இருட்டில் இருந்து வெளிச்சத்தை நோக்கி...

Saturday, July 24, 2010

போய் வாருங்கள் தாத்தாவே..!



என்னுடைய தாத்தா இறந்துவிட்டார் என்று சொன்னதும் அனைவரும் கேட்ட முதல் கேள்வி 'என்ன வயது..? ' என்பதுதான். '92 ' என்றதும் பெரும்பாலானோருக்கு சிறிது ஆசுவாசம். கடமைகளை எல்லாம் முடித்துவிட்டு விடைபெற வேண்டிய நேரத்தில்தான் சென்றிருக்கிறார் என்று ஒரு ஆசுவாசம். ஆனால், என்னதான் வயதானாலும் ஒருவருடைய மரணம் என்பது பெரும்வலியை ஏற்படுத்தும் நிகழ்வுதான். முப்பது வயதுக்கும் மேலான நான் என் வாழ்வில் சந்திக்கும் முதல் மரணம். என்றென்றைக்குமாக ஒருவர் நம்மைவிட்டுப் போய்விடுகிறார் என்பது ஏற்படுத்தும் வெறுமை ஒரு கணம் என்னை உலுக்கிவிட்டது.

தாத்தா பற்றி நினைத்ததுமே என் மனதில் உருவாகும் சித்திரம், அவருடைய கையைப் பிடித்துக் கொண்டு அதிகாலையில் பழையாற்றுக்கு குளிக்க்கப் போவதுதான். நதிக்கரை முருகன் கோவிலின் கோட்டை போன்ற பிராகாரச் சுவர்கள் ஓரமாக நடந்து செல்கையில் சட்டென்று அணைக்கரையும் அரசமரத்தடிப் பிள்ளையாரும் பழையாறும் கண் முன் உறைந்த புகைப்படம் போல் உருக்கொள்ளும். மீனவர் ஒருவர் ஆற்றின் தேங்கிக் கிடக்கும் நீரில் தன் அன்றைய கடைசி வலையை வீசுவார். சாமி வந்தாச்சு இனிமே வீட்டுக்குத் திரும்ப வேண்டியதுதான் ' என்று சொல்லியபடியே வலையை இறுக்கிக் கட்டிக் கொண்டு கரையேறுவார். வலையில் சிக்கிய மீன்கள், வெள்ளிநிற உடல் துடிக்க ஒரு துளி நீருக்காகத் தவித்துக்கொண்டிருக்கும். 'தாத்தா... நீ சாமியா..? ' என்று கேட்பேன். லேசாகச் சிரிப்பார். 'இந்த மீனையெல்லாம் என்ன செய்வா..? ' 'கடல்ல கொண்டுபோய் விட்டுடுவா '. எனக்கு அதைக் கேட்க ரொம்ப சந்தோஷமாக இருக்கும். அவை விற்கப்பட்டுக் கொன்று தின்னப்படும் என்பது எனக்கு வெகு நாட்கள் கழித்தே தெரியவந்தது. ஆனால், தாத்தாவுடனான ஆரம்பகால அதிகாலைகளில் நான் மீன்களை கடலுக்கு மனநிறைவோடு அனுப்பிவந்தேன். மீனவர் தன் வலையை அணையின் பெரிய திட்டில் விரித்து துடிக்கும் மீன்களை ஒவ்வொன்றாகக் கூடைக்குள் போட்டுக் கொள்வார். மிகவும் சிறிய மீன்களை அவர் விட்டுச் சென்றுவிடுவார். நான் அதை எடுத்து கூடைக்குள் போடுவேன். தாத்தா பதறியபடி என்னைத் தடுத்து, அந்த குட்டி மீன்களை ஆற்றில் போடும்படிச் சொல்வார்.

போன ஜென்மத்துல பாபம் செஞ்சவாள்லாம் மீனா பொறப்பார்கள். அதிலயும் ரொம்ப பாவம் செஞ்சவா வலைல சிக்கற மீனாகப் பிறப்பா... என்று சொல்வார். கடலுக்குத்தான போறது என்று திரும்பக் கேட்பேன். எதுவும் பேசாமல் மவுனமாக ஆற்றுக்குள் இறங்குவார்.

குளித்து முடித்ததும் விபூதியைக் குழைத்து நெற்றியில் பூசிக் கொள்வார். எனக்கும் பூசிவிடுவார். வீட்டுப் பசுவின் சாணத்தை தானே உருண்டைகளாக உருட்டி, எரித்து, சல்லடையால் நன்றாகச் சலித்து பன்னீர் விட்டுக் கலந்த திருநீறு. அதன் வாசம் இன்னும் என் நாசியில் இருக்கிறது.

