இருட்டில் இருந்து வெளிச்சத்தை நோக்கி...

Saturday, July 24, 2010

போபால் - 2

அணு ஒப்பந்தத்தை வெற்றிகரமாக கையெழுத்திட்ட பாரதப் பிரதமர் அவர்களை வாழ்த்தியும் அவர் அணு மின்சார உற்பத்தி நிலையத்துக்கு அடிக்கல் நாட்ட வரப்போவதை வரவேற்றும் ஒரு விளம்பரம் ஓடுகிறது. சினிமா நட்சத்திரங்கள் தோன்றி அணு சக்தி நம் நாட்டுக்கு, ரொம்பவே தேவை என்று சொல்கிறார்கள். சூரியனை மறைத்தபடி பிரமாண்ட அணு உலை எழும்பி நிற்கிறது. இருண்ட குடிசைகள் ஒளி பெறுகின்றன. மோட்டார் பம்புகளில் இருந்து நீ பொங்கிப் பாய்கிறது. பெரிய பெரிய தொழிற்சாலைகள் மடமடவென பெருகுகின்றன. அணு உலையில் ஒரு ஓரத்தில் மூலையில் சின்னதாக டேஞ்சர் என்ற விளம்பர பலகை தொங்குகிறது. ஆனால், அது யார் கண்ணிலும் படவில்லை.


விளம்பரம் முடிகிறது.

ஆண் : வெல்கம் பேக் டு தி ஒன் அண்ட் ஒன்லி நம்பர் ஒன் துடப்பக் கட்டையின் நம்பர் ஒன் ஷோ!

பெண் : லெட் அஸ் கண்டினியூ அவர் ஷோ. சமோசா, கச்சோரி வித்தேன்னு சொன்னீங்களே… அந்த வாழ்க்கை எப்படி போயிட்டிருந்தது?

அப்துல்லா : அல்லாவோட கருணையினால எல்லாம் ரொம்ப நல்ல நடந்துட்டிருந்துச்சு. அங்க இருந்தவங்க எப்பவுமே பசியோடதான் இருப்பாங்க. நல்லா வியாபாரம் ஆகும். தஹி பாரான்னு ஒண்ணு செஞ்சு விப்பேன்.

தஹி பராவா..?

ஆமா. உங்க ஊர்ல தயிர் வடைன்னு சொல்வீங்களே... மேல கொத்த மல்லியும் கார பூந்தியும் தூவி கொடுப்பேன் பாருங்க. எங்கிட்ட வாங்கிச் சாப்பிடறதுக்காகவே பக்கத்து ஊர்ல இருந்து பஸ் பிடிச்செல்லாம் வந்துட்டுப் போவங்க. அவ்வளவு அருமையா இருக்கும்.

பெண் : தயிர் வடையா... எங்களுக்கு ஸ்பெஷலா செஞ்சு எடுத்துட்டு வந்திருக்கீங்களா..? நாக்குல எச்சி ஊறுது.

ஆண் : கொஞ்சம் டீசண்ட்டா நடந்துக்கோயேன். எப்பப் பாரு தீனி தீனி. இதே நினைப்புதானா..? இந்த பிரேக்ல கூட நாலு வடை, ரெண்டு மசால் தோசை, ஒரு லிட்டர் காபி குடிச்சியே... பத்தாதா?

பெண் : ஏன் நான் சாப்பிட்டா உனக்கு என்ன..? வளர்ற புள்ள சாப்பிடறதை கண்ணு வைக்காத.

ஆண் : எது நீ வளர்ற புள்ள... இதப் பார்றா..? கல்யாணம் பண்ணி வெச்சிருந்தா இடுப்புல ரெண்டு, தலைல ரெண்டு, வயித்துல ரெண்டுன்னு பெத்துத் தள்ளியிருப்ப. நீ வளர்ற புள்ளையா..?

பெண் : சரி. நம்ம டீலிங்கை அப்பறம் வெச்சுப்போம். இப்ப சார் சொல்லறதை முழுசா ஒழுங்கா கேட்கவிடு. தாத்தா நீங்க சொல்லுங்க. விஷ வாயு கசிஞ்ச போது நீங்க எங்க இருந்தீங்க..? எப்படி தப்பிச்சீங்க..?

யா அல்லா... விஷ வாயு கசிஞ்ச அன்னிக்கு ராத்திரியை இப்ப நினைச்சாலும் உடம்பெல்லாம் நடுங்குதும்மா. அன்னிக்கு தலை சாய்ச்சது என்னமோ இந்த பூமியிலதான். ஆனா, கண் முழிச்சது நரகத்துலம்மா... வீட்டுல நாங்க நாலுபேரும் சாப்பிட்டுட்டு, தொழுதுட்டு படுத்திருந்தோம். வாசல்ல ஏதோ கூச்சல் குழப்பம். பக்கத்து வீட்டு சாவித்ரி அம்மா எங்க வீட்டுக் கதவைப் படபடன்னு தட்டினாங்க. கதவைத் திறந்து என்னன்னு கேட்டேன். ஓடுங்க… ஓடுங்க. இங்க இருந்தா செத்துப் போயிடுவீங்கன்னு சொல்லிட்டே அந்த அம்மா ஓடினாங்க. எனக்கு மொதல்ல என்னன்னே புரியலை. வாசல்ல ஒரே புகை மூட்டமா இருந்தது. என் பொண்ணையும் பையனையும் அவங்க கூட ஓடிப் போகச் சொல்லிட்டு வீட்டுக்குள்ள புகுந்து கதவை மூடிக்கிட்டேன்.

ஏன் நீங்க அவங்க கூட போகலியா..?

இல்லை. ஏன்னா புழுதிப் புயலோ மண் புயலோ அடிச்சா அப்படியே ஒரு இடத்துல முடங்கி உட்கார்ந்துடனும் அப்படின்னு எப்ப வாப்பா, உப்பாப்பா எல்லாம் சொல்லியிருக்காங்க. அதுமாதிரியே நானும் என் பொண்டட்டியும் செஞ்சோம். கொஞ்ச நேரத்துல புகை வாசக் கதவு இடுக்கு, ஜன்னல் இடுக்கு வழியா உள்ள கசிஞ்சு வந்தது.

ஆண் (பெண் பக்கம் திரும்பி) : மணிரத்னம் சார் படத்துல கதவைத் திறந்தா பனிப் புகை வருமே அதுமாதிரி… அருமையா இருந்திருக்கும் இல்லை.

அப்துல்லா : இது வேற புகை தம்பி. கொஞ்ச நேரத்துலயே அந்த வாயு தன் வேலையைக் காட்ட ஆரம்பிச்சிடிச்சு. கண்ல இருந்து தண்ணி கொட்ட ஆரம்பிச்சது. தொண்டை எரிய ஆரம்பிச்சது. இருமல், வாந்தின்னு எடுத்தோம். என்ன பண்றதுன்னே தெரியலை. அப்படியே அரை மயக்கத்துல வீட்டுலயே விழுந்திட்டோம்.

ஆண்டர்சன் : அதுதான் சரியான விஷயம். இந்த விபத்துல நிறைய பேர் செத்ததுக்கு முக்கியமான காரணம் உண்மையில நாங்க யாருமே கிடையாது. அந்த மக்கள்தான். அவங்க மட்டும் வீட்டுக்குள்ளேயே கதவை அடைச்சிட்டு, வாயு உள்ள வராம இண்டு இடுக்குகளை அடைச்சிட்டு இருந்திருந்தாங்கன்னா வாந்தி மயக்கத்தோட போயிருக்கும். எல்லாரும் பயந்து அலறி அடிச்சு வெளிய வந்ததுனால அந்த நச்சு வாயுவை சுவாசிச்சு மூச்சு முட்டி செத்துட்டாங்க. மரணத்துல இருந்து தப்பிக்கறேன்னு பேர்வழின்னு மரணத்தை நோக்கியே ஓடியிருக்காங்க. இன்ஃபேக்ட் இந்த சின்ன தற்காப்பு விஷயத்தை அவங்களுக்கு எடுத்துச் சொல்லியிருந்தாக்கூட நிறைய பேர் பிழைச்சிருப்பாங்க. ஆனா, தேங்க காட்… அந்த மாதிரி எதுவும் நடக்கலை.

