இருட்டில் இருந்து வெளிச்சத்தை நோக்கி...

Saturday, July 24, 2010

போபால் - 1




தாரை தப்பட்டைகளும் டிரம்ஸ் டிரெம்பெட்களும் முழங்க நிகழ்ச்சி ஆரம்பிக்கிறது. வண்ணச் சுழல் விளக்குகள் அலங்கரிக்கும் மேடையில் பள பள உடையுடன் ஒரு பெண் ஒய்யாரமாக நடந்து வருகிறார். அவருக்குப் பின்னாலேயே கோட் சூட் போட்ட ஒருவர் துள்ளிக் குதித்து வருகிறார். இருவரும் அரங்கின் மையப் பகுதிக்கு வந்து அரங்கத்தினரை வணங்குகிறார்கள்.

பெண் அறிவிப்பாளர் : வெல்கம் டு தி ஒன் அண்ட் ஒன்லி... நம்பர் ஒன் துடப்பக் கட்டையின்... நம்பர் ஒன் ஷோ..!

ஆண் அறிவிப்பாளர் : வந்தனமய்யா வந்தனம். வந்த சனமெல்லாம் குந்தணும்.

கிண்ணத்தில இருக்கு சந்தனம்... பூசிக்கிட்டு குந்தணும்... (பின்னணி இசையில் உறுமி மேளம் வெளுத்து வாங்குகிறது).

ஆண் (இசையை சட்டென்று நிறுத்தச் சொல்லி) : போதும் இதுக்கு மேல அடிச்சா (பக்கத்தில் நிற்கும் பெண்ணைப் பார்த்து) அக்கா, கரகத்தை எடுத்து வெச்சு ஆட ஆரம்பிச்சிடுவாங்க. அதனால நாம ஷோவுக்குப் போவோம்...

பெண் (புடவையை இடுப்பில் செருகியபடி சண்டைக்கு போகும் பாணியில்) : என்னது நான் உனக்கு அக்காவா..? பொக்கை வாயை பல் செட் வெச்சி மறைச்சிருக்க. தலைக்கு வெச்சிருக்கற விக்குக்கே நரைச்சுப் போச்சின்னு டை அடிச்சிட்டு வந்திருக்க. இன்னிக்கோ நாளைக்கோன்னு இழுத்துட்டு இருக்கற உனக்கு நான் அக்காவா..?

ஆண் : ஐய்யோ... கேமரா ஓடிட்டிருக்கு. எல்லாரும் பாக்கறாங்க. ஷோவை ஆரம்பிப்போம்.

பெண் : ஷோ கெடக்கட்டும். இதுக்கு நீ பதில் சொல்லு. நான் உனக்கு அக்காவா..?

ஆண் : அப்ப உன்னை கரகாட்டக்காரின்னு சொன்னதுல கோபம் இல்லையா... நல்லதாப் போச்சு.

பெண் : அது அடுத்த எபிசோட். என்னை அக்கான்னு நீ எப்படிச் சொல்லலாம்? அதுக்கு மொதல்ல பதில் சொல்லு.

ஆண் : ஐய்யோ சரி விடு... அக்கான்னு சொன்னது தப்புத்தான். இனிமே ஆயான்னே கூப்பிடறேன். என்னை மன்னிச்சிடு.

பெண், செல்லக் கோபத்துடன் அடிக்க விரைகிறார். ஆண் பொய்யாகப் பயந்தபடியே ஓடுகிறார். சிறிது நேர கொஞ்சலுக்குப் பிறகு இருவரும் கட்டிப் பிடித்துக் கொள்கிறார்கள். சரி, நம்ம பஞ்சாயத்தை அப்பறம் வெச்சுப்போம். நாம நேரா நிகழ்ச்சிக்குப் போவோம். மொதல்ல லெட் அஸ் வெல்கம் அவர் சீஃப் கெஸ்ட்ஸ்.

பின்னால் இருக்கும் படுதாவின் மீது ஒளி பாய்ச்சப்படுகிறது. இசைக்கருவிகள் உச்சத்தில் முழங்குகின்றன. மெள்ள திரை விலகுகிறது. கோட் சூட் அணிந்தவர் கம்பீரமாக நடந்து வருகிறார். அவருக்குப் பின்னால் இருவர் வருகிறார்கள். அந்த இருவர் வரும்விதத்தைப் பார்த்தால் கோட் சூட் அணிந்தவரின் அடப்பக்காரர் போல் நடை உடையில் அவ்வளவு பணிவு.

