குமரேசன் என்றதும் எனக்கு நினைவுக்கு வரும் இன்னொரு நபர் ரஜினிகாந்த். உண்மையில் ரஜினிகாந்தை நினைக்கும் போதெல்லாம் எனக்கு குமரேசன் ஞாபகம் வரும் என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். தேசமும் தெய்வீகமும் இரண்டு கண்கள் என்று சொல்வார்கள் அல்லவா..? குமரேசனின் தேச பக்தி கிரிக்கெட் மீதான வெறியாக வெளிப்படுவதுபோலவே அவனுடைய தெய்வ பக்தி ரஜினி மீதான க்ரேஸ் ஆக வெளிப்படும். அக் மார்க் ரஜினி ரசிகன். ஆனால், பச்சை குத்திக் கொள்ளவில்லை. ரஜினி என்ற முன்னொட்டை சூட்டிக் கொள்ளவில்லை. ஏனென்றால், அதெல்லாம் தீட்சையின் ஆரம்ப நிலை. பரம்பொருளுடன் இரண்டறக் கலந்த நிலையில் இது போன்ற புற அடையாளங்கள் தேவையில்லை என்பது அவன் கோட்பாடு.
பெரும்பாலான ரஜினி ரசிகர்களின் லட்சியம் என்பது அவருடைய எல்லா படத்தையும் முதல் நாளில் முதல் ஷோவில் பார்த்துவிடவேண்டும் என்பதாகத்தான் இருக்கும். ஆனால், குமரேசனின் லட்சியம் கொஞ்சம் வித்தியாசமானது. ராமாயண கதைகள் சொல்லப்படும் இடங்களில் எல்லாம், தான் இருக்க வேண்டும் என்று அனுமார் வரம் கேட்டதுபோல் குமரேசனும் ரஜினி படம் திரையிடும் இடங்களில் எல்லாம் தானும் இருந்து பார்க்க வேண்டும் என்று விரும்பினான். எல்லா இடத்துலயும் ஒரே படம் தான..? என்று கேட்டால், அது இல்லை பாபு, அது உனக்கு சொன்னாப் புரியாது என்று ஏதோ ரத்தினக் கற்களை பன்றியின் முன் ஏன் பரப்ப வேண்டும் என்பதுபோல் இருந்துவிடுவான்.
வழக்கம்போல் நாகர்கோயிலில் ரஜினி படம் ரிலீஸ் ஆகும்போது முந்தின நாள் ராத்திரியே போய்ச் சேர்ந்துடுவான். படப் பெட்டி எப்ப வேணும்னாலும் வரும். ரசிகர்களுக்கான ஷோ எப்ப வேணும்னாலும் ஆரம்பிக்கும். படத்தைப் பார்த்துவிட்டு ஊருக்குள் ராஜ களேபரத்துடன் வந்து இறங்குவான். பெருமாளுக்கு தாஸரும் அந்த தாஸருக்கு தாஸன்களும் இருப்பதுபோல் முதல் காட்சியைப் பார்த்துவிட்டு வருபவர்களிடம் முதன் முதலில் கதை கேட்பது என்று ஒரு கூட்டம் ஊரில் காத்துக் கொண்டிருக்கும். நள்ளிரவில் பார்த்த படத்தை டைட்டில் கார்டில் இருந்து ஆரம்பித்து அதிகாலையில் தன் கடை முன் ஓட்டுவான். சிகரெட்டைத் தூக்கிப் போடுவதில் இருந்து பறந்து பறந்து சண்டை போடுவதுவரை எல்லாமே அங்கு நடக்கும். ரொமான்ஸ் காட்சிகளும் உரிய தணிக்கையுடன் நடித்துக் காட்டப்படும். கூடவே படம் எத்தனை நாள் ஓடும் என்ற அறிவிப்பும் இடம்பெறும். எதிரி நடிகர் இந்தப் படத்தின் மூலம் என்ன கதிக்கு ஆளாவார்..? இனி அவர் என்ன செய்ய வேண்டியிருக்கும் என்பது பற்றிய சாபமும் இடம்பெறும். நாகர்கோயிலில் ரஜினியின் குறிப்பிட்ட ஒரு படம் எத்தனை நாள் ஓடியது என்ற கணக்கு தெரிய வேண்டுமானால், குமரேசன் எத்தனை தடவை பார்த்தான் என்பதைக் கேட்டு அதில் இருந்து முதல் நாள் நள்ளிரவுக் காட்சிக்கான ஒரு தடவையைக் கழித்துவிட்டால் விடை கிடைத்துவிடும்.
