுகளை ஓட்டிக் கொண்டு சிரித்தபடியே மறுகரையை அடைகிறார்கள். மீண்டும் ஆடுகளை இக்கரைக்கு பத்திக்கொண்டு வருகிறார்கள். வரும் ஆடுகளில் ஒன்றை பிராமண விதவையின் தங்கை தொட்டுக் கும்பிடப் போகிறாள். அவளது அம்மா, அடி அசடே... ஆடைப் போயி யாராவது தொட்டுக் கும்பிடுவாளா஑ என்று கடிந்து கொள்கிறாள். அதற்கு சிறுமி, நாம வளக்கற பசுவை மட்டும் தொட்டுக் கும்பிடறோமோ என்று கேட்கிறாள்.

நாமெல்லாம் உசந்த சாதியை சேர்ந்தவா... அதனால நாம வளக்கற பசுவும் உசந்தது. அவாள்ளாம் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவா... அவா வளக்கறதை எல்லாம் நாம தொடவே கூடாது என்று சொல்கிறாள். அத்திம்பேர் இறந்து போனதும் அக்காவை மொட்டை அடிச்சு மூலைல உக்காத்தி வெச்சிருக்கற நம்மளைவிட அந்த ஆட்டுக்கார அக்காவுக்கு கல்யாணம் பண்ணி வெச்சிருக்காளே அவா தானேம்மா நம்மளை விட உசந்தவா... அவாளை ஏன் தாழ்ந்தசாதின்னு சொல்றாய்... என்று கேட்கிறது குழந்தை. தான் கேட்க முடியாததை தன் மகள் கேட்டதை நினைத்து அவளை வாரி எடுத்து அழுதபடியே முத்தமிடுகிறாள் அம்மா. முன்னால் நடந்து செல்லும் சிறுமியின் அப்பா குழந்தையின் அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ஸ்தம்பித்துப் போய் நிற்கிறார். ஆடுகள் துள்ளிக் குதித்தபடியே அவர்களைக் கடந்து போகிறது. கூடவே புதிதாகத் திருமணமான பெண்ணும் அவளது கணவனும் சிரித்து விளையாடியபடியே ஆடுகளின் பின்னால் போய் மறைகிறார்கள்.

குறும்படம் - 1

ஊரில் நடக்கும் திருவிழாவின்போது ஒரு குடும்பத்தினர் ஒரு ஆட்டுக் குட்டியை வாங்குகிறார்கள். அந்த வீட்டில் இருக்கும் சிறுமி அந்த ஆட்டுக் குட்டியை ரொம்பவும் ஆசை ஆசையாக வளர்க்கிறாள். ஒரு நாள் அந்தக் குட்டி அவள் சொல்வதைக் கேட்காமல் முட்ட வரவே அதை அடிக்கிறாள். அதைப் பார்க்கும் அவளது அம்மா ஆட்டுக் குட்டியை அடிக்காதே. அதை கடவுளுக்காக நேர்ந்து விட்டிருக்கிறோம் என்று சொல்கிறாள். அதைக் கேட்டதும் குழந்தையின் கண்கள் விரிகின்றன. இதை நாம் கடவுளுக்காகவா வளர்க்கிறோம் என்று உற்சாகமடைந்து அதிலிருந்து அந்தக் குட்டியை பூப்போல கவனித்துக் கொண்டுவருகிறாள்.

அதன் காலில் சலங்கைகட்டி விடுகிறாள். அது ஜல் ஜல் என்று அங்கும் இங்கும் நடந்து போவதைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு சந்தோஷம் பொங்கிவருகிறது. தினமும் பள்ளிக்கூடம் விட்டதும் அதற்கு இலை, தழை ஒடித்துக் கொண்டு வருகிறாள். விடுமுறை நாட்களில் அதை மேய்ச்சலுக்கு தானே அழைத்துச் செல்கிறாள். மழைக்காலங்களில் அதை வீட்டுக்குள் படுக்க வைக்கிறாள். மிகுந்த அன்போடு அதை கவனித்துக் கொள்கிறாள்.

இரண்டு மூன்று வருடங்கள் கழிகின்றன. ஊரில் கொடை விழா வருகிறது. குட்டி ஆடைக் காணிக்கையாகக் கொடுக்க கூட்டிச் செல்லுகிறார்கள். சற்று தொலைவில் இருக்கும் கோவில் என்பதால் வீட்டில் உள்ள அனைவரும் வண்டி கட்டிக்கொண்டு புறப்படுகிறார்கள். குட்டி ஆடை வண்டியின் பின்னால் கட்டி கொண்டு போகிறார்கள். காளையின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் குட்டி திணறுகிறது. சிறுமி, வண்டியை நிறுத்தச் சொல்லி குட்டியை மடியில் தூக்கி வைத்துக் கொள்கிறாள். சிறிது நேரத்தில் தூங்கிவிடுகிறாள். அவள் கண்முழித்து பார்க்கும் போது அவள் அம்மா மடியில் படுத்திருப்பது தெரிகிறது. எழுந்து கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்க்கிறாள். கோவிலின் முன்னால் இருக்கும் பரந்து விரிந்த மைதானத்தில் ஒரு ஆலமரத்தின் அடியில் அவர்கள் கூடாரம் போட்டு தங்கியிருப்பது தெரிகிறது. லேசாக இருட்டத் தொடங்கியிருக்கிறது. அந்த மைதானத்தில் அவர்களைப் போலவே ஏராளமான குடும்பத்தினர் நேர்ச்சைக்கான ஆடுகளோடு வந்திருக்கிறார்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் ஒரே மக்கள் கூட்டம். தன்னுடைய குட்டி ஆடைத் தேடுகிறாள். ஆலமரத்தடியில் ஒரு மூலையில் கட்டிப் போடப்பட்டிருப்பது தெரிகிறது.

அவளைப் போலவே ஏராளமான சிறுவர் சிறுமிகள் அங்கு இருப்பதை பார்த்ததும் அவர்களோடு ஆடிப் பாடி விளையாடுகிறாள். திருவிழாக் கடைகளை அப்பாவுடன் போய் சுற்றிப் பார்த்துவிட்டு வருகிறாள். மறு நாள் காலையில் கடவுளுக்கு காணிக்கையாகக் கொடுக்க வேண்டும் என்று அப்பா சொல்கிறார். இரவு சாப்பிட்டு விட்டு அப்பா மடியில் படுத்தபடியே தூங்கிப் போகிறாள்.


அவளுடைய கனவில் ஒரு பெண் தெய்வம் சிறகுகளை அசைத்தபடி வானிலிருந்து இறங்கி வருகிறது. சிறுமி ஒரு ஆற்றின் கரையில் குட்டி ஆடை ஒரு குழந்தையைப் போல் கைகளில் அணைத்தபடி நிற்கிறாள். பறந்து வரும் தெய்வம் அவள் முன்னால் வந்து இரு கைகளையும் விரித்து அந்த குட்டி ஆடைத் தரும் படிக் கேட்கிறது. நீ இதை நல்லா கவனிச்சுக்கணும். சரியா. தினமும் ரெண்டு நேரம் கொளை ஒடிச்சு போடணும். நாய், ஓநாய் வந்து கடிச்சு தின்னுடாம பாத்துக்கணும். ராத்திரியானா ஒரு பெரிய கூடை போட்டு மூடி வெச்சுடணும். கூடையைப் போட்டு மூடினதும் ஒரே இருட்டாயிடும். குட்டி பயப்படும். அதனால கூடைல சின்னதா ஒரு ஓட்டை போட்டு நிலா நட்சத்திரமெல்லாம் பாக்க முடியற மாதிரி வெக்கணும். மழை வந்துடுச்சுன்னா சாக்கு போட்டு வீட்டுக்குள்ள கொண்டுவந்து படுக்க வெச்சுக்கணும் செய்வியா என்று கேட்கிறாள். உன் அளவுக்கு என்னால் கவனித்துக் கொள்ள முடியாது இருந்தாலும் முடிந்தவரை அன்பாகக் கவனித்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு அந்த தெய்வம் குட்டி ஆடை மார்போடு அணைத்துக் கொண்டு பறந்து செல்கிறது. தெய்வத்துக்குக் காணிக்கையாகத் தருவது என்பதை அந்தச் சிறுமி புரிந்து கொண்டிருந்த விதம் அது.



மறு நாள் பொழுது விடிகிறது. சிறுமி ஆற்றங்கரைக்குப் போய் குளித்துவிட்டு வருகிறாள். கோவிலுக்கு திரும்பிவரும்போது பிரகாரத்தை வலம் வருபவர்கள் ஆடுகளையும் கூடவே இழுத்துக் கொண்டு போவதைப் பார்க்கிறாள். ஆடுகள் பெருங்குரலில் கதறியபடியே தரையோடு தரையாகப் படுத்துக் கொண்டு அடம்பிடிக்கின்றன. ஆனாலும் விடாமல் ஒவ்வொருவரும் ஆடுகளை இழுத்துக் கொண்டுபோகிறார்கள். சிறுமி ஒவ்வொன்றையாக வேடிக்கை பார்த்தபடியே நடக்கிறாள். ஒரு ஓலைத் தடுப்பின் பின்னால் ஏதோ சத்தம் கேட்கிறது. மெல்ல அதை நோக்கிப் போகிறாள். ஓலைத் தடுப்பின் பெரியதொரு துவரத்தின் வழியே மறுபுறம் நடப்பது லேசாகத் தெரிகிறது. அங்கே ஒரு கை கீரை கட்டு ஒன்றை நீட்டுகிறது. ஒரு ஆடின் தலை அதை தின்பதற்காக முன்னே நீள்கிறது. மறுவினாடி சடாரென்று ஒரு அருவாள் அதன் தலையை ஒரே வெட்டில் துண்டாக்கிப் போடுகிறது. அதைப் பார்த்ததும் சிறுமி அதிர்ச்சியில் உறைந்து போகிறாள். ஓலைத்தடுப்பின் மறுபக்கம் ஓடிப்போய் பார்க்கிறாள். ரத்தம் சொட்டும் அருவாளுடன் காவிப்பல் தெரிய சிரித்தபடியே நிற்கும் பூசாரி, சாமி ஏத்துகிடுச்சு என்கிறார். கீழே தலை துண்டிக்கப்பட்ட ஆட்டின் கால்கள் பூமியை விலுக் விலுக் என்று உதைத்துக் கொண்டிருக்கிறது. கழுத்தில் இருந்து வழியும் ரத்தமானது ஒரு மண் கலயத்தில் சேகரமாகிக் கொண்டிருந்தது. சிறுமி அலறித் துடித்தபடியே தன் குட்டி ஆடு கட்டிப்போட்டிருந்த இடத்தை நோக்கி ஓடுகிறாள். காணிக்கைக்காக ஆடுகளை இழுத்து வருபவர்களின் கூட்டம் அவளை முட்டித் தள்ளுகிறது. மஞ்சள் துணிகட்டி ஈர உடையுடன் கையில் அருவாள் ஏந்தியபடி ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை இடித்து தள்ளியபடியே சிறுமி மைதானத்தின் நடுவே இருக்கும் ஆலமரத்தை நோக்கி ஓடுகிறாள். குட்டி ஆடு கட்டப்பட்ட இடம் வெறுமையாக இருக்கிறது. குட்டியைத் தேடி ஓடுகிறாள். மைதானத்தின் மணல் வெளியில் மனிதக் கால்தடம் பதிந்த குழிவுகளில் எல்லாம் தேங்கி நிற்கிறது வெட்டப்பட்ட ஆடுகளின் ரத்தம். அதை குனிந்து பார்க்கிறாள் சிறுமி. அவளது பிம்பம் அந்த ரத்தத்தில் நடுங்கியபடியே மிதக்கிறது. அவளுக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வருகிறது. கோவில் முகப்பில் உச்சியில் கட்டப்பட்டுள்ள ஒலிபெருக்கியில் பம்பை சத்தம் மெல்ல மெல்ல உயர்ந்து உச்சத்தை அடைகிறது. அவள் வளர்த்த குட்டி ஆடின் காலில் ஆசை ஆசையாக அவள் கட்டிய சலங்கையின் சத்தமாக அது மாறுகிறது. விலுக் விலுக் என்று அது துடிப்பது கேட்கிறது. சிறகசைத்தபடி பறந்து வரும் தேவதையும், வெட்டப்படும் ஆடுகளுமாக அவளது கண்ணில் காட்சிகள் தோன்றி மறைகின்றன. மெல்ல அவள் மண்ணில் மயங்கி விழுகிறாள்.

Monday, July 26, 2010

போபால் - 5

13, ஜூன், 1997…

உப்ஹார் திரையரங்கம், டில்லி…

பார்க்கிங் மையத்தில் இருந்த டிரான்ஸ்ஃபார்மர் வெடித்து சிதறியது

விதிகளை மீறி அதன் அருகிலேயே கட்டப்பட்ட பார்க்கிங் ஏரியாவில் தீ பரவியது

18 கார்கள் இருக்க வேண்டிய இடத்தில் அடைக்கப்பட்ட கார்களின் எண்ணிக்கை 36

தீயை எளிதில் அணைத்துவிடலாம் என்று உரிமையாளர்கள் அலட்சியம்

முடியாமல் போய் தீயணைப்பு பிரிவுக்கு அரை மணி நேரம் கழித்தே தகவல்

மாலை நேர போக்குவரத்து நெரிசலால் தீயணைப்பு வண்டிகள் வந்து சேர தாமதம்

திரையரங்கில் இருந்தவர்கள் பதற்றம்

நெரிசலில் மூச்சுத் திணறியே பலர் மரணம்.

வெளியே செல்லும் வழிக்கான அறிவிப்புப் பலகையில் மின்சாரம் இல்லாததால் கூட்டத்தினருக்குக் குழப்பம்

எக்ஸாஸ்ட் ஃபேன் இடைவெளியில் காட்போர்ட் வைத்து அடைத்திருந்ததால் மூச்சு முட்டி பலர் இறந்தனர்.

இறந்தவர்களின் எண்ணிக்கை 59.

தலைநகரில் மேட்டுக்குடித் திரையரங்கில் மூச்சு முட்டி, தீயில் கருகி இறந்தவர்களுக்கு நஷ்ட ஈடு தலா ஒவ்வொருவருக்கும் சுமார் 20 லட்சம்.

போபாலில் ஃபேக்டரியைத் தொட்டடுத்த சேரியில் இறந்தவருக்கு நஷ்ட ஈடு சுமார் ரூ 25,000.

இறந்தாலும் மேன் மக்கள் மேன் மக்களே..!

திரையரங்க உரிமையாளருக்கு இரண்டாண்டு சிறை தண்டனை (அது பின்னர் ஒன்றாகக் குறைக்கப்பட்டது). ஆஆஆயிரம் உரூபாய்கள் அபராதம்.

திரையரங்கக் காவலாளிக்கு ஏழு ஆண்டுகள் சிறை தண்டனை. டிக்கெட் கிழித்துக் கொடுத்தவரை வலைவீசித் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

பாருக்குள்ளே நல்ல நாடு… எங்கள் பாரத நாடு...! பாரதியின் பாடல் கம்பீரமாக ஒலிக்கிறது.

பிரேக் முடிந்து ஷோ ஆரம்பம்.

ஆண் : வெல் கம் டு த ஒன் அண்ட் ஒன்லி நம்பர் ஒன் துடப்பக் கட்டையின் நம்பர் ஒன் கேம் ஷோ. நம்மளோட அடுத்த கண்டெஸ்டண்ட் கொஞ்சம் வித்தியாசமானவர். அவர் ஸ்டூடியோவுக்கு வர முடியலை. ஆனா போன்லயே தான் பார்த்ததை சொல்லப் போறாரு. சம்பவம் நடந்த போது போபாலுக்கு பக்கத்து ரயில்வே ஸ்டேஷன்ல ஸ்டேஷன் மாஸ்டரா இருந்தாரு. ஓ.கே. ஓவர் டு ஸ்டேஷன் மாஸ்டர்.

ஹலோ வணக்கம் சார்.

வணக்கம்.

எங்க நிகழ்ச்சியில பங்கெடுக்க சம்மதிச்சதுக்கு ரொம்ப நன்றி சார்.

ப்ளெஷர் ஈஸ் மைன். என்னால நேர்ல வரமுடியலை. அதுக்கு என்னை மொதல்ல மன்னிக்கணும்.

பரவாயில்லை சார். அதனால என்ன..? நீங்க உங்க நேரத்தை ஒதுக்கு பேச சம்மதிச்சதே பெரிய விஷயம் இல்லையா..?

நல்லது. இதோட ஒரு வீடியோ காப்பி தருவீங்க இல்லியா..?

நிச்சயமா. அப்பறம் நீங்க பேசறது சரியா கேட்க மாட்டேங்குது. மைக்கை வாய்க்கு பக்கத்துல வெச்சுக்கோங்க.