92 வயதில் தலையில் நரம்பு ஒன்று வெடித்து மரணத்தைத் தழுவிய அன்று காலையில் கூட அவர் ஆற்றில் குளிக்கத்தான் செய்தார். தன் ஆடைகளைத் தானே துவைத்துக் கொண்டார். அவர் கடைசி வரை மாறவில்லை. ஆனால் அவரைச் சுற்றி இருந்த உலகம் வெகுவாக மாறிவிட்டிருந்தது. முன்பெல்லாம் மாலை வேலைகளில் அக்ரஹாரத்தின் நடுவில் இருக்கும் உன்னி கிருஷ்ணன் கோவிலில் மாலைநேர தீபாராதனை நடைபெறும். மாலை ஆறு முப்பதுக்கு கோவிலில் மணி அடித்த அடுத்த நிமிடமே ஊரிலிருக்கும் அனைத்து நபர்களும் தாங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் வேலை எதுவானாலும் அதை அப்படியே போட்டுவிட்டு அவரவர் வீட்டு வாசலுக்கு வந்துவிடுவார்கள். சிறுவர்கள் விளையாட்டை, அது எவ்வளவு சுவாரசியமான கட்டமாக இருந்தாலும் நிறுத்திவிடுவோம். ஊர் நடுவில் இருக்கும் குழாயடியில் கை கால்களைக் கழுவிக்கொண்டு கோவிலுக்கு ஓடுவோம். கிராமத்தின் தலைவராக இருப்பவர் நைவேத்திய சாதனங்களுடன் கம்பீரமாக ராஜ நடை நடந்து செல்வார். எனது தாத்தாவும் கிராமத் தலைவராக இருந்திருக்கிறார். பட்டு வேட்டியுடுத்திக் கொண்டு நேரியலை இடுப்பில் கட்டிக் கொண்டு கம்பிரமாக நடந்து செல்வார். அக்ரஹாரத்தினர் அனைவரும் அவரவர் வீட்டு வாசலில் நின்று கொண்டே கும்பிடுவார்கள். குடும்பத்தலைவர் முன்னால் நிற்பார். பெண்கள் ஒரு ஒரமாக நிற்பார்கள். குழந்தைகளுக்கு சிறப்பு சலுகையாக பெரியவர்கள் யாருடைய தோளிலாவது ஏறிக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். ஐந்துவித தீபாராதனைகள் காட்டப்படும். இறுதியான கற்பூர ஆரத்தியின் போது ஒட்டு மொத்த அக்ரஹாரமும் இருகைகளையும் மேலே தூக்கி இறைவன் நாமத்தை உரத்த குரலில் முழங்கும்.

காலப் போக்கில் அந்த வழக்கம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து போனது. முதலில் வேறு ஊரிலிருந்து வந்த மருமகள்கள் வந்து நிற்பது குறைந்தது. அதன் பிறகு குடும்பத்தலைவர்கள் வந்து நிற்பது குறைந்தது. எல்லா வீடுகளிலும் தாத்தா பாட்டிகள் மட்டுமே கடைசி வரை வந்து நின்று கொண்டிருந்தனர். தாத்தாவின் சமவயதினர் ஒவ்வொருவராக விடைபெற்றுச் செல்லத் தொடங்கியிருந்தனர். கடந்தகால வழக்கத்தின் கடைசிக் கன்ணியாக எங்கள் தாத்தா மட்டுமே இருந்தார். மாலை ஆறு முப்பது ஆனதும் சுவரைப் பிடித்தபடியே நடந்துவந்து திண்ணையில் நிற்பார். எங்கள் வீட்டில் திண்ணையில் வண்டிகளை நிறுத்துவதற்காக கம்பியால் அழி போட்டிருந்தோம். அதைப் பிடித்துக்கொண்டு நிற்பார். படியிறங்கி ஏற சிரமமாக இருக்கும் என்பதால் ஒரு கையை கம்பியின் ஒரு பக்கமும் இன்னொரு கையை இன்னொரு கம்பியின் இடையிலுமாக நுழைத்துக் கொண்டு கும்பிட்டபடியே நிற்பார். ஆனால், இதில் வருத்தத்தக்க விஷயம் என்னவென்றால் கவனிப்பார் இல்லாமல் கோவிலில் மாலைநேர தீபாராதனை நிறுத்தப்பட்டுவிட்டிருந்தது. தாத்தாவிடம் அதைச் சொன்னால் கேட்கமாட்டார். நீ சும்மா என்னை உள்ள போகச் சொல்றதுக்காகச் சொல்றாய். நான் நின்னு பார்த்துட்டுத்தான் வருவேன் என்று நிற்பார். ஆறு முப்பதுக்கு அவரது மன உலகில் ஒரு மணி ஒலிக்கும். இரு கைகளையும் தூக்கி மூடப்பட்ட கோவிலைப் பார்த்து வணங்குவார். பார்க்கப் பாவமாக இருக்கும். அவரது கோவிலில் தீபாராதனை ஒருபோதும் முடங்கவில்லை.

குடுமப் நிர்வாகத்திலும் அவர் மிகவும் திறமையானவர். மாதாமாதம் வாங்க வேண்டிய பொருட்களை மாதாமாதம் வாங்குவார். நாலைந்து மாதங்கள் வாங்கி வைக்க முடிந்தவற்றை உடனே மொத்தமாக வாங்கிவிடுவார். பொருட்செலவு மிச்சம் என்பதோடு வீட்டில் இருப்பவர்களுக்கும் ஒரேவித பொருட்களைப் பயன்படுத்துவது எளிதாக இருக்கும். நினைத்தபடி உணவைச் சமைக்க முடியும். இந்தப் புளி புதுசா இருந்தது. அளவு தெரியவில்லை... இந்த அரிசி குழஞ்சு போயிடுத்து. தண்ணி அளவு தெரியலை என்று சொல்ல வேண்டிய அவசியமே வராது. அதுபோல் ஒவ்வொரு பழங்களையும் அதனதன் சீஸனில் அது அதிகமாக விளையும் ஊர்களுக்குச் சென்று வாங்கிவந்துவிடுவார். தீபாவளி சமயத்தில் ஊரில் இருந்து நாலைந்து பேரை சிவகாசிக்கு அனுப்பி எல்லாருக்கும் தேவையான பட்டாசை வாங்கிவரச் செய்துவிடுவார்.