நாகர்கோயில் படையெடுப்பு முடிந்ததும் அடுத்ததாக சுசீந்திரம் செல்வம் தியேட்ட மீதான படையெடுப்பு ஆரம்பமாகும். சுசீந்திரம் தேரோட்டத்தின்போது எப்போதுமே சமீபத்தில் வெளியான தலைவர் படம் தான் திரையிடப்படும். தேரோட்டத்துக்கு போவான். வடம் பிடிச்சி இழுக்க மாட்டான். பின்னால இருந்து மரத்தடியை எடுத்துப் போடும் வேலையைச் செய்வான். ஆக்ரோஷமாக, தேரை எவ்வளவு சீக்கிரம் நிலைக்குக் கொண்டுவரமுடியுமோ அவ்வளவு சீக்கிரத்தில் கொண்டுவந்துவிடத் துடிப்பான்.
தேர் மேலத் தெருமுனை திரும்பி வடக்கே நடை பக்கத்துல வந்ததும் சேகுவேரா, க்யூபாவில் தன் கடமை முடிந்ததும் அடுத்து களப்பணியாற்ற பொலிவியாவுக்குப் போனதுபோல், தேர் இனி நிலைக்கு வந்துவிடும் என்ற மனநிறைவுடன் அடுத்த கடமையை ஆற்ற நேராக செல்வம் தியேட்டருக்குச் சென்றுவிடுவான். நேராக ஆப்பரேட்டர் ரூமுக்குச் செல்வான். கூடப் படிக்கும் சிவதாணுவின் அப்பாதான் அங்கு ஆப்பரேட்டர். எனவே, சிவதாணுவின் நண்பர்கள் ரஜினியை அருகில் சந்திக்க ஏற்பாடு செய்து தரப்படும். படப்பெட்டி மேலே தலைவரின் படம் ஒட்டப்பட்டிருக்கும். மிகுந்த மரியாதையாக தொட்டுக் கும்பிடுவான். மூடியைத் திறந்து ஃபிலிம் சுருளை வாஞ்சையுடன் தடவிப் பார்ப்பான். சிவதாணுவின் அப்பா அனுமதித்தால் ஒவ்வொரு ஃபிலிமையும் தனித்தனியாக இந்த சீனில் என்ன வசனம்..? என்ன இசை..? அடுத்தது என்ன..? என்று எனக்கு வகுப்பு எடுக்க அவன் தயாராகவே இருந்தான். தேர் நிலைக்கு நின்று கூட்டம் தியேட்டரை முற்றுகையிட ஆரம்பித்ததும் குமரேசன் திரைக்கு அருகில் போய்ச் சேர்ந்துவிடுவான். சென்சார் சர்ட்டிஃபிகேட் காட்டப்படுவதில் இருந்து “நான் எப்பவுமே உங்க பக்கம்” என்று ரஜினி கும்பிடு போடுவதுவரை ஜிகினாத் தாள்களின் அடை மழை விடாது பொழியும். விளக்குகள் அணைக்கப்பட்டதில் இருந்து ஆரம்பிக்கும் ஊளைச் சத்தம் படம் முடிந்து மறுபடியும் விளக்குகள் போடப்படுவதுவரை ஓயாமல் ஒலிக்கும். ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கேட்டேன். ரசிகர் தரப்பின் ஏக பிரதிநிதியாக பதில் சொன்னான், தலைவர் ஸ்க்ரீன்ல பேசறதைக் கேட்டப்பறம் எப்படி பாபு கை கட்டி வாயைப் பொத்தி நிக்க முடியும் என்பான். சரி ரஜினி டயலாக் பேசாத நேரத்துல ஏன் கத்தறீங்க என்று கேட்பேன். ரஜினி படத்துல மத்தவங்க ஏன் பேசறாங்க..? என்றான். அவன் சொன்ன பிறகு கூர்ந்து பார்த்தேன் உண்மையிலேயே ஆதரவாக ஒரு கூச்சலும் எதிர்த்துக் கிளம்பும் ஊளையுமாக அந்த ஆரவாரக் கத்தலில் நுட்பமான வித்தியாசம் இருந்ததை நன்கு புரிந்து கொள்ள முடிந்தது. ஆனால், இதனால் என்ன ஆகும் என்றால் ஒரு வசனம் கூட காதில் விழாது. அதுவும் செல்வம் தியேட்டர் சவுண்ட் சிஸ்டம் இருக்கிறதே அதி அபாரமானது. இப்போதுதான் நாய் துரத்தில் குரைப்பதுபோல் காட்சி இருந்தால் தியேட்டரில் பார்ப்பவர்களுக்கும் எங்கோ வெளியில் குரைப்பதுபோல் கேட்கும்படியாக டி.டி.எஸ். தொழில் நுட்பம் வந்திருக்கிறது அல்லவா..? செல்வம் தியேட்டரில் அது ஐம்பது வருடங்களுக்கு முன் ஆரம்பித்ததில் இருந்தே அப்படித்தான். வசனங்கள் எங்கோ தூரத்தில் பேசுவதுபோல்தான் கேட்கும். ரஜினி ரசிகர்களுக்கு வசனங்கள் காதில் விழவில்லை என்பது ஒரு குறையாகவே இருக்காது. தெய்வம் பேசுவதைக் கேட்டால்தான் பக்தனுக்கு சந்தோஷமா என்ன..? பார்த்தாலே பரவசமன்றோ..!
ரஜினி பார்வையாளர்களைப் பார்த்துப் பேசும் ஒவ்வொரு வசனங்களும் தன்னைப் பார்த்து தனக்காக மட்டுமே பேசப்படுவதாகவே குமரேசன் நினைத்தான். ரஜினி பேசினதுல எந்த பஞ்ச் டயலாக் உனக்குப் பிடிச்சிருக்கு என்று ஒரு நாள் கேட்டேன். அவனுக்குக் கேள்வி புரியவில்லை என்பதுபோல் பார்த்தான். மறுபடியும் கேள்வியை விளக்கினேன். மேலும் குழம்பியபடியே கேட்டான், படத்துல தலைவர் பேசறது எல்லாமே பஞ்ச் டயலாக்தான..? அதில்ல குமரேசா, இதெப்டி இருக்கு..? என்பதில் ஆரம்பித்து நான் ஒரு தடவை சொன்னா… என மக்கள் மனதில் நிற்கும் பஞ்ச் டயலாக்குகள் கொஞ்சம் தான இருக்கு..? என்று கேட்டேன். அது மக்களோட தப்பு பாபு. தலைவர் பேசினது எல்லாமே பஞ்ச் டயலாக்தான். தாஜ்மஹாலில் எந்தப் பளிங்கு நல்ல பளிங்கு என்றால் எதைச் சொல்வது… தேன் கூட்டில் இருக்கும் தேனில் எந்தத் துளி தித்திப்பு கூடியது என்றால் எப்படி பாபு சொல்வது என்பதுபோல் விளக்கினான்.