அறிவிப்பாளர்கள், சிறப்பு விருந்தினர்களுக்கு பொக்கே கொடுக்கிறார்கள்.

ஆண் (மூவரில் ஒருவரை முன்னால் வரச் சொல்கிறார்) : நம் இன்றைய சிறப்பு விருந்தினர்களில் முதலில் யூனியன் கார்பைடு நிறுவனத்தின் சேர்மனை அறிமுகம் செய்வதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம் (இசைக்கருவிகள் காது அதிரும் அளவுக்கு முழங்குகின்றன).

யூனியன் கார்பைடு சேர்மனை உங்களுக்கெல்லாம் நல்லாத் தெரிஞ்சிருக்கும். ஆயிரக்கணக்கானவர்களைச் சர்வ சாதாரணமாகக் கொன்னவர். லட்சக்கணக்கானவங்களை கண்ணு தெரியாதவங்களாகவும், சுவாசிக்க முடியாதவங்களாகவும் பைத்தியமாகவும் ஆக்கியவர். தி கிரேட் வாரென் ஆண்டர்சன். (ஆண்டர்சன் தேர்தலில் வெற்றி பெற்ற தலைவர் மக்கள் கூட்டத்தின் முன் கைகளை உற்சாகமாக அசைத்து வாழ்த்துத் தெரிவிப்பதுபோல் பார்வையாளர்களைப் பார்த்து கைகளை அசைக்கிறார். கூட்டம் கை தட்டி வரவேற்கிறது).

அடுத்தது நம் புண்ணிய பூமியாம் பாரத தேசத்தின் தவப்புதல்வர்... சீக்கிய சிங்கம்... மானினிய ஸ்ரீமான் மன்மோகன் சிங்ஜி...

பின்னணியில் பல்லே பல்லே... என்று சீக்கிய பாங்ரா இசை ஒலிக்கிறது. மன்மோகன் சிங்ஜி தலை குனிந்து வரவேற்பை ஏற்றுக் கொள்கிறார்.

அடுத்தது நம் இந்து சாம்ராஜ்ஜியத்தின் நவீன சிவாஜி... ரத யாத்திரை மன்னன்... ஆதர்ணிய அத்வானிஜி...

பின்னணியில் ஓம் என்ற முழக்கம்... சங்கு ஒன்று உரத்து ஒலிக்கிறது.

அத்வானிஜி கூட்டத்தினரைப் பார்த்து வணக்கம் சொல்கிறார்.

ஓ.கே. சார். இந்த நிகழ்ச்சிக்கு வந்து எங்களை கவுரவிச்சதுல ரொம்பவும் சந்தோஷம்.

உண்மையிலயே இந்த மாதிரி மக்களுக்கு மிகவும் அவசியமான நிகழ்ச்சியை நடத்தற உங்க தொலைக்காட்சி நிலையத்துக்கு நாங்கதான் நன்றி சொல்லணும்.

தேங்யூ சார்... தேங்யூ. சரி... ப்ளீஸ் டேக் யுவர் சீட்.

அவர்களை அழைத்துக் கொண்டு சென்று இருக்கையில் அமரவைக்கிறார்.

ஆண் (சக அறிவிப்பாளரைப் பார்த்து) : அக்கா... சீ... ஆயா... தப்பு தப்பு... ஏ பொண்ணே... இப்பச் சரியா..? (பெண் அவரை முறைக்கிறார்). உனக்கு போபால் தெரியுமா..?

பெண் : போபாலா அப்படின்னா..? எனக்கு கோபாலைத் தான் தெரியும்.

ஆண் : எது இந்த கோபால் பல்பொடியா..? அதெல்லாம் பல் தேய்க்கறவங்களுக்குத் தான தெரியும். ஓ... நீ விளம்பரங்கள்ல பார்த்திருப்ப இல்லை.

பெண் (அடிக்கக் கையை ஓங்கியபடியே) : அந்த கோபால் இல்லை... (சரோஜா தேவி ஸ்டைலில்) கோபால்... நீங்க இல்லைன்னா என்னால உயிர் வாழ முடியாது! அந்த கோபால்.

ஆண் : ஓ அந்த கோபாலா..? சரி. ஆனா நாம் இன்னிக்கு பாக்கறப்போறது போபால். அது பல்பொடியும் இல்லை... ஆளும் இல்லை... ஒரு இடம்.

பெண் : இடம்னா..?

ஆண் : இடம்னா இடம்தான்.