சிங்ஜி : உண்மைதான். அப்படி நடந்திருந்தா விஷயம் சப்புன்னு முடிஞ்சிருக்கும். இப்படி வண்ணமயமான காட்சிகள் நமக்கு பார்க்கக் கிடைக்காம போயிருக்கும். நிறைய பேர் அன்னிக்கு இறந்ததுனாலதான் அவங்களுக்கு சரித்திரத்தில இடம் கிடைச்சது. பத்திரிகைகள், காட்சி ஊடகங்களுக்கு நல்ல தீனி கிடைச்சது. இன்ஃபேக்ட் அந்த இடத்துல நிறைய என்.ஜி.ஓ.ஸ் சேவை பண்றதுக்கு நல்ல வாய்ப்பு கிடைச்சது. இட் இஸ் தி ஸ்டார்டிங் பாயிண்ட். பிணங்களை எடுத்துப் போடறதுல ஆரம்பிச்சு நிறைய பேருக்கு தொடர்ந்து வேலை வாய்ப்பு கிடைச்சது. எல்லாவகையிலயும் அது ஒரு நல்ல ஆரம்பம்னுதான் சொல்லணும். சரி… அப்பறம் என்ன நடந்தது?

அப்துல்லா : அடுத்த நாள் ரொம்பவும் மோசமான நாளா இருந்தது. வீட்டு வாசக்கதவைத் திறந்து பார்த்தேன். நண்பர்கள், உறவினர்கள், தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் ஆடு மாடுகள், கோழிகள் என ஊரே இறந்து கிடந்தது. உயிர் தப்பியவர்கள் இறந்தவர்களை சோகமாகப் பார்த்தபடி உட்கார்ந்திருந்தார்கள்.

ஆண்டர்சன் : அருமையான காட்சி. தெரு முழுக்க இறந்து கிடக்கும் சடலங்கள் மீது அதிகாலை சூரியனின் செந்நிற கதிர் ஒளி பட்டுத் தெறிக்கும் காட்சி என் மனக்கண்ணில் விரிகிறது. நீங்கள் பாக்கியவான். நேராக அதைப் பார்த்திருக்கிறீர்கள். தப்பிச்சு ஓடினாங்களே உங்க குழந்தைங்க என்ன ஆனாங்க..?

அப்துல்லா : பையன் இறந்துட்டான். வேகமா ஓட முடியலைன்னு பொண்ணு ஒரு வீட்டுக்குள்ள போய் மயங்கி விழுந்திடுச்சு.

ஆண்டர்சன் : நான் சொல்லலை. வீட்டுக்குள்ள அடைஞ்சு கிடந்திருந்தா பிரச்னையே இருந்திருக்காது. அதுவும் போக அந்த வாயு ரொம்பவும் கனமானது. அது தரையோட தரையாவே பரவிச்சுது. அதனாலதான் குழந்தைகளும் சிறுவர்களும் நிறைய அளவில செத்தாங்க. பெரியவங்களுக்கு அவ்வளவு பிரச்னையில்லை. வேகமா ஓடினவங்க வேகமா மூச்சை இழுத்துவிட்டதால இறந்துட்டாங்க. அவங்க அப்படி செஞ்சிருக்கக்கூடாது. ஆனா விதியை என்ன பண்ண முடியும்..? சரி... நீங்க அதுக்கப்பறம் என்ன பண்ணினீங்க.

காலைல எழுந்திரிச்சதும் தெருவுல இறங்கி நடக்க ஆரம்பிச்சோம். செத்து விழுந்த ஒவ்வொருத்தருடைய உடம்பையும் திருப்பிப் பார்த்தோம். யாருக்காவது கொஞ்சமாவது உசிர் இருக்கான்னு மூக்குல கை வெச்சுப் பார்த்தோம். உடம்பெல்லாம் விறைச்சு குளிர்ந்து கிடந்தது. ரொம்ப நேரம் பைத்தியம் பிடிச்ச மாதிரி அலைஞ்சோம். பயங்கரமா பசி எடுத்துச்சு. வீட்டுல இருந்த சமோசா, கச்சோரிய எடுத்து சாப்பிட்டோம். அதுதான் நாங்க பண்ணின பெரிய தப்பு. அந்த விஷ வாயு வீட்டுல இருந்த எல்லா பொருளையும் விஷமா மாத்தியிருந்துச்சு. அது தெரியாததுனால அதைச் சாப்பிட்ட எங்களோட வயிறு ஒரேயடியா புண்ணாயிடிச்சு. தொண்டை வீங்கிடிச்சு. அன்னிக்கு ஆரம்பிச்ச வலியும் வேதனையும் 25 வருஷம் ஆகியும் இன்னமும் தொடர்ந்துட்டு இருக்குது. அந்த விபத்துக்கு அப்பறம் என்னால வேலைக்குப் போக முடியலை. வீட்டுல சம்பாதிச்சிட்டிருந்த ஒரே ஆள் நான்தான். இப்ப என்னால எழுந்திரிச்சு நடக்கக்கூட முடியலை. பெட்லயேதான் எல்லாம். என் பொண்ணுதான் எல்லாத்தையும் பார்த்துக்கறா... ரொம்ப கஷ்டமா இருக்கு... சாவு எப்ப வரும்னு காத்துக்கிட்டிருக்கேன் தம்பி.

ஆண் : சுதந்திரத்துக்காக காத்திருக்கறதைப் பார்த்திருக்கேன். வெற்றிக்காகக் காத்திருப்பதைப் பார்த்திருக்கேன். பிடிக்காதவங்களோட வீழ்ச்சிக்காகக் கூட காத்திருக்கறதைப் பார்த்திருக்கேன். ஆனா மரணத்துக்காக காத்திருக்கற ஆளை மொதல் தடவையா பார்க்கறேன். கிவ் ஹிம் அ பிக் ஹேண்ட்...

பார்வையாளர்கள் கை தட்டுகிறார்கள்.

இந்த சம்பவத்துக்கு யார் காரணம்னு நீங்க நினைக்கறீங்க.

எல்லாம் தக்தீர்தான்.

கரெக்டா சொன்னீங்க அப்துல்.

ஆண்டர்சன் அத்வானிஜியிடம் குனிந்து தக்தீர் என்றால் என்ன என்று கேட்கிறார். விதி என்று அவர் சொல்கிறார். அப்படியா..?

மன்மோகன் சிங்ஜி : எங்கள் முன்னோர்கள் எங்களுக்கு செஞ்சு தந்திருக்கற பாதுகாப்பு இது. நாம் எல்லாத்தையும் செஞ்சிட்டு, நம்ம கைல என்ன இருக்கு எல்லாம் விதின்னு வானத்தைப் பார்த்து கையைக் காட்டிட்டா போதும்.

ஆண்டர்சன், சிங்ஜியின் தோளில் தட்டிக் கொடுக்கிறார்.

ஆண்டர்சன் : ஆனா, இந்த நவீன விஞ்ஞான யுகத்திலயும் அதை நம்பறாங்களா..?

அத்வானிஜி : பழகிய தடத்திலன்றோ பாயும் பழையாறு.

மன்மோகன் ஜி : கரெக்டா சொன்னீங்க.

ஆண் அறிவிப்பாளர் (அப்துல்லாவைப் பார்த்து) : ஓ.கே. உங்க கதையை நல்லா சொல்லிட்டீங்க. ஐ திங் இட் ஈஸ் நைஸ். ஜட்ஜஸ் கிட்ட கேப்போம். சார் இவரோட பெர்ஃபாமன்ஸ் எப்படி இருக்கு?

ஆண்டர்சன் : இட்ஸ் குட். பட், அஸ் யு நோ, இட் ஈஸ் நாட் தி பெஸ்ட். இவங்க கிட்ட இருந்து நான் இன்னும் நிறைய எதிர்பார்க்கறேன்.

ஆண் : எவ்வளவு மார்க் கொடுப்பீங்க..?

ஐ திங் 6 வில் டூ.

மன்மோகன் சிங்ஜி நீங்க எவ்வளவு மார்க் கொடுப்பீங்க..?

8.5

ஆண்டர்சன் மெதுவாக சிங் பக்கம் குனிந்து முஸ்லீம் ஃபேக்டர்..? என்று கேட்கிறார். மன்மோகன் சிங்ஜி, சீ போங்க... என்பதுபோல் செல்லம் கொஞ்சுகிறார்.

ஆதர்னிய அத்வானிஜி... நீங்க எவ்வளவு மார்க் கொடுப்பீங்க..?

இந்த கதையில என்ன சோகமும் இருக்கறதா எனக்குத் தெரியலை. இவர் இன்னும் உயிரோடத்தான் இருக்கார். மனைவி கூட உயிர் பிழைச்சு ரொம்ப வருஷங்கள் உயிர் வாழ்ந்திருக்கங்க. மகள் நல்லாதான் இருக்கா. அவருக்கு கல்யாணம் ஆகி பேரன் பேத்திகள் எல்லாம் இருக்காங்க. இந்தியால இருக்கற மத்தவங்க மாதிரிதான் இவரோட குடும்பமும் இருக்கு. அதனால எனக்கு 3.5க்கு மேல மார்க் கொடுக்க முடியலை.