சுசீந்திரத்தில் திருநாளின் முடிவில் கலைவாணர் கலையரங்கில் திரைகட்டி படம் போடுவார்கள். குமரேசன் என்னை வரும்படிக் கூப்பிடுவான். அங்கு திரையிடப்போகும் ஈஸ்ட்மென் கலர் படம் அநேகமாக ராம பக்த அனுமான் அல்லது பாண்டுரங்க விட்டலன் என்பதுபோன்ற பக்தி காவியமாகத்தான் இருக்கும். கறுப்பு வெள்ளைப் படம் என்றால் ஏதாவது ராஜா ராணி கதையாக இருக்கும். அதைப் போய் பார்க்கணுமா என்று கேட்பேன். அப்படியில்ல பாபு… நிகழ்ச்சிகள் கடைசி நேர மாற்றத்துக்கு உரியவைனு திருவிழா நோட்டிஸ்ல போட்டிருக்கு பார்த்தியா… அதனால தலைவர் படம் ஏதாவது போட வாய்ப்பு இருக்கு என்பான். அதெல்லாம் மற்ற நிகழ்ச்சிகளுக்குத்தான். பாடறவங்க வரமுடியாமப் போயிடும். சொற்பொழிவுக்காரங்களுக்கு உடம்பு முடியாமப் போயிடும். அதுக்காக அப்படிப் போட்டிருப்பாங்க. படத்துக்கு அது பொருந்தாது. சாமி படம் மட்டும்தான் போடுவாங்க என்றேன். அதில்ல பாபு. ப்ரொஜக்டர் ஆப்பரேட்டர் நமக்குத் தெரிஞ்சவர்தான். ரஜினி படம் போடறேன்னு சொல்லியிருக்காரு என்பான். அவன் சொன்னதை நம்பி நானும் கூடவே செல்வேன். கம்பு ஊன்றி, திரை கட்டி ப்ரொஜக்டரை சோதித்துப் பார்ப்பதற்கு முன்பாகவே அரங்குக்கு சென்றுவிடுவோம். மக்கமார் சுத்துக்கெல்லாம் லேசா தலைகாட்டிட்டு போயிட்டு வாங்கன்னு சொல்லிட்டு வந்திடுவோம். குமரேசன் ஆப்பரேட்டர் கிட்ட மெதுவாகக் கேட்பான், ஏண்ணே... என்ன படம் கொண்டுவந்திருக்கீங்க என்பான். அவர் அவன் பக்கம் குனிந்து அப்போது எடுத்துக் கொண்டிருக்கும் ரஜினி படத்தின் பெயரைச் சொல்லுவார். குமரேசனுக்கு அதிர்ச்சியாக இருக்கும்.
அந்தப்படம் இண்ணும் எடுத்தே முடிக்கலையேண்ணே.
அட நீ வேற எடுத்தது வரை பிரிண்ட் போட்டு கொடுத்து அனுப்பியிருக்காங்க என்பார். ஆனால், திரையில் ஆதி காவியம் அல்லது அதற்கடுத்த காவியமே அரங்கேறும். என்னண்ணே என்று கேட்டால், எல்லாரும் தூங்கட்டும் நம்ம படத்தைப் போட்ருவோம் என்று கண்ணைச் சிமிட்டுவார். அவர் சொல்வதை நம்பி பக்தி ரசத்தை கடைசி சொட்டு மென்று முழுங்குவோம். ஆனால், படம் முடிந்ததும் அவர் ஏரைக் கட்டுவதைப் பார்த்ததும் குமரேசன் கொஞ்சம் கோபத்துடன் என்னண்ணே இப்படிப் பண்ணிட்டீங்க என்று கோபிப்பான். என்னைய ஏமாத்திட்டாங்கப்பா. டெவலப் பண்ணாத பிரிண்டைக் கொடுத்துட்டாங்க. எல்லாமே ஒரே கறுப்பா இருக்கு என்று சொல்லிவிட்டுப் போய்விடுவார். ரெண்டாவது வருடமும் இதேபோல் நடந்தது. கொஞ்சம் பொறுத்துக் கொண்டோம். மூன்றாவது வருடமும் இது நடந்ததும் குமரேசனுக்கு பயங்கரக் கோபம் வந்துவிட்டது. எங்க ஊரைத் தாண்டித்தான போகணும். அங்க வெச்சுக்கறேன் என்று மிரட்டிவிட்டுப் போனான்.
