இருட்டில் இருந்து வெளிச்சத்தை நோக்கி...

Wednesday, October 13, 2010

புத்தம் சரணம் கச்சாமி - 21

முதல் கோணல் முற்றும் கோணல் என்று சொல்வார்களே. அதுபோல்தான் ஆகிவிட்டது. போரை ஆரம்பிப்பதற்கு முன்னால் அவர்கள் தமது பலம் என்ன..? எதிரியின் பலம் என்ன என்பதை யோசித்துப் பார்த்திருக்க வேண்டும். நம்மால் வெல்ல முடியுமா..? எவற்றையெல்லாம் இழக்க நேரிடும் என்பதைக் குறித்தெல்லாம் யோசித்துப் பார்த்திருக்க வேண்டும். அதையெல்லாம் செய்யவில்லை. அதுகூடப் பரவாயில்லை... நாம் ஆரம்பித்திருக்கும் போர் நியாயமானதுதானா..? என்று ஒரு நொடியாவது யோசித்திருக்க வேண்டும். அதைச் செய்யத் தவறிவிட்டார்கள். வெல்ல முடியாத எதிரியாக இருந்தாலும் வெல்லப்பட வேண்டியவன் என்றால் ஒரு கை பார்த்துவிடலாம் என்று இறங்கிவிடலாம். நம் பக்கம் இருக்கும் தார்மிக பலம் நாம் தோல்வியுற்றாலும் வெற்றியடைந்ததாகவே பெருமிதப்பட வைக்கும். ஆனால், ஈழத் தமிழர்கள் ஆரம்பித்தது வெல்ல முடியாத போர் மட்டுமல்ல... வெல்லக்கூடாத பேரும் கூட.

ஷெல் தாக்கி இறந்த பச்சிளம் குழந்தைகளையும் கை கால் இழந்த முதியவர்க¬ளையும் பெண்களையும் பார்க்கும்போது எங்களுக்கு வேதனையாகத்தான் இருக்கிறது. என்ன செய்ய...

களையெடுக்கும்போது சில நெற்கதிர்களும் பிடுங்கப்பட்டுவிடுவதை யார்தான் தடுக்க முடியும்? இன்னொரு வகையில் பார்த்தால் இந்த மக்கள் ஒன்றும் அவ்வளவு அப்பாவிகள் அல்ல... இவர்கள் கையில் தனி நாடு கேட்டு இடைவிடாது முழங்கும் ஏ.கே. 47கள் இல்லையே தவிர மனதின் மணல் படுகைகளில் இலங்கை தேசத்தின் மீதான வெறுப்புக் கண்ணிவெடிகள் ஏராளம் புதைந்தே கிடக்கின்றன. ஒவ்வொரு தேர்தல்களிலும் தங்கள் ரகசிய ஆசைகளைப் பகிரங்கமாக வெளிப்படுத்தியே வந்திருக்கிறார்கள். அப்படி வாக்களிக்கும்படி வற்புறுத்தபட்டிருந்தார்கள் என்று சொல்வதில் கொஞ்சம் உண்மை இருக்கிறது என்றாலும் இவர்கள் தங்களுக்காகத் தவறாகக் குரல் கொடுப்பவர்களை உள்ளூர விரும்பவே செய்திருக்கிறார்கள். தங்கள் தலைவர் என்று நம்பியவர் மீது முழு நம்பிக்கையை வைத்திருந்திருக்கிறார்கள். ‘பிரபாகரன் ஒருவருக்காக ஒட்டு மொத்த ஈழத் தமிழனமும் இறக்கத் தயாராக இருப்பதாக’ பிடிபட்ட ஒரு எளிய சாதாரண மனிதர் சிறையில் இருந்தபோது ஒரு நாள் முழங்கினார். ‘நாங்கள் பிரபாகரனை மட்டும்தான் பிடிக்க விரும்புகிறோம். அதற்கு அதுதான் வழி என்றால் அதையே செய்கிறோம்’ என்று சொன்னேன். வேறென்ன சொல்ல.

ஒவ்வொரு முறை குண்டு வீசுவதற்கு முன்னாலும் அறிவிப்பு செய்யத்தன் செய்கிறோம். அப்பாவி மக்களே பாதுகாப்பான இடங்களுக்குச் சென்றுவிடுங்கள் என்று. கடைசி கட்ட போரின் போது கூட 48 மணி நேர அவகாசம் கொடுத்தோம். புலிகளிடமிருந்து தப்பித்து வந்துவிடுங்கள் என்று. என்ன செய்ய 3 லட்சம் பேரில் 300 பேர் கூட வரவில்லை.