திட்டமிடலில் பக்காவான மனிதர். மரணத்தைப் பற்றிச் சொல்லும்போது அவர் சொல்வார், நான் எப்போது இறக்கப் போகிறேன் என்பது மட்டும் எனக்குத் தெரிந்திருந்தால் அதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பாக விறகுக் கடைக்கு போன் பன்ணி ரெண்டு அந்தர் விறகை சுடுகாட்டுக்குக் கொண்டுவரச் சொல்லிடுவேன். ஒவ்வொரு விறகா எடுத்து அடுக்கிண்டு கற்பூரத்தை நானே ஏத்தி வெச்சுண்டு போய்ச் சேர்ந்துடுவேன் என்று சொல்வார். அவரைப் பொறுத்தவரை மரணம் என்பது ஒரு திருப்பத்தில் திரும்பி மறைவதுபோல் யாருக்கும் எந்த வலியும் தராமல் போய்ச் சேர்ந்துவிட வேண்டும். அதுதான் அவருடைய ஆசையாக இருந்தது. ஆனால், அது நடக்கவில்லை. மூளைக்கு ரத்தம் கொண்டு செல்லும் நரம்பு வெடித்து கோமா நிலைக்கு கொண்டு செல்லப்பட்டுவிட்டார். கிட்டத்தட்ட பத்து நாட்கள் ஐ.ஸி.யு வார்டில் ஆக்ஸிஜன் சிலிண்டர் உதவியால் சுவாசித்து வந்தார். கொஞ்சம் வலி நிறைந்த மரணம்தான். பிழைப்பதற்கு ஐந்து சதவிகித வாய்ப்புதான் இருப்பதாக மருத்துவர்கள் சொன்னர்கள். அமெரிக்காவில் இருந்த அண்ணா சொன்னான், பரவாயில்லை கடைசிவரை முயன்று பாருங்கள். யாருக்குத் தெரியும்... இவர் ஒருவேளை அந்த ஐந்து சதவிகிதத்தில் ஒருவராக இருக்கக்கூடும். அதன்படியே தொடர்ந்து சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. வலி நிறைந்த நிமிடங்களினூடாக இந்த உலகிலிருந்து விடைபெற்றுச் சென்றார். அவர் திரும்பக் கிடைத்துவிடக்கூடும் என்ற நப்பாசையில் அந்த வலியை அவருக்கு நாங்கள் கொடுக்க வேண்டிவந்தது.

சக மனிதர்களுடன் அவருடைய உறவு மிகவும் சீராக இருக்கும். நாவிதர் சுடலை அவருடைய நல்ல நண்பர்களில் ஒருவர். குறிப்பிட்ட நாளில் இவரிடமிருந்து முடிவெட்டிக் கொள்ள வருகிறேன் என்று தொலைபேசி தகவல் வரவில்லை என்றால், சுடலையிடம் இருந்து அழைப்பு வந்துவிடும். புரோகிதர்கள் தாங்கள் புரோகிதம் செய்யும் வீடுகளில் வருடா வருடம் நடக்கும் நிகழ்வுகளை ஞாபகமாக வைத்திருப்பதுபோல், சுடலை, தான் சிகையலங்காரம் செய்ய வேன்டியவர்களின் பெயரை நினைவில் வைத்திருப்பார். ஒவ்வொரு மாதமும் முதல் ஞாயிறன்று தாத்தா ஆட்டோவுக்கு போன் பண்ணச் சொல்வார். டிரைவரின் உதவியுடன் ஏறி உட்கார்ந்துகொண்டு கடைக்குச் செல்வார். அவருக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுத்த நேரத்தில் நாட்டின் முதலமைச்சரே வந்தாலும் காத்திருக்கத்தான் வேன்டும். முடிவெட்டிக் கொள்வது என்பது இரண்டு பால்யகால நண்பர்கள் கூடிக் கலந்து பேசி மகிழ்வதுபோல்தான் இருக்கும். சின்ன வயசில் நானும் தாத்தாவுடன் செல்வேன். சுடலை, கத்தியைத் தீட்ட ஆரம்பிக்கும்போது தாத்தா வேண்டுமென்றே, கத்தியைத் தீட்டாதே மனிதா... புத்தியைத் தீட்டு என்பார். எனக்கு அவர் சொல்லும்விதம் சிரிப்பைத் தரும். சுடலை நமட்டுச் சிரிப்புடன் அதைக் கேட்டுக் கொள்வார். தீட்டுவதை நிறுத்திவிட்டு தாத்தாவின் கழுத்தில் கத்தியின் மொண்ணையான பக்கத்தை அழுத்தி வைத்து இழுப்பார். தாத்தா, ஐய்யோ வலிக்கிறது என்பார். இப்ப சொல்லும்வே... எதைத் தீட்டணும்னு என்பார். இப்படிக் கழுத்துல கத்தியை வெச்சுக் கேட்டா என்னத்தச் சொல்லறது... புத்தியைத் தீட்டாதே மனிதா... கத்தியைத் தீட்டு என்பார் பயந்தபடியே. சுடலை வெற்றிப் பெருமிதத்துடன் என்னைப் பார்த்துச் சிரித்தபடியே, அதாக்கும் சங்கதி என்பார்.

தாணுமாலயன் கோவிலில் தினமும் இந்திரன் வந்து பூஜை செய்து செல்வதாக ஒரு ஐதீகம். கோயில் குளத்தில் ஒரு ஓரத்தில் இருக்கும் பெரிய பாறையை ஐராவதம் என்று சொல்வார்கள். தினமும் கோவில் நடை சாத்துவதற்கு முன்பாக கீழ் சாந்தி, ஒரு பூஜை செய்வதற்குத் தேவையான பூ, பழம், கற்பூரம் கமண்டலத்தில் நீர் என எல்லாமும் வைத்துவிட்டுச் செல்வார். அதிகாலையில் மேல் சாந்தி கதவைத் திறக்கும்போது, யாரோ ஒருவர் வந்து பூஜை செய்துவிட்டுச் சென்றதுபோல் பூ பழம் கமண்டலம் எல்லாம் கலைந்து கிடக்கும். இந்திரன்தான் வந்து பூஜை செய்துவிட்டுச் செல்வதாக ஐதீகம். மேல் சாந்தியும் கதவைத் திறப்பதற்கு முன், 'அகங் கண்டது புறஞ்சொல்லேன் ' என்று சத்தியம் செய்துவிட்டுத்தான் கதவைத் திறப்பார். தாத்தா இதையெல்லாம் மிகவும் உற்சாகத்துடன் விவரிப்பார். எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்கும் சுடலை, நிதானமாகச் சொல்வார், 'வோய்... கோவிலுக்குள்ள நிறைய எலிகள் உண்டும்லா..” தத்தாவுக்கு ஒருபக்கம் சிரிப்பு பொத்துக் கொண்டுவரும். இன்னொரு பக்கம் கோபமும் வரும். இந்திரனோட சாபத்துக்கு ஆளாகாதே அப்படின்னு எச்சரிப்பார். 'இந்திரனோட சந்திரனோட சாபமெல்லாம்... ' என்று சொல்லி நிறுத்தி வெட்டிப்போட்ட முடியைச் சுட்டிக் காட்டி, 'அதுக்குச் சமம் ' என்று சொல்வார் சுடலை.

