ஊரில் நடக்கும் திருவிழாவின்போது ஒரு குடும்பத்தினர் ஒரு ஆட்டுக் குட்டியை வாங்குகிறார்கள். அந்த வீட்டில் இருக்கும் சிறுமி அந்த ஆட்டுக் குட்டியை ரொம்பவும் ஆசை ஆசையாக வளர்க்கிறாள். ஒரு நாள் அந்தக் குட்டி அவள் சொல்வதைக் கேட்காமல் முட்ட வரவே அதை அடிக்கிறாள். அதைப் பார்க்கும் அவளது அம்மா ஆட்டுக் குட்டியை அடிக்காதே. அதை கடவுளுக்காக நேர்ந்து விட்டிருக்கிறோம் என்று சொல்கிறாள். அதைக் கேட்டதும் குழந்தையின் கண்கள் விரிகின்றன. இதை நாம் கடவுளுக்காகவா வளர்க்கிறோம் என்று உற்சாகமடைந்து அதிலிருந்து அந்தக் குட்டியை பூப்போல கவனித்துக் கொண்டுவருகிறாள்.
அதன் காலில் சலங்கைகட்டி விடுகிறாள். அது ஜல் ஜல் என்று அங்கும் இங்கும் நடந்து போவதைப் பார்க்கும் போதெல்லாம் அவளுக்கு சந்தோஷம் பொங்கிவருகிறது. தினமும் பள்ளிக்கூடம் விட்டதும் அதற்கு இலை, தழை ஒடித்துக் கொண்டு வருகிறாள். விடுமுறை நாட்களில் அதை மேய்ச்சலுக்கு தானே அழைத்துச் செல்கிறாள். மழைக்காலங்களில் அதை வீட்டுக்குள் படுக்க வைக்கிறாள். மிகுந்த அன்போடு அதை கவனித்துக் கொள்கிறாள்.
இரண்டு மூன்று வருடங்கள் கழிகின்றன. ஊரில் கொடை விழா வருகிறது. குட்டி ஆடைக் காணிக்கையாகக் கொடுக்க கூட்டிச் செல்லுகிறார்கள். சற்று தொலைவில் இருக்கும் கோவில் என்பதால் வீட்டில் உள்ள அனைவரும் வண்டி கட்டிக்கொண்டு புறப்படுகிறார்கள். குட்டி ஆடை வண்டியின் பின்னால் கட்டி கொண்டு போகிறார்கள். காளையின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் குட்டி திணறுகிறது. சிறுமி, வண்டியை நிறுத்தச் சொல்லி குட்டியை மடியில் தூக்கி வைத்துக் கொள்கிறாள். சிறிது நேரத்தில் தூங்கிவிடுகிறாள். அவள் கண்முழித்து பார்க்கும் போது அவள் அம்மா மடியில் படுத்திருப்பது தெரிகிறது. எழுந்து கண்ணைக் கசக்கிக் கொண்டு பார்க்கிறாள். கோவிலின் முன்னால் இருக்கும் பரந்து விரிந்த மைதானத்தில் ஒரு ஆலமரத்தின் அடியில் அவர்கள் கூடாரம் போட்டு தங்கியிருப்பது தெரிகிறது. லேசாக இருட்டத் தொடங்கியிருக்கிறது. அந்த மைதானத்தில் அவர்களைப் போலவே ஏராளமான குடும்பத்தினர் நேர்ச்சைக்கான ஆடுகளோடு வந்திருக்கிறார்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் ஒரே மக்கள் கூட்டம். தன்னுடைய குட்டி ஆடைத் தேடுகிறாள். ஆலமரத்தடியில் ஒரு மூலையில் கட்டிப் போடப்பட்டிருப்பது தெரிகிறது.
அவளைப் போலவே ஏராளமான சிறுவர் சிறுமிகள் அங்கு இருப்பதை பார்த்ததும் அவர்களோடு ஆடிப் பாடி விளையாடுகிறாள். திருவிழாக் கடைகளை அப்பாவுடன் போய் சுற்றிப் பார்த்துவிட்டு வருகிறாள். மறு நாள் காலையில் கடவுளுக்கு காணிக்கையாகக் கொடுக்க வேண்டும் என்று அப்பா சொல்கிறார். இரவு சாப்பிட்டு விட்டு அப்பா மடியில் படுத்தபடியே தூங்கிப் போகிறாள்.
அவளுடைய கனவில் ஒரு பெண் தெய்வம் சிறகுகளை அசைத்தபடி வானிலிருந்து இறங்கி வருகிறது. சிறுமி ஒரு ஆற்றின் கரையில் குட்டி ஆடை ஒரு குழந்தையைப் போல் கைகளில் அணைத்தபடி நிற்கிறாள். பறந்து வரும் தெய்வம் அவள் முன்னால் வந்து இரு கைகளையும் விரித்து அந்த குட்டி ஆடைத் தரும் படிக் கேட்கிறது. நீ இதை நல்லா கவனிச்சுக்கணும். சரியா. தினமும் ரெண்டு நேரம் கொளை ஒடிச்சு போடணும். நாய், ஓநாய் வந்து கடிச்சு தின்னுடாம பாத்துக்கணும். ராத்திரியானா ஒரு பெரிய கூடை போட்டு மூடி வெச்சுடணும். கூடையைப் போட்டு மூடினதும் ஒரே இருட்டாயிடும். குட்டி பயப்படும். அதனால கூடைல சின்னதா ஒரு ஓட்டை போட்டு நிலா நட்சத்திரமெல்லாம் பாக்க முடியற மாதிரி வெக்கணும். மழை வந்துடுச்சுன்னா சாக்கு போட்டு வீட்டுக்குள்ள கொண்டுவந்து படுக்க வெச்சுக்கணும் செய்வியா என்று கேட்கிறாள். உன் அளவுக்கு என்னால் கவனித்துக் கொள்ள முடியாது இருந்தாலும் முடிந்தவரை அன்பாகக் கவனித்துக் கொள்கிறேன் என்று சொல்லிவிட்டு அந்த தெய்வம் குட்டி ஆடை மார்போடு அணைத்துக் கொண்டு பறந்து செல்கிறது. தெய்வத்துக்குக் காணிக்கையாகத் தருவது என்பதை அந்தச் சிறுமி புரிந்து கொண்டிருந்த விதம் அது.