ஆண்டர்சன் மறுபடியும் குனிந்து, தி சேம் முஸ்லிம் ஃபேக்டர் என்கிறார். சிங்ஜி இப்போது வாய்விட்டுச் சிரிக்கிறார்.

ஆண் : ஓ.கே. நீங்க போகலாம்.

சக்கர நாற்காலியைத் தள்ளியபடியே உள்ளே கொண்டு செல்கிறார்கள்.

பெண் : அடுத்த எண்டர்டெய்னரைப் பார்க்கறதுக்கு முன்னால ஒரு சின்ன கமர்ஷியல் பிரேக்.

மெத்தில் ஐஸோ சயனைட் சோதனை

முதலில் எலியின் மீது...

அடுத்ததாக முயலின் மீது...

இறுதியாக இந்திய மக்களின் மீது.

கண்டறியப்பட்ட உண்மைகள் :

1. சோதனைக்கு உட்படுத்தப்பட்டபோது எலி, முயல் போலவே மனிதர்களும் இறந்தார்கள்.

2. எலி, முயல் மீது செய்த சோதனைக்கு யாரிடமும் நாம் பதில் சொல்லக் கடமைப்பட்டிருக்கவில்லை. அது போலவே இந்திய சாம்பிள்கள் மீது செய்யும் பரிசோதனைக்கும் யாரிடமும் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

பிரேக் முடிந்து ஷோ ஆரம்பிக்கிறது.

ஆண் (ஆண்டர்சனை நோக்கி) : எப்படி இதெல்லாம் உங்களால முடிஞ்சது? ஏதாவது ரூம் போட்டு யோசிப்பீங்களா..?

சேச்சே... அதெல்லாம் இல்லை. எல்லாம் தானா வர்றதுதான்.

எல்லாமே நீங்க எதிர்பார்த்தமாதிரியே நடந்துச்சா..? இல்லைன்னா கூடுதலாவோ குறைவாவோ இருந்துச்சா...?

ஆக்சுவல்லி நாங்க விரும்பினதைவிட கொஞ்சம் கம்மின்னுதான் சொல்லணும். நீங்களே பாருங்களேன். நடந்த சம்பவங்களைச் சொல்ல நிறைய பேர் உயிரோட இருக்காங்க. அது உண்மையிலயே நாங்க எதிர்பார்க்காததுதான். அங்க பூச்சிக் கொல்லி தயாரிக்கப் பயன்படுத்தின பொருள் ஒருவகையான சயனைட்தான். அதை சுவாசிச்சும் இத்தனை பேர் உயிரோட இருக்காங்கன்னா அது பெரிய ஆச்சரியம்தான்.

ஓ... கூண்டோட கைலாசத்தைத்தான் எதிர்பார்த்திருந்தீங்க இல்லையா..?

ஆமாம். ஆமாம். கரெக்டா சொன்னீங்க. கூண்டோட கைலாசம்.

அடுத்த தடவை இந்தத் தப்பு இல்லாம பார்த்துப்பீங்க இல்லையா..?

நிச்சயமா. இதுல இன்னொரு விஷயமும் இருக்கு. இந்த ஃபேக்டரியை போபால்ல ஆரம்பிச்சது தப்பா போச்சு. இதையே தமிழ் நாட்டுல ஆரம்பிச்சு இப்ப நடத்தின கூத்தையெல்லாம் செஞ்சிருந்தா, இன மானப் போராளிகள் ரொம்பவும் உற்சாகமா வட இந்திய சதி, ஆரிய சதி அப்படிச் சொல்லி இதை பெரிய லெவல்ல கொண்டுபோயிருப்பாங்க. தப்புப் பண்ணிட்டோம்.

சிங்ஜி : நல்ல யோசனையாத்தான் இருக்கு. இப்பயும் ஒண்ணும் கெட்டுப் போயிடலையே. நம்மால் நிச்சயம் முடியும். எனக்கு அந்த நம்பிக்கை நிறையவே இருக்கு.

சரி... இந்த சாதனையை எப்படி செஞ்சீங்க. நேயர்களுக்கு விரிவாச் சொன்னீங்கன்னா ரொம்பவும் பயனுள்ளதா இருக்கும். நாலு இடங்கள்ல அவங்களும் செஞ்சு பார்க்க வசதியா இருக்கும்.

உண்மையிலயே இந்த மாதிரியான விஷயங்களையெல்லாம் லீவ் இட் டு தி எக்ஸ்பர்ட்ஸ் அப்படிங்கறதுதான் சரியா இருக்கும். அவங்களாலதான் இது மாதிரி பெரிய அளவுல ப்ரொஃபஷனலா செய்ய முடியும். சின்னச் சின்ன அளவுல செய்ய ஆரம்பிச்சா செய்யறவங்களே அதுல மாட்டிக்க வேண்டி வந்துடும். அது நல்லதல்ல. அதனால இதையெல்லாம் நாங்க எப்படிச் செஞ்சோம்னு தெரிஞ்சிக்கோங்க. நீங்களா செஞ்சு பார்க்காதீங்க. அப்படியே ஏதவது செஞ்சுதான் ஆகணும்னா எங்களுக்கு ஒரு மெயில் தட்டிவிடுங்க. நாங்களே எல்லாத்தையும் அருமையா செஞ்சு கொடுக்கறோம். சரி நான் எப்படி செஞ்சோம்ங்கறதை சொல்றேன்.

மொதல்ல நாம என்ன செய்யப் போறோம் அப்படிங்கறதை நாசூக்கா, கவுரவமா சொல்லணும். அதாவது நமக்கு கொள்ளை லாபம் சம்பாதிக்கணும்னு ஆசை இருந்தா அதை நேரடியா சொல்லக் கூடாது. உலகத்துல மக்கள் பசியால வாடறாங்க. உணவுத் தட்டுப்பாடு அதிகமா இருக்கு. அதை நாங்க போக்கப் போறோம் அப்படின்னு பாலிஷா சொல்லணும்.

ஆரம்பமே பிரமாதமா இருக்கே.

இதுக்கே ஆச்சரியப்பட்டா எப்படி. இன்னும் போகப்போக எவ்வளவோ இருக்கு. உணவு உற்பத்தியை அதிகரிக்கறதுதான் நம்ம இலக்குன்னு சொல்லிட்டோம் இல்லையா. அதை எப்படி நடத்தறது?

பெரிய ஏரிகள், குளங்களை வெட்டி அல்லது தரிசு நிலத்துல நீர்ப்பாசன வசதியைச் செஞ்சு அது மூலமா செய்யலாம் இல்லையா..?

அது ஓல்ட் ஃபேஷன். அதுவும்போக, அதுக்கெல்லாம் நிறைய மேன் பவர் தேவைப்படும். நமக்கு நிறைய மனிதர்கள் இந்த உலகத்துல இருக்கவேண்டிய அவசியமே கிடையது. நமக்கு எடுபிடி வேலை செய்ய நாலு பேர் இருந்தாப் போதும். அதோடு நாம எதையும் விஞ்ஞானபூர்வமா புதுமையா செய்யணும். உணவு உற்பத்தியையே எடுத்துக்கிட்டா விளையற பயிர்ல பாதிக்கு மேல பூச்சிகள் சாப்பிட்டு அழிச்சிடுது. இங்க நான் பயன்படுத்தற வார்த்தைகளை கவனமா பார்க்கணும். உண்மையிலயே பூச்சிகள் பயிர்கள், இலை செடிகளைத் தின்னு வாழக்கூடியவை. அதனோட சர்வைவல் சார்ந்த ஒரு சாதாரண விஷயம்தான். ஆனா அதை அப்படி எளிமையா சொல்லக்கூடாது. பூச்சிகள் நம்மளோட எதிரி அப்படின்னு சொல்லணும். மனுஷன் நட்டு வளக்கற பயிர்களை அது சாப்பிட்டு அழிச்சிடுது. மனுஷனுக்குக் கிடைக்காம போயிடுது. அதைத் தடுக்க என்ன பண்ணனும்?

வேப்ப இலைக் கரசல் இல்லைன்னா சாணி, சாம்பல் கரைசலைத் தெளிக்கணும்... பூச்சிகள்லாம் பயந்து அலறி அடிச்சு ஓடிப் போயிடும்.