ஓ.கே. இப்ப சரியா கேக்குதா..?

ஆமா சார். நல்லா கேட்குது. ஆனா ரொம்ப பக்கத்துலயும் கொண்டு போயிடாதீங்க.

ஓ.கே. இப்ப சரியா கேக்குதா..?

கேக்குது. இதே பொஸிஷன்லயே வெச்சு பேசுங்க.

சரி விஷயத்துக்கு வர்றேன்.

போபாலுக்கு பக்கத்துல இதராசின்னு ஒரு ஸ்டேஷன் அங்கதான் நான் ஸ்டேஷன் மாஸ்டரா இருந்தேன். அன்னிக்கு எனக்கு நைட் டூட்டி. நைட் டிரெய்ன் எல்லாம் போனதும் கொஞ்சம் லேசா கண்ணசந்தேன். நாலரை அஞ்சு மணிக்கு மறுபடியும் முழிச்சிட்டேன். அப்பத்தான் நிறைய டிரெயின் வரும். எல்லா நாளையும் போல்தான் அந்த நாளும் விடிஞ்சது. ரயில்களின் சார்ட்டைப் பார்த்தேன். மும்பை நோக்கிப் போக வேண்டிய தென் பகுதி ரயில்களிடமிருந்து சரியான சிக்னல்கள் வந்திட்டிருந்துச்சு. மேற்கில் சூரத்நோக்கிப் போய்க் கொண்டிருந்த ரயில்களில் இருந்து சிக்னல்கள் சரியாகக் கிடைத்தன. கிழக்கே நாக்பூர் நோக்கிப் போய்க்கொண்டிருந்த ரயில்களும் சரியாகவே போய்க் கொண்டிருந்தன. ஆனால், போபாலில் இருந்து வரும் சிக்னல் மட்டும் கிடைக்கவில்லை. பெர்மூடா முக்கோணம் போல் போபால் நோக்கிப் போன ரயில்கள் எல்லாம் மாயமாக மறைந்து கொண்டிருந்தன. அப்போது செல்போன் வசதி இருந்திருக்கவில்லை. தொலைபேசி வசதி கூட பெருமளவுக்குக் கிடையாது. மோர்ஸ் கோட் தான். கட் கடா கட்டுன்னு தந்தி அடிச்சு கேட்டேன். அவங்களுக்கும் மொதல்ல ஒண்ணுமே தெரியலை. ஊரே தூக்கத்தில் அமிழ்ந்துவிட்டதுபோல் இருந்திருக்கிறது. அதன் பிறகுதான் விஷ வாயு கசிஞ்ச விவரம் தெரிந்திருக்கிறது. எல்லாரும் மயங்கி விழுந்துட்டாங்க. உயிரோட இருந்தவங்க கூட்டம் கூட்டமா ஊரைவிட்டு ஓடிட்டிருக்காங்கன்னு செய்தி கிடைச்சது.

இவ்வளவு களேபரம் நடந்தபோதும் ரயில்வே ஆளுங்க ஓடலியா..?

அதெப்படி ஓடுவாங்க. ஒண்ணு தெரிஞ்சுக்கோங்க தம்பி. இந்த உலகத்துலயே மிகவும் சின்சியரான ஆட்கள் யாருன்னா அது இந்திய ரயில்வேக்காரங்கதான். ஒரு நகரத்தைக் காலி பண்றதுன்னா கடைசியா வெளியேறறது அவங்கதான். சீனா இந்தியா மீது படையெடுத்தப்போ தேஜ்பூர் ஊரே காலியாகிடிச்சு. எல்லாரையும் அனுப்பிட்டு கடைசி ஆளா அந்த ஊரை விட்டு வெளியேறினது யார் தெரியுமா... ஸ்டேஷன் மாஸ்டர்தான். அந்த அளவுக்குஎங்க வேலை மிகவும் முக்கியமானது.

அதனால செய்தி கேள்விப்பட்டதும் நாங்கள் மருந்துகளையும் பிற பொருட்களையும் எடுத்துக்கிட்டு வேனில் புறப்பட்டோம். எங்களுக்கு எதிரே ஒட்டுமொத்த போபாலும் காலி செய்து காரிலும், வேனிலும், வண்டிகளிலும் நடந்தும் வெளியேறிக் கொண்டிருந்தது. போபால் ரயில்வே ஸ்டேஷனில் கண்ட காட்சியை மறக்கவே முடியாது. எங்கு பார்த்தாலும் மரண ஓலம். கண்கள் பிதுங்கி, ரத்த வாந்தி எடுத்து, அடக்க முடியாத அளவுக்கு இருமியபடி மூச்சு விட முடியாமல் ஒவ்வொருவரும் செத்துக் கொண்டிருந்தார்கள். ஒரு பக்கம் மலையாளி.. இன்னொரு பக்கம் குஜராத்தி... இன்னொரு பக்கம் பெங்காளி என ஒட்டு மொத்த இந்தியாவே அங்க மரண வேதனையில துடிச்சிட்டிருந்துச்சு. ரயில்வே ஊழியர்கள் தங்களுக்குத் தெரிந்த மொழிகளில் ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தனர்.

டிக்கெட் கவுன்டரில் கேஷியர் டிக்கெட் கொடுப்பது போன்ற போஸிலேயே இறந்து கிடந்தார். பணப்பெட்டி அருகே திறந்து கிடந்தது. ரூபாய் நோட்டுகள் வீசிய மெல்லிய தென்றல் காற்றில் நடுங்கிக் கொண்டிருந்தன. சிக்னல் கிடைக்காததால் வெளியில் நிறுத்தப்பட்ட ரயிலின் டிரைவர் அனுமதிக் கைகாட்டியைப் பார்த்தபடியே இறந்து கிடந்தார். புகை மூட்டத்துக்குள் சிவப்பு விளக்கு வராதீர்கள் வராதீர்கள் என்று மவுனமாகக் கதறிக் கொண்டிருந்தது. அதையும் மீறி நிலையத்துக்குள் ஏதோ ஒரு ரயில் வந்துவிட்டது. அந்த ரயிலில் இருந்தவர்கள் அப்படியே தூக்கத்திலேயே இறந்து போயிருந்தனர். டி.டி.ஆர். அடுத்த ஷிஃப்டில் வருபவரிடம் சாவியையும் ரிஸர்வேஷன் சார்ட்டையும் ஒப்படைத்துவிட்டு, என் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு சீக்கிரம் கிடைக்க வழி செய்யுங்கள் என்று சொல்லியபடியே உயிரை விட்டிருந்தார்.

உங்களுக்கு எதுவும் ஆகலையா..?

நாங்கள் போனபோது விஷ வாயு கலைந்துவிட்டி போயிருந்தது. ஈசல்கள் விளக்கை மொய்ப்பதுபோல் மக்கள் மருத்துவமனையை மொய்த்தனர். ஆடைக்குள் பொதிந்தபடி கொண்டு வந்த குழந்தைகள் ஏற்கெனவே இறந்துவிட்டதை நம்ப மறுத்து மருத்துவரின் மேஜையில் கிடத்தினர். உண்மை தெரிந்திருந்தும் மருத்துவர்கள் நெஞ்சில் கை வைத்து அழுத்தி உயிர் கொடுக்க முயன்றனர். வாசல் வரை வந்துவிட்ட உண்மையை வீட்டுக்குள் வரவிடாமல் எவ்வளவு நேரத்துக்குத்தான் தள்ளிப் போட முடியும். இறந்த உடலில் இருந்து வெளியேறிய நச்சுக் காற்றைச் சுவாசித்தே சில மருத்துவர்களுக்கு மயக்கம் வந்துவிட்டது. அடுத்தடுத்த நாட்களில் நகரமே பிணக்காடாக ஆகிவிட்டது. விழுந்து கிடந்தவர்களையெல்லாம் அள்ளிக் கொண்டுபோய் ஒரு குழியில் போட்டார்கள். இந்துவா முஸ்லீமா என்றெல்லாம் கூடப் பார்க்க நேரமில்லை. குழி வெட்டி முடிந்திருந்தால் அதில் போட்டு மூடினர். இல்லையென்றால் ஒன்றாகச் சேர்த்து வைத்து எரித்தனர். உயிர் இருக்கிறதா.. இறந்துவிட்டார்களா என்று கூடப் பார்க்கவில்லை. எனக்குத் தெரிந்த ஒருவர் இப்படித்தான் பிணக்குவியலின் உச்சியில் மயங்கிய நிலையில் இருந்திருக்கிறார். அவரையும் புதைக்க எடுத்துச் சென்றுவிட்டார்கள். முழிப்பு வந்து எழுந்து பார்த்தால் பிணக்குவியலின் மேல் படுக்க வைத்திருக்கிறார்கள். இன்னும் கொஞ்சநேரம் மயங்கியே இருந்திருந்தால் குழியில் போட்டு மூடியிருப்பார்கள். அலறி அடுத்துக் கொண்டு எழுந்திருக்கிறார்.

அவரை வரச் சொல்லியிருக்கலாமே…செத்துப் பிழைத்த அனுபவம் பிரமாதமாக இருந்திருக்குமே.

சொல்லியிருக்கலாம்தான். ஆனால், அவர் தற்கொலை செய்துகொண்டுவிட்டாரே..?

என்னது… அந்த மரணக் குழி வரை போய் உயிர் தப்பியவர் தற்கொலை செய்துகொண்டுவிட்டாரா..?

ஆமாம். அந்த சம்பவத்துக்குப் பிறகு நடந்த விஷயங்கள் அவரை கோபப்பட வைத்தன. உரிய நிவாரணம் தராமல் அலைக்கழிக்கப்பட்டது, நம் அரசியல்வாதிகளின் மவுனம், அதிகாரிகளின் அலட்சியம் போன்றவை அவரை வருந்த வைத்தன. இதையெல்லாம் எடுத்துச் சொல்லி ஒரு கடிதம் எழுதிவைத்துவிட்டு தீவைத்துக்கொண்டு தற்கொலை செய்து கொண்டுவிட்டார்.

ஓ… இது இன்னும் ட்ரமாட்டிக்காக இருக்கிறதே.

இது என்ன பிரமாதம். விதவைகள் காலனி என்ற ஒன்று உருவாக்கப்பட்டது தெரியுமா..?

என்ன சொல்கிறீர்கள்?

இந்த விபத்தில் கொல்லப்பட்டவர்களின் மனைவிகள் வாழ்வதற்கென்றே தனியாக ஒரு கிராமமே கட்டிக் கொடுக்கப்பட்டது. அதற்கு விதவைகள் காலனி என்று பெயரும் சூட்டப்பட்டது. அந்த இரவு ஒரு கொடுங்கனவின் ஆரம்பம் மட்டும் தான். பொதுவாகக் கனவுகள் தூங்கும்போதுதான் வரும். பயங்கரமாக இருந்தால் முழித்துக் கொண்டு அதில் இருந்து தப்பிவிட முடியும். ஆனால், விழித்தபடியே காண நேர்ந்த கனவு இது. மேலும் இதில் தூங்கித் தப்பிக்கவும் முடியாது.

விபத்து நடந்த மறுநாள் நீங்கள் போபாலில் இருந்திருக்க வேண்டும். ஹிரோஷிமா நாகசாகியில் வீசப்பட்ட அணு குண்டுகளைப் போன்ற ஒரு பயங்கரம். கையெட்டும் தூரத்தில் எல்லாம் பிணங்கள். கண்ணெட்டும் தூரமெல்லாம் எரியும் சிதைகள். கோழிகள், ஆடுகள், மாடுகள், காகங்கள் என அந்தப் பிரதேசத்தில் இருந்த அனைத்து ஜீவராசிகளும் இறந்துவிட்டிருந்தன. மரங்களில் இருந்த அத்தனை இலைகளும் உதிர்ந்துவிட்டன. முன் பனிக் காலத்தின் நடுவில் உலகில் முதன் முறையாக இலையுதிர்காலம் வந்தது. நர்மதை நதியின் கரையோரத்தில் பெரும் பள்ளங்கள் வெட்டப்பட்டன. லாரிகளில் கொண்டு செல்லப்பட்ட உடல்களை அப்படியே குழியில் கொட்டி மண்ணைப் போட்டு மூடினார்கள். இறந்தவர்களின் அடையாளமாக சிறு கன்று ஒன்றை நட்டார்கள். வேதனையின் கிளைகளை நாலா புறமும் பரப்பி அது இன்று மாபெரும் விருட்சமாக வளர்ந்துவிட்டிருக்கிறது. கைவிடப்பட்ட பூமியில், இரவிலும் பகலிலும் நில்லாமல் வீசும் கொடுங்காற்றில், அது தன் ஆயிரமாயிரம் நாவுகளால் யாராலும் கேட்கப்படாத, யாராலும் கேட்க முடியாத ஒரு துயரக் கதையைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

கூட்டம் சிறிது நேரம் மவுனமாக இருக்கிறது. ஸ்பீக்கரில் க்ளாப்ஸ் பிட் போடப்பட்டதும். அனைவரும் எழுந்து நின்று கைதட்டுகிறார்கள்.

ஆண்டர்சன் மைக்கை வாங்கி : ரொம்பவும் அழகா சொன்னீங்க. இதுமாதிரியான ஒரு வருணனைக்கு என்னோட பங்களிப்பும் ஒரு காரணமா இருந்திருக்கு அப்படிங்கறதை நினைக்கும்போது பெருமையா இருக்கு. இது போன்ற தருணங்கள்தான் நம் வாழ்க்கைக்கு ஒரு அர்த்தத்தைத் தருகின்றன. வெல்டன் ஸ்டேஷன் மாஸ்டர். கீப் இட் அப்.

சிங்ஜி (பணிவாக) : அது உங்க கையிலதான் இருக்கு. வி டேன்ஸ் டு யுவர் ட்யூன் மாஸ்டர். எங்களுடைய நடனம் அருமையாக இருக்கிறது என்றால் அதன் முழு பெருமையும் இசை அமைத்த உங்களுக்கே சேரும்.

ஆண் அறிவிப்பாளர் : தாட்ஸ் இட். நிலவின் ஒளி சூரியனிடமிருந்து பெறப்பட்டதன்றோ. அழகாகச் சொன்னீர்கள். என் வாழ்க்கையிலேயே இது போன்ற ஒரு நிகழ்ச்சியை நான் நடத்தியதில்லை. இனியும் நடத்த முடியும் என்று தோன்றவில்லை. ஓ.கே. அந்த சந்தோஷத்தோட நாம் ஒரு சின்ன பிரேக் எடுத்துப்போம்.



ஹலோ நான் தென்காசியில இருந்து டக்ளஸ் பேசறேன்.

சொல்லுங்க டக்ளஸ் சார். எப்படி இருக்கீங்க..?

நான் நல்லா இருக்கேன் சார்..?

ஊர்ல நல்லா மழையெல்லாம் பெய்யுதா..?

பெய்யுதுங்க. இது டி.வி.ஸ்டேஷன் தானுங்களா..?

ஆமா... என்ன சந்தேகம்..?

டி.வி. வால்யூமைக் கொறைங்கன்னு சொல்லவே இல்லையே..?

நீங்க ஏற்கெனவே குறைச்சுதான வெச்சிருக்கீங்க.

இருந்தாலும் நீங்க அதெயெல்லாம் சும்மா சொல்லணும். அப்பத்தான டி.வி. ப்ரோக்ராம்ல இருந்து பேசறாங்கன்னு எங்களுக்குத் தெரியும்.

ஓஹோ. அப்படியா அது சரி. வந்த விஷயத்தை சட்டு புட்டுன்னு சொல்லிட்டு இடத்தைக் காலி பண்ணுங்க. காத்து வரட்டும்.

அதாவதுங்க, கடவுள்தானுங்க எல்லாத்துக்கும் காரணம். மன்மோகன் சிங்ஜி ஒரு விஷயம் சொன்னாரு, மேடம் சொல்றாங்க… நான் பண்றேன் அப்படின்னு. ஆனா அது பாதி உண்மைதாங்க. நம்ம தலைவர் நெத்தியடி மாதிரி அப்பவே சொல்லிட்டாருங்க.

உங்க தலைவரா..?

யாருங்க அது. முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களா..?

சேச்சே... அவர் என்னோட தெய்வங்க.

தெய்வமா..? பெரியாரின் பாசறையில் பிறந்த அவரை தெய்வம்னு சொல்றீங்களே..?

ஆமா. அதுல என்ன தப்பு. அவர் தெய்வத்தைத்தான் கும்பிடக் கூடாதுன்னு சொல்லியிருக்காது. அவரைக் கும்பிடக் கூடாதுன்னு சொல்லலியே.

பின்னிட்டீங்க போங்க.

