ஒரு பிராமணப் பெண்ணிற்குத் திருமணம் நடத்தப்படுகிறது. அதே நேரத்தில் ஒரு ஆடு மேய்க்கும் பெண்ணுக்கும் திருமணம் நடக்கிறது. சில மாதங்கள் கழிந்ததும் இரு பெண்களது கணவன்களும் எதிர்பாராதவிதமாக இறந்துவிடுகிறார்கள். பிராமணர்கள் ஊர்கூடி பிராமணப் பெண்ணின் தலையை மழித்து குங்குமத்தை அழித்து கை வளையல்களை உடைத்து வெள்ளைப் புடவை கட்ட வைக்கிறார்கள். ஆடு மேய்ப்பவர்களோ இறந்து போனவனின் தம்பியையே அந்தப் பெண்ணிற்கு திருமணம் செய்து வைக்கிறார்கள். மறுநாள் அவர்கள் அக்ரஹாரத்தின் பின்புறம் வழியாக ஆடுகளை ஓட்டிக் கொண்டு போகிறார்கள். அக்ரஹாரத்தில் விதவையாக்கப்பட்ட பெண்ணின் தாய் தந்தையும் சிறு வயது தங்கையும் நதிக்கரை முருகன் கோவிலில் இருந்து திரும்பி வருகிறார்கள். ஆடுகளை ஆற்றின் மறுகரைக்குப் பத்திக் கொண்டிருக்கையில் பக்கத்தில் இருப்பவரிடம் தன் மருமகளுக்கு தன் இரண்டாவது மகனைத் திருமணம் செய்து வைத்தது பற்றி சொல்கிறார் ஆடு மேய்ப்பவர். மருமகளும் மகனும் ஆடுகளை ஓட்டிக் கொண்டு சிரித்தபடியே மறுகரையை அடைகிறார்கள். மீண்டும் ஆடுகளை இக்கரைக்கு பத்திக்கொண்டு வருகிறார்கள். வரும் ஆடுகளில் ஒன்றை பிராமண விதவையின் தங்கை தொட்டுக் கும்பிடப் போகிறாள். அவளது அம்மா, அடி அசடே... ஆடைப் போயி யாராவது தொட்டுக் கும்பிடுவாளா என்று கடிந்து கொள்கிறாள். அதற்கு சிறுமி, நாம வளக்கற பசுவை மட்டும் தொட்டுக் கும்பிடறோமோ என்று கேட்கிறாள்.
நாமெல்லாம் உசந்த சாதியை சேர்ந்தவா... அதனால நாம வளக்கற பசுவும் உசந்தது. அவாள்ளாம் தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவா... அவா வளக்கறதை எல்லாம் நாம தொடவே கூடாது என்று சொல்கிறாள். அத்திம்பேர் இறந்து போனதும் அக்காவை மொட்டை அடிச்சு மூலைல உக்காத்தி வெச்சிருக்கற நம்மளைவிட அந்த ஆட்டுக்கார அக்காவுக்கு கல்யாணம் பண்ணி வெச்சிருக்காளே அவா தானேம்மா நம்மளை விட உசந்தவா... அவாளை ஏன் தாழ்ந்தசாதின்னு சொல்றாய்... என்று கேட்கிறது குழந்தை. தான் கேட்க முடியாததை தன் மகள் கேட்டதை நினைத்து அவளை வாரி எடுத்து அழுதபடியே முத்தமிடுகிறாள் அம்மா. முன்னால் நடந்து செல்லும் சிறுமியின் அப்பா குழந்தையின் அந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாமல் ஸ்தம்பித்துப் போய் நிற்கிறார். ஆடுகள் துள்ளிக் குதித்தபடியே அவர்களைக் கடந்து போகிறது. கூடவே புதிதாகத் திருமணமான பெண்ணும் அவளது கணவனும் சிரித்து விளையாடியபடியே ஆடுகளின் பின்னால் போய் மறைகிறார்கள்.
No comments:
Post a Comment