தாத்தாவுக்கு ஆங்கிலத்தில் அவருக்கு அபார புலமை இருந்தது. எம்.ஏ. ஆங்கில லிட்ரேச்சர் படிக்கும் எனது அக்கா கூட ஏதாவது வார்த்தைக்கு அர்த்தம் தெரியவில்லை என்றால் தாத்தாவிடம் தான் கேட்பாள். உடனே அடுத்த நிமிடமே பதில் வரும். அந்தக் காலத்து ஆங்கிலம் என்றால் அதன் மவுசே தனிதான். அவர் பள்ளியில் படித்ததோடு நிறுத்திவிடவில்லை. தொடர்ந்து ஆங்கில தினசரிகள் படித்துவருவார். ஆங்கில அகராதியை எடுத்து தினமும் புதிது புதிதாக நாலைந்து வார்த்தைகளைப் படித்து மனப்படம் செய்து கொள்வார். எங்களுக்கும் அந்த பழக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். நாளொன்றுக்கு புதிதாக பத்து வார்த்தைகள் படிக்க வேண்டும். அதை வைத்து ஒரு வாக்கியம் எழுதி அவரிடம் காண்பிக்க வேண்டும். அவருக்குக் கண் ஆபரேஷன் செய்தபோது, வேறு எதைக் குறித்தும் கவலைப்படவில்லை. பேப்பர் படிக்க முடியாமல் போய்விட்டதே என்று மிகவும் வருந்தினார். வீட்டில் இருக்கும் யாராவது ஒருவரை வாசித்துக் காட்டும்படி நச்சரிப்பார். செய்தியை வெறுமனே படித்துவிட்டுப் போக முடியாது. அவர் அதற்கு ஒரு அபிப்ராயம் சொல்வார். நாமும் பதிலுக்கு ஏதாவது சொல்ல வேண்டும். கண் கொஞ்சம் சரியானதும் தானாகவே படிக்க ஆரம்பித்தார். ஆனால், நாட்கள் செல்லச் செல்ல அதுவும் முடியாமல் போனது. நான் அவருக்கு லென்ஸ் ஒன்று வாங்கிக் கொடுத்தேன். அதை வைத்து சில வருடங்கள் படித்தார். அதன் பிறகு டி.வி.யில் நியூஸ் பார்க்க சொல்லிக் கொடுத்தோம். முதலில் அது அவருக்கு பிடிக்கவில்லை. ஓரிரு மாதங்கள் பழகியதும் நியூஸ் பார்ப்பதை வழக்கமாக்கிக்கொன்டார்.

என்னை கல்லூரியில் சேர்க்க அவர்தான் உடன் வந்தார். அப்பாவுக்கு அப்போது ஏதோ வேலை இருந்தது. 1200க்கு 950 மதிப்பெண்கள்தான் வாங்கியிருந்தேன். ஆனால், கணிதம், இயற்பியல், வேதியல், போன்ற இன்ஜினீயரிங் படிப்புக்குத் தேவையான பாடங்களில் நல்ல மதிப்பெண்கள் எடுத்திருந்தேன். இந்து கல்லூரியில் பி.எஸ்.ஸிக்கு விண்ணப்பித்திருந்தேன். பிரின்சிபால் மார்க் லிஸ்டைப் பார்த்தார். அவருக்கு லேசாகக் கோபம் வந்தது. இவ்வளவு மார்க் கிடைச்சிருக்கு. எப்படியும் இன்ஜினீயரிங் சீட் கிடைச்சு போயிடுவீங்க. அப்பறம் எதுகாக எங்க நேரத்தை வீணாக்கறீங்க. உங்களுக்கு தர்ற சீட்டை வேற யாருக்காவது கொடுத்தா பிரயோஜனமாகவாவது இருக்கும் என்று அவர் சொன்னார். தாத்தா நிதானமாக அவரைப் பார்த்துச் சொன்னார், 'சர்டிஃபிகேட்டைக் கொஞ்சம் முழுசா பாருங்க சார் '. பிரின்சிபால் சொன்னார், 'எல்லாம் பார்த்துட்டேன் '. தாத்தாவோ விடாப்பிடியாக, 'இல்லை காஸ்ட்ங்கறதுல என்ன எழுதியிருக்குங்கறதைப் பாருங்க... ' என்றார். பிரின்ஸிபால் அதைப் பார்த்தார். ஓரிரு விநாடிகள் யோசித்தவர் சட்டென்று தன் தவற்றை உனர்ந்தவர்போல் சிறிது தலை குனிந்தார். 'ஏன் இந்த மார்க் போதுமே ' என்றார். பிறகு தயங்கியபடியே, 'பணம் கொடுத்தா சீட் கிடைக்குமே ' என்றார். தாத்தா மெதுவாகச் சொன்னார்... 'கிடைக்கும்தான். ஆனா அது வேண்டாம். ஆரம்பமே தப்பா இருந்தா அதுக்கப்பறம் போகப் போக அது அதிகமாகத்தான் செய்யும். காசு கொடுத்துதான ஸீட் வாங்கி இருக்கோம். காசு கொடுத்தே மார்க் வாங்குவோமே... காசு கொடுத்துதான பட்டம் வாங்கியிருக்கோம். அதை கட்டற பாலத்துல சம்பாதிச்சுப்போமேன்னு தோணும். அது வேண்டாம். எப்பவுமே நாம ஸ்ட்ரெய்ட் ஃபார்வர்டா இருக்கணும். அப்பத்தான் சரியாவரும் ' என்றார். பிரின்ஸிபால் சிரித்தபடியே, 'நீங்க ஃபார்வர்டா இருக்கீங்க... அதனால யூ பீப்பிள் ஆர் அஃபோர்ட் டு பீ ஸ்ட்ரெய்ட் ' என்றார் சற்று கேலியாக. தாத்தாவுக்கு சுரீரென்று தைத்ததுபோல் இருந்தது. 'நீங்க தப்பா சொல்றீங்க... நாங்க ஸ்ட்ரெய்ட்டா இருக்கறதுனாலதான் ஃபார்வர்டா இருக்கோம் ' என்றார் நிதானமாக. பிரின்சிபாலுக்கு முகத்தில் அறைந்தாற்போல் இருந்தது. சிரித்துச் சமாளித்தார். தாத்தாவின் கூற்றில் எனக்கு முழு உடன்பாடு கிடையாது. என்றாலும் அது தாத்தாவின் பார்வை. அதில் அவர் உறுதியாகவே இருந்தார்.