பெண் : அது தெரியும் டுபுக்கு... நாடா... மாநிலமா..? மாவட்டமா..?

ஆண் : குறுக்குக் கேள்வியெல்லாம் கேட்கக்கூடாது. டைரக்டர் சொல்லித் தர்றதை நான் சொல்றேன். பேசாம அதை கேட்கணும். சரியா..? கையைக் கட்டு (பெண், முன்னால் வந்து ஆணின் கையைக் கட்டுகிறார்) என் கையை இல்லை. உன் கையை. (பெண் தன் கையைக் கட்டிக் கொள்கிறார்). வாயில விரலை வை (விரல் சூப்பிக் கொள்வதுபோல் வைக்கிறார்) ஐய்யோ... ஐய்யோ... அப்படி இல்லம்மா (கையைக் கட்டிக் கொண்டு, ஆட்காட்டிவிரலை மட்டும் உதட்டில் வைத்து செய்து காட்டுகிறார். பெண்ணும் அப்படியே செய்கிறார்).

ஷோ முடியறவரை இப்படியே இருக்கணும். அசைஞ்சா கொன்னுப்புடுவேன்.

ஆண் (பார்வையாளர் பக்கம் திரும்பி) : போபால்ல ஆயிரக்கணக்கானவங்க செத்துப் போயி இன்னிக்கோட 27 வருடங்கள் ஆயிடிச்சு. அந்த சில்வர்+2 ஜூப்ளி கொண்டாட்டத்துக்காக நாம நடத்தப்போறதுதான் இந்த ஷோ. எல்லாரும் ஜோரா கை தட்டுங்க (அரங்குக்கு அழைத்து வரப்பட்ட பார்வையாளர்கள் தங்கள் மீது கேமரா திரும்பியதும் வாயெல்லாம் பல்லாக ஜோராகக் கை தட்டுகிறார்கள்) போபால் சம்பவம் பல பேருக்குத் தெரிஞ்சிருக்கும். அந்த நிகழ்வுக்கு யார் காரணம் அப்படிங்கறது தான் இன்னிக்கு நம்ம நிகழ்ச்சியோட தீம். அதுக்கு முன்னால நாம போபால்ல நடந்த சம்பவங்கள் சிலவற்றைப் பார்ப்போம் (திரையில் கிளிப்பிங்குகள் ஓடுகின்றன).

பிரமாண்ட தொழிற்சாலை... அதன் அடிக்கல் நாட்டு விழா... சந்தோஷமான பணியாளர்களின் குரூப் ஃபோட்டோ... ஃபேக்டரி காம்பவுன்ட் சுவரைத் தொட்டடுத்த இடத்தில் சேரிகள்... பயிர்களை நாசப்படுத்தும் பூச்சிகள். வேதனை தோய்ந்த விவசாயிகளின் முகங்கள்… விஞ்ஞானிகளின் ஆராய்ச்சி... புதிய வீரிய பூச்சிக் கொல்லி கண்டுபிடிப்பு... பூச்சிக் கொல்லியால் சாகும் பூச்சிகள். பச்சைப் பசேல் என்று காற்றில் தலை அசைக்கும் பயிர்கள். வாயெல்லாம் பல்லாக விவசாயிகள். ஆண்டர்சன் கையை உயர்த்தி வெற்றி என்று காட்டுகிறார்.

1984, டிசம்பர், 2-3... நச்சுப் புகை பரவும் காட்சிகள். மக்கள் அலறி ஓடும் காட்சிகள். பிணக்குவியல். தாயின் மார்பில் விழுந்து கிடக்கும் குழந்தை. வீட்டு வாசலில் விழுந்து கிடக்கும் முதியவர்கள்... வயிறு வீங்கி இறந்து கிடக்கும் ஆடு மாடுகள்… நிற்காமல் தொடரும் இருமல்கள்... முடிவற்று எரியும் சிதைகள்... குப்பை போல் லாரியில் அள்ளப்பட்டு வந்த பிணக்குவியலை ஒரே குழியில் போட்டுப் புதைக்கும் காட்சி ... இறந்து போனவர்களின் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்களின் அணிவகுப்பு... இறந்தவர்களின் எண்ணிக்கை... 3,287 என்று சப் டைட்டில் காட்டப்படுகிறது. ஆண்டர்சன் இரண்டு கைகைளையும் உயர்த்தி டபுள் வெற்றி என்று காட்டுகிறார்.

