இருட்டில் இருந்து வெளிச்சத்தை நோக்கி...

Saturday, July 24, 2010

பொய்மையும் வாய்மையிடத்து - 1

குமரேசன். என்னோட பள்ளிக்கூடத் தோழர்களில் மறக்க முடியாதவன். நான் பிறந்தது, கொஞ்சம்போல வளர்ந்தது எல்லாம் ராஜபாளையத்தில்தான். அங்கு எனக்கு இருந்த நண்பர்களில் மிகவும் நெருக்கமானவன் வெள்ளைச்சாமி. அதற்கு அடுத்தது என் நெருங்கின நண்பன் குமரேசன்தான். ஆனால், குமரேசன் ராஜபாளையத்தைச் சேர்ந்தவன் அல்ல. சுசீந்திரத்துக்கு அருகில் இருந்த ஆச்ராமடத்தில் வசித்து வந்தான். எங்கள் பூர்விகமும் அதே ஆஸ்ரமம் கிராமம்தான். வேறு வேறு பெயராக இருக்கிறதே என்று குழம்ப வேண்டாம். ஒரு தேவ பாஷையில் அது ஆஸ்ரமம். இன்னொரு தேவ பாஷையில் அது ஆச்ராமடம்.

என் அப்பாவுக்கு மையத் தமிழகத்தில் ரயில்வே பணி கிடைத்திருந்ததால் எல்லைத் தமிழகத்தைவிட்டு உள்ளே இடம்பெயர்ந்திருந்தோம். ஆனால், என் அப்பா சொந்த ஊர்ப் பக்கம் டிரான்ஸ்ஃபர் வாங்கிக் கொண்டுபோக ரயில்வே பணியில் சேர்ந்த அடுத்த நாளில் இருந்தே முயற்சிகள் மேற்கொண்டு வந்திருந்தார். ஆனால், உங்கள் சேவை எங்களுக்குத் தேவை என்று சொல்லி மையம் அவரை ஆட்கொண்டுவிட்டது. கடைசியாக, ஒருவழியாக ரிட்டயர்டு ஆவதற்கு முன்பாக, நெல்லைக்கு அவருக்கு டிரான்ஸ்ஃபர் கிடைத்தது.

எப்படா என்று காத்திருந்த அப்பா, எங்களிடம் கூட ஒரு வார்த்தை சொல்லாமல் இடம் பெயர்த்துவிட்டார். கோடை விடுமுறைக்கு எப்போதும் சுசீந்திரத்தில் இருந்த தாத்தா வீட்டுக்கு நாங்கள் வந்து போவது வழக்கம். அதுபோல் அழைத்துக்கொண்டு வந்தவர் நாடகங்களில் பின்புல காட்சியை மாற்றுவதுபோல் ராஜபாளையத்தின் படுதாவை முற்றிலுமாக மாற்றிவிட்டார்.

நான் சுசீந்திரத்தில் இருந்த ஸ்ரீ மூலம் திருநாள் சஷ்டியப்தபூர்த்தி மெமோரியல் பள்ளியில் ஏழாம் வகுப்பில் சேர்க்கப்பட்டேன். எனக்கு, சுசீந்திரத்தை அந்தச் சிறு வயதிலேயே பிடிக்கும்தான். ஆனால், கோடை விடுமுறைக்கான ஸ்தலமாக மட்டுமே மனதில் பதிந்திருந்தது. இனிமேல் அங்குதான் வாழ வேண்டும் என்று சொன்னதும் என்னால் தாங்க முடியவில்லை. ராஜபாளையத்து மந்தைவெளியும், அய்யனார் அருவியும், கொண்டனேரிக் கம்மாயும், வெள்ளைச்சாமியும், கொடுக்காப்புளி மரமும் ஒரு சேர என்னிடமிருந்து பறிக்கப்பட்டதும் அதிர்ந்துபோய்விட்டேன். இதை மட்டும்தானா இழந்தாய் என்று கேட்பவர்களுக்கு மட்டும் ரகசியமாக ஒரு விஷயம் சொல்கிறேன்; மற்றவர்கள், அடுத்த பாராவுக்குச் சென்றுவிடுங்கள். ராஜபாளையத்தில் ஆறாம் வகுப்பில் பச்சை பட்டுப் பாவாடை சட்டையுடன் ,சிவப்பு ரெட்டைச் சடை பின்னி, பூச்சூடி பொட்டு வைத்து, கால் கொலுசு சலங் சலங் என ஒலிக்க வந்த பொன்னியையும் அந்த இடப்பெயர்வு என்னிடமிருந்து ஒரேயடியாகப் பறித்துவிட்டது.

இவ்வளவு வேதனையில் இருந்த நான் சுசீந்திரத்தில் பதியம் போடப்பட்டபோது, வேர் பிடித்துக் கிளை பரப்ப உதவியாக இருந்தது குமரேசன்தான். நான் முதல் நாள் பள்ளிக்குப் போனபோது தாத்தா பள்ளிக்கூட வாசல் வரை வந்து வழியனுப்பினார். ஆனால், பள்ளி முகப்பில் இருந்த காலியான பரந்து விரிந்த மைதானத்தில் தன்னந்தனியாகத்தான் போக வேண்டியிருந்தது. திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே போனேன். நான் பார்வையில் இருந்து மறைவது வரை தாத்தா அங்கேயே இருந்தார். ஏழாம் வகுப்பு எங்கே என்று கேட்டு விசாரித்து போனேன். வகுப்பறை வாசலில் நான் போய் நின்ற போது, சின்னம்மை டீச்சர் பக்கத்து வகுப்பு ஆசிரியருடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தார். என்னைக் கவனிக்கவேயில்லை. பள்ளிக்கூடத்துக்குப் படிக்க வந்தால் நேராக வகுப்புக்குள் நுழைய வேண்டியதுதானே என்பதுபோல் இருந்தார். நான் வாசலிலேயே நின்று கொண்டிருந்தேன். லேசாக வகுப்புக்குள் எட்டிப் பார்த்தேன். உள்ளே மாணவர்கள் ஒரே வேடிக்கையும் விளையாட்டுமாக இருந்தனர். எனக்கு அவர்களைப் பார்க்கவே பிடிக்கவில்லை. தெற்குச் சீமையில் இருந்து ஒருவன் நட்பு பாராட்டி வந்திருக்கிறேன்; அது பற்றிய எந்த அக்கறையும் இல்லாமல் அவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். அதைவிட எனக்கு இன்னொரு அதிர்ச்சியும் காத்திருந்தது. அந்த வகுப்பில் பெண்களே கிடையாது!