அங்கதான் நீங்க தப்பு பண்ணறீங்க. பூச்சியை விரட்டினா போதாது. அது மறுபடியும் கொஞ்ச நாள் கழிச்சு வந்துடும். அதனால ஒரேயடியா அழிச்சிடணும். அதுக்கு என்ன தேவை? சக்தி வாய்ந்த பூச்சிக்கொல்லி தேவை. அதைத்தான் நாங்க தயாரிக்கப் போறோம்னு களத்துல குதிச்சோம். சக்தி வாய்ந்த உரத்தைக் கண்டுபிடிச்சோம்.

நீங்களே இதையெல்லாம் செஞ்சீங்களா..?

அதுக்கு அவசியமே இல்லை. இந்த உலகத்துல காசு இருந்தா போதும் எது வேணும்னாலும் கிடைக்கும். உரம் தயாரிக்கணும்னா நாலு விஞ்ஞானிகளுக்கு கொஞ்சம் தவிடும் புண்ணாக்கும் வெச்சாப் போதும்... மள மளன்னு குடிச்சிட்டு நமக்கு பாலா கொடுத்துடுவாங்க. நாங்க அதைத்தான் செஞ்சோம். நாலு விஞ்ஞானிகளைக் கூப்பிட்டு கொறைஞ்ச விலையில உரம் தயாரிப்பது எப்படின்னு கேட்டோம். மணி மணியா யோசனை சொன்னாங்க. அதன்படி மெத்தில் ஐஸோ சயனைட்ன்னு ஒரு விஷம். அதை வெச்சு உரம் தயாரிச்சா கொள்ளை லாபம் கிடைக்கும் அப்படின்னு சொன்னாங்க. வேற முறையிலயும் அந்த பூச்சி மருந்தைத் தயாரிக்க முடியும். ஆனா அதுக்கெல்லாம் காசு ரொம்ப செலவாகும். அதனால மெத்தில் ஐஸோ சயனைட் வெச்சே தயாரிக்கறதுன்னு முடிவு பண்ணினோம்.

ரொம்பவும் அழகாச் சொன்னீங்க. ஆனா, அந்த பூச்சிக் கொல்லி நிறுவனத்தை எங்க நாட்டுல ஆரம்பிக்கணும்னு எப்படி தோணிச்சிது. எங்க மக்களோட கடின உழைப்பா… வியாபாரத்துக்கு இங்க இருந்த அழகான சூழலா..? எங்க தேசம் மேல அக்கறையா..? எது காரணமா இருந்தது.

(நடுவர்கள் மூவரும் விழுந்து விழுந்து சிரிக்கிறார்கள். கேள்வி கேட்டவருக்கு தான் ஏதாவது தவறாகச் சொல்லிவிட்டோமோ என்று குழப்பம் ஏற்படுகிறது. அதன் பிறகு தன் ஆடை எங்காவது கிழிந்துவிட்டதா என்று சுற்று முற்றும் பார்க்கிறார். ஒன்றும் இல்லை என்றதும் ஆண்டர்சனையே குழப்பத்துடன் உற்றுப் பார்க்கிறார்)

ஆண்டர்சன் (சிரிப்பை அடக்க முடியாமல்) : இந்தியர்களுக்கு நிறைய நகைச்சுவை உணர்ச்சி உண்டுன்னு சொன்னாங்க. ஆனா இந்த அளவுக்கு இருக்கும்னு நினைச்சே பார்க்கலை. குனிஞ்சு கொடுக்கறவன் முதுகுல தான தம்பி ஏற முடியும். சரி… விஷயத்துக்கு வர்றேன். விஞ்ஞானிங்க சக்தி வாய்ந்த உரத்தைக் கண்டுபிடிச்சிட்டாங்க. அதோட தயாரிப்பு செலவும் ரொம்பக் கம்மி. ஆனா அதுல ஒரு பெரிய பிரச்னை இருந்தது. அந்த தொழிற்சாலைல இருந்து கேஸ் லீக் ஆயிடிச்சின்னா மனுஷங்க எல்லாம் பூச்சி மாதிரியே சொத் சொத்னு செத்து விழுந்திடுவாங்க. போபால்ல கூட நீங்க பார்த்திருப்பீங்களே. நீங்க காட்டின ஷார்ட் ஃபிலிம்ல கூட பார்த்தோமே... தெருல, ரயில்வே ஸ்டேஷன்ல, மைதானத்துல கொத்துக் கொத்தா செத்துக் கிடந்தாங்களே... என்ன அற்புதமான காட்சி. தாந்தேயோட இன்ஃப்ர்னோல வர்ற மாதிரி ஹைலி ஆர்ட்டிஸ்டிக்... என்சாண்டிங் விஷுவல்ஸ்.

அப்போ அது அவ்வளவு மோசமானதுன்னு உங்களுக்கு மொதல்லயே தெரியுமா..?

ஆமா... அதுல என்ன சந்தேகம்? அதனாலதான் இந்தியாவுல அதை ஆரம்பிக்கணும்னு முடிவு செஞ்சோம்.

இல்லை உங்க நிறுவனத்தோட மருத்துவர்களெல்லாம் வாயுக் கசிவு ஏற்பட்டு எல்லாரும் வாந்தி எடுத்து மயங்கி விழ ஆரம்பிச்சப்ப, அந்த வாயு ரொம்பவும் பாவம். ஒண்ணுமே செய்யாது. கொஞ்ச நேரம் எரிச்சல் இருக்கும் அம்புட்டுத்தான் அப்படின்னு சொன்னாங்களே.

பின்ன எல்லாரும் செத்துத்தான் போவாங்கன்னு ஓப்பனா சொல்ல முடியுமா என்ன? அதுவும் போக நாங்க இன்னொன்னு நினைச்சிருந்தோம். நச்சு வாயுவினால மக்கள் இறக்கலை. இந்தியர்கள் சரியா சாப்பிடறதில்லை. சுத்தமா இருக்கறதில்லை. குளிக்கறதில்லை. நிறைய சாராயம் குடிக்கறாங்க. அதனாலதான் வாயு உள்ல போனதும் தாங்க முடியலை. செத்துட்டாங்க. அப்படின்னு ஏதாவது சொல்லலாமான்னு தான் நினைச்சோம்.

மானினிய மன்மோகன் சிங் ஜி : மே பி. அதுகூடக் காரணமா இருந்திருக்கலாம்.

(ஆண்டர்சன் சிரித்தபடியே) ஆனா இறந்தவங்களோட எண்ணிக்கை ரொம்பவும் அதிகமா இருந்ததுனால அப்படிச் சொல்ல முடியாம போச்சு.

ஆனா அமெரிக்காவில ஹூஸ்டனிலயும் இதே தொழிற்சாலையை கட்டியிருந்தீங்களே. அங்க எந்த பிரச்னையும் வரலியே..?

எப்படி வரும்? அங்கதான் பாதுகாப்பு ஏற்பாடுகள் முழு அளவுல இருந்ததே. மொதல்ல அந்த எம்.ஐ.சி. 4.5 டிகிரியிலதான் இருந்தாகணும் அதனால அதைச் சுத்தி குளிர் பதன ஏற்பாடு செய்திருந்தோம். அதையும் தாண்டி வாயு கசிஞ்சா அதுல உள்ள நச்சுப் பொருள் எல்லாம் எரிஞ்சு போகற மாதிரி சிம்னி ஏற்பாடு செய்திருந்தோம். அப்பறம் காஸ்டிக் சோடான்னு ஒண்ணு இருக்கு. அதைத் தூவினா இந்த வாயுல இருக்கற நச்சு எல்லாம் கரைஞ்சு போயிடும். இப்படி நிறைய அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் அழகா செஞ்சு வெச்சிருக்கோம். அதுமட்டுமில்லாமல் இந்த ஃபேக்டரிக்கு பக்கத்துல குறிப்பிட்ட மைல் தொலைவுக்கு குடிமக்கள் வசிக்கக் கூடாதுன்னு சொல்லியிருந்தோம். எல்லாமே பக்காவா இருந்தது.

இந்த ஏற்பாடெல்லாம் போபால்ல செய்யலியா..?

செஞ்சிருந்தோம். ஆனா உலுல்லாகாட்டிக்காக செஞ்சிருந்தோம்.

அப்படின்னா..?