பூச்சிக் கொல்லியைச் சுவாசிப்பதால் துடிக்கும் பூச்சிகள்... நச்சு வாயுவை சுவாசித்ததால் திணறும் மனிதர்கள். நூற்றுக்கணக்கான பூச்சிகள் செத்து விழுந்து கிடக்கும் காட்சி. நூற்றுக்கணக்கில் மனிதர்கள் இறந்து கிடக்கும் காட்சி...என காட்சிகள் மாறி மாறிக் காட்டப்படுகின்றன. பொயட்டிக் ஜஸ்டிஸ்..? - என்ற கேள்வியுடன் அந்தக் குறும்படம் முடிகிறது.

ஆண்டர்சன் (எழுந்து நின்று கைகளைத் தட்டியபடியே) : அருமையான ப்ரசண்டேஷன்.

சிங்ஜி : சிந்தனையைத் தூண்டும் படம். மனுஷங்க நல்லா இருக்கறதுக்காக, அதைவிடக் கீழான பூச்சிகளைக் கொல்றதுல எந்தத் தப்புமே இல்லை. அதுமாதிரி மேலான மனிதர்களான அமெரிக்கர்களின் நலனுக்காக மத்தவங்களைக் கொல்றதுல தப்பே கிடையாது அப்படிங்கறதை அழகா காட்டியிருக்கீங்க.

ஆண்டர்சன் : சரியாச் சொன்னீங்க. ஆனா, சின்ன ஒரு மிஸ்டேக். இறந்தது சுமார் 3000 பேர் அப்படிங்கற டேட்டா தப்புன்னு நினைக்கறேன். எண்ணிக்கை ரொம்ப அதிகமாத்தான் இருக்கும். ஏன்னா ஒரு குடும்பத்துல ஒருத்தர் இறந்திருந்து மத்தவங்க தப்பிச்சிருந்தா அவங்க வந்து இன்னார் செத்துப் போயிட்டாருன்னு சொல்லுவாங்க. கணக்கு வெச்சுக்க முடியும். அம்மா இறந்துடாங்கன்னா அப்பா வந்து சொல்ல முடியும். குழந்தைகள் மட்டும் இறந்திருந்தா அப்பா அம்மா சேர்ந்து வந்து சொல்லியிருக்க முடியும். ஒரு குடும்பமே செத்திருந்தா யார் வந்து சொல்ல முடியும்.

ஆண் : அக்கம் பக்கத்து வீட்டுக்காரங்க வந்து சொல்லியிருக்கலாமே..?

ஆண்டர்சன் : அவங்களும்தான் செத்திருப்பாங்களே.

ஆண் : அப்போ செத்தவங்களோட எண்ணிக்கையை கண்டுபிடிக்கறது ரொம்பக் கஷ்டமாத்தான் இருந்திருக்கும். இல்லையா..? இப்படி நீங்களே நிறைய இருக்கும்னு சொன்னா நஷ்டஈடு அதிகம் கொடுக்க வேண்டியிருக்குமே.

ஆண்டர்சன் : அதெல்லாம் தேவையே இருக்காது. நிறைய பேர் செத்திருப்பாங்கன்னு சொல்றது சும்மா ஒரு ஆக்யுரஸி ஆஃப் டேட்டாவுக்காகத்தான். வளரும் நாடுகள்ல... அஃப்கோர்ஸ் எனக்கு இந்த வார்த்தையில அவ்வளவா உடன்பாடு கிடையாது. இந்த உலகத்துல வளர்ந்த நாடுகள்... வளரக் கூடாத நாடுகள் அப்படின்னு ரெண்டு பிரிவுதான் உண்டு. அந்த நாடுகள்ல இறக்கும்போது அதை நாம கண்டுக்க வேண்டியதே இல்லை.

சிங்ஜி : யெஸ்... ஹி இஸ் ரைட். உதாரணத்துக்கு டவ் கம்பெனியையே எடுத்துக்கோங்களேன். யூனியன் கார்பைடை அவங்க வாங்கிக்கிட்டாங்க. அப்போ கார்பப்ரேட் விதிகளின்படி எந்த நிறுவனத்தை வாங்கறோமோ அந்த நிறுவனத்தோட கடன்களையெல்லாம் நாமதான் அடைச்சாகணும். அதன்படி யூனியன் கார்பைடோட ஆஸ்பெஸ்டாஸ் கம்பெனி தொடர்பான வழக்குகளுக்கு கோடிக்கணக்குல நஷ்டஈட்டைக் கொடுத்திருக்காங்க. இத்தனைக்கும் அங்க யாருமே சாகலை. போபால்ல ஆயிரக்கணக்கானவங்க செத்திருக்காங்க. ஆனா நஷ்ட ஈடு கேட்டபோது டவ் கம்பெனிக்காரங்க அழகா, அது போன மாசம்... இது இந்த மாசம்... அப்படின்னு சொல்லிட்டாங்க. யாரை எங்க வைக்கணும்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும்.