அரசியலுக்கு தலைவர் வருவாரா மாட்டாரா..? வரலாமா கூடாதா..? என்று ஒரு நாள் யாரோ கேட்டார்கள். வரக்கூடாதுன்னு சொல்லமாட்டேன். ஆனா வரவேண்டாம் என்றுதான் நினைக்கிறேன் என்றான். ஏம்ப்பா… வந்தா ஏழைங்களுக்கு நல்லது நிறைய செய்ய முடியுமே என்றேன். இப்பவே அதைத்தான பண்ணிக்கிட்டிருக்காரு என்றான் குமரேசன். எங்கப்பா பண்றாரு… பிறந்த நாள் கூட கொண்டாடறதில்லை. வீட்டுக்கு வர்ற யாரையும் கூட பெரிசா கவனிக்கறதில்லை. ஸ்கூலு, கல்யாண மண்டபமெல்லாம் ஏழைங்க நெருங்கவே முடியாத இடத்துல இல்ல இருக்கு என்று கேட்டபோது சொன்னான் : அவரோட படங்கள் தரமுடியாத சந்தோஷத்தையா இந்த உலகத்துல வேற பொருட்கள் ஏழைகளுக்குத் தந்துவிட முடியும்..? ஒருவகையில் மிகவும் நியாயமான பதில்தான் இது என்றே எனக்குத் தோன்றுகிறது. ரஜினியின் ஆஃப் ஸ்க்ரீன் தத்துவ முத்துக்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கும்போது அவர் தொடர்ந்து நடிப்பதே நாட்டுக்குச் செய்யும் பெரும் சேவை என்பது மேலும் உறுதிப்படவே செய்கிறது.
கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு நான் வேலை தேடி புலம் பெயர்ந்திருந்தேன். குமரேசனை ஊருக்கு வரும்போது மட்டுமே பார்க்க முடிந்தது. பெட்டிக்கடையை மூடிவிட்டான். விலக்கப்பட்ட கனியை நிறையவே புசிக்க ஆரம்பித்ததாக தகவல்கள் கிடைத்தன. பார்த்தபோது ஒருநாள் ஜாடை மாடையாகக் கேட்டேன். புரிந்தும் புரியாததுபோல் நடந்துகொண்டான். எதுக்குக் கேக்கற என்றான்..? இல்லை நானும் உன் கூட வர்றேன் என்றேன். அவனுக்குத் தூக்கிவாரிப் போட்டது. என்ன பாபு… இப்படி சொல்லிட்ட..?
இதுல என்ன தப்பு..?
ரொம்பத் தப்பு பாபு. அப்படி ஒரு நினைப்பு மனசுல இருந்தா அழிச்சிடு.
அது தப்புன்னா நீ ஏன் செய்யற..?
இது என்ன கேள்வி பாபு..?பன்னி பீயைத் திங்கலாம். பசு திங்கலாமா..?
நான் விடவில்லை. அதை ஏன் மலம்னு சொல்ற..? தாகத்துக்குக் குடிக்கற தண்ணி மாதிரி நினைச்சுக்கோ… பன்னிக்கு மட்டும்தான் தாகம் எடுக்குமா..? பசுவுக்கும் எடுக்கும்ல என்றேன். இந்தப் பேச்சை இதோட நிறுத்திடு என்று கோபப்பட்டுவிட்டான். அவன் என்னிடம் கோபப்பட்டது அதுதான் முதல் தடவை. அதுவே கடைசித் தடவையாகவும் ஆகிவிட்டது.
திருவிதாங்கூர் மஹாராஜாவால் தானமாகத் தரப்பட்ட எங்கள் அக்ரஹாரத்தின் ஓட்டு வீடுகள், விடுதலைக்குப் பிந்தைய புதிய தலைமுறையில் அரசாங்க வேலையில் ஏறிய வாரிசுகளால் இடித்துப் புதுப்பித்துக் கட்டப்பட்டன. பழையாற்றில் இருந்து மண்ணெடுத்துக் கொடுக்கும் காண்ட்ராக்டை குமரேசனின் அண்ணன் பெற்றிருந்தார். எங்கள் வீடும் புதுப்பித்துக் கட்டப்பட்டது. வேலை எதுவும் சரியாகக் கிடைக்காததால் வீடு கட்டியபோது அதைப் பார்த்துக் கொள்ள அப்பா வரச் சொல்லியிருந்தார். மர நிழலில் சேர் போட்டு உட்கார்ந்துகொண்டு