அவருடைய ஸ்ட்ரெய்ட் ஃபார்வெர்ட்னெஸ்ஸுக்காக நாங்கள் நிறைய விலை கொடுக்க வேண்டி வந்திருக்கிறது. அக்ரஹாரத்துக்கு என்று பொதுச் சொத்தாக நில புலங்கள் எராளமாக இருந்தன. ஒருமுறை தலைவராக இருந்தவர் சில முறைகேடுகள் செய்ததாக தாத்தாவுக்குத் தோன்றியது. அதை ஊர்க் கூட்டத்தில் விவாதிக்க முயன்றார். அந்த பிரிவினர் கொஞ்சம் வலுவானவர்களாக இருந்ததால் இவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அக்ரஹாரத்தில் தனது கருத்துகளைச் சொல்லி ஆதரவு தேட முயன்றார். அதற்கும் போதிய வரவேற்பு கிடைக்கவில்லை. ஆனால், முறைகேடுகள் நடந்து கொண்டிருப்பது உறுதியாகத் தெரிகிறது எனவே யார் சப்போர்ட் பண்ணினாலும் இல்லாவிட்டாலும் நான் ஒரு கை பார்ப்பேன் என்று நீதிமன்றத்துக்குச் சென்றுவிட்டார். எங்கள் கிராமத்தின் வரலாற்றிலேயே நீதிமன்றத்துக்கு ஒருவர் சென்றது அதுதான் முதல் தடவை. அப்போது கிராம அதிகாரியாக இருந்தவர்களுக்கு இது பெரும் கோபத்தைக் கிளப்பியது. எங்கள் குடும்பத்தை ஒட்டுமொத்தமாக சாதிப் பிரஷ்டம் செய்துவிட்டார்கள். ஊர் கூடி எல்லாம் பேசவில்லை. ஆனால், அது எளிதில் அமலுக்கு வந்தது.