பாக்கறதுக்கு என்னமோ பெரிய பந்தோபஸ்து மாதிரி தெரியும். ஆனா உள்ள எல்லாம் பொக்கா இருக்கும். இப்போ உங்களுக்கு ஒரு உண்மையைச் சொல்றேன். பாதுகாப்புக் கருவிகள் சரியா இயங்கலை அதனாலதான் இவ்வளவு பேர் செத்துட்டாங்கன்னு சொல்றாங்க இல்லையா. உண்மை என்னன்னா அந்தப் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஒழுங்கா இருந்திருந்தாலும் இந்த அழிவைத் தடுத்திருக்க முடியாது. ஏன்னா நாங்க ஆரம்பத்துலயே அப்படித்தான் டிஸைன் பண்ணியிருந்தோம்.

அது எப்படி முடிஞ்சது?

அது ரொம்ப ஈஸி. மொதல் வேலையா இந்த நிறுவனத்தோட அதிகக் கட்டுப்பாடு எங்க கிட்டத்தான் இருக்கணும்னு முடிவு பண்ணினோம்.

அந்நிய நாட்டு நிறுவனங்கள் இந்தியாவில ஆரம்பிக்கும்போது 49 சதவிகிதத்துக்கு மேல வெச்சிருக்கக்கூடாதுன்னு சட்டம் இருக்கே.

ஆமாம் இருக்கு. அதுக்கு என்ன இப்போ.

அப்ப உங்கிட்ட அதிக அதிகாரம் எப்படி வரும்.

ஏன் வராது. 51 சதவிகிதப் பங்குகளை இந்தியர்கள் வாங்கினாலும் அவங்களும் எங்க ஆளாத்தான் இருப்பாங்க. அதுமட்டுமில்லாம இந்த போபால் விஷயத்துல நாங்க இன்னொன்னு செஞ்சோம். இந்த டெக்னாலஜி ரொம்பவும் ஒசந்தது. அது இந்தியர்களுக்குத் தெரியாது. அதனால எங்க கை ஓங்கி இருந்தாத்தான் சரியா செய்ய முடியும்னு சொல்லி 50.9 சதவித அதிகாரத்தை நாங்க எடுத்துட்டோம்.

இந்திய அதிகாரிகள், அரசியல்வாதிகள் கேள்வி கேட்கலியா..? அவங்களை எப்படி சமாளிச்சீங்க.

சில பேர் கேஷாவே கொடுத்துடுங்கன்னு கேட்டாங்க. சிலபேர் மது மாது வேணும்னு கேட்டாங்க. அவங்க கேட்டதைக் கொடுத்தோம்.

அப்போ, டபுள் எம்.ஏ. வேலை பார்த்து வேலையை கச்சிதமா முடிச்சிட்டீங்க.

அப்படிச் சொல்ல முடியாது. நாய்க்கு எலும்புத் துண்டு போடற மாதிரின்னு தான் அதைச் சொல்லணும். நாம எந்த அளவுக்கு எலும்புத் துண்டு போடறோமோ அந்த அளவுக்கு விசுவாசமா இருக்கும். அதுவும் போக, இந்தியர்கள் மேல பழியைப் போடறது ரொம்ப ஈஸி. ஃபேக்டரியைச் சுத்தி வீடுகள் இருந்தது. அதனாலதான் நிறைய பேர் செத்துட்டாங்கன்னு சொல்லி ஈஸியா நாங்க தப்பிச்சிட முடியும்னு எங்களுக்கு ஆரம்பத்துலயே தெரியும். ஆனா ஒண்ணு மட்டும் இங்க கட்டாயம் சொல்லியாகணும். உங்க அரசியல் தலைவர்கள் மட்டும் இல்லைன்னா இதை எங்களால இவ்வளவு அழகா செஞ்சிருக்கவே முடியாது.

அவங்க என்ன பண்ணினாங்க.

போபால் ஃபேக்டரில கொஞ்ச நாளாவே பிரச்னை பெரிசாகிட்டு வர ஆரம்பிச்சது. சின்னச் சின்னதா நிறைய கேஸ் லீக் விபத்துகள் நடந்துச்சு. ஒண்ணு ரெண்டு பேர் செத்துட்டாங்க. நிறைய பேருக்கு உடம்புல நிறைய காயங்கள் ஏற்பட்டுச்சு. உங்க ஊர் பத்திரிகைக்காரர் கூட அழகா ஒரு விஷயம் சொன்னார்… போபால் ஒரு எரிமலையின் மேலே இருக்கிறது அப்படின்னு.

யாரும் அதைப் பார்த்து பயப்படலியா.? எந்த நடவடிகையும் எடுக்கலியா..?

இல்லை நடவடிக்கை எடுத்தோமே. போபால்ல கேஸ் லீக் ஆகற விஷயமும் அதனால வர்ற பாதிப்புகளும் தெரிய வந்ததும் எங்களோட இன் ஜினியர்கள் டீம் ஒண்ணை அனுப்பி எல்லாத்தையும் நல்லா சோதிக்கச் சொன்னோம்.

உங்க ஊர்ல இருந்தே வரச் சொல்லியிருந்தீங்களா..?

ஆமா அமெரிக்கால இருந்தே வரவைச்சிருந்தோம்.

அவங்க பார்த்துட்டு என்ன சொன்னாங்க.

ஆமா, ஃபேக்டரி மிகவும் மோசமான நிலையிலதான் இருக்கு. இந்த இந்த ஏற்பாடுகளை பலப்படுத்தணும்னு சொன்னாங்க. அவங்க கொடுத்த ரிப்போர்ட் படி அப்படியே பாதுகாப்பு ஏற்பாடுகளைப் பல மடங்கு அதிகரிச்சிட்டோம்.

பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரிச்சீங்களா..? அப்பறம் எப்படி இந்த அளவுக்கு மக்கள் செத்தாங்க.

நான் ஏற்பாடுகளை அதிகரிச்சேன்னுதான் சொன்னேன். எங்கேன்ன்னு சொல்லலியே… போபால்ல கிடைச்ச ஆய்வு முடிவுகளை வெச்சு ஹூஸ்டன்ல ஃபேக்டரில பாதுகாப்பை பலப்படுத்தினோம்.

எக்சலண்ட். இதை இதை இதைத்தான் உங்க கிட்ட எதிர்பார்த்தேன்.

ஊணிணிடூண் டூஞுச்ணூண tடஞுட்ண்ஞுடூதிஞுண். இடூஞுதிஞுணூ டூஞுச்ணூண ஞூணூணிட் ணிtடஞுணூண் (ஃபூல்ஸ் லேர்ன் தெம்செல்வ்ஸ். க்ளவர் லேர்ன் ஃப்ரம் அதர்ஸ்)ன்னு சும்மாவா சொன்னாங்க.

ஆடூணிணிஞீதூ ஞூணிணிடூண் ஞீணிண’t ஞுதிஞுண டூஞுச்ணூண ஞூணூணிட் tடஞுட்ண்ஞுடூதிஞுண் ன்னும் கூடவே ஒண்ணு சேர்த்துக்கலாம்.

க்ரேட்… க்ரேட். போபால்ல ஆரம்பத்துல நடந்த சின்னச் சின்ன விபத்துகளைப் பார்த்து இந்திய அரசு எதுவும் செய்யலியா..? பத்திரிகையில கூட அபாயம்னு செய்தி வந்ததா சொல்லியிருந்தீங்களே…

நான் மொதல்லியே இது ஒரு டீம் எஃபர்ட்ன்னு சொன்னேனே. அது வெறும் பேச்சுக்காகச் சொன்னது இல்லை. ஃபேக்டரி அபாய நிலைல இருக்கு. மக்களோட உயிர் எல்லாம் அபாயத்துல இருக்குன்னு செய்தி வந்ததும் ஒரு அமைச்சர் அழகா சொன்னாரு... இது என்ன செங்கல்லா... கருங்கல்லா... தூக்கி இங்க இருந்து அங்க வைக்க அப்படின்னாரு. அதுவும்போக இந்திய அரசும் ஒரு கமிஷனை அனுப்பி தொழிற்சாலையை சோதிக்க ஏற்பாடு பண்ணிச்சிது. அவங்க வந்து பார்த்துட்டு, வாங்க வேண்டியதை வாங்கிட்டு, பேஷ் பேஷ் ரொம்ப நன்னருக்கு அப்படின்னு சர்டிஃபிகேட் கொடுத்துட்டாங்க. இது எல்லாத்துக்கும் மேல ஃபேக்டரியைச் சுத்தி குடிசை போட்டுட்டு வசிச்சவங்களுக்கு அந்த இடத்துக்கு பட்டா போட்டுக் கொடுத்தாரு பாருங்க, அது தாங்க மாஸ்டர் ஸ்ட்ரோக். உண்மையிலயே அந்த விபத்துல அத்தனை பேர் சாக ஒரு அழகான வாய்ப்பை அதுதாங்க ஏற்படுத்திக் கொடுத்துச்சு.