அப்பா மீது பயங்கரமாகக் கோபம் வந்தது. சுசீந்திரத்துக்கு வரணும்னும் இந்த கருமாந்திர பள்ளிக்கூடத்துல சேரணும்னும் யார் இப்ப அழுதா..? என்று மனதுக்குள் அப்பாவை திட்டினேன். வகுப்பில் இருந்த ஒரு தடியனும் என்னைப் பொருட்படுத்தவே இல்லை. யதேச்சையாகத் திரும்பிப் பார்த்த சின்னம்மை டீச்சர், ஏம்மக்கா அங்கியே நிக்க... உள்ள போ என்று சொல்லிவிட்டு பேச்சில் மும்முரமானார். செருப்பை வாசலில் கழட்டி வைத்துவிட்டு உள்ளே நுழைந்தேன். ஒட்டுமொத்த வகுப்பும் சிரித்தது. ஏன் என்று எனக்குப் புரியவில்லை. ரொம்பவும் அவமானமாக இருந்தது. திரும்பிப் போய்விடலாமா என்று தோன்றியது. நின்று கொண்டே இருந்தேன். எங்கே உட்கார என்றும் தெரியவில்லை. நான் எந்த இருக்கை பக்கம் திரும்பினாலும் அதற்குப் பக்கத்தில் இருந்தவர்கள் தங்கள் பையை எடுத்து வைத்தோ கால் அகற்றி உட்கார்ந்தோ என்னை மறுதலித்தனர்.

என் கால்கள் நடுங்கி, உடல் வேர்க்க ஆரம்பித்தது. கடவுளே, இதை ஒரு கனவென ஆக்கி என்னை என் உலகில் விழிக்க வைத்துவிடு என்று மனதுக்குள் கதறினேன். கண்களில் நீர் முட்டிக் கொண்டு வந்தது. அப்போதுதான் குமரேசன் கடைசி பெஞ்சில் இருந்து எழுந்து நின்றான். வாட்ட சாட்டமாக இருந்தான். உஷ் என்று அனைவரையும் அடக்கினான். என் அருகில் வந்து தோளில் கை போட்டு அழைத்துச் சென்று அவனருகில் அமரவைத்துக் கொண்டான். அந்த அரவணைப்பு அப்போது எனக்கு மிகவும் தேவையாக இருந்தது.

பேர் என்ன என்று கேட்டான். சொன்னேன். எந்த ஊர் என்று கேட்டான். சொன்னேன். அட நம்ம ஊருதானா..? உன்னை நான் பாத்ததேயில்லையே என்றான். புதுசா இப்பத்தான் வந்திருக்கோம் என்றேன். கட்டி அணைத்துக் கொண்டான்.

அப்போது பள்ளிக்கூட ஒலிபெருக்கியில் தேசிய கீதம் ஒலிக்க ஆரம்பித்தது. அனைவரும் இந்தியரானோம். சின்னம்மை டீச்சர் பேச்சை நிறுத்தினார். மாணவர்கள் அனைவரும் எழுந்து நின்றோம். நான் சற்று உரத்த குரலில் பாடினேன். சிலர் சிரிப்பை அடக்க முடியாமல் கஷ்டப்பட்டனர். நான் அதைப் பொருட்படுத்தவில்லை. முதலில் நான் இந்தியன். அதன் பிறகுதான் பாடகன். தேசிய கீதம் முடிந்ததும் அனைவரும் தமிழர்களானோம். சின்னம்மை டீச்சர் தன் பேச்சைத் தொடர்ந்தார். மாணவர்கள் கூச்சலிட ஆரம்பித்தனர். சிறிது நேரம் கழித்து சின்னம்மை டீச்சர் வகுப்பறைக்குத் திரும்பினார். வாசலில் இருந்த செருப்பைப் பார்த்ததும் அதிர்ந்தவர், யாருடே இங்க செருப்பைக் கழட்டிப் போட்டது என்று அதட்டினார். எனக்கு மறுபடியும் பயம் ஏற்பட்டது. மெதுவாக எழுந்து நின்றேன்.

இங்க வா..? யார் நீ..? உன்னை நான் இதுவரைப் பாத்ததேயில்லையே... என்றார்.

புதுசா சேந்திருக்கேன்.

ஓ அந்தப் பாண்டிக்காரன் நீதானா..? பாத்தா அப்படித் தெரியலையே... நம்ம ஜாடை தெரியுது...

தாத்தா, அப்பாவுக்கெல்லாம் இதுதான் சொந்த ஊரு.

அதான பாத்தேன். அது சரி, முன்னால படிச்ச ஸ்கூல்ல இப்படித்தான் செருப்பை வாசல்ல கழட்டிட்டிப் போவியா?

என்ன பதில் சொல்வதென்றே தெரியாமல் நின்று கொண்டிருந்தேன்.

கேக்கறேன்ல காதுல விழலியா..?

அந்த ஸ்கூல்ல போட்டுட்டுதான் போவேன். எங்க தாத்தாதான் சரஸ்வதி குடியிருக்கற இடம் செருப்புக் காலோட போகக்கூடாதுன்னு சொன்னா.

அந்த பதிலைக் கேட்டதும் சின்னம்மை டீச்சர் சட்டென்று ஒரு கணம் ஸ்தம்பித்தார். கண்களை மூடி பெருமூச்சுவிட்டார். மெதுவாக என் தலையை வருடினார்.

தெரியாம திட்டிட்டேன் மக்கா. போய் செருப்பு போட்டுட்டு வா. சாமி மனசுல இருந்தாப் போதும் என்றார்.

செருப்பை மாட்டிக்கொண்டு கடைசி பெஞ்ச் பக்கம் நகர்ந்தேன்.

எங்க போற என்று மறுபடியும் அவர் குரல் உயர்ந்தது.

என் இடத்தைக் காட்டினேன். குமரேசன் லேசாகப் பதுங்கினான். டீச்சர் அதைப் பார்த்துவிட்டார்.

மக்ளே குமரேசா, உன் வேலை தானா இது...

குமரேசன் மெதுவாக எழுந்து நின்றான். தன் பெரிய மூக்குக் கண்ணாடியைக் கீழிறக்கிவிட்டு சிறிது நேரம் கண்களால் அவனை முறைத்தார்.

இங்கயே நீ உட்கார்ந்துக்கோ என்று என்னிடம் முன் பெஞ்சைக் காட்டிச் சொன்னார்.

நான் அங்க உட்காந்துக்கறேனே என்று மெதுவாகச் சொன்னேன். புயல் மழை வீசும் பேரலைக் கடலில் எனக்குக் கிடைத்த ஒற்றைச் சிறு மரத்துண்டு அவன்.

சின்னம்மை என்னைச் செல்லமாக முறைத்தார்.