நான் அப்போது சிறியவனாக இருந்தேன். எனக்கு இந்த அரசியலெல்லாம் தெரியாது. சம வயது சிறுவர்களுடன் விளையாடச் செல்வேன். கண்ணாமூச்சி ஆட்டங்களில் நான் ஒளிந்திருக்கும் இடத்துக்கு யாரும் வரமாட்டார்கள். என்னைத் தேடிக் கண்டுபிடிப்பதற்குள்ளாகவே அடுத்த சுற்று ஆட்டம் ஆரம்பித்துவிடும். இருண்ட அறையில் இருந்து கொண்டு கதறுவேன், 'என்னை நீங்கள் இன்னும் கண்டுபிடிக்கவில்லை ' என்று. ஆட்டம் முடிந்த பிறகு தனியாக வெளியே வருவேன். நான் ஒளிந்து கொண்டது குறித்தோ வெளியே வந்தது குறித்தோ எதுவும் சொல்லாமல் மற்றவர்கள் தத்தமது வீட்டுக்குச் சென்றுவிடுவார்கள். அதுபோல் கிரிக்கெட் விளையாடும்போதும் இப்படித்தான் ஆகும். பொதுவாக இரண்டு அணிகளுக்குத் தலைவர்களை முதலில் அனைவரும் கூடித் தேர்ந்தெடுப்பார்கள். அந்த அணித் தலைவர்கள் அதன் பிறகு தங்கள் அணிக்கு ஒவ்வொரு வீரராகத் தேர்ந்தெடுப்பார்கள். இரண்டு இரண்டு பேராக தனியாகச் செல்வோம். ஒருவர் தன்னை காளை மாடு என்று சொல்லிக் கொள்வார். இன்னொருவர் தன்னை பசு மாடு என்று சொல்லிக்கொள்வார். இருவரும் அதன் பிறகு அணித் தலைவர்கள் இருக்கும் இடத்துக்குச் செல்வார்கள். காளை மாடு வேணுமா, பசு மாடு வேணுமா என்று கேட்பார்கள். அணித் தலைவர்களில் ஒருவர் காளை மாடு வேணும் என்று கேட்பார். உடனே அந்த பெயரை வைத்துக் கொண்டவர் அவரது அணிக்குச் செல்வார். இப்படியாக ஒவ்வொருவரையும் அணிக்குத் தேர்ந்தெடுப்பார்கள். எனக்குத் துணையாக வருவதற்கு ஒருவரும் இருக்க மாட்டார்கள். நான் யாரைப் போய்க் கேட்டாலும் மறுத்துவிடுவார்கள். மேலும் எப்போதும் இரட்டை படையில் ஆட்கள் இருக்க மாட்டார்கள். தனியாக ஒருவர் மிஞ்சுவதும் உண்டு. அப்போது அந்த நபர் தன் இரண்டு கைகளில் எதையாவது மறைத்துவைத்துக் கொண்டு அணித்தலைவர்களின் முன்னால் போய் நிற்பார். ஒரு கையில் கல்லையும், இன்னொரு கையில் மண்ணையும் ஒளித்து வைத்துக் கொண்டு கைகளை மூடியபடி எந்தக் கையில் கல் எந்தக் கையில் மண் என்று கேட்பார்கள். அணித்தலைவர் சொன்ன கையில் சொன்ன பொருள் இருந்தால் அந்த வீரர் அவருக்கு. நானும் அதுபோல் ஒரு கையில் கல்லையும் இன்னொரு கையில் புல்லையும் வைத்துக் கொண்டு அணித்தலைவர் முன்னால் செல்வேன். ஆனால், அதை அணித்தலைவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். அவர்கள் எங்கள் தாத்தா வழக்குத்தொடுத்த கிராமத் தலைவரின் உறவினர்கள். எனவே என்னை புறக்கணித்துவிடுவார்கள். எனக்கு அழுகையாக இருக்கும். அதுபோல் எங்கள் குடும்பத்து பெண்களை மற்ற வீட்டுப் பெண்கள் எந்த விசேஷத்துக்கும் அழைக்க மாட்டார்கள். நவராத்திரியின் போது ஒவ்வொரு வீட்டுப் பெண்களும் இன்னொரு வீட்டுப் பெண்களை விருந்தாளியாக அழைத்து ஜாக்கெட் துணி, வெத்தலை பாக்கு பழம் என்று கொடுப்பது வழக்கம். எங்கள் வீட்டுப் பெண்களை யாரும் அழைக்க மாட்டார்கள். எங்கள் வீட்டிக்கு யாரும் வரவும் மாட்டார்கள். வீட்டில் இருந்த எல்லாரும் எங்கள் தாத்தாவைத் திட்டுவார்கள். எனக்கும் கோபம் கோபமாக வரும். ஆனால், அவரோ தப்புன்னு தெரிஞ்சதை தட்டிக் கேட்டேன் அது தப்பா என்று பாவமாகக் கேட்பார். அதன் பிறகு வழக்கில் அவர் வெற்றி பெற்று கிராமத்துக்கு தாத்தாவே தலைவரானார். யாரெல்லாம் எங்களை ஒதுக்கி வைத்தார்களோ அவர்கள் எங்களிடம் உறவாட வந்தார்கள். ஆனால், தாத்தா யாரையும் அருகில் சேர்த்துக் கொள்ளவில்லை. பொதுக்காரியங்களுக்கு உதவ வாருங்கள் அது போதும் என்று கத்தரித்துவிட்டார்.

மனிதர்கள் வயதாக ஆக குழந்தையைப் போல் ஆவார்கள் என்று சொல்வார்கள். எங்கள் தாத்தாவோ குழந்தையாவதற்கு ரொம்ப வயதாக வேண்டுமென்றெல்லாம் காத்திருக்கவில்லை. அது அவரது இயல்பிலேயே இருந்தது. அவருக்கு சாக்லேட் பிஸ்கெட்கள் என்றால் அலாதி பிரியம். அதிலும் வாத்து, மீன், குருவி படம் போட்ட பிஸ்கெட்கள் என்றால் உயிர். அண்ணன், என்னதான் அமெரிக்காவில் இருந்து உயர்தர சாக்லேட்கள் வாங்கிவந்தாலும் அவன் வாத்து குருவி பிஸ்கெட் வாங்கிவரவில்லை என்றால் கோபித்துக் கொண்டுவிடுவார். அந்த பிஸ்கெட்களை அவரைப் பார்க்க வரும் குழந்தைகளுக்குத் தந்து குஷிப்படுத்துவார் என்றாலும் அவருக்கும் அந்த பிஸ்கெட்கள் மிகவும் பிடிக்கும். நாலு குருவி, மூணு மீன் சாப்பிட்டேனே! என்று குழந்தை போல் கையை விரித்துச் சொல்வார். வோய் உமக்கு நிஜமாவே மீன், கோழி சாப்பிடணும்னு ஆசை இருக்கு போல இருக்கு அதான் இப்படி பண்றீர் என்று கேட்பேன். அதெல்லாம் இல்லை என்பார். கொன்னு தின்னாத்தான பாவம். தானா இறந்த கோழி, ஆடை சமைச்சுக் கொண்டுவர்றேன்... ஆசை தீர சாப்பிடுங்கோ என்று சீண்டுவேன். அதுபோல் அவருக்கு லாட்டரி வாங்குவதிலும் மிகுந்த ஆர்வம் உண்டு. ஏதோ ஒரு ஜோஸியர், தாத்தாவின் ஜாதகத்தில் புதையல் கிடைப்பதற்கான யோகம் இருக்கிறது என்று சும்மா கொளுத்திப் போட்டுவிட்டுப் போய்விட்டார். அன்றிலிருந்து ஆரம்பமானது தாத்தாவின் லாட்டரி மோகம். தெரு முக்குக் கடைக்கு தள்ளாடித் தள்ளாடி நடந்து போய் ரிசல்ட் பார்த்துவிட்டு வருவார். யாரிடமும் லாட்டரிச் சீட்டைக் கொடுத்து அனுப்பமாட்டார். கோடி ரூபாயோடு ஓடிவிடுவார்களாம். போகும்போதும் வரும் போதும் தெருவில் இருப்பவர்கள் எல்லாம் அவரைக் கேலி செய்வார்கள். விழுந்தால் வீட்டுக்கு இல்லையேல் நாட்டுக்கு என்று பதிலுக்குச் சிரிப்பார். ஆனாலும் தாத்தாவுக்கு நாட்டோட வளர்ச்சில ரொம்பத்தான் அக்கறை என்று கிண்டலடிப்பேன்.

