இருட்டில் இருந்து வெளிச்சத்தை நோக்கி...

Thursday, July 29, 2010

ரயிலும் ரயில் சார்ந்த நிலமும்

இருக்கைகள் இருந்தும்

படியோரமாக அமர்ந்து செல்லும் நரிக்குறவர்கள்



கழுத்தை நெரிக்கும் நெரிசலிலும்

ஒரு கையால் கம்பியைப் பிடித்தபடி

விவிலியம் படிக்கும் விசுவாசி



தொலைதூர ரயில் பயணிகளின்

சூட்கேஸ்களைச் சுமந்து செல்ல

பிளாட்ஃபாரத்தில் காத்திருக்கும் தோழர்கள்



ஆளற்ற பெட்டியில்

‘ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது’

என்று பாடியபடியே கையேந்திச் செல்லும் பார்வையற்றவர்



வாடகைக்கு வாங்கிய தாங்கு கட்டையுடன்

‘ஊனமான’ காலை கைலியால் மூடியபடி

படியோரம் அமர்ந்து பயணிக்கும் பிக்பாக்கெட்காரர்



இருபது வருடங்களுக்கு முந்தைய படியோரப் பயணத்தில்

கூவம் ஆற்றுக்குள் கை தவறி விழுந்த பச்சிளம் குழந்தையை

குச்சியால் கிளறித் தேடிக் கொண்டிருக்கும்

சித்தம் கலங்கிய தாய்



லெவல் கிராஸிங் தடுப்புக் கம்பிக்கு கீழாக

குனிந்து சிரமப்பட்டுக் கடப்பவர்களைப் பார்த்து

அலட்சியப் புன்னகையுடன்

தலை நிமிர்ந்து கடக்கும் குட்டிப் பையன்



இரந்து பெற்ற உணவை

மனநிலை குன்றிய சிறுவனுடன் பகிர்ந்து கொள்ளும்

ஃபிளாட்பார மூதாட்டி



பிறக்கப்போகும் குட்டிப் பாப்பாவுக்கு

ஸ்வெட்டர் பின்னிக் கொண்டு வரும் முதல் வகுப்பு ஆன்ட்டி



பள்ளிச் சீருடையுடன்

பூ விற்கச் செல்லும் மகளை

திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே

தன் கூடையுடன் அடுத்த கேரேஜுக்குச் செல்லும் பூக்காரம்மா



புறப்படும் இடமும் சேரும் இடமும் ஒன்றுதான்

என்றாலும்

எல்லோருடைய ரயிலும் ஒன்றல்ல

5 comments:

  1. /லெவல் கிராஸிங் தடுப்புக் கம்பிக்கு கீழாக

    குனிந்து சிரமப்பட்டுக் கடப்பவர்களைப் பார்த்து

    அலட்சியப் புன்னகையுடன்

    தலை நிமிர்ந்து கடக்கும் குட்டிப் பையன் /

    kalakkal...

    ReplyDelete
  2. மிக அருமையான கவிதை! அறிமுகம் செய்த ஷங்கருக்கு நன்றி!

    ReplyDelete
  3. வெகு அழகான, எளிமையான கவிதை!

    வாழ்த்துகள்!

    -ப்ரியமுடன்
    சேரல்

    ReplyDelete
  4. அற்புதம்.தொடருங்கள்.

    ReplyDelete