பட்டா போட்டுக் கொடுத்தாங்களா..?

ஆமாம். தேர்தல்ல ஜெயிக்க வோட்டு வேணுமே. அன்னாடங் காய்ச்சிங்களுக்கு இப்படி ஏதாவது செஞ்சு கொடுத்த அவங்க மட்டுமில்லை அவங்களோட தலைமுறைகளே நமக்கு விசுவசமா இருக்குமே.

அபாயகரமான ஃபேக்டரிக்கு பக்கத்துல எப்படி பட்டா போட்டுக் கொடுத்தாங்க?

சிங்ஜி : அங்க இருக்கறவங்க செத்தா நமக்கு என்ன கவலைங்க? அந்த விபத்துல செத்தவங்க சாகாமலேயே இருந்திடப் போறாங்களா என்ன..? இல்லைன்னா உயிரோட இருந்தபோது இந்தியாவுக்கு ஒலிம்பிக்ல தங்கப்பதக்கமும் விஞ்ஞானத்துல நோபல் பரிசுமா வாங்கிக் கொடுத்துடப் போறாங்க. மூக்கு முட்ட மூணு வேளை தின்னுட்டு, காடு கரைய நாசப்படுத்தி போய்ச் சேர்ந்திருக்கப் போறவங்க தான. என்ன இப்ப கொஞ்சம் முன்னாலயே போயிட்டாங்க. பொதுவா நீங்க எந்தப் பிரச்னையையும் பாஸிட்டிவ் ஆங்கிள்ல பாக்கணும். ஒருத்தருக்கு ஒரு கை போச்சுன்னா... ஒரு கை போயிடிச்சுன்னு சொல்லக் கூடாது. இன்னொரு கை இருக்கே அப்படின்னு சொல்லணும்.

அதுவும் போயிடிச்சின்னா..?

ரெண்டு கால் இருக்கேன்னு சொல்லணும்’

அதுவும் போயிடிச்சின்னா..?

என்ன கேள்வி இது..? அதான் உயிர் இருக்கேன்னு சொல்லணும்.

அதுவும் போயிடிச்சின்னா..?

ஆஹா. விடமாட்டீங்க போல இருக்கே. இந்த உலக பந்தங்கள்ல இருந்தும் துன்பங்கள்ல இருந்தும் விடுதலை அடைஞ்சிட்டாருன்னு பிளேட்டை அப்படியே ஆன்மிகமாக்கிடணும்.

அப்படிக் குத்துங்க… இதுவல்லவோ தத்துவக் குத்து... யப்பா... எங்கயோ போறீங்க (மன்மோகனின் கையைப் பிடித்து முத்தமிடுகிறார்).

ஒண்ணும் இல்லை. இங்கயேதான் இருக்கேன். மேடம் சொல்றவரை இங்கயேதான் இருப்பேன். கவலையே படாதீங்க.

ஆண்டர்சன் சார் நீங்க இது பற்றி என்ன நினைக்கறீங்க?

நான் என்ன சொல்ல... இப்படியான ஒரு அருமையான பதிலை ஈஸ்டர்ன் ஃபிலாசஃபி ரத்தத்துல ஊறின ஒருத்தராலதான் சொல்ல முடியும். ஐ கேன் ஜஸ்ட் வொண்டர். ஹேட்ஸ் ஆஃப் மிஸ்டர் மன்மோகன் ஹேட்ஸ் ஆஃப். ஆனா, நாங்க இந்த பிரச்னையை வேற கோணத்துல பார்த்தோம். இப்ப இந்திய மக்கள் தொகையையே எடுத்துக்கோங்க. மொத்தம் 100 கோடிக்கும் மேல இருக்கும். அதுல முப்பதாயிரம் பேர் செத்ததா அன் அஃபிஷியலா சொல்றாங்க. அது உண்மைன்னே வெச்சுக்கிட்டாலும் 100 கோடில 30 ஆயிரம்ங்கறது .00003 சதவிகிதம் தான். அதாவது ஒரு மனுஷனோட கால்ல, ஒரு முள்ளுச் செடியோட இளம் முள்ளு லேசா வருடிக் கொடுத்துட்டுப் போற மாதிரிதான் அது. யாருக்கும் எந்த பாதிப்பும் கிடையாது. பட்டா போட்டுக் கொடுத்தது அந்த ஃபேக்டரி அபாயகரமானது இல்லைன்னு சொல்லவைக்க நாங்க எடுத்த முயற்சிகளோட ஒரு அங்கம்தான். எங்க விளம்பரத்துல கூட ஒரு விஞ்ஞானி சாக்லேட்டை சப்பிச் சாப்பிடற மாதிரி இந்த உரத்தை எடுத்து நாக்குல வெச்சு காட்டறமாதிரி விளம்பரம் செஞ்சிருந்தோம். அதைப் பார்த்துட்டு நிறைய பேர் எடுத்து சாப்பிட்டாங்க என்னவோ தெரியாது. ஆனா இந்த ஃபேக்டரினால எந்த பிரச்னையும் கிடையாதுன்னு இந்திய அரசு கற்பூரம் ஏத்தி அணைச்சு சத்தியம் பண்ணிச்சிது. அதுதான் எங்களுக்கு ரொம்பப் பெரிய பலமா இருந்துச்சு.

மானினிய மன்மோகன் சிங்ஜி : நீங்க எங்களை ரொம்பவே புகழறீங்க. நாங்க எங்க கடமையைத்தான் செஞ்சோம்.

ஆண்டர்சன் : அது சரிதான். ஆனா இந்தக் காலத்துல யார் அப்படி விசுவாசமா அர்ப்பண உணர்வோட செயல்படறாங்க சொல்லுங்க?

சிங்ஜி : நீங்க கூட எவ்வளவோ அருமையான விஷயங்களைச் செஞ்சிருக்கீங்களே. குறிப்பிட்ட அளவுக்கு மேல விக்காதுன்னு தெரிஞ்சும் எக்கச்சக்கமா தயாரிச்சு சேமிச்சு வெச்சீங்களே. அமெரிக்கா, ஐரோப்பாலல்லாம் 2 டன்னுக்கு மேல சேமிச்சு வைக்கக்கூடாது சொல்ற ஒரு பொருளை 90 டன்னுக்கு மேல தயாரிச்சு ஜம்னு அடுக்கி வெச்சீங்களே அதை யாரால பீட் பண்ண முடியும் சொல்லுங்க? அதுவும்போக அபாயமான வேதிப் பொருட்களை ஒரே பெரிய டேங்க்ல வெச்சிருக்கக்கூடாது. சின்ன சின்ன கண்டெய்னர்லதான் வெச்சிருக்கணும்னு சொன்னதை அழகா மீறியிருந்தீங்களே.

ஆண்டர்சன் : யெஸ் யூ ஆர் ரைட். அதுக்கான முழு கிரிடிட்டும் எங்களுக்குத்தான் கிடைக்கணும்.

சிங்ஜி : அது மட்டுமா, செலவைக் குறைக்கறேன் பேர்வழின்னு பாதுகாப்பு ஏற்பாடுகளை மொத்தமா முடக்கி வெச்சீங்களே...

ஆண் : பாதுகாப்பு ஏற்பாடுங்களைக் குறைச்சாங்களா..? சொல்லவே இல்லியே?

சிங்ஜி: அங்கதாங்க அமெரிக்கர்களோட எக்சலன்ஸி இருக்கு. அவங்களோட இன்ஜினியர்கள் வந்து சோதிச்சுப் பார்த்துட்டு ஒரு அறிக்கை கொடுத்தாங்க இல்லையா. அதைப் பார்த்ததும் ரெண்டு முக்கியமான வேலைங்களைச் செஞ்சாங்க. மொதலாவதா அமெரிக்க ஃபேக்டரில பாதுகாப்பு ஏற்பாடை பலப்படுத்தினாங்க. அதே கையோட இந்திய ஃபேக்டரில பாதுகாப்பு ஏற்பாட்டைக் குறைச்சாங்க.

ஆண் : அப்படியா..? அது ஏன்..?