ஆண்டர்சன் : அதுவும் போக நிவாரணத்தை நாங்க கொடுக்கப் போறதில்லையே. இந்திய அரசுதான கொடுக்கப் போறாங்க. அவங்க கிட்ட நிச்சயமா அதைச் சமாளிக்க நல்ல வழி இருக்கும், இல்லையா மிஸ்டர் மன்மோகன் ஜி.

சிங்ஜி : ஆமாம். இருக்கு இருக்கு. நிவாரணம் கேட்டு விண்ணப்பம் கொடுக்கறவங்க கிட்ட நீங்க சம்பவம் நடந்தபோது அங்கதான் இருந்தீங்கங்கறது என்ன ஆதாரம்னு ஒரு சிம்பிள் கேள்வி கேட்டாப் போறும். ப்ராப்ளம் சால்வ்ட். அவங்களால எப்படி நிரூபிக்க முடியும் சொல்லுங்க. புகைமூட்டத்துக்கு முன்னால நின்னு எடுத்த போட்டாவா அவங்க கிட்ட இருக்கும்?

ஆண் : அப்போ இந்திய அரசு நிவாரணம் தருவேன்னு அறிவிச்சிருக்கே. அதை எப்படிக் கொடுப்பாங்க.

மானினிய மன்மோகன் சிங்ஜி : அதையெல்லாம் கட்சிக்காரங்க பார்த்துப்பாங்க. எதுலயும் ஒரு நியாயம் தர்மம்னு இருக்கு இல்லையா..? தலைவர்கள் மட்டுமே கொள்ளை அடிச்சா போதுமா..? அடிமட்டத் தொண்டர்களுக்கும் ஒரு வாய்ப்பு வேணும் இல்லையா..?

ஆண் : ஆனா அவங்க பத்து லட்சம் பேர் நிவாரணம் கேட்டு விண்ணப்பிச்சதுல ஐஞ்சு லட்ச மனுவை நிராகரிச்சிட்டாங்களே… அது ஏன்?

ஆண்டர்சன் : ஆனாலும் உங்க ஊர்ல இந்த விஷயத்துல ரொம்பவே ஓவர்தாம்ப்பா. இலவச வேட்டி சேலைக்கு க்யூல நிக்கற மாதிரி எல்லாரும் நிவாரண முகாம்ல லைன் கட்டி நிக்க ஆரம்பிச்சிட்டாங்க. இன்னும் சிலரு செத்துப் போன ஒருத்தரோட உருவத்தை நாலு ஆங்கிள்ல போட்டோ எடுத்து நாலு பேருக்கான நிவாரணத்தை வாங்கிட்டிப் போயிட்டாருன்னு கேள்விப்பட்டேன். இதைவிட இன்னொரு வேடிக்கை என்னன்னா விபத்து நடந்த மறு நாளே ஊரே செத்துக் கிடக்குது… எங்க பார்த்தாலும் வாந்தி பேதி மயக்கம்னு கிடக்குது. திருடங்க நமக்கு நல்ல சான்ஸ் கிடைச்சதுன்னு வாசல்ல இறந்து கிடந்தவங்களை ஓரமா தள்ளி வெச்சுட்டு வீட்டுக்குள்ள புகுந்து இருந்ததையெல்லாம் திருடிட்டுப் போயிருக்காங்க.

ஆண் : இதெல்லாம் உண்மையிலயே நடந்ததா..?

ஆண்டர்சன் : யாருக்குத் தெரியும். சும்மா கொளுத்திப் போடவேண்டியதுதான். அப்பாவிங்களை இப்படி கொன்னுட்டீங்களேன்னு நாளைக்கு உலகத்துல எந்த மூலைல இருந்து யாராவது நாக்கைப் பிடுங்கற மாதிரி கேள்வி கேட்டுடக்கூடாது இல்லையா..? இந்த மாதிரி அப்பாவிங்களைப் பற்றி அப்பப்ப அவிழ்த்து விட்டுக் கொண்டே இருக்கணும்.