தோளில் கை வைத்தபடியே, நீ புதுசு பாத்துக்கோ. அவங்களைப் பத்தி உனக்கு ஒண்ணும் தெரியாது. நம்ம குமரேசர் இருக்காரே அவருக்கு நாளைக்கே ஒரு பொண்ணைப் பாத்துக் கட்டி வெச்சா பத்தாவது மாசத்துல டாண்னு ஒண்ணைப் பெத்துப் போடுவாரு. அவருக்குப் பக்கத்துல இருக்காரே ராமேந்திரர் அவருக்கு ஏற்கெனவே புள்ள குட்டிக உண்டுமோன்னு எனக்கு சம்சியம். அதனால, நீ அங்க போக வேண்டாம் கேட்டியா...

குமரேசன் என் பையை எடுத்துக் கொண்டுவந்து கொடுத்தான். குமரேசனின் பாண்டித்தியம் உண்மையிலேயே அவ்வளவு பிரசித்தமானது. ‘எல்லா வகுப்புகளிலும் தன் இருப்பை அழுத்தமாக பெஞ்சுகளில் பதிந்துவிட்டுத்தான் அடுத்த வகுப்புக்கு நகர்வான். அங்கிட்டு இங்கிட்டு’ வாத்தியார் அவனைப் பார்த்ததும் கெஞ்சுவார். அது எப்படிடே ஒரு மார்க் கூட போட முடியாத படி எழுத உன்னால மட்டும் முடியுது..? கன்யாகுமரில என்ன இருக்குன்னு கேட்டா, மலை இருக்கு சார்ன்னு சொன்னாக்கூட பரவாயில்லை. கடலுக்குள்ள எத்தனையோ மலைகள் முந்தியும் இருந்திருக்கு. இப்பவும் இருக்கும். பையன் மேல உள்ளதைப் பாக்கமாட்டான். உள்ள உள்ளதைத்தான் பார்ப்பான் அப்படின்னு மார்க் போட்டுரலாம். ஆனால், காடு இருக்குன்னுலா எழுதி வெக்க.

அவர் எப்பவுமே எல்லாருக்கும் மார்க்குகளை வாரி வழங்குவார். ஆனால், குமரேசன் அன்கோவுக்கு மார்க் போடுவது ரொம்பவும் கஷ்டம். கொஞ்சம் பழகிய பிறகு, ஏன் குமரேசா.. வாத்தியார் பாடம் எடுக்கறது உனக்குப் புரியலையா? என்று கேட்டேன். இல்லை எனக்குப் புரியற மாதிரி எடுக்க அவருக்குத் தெரியலை அப்படின்னு சொன்னான். ஒருவகையில அவனை அதை கேலியாத்தான் சொன்னான். ஆனால் அதுதான் உண்மையும் கூட. ஏன்னா அவன் படிப்பைத் தவிர வேற எல்லாத்துலயும் நம்பர் ஒண்ணா இருந்தான். ஸ்கூல்ல நடக்கற விளையாட்டுகள்ல கபடி, வாலிபால், ரன்னிங், ஈட்டி எறிதல், புல் அப்ஸ், தண்டால் இப்படி எதை எடுத்தாலும் அவன்தான் நம்பர் ஒன். பாட்டுலயும் அப்படித்தான். ஆனால், அவனைப் பாடவிடமாட்டார்கள். ஒழுங்காப் படிக்கத் துப்பில்லை. துரைக்கு இதுல பாட்டு வேறக் கேக்குதோ என்று திட்டிவிடுவார்கள்.

க்ராப்ட் கட்டை சார் மட்டும் தான் அவனோட பாட்டுத் திறமையை மதிப்பார். அவரோட வகுப்புகள்ல அவனைப் பாடச் சொல்லுவார். அவருக்கு ஸ்கூல்ல நாலடியார்ன்னு பேர் உண்டு. நாலடி கூட இருப்பாராங்கறது சந்தேகம் தான். ரெண்டடியார்ன்னு பேர் வெச்சிருந்தாக் கூட பொருந்தமாகத்தான் இருந்திருக்கும். ஆனா உயரக் குறைவை ஈடுகட்டற மாதிரி அகலமா வளர்ந்து கொண்டே போனவர். அவரைப் பார்த்ததுமே எல்லாரும் சிரிச்சிடுவோம். அவருக்கும் அது ரொம்பப் பிடிக்கும். பள்ளிக்கூடத்துலயே மிகவும் ஒதுக்குப் புறமாக இருக்கும், கல்வி சார்ந்த கடைசி கட்டடம் அந்த க்ராஃப்ட் வகுப்பறைதான். மாங்காய் பறித்தலும் தென்னந்தோப்பில் ஓடி விளையாடுவதும் கல்வியின் ஓர் அங்கம்தான் என்று கருதுபவர்கள் வேண்டுமானால் க்ராஃப்ட் சார் வகுப்பை கடைசிக்கு முந்திய கல்வி அறையாக எடுத்துக் கொள்ளலாம். தன்னோட பீரியட்ல குமரேசனைப் பாடச் சொல்லுவார். ஆளை அப்படியே உருக்கிடுவான். ஆனந்தம் விளையாடும் வீடு… அப்படின்னு பாட ஆரம்பிச்சா க்ளாஸே அழுதுடும். நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா அப்படின்னு பாடினா க்ளாஸே மாட்டு வண்டில ஏறி ஓடும். குரல்ல இருக்கற பாவம் இருக்கே அப்படியே மயங்க வெச்சிடும். படிப்புல மட்டும் வட்டப் பூஜ்ஜியம். கணக்கு வாத்தியார் வானா.பானா. வார்த்தைல சொல்றதுன்னா முட்டை வட்டப் பூஜ்ஜியம். அதாவது முட்டாள்ன்னா பூஜ்ஜியம். வடிகட்டின முட்டாள்ன்னா வட்டப் பூஜ்ஜியம். வடிகட்டி, சுடவெச்சு, குளிர வெச்சி மறுபடியும் வடிகட்டி கிடைச்ச முட்டாள்னா முட்டை வட்டப் பூஜ்ஜியம். 007ங்கற மாதிரி 000!