சிங்ஜி : செலவு அதிகம் இல்லையா..? அவங்க என்ன தர்ம சத்திரமா நடத்தறாங்க. செலவு அதிகம்னு சொல்லி நிறைய பேரை வேலையைவிட்டுத் தூக்கினாங்க. பாதுகாப்புக் கருவிகள் எல்லாத்தையும் முடக்கிப் போட்டாங்க. எல்லாம் சரியா இருக்கான்னு ஒரு மணி நேரத்துக்கு ஒருதடவை செய்ய வேண்டிய சோதனைகளை ரெண்டு மணி நேரத்துக்கு ஒன்ணா ஆக்கினாங்க. ஏற்கெனவே நிறைய தயாரிச்சு வெச்சிட்டதுனால கொஞ்ச நாளாவே தயாரிப்பை நிறுத்தி வெச்சிருந்தாங்க. டைனசர்தான் தூங்கிட்டு இருக்கே. வேலில எதுக்கு மின்சாரம் அப்படின்னு ரெஃப்ரிஜிரேஷனை நிறுத்தி வெச்சாங்க. இதுல ஒரு சுவாரசியமான விஷயம் என்னன்னா, 610 அப்படிங்கற டேங்க்ல இருந்துதான் வாயு கசிஞ்சு இந்த விபத்து ஏற்பட்டுச்சு. அதை குளிர்ச்சியா வெச்சுக்க தேவைப்பட்ட குளிர்பதன வாயுவோட செலவு என்ன தெரியுமா..? ஒரு நாளைக்கு வெறும் சுமார் 1700 ரூபாய்தான்.

அந்த கம்பெனி மூலமா கோடிக்கணக்குல லாபம் கிடைச்சிருக்குமே?

ஆமாம். லாபத்தை இங்கதான் செலவழிக்கணும்... மறு முதலீடு செய்யணும்னு எந்த நிபந்தனையும் கிடையாதே..?

இப்ப இந்த சம்பவத்தையெல்லாம் கேள்விப்படுற அமெரிக்க மக்கள் அங்க மட்டும் நேர்மையா நடந்துகறீங்க. வேற நாடுகள்ல இப்படி நடந்துக்கறீங்களேன்னு கேள்வி கேட்க மாட்டாங்களா..?

அது எப்படி அவங்க கேள்வி கேட்பாங்க? பொறுப்பையெல்லாம் இந்திய அதிகாரிகள்கிட்ட விட்டாச்சே?

ஆனா, அதுல இருந்து வர்ற லாபத்தை அமெரிக்காவுக்குத்தான எடுத்துட்டுப் போயிருக்கீங்க..?

இது என்ன கேள்வி? உலகம் பூரா இதுதான நடக்குது. விவசாயி உழுது, நீர் பாய்ச்சி, காவல் காத்து பயிரை வளர்ப்பான். அறுவடை ஆனதும் அந்த தானிய மூட்டையெல்லாம் பன்ணையார் வீட்டுக்குத்தான போய்ச் சேரும். பட்டினி உனக்கு... பால் பாயாசம் எனக்கு... இதுதான உலக நியதி.

அது இல்லைங்க... கணவன் ஸ்ட்ரிக்டா இருந்தா நான் பத்தினியா இருப்பேன். கொஞ்சம் அசடா இருந்தா ஊர் மேய்வேன்னு சொன்னா அந்த பொண்ணுக்கு வேற பேருதான வைப்பாங்க. சட்டம் எங்க ஸ்ட்ரிக்டா இருக்கோ அங்க மட்டும் அதைப் பணிஞ்சு நடந்துப்போம். இல்லாத இடத்துல லஞ்சம் கொடுப்போம். பாதுகாப்பு ஏற்பாடை கவனிக்க மாட்டோம்னு சொன்னா திட்டமாட்டாங்களா..? சிங்கம் எல்லா இடத்துலயுமே சிங்கமாத்தான இருக்கணும். குகையை விட்டு வெளிய வந்தா பீயைத் தின்னுவேன்னு சொன்னா அது அசிங்கம் இல்லையா..? கார்ப்பரேட் எத்திக்ஸ்ன்னு ஒன்ணு கிடையாதான்னு கேட்க மாட்டாங்களா..?

சிங்ஜி : அப்படியெல்லாம் அவங்க எதுக்கு உணர்ச்சிவசப்படப் போறாங்க?

இல்லை இந்தத் தம்பி கேட்கற கேள்வி சரிதான். அவங்களை நாங்க எப்படி சமாளிப்போம்னா இந்திய மக்கள் ரொம்பவும் அலட்சியமானவங்க. வெவரம் பத்தாது. என்ன சொன்னாலும் கேட்கமாட்டாங்க. குழந்தைகள் படிக்கற ஸ்கூலுக்கு ஓலைக் குடிசையைப் போடுவாங்க. தீப்பிடிச்சி எரிஞ்சிடுமேன்னு பயப்படமாட்டாங்க. பைக் ஓட்டறதுன்னா ஹெல்மெட் போட்டுக்க மாட்டாங்க. கார் ஓட்டறதுன்னா ஏர் பேக் வெச்சுக்க மாட்டாங்க. எதை எடுத்தாலும் ரொம்ப அலட்சியமாத்தான் இருப்பாங்க. அது அவங்களுக்கு பெரிய பிரச்னையையும் கொண்டு வந்ததில்லை.

போபால் ஃபேக்டரியையே எடுத்துக்கோங்களேன். அங்க வேலை பார்க்கறவங்களே முகத்துக்கு முகமூடி போட்டுக்கச் சொன்னாக் கேட்க மாட்டாங்க. கைக்கு கிளவுஸ் போட்டுக்கச் சொன்னா கேட்க மாட்டாங்க. அவங்களுக்கே விஷயத்தைச் சொல்லிப் புரியவைக்க முடியாது அப்படிங்கறபோது மக்களுக்கு என்னத்தைச் சொல்லிப் புரிய வைக்கறது. உலகத்துல மூணு வழிகள் இருக்கு. சரியான வழி. தப்பான வழி. மூணாவதா இந்தியர்களின் வழி அப்படின்னு ஒண்ணு இருக்கு… அமெரிக்க மதிப்பீடுகள், சட்ட திட்டங்கள், வழி முறைகள் எதுவுமே அங்க செல்லுபடியாகாது... சிங்கத்தோட வாழ்க்கை முறை வேற... பன்னியோட வாழ்க்கை முறை வேற இல்லியா... அப்படின்னு சொல்லி சமாளிச்சிடுவோம். இப்ப கூட அமெரிக்கால போய் யார் கிட்டயாவது போபால் பற்றிக் கேளுங்க... நாம என்ன பன்ண முடியும். நல்லது பண்ணத்தான் போனோம். இப்படி ஆகிடிச்சேன்னுதான் சொல்லுவாங்க.

அங்கதான் நிக்கிறீங்க ஆண்டர்சன் சார்.

அத்வானிஜி : அதுவும்போக அமெரிக்காக்காரங்க மேல இதுல எந்தத் தப்பும் கிடையாது. ஒருவேளை டிசம்பர் ஒண்ணாந்தேதி பாதுகாப்பு ஏற்பாடுகளை நிறுத்தியிருந்து, டிசம்பர் 2ம் தேதி இந்த விபத்து நடந்திருந்தா பாதுகாப்பு ஏற்பாட்டை நிறுத்தினதுனாலதான் பிரச்னை வந்துச்சு. அதுக்குக் காரணமான அமெரிக்கக்காரங்கதான் பதில் சொல்லியாகணும்னு நாம் சொல்ல முடியும். ஆனால், பாதுகாப்பு ஏற்பாடுகள் அந்த ஃபேக்டரி ஆரம்பிச்ச அன்னிலேருந்தே இப்படித்தான் இருக்கு. குழாய்யெல்லாம் துருப்பிடிச்சா மாத்த மாட்டாங்க. அலாரம் வேலை செய்யாது. மீட்டர் ரீடிங் சரியா தெரியாது. பிரமாண்ட கொள்கலத்துலதான் எல்லாத்தையும் வெச்சிருந்தாங்க. அப்பப்போ வாயு கசியும். யாராவது ஒண்ணு ரெண்டு பேர் சாவாங்க. சிலருக்கு கண்ணு போகும். இதெல்லாம் நாலைஞ்சு வருஷமா வழக்கமா நடந்துட்டுத்தான இருந்தது. அதனால, அப்படியே வண்டி ஓடிடும்னு அவங்க நினைச்சிட்டாங்க. இப்படி நடக்கும்னு யாருக்குத் தெரியும் சொல்லுங்க.