தாத்தாவின் வாழ்க்கையை முழுமையான வாழ்க்கை என்று சொல்ல முடியாது என்றாலும் மனநிறைவான வாழ்க்கை என்று நிச்சயமாகச் சொல்லமுடியும். ஒருவருக்கு ஆண் குழந்தை பிறந்து, அதற்கு ஓர் ஆண் குழந்தை பிறந்து, அந்தக் குழந்தைக்குமோர் ஆண்குழந்தை பிறப்பது என்பது மிகப் பெரிய பாக்கியம். அந்தக் கொள்ளுப் பேரனால் கனகாபிஷேகம் செய்யப்படுவது என்பது இல்லற வாழ்வில் ஈடுபட்டிருக்கும் ஒருவருக்குக் கிடைக்கும் மிகப் பெரிய பாக்கியம். அது என் தாத்தாவுக்குக் கிடைத்திருந்தது. அதுபோல் அவரைப் போல் ஞாபக சக்தி எனக்குத்தெரிந்து யாருக்குமே கிடையாது. எங்கள் குடும்பத்தில் நெருங்கிய உறவினர், தூரத்து உறவினர், தூர தூரத்து உறவினர் என்று கிட்டத்தட்ட 100 பேருக்கு மேல் இருப்பார்கள். அவர்கள் அனைவருடைய ஜென்ம நட்சத்திரம், பிறந்த மாதம், திருமணம் போன்ற சுப காரியங்கள் நடந்த தினம் என அனைத்தும் அவருக்கு அத்துப்படியாக ஞாபகத்திலிருந்தது. அவரவருக்கான வாழ்த்து மடலை அந்தந்த நாட்களில் கையில் கிடைக்கும்படி தவறாமல் அனுப்பிவிடுவார். இனியும் எங்களுக்கு பிறந்தநாள் வரும். திருமணநாள் வரும். ஆனால், தாத்தாவின் வாழ்த்துமடல் மட்டும் வராது.

மருத்துவமனையில் சேர்க்கப்படுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகத்தான் எனக்கு அவர் அனுப்பிய பிறந்த நாள் வாழ்த்து வந்திருந்தது. ஆனால், உண்மையில் அன்று அல்ல என் பிறந்தநாள். தாத்தாவின் கணக்குக் கூட்டல்களில் முதன்முதலாக நேர்ந்த பிழை அது. அதுவே கடைசிபிழையாகவும் போய்விட்டது. பாபு... சீக்கிரம் புறப்பட்டு வாடா... உன்னைப் பார்க்கணும் போலிருக்கிறது என்று நடுங்கும் கையெழுத்தில் எனக்கு அவர் அனுப்பியதுதான் அவர் அனுப்பிய கடைசி வாழ்த்துமடல். எனது லட்சியம் அல்லது அலட்சியத்தின் காரணமாக நாலைந்து வருடங்களாக அவரைப் போய்ப் பார்த்திருக்கவில்லை. அவரது வாழ்த்து மடல்கள் வரும்போதெல்லாம் தொலைபேசியில் பேசுவேன். அவர் பேசுவது எனக்கு கேட்கும். ஆனால், நான் பேசுவது அவருக்குக் கேட்காது. கொஞ்சநேரம் ஏதேதோ கேட்டுவிட்டு உடனே புறப்பட்டு வா என்று சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்துவிடுவார். அவரது மரணம் எனக்கு ஒரு எளிய பாடத்தை மூர்க்கத்தனமாகக் கற்றுத் தந்திருக்கிறது. நாம் யார் மீதாவது அன்பு செலுத்தினால் அதை வெளிக்காட்டுவதற்கு நல்ல சந்தர்ப்பம் வரட்டும் என்று காத்துக்கொண்டிருக்கக்கூடாது. மனதில் தோன்றிய நிமிடத்திலேயே காட்டிவிடவேண்டும். இல்லையென்றால் அப்பறம் ஒருபோதும் காட்ட முடியாமல் போய்விடும். என்னைப் பார்க்க முடியாத ஏக்கத்தில் அவரது உயிர் பிரிந்திருக்கிறது என்பதை இப்போது நினைத்துப் பார்த்தால் மிகுந்த வேதனையாக இருக்கிறது. மருத்துவமனையில் சேர்க்கப்பட தகவல் கிடைத்ததும் முன்பதிவு செய்யப்படாத ரயிலில் ஏறி, இரண்டு மூன்று பஸ்கள் மாறி நடுநிசியில் ஆஸ்பத்திரியின் இருண்ட வராண்டாக்களில் அவரது அறையைத் தேடி அலைந்து கண்டுபிடித்தேன். உடம்பெல்லாம் டியூப்களும் ஒயர்களும் பொருத்தப்பட்டிருந்தன. கண்கள் மூடியபடி படுத்திருந்தார். நான் பாபு வந்திருக்கேன் தாத்தா... கன்ணைத் திறந்து பாருங்கோ என்று காதோரம் குனிந்து சொன்னேன். அவரது இமைகள் மெள்ள ஒருதரம் விரிந்து சுருங்கின. ஏதோ சொல்ல முயற்சிப்பதுபோல் தொண்டையில் சிறிது அசைவு தென்பட்டது. ஐ.ஸி.யு.வார்டில் சேர்க்கப்பட்டிருந்த அந்தப் பத்து நாட்களில் அவருடைய உடலில் அசைவு தென்பட்ட ஒற்றைக் கணம் அது.