அவர் சொல்ல வர்றது என்னன்னா கண் முன்னால நான் நடமாடும் தெய்வமா இருக்கும்போது கல்லை ஏன் கும்பிடுகிறாய்..? பக்தா... உன் பகுத்தறிவைப் பயன்படுத்து. அப்படின்னு சொல்லாம சொல்றாருங்க.

கரெக்டா சொன்னீங்க. இதுவரை எங்களுக்குப் புரியாமப் போச்சே. சரி அவரு தெய்வம். உங்களோட தலைவர் யாரு.

அவரு ஒரு தடவை சொன்னா 100 தடவை சொன்ன மாதிரிங்க.

கூட்டம் புரிந்து கொண்டு விசிலடித்து தன் மகிழ்ச்சியைத் தெரிவிக்கிறது.

அவர் தெளிவா சொன்னாருங்க… ஆண்டவன் சொல்றான்… இந்த ஆண்டர்சன் பண்றான் அப்படின்னு.

அருணாச்சலம் செய்யறான் அப்படின்னுதான தலைவர் சொன்னாரு.

அது சரிதாங்க. அருணாச்சலம் அப்படிங்கறது இந்த உலகத்துல இருக்கற எல்லா உயிர்களையும் குறிக்கக்கூடிய சொல்லுங்க. இந்த உலகத்துல யார் எது செஞ்சாலும் அதுக்கு அந்த ஆண்டவன் தாங்க காரணம்.

ரொம்ப அருமையாச் சொன்னீங்க. இதெல்லாம் எப்படி..? தனியா ரூம்போட்டு யோசிப்பீங்களோ.

எல்லாம் கடவுள் கொடுக்கறதுதாங்க.

ரொம்ப நல்லதுங்க. தொடர்ந்து நிகழ்ச்சியைப் பாருங்க. போன் பண்ணுங்க.

ஓ.கே. வியூவர்ஸ்… எல்லா பிரச்னைக்கும் காரணம் கடவுள்தான் அப்படிங்கற ரொம்பவும் தெளிவான ஆணித்தரமான பதிலை ஒருத்தர் சொல்லியிருக்காரு. நான் நினைக்கறேன், இவருக்குத்தான் இந்தப் பரிசு போகும்னு.

அப்போது பார்வையாளர் வரிசையில் இருந்து ஒருவர் கையை உயர்த்துகிறார். அறிவிப்பாளர் அவர் அருகில் செல்கிறார்.

பார்வையாளர் : கடவுள்தான் எல்லாத்துக்கும் காரணம்னு சொன்னாருங்க. அதை என்னால ஏத்துக்க முடியலை.

ஏன்?

இந்தக் கடவுள் அப்படிங்கறவரு இருக்காரா இல்லையான்னே மொதல்ல தெரியாது. அப்படியே இருந்தாலும் இந்த உலகத்துல நடக்கற எல்லாத்துக்குமே அவர்தான் காரணம்னு சொல்றதுனால அவரை நாம ஆட்டத்துல சேத்துக்கக் கூடாது. இந்தக் குறிப்பிட்ட சம்பவத்துக்கு யார் காரணம் அப்படிங்கறதைப் பார்க்கணும்.

கரெக்டா சொன்னீங்க.

ஆண்டர்சன் ஐயா சொன்ன மாதிரி இது ஒரு டீம் எஃபர்ட்டு அப்படிங்கறது ஓரளவுக்குத்தான் சரிங்க. அது அவங்களுக்குள்ள இருக்கற ஒத்துமையையும் நட்பையும் பாசத்தையும் விசுவாசத்தையும் காட்டுதுங்க. ஆனா, எனக்கு என்ன தோணுதுன்னா... இந்த எல்லா பிரச்னைக்கும் அவங்க மூணு பேரும் ஓரளவுக்குத்தாங்க காரணம்.

யார் முழுக் காரணம்னு நினைக்கறீங்க.

இவங்க மூணு பேருமே ஒருவகையில வில்லு, அம்பு, நாண் மாதிரித்தான். மூணுமே ரொம்ப முக்கியமானதுதான். எந்த ஒண்ணு இல்லாம போனாலும் எதுவும் நடந்திருக்காதுதான். ஆனா வில்லும் நாணும் அம்பும் மட்டும் இருந்தாப் போதுமாங்க..?

அருமையான கேள்வி. பாயிண்டைப் பிடிச்சீட்டிங்களே..?

அங்கதான் நிக்கறான் இந்த சந்திரன்.

பிரமாதம். பிரமாதம்.

வில்லை எடுத்து நாணேற்றி அம்பை வெச்சு குறி பார்த்து அடிக்க ஒரு கை வேணும் இல்லையா..? அந்தக் கைதானுங்க எல்லாத்துக்கும் காரணம். அந்தக் கை மாதிரி முக்கியமானது யார் தெரியுமா..?

(சஸ்பென்ஸ் தாங்க முடியாமல் ): சொல்லுங்க சொல்லுங்க. கடவுளும் இல்லைன்னு சொல்லிட்டீங்க. யார் காரணம் யார் காரணம்..?

அந்த நபர் சிறிது இடைவெளி விடுகிறார். கூட்டத்தினரை பெருமிதத்துடன் பார்க்கிறார். ஒவ்வொருவர் முகத்திலும் மகிழ்ச்சியும் ஆர்வமும் பதற்றமும் கலந்து கட்டி நிற்கிறது. ஆண்டர்சனும் மன்மோகன் சிங் ஜியும், அத்வானிஜியும் கைகளைப் பிசைந்தபடி நிற்கிறார்கள்.

ஆண்டர்சன் மெதுவாக சிங்ஜி பக்கம் திரும்பி : நாம காரணம் இல்லைன்னா யாரைச் சொல்லப் போறாரு. மக்கள்தான் காரணம்னு சொல்லப் போறாரா..?

சிங்ஜி : அப்படித்தான் இருக்கும். அத்வானிஜி நீங்க என்ன நினைக்கறீங்க..?

அத்வானிஜி : கரெக்டா சொன்னீங்க. மக்கள்தான் காரணம்னு சொல்லப் போறாருன்னு நினைக்கறேன்.

எல்லாரும் அந்த பார்வையாளரை ஆர்வத்துடன் பார்க்கிறார்கள்.

இந்த எல்லா சம்பவத்துக்கும் யார் காரணம் தெரியுமா..?

ஆண்டர்சன் ச்ஸ்பென்ஸ் தாங்க முடியாமல் : மக்கள்தான காரணம்

அந்த நபர் : இல்லை.

ஆண்டர்சனும் சிங்ஜியும் அத்வானிஜியும் அதிர்ச்சியில் உறைகிறார்கள்: என்ன… மக்களும் இல்லையா..?

அப்போ..? யார்தான் காரணம்..? யார்தான் காரணம் என்ற கேள்வி அரங்கம் முழுவதும் எதிரொலிக்கிறது.

அந்த நபர் அனைவரையும் சாந்தப்படுத்துகிறார் : அமைதி அமைதி… சொல்லத்தான போறேன்.

கூட்டத்தில் ஊசி விழுந்தால் கேட்கும் அளவுக்கு அமைதி நிலவுகிறது. அந்த நபர் தொண்டைய லேசாகக் கனைத்துக் கொள்கிறார். புன்முறூவல் பூக்கிறார்.

எல்லாத்துக்கும் பூச்சிதாங்க காரணம்…

கூட்டம் ஒரு கணம் அதிர்சியில் உறைகிறது. மறுகணம் அந்த மாபெரும் கண்டுபிடிப்பைக் கேட்டதும் உற்சாகத்தில் ஆர்ப்பரிக்கிறது.

பூச்சியா..? என்று ஆனந்த அதிர்ச்சியில் ஒவ்வொருவரும் உற்சாகத்தில் பக்கத்தில் இருப்பவருடன் பேசிக் கொள்கிறார்கள்.

ஆமாங்க. அது வந்து பயிரை அழிச்சதுனாலதான விஞ்ஞானிங்க பூச்சிக் கொல்லி மருந்தைக் கண்டுபிடிச்சாங்க. அதனாலதான அமெரிக்க வியாபாரிங்க அதை நம்ம ஊர்ல தயாரிக்க ஆரம்பிச்சாங்க. அதனாலதான இவ்வளவும் நடந்தது. அதனால பூச்சிதாங்க எல்லாத்துக்கும் காரணம்.

ஆஹா… என்ன ஒரு அபாரமான கண்டுபிடிப்பு.

மற்ற பார்வையாளர்கள் அவரைச் சுற்றி நின்று கைதட்டி வாழ்த்துகிறார்கள். சிலர் அவரைத் தோளில் தூக்கிக் கொள்கிறார்கள். நிலையத்தினர் அவசர அவசரமாக பூச்சி போல் ஒரு உடையைக் கொண்டு வருகிறார்கள். அதை அணிந்து கொண்டு அந்த பார்வையாளர் உற்சாகத்தில் கையை உயர்த்திக் காட்டுகிறார்.

அனைவரும் அவரைச் சுற்றி நின்று ஆடிப்பாடுகின்றனர்.

இந்தப் பூச்சி போதுமா..?

இன்னும் கொஞ்சம் வேணுமா..?

அ… இந்தா… ஆ… இந்தா…

லாங் லிவ் பூச்சி...

கடவுளைக் கண்டவனும் இல்லை...

பூச்சியை வென்றவனும் இல்லை..!

ஆண்டர்சன் ரசித்து சிரித்து கை தட்டி உற்சாகப்படுத்துகிறார். ஆண் அறிவிப்பாளர் ஆண்டர்சனை அரங்கின் மையப் பகுதிக்கு வந்து ஆடும்படிக் கேட்டுக் கொள்கிறார். ஆனால், ஆண்டர்சனுக்கு இந்திய பாரம்பரிய டப்பாங்குத்து ஆட வரவில்லை. திணறுகிறார். ஆதர்ணிய அத்வானிஜியும் மானினிய மன்மோகன் சிங்ஜியும் ஆடிக் காட்டுகிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக ஆண்டர்சனும் இந்தப் பூச்சி போதுமா… இன்னும் கொஞ்சம் வேணுமா என்று குத்தாட்டம் போடுகிறார். அரங்கம் அதிர்கிறது. மன்மோகன் சிங் ஜி, வீ வாண்ட் என்று உரக்கக் கூவுகிறர். கூட்டம் போபால்… என்று பதிலுக்குக் கூவுகிறது. கம் பேக் என்று அத்வானிஜி முழங்குகிறார். யூனியன் கார்பைடு என்று கூட்டம் ஆர்ப்பரிக்கிறது.




Saturday, July 24, 2010

போபால் - 4


பி.பி. எண்ணெய்க் கசிவு

மெக்ஸிகோ வளைகுடாவில் ...

நடுக்கடலில் இருந்த பிரிட்டிஷ் பெட்ரோலிய நிறுவனத்தின் எண்ணெய் கசிவு

பெட்ரோலிய நச்சினாலும் ஆக்ஸிஜன் கிடைக்காமல் போவதாலும் கடல் வாழ் உயிரினங்களுக்கு பேராபத்து!

34,000 பறவைகள், 1200 வகை மீன்கள், 1400 மெல்லுடலிகள், 1,500 வகை நத்தைகள், 4 வகை கடல் ஆமைகள், 29 கடல் பாலூட்டி விலங்குகளின் வாழ்க்கை பரிதாபத்துக்குள்ளாகும் நிலையில் இருக்கிறது.

கடற்கரை மணல் வெளியில் சூரியக் குளியல் எடுத்தும், கடல் சறுக்கு விளையாடியும், படகுச் சவாரி செய்தும் விடுமுறையைக் கொண்டாட நினைத்த ஆயிரக்கணக்கானோர் கடலில் எண்ணெய் கசிந்ததால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

சுற்றுலாவை நம்பியிருந்த கடலோர விடுதிகளுக்கு பெரும் இழப்பு

கடலோர வீடுகளின் விலையும் வெகுவாகச் சரிந்துவிட்டது.

மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்குள் போக முடியவில்லை.

பி.பி. நிறுவனம் எல்லாரிடமும் மன்னிப்புக் கேட்டுக் கொண்டுள்ளது.

கேட்டதற்கு அதிகமாகவே கொடுத்து ஈடுகட்ட முழுமனதுடன் ஒப்புக் கொண்டுள்ளது.

மனித உயிர்கள் இழப்பு : 11

போபாலில் இறந்தவர்கள் : 30,000க்கும் மேல்; இன்றும் நோயால் இறந்து கொண்டிருப்பவர்கள் ஒரு லட்சத்துக்கும் மேல்

எண்ணெய் கசிவு நஷ்ட ஈடு : 20 பில்லியன்

போபால் விஷ வாயுக் கசிவு நஷ்ட ஈடு : 478 மில்லியன் டாலர். அதாவது மெக்ஸிகோ எண்ணெய் கசிவுக்குக் கொடுத்ததைவிட சுமார் 200 மடங்கு குறைவு.

அனைத்து நச்சைக் கழிவையும் தன் சொந்தச் செலவில் அகற்றுவதாக விபத்துக்குக் காரணமான பி.பி. வாக்குறுதி.

போபால் நச்சுக் கழிவை அகற்ற யூனியன் கார்பைடு திட்டவட்ட மறுப்பு

இந்தியா தானே அகற்ற ஏகமனதாக முடிவு..!

சாரே ஜஹான்சே அச்சா... இந்துஸ்தான் ஹமாரா பாடல் பின்னணியில் ஒலிக்கிறது.

பிரேக் முடிந்து நிகழ்ச்சி ஆரம்பிக்கிறது.

பெண் அறிவிப்பாளர் : லெட்ஸ் வெல்கம் அவர் நெக்ஸ்ட் எண்டர்டெய்னர்.

முக்காடு போட்ட ஒரு பெண்மணி அரங்குக்குள் நுழைகிறார்.

ஆண் (அவரைப் பார்த்து சிரிக்கிறார்) : எங்க ஊர்ல எல்லாம் மதில் எட்டிக் குதிச்சு தப்பு காரியம் செய்யப் போகும்போதுதான் இப்படி தலைல முக்காடு போட்டுப்போம்.

பெண் : எங்க ஊர்ல இதுதான் வழக்கம்.

ஆண் : எது மதில் எட்டிக் குதிச்சு போய் தப்புக் காரியம் செய்யறதா..?

அனைவரும் சிரிக்கிறார்கள். முக்காடு அணிந்த பெண் தர்ம சங்கடத்தில் நெளிகிறார்.

ஆண் : ஓ.கே. நாம நிகழ்ச்சிக்குப் போவோம். டிசம்பர் மூணாந் தேதியன்னிக்கு எங்க இருந்தீங்க? எப்படி இருந்திங்க..? விஷ வாயு கசிஞ்ச போது என்ன செஞ்சிட்டிருந்தீங்க?

நல்லா தூங்கிட்டிருந்தேன். திடீர்னு இருமல் அதிகமாச்சுது. எழுந்திரிச்சுப் பார்த்தேன். மங்கலான விளக்கொளியில அறை பூரா புகை பரவியிருந்தது தெரிஞ்சது. ஓடு ஓடுன்னு வெளியில எல்லாரும் கத்தற சத்தம் கேட்டுச்சு. என் கண்ணெல்லாம் எரிய ஆரம்பிச்சிது. மூச்சை இழுத்து விழும்போது ஏதோ தீயை உறிஞ்சறது மாதிரி ஒரே எரிச்சல். கைக்குழந்தை எரிச்சல் தாங்க முடியாம வீல்ன்னு அழ ஆரம்பிச்சிடுச்சு. வீட்டில இருந்த எல்லாருமே இருமிட்டிருந்தாங்க.

நாம எல்லாரும் ஆஸ்பத்திரிக்குப் போயாகணும்னு என் மாமியார் சொன்னாங்க. என் கைக்குழந்தையை இடுப்புல தூக்கிக்கிட்டேன். என்னோட சின்ன பொண்ணை கையைப் பிடித்துக் கொண்டு வீட்டை விட்டுப் புறப்பட்டேன். என் நாத்தனார் அவரோட ரெண்டு குழந்தையை கையைப் பிடிச்சு கூட்டிக்கிட்டு புறப்பட்டாங்க. என் மாமனார் தன்னோட ஐந்து வயது செல்லப் பேரனை தூக்கிகிட்டாரு.

ஆண் : குழந்தைகள்லாம் எங்கயோ எஸ்கர்ஷனுக்குப் போறதா நினைச்சு சந்தோஷப்பட்டிருக்கும். இல்லையா..?

நாங்க எல்லாரும் இரவு உடையிலயே புறப்பட்டோம். வேற எதையுமே எடுத்துக்கலை. வெளிய ஒரே குளிரா இருந்தது. ஆனா அதைப் பற்றியெலாம் கவலைப்படற நிலைல நாங்க இல்லை. தப்பிச்சு ஓடணும். அது ஒண்ணுதான் எங்களோட நோக்கமா இருந்தது.