மறு நாள் பொழுது விடிகிறது. சிறுமி ஆற்றங்கரைக்குப் போய் குளித்துவிட்டு வருகிறாள். கோவிலுக்கு திரும்பிவரும்போது பிரகாரத்தை வலம் வருபவர்கள் ஆடுகளையும் கூடவே இழுத்துக் கொண்டு போவதைப் பார்க்கிறாள். ஆடுகள் பெருங்குரலில் கதறியபடியே தரையோடு தரையாகப் படுத்துக் கொண்டு அடம்பிடிக்கின்றன. ஆனாலும் விடாமல் ஒவ்வொருவரும் ஆடுகளை இழுத்துக் கொண்டுபோகிறார்கள். சிறுமி ஒவ்வொன்றையாக வேடிக்கை பார்த்தபடியே நடக்கிறாள். ஒரு ஓலைத் தடுப்பின் பின்னால் ஏதோ சத்தம் கேட்கிறது. மெல்ல அதை நோக்கிப் போகிறாள். ஓலைத் தடுப்பின் பெரியதொரு துவரத்தின் வழியே மறுபுறம் நடப்பது லேசாகத் தெரிகிறது. அங்கே ஒரு கை கீரை கட்டு ஒன்றை நீட்டுகிறது. ஒரு ஆடின் தலை அதை தின்பதற்காக முன்னே நீள்கிறது. மறுவினாடி சடாரென்று ஒரு அருவாள் அதன் தலையை ஒரே வெட்டில் துண்டாக்கிப் போடுகிறது. அதைப் பார்த்ததும் சிறுமி அதிர்ச்சியில் உறைந்து போகிறாள். ஓலைத்தடுப்பின் மறுபக்கம் ஓடிப்போய் பார்க்கிறாள். ரத்தம் சொட்டும் அருவாளுடன் காவிப்பல் தெரிய சிரித்தபடியே நிற்கும் பூசாரி, சாமி ஏத்துகிடுச்சு என்கிறார். கீழே தலை துண்டிக்கப்பட்ட ஆட்டின் கால்கள் பூமியை விலுக் விலுக் என்று உதைத்துக் கொண்டிருக்கிறது. கழுத்தில் இருந்து வழியும் ரத்தமானது ஒரு மண் கலயத்தில் சேகரமாகிக் கொண்டிருந்தது. சிறுமி அலறித் துடித்தபடியே தன் குட்டி ஆடு கட்டிப்போட்டிருந்த இடத்தை நோக்கி ஓடுகிறாள். காணிக்கைக்காக ஆடுகளை இழுத்து வருபவர்களின் கூட்டம் அவளை முட்டித் தள்ளுகிறது. மஞ்சள் துணிகட்டி ஈர உடையுடன் கையில் அருவாள் ஏந்தியபடி ஒவ்வொருவராக வந்து கொண்டிருக்கிறார்கள். அவர்களை இடித்து தள்ளியபடியே சிறுமி மைதானத்தின் நடுவே இருக்கும் ஆலமரத்தை நோக்கி ஓடுகிறாள். குட்டி ஆடு கட்டப்பட்ட இடம் வெறுமையாக இருக்கிறது. குட்டியைத் தேடி ஓடுகிறாள். மைதானத்தின் மணல் வெளியில் மனிதக் கால்தடம் பதிந்த குழிவுகளில் எல்லாம் தேங்கி நிற்கிறது வெட்டப்பட்ட ஆடுகளின் ரத்தம். அதை குனிந்து பார்க்கிறாள் சிறுமி. அவளது பிம்பம் அந்த ரத்தத்தில் நடுங்கியபடியே மிதக்கிறது. அவளுக்கு கண்கள் இருட்டிக் கொண்டு வருகிறது. கோவில் முகப்பில் உச்சியில் கட்டப்பட்டுள்ள ஒலிபெருக்கியில் பம்பை சத்தம் மெல்ல மெல்ல உயர்ந்து உச்சத்தை அடைகிறது. அவள் வளர்த்த குட்டி ஆடின் காலில் ஆசை ஆசையாக அவள் கட்டிய சலங்கையின் சத்தமாக அது மாறுகிறது. விலுக் விலுக் என்று அது துடிப்பது கேட்கிறது. சிறகசைத்தபடி பறந்து வரும் தேவதையும், வெட்டப்படும் ஆடுகளுமாக அவளது கண்ணில் காட்சிகள் தோன்றி மறைகின்றன. மெல்ல அவள் மண்ணில் மயங்கி விழுகிறாள்.
No comments:
Post a Comment