அதுக்கு அவனை எந்த வகையிலயும் குத்தம் சொல்லவே முடியாது. அவனுக்குப் படிப்பு ஏறலை. இல்லைன்னா அவன் சொல்ற மாதிரி அவன் மண்டையில் ஏறுகிற மாதிரி படிப்பு இல்ல. ஆனால், எப்படியோ பத்தாவது வரை உருண்டு திரண்டு வந்துவிட்டான். நான் பத்தாவதில் பள்ளி முதல் மாணவனாக வருவது எந்த அளவுக்கு நிச்சயமோ அந்த அளவுக்கு அவன் ஃபெயிலாகிவிடுவான் என்பதும் நிச்சயமானதாக இருந்தது. பத்தாம் வகுப்புத் தேர்வுகள் முடிந்ததும் குமரேசனிடம் எப்படி எழுதின என்று கேட்டேன். உண்மையை எழுதினேன் அப்படின்னு சொன்னான். பாட்ஷால ரஜினி இதே வசனத்தைப் பின்னாளில் சொன்ன போது எனக்கு குமரேசன் ஞாபகம்தான் வந்தது. அப்படி என்ன உண்மையை எழுதினன்னு கேட்டேன். அதான் எனக்கு படிப்பு வரலை. என் குடும்பம் ரொம்ப கஷ்டத்துல இருக்கு. எங்க அப்பா சாகக் கிடக்கறாரு. குடும்பத்தை நான் தான் காப்பாத்தியாகணும். புக் வாங்கக் காசில்ல. அடுப்பெரிக்க விறகில்லை; எப்படியாவது 35 மார்க்காவது போட்டுருங்க. அதுக்கு மேல வேண்டாம். என்னைக் கைவிட்டுராதீங்க ஐயா அப்படின்னு இப்படின்னு ஒவ்வொரு பரீட்சையிலயும் ஒவ்வொண்ணு எழுதினேன் அப்படின்னான். அவன் பொதுவா நகைச்சுவையா பேசுவான். அதுமாதிரி இதுவும் சும்மா கதையாத்தான் இருக்கும் அப்படின்னு நினைச்சேன். ஆனால், அந்த வருட பத்தாம் வகுப்பு ரிசல்டுல ரெண்டு அதிசயம் நடந்தது. ஒண்ணு நான் எங்க பள்ளியில மட்டுமில்ல சுற்றுவட்டாரத்துல இருந்த பல பள்ளிகளுக்கும் சேர்த்து முதல் இடத்துல வந்திருந்தேன். ரெண்டாவது அதிசயம் என்னன்னா குமரேசன் நிஜமாவே பாஸாகிட்டான்!

நாகர்கோவிலில் இருந்த சேது லட்சுமி பாய் மேல்நிலைப்பள்ளில பதினொண்ணாங் கிளாஸ்ல சேர்ந்தேன். ஆனால் குமரேசன் மேற்கொண்டு படிக்கலை. அவன் சொன்ன அளவுக்கு அவன் குடும்பம் ஏழ்மையானது இல்லைதான். ஆனால், பெரிய பணக்காரர்களும் கிடையாது. ஒரு மாதிரி வண்டி ஓடும் அவ்வளவுதான். ஏனோ, அதற்கு மேற்கொண்டு அவன் படிக்கவில்லை. ஊர் நடுவில் ஒரு பெட்டிக் கடை வைத்தான். அது உண்மையிலேயே பெட்டி சைஸில் இருந்த ஒரு கடைதான். கொஞ்சம் பெரிய சைஸ் பெட்டி அவ்வளவுதான். மூன்று பக்கமும் மரத்தாலான தடுப்பு. முன் பக்கத்திலும் இடுப்பு வரை மூடப்பட்டிருக்கும். அது பேட்லாக் போடப்பட்டு இருக்கும் என்பதால் திறந்து உள்ளே போய்வரலாம். உள்ளே ஒரு ஸ்டூல். அதில் அவன் உட்கார்ந்து நான் பார்த்ததில்லை.

ஆனால், வியாபாரத்தில் அவன் படு கில்லாடி. அவனிடம் போய் ஒரு பொருளைக் கேட்டால் இல்லை என்ற பதில் வந்ததே கிடையாது. எவ்வளவு வேணும் என்றுதான் கேட்பான். நீ மொதல்ல உன் கடைல இருக்கான்னு காட்டு என்று சொன்னால், அது உனக்குத் தேவை இல்லாதது. எவ்வளவு வேணும் எப்ப வேணும்னு சொல்லு. அந்த நிமிஷத்துல உன் கைல அது இருக்கும் என்பான். நாம் கேட்பதையெல்லாம் சமத்தாக விழுந்தடித்து ஓடிப் போய் வாங்கி வந்துவிடுவான் போலிருக்கிறது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. நீங்கள் கொடுத்த லிஸ்டை உங்களைப் போல் அவன் கடைய நம்பி, பொருள் வாங்க வருபவர்களிடம் கொடுத்து அனுப்பி வாங்கிவரவைத்துவிடுவான். அல்லது எந்தக் கடையில் அந்தப் பொருள் கிடைக்குமோ அங்கு கொடுத்துட்டுப் போனால் போதும் என்று சொல்லிவிடுவான். அந்தக் கடையில் இருந்து பொருள் தானாக அவன் கடைக்கு வந்துவிடும். அதுபோல் உங்கள் கையிலும் ஒரு பட்டியலைத் திணித்திருப்பான். அது உங்களுக்கு முன்பாக அங்கு வந்து போனவர் தந்த லிஸ்டாக இருக்கும். அவன் கடை என்ற பெயரில் நடத்தியது உண்மையில் கடையே கிடையாது. அது இ-பே மாதிரியான ஒரு பரந்த நெட்வொர்க்கைக் கொண்டது. நீங்கள் என்ன பொருள், எவ்வளவு, எப்போது என்ற தகவல்களை உள்ளீடு செய்தால் போதும். பொருள் உங்கள் வீடு தேடி வந்துவிடும். டெலிவரி சார்ஜஸ் கிடையாது. வெளிப்பார்வைக்கு அவன் நமக்கு வேலை செய்வதுபோல் தோன்றும். ஆனால், உண்மையில் அவன்தான் நம்மை வேலை வாங்கிக் கொண்டிருப்பான்.