ஆண் : ஆனா யாரோ ஒருத்தர் கூடக் கேட்டாரே... பாதிக்கப்பட்டது உண்மையிலயே 1.5 லட்சம் பேருதான். ஆனா, ஐந்து லட்சம் பேருக்கு நிவாரணம் கொடுக்க முடிவு பண்ணியிருக்கு. இதனால உண்மையிலயே பாதிக்கப்பட்டவங்களுக்கு ரொம்பவும் குறைச்சலாத்தான் நஷ்டஈடு கிடைக்கும் அப்படின்னு சொல்றாரே.

மன்மோகன்சிங்ஜி : அவருக்கு அரசியல் தெரியாதுங்க. அப்படித்தான் பேசுவாரு. எங்கள் அரசு உண்மையிலயே பாதிக்கப்பட்ட பழைய காலனி முஸ்லிம் மக்களுக்கு மட்டுமில்லாமல் புதிய காலனியில இருக்கற இந்துக்களுக்கும் நஷ்ட ஈடு கொடுக்கறதைத் தாங்க முடியாம பொறாமையில அப்படிச் சொல்றாரு.

ஆண் (ஆண்டர்சனைப் பார்த்து) : அது எப்படி சார் உங்களால இவ்வளவு பெரிய சாதனையைச் செய்ய முடிஞ்சது.

ஆண்டர்சன் (கொஞ்சம் வெட்கப்பட்டபடியே) : ஓ நோ... நீங்க என்னை ரொம்பவே புகழறீங்க. அவ்வளவு பேர் செத்ததுக்கு நாங்க முக்கிய காரணம்னாலும் அது என் ஒருத்தனால மட்டுமே நடந்த காரியமில்லை. அது ஒரு டீம் எஃபர்ட். (மற்ற இரண்டு விருந்தினர்களை அழைத்து அவர்கள் தோளில் கையைப் போட்டு) உங்க நாட்டோட பிரதமரும், எதிர்கட்சித் தலைவரும் மட்டும் இல்லைன்னா இது நடந்திருக்கவே முடியாது. அதனால எனக்கு தர்ற பாராட்டுல பாதியை இவங்களுக்குக் கொடுக்கறதுதான் முறை (அவர்கள் இருவரும் மிகவும் பூரித்துப் போய் அந்த பாராட்டை தலை வணங்கி ஏற்றுக் கொள்கிறார்கள்).

அறிவிப்பாளர் : தாட்ஸ் தி ஸ்பிரிட். உங்களோட பெருந்தன்மையை நாங்க ரொம்பவும் பாராட்டறோம். அமெரிக்கா ஏன் உலகத்துல ஒரே வல்லரசா நிலைச்சு இருக்கு அப்படிங்கறதுக்கு இதைவிட வேற உதாரணமே தேவையில்லை. மேலும் மேலும் நீங்க இது மாதிரி நிறைய சாதனைகள் செய்ய எங்கள் நிலையத்தின் சார்பாகவும் தேசத்தின் சார்பாகவும் வாழ்த்துகிறோம்.

ஆண் அறிவிப்பாளர் திரும்பவும் மேடையின் மையப்பகுதிக்கு வருகிறார். பெண் பொம்மைபோல் கையைக் கட்டி வாயைப் பொத்திக் கொண்டு நிற்கிறார். ஆண் சிரித்தபடியே பரிதாபப்பட்டு, இனிமே ஒழுங்க இருப்பியா..? பெண் தலையை ஆட்டுகிறார். கோக்கு மாக்கா கேள்வி கேக்க மாட்டேன்னு சத்தியம் செய்.

பெண் : உன் மேல் சத்தியமா இனிமே உன்னை மாதிரி கேள்வி கேட்கமாட்டேன்.

ஆண் : ஆங்... அது..! (சட்டென்று திடுக்கிட்டு) என்ன சொன்ன..? என்ன மாதிரி கேள்வி கேட்கமாட்டியா..? அப்ப நான் கோக்கு மாக்காவா கேள்வி கேட்கறேன்?

பெண் : அதை நான் என் வாயால வேற சொல்லணுமா..? ஊருக்கே தெரியுமே அந்த சிதம்பர ரகசியம்.