வீடுகட்டும் வேலையை மேற்பார்வையிட்டேன். ஆற்றில் ஆழத்தில் மூழ்கி நல்ல மண்ணாகக் கொண்டுவருகிறார்களா..? கரையோர களி மண்ணாகக் கொண்டுவந்துவிடுகிறார்களா என்று ஒருநாள் சோதித்துக் கொண்டிருந்தேன். ஒருவர் கொண்டுவந்துபோட்ட மண்ணில் கொஞ்சம் களிமண் கலந்ததுபோல் இருந்தது. என்னது இது ஒருமாதிரி இருக்கே என்றேன். நல்ல மண்ணுதான் பாபு… பயப்படாத… என்று குரல் கேட்டது. திரும்பிப் பார்த்தேன். குமரேசன் நின்றுகொண்டிருந்தான். ஜட்டியும் பனியனுமாக, தலையில் ஒரு கூடை மண்ணைச் சுமந்து கொண்டு ஆற்று நீர் சொட்டச் சொட்ட நின்று கொண்டிருந்தான். நான் அதிர்ச்சியில் உறைந்துபோய்விட்டேன். நான் ஒரு நல்ல நிலைக்கு வந்ததும் முதன் முதலாக கை தூக்கி விட வேண்டும் என்று மனதில் குறித்து வைத்திருந்தவன். நான் முதலில் இயக்குநரானால் அவனுக்கு பாடல் வாய்ப்பு தரவேண்டும்; அவன் பிரபல பாடகரானால் எனக்கு வாய்ப்பு வாங்கித் தரவேண்டும் என்று 9ஆம் வகுப்பில் பரஸ்பரம் சத்தியம் செய்து கொண்டிருந்தோம். தள்ளிக்கோ என்று சொல்லிவிட்டு மண்ணைக் கொட்டினான். நல்லா இருக்கியா பாபு என்று கேட்டுவிட்டு அடுத்த கூடை மண்ணை எடுக்க ஆற்றுக்கு விரைந்தான்.
இது நடந்து நாலைந்து வருடங்கள் கழிந்தது ஒருநாள் ராமச்சந்திரனை யதேச்சையாக சந்தித்தேன். என்ன ராமச்சந்திரா… எப்படி இருக்க..? குமரேசன் எப்படி இருக்கான் என்று கேட்டேன். அப்போது அவன் சொன்னதைக் கேட்டதும் நிலைகுலைந்துபோய்விட்டேன். உனக்கு விஷயம் தெரியாதா..? குமரேசன் செத்துட்டான்.
என்ன சொல்ற நீ..? நம்ம குமரேசனா..?
ஆமாம்.
எப்படி..? என்ன ஆச்சு...
கிணறு வெட்ட போயிருக்கான். மண்ணு சரிஞ்சிருச்சு.
வாழ்க்கை எப்போதுமே எதிர்பாராத நிகழ்வுகளால் நிறைந்ததுதான். ஆனால் இவ்வளவு எதிர்பாராத நிகழ்வுகள் நடந்திருக்க வேண்டாம். என் அப்பாவுக்கு டிரான்ஸ்ஃபர் கிடைக்காமலே இருந்திருக்கலாம். குமரேசன் பெரிய பாடகராகியிருக்கலாம். கிரிக்கெட்டில் அவனுக்கு நல்ல வாய்ப்புகள் கிடைத்திருக்கலாம். அவன் சொன்ன ஆலோசனைகள் ஏற்கப்பட்டு அவன் கோச் ஆக ஆகியிருக்கலாம். படிப்பில் அவன் அதிக கவனம் செலுத்தியிருக்கலாம். ஆசிரியர்கள் அவனை நன்கு வார்த்திருக்கலாம். ரஜினி அரசியலுக்கு வந்து அவன் அவனது அண்ணன் போல் வார்டு மெம்பராகவோ ஏன் எம்.எல்.ஏ.யாவோ ஆகியிருக்கலாம். அவன் வைத்த பெட்டிக்கடை மளிகைக் கடையாகி ஜெனரல் ஸ்டோர் ஆகியிருக்கலாம். இவையெல்லாம் அதிகபட்ச ஆசை; குறைந்தபட்சம் அவன் மண்ணாவது அள்ளிக் கொண்டிருந்திருக்கலாம் என்று உங்களுக்குத் தோன்றுகிறதா..? கொஞ்சம் பொறுங்கள். ரொம்பவும் உணர்ச்சிவசப்படாதீர்கள். கடவுள் கெட்டவங்களுக்கு நிறையக் கொடுப்பார் ஆனா கை விட்ருவாரு. நல்லவங்களை நிறைய சோதிப்பாரு. ஆனா கைவிட மாட்டார்ன்னு தலைவர் சொன்னது ஞாபகமில்லையா..?