தெருவில பார்த்தபோது, ஏதோ கலவரம் நடந்து முடிஞ்சது மாதிரி செருப்பும், போர்வையும் பையும் பொருட்களும் தாறுமாறாக் கிடந்தது. நிறைய பேர் உயிரைக் கையில பிடிச்சிட்டு ஓடிப் போயிருக்காங்க. மேகம் மாதிரி ஒரு புகை மண்டலம் எல்லா இடத்திலயும் பரவியிருந்தது. தெருவிளக்குகள் ரொம்பவும் மங்கிப் போய் தெரிஞ்சுது. கூட்டமா ஓடினதுல நிறைய பேர் குடும்பத்துல இருந்து பிரிஞ்சு போயிருந்தாங்க. அம்மாக்கள் குழந்தைகளைத் தேடி அலைஞ்சிட்டிருந்தங்க. குழந்தைங்க அம்மாக்களைத் தேடி அழுது கொண்டிருந்தன. எங்க குடும்பமும் பிரிஞ்சு போயிடிச்சிது. நாத்தனார் எங்கயோ வேற வழியில ஓடிட்டாங்க. வழி நெடுக நிறைய பேர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்திருந்தாங்க.

கொஞ்ச தூரம் ஓடியிருப்போம். அப்போ தூரத்துல ஒரு டிரக் போறது தெரிஞ்சுது. எங்க மாமனார் எங்க எல்லாரையும் ஏறச் சொன்னாரு. எங்களால ஏற முடியலை. ரொம்ப உயரமா இருந்தது. எங்க மாமியார் இதய நோயாளி வேற. அவரால நடக்கவே முடியலை. ஆஸ்பத்திரியோ ரொம்ப தூரத்துல இருந்துச்சு. என் கைக்குழந்தை மயங்கி போயிருந்தது. கன்னத்துல தட்டி தட்டி உசிர் இருக்கான்னு பார்த்தபடியே ஓடினேன். சின்ன பொண்ணு வாந்தி எடுத்துட்டே இருந்துச்சு. எப்படியும் ஆஸ்பத்திரிக்குப் போயிடணும் அந்த ஒரே ஒரு எண்ணம் மட்டும்தான் இருந்தது. இன்னும் கொஞ்சம் தூரம் ஓடினதும் எல்லாரும் கீழ விழ ஆரம்பிச்சிட்டோம். நான் நாலு மாச கர்ப்பமா இருந்தேன். விழுந்ததும் அந்த இடத்துலயே நடுத் தெருவிலயே கரு கலைஞ்சு ரத்தம் கொட்ட ஆரம்பிச்சது. இனி ஒரு அடி கூட எடுத்து வைக்க முடியாதுங்கற மாதிரி ஆகிடிச்சு. என் ரத்தத்துலலே விழுந்து புரண்டேன். வாந்தியும் பேதியும் ஆரம்பிச்சிடுச்சு. எல்லாம் ரத்தத்துல கலந்துச்சு.

கண்ணு மங்க ஆரம்பிச்சது. என்ன நடந்துச்சுன்னே எங்களுக்குப் புரியலை. அங்க இருந்து தப்பிச்சுப் போகலைன்னா செத்துருவோம் அப்படிங்கறது மட்டும் நல்லா புரிஞ்சது. ஏன்னா தரையில மயங்கி விழுந்ததா நாங்க நினைச்சவங்க உண்மையிலயே செத்துப் போனவங்கங்கறது மெதுவாத்தான் தெரிஞ்சது. அந்தப் பக்கமா போன வண்டிகள்ல ஆட்கள் ஏராளமா தொத்திட்டுப் போறது தெரிஞ்சது. நாம செத்தாலும் பரவாயில்ல குழந்தையை எப்படியும் காப்பாத்திடணும்னு பலத்தையெல்லாம் திரட்டி அந்த வண்டியை நோக்கி ஓடினேன். ஏத்தமா இருந்ததுனால வண்டி மெதுவா போயிட்டிருந்துச்சு. யாரோ கை கொடுத்து தூக்கி விட்டாங்க. எப்படியோ ஏறி அந்தக் கூட்டத்துக்குள்ள விழுந்தேன். ஆனா கூட்டம் அதிகமானதுனால வண்டி குடை சாய்ஞ்சிடுச்சு. வேற வழியில்லாம எல்லாரும் உயிரைக் கையில பிடிச்சிட்டு ஓட ஆரம்பிச்சோம். வழி நெடுக பிணங்களா இருந்துச்சு. வேற வழியில்லாம மிதிச்சு தள்ளிட்டு ஓடினோம்.

அப்படியே ஒரு குழில விழுந்தோம். கண் முழிச்சுப் பார்த்தபோது பொழுது விடிஞ்சிருந்தது. விஷ வாயுக் கசிவை தடுத்து நிறுத்தியாச்சு. நிலைமை கட்டுக்குள் வந்துவிட்டது. எல்லாரும் அவங்க அவங்க வீட்டுக்குத் திரும்பலாம்னு ஸ்பீக்கர்ல அறிவிக்கறதைக் கேட்டோம். நாலைஞ்சு பேர் குழில கிடந்த எங்களைத் தூக்கி பாதுகாப்பான இடத்துக்கு கூட்டிட்டுப் போனாங்க. தண்ணி கொடுத்தாங்க. உடம்பைக் கழுவிக்கிட்டோம். புது டிரஸ் கொடுத்தாங்க அதை போட்டுக்கிட்டோம். டீ போட்டுக் கொடுத்தாங்க. ஆனா குடிக்க முடியலை. அப்பயும் எங்க தொண்டை எரிஞ்சிட்டுத்தான் இருந்தது. கழுத்தைப் பிடிச்சி யாரோ நெரிக்கற மாதிரி மூச்சு முட்டிக்கிட்டுத்தான் இருந்தது.

வீட்டுக்குத் திரும்பினோம். வீட்டுல இருந்த எல்லா பொருள்லயும் நீலம் பாரிச்சிருந்தது. எதையும் சாப்பிடலை. கொடுங்க கனவு போல இருந்த இரவு முடிஞ்சிடுச்சு. ஆனா, அதைத் தொடர்ந்து புறக்கணிப்பின் விடியல் ஆரம்பிச்சிருந்தது. வேதனையின் சூரியன் எங்கள் வாழ்வில் அஸ்தமிக்கவே இல்லை. அனலாய்த் தகிக்கிறது... கானல் கடல் எங்கள் முன் அலையடித்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் இந்தியராகப் பிறந்திருக்கவே கூடாது.

அரங்கில் பெரும் மவுனம் நிலவுகிறது. முக்காடு போட்ட பெண் கண்களைத் துடைத்துக் கொள்கிறார்.

ஆண் : ஓ.கே. நல்லா சொன்னீங்க உங்க கதையை. டியர் வியூவர்ஸ் மறுபடியும் சொல்றோம். இந்த நிகழ்ச்சியோட உண்மையான ஜட்ஜஸ் நீங்கதான். போபால் சம்பவத்துக்கு யார் காரணம் ஆப்ஷன் ஏ : யூனியன் கார்பைடு. ஆப்ஷன் பி இந்திய ஆளுங்கட்சி. ஆப்ஷன் சி இந்திய எதிர்கட்சி. ஆப்ஷன் டி : இந்திய மக்கள். உங்க பதிலை எங்களுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்புங்க. பரிசு உங்கள் வீடு தேடி வரும். ஓ.கே. நாம இப்ப சின்ன பிரேக் எடுத்துப்போம். நிவாரணங்கள் தொடர்பான நிறைய விஷயங்கள் அடுத்த செக்மண்ட்ல இருக்கு. அதனால எங்கயும் போயிடாதீங்க.

பாருங்க ...

பெண் : பாருங்க...

ஆணும் பெண்ணும் சேர்ந்து : பார்த்துக்கிட்டே இருங்க.

பிரேக் முடிந்து ஷோ ஆரம்பிக்கிறது.

ஆண் : இந்தியத் தலைவர்களோட பங்களிப்பு இல்லைன்னா இந்த சாதனையைச் செஞ்சிருக்க முடியாதுன்னு ஆரம்பத்துல சொன்னீங்களே அதைக் கொஞ்சம் விரிவாச் சொல்ல முடியுமா..?

ஆண்டர்சன் : ஓ ஷ்யுர். உண்மையில ஒரு நதியோட போக்கைத் தீர்மானிப்பது கரைகள்தான்னு சொல்வாங்க. அதுமாதிரி எங்களோட செயல்பாடுகளைத் தீர்மானிக்கறது எங்களை விமர்சனபூர்வமா கண்காணிக்கறவங்கதான். அந்தவகையில அமெரிக்காவுல எங்களோட நடவடிக்கைகளை அங்க இருக்கற அதிகாரவர்க்கத்தினர், எதிர்கட்சிகள், பத்திரிகைகள் அப்படின்னு நிறைய பேர் கட்டுப்படுத்துவாங்க. இந்தியால ஆளுங்கட்சியும் எதிர்கட்சியும் எங்களுக்கு ரொம்ப ஆதரவா தோளோடு தோள் கொடுத்து நின்னாங்க. அதனாலதான் எங்களல நாங்க விரும்பின மாதிரி இருக்க முடிஞ்சது. இதுல அவங்களோட முக்கியமான பங்குன்னு பார்த்தா அந்த சம்பவத்துக்குப் பிறகு அவங்க நடந்துக்கிட்ட விதம் இருக்கே அதுதான் ரொம்பப் பிரமாதம். அதுக்கு முன்னால கம்யூனிஸ்ட் கட்சிங்க என்னவோ கூட்டம் போடுவானுங்க. உண்டியல் பிரிப்பானுங்க. பட்டினியாக் கெடக்கறவங்களைக் கூப்பிட்டு உண்ணாவிரதம் நடத்துவானுங்க. அவங்க சொல்றதை யாருமே காதுல போட்டுக்கவே மாட்டாங்க. விஷயம் என்னன்னா நிறைய பேருக்கு இந்த ஃபேக்டரி எவ்வளவு சக்தி வாய்ந்தது... அது வெடிச்சா என்ன ஆகும்னு எதுவும் தெரியாது. அதனால, எங்களை எதிர்த்து அப்போ நடந்த விஷயங்களுக்கு எந்த வலுவும் கிடையாது. நாங்க அதையெல்லாம் ரொம்ப ஈஸியா சமாளிச்சிட்டோம். ஆனா, இந்த சம்பவம் நடந்ததுக்குப் பிறகு இந்த அரசுகள் செய்த உதவி இருக்கே அதுதாங்க கிரேட்.

என்னவெல்லாம் பண்ணினாங்க... வரிசையா சொல்லுங்களேன்.

இந்த நம்பவம் நடந்தபோது நான் என் வீட்டுல இருந்த பார்ல திராட்சை மது குடிச்சிட்டிருந்தேன். போபால்ல கேஸ் லீக் ஆயிடிச்சுன்னு சொன்னாங்க. சோ வாட். அது அடிக்கடி நடக்கற விஷயம்தான அப்படின்னு கேட்டேன். இல்லை. இது ரொம்பப் பெரிய அளவுல லீக் ஆகிடிச்சு. ஆயிரக்கணக்குல செத்துட்டாங்க. நீங்க உடனே புறப்பட்டு வாங்க. அப்படின்னு சொன்னாங்க. சரின்னு கிளாஸ்ல ஊத்தினதை அப்படியே ஒரு முழுங்கு முழுங்கிட்டு ஃபிளைட் பிடிச்சு இந்தியா வந்து சேர்ந்தேன். உடனே இந்திய அரசு என்னை கைது பண்ணிடிச்சு.

ஆண் : உங்களைக் கைது பண்ணிச்சா..?

சிங்ஜி : அப்படி எங்க மனசு நோகறமாதிரி எதுவும் பேசாதீங்க. நாங்க உங்களுக்கு வெறும் பாதுகாப்பு கொடுத்தோம். அவ்வளவுதான். ஹவ் டேர் வி அரெஸ்ட் யு சார்..?

ஆண்டர்சன் : ஓ.கே. ஒருவகையில அதை பந்தோபஸ்துன்னும் சொல்லலாம். ஆனா என்னைக் கைது பண்ணனும்னுதான் எல்லாரும் சொன்னாங்க. அந்த நேரத்துலதான் எஜமான விசுவாசம்னா என்ன அப்படிங்கறதை நான் பார்க்க முடிஞ்சது. அப்போதைய முதலமைச்சர், உள்துறை அமைச்சர், பிரதமர், ஜனாதிபதி அப்படின்னு ஒவ்வொருத்தர் கிட்ட இருந்தும் உத்தரவுகள் பறக்குது. எனக்கு எந்த அசம்பாவிதமும் நடந்துடக்கூடாது அப்படின்னு. நான் போபால் ஃபேக்டரி இருக்கற இடத்துக்குப் போறேன்னு சொன்னேன். வேண்டாம்னு ஜனாதிபதி என்னை தன்னோட மாளிகைக்கு அழைச்சுட்டிப் போயி தலைவாழை இலை போட்டு வடை பாயாசத்தோட ஒரு விருந்து கொடுத்தாரு. இந்தியர்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள் அப்படின்னு சொல்றது சும்மா ஒண்ணுமில்லை. சாப்பிட்டு முடிச்சு பீடாவெல்லாம் போட்டுட்டு வந்தேன். வெளிய ஒரு பத்திரிகையாளர் சந்திப்புக்கும் ஏற்பாடு பன்ணியிருந்தாங்க. இந்திய அரசு எப்ப விசாரணைக்குக் கூப்பிட்டாலும் நான் வந்து பதில் சொல்லத் தயார்ன்னு சொன்னேன். புஷ்பக விமானம் மாதிரி ஒரு சொகுசு விமானம் இந்திய ஏற்பாடு பண்ணிக் கொடுத்துச்சு. ஜம்னு ஏறி உட்கார்ந்தேன். அது ஜிவ்வுன்னு மேல ஏறும்போது என் காலுக்குக் கீழ இருந்த இந்தியாவை கடைசியா ஒரு தடவை பார்த்தேன். வழியனுப்ப வந்த அதிகாரிகள் கண்ணுல அப்படியே ஆனந்தக் கண்ணீர். என்ன பத்திரமா அனுப்பி வெச்ச அந்தக் காட்சியை என்னால வாழ்நாள்ல மறக்கவே முடியாது.

அத்வானிஜி : யு டிசர்வ்ட் இட் சார்.

ஆண்டர்சன் : அந்த விசுவாசம் இன்னிக்கு வரைக்கும் தொடருது. இதோ கடைசியா ஒரு தீர்ப்பு கொடுத்திருக்காங்க. அதுல என் பேரே குற்றவாளிங்க பட்டியல்ல இல்லை பாருங்க. இதுக்கு முன்னால 1996-ல் ஒரு தீர்ப்பு வந்துச்சு. அதுலயும் இப்படித்தான். டிரைவர் தாறுமாறா வண்டியை ஓட்டி பலரைக் கொன்னா அதுக்காக வண்டியோட உரிமையாளரைக் கைது பண்ண முடியுமான்னு லாஜிக்கா ஒரு கேள்வியைக் கேட்டாரு பாருங்க.

அது நியாயமான கேள்விதான..? அதுல உங்களுக்கு எந்த ஃபேவரும் செஞ்சதாத் தெரியலையே..?

என்ன தம்பி... நீங்களும் இப்படிக் கேக்கறீங்களே... பிரேக் இல்லாத வண்டியைக் கொடுத்து ஓட்டச் சொன்னா யார் மேல குத்தம். அதுவும் போக வேகமோ தாறுமாறா போறமாதிரி ஏத்தி வெச்சிருந்தோம். அப்போ, உரிமையாளர் மேலதான குத்தம்.

அது சரிதான்.

தம்பி நீ இன்னும் வளரணும் தம்பி. உங்க அரசாங்கம்தான் அந்தமாதிரி கேள்வியெல்லாம் வராம பார்த்துக்கிட்டது. இதுக்கெல்லாம் நான் எப்படி கைம்மாறு செய்யப் போறேனோ. எனக்கு மறு பிறவியில நம்பிக்கை கிடையாது. இருந்தா அது சம்பந்தமா ஏதாவது சொல்லலாம்.

அத்வானிஜி : இந்த ஜென்மத்துலயே நீங்க எங்களுக்கு எவ்வளவோ செஞ்சிருக்கீங்க. அதுக்கு நாங்கதான் உங்களுக்கு நன்றிகடன்பட்டிருக்கோம்.

ஆண்டர்சன் : நிச்சயமா சொல்றேன். இந்தமாதிரியான விசுவாசம்தான் என்னை எப்பவுமே திகைக்க வைக்குது. போபால் சம்பவம் நடந்ததுமே இன்னொரு முக்கியமான நிகழ்ச்சி நடந்தது. நிறைய பேர் சாக ஆரம்பிச்சிடாங்கன்னதும் மருத்துவர்கள் எங்களுக்கு ஃபோன் போட்டு அந்த பூச்சிக் கொல்லியோட வேதியல் மூலக்கூறுகளைப் பத்திக் கேட்டாங்க.