ஆண் : ஓ.கே. நாம ஷோவுக்குப் போவோம். ஆக்சுவலா நம்ம சிறப்பு விருந்தினர்கள் மூவரையும் தொடர்பு கொண்டு போபால் சம்பவத்துக்கு யார் காரணம் அப்படின்னு ஒரு நிகழ்ச்சி நடத்தப் போறதா சொன்னபோது மூன்று பேருமே ஒரே குரல்ல சொன்னது இதுதான் : இது ஒரு டீம் எஃபர்ட். எங்களைப் பிரிச்சிப் பேசாதீங்க. நாங்க மூணு பேருமே ஒண்ணாத்தான் எல்லாத்தையும் செஞ்சோம். அதனால எதுவானாலும் நாங்க மூணு பேரும் ஒண்ணாத்தான் கூடிக் கலந்து பேசித்தான் சொல்லுவோம். அப்படின்னு சொல்லிட்டாங்க.

பொதுவா நிகழ்ச்சிங்கள்ல ரெண்டு கட்சிங்க எதிரும் புதிருமா நின்னு வாதாடுவாங்க. தங்கள் தரப்புத்தான் உசந்தது. அவங்க செய்ததுதான் சரின்னு சொல்லுவாங்க. அல்லது அவங்க மேல தப்பு இல்லை. அடுத்தவங்க மேலதான் தப்பு அப்படின்னு சொல்லுவாங்க. பட்டிமன்றம் வழக்காடு மன்றங்கள்ல எல்லாம் அப்படித்தான் நடக்கும். ஆனா இந்த நிகழ்ச்சியை அப்படி நடத்த வேண்டாம்னு சொல்லிட்டாங்க. ஏன்னா, பட்டிமன்றம் போன்ற நிகழ்ச்சியில யார் சிறப்பா வாதாடறாங்களோ அவங்க கட்சி ஜெயிச்சிட வாய்ப்பு இருக்கு. அங்க உண்மை இருக்கா இல்லை அப்படிங்கறது பெரிய விஷயமே இல்லை. வாதம் ஜெயிச்சிடும். அதனால, இவங்க மூணு பேருமே என்ன சொன்னாங்கன்னா, நாங்க உண்மையை மக்கள் மத்தியில எடுத்து வைக்கறோம். அவங்களே யார் காரணம் அப்படிங்கறதைத் தீர்மானிக்கட்டும் அப்படின்னு சொல்லிட்டாங்க. அதனால பார்வையாளர்களே... நிகழ்ச்சியை முழுசா பாருங்க. இங்க சொல்லப்படும் சம்பவங்களை நீங்களே அலசிப் பாருங்க. போபால் சம்பவத்துக்கு யார் காரணம் அப்படிங்கறதை 57576 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். பண்ணுங்க.

அப்பறம் இந்த மூன்று சிறப்பு விருந்தினர்கள் மட்டுமே பேசிட்டிருந்தா பத்தாது அப்படிங்கறதுனால உங்களை சந்தோஷப்படுத்த போபால் கேஸ் விபத்துல பாதிக்கப்பட்டவங்க நம்ம முன்னால வந்து தங்களோட கண்ணீர் கதையைச் சொல்லப் போறாங்க. யார் சொல்றது ரொம்பவும் விறுவிறுப்பா, உணர்ச்சிபூர்வமா, சுவாரசியமா இருக்கு... யார் சொன்னதைக் கேட்டதும் நமக்கு கண்ணுல தண்ணி வருது... ஐ மீன் கண்ணீர் வருதுன்னு பாருங்க. நான்காவது தரப்பா அவங்களும் ஆட்டத்துல உண்டு. சிறப்பு விருந்தினர்கள் யாருமே காரணமில்லை மக்கள்தான் காரணம்னு நினைச்சா அதையும் உங்க பதிலா அனுப்பலாம். மறுபடியும் சொல்றேன். போபால் ஸ்பேஸ் உங்க பேரு ஸ்பேஸ் யார் காரணம்னு நீங்க நினைக்கறீங்களோ அவங்களோட எண் அதை டைப் பண்ணி 57576 என்ற எண்ணுக்கு உடனே எஸ்.எம்.எஸ். அனுப்புங்க. ஜெயிக்கறவங்களுக்கு முதல் பரிசா என்ன தரலாம் ரதி... (பெண்ணைப் பார்த்துக் கேட்கிறார்).

ரதி : அந்த ஃபேக்டரி இருக்கற இடத்துக்கு ஒரு இன்பச் சுற்றுலா கூட்டிட்டுப் போகலாமா..? இரண்டு இரவுகள் மூன்று பகல்கள்... தங்குமிடம், சாப்பாடு எல்லாம் ஃப்ரீ. இல்லைன்னா அந்த ஃபேக்டரில தயாரிச்ச கேஸை ஒரு பாட்டில அடைச்சு உறிஞ்சு பார்க்கச் சொல்லிக் கொடுக்கலாமா..?