ஆயுதம் தரித்தவனைக் கொல். அப்பாவியை விட்டுவிடு என்று எல்லாரும் வாய் கிழியக் கத்துவதைப் பார்க்க முடிகிறது. யார் இங்கே அப்பாவி..? மறைந்து கிடக்கும் வேரன்றோ மரத்தைத் தாங்குகிறது. ஆயுதம் ஏந்தினால்தான் போராளியா..? ஆயுதம் ஏந்துபவனைப் பாதுகாப்பவனும் போராளிதானே. நீங்கள் உண்மையிலேயே அப்பாவியாக இருந்திருந்தால் புலிகள் நடத்தும் போர் எங்களுக்கானது அல்ல. நாங்கள் அவர்களுடைய வன்முறை நடவடிக்கைகளைக் கண்டிக்கிறோம் என்று வெளிப்படையாகப் பேசியிருக்க வேண்டும். அதைச் செய்தார்களா… கொலைகாரக் கூட்டம் கொள்ளையடித்து வருவதை நாசூக்காகப் பகிர்ந்து கொள்ள நாக்கைத் தொங்கப் போட்டுக் கொண்டு காத்துக் கிடந்தார்கள். என்ன செய்வது கொள்ளையடிப்பவனை நோக்கி எய்யும் அம்பு குறுக்கே வந்து நிற்பவரையும் குத்திக் கிழிக்கத்தானே செய்யும். பசுத் தோலைப் போர்த்தி அலைந்த புலிகளை உண்மையான பசுக்கள் அல்லவா விரட்டி அடித்திருக்க வேண்டும். பதுங்க இடம்கொடுத்து பாதுகாத்தன. பாவம் புலி வேட்டையில் பசுக்களும் இறந்தன.

பெண்களை நாலு பேர் பார்க்க உடம்பெல்லாம் தடவி சோதனை போட்டோமாம். அமைதிப் பூங்காவாக இருக்கும் நாடுகளில் கூட விமான நிலையங்கள், ரயிவே நிலையங்கள் என பொதுமக்கள் கூடும் இடங்களில் எத்தனையோ சோதனைகள் போடத்தான்படுகின்றன. கையில் சந்தனமாலையையும் முகத்தில் புன்னகையையும் சுமந்து வரும் பேதைகளைப் பற்றி இந்தியாவுக்குத் தெரியாதா என்ன..? ஒரு டிசம்பர் ஆறுக்காக வருடா வருடம் அந்த சோதனைகள் நாடு முழுவதும் நடத்தப்படுகிறது. போர் நடக்கும் பூமியில் அது நடந்தால் குற்றமா..? எமது தேச காலண்டரில் எல்லா நாட்களுமே டிசம்பர்-6தானே.

இந்த அப்பாவிகளைப் பற்றிய அக்கறை உண்மையில் தீவிரவாதிகளுக்கு அல்லவா இருந்திருக்க வேண்டும். நான் என் தேசத்துக்காக என் இலட்சியத்துக்காகப் போராடுகிறேன். போர்க்களத்துக்குச் செல்லும்போதெல்லாம் சீருடையை ஒரு வீரன் போல் அணிந்து கொள்வேன். எனது கால் படும் இடமெல்லாமே போர்க்களமாகிவிடும் என்பதால் அதை எந்த நேரமும் நான் அணிந்தே இருப்பேன். இது என் வீரத்தைக் காட்ட மட்டுமல்ல. நான் அப்பாவிபோல் உடை அணிந்தால் நாளை உண்மையான அப்பாவிகள் எல்லாருமே போராளியாக எண்ணப்பட்டுவிடும் அபாயம் இருக்கிறது. எனவே, நான் அந்தத் தவறைச் செய்ய மாட்டேன் என்று வீரத்தோடு விவேகமாக அல்லவா சிந்தித்திருக்க வேண்டும். ஆனால், நீ அப்பாவிபோல் உடை அணிந்துகொண்டு அராஜகச் செயல்கள் செய்து வந்தாய். பின்விளைவுகளை நீ யோசிக்கவில்லை. நீ யாருக்காகப் போராடுவதாகச் சொல்கிறாயோ அவர்கள் மேல் உனக்கே அக்கறை இல்லையென்றால் மற்றவர்களுக்கு எப்படி வரும். அதுமட்டுமல்லாமல் அந்த அப்பாவிகளையே பகடைக் காய்களாகவும் அவர்கள் பயன்படுத்தினார்கள். மருத்துவமனையில் இருந்து கொண்டு தாக்குதல் நடத்துவது, சட்டென்று எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு ஓடிவிடுவது… இப்படிச் செய்தால் என்ன ஆகும். வானில் இருந்து தாக்கும் விமானத்துக்கு எந்த திசையில் இருந்து குண்டு வீசப்பட்டது என்பது மட்டுமே தெரியும். அதை நோக்கி ஏவுகணையைச் செலுத்தும். மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் மீது ஏவிகணைகள் ஏவிக் கொன்றூவிட்டார்கள் என்று புலம்புவதில் அர்த்தமே இல்லை. செஞ்சிலுவை சங்கத்தினர் எத்தனை தற்காலிக முகாம்களை புலிகளின் இந்த அராஜக நடவடிக்கையால் காலி செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள் தெரியுமா..?