ராமச்சந்திரனை சந்தித்த இரண்டு வருடங்களுக்குப் பிறகு ஒருநாள் சென்னையில் பேருந்துக்காக நின்றுகொண்டிருந்தபோது ஒரு ஆட்டோ சற்று தூரத்தில் வந்தது. கிட்ட வர வர அதில் இருப்பது குமரேசன் போல இருந்தது. அருகில் வந்ததும் அது குமரேசனேதான் என்பது உறுதியானது. எனக்கு அதிர்ச்சியில் என்ன செய்வதென்றே தெரியவில்லை. குமரேசா என்று கைகாட்டி வண்டியை நிறுத்தினேன். வண்டியில் இருந்து இறங்கி வந்தவனைப் பாய்ந்து கட்டிக் கொண்டேன். அவனும் சிறிது நேர தயக்கத்துக்குப் பின் என்னை அடையாளம் கண்டுவிட்டான்.
என்ன குமரேசா... நம்பவே முடியலையே...
லோன்ல எடுத்ததுதான் பாபு. ரெண்டு மூணு வருஷத்துல சொந்தமாகிடும்.
அதில்ல குமரேசா..? ராமச்சந்திரன் உன்னைப் பத்தி என்னமோ சொன்னான்.
ஆமாம் அவன் கெடக்கான். என்னைப் பத்தி மட்டுமா சொல்றான். ஊர்ல எல்லாரையும் பத்தி அப்படித்தான் சொல்லிக்கிட்டிருக்கான். உனக்குத்தான் தெரியுமே ஸ்கூல் படிக்கும்போதே அவனுக்கு யாரோ செய்வினை வெச்சது. இப்ப சுத்தமா மரை கழண்டிடுச்சி. நீ கூட பக்கத்து வீட்டுப் பொண்ணை இழுத்திட்டு ஓடிட்டதாத்தான் சொல்லிட்டுத் திரியறான். என்னைப் பத்தி உன் கிட்ட என்ன சொன்னான்.
மண்ணு சரிஞ்சி செத்த்தா சொன்னான்.
அப்படியா..! இது ரொம்பப் புதுசா இருக்கே. இப்பத்தான் நானே கேக்கறேன். ஊருக்கு போனதும் அவனுக்கு இருக்கு மண்டகப்படி.
அடக்கடவுளே இது தெரியாமப் போச்சே. அவன் சொன்னதைக் கேட்டதும் அப்படியே துடிச்சிட்டேன் தெரியுமா என்றேன். என் கண்கள் கலங்கிவிட்டது.
பாபு... இதென்னது சின்னப் புள்ளையாட்டமா... அவ்வளவு சீக்கிரத்துல போற கட்டையா இது. எனக்கு ஒண்ணும் ஆகாது பாபு என்று தேற்றினான். நான் தங்கியிருந்த மேன்ஷனுக்கு வந்தான். அவன் மண் சுமந்ததைப் பார்த்தபோது எனக்கு ஏற்பட்ட அதிர்ச்சியைவிட என் அறையைப் பார்த்தபோது அதிகம் அதிர்ந்தான். சிறிது நேரம் மவுனமாக இருந்தோம். ஊரைப் பற்றி, நண்பர்களைப் பற்றி எதை எதையோ பேசினோம். மதிய உணவு வாங்கிக் கொண்டு வந்து சாப்பிட்டோம். பள்ளியில் இருந்து குழந்தைகளை அழைத்து வர நேரமாகிவிட்டது என்று சொல்லிவிட்டு புறப்பட்டுச் சென்றான். அவ்வப்போது சந்தித்துக் கொள்கிறோம். இன்றும் சென்னை வீதிகளில் ரஜினி படம் போட்ட ஆட்டோ ஒன்றை குமரேசன் ஓட்டிக் கொண்டிருக்கிறான். ரஜினி படம் போட்ட ஆட்டோவைப் பார்க்கும்போதெல்லாம் எனக்கு குமரேசனின் ஞாபகம் வந்து கொண்டும் இருக்கிறது.