எதுக்கு..?

அப்பத்தான அது உடம்புல என்ன பாதிப்பை ஏற்படுத்தும் அதை எப்படி தடுக்கறதுன்னு தெரிஞ்சிக்க முடியும். ஆனா நாங்க என்ன பண்ணினோம். அதைச் சொல்ல முடியாது. வர்த்தக ரகசியம் அப்படின்னு சொல்லிட்டோம்.

ஏன் சார்..?

ஆமா. பின்ன அந்த விஷயம் தெரிஞ்சா போட்டி கம்பெனிங்க அதே மாதிரி தயாரிச்சு எங்களை வியாபாரத்துல தோற்கடிச்சிடுவாங்களே... நமக்கு ஒரு நல்லதுன்னா நாலு பேர் சாகறதுல தப்பே கிடையாது இல்லியா..?

சரியாச் சொன்னீங்க. ஒருவேளை அந்த பூச்சிக் கொல்லியோட மூலக்கூறை தெளிவா சொல்லியிருந்தா நிறைய பேரைக் காப்பாத்தியிருக்க முடியும் இல்லையா..?

ஆமா நிச்சயமா… ஆனா, அதை உங்க மருத்துவர்கள் நாங்க சொல்லாமலேயே கண்டுபிடிக்கவும் செஞ்சிட்டாங்க..?

மாற்று மருந்தை கண்டு பிடிச்சிட்டாங்களா..?

ஆமா... செத்தவங்களோட உடம்பை போஸ்ட்மார்டம் பண்ணி, என்ன கொடுத்தா விஷத்தை முறிக்க முடியும்னு அருமையா கண்டுபிடிச்சிட்டாங்க. ஆனா இங்கதான் உங்க அரசாங்கம் எங்களுக்கு ஒரு பெரிய உதவி செஞ்சாங்க. அதை வாழ்நாள்ல ஒருபோதும் மறக்க முடியாது. மருத்துவர்கள் கண்டுபிடிச்ச அந்த தயோசல்பேட்டை பாதிக்கப்பட்டவங்களுக்குக் கொடுக்கக்கூடாதுன்னு ஒரு உத்தரவு போட்டாங்க பாருங்க. அதை இப்ப நினைச்சாலும் புல்லரிக்குது.

விஷ முறிவு மருந்து கொடுத்துக் காப்பாத்தக் கூடாதுன்னு சொன்னாங்களா..? ஏன்..?

ஏனா? எங்களைக் காப்பாத்தறதுக்குத்தான். அந்த மருந்தைக் கொடுத்திருந்தா பூச்சிக் கொல்லி மருந்துல சயனைட் இருந்தது உறுதியாகிடும். நாங்கதான் எங்க பூச்சிக் கொல்லி ரொம்பவும் சாதுவானது. எந்த பெரிய பாதிப்பும் வராதுன்னு சொல்லிட்டிருக்கோமே. அதுல விஷம் இருந்தது உறுதியாயிடிச்சின்னா எங்களுக்கு எக்கச்சக்கம் நஷ்டைஈடு கொடுக்க வேண்டிவந்திருக்குமே. அதனாலதான் அந்த மருந்தைக் கொடுக்கக்கூடாதுன்னு மருத்துவர்களை விட்டே சொல்ல வெச்சாங்க உங்க அரசியல்வாதிங்க.

ரியலி நைஸ். நான் நீங்க ஏதோ பெருந்தன்மையிலதான் இது ஒரு டீம் எஃபர்ட்ன்னு சொல்றீங்கன்னு நினைச்சேன். இப்பத்தான் புரியுது. நீங்க ஒரு எளிய உண்மையைத்தான் சொல்லியிருக்கீங்க.

நிச்சயமா..? அவங்களோட சாதனை உண்மையிலயே மகத்தானதுதான். இன்னொரு விஷயம் சொல்றேன் கேளுங்க. விஷ வாயு படலம் நடந்து முடிஞ்சதும் நஷ்ட ஈடு கேட்கும் படலம் ஆரம்பிச்சது. இந்திய அரசு 3.2 பில்லியன் நஷ்ட ஈடு கேட்டுச்சு. ரொம்பவும் நியாயமான ஒண்ணுதான். இப்ப மெக்ஸிகோல எண்ணெய் கசிவு நடந்தபோது நாங்க கேட்டோமோ 20 பில்லியன் அது மாதிரி அன்னிக்கு ரேட்ல அது நியாயமான ஒரு தொகைதான். இன்னும் சொல்லப் போனா அது கொஞ்சம் குறைச்சல்ன்னு கூடச் சொல்லலாம். ஆனா, நாங்க 478 மில்லியன் தர்றேன்னு சொன்னோம். இந்திய அரசியல்வாதிங்க ரொம்ப சந்தோஷம்னு அதை வாங்கி பாக்கெட்ல போட்டுக்கிட்டாங்க. ஐ மீன் பாதிக்கப்பட்டவங்களுக்கு கொடுக்க வாங்கி வெச்சுக்கிட்டாங்க.

3.2 கேட்டதுக்கு 478 கொடுத்தீங்களா... ரொம்பப் பெருந்தன்மையோடதான் நடந்துக்கிட்டிருக்கீங்க.

இல்லை தம்பி. அவங்க கேட்டது பில்லியன். நாங்க கொடுத்தது மில்லியன்.

எனக்கு இந்த மில்லியன் பில்லியன் கணக்கே புரியாது கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன்.

தாராளமா... இந்திய அரசு 3000 ரூபா கேட்டுச்சு. நாங்க 3 ரூபா கொடுத்து, தோள்ல தட்டிக் கொடுத்து போயிட்டு வாங்கன்னு சொன்னோம். அவங்களும் அதை வாங்கிட்டு ஒரு சலாம் வேற வெச்சிட்டுப் போனாங்க.

பிரமாதம். இப்ப நீங்க சொல்றதையெல்லாம் பார்த்தா இந்திய அரசோட பங்குதான் அதிகமா இருக்கும் போலயிருக்கே.

நிச்சயமா. இப்ப கூட பாருங்க. எல்லா நச்சுக் கழிவை நாங்களே அகற்றிக்கறோம்னு சொல்லிட்டாங்க. நஷ்ட ஈடு இன்னும் அதிகமா தர்றோம்னு சொல்லியிருக்காங்க. மன்மோகன் சிங்ஜி என்ன தன் பாக்கெட்ல இருந்தா கொடுக்கப் போறாரு. காஷ்மீரில் இருந்து கன்யாகுமரி வரையிருக்கும் பாரதத் தாயின் தவப்புதல்வர்கள் அல்லவா போபால் மைந்தர்களுக்குக் கொடுக்கப் போறாங்க.

மன்மோகன் சிங் ஜியைப் பார்த்து : சார் உங்களை என்னமோ நினைச்சேன். பெரிய ஆள் சார் நீங்க. அமைதியா பொம்மை மாதிரி இருந்துட்டு என்னவெல்லாம் அடிச்சு தூள் கிளப்பறீங்க.

என் கைல என்னங்க இருக்கு. மேடம் சொல்றாங்க. நான் பண்ணறேன்.

ஆண் : என்னே ஒரு பணிவு... என்னே ஒருபணிவு... ஓ.கே. ஒரு காலர் லைன்ல இருக்காரு... சொல்லுங்க சார்.

குரல் : நான் நாமக்கல்லுல இருந்து கூமுட்டை பேசறேன்...

ஆண் : என்னது கூமுட்டையா..?

குரல் : ஆமாங்க.

ஆண் : ரொம்ப வித்தியாசமான பேரா இருக்கே..?

குரல் : ரொம்பப் பொருத்தமான பேருன்னும் நிறைய பேரு சொல்லுவாங்க.

ஆண் : அப்படிங்களா... ரொம்ப சந்தோஷம். என்ன கேட்கப் போறீங்க..?

குரல் : எனக்கு கில்லி படத்துல இருந்து இலைய தலபதியோட அப்படிப் போடு... போடு...ங்கற பாட்டு போடுங்களேன்.

ஆண் (லேசாக அதிர்ந்து) : அப்படிப் போடு சாங்கா..? சார்... நீங்க வேற ஷோவுக்கு போட வேண்டிய நம்பரை போட்டுடீங்கன்னு நினைக்கறேன். இது பாட்டுப் போடற ஷோ இல்லை. போபால்ல நடந்த சம்பவம் பற்றியும் அதுல கஷ்டப்பட்டவங்க பத்தியுமான நிகழ்ச்சி.

குரல் : அதனால என்னங்க. சும்மா போட்டு விடுங்க. அங்க கஷ்டப்படறவங்க இலைய தலபதியோட இந்தப் பாட்டைப் பார்த்ததும் உற்சாகமா எந்திரிச்சு ஆட ஆரம்பிச்சிடுவாங்க.

ஆண் : ரொம்ப நல்ல யோசனைதான். நானும் கூட இந்த ஷோவுக்கு நடுவுல ரெண்டு குத்துப் பாட்டைப் போடலாம்னுதான் பார்க்கறேன். விடமாட்டேங்கறாங்க. சரி நாம் இனிமே வாசகர்களோட இந்த கோரிக்கைகளை மனசுல வெச்சு அடுத்து இது மாதிரி நடத்தற ஷோவை கொஞ்சம் அதிரடியா நடத்தறோம். உங்களோட ஆலோசனைக்கு ரொம்ப நன்றி.

அத்வானிஜி : இந்த காலரோட யோசனை நல்லாத்தான் இருக்கு. நீங்க இந்த சிச்சுவேஷனுக்கு பொருத்தமா ஏதாவது பாட்டு போடலாம்.

பின்னணி இசையமைப்பாளர், போனால் போகட்டும் போடா பாடலைப் போடுகிறார்.

கூட்டம் ஸ்தம்பித்துப் போய் கேட்கிறது. ஆண்டர்சனும், அத்வானிஜியும், மன்மோகன் சிங்ஜியும் மெய் மறந்து ரசிக்கிறார்கள்.

போனால் போகட்டும் போடா...

இந்த பூமியில் நிலையாய் வாழ்ந்தவர் யாரடா..?

போனால் போகட்டும் போடா...

வந்தது தெரியும் போவது எங்கே வாசல் நமக்கே தெரியாது.

வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கு இடமேது..?

வாழ்க்கை என்பது வியாபாரம்

அதில் ஜனனம் என்பது வரவாகும்

மரணம் என்பது செலவாகும்

போனால் போகட்டும் போடா..!

ஆண்டர்சன் உணர்ச்சிவசப்பட்டு இசையமைப்பாளரைக் கட்டிப் பிடித்து முத்த மழை பொழிகிறார்.

வந்தவரெல்லாம் தங்கிவிட்டால் இந்த மண்ணில் நமக்கு இடமேது..? அருமை. கவிதை கவிதை... நீங்களே எழுதினதா..? அதைவிட அந்த ராகம் இருக்கே அப்படியே உயிரை என்னமோ பண்ணுது.

தேங்க்யு சார். கவிரயரசு கண்ணதாசன்னு எங்க ஊர்ல பெரிய கவிஞர் எழுதினது. மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி சார்தான் இசை.

பின்னிட்டீங்க போங்க. போபால் சம்பவத்தை மனசுல வெச்சு எவ்வளவு பிரமாதமா எழுதியிருக்காரு.

இல்லை சார். இது அதுக்கு முன்னாலயே எழுதினது.

என்னது முன்னாலயே எழுதினதா..? அவர் வெறும் கவிஞர் மட்டும் தான்னு நினைச்சேன். தீர்க்கதரிசியும் கூடவா..? பிரமாதம். இந்தியர்கள்ன்னா இந்தியர்கள்தான்.

பெண் : அடுத்ததா இன்னொரு காலர் லைன்ல இருக்காரு.

குரல் : ஹலோ

பெண் : சொல்லுங்க சார்... எங்க இருந்து பேசறீங்க.

குரல் : போன்ல இருந்துதான்

பெண் : அது தெரியுது. எந்த ஊர்ல இருந்து.

குரல் : சொந்த ஊர்ல இருந்து

பெண் : இது என்னடா வம்பாப் போச்சு. சொந்த ஊர்னா..?

குரல் : எங்க அப்பா அம்மாவும் நானும் பொறந்த ஊருங்க. இதுகூடத் தெரியாதா..?

பெண் : ஆஹா... இப்பவே கண்ணைக் கட்டுதே... அப்படி எந்த ஊர்லதான் பொறந்து வளர்ந்தீங்க.

குரல் : நான் பொறந்துட்டேன் மேடம். ஆனா வளரவே இல்லைங்க.

பெண் : ஏன்...

குரல் : நான் மொத்தமே மூணு அடிதான்.

பெண் : அதெல்லாம் ஒரு பெரிய குறையே இல்லை. அது சரி நீங்க என்ன சொல்லப் போறீங்க.

குரல் : நீங்க கட்டியிருக்கற புடவை ரொம்ப நல்ல இருக்கு மேடம்.

பெண் (பூரித்துப் போய்) : தேங்யூ தேங்யூ...

ஆண் : ஏன் இப்படி எமோஷனலாற. புடவைதான நல்லா இருக்கு சொன்னாரு.

பெண் (லேசாகக் கோபித்தபடியே) : பொடவை நல்லாயிருக்குன்னா பொடவை கட்டின நானும் நல்லாயிருக்கேன். நான் கட்டினதுனால இந்தப் பொடவை நல்ல இருக்கு அப்படின்னெல்லாம்தான் அர்த்தம்.

ஆண் : நீயா ஏன் வீணா கற்பனை பண்ணிக்கற. சரி சார் மேட்டருக்கு வாங்க.

குரல் : சார், போபால் சம்பவத்துக்கு முழு காரணமும் நம்ம ஆளுங்கதான் சார். நம்மளோட பெருமையை இன்னொருத்தரோட பங்கிட்டுக்கறதுல எனக்கு சம்மதமே இல்லை சார்.

ஆண் : சரியாச் சொன்னீங்க.

குரல் : அதாவது சார்... ஒரு கிராமத்துல ஒரு வீட்டுக்குள்ல ஒரு திருடன் புகுந்துடறான். அந்த வீட்டுல இருக்கற பொருட்கள் எல்லாத்தையும் கொள்ளையடிச்சிட்டு அந்த வீட்டுக்குத் தீயும் வெச்சிடறான். ஆனா, அவன் தப்பிக்கறதுக்கு முன்னால ஊர்க்காரங்க அவனைப் பிடிச்சிடறாங்க. உடனே பஞ்சாயத்து கூட்டறாங்க. பஞ்சாயத்து தலைவர் வந்து, பாவம்ப்பா... அவரு திருடன் இல்லை. நம்ம ஊருக்கு வந்த விருந்தாளி. அவரை நாம ஒண்ணும் செய்யப்டாது. அப்பறம் அவங்க ஊர்ல இருந்து இந்தமாதிரி வேற யாரும் வராம போயிடுவாங்க அப்படின்னு சொல்லி வழிச்செலவுக்கு கொஞ்சம் பணமும் கொடுத்து அனுப்பிடறாரு. வீடு எரிஞ்சு போச்சே அதுக்கு என்ன பதில்ன்னு எல்லாரும் கேட்டதும், எரிஞ்ச வீடு யாரோடது. நம்ம சகோதரனோட வீடு இல்லையா... அதனால ஒரு வீட்டுக்காரங்க செங்கல் கொண்டுவரட்டும். இன்னொரு வீட்டுக்காரங்க சிமெண்ட் கொண்டு வரட்டும். இன்னொருத்தர் மண்ணு கொண்டு வரட்டும். நாம எல்லாருமா சேர்ந்து நம்ம கைக்காசைப் போட்டு வீடுகட்டிக் கொடுத்துடுவோம் அப்படின்னு சொல்றாரு... இந்த தீர்ப்பை என்னன்னு சொல்லுவீங்க. இதுவல்லவோ நீதி... இவரல்லவோ தர்மப் பிரபுன்னு சொல்லுவோம் இல்லையா..? அப்படிப் பார்க்கும்போது இந்தியாதானங்க இந்த விஷயத்துல முதல் இடத்துல இருக்காங்க. இந்த பிரச்னைக்கான முழு பெருமையும் நம்ம ஆளுங்களுக்குத் தான கொடுக்கணும். அதை விட்டுட்டு எல்லா பெருமையையும் அமெரிக்காக்காரனுக்கே கொடுத்தா அதுல என்னங்க நியாயம் இருக்கு..?

சார் உங்களோட உணர்வைப் புரிஞ்சிக்கறேன். ஆனா நீங்க சொல்றதை முழுசா ஏத்துக்க முடியலையே.