விருந்தினர்கள் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள்.

ஆண் : அருமையான ஐடியா..! நிச்சயமா உனக்கு இந்த பரிசு கிடைக்கட்டும்னு ஆண்டவனை நான் வேண்டிக்கறேன். ஓ.கே. லெட் அஸ் வெல்கம் அவர் ஃபர்ஸ்ட் எண்டர்டெய்னர்.

திரை மறைவில் இருந்து ஒரு சக்கர நாற்காலியை ஒருவர் தள்ளிக் கொண்டு வருகிறார். அதில் அமர்ந்திருப்பவர் எலும்பும் தோலுமாகக் காட்சியளிக்கிறார். நொடிக்கொரு தடவை இருமியபடியே இருக்கிறார். அரங்கின் மையப் பகுதிக்கு வந்ததும் விளக்குகளின் வெளிச்சம் தாங்க முடியாமல் கண்கள் கூசுகிறது. லேசாக கண்களில் கண்ணீர் முட்டிக் கொண்டு வருகிறது.

ஆண் : மீட் மிஸ்டர் அப்துல் (அவர் பக்கம் திரும்பிப் பார்த்து லேசாகத் திடுக்கிடுகிறார்). மிஸ்டர் அப்துல்... என்னது இது சின்னப்புள்ளைத் தனமா இருக்கு. நீங்க அழப்டாது. நீங்க சொல்றதைக் கேட்டு நாங்கதான் அழணும். நீங்களே அழுதுட்டு பிரைஸை வாங்கிட்டுப் போகலாம்னு பார்க்கறீங்களா..? அது ரொம்ப ரொம்பத் தப்பு. (லேசாக சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருப்பவரின் தோளில் தட்டிக் கொடுக்கிறார்) சரியா... ஆரம்பியுங்க... உங்க கதையை...

சக்கர நாற்காலியில் உட்கார்ந்திருப்பவர் எச்சிலோடு சேர்த்து சோகத்தையும் முழுங்கிக் கொள்கிறார் : அவரது கண்கள் சிறிது நேரம் சூன்யத்தையே வெறித்துப் பார்க்கின்றன. இருமல் பொத்துக் கொண்டு வருகிறது. அடக்கிக்கொள்கிறார் : அன்னிக்கு செத்தவங்க எல்லாம் புண்ணியம் செஞ்சவங்க. ஒரே நாள்ல உசிரு போயிடிச்சு. தப்பிப் பொழைச்சவங்க ஒவ்வொரு நாளும் செத்துக்கிட்டிருக்கோம்.

ஆண் : சம்பவம் நடந்த அன்னிக்கு நீங்க எங்க இருந்தீங்க..? உங்களுக்கு ஊரே போபால்தானா..? பொழைப்புக்காக அங்க போயிருந்தீங்களா..?

அப்துல் : நான் பொறந்தது வளர்ந்தது எல்லாமே போபால்லதான். நாசமாப் போன ஃபேக்டரிக்கு பக்கத்துலதான் குடிசை போட்டு வசித்துவந்தேன்.

ஆண் : என்ன வேலை பார்த்தீங்க. ஃபேக்டரியிலயே வேலை பார்த்தீங்களா..? இல்லைன்னா வேற வேலையா..?

அப்துல் : நாம் சமோசா, கச்சோரி, தஹி பரா (தயிர் வடை) வியாபாரம் பண்ணினேன்.

பெண் அறிவிப்பாளர் நாக்கைச் சப்புக் கொட்டுகிறார்.

அப்துல் : ஃபேக்டரி வாசல்லதான் காலைலயும் சாயந்திரமும் விப்பேன். அன்னிக்கும் அப்படித்தான் வித்துட்டு வீட்டுக்குத் திரும்பியிருந்தேன்.

ஆண் : வீட்ல யாரெல்லாம் இருந்தாங்க?

அப்துல் : நான், என் மனைவி, மகன் கலந்தர், மக முன்னி நாலுபேர் மட்டும் இருந்தோம்.

ஆண் : கேஸ் லீக் ஆனது அப்துல்லாவுக்கு எப்ப தெரிஞ்சது..? அப்ப அவரோட அனுபவம் எப்படி இருந்தது இதெல்லாம் தெரிஞ்சுக்கறதுக்கு முன்னால ஒரு சின்ன பி.... ரே... க்.

பெண் : எங்கயும் போயிடாதீங்க. பாருங்க பாருங்க பார்த்துக்கிட்டே இருங்க.

No comments:

Post a Comment