இதைவிடப் பெரிய வேடிக்கை என்னவென்றால், அவன் ஒரு நாளைக்கு கடையில் இருந்து பத்து தடவையாவது வெளியே போய்விடுவான். கடையைப் பூட்டவெல்லாம் செய்யமாட்டான். கடைக்குள் இருந்து ரஜினி ஸ்டைலில் வெளியே துள்ளிக்குதித்து வீட்டுக்குப் போவான். கடையைப் போய் பார்த்துக்கோ என்று அம்மாவிடம் சொல்வான். அம்மாவும் தன் கை வேலையை முடித்துவிட்டு புறப்படுவார்கள். கடை, தேசிய நெடுஞ்சாலைக்கு இந்தப் பக்கம் இருந்தது. வீடுஅந்தப் பக்கம் இருந்தது. எனவே, அம்மா நெடுஞ்சாலைக்கு வந்து கண்ணுக்கெட்டும் தூரம் வரை பேருந்தோ, காரோ, ஸ்கூட்டரோ, எதுவும் வராத நேரமாகப் பார்த்து கடப்பார்கள். குமரேசனின் அண்ணன் எப்போதும் நெடுஞ்சாலைக்கு பக்கத்திலேயேதான் வட்டமடித்துக் கொண்டிருப்பார். அவர் அம்மாவை அதைவிடப் பாதுகாப்பாக, தூரத்தில் சைக்கிள் கூட வராத நேரமாகப் பார்த்து கடக்க உதவுவார். இவ்வளவு நேரம் ஆனாலும் கடை அதுபாட்டுக்குத் திறந்தபடியேதான் இருக்கும். அதுகூட அதிசயமில்லை. ஆனால், வியாபாரமும் கனஜோராக நடந்துகொண்டே இருக்கும். வருபவர்கள் கடையில் இருப்பதில் அவர்களுக்கு எது வேண்டுமோ அதை எடுத்துக்கொண்டு உத்தேசமாக ஒரு தொகையை நிர்ணயித்துக் கொள்வார்கள். கல்லாப்பெட்டியை எட்டித் திறந்து காசைப் போட்டுவிட்டு மீதிச் சில்லறையையும் எடுத்துச் செல்வார்கள். இப்படி பிஸினஸ் நடத்தினா எப்படி குமரேசா லாபம் பார்ப்பது என்று கேட்டால், லாபத்துக்கா பாபு கடை நடத்தறேன் என்பான்.

என்னுடன் மேற்கொண்டு படிக்கவில்லையென்றாலும் அவனை தினமும் சந்திப்பது தொடர்ந்து கொண்டிருந்தது. எங்கள் தெருவின் முனையில் அரசு தொடக்கப் பள்ளிக்கூடம் ஒன்று இருந்தது. அதற்கு முன்பாக பெரிய மைதானமும் உண்டு. இந்த உலகில் சூரியன் உதித்து மறையாத நாளும் இல்லை. அதுபோல் நாங்கள் கிரிக்கெட் விளையாடாத நாளும் கிடையாது. நான் ஸ்கூலில் இருந்து சைக்கிளில் ஊருக்குள் நுழைந்ததும் முதல் வேலையாகக் கடையில் குமரேசனிடம் ஆஜர் வைத்துவிடுவேன். பகலில் இரவில் எங்கு சுத்தினாலும் மாலையில் அவன் கட்டாயம் கைலி கட்டிக் கொண்டு கிரவுண்டுக்கு வந்துவிடுவான். எங்க ஊர் கிரிக்கெட் டீம்ல அவன் தான் ஒப்பனிங் பவுலர் மற்றும் மிடில் ஆர்டர் பேட்ஸ்மென். கபில்தேவ் மாதிரி. ஆனால், லைன் அண்ட் லென்த், இன் ஸ்விங், அவுட் ஸ்விங் எல்லாம் தெரியாது. அர்ஜுனனுக்கு, இலக்காக மாட்டப்பட்ட பறவையின் தலை மட்டுமே கண்ணுக்குத் தெரிவதுபோல் அவனுக்கு ஸ்டம்பு மட்டும் தான் கண்ணுக்குத் தெரியும். அதைக் குறிவைத்து காட்டுத்தனமான வேகத்தில் வீசுவான். நாலைஞ்சு பால்லயே ஸ்டெம்பு எகிறிடணும். இல்லைன்னா குறி ஸ்டெம்பிலருந்து பேட்ஸ்மெனோட மூக்குக்கு மாறிடும்.

எங்க டீம் டோர்னமெண்டுக்கு வருகிறது என்றாலே சுற்று வட்டாரங்களெல்லாம் அரண்டுவிடும். ஆரம்ப காலத்துல வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் உலகத்துல ஆதிக்கம் செலுத்தின மாதிரிதான் எங்க டீமும். எல்லாரும் டோர்னமெண்ட் தேதி குறிச்சி முடிச்சதும் முதல் வேலையா ஒலிம்பிக்ஸ் ஸ்டோர்ஸ்ல போய் ஒரு கப் வாங்குவார்கள். அப்படியே கோட்டாத்துல இறங்கி, வெற்றி பெற்றவர்கள் : ஆஸ்ரமம் கிரிக்கெட் அணி; இரண்டாம் இடம் பெற்றவர்கள் : ................. அப்படின்னு மேலயும் கீழயும் மெஷின் கட்டிங் பண்ணிக் கொண்டு வந்துவிடுவார்கள்.

ஸ்கூல்ல படிச்ச போதே அவன் பந்து வீசும் வேகத்தைப் பார்த்து பி.இ.டி.மாஸ்டர் அவனை நாகர்கோவில் அண்ணா ஸ்டேடியத்துல நடக்கற பயிற்சி முகாம்ல சேர்த்துவிட்டார். ரெண்டு மூணு வாரம் போனான். ஆனா, ஸ்கூல்ல காலைல பத்து மணிலயிருந்து நாலு மணி வரை ஓடியாடிட்டு சாயந்திரம் பஸ் பிடிச்சிப் போய் மறுபடியும் மாங்கு மாங்குன்னு பந்து வீச அவனால முடியலை. அங்க ஒரு கப் காபி, ஒரு வடை மட்டும் கொடுப்பார்கள். அவ்வளவுதான். ரெண்டு மூணு வாரத்துலயே அவனோட கனவுகள் முளைப்பதற்கு முன்பாகவே முடங்கிவிட்டன.

ஆனால், உள்ளூர் போட்டிகளில் தவறாமல் கலந்து கொள்வான். நான் ஓப்பனிங் பேட்ஸ்மன் மற்றும் சுழற்பந்து வீச்சாளர். பந்து சுழலாமலேயே கையைச் சுழற்றி வீசியதன் மூலமே சுழற்பந்து வீச்சாளர் என்று பெயர் பெற்று இந்திய அணியை ஆக்கிரமித்த சாமர்த்தியமெல்லாம் எனக்குக் கிடையாது. ஆனால், நான் வீசும் பந்துகள் சுழலும். நாங்கள் கிரிக்கெட் ஆர்வமாக ஆடத் தொடங்கிய காலத்தில் இந்தியா மாபெரும் தோல்விகளும் சில பல வெற்றிகளும் பெற்றுவந்த காலகட்டம். இந்தியா எந்தப் பாரபட்சமும் இன்றி எல்லாருடனும் தோற்கும் திறன் கொண்டதுதான் என்றாலும் பாகிஸ்தானுடனான போட்டியில் தோற்கும்போது ஊரே சோகத்தில் ஆழ்ந்துவிடும். ஆனால், இரண்டே பேர் மட்டும் கவலைப்படமாட்டோம். ஒன்று நான். இன்னொன்று குமரேசன். பொதுவாக நாம் ஜெயிப்பதில்லை. மற்றவர்கள் தான் அவ்வப்போது தோற்றுவிடுகிறார்கள் என்ற எளிய உண்மையை வெளிப்படையாக ஒத்துக் கொள்ளும் தைரியம் எங்கள் இருவருக்கும் உண்டு.