ஊருக்குப் போயிருந்தபோது ராமச்சந்திரனைப் பார்த்தேன். எங்கள் ஊர் பஸ் ஸ்டாப்பில் எந்த பஸ்ஸும் ஒழுங்காக நின்றூ செல்வதில்லை என்பதால் ஒரு பெரிய மூங்கில் கம்பு ஒன்றை ஊன்றிக் கொண்டிருந்தான். அவனுடைய முழு திட்டம் என்னவென்றால் சாலையின் இரண்டு பக்கமும் பெரிய மூங்கில் கம்புகளை நடவேண்டும். குறுக்காக ரயில்வே கேட் போல் ஒரு பெரிய தடியைகீழே இறக்கி ஏற்றும் வகையில் செட் பண்ண வேண்டும். தேவைப்பட்டால் சாலை நடுவே ஒரு குறுக்குச் சுவர் கூட எழுப்பிவிடலாம். ஆச்ராமடத்தில் ஒரு பஸ் நிற்காதென்றால் அது ஆச்ராமடம் சாலையில் வரவே வேண்டாம். மேம்பாலத்தில் இருந்து பறந்து அடுத்த ஊருக்குப் போய்க்கொள்ளட்டும் என்பது ராமச்சந்திரனின் வாதம். ஊரில் இருப்பவர்கள் கெஞ்சி கூத்தாடி கேட்டுக் கொண்டதால், இரண்டு பக்க சாலையிலும் வெறும் மூங்கில் கம்பை மட்டும் நடுவது மற்றும் அதில் பேருந்து நிறுத்தம் - கண்டிப்பாக எல்லா பேருந்துகளும் நிற்கவேண்டும் இப்படிக்கு நாமச்சந்திரன் (கீழே ஒரு எலும்புக்கூடு மற்றும் இரண்டு எலும்புத் துண்டுகளின் படம்) என்று மட்டும் எழுதி மாட்டிவிடலாம் என்று ஒப்புக்கொண்டான். அந்த சமூக சேவையின் அங்கமாக சாலை ஓரத்தில் தனி ஒருவனாக குழி தோண்டிக் கொண்டிருந்தான். பக்கத்தில் பந்தக் கால் படுக்க வைக்கப்பட்டிருந்தது. வேலையை போட்டுட்டு வா என்றேன். கடப்பாரையை சுவரில் சாத்திவிட்டு துண்டால் உடம்பை துடைத்தபடியே வந்தான். டீக்கடைக்குப் போனோம். ஏன் ராமேந்திரா அப்படிச் சொன்ன என்றேன். டீயை உறிஞ்சியபடியே என்ன என்று கேட்டான். குமரேசன் மெட்ராஸ்ல ஆட்டோ ஓட்டிட்டுத்தான இருக்கான் என்றேன். மேலும் கீழும் என்னை ஒருமாதிரியாகப் பார்த்தான். நீ பாத்தியா என்றான். ஆமாம் என்றேன். நான் நம்ப மாட்டேன் என்றான். நீ அவன் இறந்ததைப் பார்த்தியா என்று பதிலுக்குக் கேட்டேன். அப்போ நான் கேரளாவுக்கு போயிருந்தேன். வந்ததும் சொன்னாங்க என்றேன். அதுதான் சங்கதி. உன்னை எல்லாரும் ஏமாத்தியிருக்காங்க. அவன் நல்லாத்தான் இருக்கான் என்று சொல்லி புரியவைத்தேன். அதிலிருந்து யார் கேட்டாலும் குமரேசன், சென்னையில் ஆட்டோ ஓட்டிக் கொண்டிருக்கிறான் என்றே சொல்லிவருகிறான். ஊரில் இருப்பவர்களுக்கு அவன் நிறைய பொய்கள் சொல்வான். அதில் சில உண்மைகளும் இருக்கும் என்பது தெரியும். நான் நிறைய உண்மைகள் சொல்வேன். அதில் சில பொய்களும் இருக்கும் என்பதும் அதைவிட நன்றாகவே தெரியும்.
No comments:
Post a Comment