ஆண்டர்சன் (குறுக்கிட்டு) . அதாவது போபால் சம்பவம் ஒரு அழகான பூத்தையல் கோலம் மாதிரிங்க. அந்த கோலத்துக்கு எது காரணம்? ஊசியா..? நூலா..? அந்தத் துணியான்னு கேட்டா என்ன பதில் சொல்ல முடியும். ஊசி தனியா இருந்தா கோலம் வந்திருக்குமா..? நூல் தனியா இருந்தான் கோலம் வந்திருக்குமா..? ஊசியும் நூலும் சேர்ந்திருந்து துணி இல்லாம இருந்தா மட்டும் கோலம் வந்திருக்குமா..? மூணுமேதான் காரணம் இல்லையா..? அதுமாதிரிதான். இதுவும்.

ஆண் : அழகா சொல்லிட்டீங்க சார். இப்ப உங்க சந்தேகம் தீர்ந்திருக்கும் அப்படின்னு நினைக்கறேன். ஓ.கே. நாம அடுத்த கண்டெஸ்டண்டைக் கூப்பிடுவோம். அதுக்கு முன்னால சின்ன கமர்ஷியல் பிரேக். நாங்களே சொல்லி சொல்லி அலுத்துப் போச்சு. நீங்க சொல்லுங்க சார்...

ஆண்டர்சன் : பாருங்க

சிங்ஜி : பாருங்க...

அத்வானிஜி : பார்த்துக்கிட்டே இருங்க.

(தொடரும்)

போபால் - 3

மெத்தில் ஐஸோ சயனைட் சோதனை

முதலில் எலியின் மீது...

அடுத்ததாக முயலின் மீது...

இறுதியாக இந்திய மக்களின் மீது.

கண்டறியப்பட்ட உண்மைகள் :

1. சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது எலி, முயல் போலவே மனிதர்களும் இறந்தார்கள்.

2. எலி, முயல் மீது செய்த சோதனைக்கு யாரிடமும் நாம் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கவில்லை. அது போலவே இந்திய சாம்பிள்கள் மீது செய்யும் பரிசோதனைக்கும் யாரிடமும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

பிரேக் முடிந்து ஷோ ஆரம்பிக்கிறது.

ஆண் (ஆண்டர்சனை நோக்கி) : எப்படி இதெல்லாம் உங்களால முடிஞ்சது? ஏதாவது ரூம் போட்டு யோசிப்பீங்களா..?

சேச்சே... அதெல்லாம் இல்லை. எல்லாம் தானா வர்றதுதான்.

எல்லாமே நீங்க எதிர்பார்த்தமாதிரியே நடந்துச்சா..? இல்லைன்னா கூடுதலாவோ குறைவாவோ இருந்துச்சா...?

ஆக்சுவல்லி நாங்க விரும்பினதைவிட கொஞ்சம் கம்மின்னுதான் சொல்லணும். நீங்களே பாருங்களேன். நடந்த சம்பவங்களைச் சொல்ல நிறைய பேர் உயிரோட இருக்காங்க. அது உண்மையிலயே நாங்க எதிர்பார்க்காததுதான். அங்க பூச்சிக் கொல்லி தயாரிக்கப் பயன்படுத்தின பொருள் ஒருவகையான சயனைட்தான். அதை சுவாசிச்சும் இத்தனை பேர் உயிரோட இருக்காங்கன்னா அது பெரிய ஆச்சரியம்தான்.

ஓ... கூண்டோட கைலாசத்தைத்தான் எதிர்பார்த்திருந்தீங்க இல்லையா..?

ஆமாம். ஆமாம். கரெக்டா சொன்னீங்க. கூண்டோட கைலாசம்.

அடுத்த தடவை இந்தத் தப்பு இல்லாம பார்த்துப்பீங்க இல்லையா..?

நிச்சயமா. இதுல இன்னொரு விஷயமும் இருக்கு. இந்த ஃபேக்டரியை போபால்ல ஆரம்பிச்சது தப்பா போச்சு. இதையே தமிழ் நாட்டுல ஆரம்பிச்சு இப்ப நடத்தின கூத்தையெல்லாம் செஞ்சிருந்தா, இன மானப் போராளிகள் ரொம்பவும் உற்சாகமா வட இந்திய சதி, ஆரிய சதி அப்படிச் சொல்லி இதை பெரிய லெவல்ல கொண்டுபோயிருப்பாங்க. தப்புப் பண்ணிட்டோம்.

சிங்ஜி : நல்ல யோசனையாத்தான் இருக்கு. இப்பயும் ஒண்ணும் கெட்டுப் போயிடலையே. நம்மால் நிச்சயம் முடியும். எனக்கு அந்த நம்பிக்கை நிறையவே இருக்கு.

சரி... இந்த சாதனையை எப்படி செஞ்சீங்க. நேயர்களுக்கு விரிவாச் சொன்னீங்கன்னா ரொம்பவும் பயனுள்ளதா இருக்கும். நாலு இடங்கள்ல அவங்களும் செஞ்சு பார்க்க வசதியா இருக்கும்.

உண்மையிலயே இந்த மாதிரியான விஷயங்களையெல்லாம் லீவ் இட் டு தி எக்ஸ்பர்ட்ஸ் அப்படிங்கறதுதான் சரியா இருக்கும். அவங்களாலதான் இது மாதிரி பெரிய அளவுல ப்ரொஃபஷனலா செய்ய முடியும். சின்னச் சின்ன அளவுல செய்ய ஆரம்பிச்சா செய்யறவங்களே அதுல மாட்டிக்க வேண்டி வந்துடும். அது நல்லதல்ல. அதனால இதையெல்லாம் நாங்க எப்படிச் செஞ்சோம்னு தெரிஞ்சிக்கோங்க. நீங்களா செஞ்சு பார்க்காதீங்க. அப்படியே ஏதவது செஞ்சுதான் ஆகணும்னா எங்களுக்கு ஒரு மெயில் தட்டிவிடுங்க. நாங்களே எல்லாத்தையும் அருமையா செஞ்சு கொடுக்கறோம். சரி நான் எப்படி செஞ்சோம்ங்கறதை சொல்றேன்.

மொதல்ல நாம என்ன செய்யப் போறோம் அப்படிங்கறதை நாசூக்கா, கவுரவமா சொல்லணும். அதாவது நமக்கு கொள்ளை லாபம் சம்பாதிக்கணும்னு ஆசை இருந்தா அதை நேரடியா சொல்லக் கூடாது. உலகத்துல மக்கள் பசியால வாடறாங்க. உணவுத் தட்டுப்பாடு அதிகமா இருக்கு. அதை நாங்க போக்கப் போறோம் அப்படின்னு பாலிஷா சொல்லணும்.

ஆரம்பமே பிரமாதமா இருக்கே.

இதுக்கே ஆச்சரியப்பட்டா எப்படி. இன்னும் போகப்போக எவ்வளவோ இருக்கு. உணவு உற்பத்தியை அதிகரிக்கறதுதான் நம்ம இலக்குன்னு சொல்லிட்டோம் இல்லையா. அதை எப்படி நடத்தறது?

பெரிய ஏரிகள், குளங்களை வெட்டி அல்லது தரிசு நிலத்துல நீர்ப்பாசன வசதியைச் செஞ்சு அது மூலமா செய்யலாம் இல்லையா..?

அது ஓல்ட் ஃபேஷன். அதுவும்போக, அதுக்கெல்லாம் நிறைய மேன் பவர் தேவைப்படும். நமக்கு நிறைய மனிதர்கள் இந்த உலகத்துல இருக்கவேண்டிய அவசியமே கிடையது. நமக்கு எடுபிடி வேலை செய்ய நாலு பேர் இருந்தாப் போதும். அதோடு நாம எதையும் விஞ்ஞானபூர்வமா புதுமையா செய்யணும். உணவு உற்பத்தியையே எடுத்துக்கிட்டா விளையற பயிர்ல பாதிக்கு மேல பூச்சிகள் சாப்பிட்டு அழிச்சிடுது. இங்க நான் பயன்படுத்தற வார்த்தைகளை கவனமா பார்க்கணும். உண்மையிலயே பூச்சிகள் பயிர்கள், இலை செடிகளைத் தின்னு வாழக்கூடியவை. அதனோட சர்வைவல் சார்ந்த ஒரு சாதாரண விஷயம்தான். ஆனா அதை அப்படி எளிமையா சொல்லக்கூடாது. பூச்சிகள் நம்மளோட எதிரி அப்படின்னு சொல்லணும். மனுஷன் நட்டு வளக்கற பயிர்களை அது சாப்பிட்டு அழிச்சிடுது. மனுஷனுக்குக் கிடைக்காம போயிடுது. அதைத் தடுக்க என்ன பண்ணனும்?

வேப்ப இலைக் கரசல் இல்லைன்னா சாணி, சாம்பல் கரைசலைத் தெளிக்கணும்... பூச்சிகள்லாம் பயந்து அலறி அடிச்சு ஓடிப் போயிடும்.

அங்கதான் நீங்க தப்பு பண்ணறீங்க. பூச்சியை விரட்டினா போதாது. அது மறுபடியும் கொஞ்ச நாள் கழிச்சு வந்துடும். அதனால ஒரேயடியா அழிச்சிடணும். அதுக்கு என்ன தேவை? சக்தி வாய்ந்த பூச்சிக்கொல்லி தேவை. அதைத்தான் நாங்க தயாரிக்கப் போறோம்னு களத்துல குதிச்சோம். சக்தி வாய்ந்த உரத்தைக் கண்டுபிடிச்சோம்.

நீங்களே இதையெல்லாம் செஞ்சீங்களா..?

அதுக்கு அவசியமே இல்லை. இந்த உலகத்துல காசு இருந்தா போதும் எது வேணும்னாலும் கிடைக்கும். உரம் தயாரிக்கணும்னா நாலு விஞ்ஞானிகளுக்கு கொஞ்சம் தவிடும் புண்ணாக்கும் வெச்சாப் போதும்... மள மளன்னு குடிச்சிட்டு நமக்கு பாலா கொடுத்துடுவாங்க. நாங்க அதைத்தான் செஞ்சோம். நாலு விஞ்ஞானிகளைக் கூப்பிட்டு கொறைஞ்ச விலையில உரம் தயாரிப்பது எப்படின்னு கேட்டோம். மணி மணியா யோசனை சொன்னாங்க. அதன்படி மெத்தில் ஐஸோ சயனைட்ன்னு ஒரு விஷம். அதை வெச்சு உரம் தயாரிச்சா கொள்ளை லாபம் கிடைக்கும் அப்படின்னு சொன்னாங்க. வேற முறையிலயும் அந்த பூச்சி மருந்தைத் தயாரிக்க முடியும். ஆனா அதுக்கெல்லாம் காசு ரொம்ப செலவாகும். அதனால மெத்தில் ஐஸோ சயனைட் வெச்சே தயாரிக்கறதுன்னு முடிவு பண்ணினோம்.

ரொம்பவும் அழகாச் சொன்னீங்க. ஆனா, அந்த பூச்சிக் கொல்லி நிறுவனத்தை எங்க நாட்டுல ஆரம்பிக்கணும்னு எப்படி தோணிச்சிது. எங்க மக்களோட கடின உழைப்பா… வியாபாரத்துக்கு இங்க இருந்த அழகான சூழலா..? எங்க தேசம் மேல அக்கறையா..? எது காரணமா இருந்தது.

(நடுவர்கள் மூவரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். கேள்வி கேட்டவருக்கு தான் ஏதாவது தவறாகச் சொல்லிவிட்டோமோ என்று குழப்பம் ஏற்படுகிறது. அதன் பிறகு தன் ஆடை எங்காவது கிழிந்துவிட்டதா என்று சுற்று முற்றும் பார்க்கிறார். ஒன்றும் இல்லை என்றதும் ஆண்டர்சனையே குழப்பத்துடன் உற்றுப் பார்க்கிறார்)

ஆண்டர்சன் (சிரிப்பை அடக்க முடியாமல்) : இந்தியர்களுக்கு நிறைய நகைச்சுவை உணர்ச்சி உண்டுன்னு சொன்னாங்க. ஆனா இந்த அளவுக்கு இருக்கும்னு நினைச்சே பார்க்கலை. குனிஞ்சு கொடுக்கறவன் முதுகுல தான தம்பி ஏற முடியும். சரி… விஷயத்துக்கு வர்றேன். விஞ்ஞானிங்க சக்தி வாய்ந்த உரத்தைக் கண்டுபிடிச்சிட்டாங்க. அதோட தயாரிப்பு செலவும் ரொம்பக் கம்மி. ஆனா அதுல ஒரு பெரிய பிரச்னை இருந்தது. அந்த தொழிற்சாலைல இருந்து கேஸ் லீக் ஆயிடிச்சின்னா மனுஷங்க எல்லாம் பூச்சி மாதிரியே சொத் சொத்னு செத்து விழுந்திடுவாங்க. போபால்ல கூட நீங்க பார்த்திருப்பீங்களே. நீங்க காட்டின ஷார்ட் ஃபிலிம்ல கூட பார்த்தோமே... தெருல, ரயில்வே ஸ்டேஷன்ல, மைதானத்துல கொத்துக் கொத்தா செத்துக் கிடந்தாங்களே... என்ன அற்புதமான காட்சி. தாந்தேயோட இன்ஃப்ர்னோல வர்ற மாதிரி ஹைலி ஆர்ட்டிஸ்டிக்... என்சாண்டிங் விஷுவல்ஸ்.

அப்போ அது அவ்வளவு மோசமானதுன்னு உங்களுக்கு மொதல்லயே தெரியுமா..?

ஆமா... அதுல என்ன சந்தேகம்? அதனாலதான் இந்தியாவுல அதை ஆரம்பிக்கணும்னு முடிவு செஞ்சோம்.

இல்லை உங்க நிறுவனத்தோட மருத்துவர்களெல்லாம் வாயுக் கசிவு ஏற்பட்டு எல்லாரும் வாந்தி எடுத்து மயங்கி விழ ஆரம்பிச்சப்ப, அந்த வாயு ரொம்பவும் பாவம். ஒண்ணுமே செய்யாது. கொஞ்ச நேரம் எரிச்சல் இருக்கும் அம்புட்டுத்தான் அப்படின்னு சொன்னாங்களே.

பின்ன எல்லாரும் செத்துத்தான் போவாங்கன்னு ஓப்பனா சொல்ல முடியுமா என்ன? அதுவும் போக நாங்க இன்னொன்னு நினைச்சிருந்தோம். நச்சு வாயுவினால மக்கள் இறக்கலை. இந்தியர்கள் சரியா சாப்பிடறதில்லை. சுத்தமா இருக்கறதில்லை. குளிக்கறதில்லை. நிறைய சாராயம் குடிக்கறாங்க. அதனாலதான் வாயு உள்ல போனதும் தாங்க முடியலை. செத்துட்டாங்க. அப்படின்னு ஏதாவது சொல்லலாமான்னு தான் நினைச்சோம்.

மானினிய மன்மோகன் சிங் ஜி : மே பி. அதுகூடக் காரணமா இருந்திருக்கலாம்.

(ஆண்டர்சன் சிரித்தபடியே) ஆனா இறந்தவங்களோட எண்ணிக்கை ரொம்பவும் அதிகமா இருந்ததுனால அப்படிச் சொல்ல முடியாம போச்சு.

ஆனா அமெரிக்காவில ஹூஸ்டனிலயும் இதே தொழிற்சாலையை கட்டியிருந்தீங்களே. அங்க எந்த பிரச்னையும் வரலியே..?

எப்படி வரும்? அங்கதான் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு அளவுல இருந்ததே. மொதல்ல அந்த எம்.ஐ.சி. 4.5 டிகிரியிலதான் இருந்தாகணும் அதனால அதைச் சுத்தி குளிர் பதன ஏற்பாடு செய்திருந்தோம். அதையும் தாண்டி வாயு கசிஞ்சா அதுல உள்ள நச்சுப் பொருள் எல்லாம் எரிஞ்சு போகற மாதிரி சிம்னி ஏற்பாடு செய்திருந்தோம். அப்பறம் காஸ்டிக் சோடான்னு ஒண்ணு இருக்கு. அதைத் தூவினா இந்த வாயுல இருக்கற நச்சு எல்லாம் கரைஞ்சு போயிடும். இப்படி நிறைய அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அழகா செஞ்சு வெச்சிருக்கோம். அதுமட்டுமில்லாமல் இந்த ஃபேக்டரிக்கு பக்கத்துல குறிப்பிட்ட மைல் தொலைவுக்கு குடிமக்கள் வசிக்கக் கூடாதுன்னு சொல்லியிருந்தோம். எல்லாமே பக்காவா இருந்தது.

இந்த ஏற்பாடெல்லாம் போபால்ல செய்யலியா..?

செஞ்சிருந்தோம். ஆனா உலுல்லாகாட்டிக்காக செஞ்சிருந்தோம்.