அதிலும் வெளிநாட்டு போட்டி என்றால் இந்தியா கட்டாயம் தோற்கும் என்பது எல்லாரும் ஒத்துக் கொள்ளும் உண்மையாகவே இருந்தது. குமரேசன் என்னிடம் கேட்பான், நாம ஏன் இப்படி வெளி நாட்டுல போய் நாயடி பேயடி பட்டு வர்றோம்?

அது குமரேசா, போக வர வண்டிச் சக்கரம் கொடுத்து, தங்க வெச்சு சாப்பாடும் போட்டு அனுப்பறாங்கள்ல; அந்த மேட்ச்ல போய் ஜெயிச்சா அவங்க மனசு கஷ்டப்படும் இல்லையா அதான் என்று சொல்வேன்.

அப்போ இந்தியால நடக்கற போட்டிலயும் ஏன் தோக்கறோம் என்று எதிர்க் கேள்வி கேட்பான். வீடு தேடி வர்ற விருந்தாளிங்க மனசை நோகடிச்சா அது அதைவிடப் பெரிய தப்பு இல்லையா அதான் என்று சொல்வேன். வெளிநாட்டுல இருக்கற பிட்ச்கள்ல ரப்பர் பந்து மாதிரி துள்றதுனாலதான நம்மாளுங்களால வெளையாட முடியாமப் போகுது. நம்ம பிட்ச்களையும் அதுமாதிரி செஞ்சா என்ன என்று ஒரு நாள் கேட்டான். இப்ப நாம இந்தியால நடக்கற மேட்ச்கள்ல ஜெயிச்சிக்கிட்டிருக்கோம். அதுவும் இல்லாமப் போகணுமா என்று பி.சி.சி.ஐ. தலைவர் ரேஞ்சில் ஒரு பதிலைச் சொன்னேன். அப்ப இப்படிப் பண்ணினா என்ன..? ஒரு நாலு பேட்ஸ்மனை மட்டும் செலக்ட் பண்ணி அவங்களுக்கு அப்படி பவுன்ஸ் ஆகிற பிட்ச்ல பிராக்டீஸ் கொடுத்து வெளிநாடு டூர் போகும்போது அவங்களை அனுப்பலாமே. உள்ளூர் போட்டிக்கு ஒரு டீம். வெளி நாட்டுக்கு இன்னொரு டீம்னு வெச்சிக்கலாமே என்றான். யோசனை நல்லாத்தான் இருக்கு. ஆனா நீ பி.சி.சி.ஐ. சேர்மனாக இப்போதைக்கு வாய்ப்பு இல்லை. நான் இந்திய அணியின் கேப்டனாகும் வாய்ப்பு எப்போதுமே இல்லை. இந்த நிலையில் நாம் என்ன செய்ய என்றேன். இல்லை பாபு… ஏதாவது செஞ்சாகணும் என்றான். பார்த்துப் பண்ணுவோம் என்று சொல்லி சமாதானப்படுத்தி அனுப்பினேன். ஆனால், அவன் சமாதானமாகவில்லை. அடுத்த நாளே இருபது ஆபீஸ் கவர், ஒரு கட்டு ஸ்டாம்பு, ஒரு நல்ல பேனா எல்லாம் வாங்கிக்கொண்டு வீட்டுக்கே வந்துவிட்டான். என்னது இது என்றேன்.

லெட்டர் எழுது என்றான்.

என்ன எழுத..?

அதான் நேத்து நான் சொன்னேனே அந்த யோசனையை அப்படியே எழுது.

எழுதி..?

அவங்க அட்ரஸுக்கு அனுப்பு என்றான்.

யாருக்கு?

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு…

நான் அவனிடம் வேறு சில விஷயங்களைச் சொல்லி விளக்க முயன்றேன். ஆனால், கடைசியாக அவன் ஒரு கேள்வி கேட்டான். அது என் தன்மானத்தை மிகவும் குத்திவிட்டது. பாபு… உனக்கு இங்கிலீஷும் ஹிந்தியும் உண்மையிலயே தெரியுமா..? சும்மா பம்மாத்து பண்றியா..? இதுக்கு மேலும் பொறுக்கக்கூடாது என்று நானும் களத்தில் குதித்தேன். வெறும் ஒரு யோசனை மட்டும் போதாது என்று வேறு சில நல்ல யோசனைகளும் யோசித்தோம். அதில் இரண்டை மட்டும் உங்களிடம் சொல்கிறேன். முதலாவதாக இப்போது எல்லா பேட்ஸ்மென்களும் தங்கள் கிரீஸில் நின்றே விளையாடுகிறார்கள். ஸ்கொயர் கட் செய்ய முடியும்படியான பந்தை அதன்படியே அடித்தால் எந்த கோணத்தில் செல்லுமோ அங்கு ஒரு ஃபீல்டரை நிறுத்தி வைத்திருப்பார்கள். கவர் டிரைவ் அடிக்க முடியும்படியான பந்தை அடித்தால் எந்த திசையில் போகுமோ அங்கு ஒரு ஃபீல்டரை நிறுத்தி வைத்திருப்பார்கள். பொதுவாக எல்லா அணியினரும் பின்பற்றும் வியூகம் இதுதான். பந்து வீச்சாளர்கள் தாங்கள் போடப் போகும் பந்துக்கு ஏற்ப ஃபீல்டிங்கை செட் செய்து கொள்வார்கள். அந்தப் பந்தை எங்கெல்லாம் அடிக்க முடியுமோ அங்கெல்லாம் தடைச்சுவர் எழுப்புவதுபோல் ஃபீல்டர்களை நிறுத்தியிருப்பார்கள். இந்திய வீரர்கள் மட்டுமல்ல வேறு நாட்டு வீரர்களும் மடார் மடார் என்று ஃபீல்டரின் கைக்கு நேராகப் பந்தை அடிப்பதைப் பார்க்கும்போது எங்களுக்கு எரிச்சலாக வரும். இவர்கள் ரன் எடுப்பதற்காகக் களத்தில் இறங்கியிருக்கிறார்களா அல்லது ஃபீல்டிங் பிராக்டீஸ் கொடுக்க இறங்கியிருகிறார்களா என்று கடுப்பாக இருக்கும். எங்கள் அளவுகோலைப் பொறுத்தவரையில் எந்தப் பந்தும் ஃபீல்டருக்கு நேராக அடிக்கப்படக் கூடாது. அதற்கு நாங்கள் ஒரு அழகான டெக்னிக் கண்டுபிடித்திருந்தோம். கிரீஸில் இருந்து இரண்டு மூன்று ஸ்டெப் முன்பாக வந்துவிட்டால் போதும். தடைச்சுவர் எல்லாம் தகர்ந்துவிடும். ஸ்லாக் ஓவர்களிலும் பின்ச் ஹிட்டர்களும் எப்போதும் இன்று இதைப் பின்பற்றத்தான் செய்கிறார்கள். ஆனால், இது பந்துகள் ஃபீல்டர் கைகளுக்கு நேராக அடிக்கப்பட்டிருந்த காலத்தில் எங்களால் யோசிக்கப்பட்ட வழிமுறை. காப்பி ரைட் சட்டத்தின்படி பதிவு செய்து வைக்காததால் எங்கள் கையைவிட்டுப் போய்விட்டிருக்கிறது. நாங்கள் உண்மையில் உலகைவிட 10-15 வருடங்கள் முந்தியிருந்தோம்.