சிங்ஜி : சரியாச் சொன்னீங்க. அதுவும்போக நம்ம நாட்டுக்கு இது மாதிரியான டெக்னாலஜிகள் கட்டாயம் தேவைதான். இப்போ நம்ம நாட்டோட வளர்ச்சி விகிதம் 6.1 ஆ இருக்குது. விவசாயத்துறையில வளர்ச்சி 4.2 ஆ இருக்குது. உரம், பூச்சி கொல்லியெல்லாம் வர்றதுக்கு முன்னால நம்மளோட உற்பத்தி 4 கோடியே 12 லட்சத்து, 111 டன்தான். அதெல்லாம் வந்ததுக்குப் பிறகு, 34 கோடியே 45 லட்சத்து 27 ஆயிரத்து 678 டன் உற்பத்தி செஞ்சிருக்கோம். அதெல்லாம் எப்படி சாத்தியமாச்சுது. இது போன்ற உரத்தையும் பூச்சிக் கொல்லியையும் பயன்படுத்தினதுனாலதான.

ஆனா நிறைய விவசாயிங்க தற்கொலை செய்யறாங்க. விலைவாசியெல்லாம் ஏறிக்கிட்டே போகுது. இந்தியால நிறைய பேர் பட்டினியாகவே இருக்காங்க. உற்பத்தி அதிகரிச்ச பிறகும் இதெல்லாம் ஏன் நடக்குது..?

சுய நலத்தோட யோசிக்கக் கூடாது தம்பி. நாம நமக்கா உற்பத்தி செய்யறோம். எல்லாம் ஏற்றுமதிக்காகத்தான செய்யறோம். டாலர் டாலரா நமக்குக் கிடைக்கும். அந்நியச் செலாவணி பெருகும். பண வீக்கம் குறையும். அமெரிக்காக்காரங்க மாதிரி நாலு பேர் நல்லா இருக்கறதுக்காக நாம கஷ்டப்படறதுல தப்பே இல்லை. அதனால, போபால் மாதிரியான சம்பவங்கள் நடக்கத்தான் செய்யும். நாம வளர்ச்சிப் பாதையில கம்பீரமா திரும்பிப் பார்க்காம ஓடிக்கிட்டே இருக்கணும்.

எல்லா சந்தேகத்துக்கும் நல்லா தெளிவா பதில் சொல்லிட்டீங்க. ஓ.கே. ஒரு காலர் லைன்ல இருக்காரு. அவர் கிட்டப் பேசுவோம். ஹலோ... சொல்லுங்க சார், எங்க இருந்து பேசறீங்க.

மதுரைல இருந்து பால் பாண்டி பேசறேன்.

சொல்லுங்க பால் பாண்டி...

போபால் பிரச்னைக்கு யார் காரணம் அப்படிங்கற அருமையான தலைப்புல நிகழ்ச்சி நடத்தறதுக்கு மொதல்ல வாழ்த்துக்கள் சார்.

நன்றி. உங்களை மாதிரி ஆட்களோட வாழ்த்துகள் இருக்கறதுனாலதா எங்க வண்டி நல்ல ஓடுது. அப்படியே ப்ரொட்யூசருக்குப் போன் போட்டு நம்மளைப் பத்தி நாலு வார்த்தை சொல்லி வையுங்க.

என்னங்க இது அந்த தவில்காரர் காதுல விழற மாதிரி சொல்லுன்னு சொல்ற மாதிரி சொல்றீங்களே... ஓ.கே. சொல்லி வைக்கறேன். சரி விஷயத்துக்கு வர்றேன். இந்த பிரச்னைக்கு முக்கிய காரணம் யாருன்னு பார்த்தா, அந்த தொழிற்சாலைல வேலை பார்த்ததுல அதிருப்தியுற்ற ஒரு தொழிலாளிதான் அந்த சதியைப் பண்ணியிருக்காரு.

அதெப்படி அவ்வளவு கரெக்டா சொல்றீங்க..?

ஆண்டர்சன் சாரோட ஆளுங்க அப்படித்தான சொல்லியிருக்காங்க. அவங்க சொன்னா அது சரியாத்தான் இருக்கும்.

ஆனா அவங்களால அதை நிரூபிக்க முடியலியே..?

அது பெரிய மேட்டரே இல்லை. இப்ப இந்த கதையில ஒரு ட்விஸ்ட் வருதா இல்லையா..? அதுதாங்க முக்கியம். இவனைக் கேட்டா அவனைக் காரணம்னு சொல்லணும். அவனைக் கேட்டா அடுத்தவனைக் காரணம்னு சொல்லணும். இப்படியே மாறி மாறி வட்டமா நின்னு சொல்லிக்கிட்டே இருக்கணும்.

நீங்க சொல்றதுலயும் ஒரு பாயிண்ட் இருக்கத்தான் செய்யுது. மனசுல குறிச்சு வெச்சுக்கறேன். நிகழ்ச்சில பங்கெடுத்ததுக்கு ரொம்ப நன்றி.

ஆண் : சார்... இது ரொம்ப வித்தியாசமான கதையா இருக்கே. இதைக் கொஞ்சம் விளக்குங்களேன்.

ஆண்டர்சன் : அதாவது டிசம்பர் 2 அன்னிக்கு வழக்கம் போல க்ளீனிங் வேலை நடந்திருக்குது. ரெஃப்ரிஜெரேஷனுக்கு செலவு அதிகம் ஆகும் அப்படிங்கறதுனால டேங்குகளைக் குளிர்ச்சியா வைக்க பக்கத்துல ஓடற பைப்புல நிறைய தண்ணிய பாய்ச்சிட்டிருந்தாங்க.

அது ரொம்பத் தப்பு இல்லையா..?

சிக்கனம் தம்பி. சிக்கனம். இந்தியன் லோக்கல் டெக்னாலஜி அது. இந்த விஷயத்துல எல்லாம் நாங்க கலாசார, பண்பாட்டு அம்சங்களுக்கு முக்கியத்துவம் கொடுப்போம். அதன்படி தண்ணியப் பைப்ல ஊத்தி விட்டபோது தப்பித் தவறி வேதிப் பொருள் இருந்த டேங்குக்குள்ள தண்ணி போயிடிச்சு. உடனே வேதிவினை ஆரம்பிச்சு நச்சுப் புகை வெளியேற ஆரம்பிச்சிச்சு.

ஆனா, யாரோ ஒருத்தர் வேணும்னே தண்ணியை டேங்குக்க்குள்ள ஊத்தினதா சொன்னீங்களே.

ஆமாம். அது நாங்க தப்பிக்க சொன்ன கதைதான். வேணும்னே சதி செய்யாம தண்ணி அந்தப் பக்கம் போக வாய்ப்பே கிடையாதுன்னு நாங்க அடிச்சி சொன்னோம். இந்திய அரசும் எங்களுக்கு அதுல உதவி பண்ணினாங்க. எங்க இன் ஜினியர்களை விட்டு நடுநிலையாளர்கள், பத்திரிகைக்காரர்கள், மக்கள் மத்தியில் சோதனை நடத்துவோம். சுத்தி உள்ள பைப்ல தண்ணி பாய்ச்சினா அது டேங்குக்குள்ள போகாதுன்னு செஞ்சு காட்டறோம் அபப்டின்னு சொன்னோம். இந்திய அதிகாரிகள் அதுக்கு அனுமதி தரமாட்டேன்னு சொல்லிட்டாங்க.

மாட்டேன்னு சொன்னாங்களா..? ஏன்..?

ஏன்னா அப்படி செஞ்சிருந்தா எங்க மேலதான் தப்புங்கறது தெரிஞ்சிருக்குமே. யாரோ ஒருத்தன் வேணும்னே தண்ணியை திறந்துவிட்டுட்டான்னு நாங்க சொல்றது பொய்னு ஆயிடுமே. அதனால, நாங்க உங்க வீட்டுக்குள்ள வந்து சோதனை போடறோம்னு வீராப்பா சவால் விட்டோம். தப்பே செய்யாத அவங்க எங்களைக் காப்பாத்தறதுக்காக ஏதோ அவங்க பேர்ல தப்பு இருக்கற மாதிரி முடியாதுன்னு சொன்னாங்க. இப்ப உலகத்துக்கு எங்க மேல தப்பு இல்லைங்கறது உறுதியாகிடிச்சு. இது மாதிரி அவங்க செஞ்சு கொடுத்ததையெல்லாம் நினைச்சா உடம்பெல்லாம் ஃபுல்லா புல்லரிக்குது தம்பி.

ஓ.கே. சார். உங்க கிட்ட இன்னும் நிறைய கிடைக்கும்னு தெரியுது. அடுத்ததா நாம ஒரு போட்டியாளரை அழைப்போம். அதுக்கு முன்னால சின்ன கமர்ஷியல் பிரேக்...

No comments:

Post a Comment