அப்படின்னா..?

பாக்கறதுக்கு என்னமோ பெரிய பந்தோபஸ்து மாதிரி தெரியும். ஆனா உள்ள எல்லாம் பொக்கா இருக்கும். இப்போ உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்றேன். பாதுகாப்புக் கருவிகள் சரியா இயங்கலை அதனாலதான் இவ்வளவு பேர் செத்துட்டாங்கன்னு சொல்றாங்க இல்லையா. உண்மை என்னன்னா அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒழுங்கா இருந்திருந்தாலும் இந்த அழிவைத் தடுத்திருக்க முடியாது. ஏன்னா நாங்க ஆரம்பத்துலயே அப்படித்தான் டிஸைன் பண்ணியிருந்தோம்.

அது எப்படி முடிஞ்சது?

அது ரொம்ப ஈஸி. மொதல் வேலையா இந்த நிறுவனத்தோட அதிகக் கட்டுப்பாடு எங்க கிட்டத்தான் இருக்கணும்னு முடிவு பண்ணினோம்.

அந்நிய நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில ஆரம்பிக்கும்போது 49 சதவிகிதத்துக்கு மேல வெச்சிருக்கக்கூடாதுன்னு சட்டம் இருக்கே.

ஆமாம் இருக்கு. அதுக்கு என்ன இப்போ.

அப்ப உங்கிட்ட அதிக அதிகாரம் எப்படி வரும்.

ஏன் வராது. 51 சதவிகிதப் பங்குகளை இந்தியர்கள் வாங்கினாலும் அவங்களும் எங்க ஆளாத்தான் இருப்பாங்க. அதுமட்டுமில்லாம இந்த போபால் விஷயத்துல நாங்க இன்னொன்னு செஞ்சோம். இந்த டெக்னாலஜி ரொம்பவும் ஒசந்தது. அது இந்தியர்களுக்குத் தெரியாது. அதனால எங்க கை ஓங்கி இருந்தாத்தான் சரியா செய்ய முடியும்னு சொல்லி 50.9 சதவித அதிகாரத்தை நாங்க எடுத்துட்டோம்.

இந்திய அதிகாரிகள், அரசியல்வாதிகள் கேள்வி கேட்கலியா..? அவங்களை எப்படி சமாளிச்சீங்க.

சில பேர் கேஷாவே கொடுத்துடுங்கன்னு கேட்டாங்க. சிலபேர் மது மாது வேணும்னு கேட்டாங்க. அவங்க கேட்டதைக் கொடுத்தோம்.

அப்போ, டபுள் எம்.ஏ. வேலை பார்த்து வேலையை கச்சிதமா முடிச்சிட்டீங்க.

அப்படிச் சொல்ல முடியாது. நாய்க்கு எலும்புத் துண்டு போடற மாதிரின்னு தான் அதைச் சொல்லணும். நாம எந்த அளவுக்கு எலும்புத் துண்டு போடறோமோ அந்த அளவுக்கு விசுவாசமா இருக்கும். அதுவும் போக, இந்தியர்கள் மேல பழியைப் போடறது ரொம்ப ஈஸி. ஃபேக்டரியைச் சுத்தி வீடுகள் இருந்தது. அதனாலதான் நிறைய பேர் செத்துட்டாங்கன்னு சொல்லி ஈஸியா நாங்க தப்பிச்சிட முடியும்னு எங்களுக்கு ஆரம்பத்துலயே தெரியும். ஆனா ஒண்ணு மட்டும் இங்க கட்டாயம் சொல்லியாகணும். உங்க அரசியல் தலைவர்கள் மட்டும் இல்லைன்னா இதை எங்களால இவ்வளவு அழகா செஞ்சிருக்கவே முடியாது.

அவங்க என்ன பண்ணினாங்க.

போபால் ஃபேக்டரில கொஞ்ச நாளாவே பிரச்னை பெரிசாகிட்டு வர ஆரம்பிச்சது. சின்னச் சின்னதா நிறைய கேஸ் லீக் விபத்துகள் நடந்துச்சு. ஒண்ணு ரெண்டு பேர் செத்துட்டாங்க. நிறைய பேருக்கு உடம்புல நிறைய காயங்கள் ஏற்பட்டுச்சு. உங்க ஊர் பத்திரிகைக்காரர் கூட அழகா ஒரு விஷயம் சொன்னார்… போபால் ஒரு எரிமலையின் மேலே இருக்கிறது அப்படின்னு.

யாரும் அதைப் பார்த்து பயப்படலியா.? எந்த நடவடிகையும் எடுக்கலியா..?

இல்லை நடவடிக்கை எடுத்தோமே. போபால்ல கேஸ் லீக் ஆகற விஷயமும் அதனால வர்ற பாதிப்புகளும் தெரிய வந்ததும் எங்களோட இன் ஜினியர்கள் டீம் ஒண்ணை அனுப்பி எல்லாத்தையும் நல்லா சோதிக்கச் சொன்னோம்.

உங்க ஊர்ல இருந்தே வரச் சொல்லியிருந்தீங்களா..?

ஆமா அமெரிக்கால இருந்தே வரவைச்சிருந்தோம்.

அவங்க பார்த்துட்டு என்ன சொன்னாங்க.

ஆமா, ஃபேக்டரி மிகவும் மோசமான நிலையிலதான் இருக்கு. இந்த இந்த ஏற்பாடுகளை பலப்படுத்தணும்னு சொன்னாங்க. அவங்க கொடுத்த ரிப்போர்ட் படி அப்படியே பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பல மடங்கு அதிகரிச்சிட்டோம்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிச்சீங்களா..? அப்பறம் எப்படி இந்த அளவுக்கு மக்கள் செத்தாங்க.

நான் ஏற்பாடுகளை அதிகரிச்சேன்னுதான் சொன்னேன். எங்கேன்ன்னு சொல்லலியே… போபால்ல கிடைச்ச ஆய்வு முடிவுகளை வெச்சு ஹூஸ்டன்ல ஃபேக்டரில பாதுகாப்பை பலப்படுத்தினோம்.

எக்சலண்ட். இதை இதை இதைத்தான் உங்க கிட்ட எதிர்பார்த்தேன்.

ஊணிணிடூண் டூஞுச்ணூண tடஞுட்ண்ஞுடூதிஞுண். இடூஞுதிஞுணூ டூஞுச்ணூண ஞூணூணிட் ணிtடஞுணூண் (ஃபூல்ஸ் லேர்ன் தெம்செல்வ்ஸ். க்ளவர் லேர்ன் ஃப்ரம் அதர்ஸ்)ன்னு சும்மாவா சொன்னாங்க.

ஆடூணிணிஞீதூ ஞூணிணிடூண் ஞீணிண’t ஞுதிஞுண டூஞுச்ணூண ஞூணூணிட் tடஞுட்ண்ஞுடூதிஞுண் ன்னும் கூடவே ஒண்ணு சேர்த்துக்கலாம்.

க்ரேட்… க்ரேட். போபால்ல ஆரம்பத்துல நடந்த சின்னச் சின்ன விபத்துகளைப் பார்த்து இந்திய அரசு எதுவும் செய்யலியா..? பத்திரிகையில கூட அபாயம்னு செய்தி வந்ததா சொல்லியிருந்தீங்களே…

நான் மொதல்லியே இது ஒரு டீம் எஃபர்ட்ன்னு சொன்னேனே. அது வெறும் பேச்சுக்காகச் சொன்னது இல்லை. ஃபேக்டரி அபாய நிலைல இருக்கு. மக்களோட உயிர் எல்லாம் அபாயத்துல இருக்குன்னு செய்தி வந்ததும் ஒரு அமைச்சர் அழகா சொன்னாரு... இது என்ன செங்கல்லா... கருங்கல்லா... தூக்கி இங்க இருந்து அங்க வைக்க அப்படின்னாரு. அதுவும்போக இந்திய அரசும் ஒரு கமிஷனை அனுப்பி தொழிற்சாலையை சோதிக்க ஏற்பாடு பண்ணிச்சிது. அவங்க வந்து பார்த்துட்டு, வாங்க வேண்டியதை வாங்கிட்டு, பேஷ் பேஷ் ரொம்ப நன்னருக்கு அப்படின்னு சர்டிஃபிகேட் கொடுத்துட்டாங்க. இது எல்லாத்துக்கும் மேல ஃபேக்டரியைச் சுத்தி குடிசை போட்டுட்டு வசிச்சவங்களுக்கு அந்த இடத்துக்கு பட்டா போட்டுக் கொடுத்தாரு பாருங்க, அது தாங்க மாஸ்டர் ஸ்ட்ரோக். உண்மையிலயே அந்த விபத்துல அத்தனை பேர் சாக ஒரு அழகான வாய்ப்பை அதுதாங்க ஏற்படுத்திக் கொடுத்துச்சு.

பட்டா போட்டுக் கொடுத்தாங்களா..?

ஆமாம். தேர்தல்ல ஜெயிக்க வோட்டு வேணுமே. அன்னாடங் காய்ச்சிங்களுக்கு இப்படி ஏதாவது செஞ்சு கொடுத்த அவங்க மட்டுமில்லை அவங்களோட தலைமுறைகளே நமக்கு விசுவசமா இருக்குமே.

அபாயகரமான ஃபேக்டரிக்கு பக்கத்துல எப்படி பட்டா போட்டுக் கொடுத்தாங்க?

சிங்ஜி : அங்க இருக்கறவங்க செத்தா நமக்கு என்ன கவலைங்க? அந்த விபத்துல செத்தவங்க சாகாமலேயே இருந்திடப் போறாங்களா என்ன..? இல்லைன்னா உயிரோட இருந்தபோது இந்தியாவுக்கு ஒலிம்பிக்ல தங்கப்பதக்கமும் விஞ்ஞானத்துல நோபல் பரிசுமா வாங்கிக் கொடுத்துடப் போறாங்க. மூக்கு முட்ட மூணு வேளை தின்னுட்டு, காடு கரைய நாசப்படுத்தி போய்ச் சேர்ந்திருக்கப் போறவங்க தான. என்ன இப்ப கொஞ்சம் முன்னாலயே போயிட்டாங்க. பொதுவா நீங்க எந்தப் பிரச்னையையும் பாஸிட்டிவ் ஆங்கிள்ல பாக்கணும். ஒருத்தருக்கு ஒரு கை போச்சுன்னா... ஒரு கை போயிடிச்சுன்னு சொல்லக் கூடாது. இன்னொரு கை இருக்கே அப்படின்னு சொல்லணும்.

அதுவும் போயிடிச்சின்னா..?

ரெண்டு கால் இருக்கேன்னு சொல்லணும்’

அதுவும் போயிடிச்சின்னா..?

என்ன கேள்வி இது..? அதான் உயிர் இருக்கேன்னு சொல்லணும்.

அதுவும் போயிடிச்சின்னா..?

ஆஹா. விடமாட்டீங்க போல இருக்கே. இந்த உலக பந்தங்கள்ல இருந்தும் துன்பங்கள்ல இருந்தும் விடுதலை அடைஞ்சிட்டாருன்னு பிளேட்டை அப்படியே ஆன்மிகமாக்கிடணும்.

அப்படிக் குத்துங்க… இதுவல்லவோ தத்துவக் குத்து... யப்பா... எங்கயோ போறீங்க (மன்மோகனின் கையைப் பிடித்து முத்தமிடுகிறார்).

ஒண்ணும் இல்லை. இங்கயேதான் இருக்கேன். மேடம் சொல்றவரை இங்கயேதான் இருப்பேன். கவலையே படாதீங்க.

ஆண்டர்சன் சார் நீங்க இது பற்றி என்ன நினைக்கறீங்க?

நான் என்ன சொல்ல... இப்படியான ஒரு அருமையான பதிலை ஈஸ்டர்ன் ஃபிலாசஃபி ரத்தத்துல ஊறின ஒருத்தராலதான் சொல்ல முடியும். ஐ கேன் ஜஸ்ட் வொண்டர். ஹேட்ஸ் ஆஃப் மிஸ்டர் மன்மோகன் ஹேட்ஸ் ஆஃப். ஆனா, நாங்க இந்த பிரச்னையை வேற கோணத்துல பார்த்தோம். இப்ப இந்திய மக்கள் தொகையையே எடுத்துக்கோங்க. மொத்தம் 100 கோடிக்கும் மேல இருக்கும். அதுல முப்பதாயிரம் பேர் செத்ததா அன் அஃபிஷியலா சொல்றாங்க. அது உண்மைன்னே வெச்சுக்கிட்டாலும் 100 கோடில 30 ஆயிரம்ங்கறது .00003 சதவிகிதம் தான். அதாவது ஒரு மனுஷனோட கால்ல, ஒரு முள்ளுச் செடியோட இளம் முள்ளு லேசா வருடிக் கொடுத்துட்டுப் போற மாதிரிதான் அது. யாருக்கும் எந்த பாதிப்பும் கிடையாது. பட்டா போட்டுக் கொடுத்தது அந்த ஃபேக்டரி அபாயகரமானது இல்லைன்னு சொல்லவைக்க நாங்க எடுத்த முயற்சிகளோட ஒரு அங்கம்தான். எங்க விளம்பரத்துல கூட ஒரு விஞ்ஞானி சாக்லேட்டை சப்பிச் சாப்பிடற மாதிரி இந்த உரத்தை எடுத்து நாக்குல வெச்சு காட்டறமாதிரி விளம்பரம் செஞ்சிருந்தோம். அதைப் பார்த்துட்டு நிறைய பேர் எடுத்து சாப்பிட்டாங்க என்னவோ தெரியாது. ஆனா இந்த ஃபேக்டரினால எந்த பிரச்னையும் கிடையாதுன்னு இந்திய அரசு கற்பூரம் ஏத்தி அணைச்சு சத்தியம் பண்ணிச்சிது. அதுதான் எங்களுக்கு ரொம்பப் பெரிய பலமா இருந்துச்சு.

மானினிய மன்மோகன் சிங்ஜி : நீங்க எங்களை ரொம்பவே புகழறீங்க. நாங்க எங்க கடமையைத்தான் செஞ்சோம்.

ஆண்டர்சன் : அது சரிதான். ஆனா இந்தக் காலத்துல யார் அப்படி விசுவாசமா அர்ப்பண உணர்வோட செயல்படறாங்க சொல்லுங்க?

சிங்ஜி : நீங்க கூட எவ்வளவோ அருமையான விஷயங்களைச் செஞ்சிருக்கீங்களே. குறிப்பிட்ட அளவுக்கு மேல விக்காதுன்னு தெரிஞ்சும் எக்கச்சக்கமா தயாரிச்சு சேமிச்சு வெச்சீங்களே. அமெரிக்கா, ஐரோப்பாலல்லாம் 2 டன்னுக்கு மேல சேமிச்சு வைக்கக்கூடாது சொல்ற ஒரு பொருளை 90 டன்னுக்கு மேல தயாரிச்சு ஜம்னு அடுக்கி வெச்சீங்களே அதை யாரால பீட் பண்ண முடியும் சொல்லுங்க? அதுவும்போக அபாயமான வேதிப் பொருட்களை ஒரே பெரிய டேங்க்ல வெச்சிருக்கக்கூடாது. சின்ன சின்ன கண்டெய்னர்லதான் வெச்சிருக்கணும்னு சொன்னதை அழகா மீறியிருந்தீங்களே.

ஆண்டர்சன் : யெஸ் யூ ஆர் ரைட். அதுக்கான முழு கிரிடிட்டும் எங்களுக்குத்தான் கிடைக்கணும்.

சிங்ஜி : அது மட்டுமா, செலவைக் குறைக்கறேன் பேர்வழின்னு பாதுகாப்பு ஏற்பாடுகளை மொத்தமா முடக்கி வெச்சீங்களே...

ஆண் : பாதுகாப்பு ஏற்பாடுங்களைக் குறைச்சாங்களா..? சொல்லவே இல்லியே?

சிங்ஜி: அங்கதாங்க அமெரிக்கர்களோட எக்சலன்ஸி இருக்கு. அவங்களோட இன்ஜினியர்கள் வந்து சோதிச்சுப் பார்த்துட்டு ஒரு அறிக்கை கொடுத்தாங்க இல்லையா. அதைப் பார்த்ததும் ரெண்டு முக்கியமான வேலைங்களைச் செஞ்சாங்க. மொதலாவதா அமெரிக்க ஃபேக்டரில பாதுகாப்பு ஏற்பாடை பலப்படுத்தினாங்க. அதே கையோட இந்திய ஃபேக்டரில பாதுகாப்பு ஏற்பாட்டைக் குறைச்சாங்க.

ஆண் : அப்படியா..? அது ஏன்..?