இன்னொரு யோசனையும் நாங்கள் யோசித்திருந்தோம். இப்போது பேட்ஸ்மென்கள் எந்த நிலையில் நிற்கிறார்களோ அதை அப்படியே 90 டிகிரி திருப்பிக் கொண்டுவிடவேண்டும். அதாவது இப்போது கால்கள் பாயின்ட் திசையைப் பார்த்தபடி நிற்கிறோம். லெக் அம்பயருக்கு முதுகைக் காட்டியபடி நிற்கிறோம். அதை அப்படியே மாற்றி கீப்பருக்கு முதுகைக் காட்டுவதுபோல் திரும்பிக் கொண்டுவிடவேண்டும். இதனால் கிடைக்கும் சாதகங்கள், அதில் இருக்கும் பாதகங்களைவிட அதிகம். குறிப்பாக நேருக்கு நேராக பளார் பளார் என்று பின்னி எடுத்துவிட முடியும். அங்கு ஃபீல்டரை செட் பண்ணவே முடியாது. அப்படியே நிறுத்தினாலும் வேறொரு பெரிய இடைவெளி கிடைத்தே தீரும். இந்த யோசனைகளையெல்லாம் செந்தமிழிலும், ஸ்டைலிஷ் ஆங்கிலத்திலும் ராஷ்டிரபாஷா ஹிந்தியிலும் எழுதி அப்போதைய வீரர்கள், போர்ட் தலைவர்கள் அனைவருக்கும் போஸ்ட் அனுப்பினோம். அதன் பிறகும் இந்திய அணி பழகிய பாதையிலேயே ராஜ நடை போடுவதைப் பார்க்கும்போதெல்லாம், என் அருகில் வந்து கண்ணோடு கண் பார்த்து மெதுவாகக் கேட்பான், பாபு… உண்மையிலயே அந்த லெட்டரையெல்லாம் போஸ்ட் பண்ணினியா? சாமி சத்தியமா அனுப்பத்தான் செஞ்சேன் என்பேன். அப்பறமும் ஏன் இப்படி நடக்குது என்று நிஜமாகவே வருந்துவான். ஸ்ரீகாந்த், அதிரடி மட்டையாளர், கேர் ஆஃப் கிரிக்கெட் வாரியம், சென்னை என்ற ரேஞ்சில் நாங்கள் அனுப்பிய கடிதங்கள், தவறான முகவரி என்று எங்கோ தபால் நிலையங்களின் கிடங்குகளில் தேங்கிக் கிடக்கலாம். அல்லது சம்பந்தப்பட்டவரைச் சென்று சேர்ந்து அப்படியே குப்பைகூடைக்கும் போய்ச் சேர்ந்திருக்கலாம். வேறென்ன, கல்லில் ஒளிந்திருக்கும் சிலையை சிற்பியன்றோ காண்பான்!

இதெல்லாம் நாங்கள் கிரிக்கெட்டில் நிபுணர்களாக ஆன பிறகான நிலை. அதற்கு முன்பாக ஒரு காலகட்டம் இருந்தது. அப்போது எங்களுக்குக் கிரிக்கெட் பற்றி எதுவும் தெரியாது. அப்படியானால், எங்களுக்கு இந்திய வீரர்களை ரொம்பவும் பிடித்து இருந்திருக்கும் என்பது நான் சொல்லாமலேயே உங்களுக்குப் புரிந்திருக்கும் இல்லையா. உண்மைதான். இந்திய கிரிக்கெட் வீரர்களை நாங்கள் உயிருக்கு உயிராக நேசித்தோம். எந்த அளவுக்கு என்பதற்குச் சிறு உதாரணம் சொல்கிறேன். எங்கள் தெரு டாமி நான்கு குட்டிகள் போட்டபோது அவற்றுக்கு ஒரு பெயர் சூட்ட ஆளாளுக்குப் போட்டி போட்டோம். எல்லாம் எங்கள் தெய்வங்களின் பெயர்கள்தான். ஆனால், அந்தப் பெயரை நாங்கள் சூட்டவில்லை. ஏனென்றால், நாளைக்கு இந்த குட்டிகளுக்கு ஏதாவது நடந்தால் அது எங்கள் தெய்வத்தை பாதித்துவிடும் என்று யாரோ ஒருவர் கண்ணீர் மல்கச் சொன்னதைக் கேட்டதும் நாங்கள் அதில் நனைந்து கரைந்துவிட்டோம்.