தாத்தாவின் மறைவு எங்கள் குடும்பத்தில் எல்லாருக்குமே பெரிய வேதனையைத் தந்தது என்றுதான் சொல்லவேண்டும். ஆனால், அப்பா மட்டும் நள்ளிரவில் ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்று ஆஸ்பத்திரியில் சேர்த்ததிலிருந்து அதே ஆம்புலன்ஸில் உடலை வீட்டுக்குக் கொண்டுவந்ததுவரை துளியும் கலங்கவே இல்லை. ஆனால், தாத்தாவின் உடலை நதிக்கரை முருகன் கோவில் ஓரமாக கொன்டு செல்லும்பொது பவழ மல்லிச் செடியின் முன்னால் ஒரு சிறிய குழந்தை பூக்கூடையுடன் சுற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்தபோது அப்பா அழுகையை அடக்க முடியாமல் பொட்டிக் கரைய ஆரம்பித்துவிட்டார். தாத்தா ஆஸ்பத்திரியில் சேர்க்கப்படுவதற்கு முந்தின நாள் வரையில் தினமும் கோவிலில் பூ பறிக்கச் செல்வார். ஊரில் இருக்கும் பலரும் அதிகாலையில் சென்று அவரவருடைய பூக்கூடைகளை நிரப்பிச் சென்றுவிடுவார்கள். உதிர்ந்துகிடக்கும் பூக்களைக் கூட விடமாட்டார்கள். தினமும் மன வளர்ச்சி குன்றிய ஒருவர் தினமும் ஒரு பூக்கூடையுடன் வந்து நிற்பார். அவர் சற்று குள்ளமாக வேறு இருப்பார். தாத்தாதான் தினமும் அவருடைய கூடையில் பூக்களைப் போட்டு அனுப்புவார். தாத்தா இறந்தது தெரியாமல் மனவளர்ச்சி குன்றியவர் பவழமல்லி மரத்தினடியில் கூடையுடன் காத்துக் கொண்டிருந்தார். எட்டாத உயரத்தில் பூத்த பவழமல்லிகளைப் பறித்துத் தரும் தாத்தா விடைபெற்றுச் சென்றுவிட்டார் என்பதை அவருக்கு யார் எப்படிச் சொல்லிப் புரிய வைப்பது..?

இவையெல்லாவற்றையும்விட என்னை வியப்பில் ஆழ்த்திய விஷயம் ஒன்று உண்டு. கிட்டத்தட்ட 70 வருடங்களுக்கும் மேலாக ஒன்றாக வாழ்ந்த தாத்தாவின் மறைவு பாட்டியை வெகுவாக உலுக்கிவிடுமென்றுதான் நினைத்தேன். ஆனால், அவரோ துக்கம் விசாரிக்க வந்தவர்களுக்கு ஆறுதல் சொல்லி அனுப்பிவைத்தார். தாத்தாவின் இறுதி ஆசைகளில் ஒன்று, தான் இறந்த பிறகும் பாட்டி பூவும் பொட்டுடன் தான் இருக்க வேன்டும் என்பது. இன்று 2008-ல் வெகுவாக நடைமுறைக்கு வந்துவிட்ட ஒரு விஷயம்தான் இது. ஆனால், தாத்தாவோ 1930களிலேயே அதை ஒரு சத்தியமாக வாங்கிவிட்டிருந்தார். தாத்தாவின் காரியங்களெல்லாம் முடிந்து ஒருமாதம் கழிந்த பிறகு என் மனைவியை மருத்துவரிடம் அழைத்துச் சென்றேன். பரிசோதித்துப் பார்த்துவிட்டு அவள் கர்ப்பமாக இருப்பதாக சொன்னார். உடனே வீட்டில் இருப்பவர்களிடம் இந்த செய்தியைச் சொல்ல போன் பண்ணினேன். பாட்டிதான் போனை எடுத்தார். எனக்கு குழந்தை பிறக்கப் போகிறது என்றேன் உற்சாகமாக. தெரியுமே என்றார் பாட்டி. எனக்குத் தூக்கி வாரிப்போட்டது. குழந்தையின் பெற்றோர் எங்களுக்கே இப்போதுதான் தெரியும். பாட்டிக்கு எப்படித் தெரிந்தது என்று வியந்தேன். மனைவியிடம் கேட்டேன், நீ ஏதாவது சொன்னாயா என்று... பாட்டி எதிர்முனையில் இருந்து சொன்னார், 'என்னைக் கேளு எப்படித் தெரியும்னு. உன் பொண்டாட்டியைக் கேட்காத. கொல்லைப்புறம் வழியாகப் போன தாத்தா வாசப்புறம் வழியா வருவார்னு எனக்கு அப்பவே தெரியுமே! '.

வலிகள் நிறைந்தது மட்டுமேயா வாழ்க்கை... வலிகளைத் தாங்கிக்கொள்ளும் வலிமையும் நிறைந்ததுதானே அது!











3 comments:

  1. மிக மிக நெகிழ்வாக இருக்கிறது கட்டுரை..!

    இறந்து போனது உங்களுடைய தாத்தா என்றில்லை.. இதனை வாசிக்கின்ற அத்தனை பேருக்குமே ஒரு தாத்தாவை இழந்த சோகத்தை மனம் முழுவதும் நிரப்புகிறது..

    உங்களது பாட்டியிடம் எங்களது அன்புகளையும், நேசங்களையும் தெரிவித்து விடுங்கள்..!

    ReplyDelete
  2. மகாதேவன் சுசிந்திரத்தைச் சேர்ந்தவரா நீங்கள்..தற்போதுதான் தாணுமாலயன் கோயில் வரலாறு படித்து முடித்து தென் குமரியின் கதை படித்துக் கொண்டு இருக்கிறேன்.அற்புதமான நடை.தாத்தாவைப் பொருத்தவரை இறப்பு என்பது ஒரு திருப்பத்தில் மறைவது போல்தான் என்ற வரியைப் படித்து ஸ்தம்பித்து விட்டேன்.நிறைய எழுதுங்கள்.

    ReplyDelete