சிங்ஜி : செலவு அதிகம் இல்லையா..? அவங்க என்ன தர்ம சத்திரமா நடத்தறாங்க. செலவு அதிகம்னு சொல்லி நிறைய பேரை வேலையைவிட்டுத் தூக்கினாங்க. பாதுகாப்புக் கருவிகள் எல்லாத்தையும் முடக்கிப் போட்டாங்க. எல்லாம் சரியா இருக்கான்னு ஒரு மணி நேரத்துக்கு ஒருதடவை செய்ய வேண்டிய சோதனைகளை ரெண்டு மணி நேரத்துக்கு ஒன்ணா ஆக்கினாங்க. ஏற்கெனவே நிறைய தயாரிச்சு வெச்சிட்டதுனால கொஞ்ச நாளாவே தயாரிப்பை நிறுத்தி வெச்சிருந்தாங்க. டைனசர்தான் தூங்கிட்டு இருக்கே. வேலில எதுக்கு மின்சாரம் அப்படின்னு ரெஃப்ரிஜிரேஷனை நிறுத்தி வெச்சாங்க. இதுல ஒரு சுவாரசியமான விஷயம் என்னன்னா, 610 அப்படிங்கற டேங்க்ல இருந்துதான் வாயு கசிஞ்சு இந்த விபத்து ஏற்பட்டுச்சு. அதை குளிர்ச்சியா வெச்சுக்க தேவைப்பட்ட குளிர்பதன வாயுவோட செலவு என்ன தெரியுமா..? ஒரு நாளைக்கு வெறும் சுமார் 1700 ரூபாய்தான்.

அந்த கம்பெனி மூலமா கோடிக்கணக்குல லாபம் கிடைச்சிருக்குமே?

ஆமாம். லாபத்தை இங்கதான் செலவழிக்கணும்... மறு முதலீடு செய்யணும்னு எந்த நிபந்தனையும் கிடையாதே..?

இப்ப இந்த சம்பவத்தையெல்லாம் கேள்விப்படுற அமெரிக்க மக்கள் அங்க மட்டும் நேர்மையா நடந்துகறீங்க. வேற நாடுகள்ல இப்படி நடந்துக்கறீங்களேன்னு கேள்வி கேட்க மாட்டாங்களா..?

அது எப்படி அவங்க கேள்வி கேட்பாங்க? பொறுப்பையெல்லாம் இந்திய அதிகாரிகள்கிட்ட விட்டாச்சே?

ஆனா, அதுல இருந்து வர்ற லாபத்தை அமெரிக்காவுக்குத்தான எடுத்துட்டுப் போயிருக்கீங்க..?

இது என்ன கேள்வி? உலகம் பூரா இதுதான நடக்குது. விவசாயி உழுது, நீர் பாய்ச்சி, காவல் காத்து பயிரை வளர்ப்பான். அறுவடை ஆனதும் அந்த தானிய மூட்டையெல்லாம் பன்ணையார் வீட்டுக்குத்தான போய்ச் சேரும். பட்டினி உனக்கு... பால் பாயாசம் எனக்கு... இதுதான உலக நியதி.

அது இல்லைங்க... கணவன் ஸ்ட்ரிக்டா இருந்தா நான் பத்தினியா இருப்பேன். கொஞ்சம் அசடா இருந்தா ஊர் மேய்வேன்னு சொன்னா அந்த பொண்ணுக்கு வேற பேருதான வைப்பாங்க. சட்டம் எங்க ஸ்ட்ரிக்டா இருக்கோ அங்க மட்டும் அதைப் பணிஞ்சு நடந்துப்போம். இல்லாத இடத்துல லஞ்சம் கொடுப்போம். பாதுகாப்பு ஏற்பாடை கவனிக்க மாட்டோம்னு சொன்னா திட்டமாட்டாங்களா..? சிங்கம் எல்லா இடத்துலயுமே சிங்கமாத்தான இருக்கணும். குகையை விட்டு வெளிய வந்தா பீயைத் தின்னுவேன்னு சொன்னா அது அசிங்கம் இல்லையா..? கார்ப்பரேட் எத்திக்ஸ்ன்னு ஒன்ணு கிடையாதான்னு கேட்க மாட்டாங்களா..?

சிங்ஜி : அப்படியெல்லாம் அவங்க எதுக்கு உணர்ச்சிவசப்படப் போறாங்க?

இல்லை இந்தத் தம்பி கேட்கற கேள்வி சரிதான். அவங்களை நாங்க எப்படி சமாளிப்போம்னா இந்திய மக்கள் ரொம்பவும் அலட்சியமானவங்க. வெவரம் பத்தாது. என்ன சொன்னாலும் கேட்கமாட்டாங்க. குழந்தைகள் படிக்கற ஸ்கூலுக்கு ஓலைக் குடிசையைப் போடுவாங்க. தீப்பிடிச்சி எரிஞ்சிடுமேன்னு பயப்படமாட்டாங்க. பைக் ஓட்டறதுன்னா ஹெல்மெட் போட்டுக்க மாட்டாங்க. கார் ஓட்டறதுன்னா ஏர் பேக் வெச்சுக்க மாட்டாங்க. எதை எடுத்தாலும் ரொம்ப அலட்சியமாத்தான் இருப்பாங்க. அது அவங்களுக்கு பெரிய பிரச்னையையும் கொண்டு வந்ததில்லை.

போபால் ஃபேக்டரியையே எடுத்துக்கோங்களேன். அங்க வேலை பார்க்கறவங்களே முகத்துக்கு முகமூடி போட்டுக்கச் சொன்னாக் கேட்க மாட்டாங்க. கைக்கு கிளவுஸ் போட்டுக்கச் சொன்னா கேட்க மாட்டாங்க. அவங்களுக்கே விஷயத்தைச் சொல்லிப் புரியவைக்க முடியாது அப்படிங்கறபோது மக்களுக்கு என்னத்தைச் சொல்லிப் புரிய வைக்கறது. உலகத்துல மூணு வழிகள் இருக்கு. சரியான வழி. தப்பான வழி. மூணாவதா இந்தியர்களின் வழி அப்படின்னு ஒண்ணு இருக்கு… அமெரிக்க மதிப்பீடுகள், சட்ட திட்டங்கள், வழி முறைகள் எதுவுமே அங்க செல்லுபடியாகாது... சிங்கத்தோட வாழ்க்கை முறை வேற... பன்னியோட வாழ்க்கை முறை வேற இல்லியா... அப்படின்னு சொல்லி சமாளிச்சிடுவோம். இப்ப கூட அமெரிக்கால போய் யார் கிட்டயாவது போபால் பற்றிக் கேளுங்க... நாம என்ன பன்ண முடியும். நல்லது பண்ணத்தான் போனோம். இப்படி ஆகிடிச்சேன்னுதான் சொல்லுவாங்க.

அங்கதான் நிக்கிறீங்க ஆண்டர்சன் சார்.

அத்வானிஜி : அதுவும்போக அமெரிக்காக்காரங்க மேல இதுல எந்தத் தப்பும் கிடையாது. ஒருவேளை டிசம்பர் ஒண்ணாந்தேதி பாதுகாப்பு ஏற்பாடுகளை நிறுத்தியிருந்து, டிசம்பர் 2ம் தேதி இந்த விபத்து நடந்திருந்தா பாதுகாப்பு ஏற்பாட்டை நிறுத்தினதுனாலதான் பிரச்னை வந்துச்சு. அதுக்குக் காரணமான அமெரிக்கக்காரங்கதான் பதில் சொல்லியாகணும்னு நாம் சொல்ல முடியும். ஆனால், பாதுகாப்பு ஏற்பாடுகள் அந்த ஃபேக்டரி ஆரம்பிச்ச அன்னிலேருந்தே இப்படித்தான் இருக்கு. குழாய்யெல்லாம் துருப்பிடிச்சா மாத்த மாட்டாங்க. அலாரம் வேலை செய்யாது. மீட்டர் ரீடிங் சரியா தெரியாது. பிரமாண்ட கொள்கலத்துலதான் எல்லாத்தையும் வெச்சிருந்தாங்க. அப்பப்போ வாயு கசியும். யாராவது ஒண்ணு ரெண்டு பேர் சாவாங்க. சிலருக்கு கண்ணு போகும். இதெல்லாம் நாலைஞ்சு வருஷமா வழக்கமா நடந்துட்டுத்தான இருந்தது. அதனால, அப்படியே வண்டி ஓடிடும்னு அவங்க நினைச்சிட்டாங்க. இப்படி நடக்கும்னு யாருக்குத் தெரியும் சொல்லுங்க.

சிங்ஜி : சரியாச் சொன்னீங்க. அதுவும்போக நம்ம நாட்டுக்கு இது மாதிரியான டெக்னாலஜிகள் கட்டாயம் தேவைதான். இப்போ நம்ம நாட்டோட வளர்ச்சி விகிதம் 6.1 ஆ இருக்குது. விவசாயத்துறையில வளர்ச்சி 4.2 ஆ இருக்குது. உரம், பூச்சி கொல்லியெல்லாம் வர்றதுக்கு முன்னால நம்மளோட உற்பத்தி 4 கோடியே 12 லட்சத்து, 111 டன்தான். அதெல்லாம் வந்ததுக்குப் பிறகு, 34 கோடியே 45 லட்சத்து 27 ஆயிரத்து 678 டன் உற்பத்தி செஞ்சிருக்கோம். அதெல்லாம் எப்படி சாத்தியமாச்சுது. இது போன்ற உரத்தையும் பூச்சிக் கொல்லியையும் பயன்படுத்தினதுனாலதான.

ஆனா நிறைய விவசாயிங்க தற்கொலை செய்யறாங்க. விலைவாசியெல்லாம் ஏறிக்கிட்டே போகுது. இந்தியால நிறைய பேர் பட்டினியாகவே இருக்காங்க. உற்பத்தி அதிகரிச்ச பிறகும் இதெல்லாம் ஏன் நடக்குது..?

சுய நலத்தோட யோசிக்கக் கூடாது தம்பி. நாம நமக்கா உற்பத்தி செய்யறோம். எல்லாம் ஏற்றுமதிக்காகத்தான செய்யறோம். டாலர் டாலரா நமக்குக் கிடைக்கும். அந்நியச் செலாவணி பெருகும். பண வீக்கம் குறையும். அமெரிக்காக்காரங்க மாதிரி நாலு பேர் நல்லா இருக்கறதுக்காக நாம கஷ்டப்படறதுல தப்பே இல்லை. அதனால, போபால் மாதிரியான சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். நாம வளர்ச்சிப் பாதையில கம்பீரமா திரும்பிப் பார்க்காம ஓடிக்கிட்டே இருக்கணும்.

எல்லா சந்தேகத்துக்கும் நல்லா தெளிவா பதில் சொல்லிட்டீங்க. ஓ.கே. ஒரு காலர் லைன்ல இருக்காரு. அவர் கிட்டப் பேசுவோம். ஹலோ... சொல்லுங்க சார், எங்க இருந்து பேசறீங்க.

மதுரைல இருந்து பால் பாண்டி பேசறேன்.

சொல்லுங்க பால் பாண்டி...

போபால் பிரச்னைக்கு யார் காரணம் அப்படிங்கற அருமையான தலைப்புல நிகழ்ச்சி நடத்தறதுக்கு மொதல்ல வாழ்த்துக்கள் சார்.

நன்றி. உங்களை மாதிரி ஆட்களோட வாழ்த்துகள் இருக்கறதுனாலதா எங்க வண்டி நல்ல ஓடுது. அப்படியே ப்ரொட்யூசருக்குப் போன் போட்டு நம்மளைப் பத்தி நாலு வார்த்தை சொல்லி வையுங்க.

என்னங்க இது அந்த தவில்காரர் காதுல விழற மாதிரி சொல்லுன்னு சொல்ற மாதிரி சொல்றீங்களே... ஓ.கே. சொல்லி வைக்கறேன். சரி விஷயத்துக்கு வர்றேன். இந்த பிரச்னைக்கு முக்கிய காரணம் யாருன்னு பார்த்தா, அந்த தொழிற்சாலைல வேலை பார்த்ததுல அதிருப்தியுற்ற ஒரு தொழிலாளிதான் அந்த சதியைப் பண்ணியிருக்காரு.

அதெப்படி அவ்வளவு கரெக்டா சொல்றீங்க..?

ஆண்டர்சன் சாரோட ஆளுங்க அப்படித்தான சொல்லியிருக்காங்க. அவங்க சொன்னா அது சரியாத்தான் இருக்கும்.

ஆனா அவங்களால அதை நிரூபிக்க முடியலியே..?

அது பெரிய மேட்டரே இல்லை. இப்ப இந்த கதையில ஒரு ட்விஸ்ட் வருதா இல்லையா..? அதுதாங்க முக்கியம். இவனைக் கேட்டா அவனைக் காரணம்னு சொல்லணும். அவனைக் கேட்டா அடுத்தவனைக் காரணம்னு சொல்லணும். இப்படியே மாறி மாறி வட்டமா நின்னு சொல்லிக்கிட்டே இருக்கணும்.

நீங்க சொல்றதுலயும் ஒரு பாயிண்ட் இருக்கத்தான் செய்யுது. மனசுல குறிச்சு வெச்சுக்கறேன். நிகழ்ச்சில பங்கெடுத்ததுக்கு ரொம்ப நன்றி.

ஆண் : சார்... இது ரொம்ப வித்தியாசமான கதையா இருக்கே. இதைக் கொஞ்சம் விளக்குங்களேன்.

ஆண்டர்சன் : அதாவது டிசம்பர் 2 அன்னிக்கு வழக்கம் போல க்ளீனிங் வேலை நடந்திருக்குது. ரெஃப்ரிஜெரேஷனுக்கு செலவு அதிகம் ஆகும் அப்படிங்கறதுனால டேங்குகளைக் குளிர்ச்சியா வைக்க பக்கத்துல ஓடற பைப்புல நிறைய தண்ணிய பாய்ச்சிட்டிருந்தாங்க.

அது ரொம்பத் தப்பு இல்லையா..?

சிக்கனம் தம்பி. சிக்கனம். இந்தியன் லோக்கல் டெக்னாலஜி அது. இந்த விஷயத்துல எல்லாம் நாங்க கலாசார, பண்பாட்டு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். அதன்படி தண்ணியப் பைப்ல ஊத்தி விட்டபோது தப்பித் தவறி வேதிப் பொருள் இருந்த டேங்குக்குள்ள தண்ணி போயிடிச்சு. உடனே வேதிவினை ஆரம்பிச்சு நச்சுப் புகை வெளியேற ஆரம்பிச்சிச்சு.

ஆனா, யாரோ ஒருத்தர் வேணும்னே தண்ணியை டேங்குக்க்குள்ள ஊத்தினதா சொன்னீங்களே.

ஆமாம். அது நாங்க தப்பிக்க சொன்ன கதைதான். வேணும்னே சதி செய்யாம தண்ணி அந்தப் பக்கம் போக வாய்ப்பே கிடையாதுன்னு நாங்க அடிச்சி சொன்னோம். இந்திய அரசும் எங்களுக்கு அதுல உதவி பண்ணினாங்க. எங்க இன் ஜினியர்களை விட்டு நடுநிலையாளர்கள், பத்திரிகைக்காரர்கள், மக்கள் மத்தியில் சோதனை நடத்துவோம். சுத்தி உள்ள பைப்ல தண்ணி பாய்ச்சினா அது டேங்குக்குள்ள போகாதுன்னு செஞ்சு காட்டறோம் அபப்டின்னு சொன்னோம். இந்திய அதிகாரிகள் அதுக்கு அனுமதி தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க.

மாட்டேன்னு சொன்னாங்களா..? ஏன்..?

ஏன்னா அப்படி செஞ்சிருந்தா எங்க மேலதான் தப்புங்கறது தெரிஞ்சிருக்குமே. யாரோ ஒருத்தன் வேணும்னே தண்ணியை திறந்துவிட்டுட்டான்னு நாங்க சொல்றது பொய்னு ஆயிடுமே. அதனால, நாங்க உங்க வீட்டுக்குள்ள வந்து சோதனை போடறோம்னு வீராப்பா சவால் விட்டோம். தப்பே செய்யாத அவங்க எங்களைக் காப்பாத்தறதுக்காக ஏதோ அவங்க பேர்ல தப்பு இருக்கற மாதிரி முடியாதுன்னு சொன்னாங்க. இப்ப உலகத்துக்கு எங்க மேல தப்பு இல்லைங்கறது உறுதியாகிடிச்சு. இது மாதிரி அவங்க செஞ்சு கொடுத்ததையெல்லாம் நினைச்சா உடம்பெல்லாம் ஃபுல்லா புல்லரிக்குது தம்பி.

ஓ.கே. சார். உங்க கிட்ட இன்னும் நிறைய கிடைக்கும்னு தெரியுது. அடுத்ததா நாம ஒரு போட்டியாளரை அழைப்போம். அதுக்கு முன்னால சின்ன கமர்ஷியல் பிரேக்...


(தொடரும்)