ஆஸ்திரேலியாவில் நடக்கும் போட்டிகளை காலையில் நான்கு மணிக்கு அலாரம் வைத்து பார்த்த தலைமுறையைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள். நாங்கள் அப்படியெல்லாம் கிடையாது. முந்தின நாள் தூங்கவே மாட்டோம். டாஸ் ஜெயித்தால் பேட்டிங் எடுக்க வேண்டுமா, ஃபீல்டிங்கா..? யாரை முதலில் இறக்க வேண்டும்..? யார் நின்று ஆட வேண்டும்..? யார் அடித்து ஆட வேண்டும் என்று பெரும் திட்டங்கள் தீட்டுவோம். ஒருவர் வீட்டில் இருந்து டீ வரும். இன்னொருவர் வீட்டில் இருந்து காராச்சேவு வரும். கார சாரமான விவாதம் மேட்ச் ஆரம்பிப்பது வரை நடக்கும். ஊரிலேயே முதன் முதலில் டி.வி. வாங்கியது எங்கள் வீட்டில்தான் என்பதால் மேட்ச் நாட்களில் எங்கள் வீடு கிரிக்கெட் மைதானம் போல் களைகட்ட ஆரம்பித்துவிடும். டிக்கெட் கவுண்டர்கூட வைத்திருக்கலாம். ஆனால், எங்களுடன் மேட்ச் பார்ப்பதென்றால் எங்கள் அணியைத் தவிர வேறு யாருக்கும் கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். எங்கோ இருக்கும் கிரஹங்கள் நம் வாழ்க்கையை பாதிப்பதாக நம்புவது நம் முன்னோர்களின் குணம். இப்போது விஞ்ஞான யுகம் வந்துவிட்டது. அதுவும்போக நாம் பகுத்தறிவு ப் பகலவன் சுடர்விடும் பூமியில் வசிக்கிறோம் அல்லவா. அதனால் நாங்கள் புதிய முற்போக்கான நம்பிக்கைகள் கொண்டிருந்தோம். அதாவது கிரிக்கெட் மைதானத்தில் விளையாடுபவர்களுக்கும் தொலைக்காட்சி முன் அமர்ந்து பார்ப்பவர்களும் இடையில் ஒரு ஃப்ரீக்வென்ஸி இருக்கிறது (விஞ்ஞானம் வந்துவிட்டது பாருங்கள்!). அது குலையாமல் பார்த்துக் கொண்டால் வெற்றி நிச்சயம். அதாவது, எதிரணியின் விக்கெட் விழும்போது பார்வையாளர் ஒருவர் எந்த நிலையில் இருக்கிறாரோ அதே நிலையில்தான் கடைசி வரை இருந்தாக வேண்டும். அப்போதுதான் எதிரணி பத்து ரன் எடுப்பதற்குள் பத்து விக்கெட்களும் விழுந்துவிடும். அதுபோல்தான் நமது அணி நான்கு அல்லது ஆறு அடிக்கும்போது ஒருவர் எப்படி இருக்கிறாரோ அதே நிலையில்தான் கடைசிவரை இருந்தாக வேண்டும் (இது பகுத்தறிவு!).

எங்கள் வீட்டின் மாடியில்தான் டி.வி. இருந்தது. ஏதோவொரு நாள் நான் மேட்சின் இடைவேளை நேரத்தில் தெரியாத்தனமாக, சிறுநீர் கழிக்கக் கீழே இறங்கிப் போய்விட்டேன். திரும்பி வரும்போது முதல் படியில் காலடி எடுத்து வைத்தபோது இந்திய அணியில் யாரோ ஒருவர் ஓங்கி கவர் டிரைவ் அடித்திருக்கிறார். பந்து எட்ஜ் எடுத்து ஸ்கொயர்லெக் பவுண்டரியைத் தாண்டிப் பறந்திருக்கிறது. எனக்கு அன்னிக்குப் பிடித்தது சனியன். எப்ப கிரிக்கெட் மேட்ச் நடந்தாலும் நான் டி.வி. ஸ்விட்சை ஆன் பண்ணிட்டு கீழபோயிடணும். ஒரு கால் தரையில இன்னொரு கால் முதல்படில அப்படின்னு நின்னு மேல அண்ணாந்து பார்த்துக்கொண்டே இருக்கணும். காட்சி ஊடகம் வந்த பிறகும் காது ஊடகத்திலேயே என் காலம் உறைந்துவிட்டது.

என்னுடைய நிலையாவது பரவாயில்லை, குமரேசனின் நிலையைக் கேட்டால் அழுதேவிடுவீர்கள். தரையில் அமர்ந்தபடி மேட்ச் பார்த்துக் கொண்டிருந்தவன் யதேச்சையாக பத்தாயத்தின் மீது ஏறியிருக்கிறான். அப்போது பார்த்து எதிரணியின் விக்கெட் விழுந்துவிட்டது. அன்றிலிருந்து ஆரம்பமானது அவனது கண்டம். இந்திய அணியில் ஒவ்வொரு பந்து போடுவதற்கு முன்னாலும் அவன் கீழே இறங்கவேண்டும். பவுலர் அம்பயருக்கு அருகில் வந்ததும் தாவி பத்தாயத்தின் மேல் ஏறிவிட வேண்டும். இதுதான் அவனுக்கான பொஸிஷன். ஐம்பது ஓவர் மேட்ச்… முந்நூறு பந்துகள். இதில் நோபால், வைடு எல்லாம் சேர்த்துக் கொள்ளுங்கள். இந்திய அணி பந்து வீசி முடிப்பதற்குள் ஒருவழியாகிவிடுவான். இதில் எதிரணியினர் நான்கோ ஆறோ அடித்துவிட்டால் குமரேசனுக்குத்தான் திட்டு கிடைக்கும். நீ சரியான டைமிங்கோட தவ்வலை; பந்து போட்ட பின்னாடிதான் ஏறின; அதான் இப்படி ஆயிடிச்சு;. உனக்கு இந்தியா ஜெயிக்கணும்னு வெறி இல்லை என்று ஆளாளுக்குத் திட்டுவார்கள். ஸ்லாக் ஓவர்கள் வந்துவிட்டால் அவன் கண்களில் நீர் கோக்க ஆரம்பித்துவிடும். என் திறமையை சந்தேகியுங்க. ஆனா என் நேர்மையை சந்தேகிக்காதீங்கன்னு கெஞ்சுவான். அதனால், இந்திய அணி விளையாடும் டோர்னமெண்ட்கள் அறிவிக்கப்பட்டதுமே அவனுக்கு கால்கள் நடுங்க ஆரம்பித்துவிடும். எனக்கு கண்ணைக் கட்ட ஆரம்பித்துவிடும். இப்போதாவது பரவாயில்லை. முன்பு டெஸ்ட் மேட்ச்களும் நிறைய நடக்கும். எதிரணியினர் பாட்டுக்கு 130 ஓவர்கள் 150 ஓவர்கள் விளையாடிக் கொண்டே இருப்பார்கள். நம் பந்துவீச்சாளர்களுக்கு எவ்வளவு அடிச்சாலும் தாங்கற பலம் உண்டு; பார்க்கற நமக்கும் அந்த பலம் உண்டு. ஆனால், குமரேசன் நிலையில இருந்து நீங்கள் இதை யோசித்துப் பார்க்க வேண்டும். குமரேசன் மிகுந்த தேச பக்தி உடையவன்தான். ஒரு இந்திய வெற்றிக்காக ஏழு மலைகள் மீது ஏறி இறங்கச் சொன்னாலும் அதற்கு அவன் மனதளவில் தயாராகவே இருந்தான். ஆனாலும் மனசுக்குக் கொடுத்த பலத்தை ஆண்டவன் உடம்புக்குக் கொடுக்கலியே… என்ன செய்ய..?

No comments:

Post a Comment