புலிகளின் கோரிக்கையில் இருந்த அநியாயத்தையும் அவர்களுடைய தவறான நடவடிக்கைகளையும் பார்த்த எத்தனையோ ஆயிரக்கணக்கான ஈழத் தமிழர்கள் அழகாக நாடுவிட்டு நாடு பறந்துவிட்டார்கள். ஆஸ்திரேலியாவுக்கோ, ஐரோப்பாவுக்கோ, கனடாவுக்கோ படித்து திறமையை வளர்த்துக் கொண்டு போவதென்றால் ஈழத் தமிழர்களில் இத்தனை பேருக்கு அயல்நாட்டு வாசம் கிடைத்திருக்குமா என்ன..? துர் நாற்றம் மிகுந்த ஈழத்தின் ஜன்னல்களைச் சாத்திக் கொண்டார்கள். போர் அவர்களுக்கு ஒரு சொர்க்கத்தின் வாசலைத் திறந்தது. தமிழ் தேசம் என்ற பொய்யான கற்பிதத்தை மட்டும் விட்டுவிட முடிந்தவர்களுக்கு அது ஒரு பொன்னான வாய்ப்பு. பலர் அதை அழகாகப் பயன்படுத்திக் கொண்டார்கள். ஆனால், புலம் பெயர்ந்தவர்கள் என்ற போர்வையில் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத செல்வச் செழிப்பு மிகுந்த நாடுகளுக்கு எளிதில் போய் ராஜ வாழ்க்கை வாழும் வாய்ப்புகள் இருந்த போதிலும் சிலர் அதைச் செய்யவில்லை. தமிழீழக் கனவை, அது கனவு மட்டுமல்ல கற்பனை என்று தெரிந்த பிறகும் கைவிடவில்லை. இலவம் பஞ்சு காயாகும் என்று காத்திருந்த முட்டாள் கிளியைப் போல் களமாடும் தலைவன் வென்று தருவான் அந்தக் கனவை என்று கண்களைத் திறக்கவே இல்லை. அவர்கள் நிரந்தரமாகத் தூங்க வேண்டிவந்துவிட்டது.

என்ன செய்ய…தவறான இடத்தில் அல்லவா நம்பிக்கையை வைத்துவிட்டார்கள். தெய்வத்துக்கு பதிலாக சாத்தானை அல்லவா தொழுதுவிட்டார்கள். சாத்தான் தன்னால் என்ன முடியுமோ அதைப் பரிசளித்தது. தலை தாழ்த்தி வணங்கியவர்களின் தலையை வாங்கியது. கூட இருந்தவர்களைக் குழியில் தள்ளியது. நம்பிப் பின் தொடர்ந்த ஆட்டு மந்தையை விஷப் புல்வெளி நோக்கி ஓட்டியது. மரணத்தின் சதுரங்கக் கட்டங்களில் தன்னை நம்பிய மக்களைப் பகடைக் காய்களாக உருட்டி விளையாடியது. மல்லிகை முற்றங்களில் குருதியைப் பெருகச் செய்தது. கொக்கு பூத்த வயல்வெளியை சாம்பல் காடாக்கியது. பாவம்… ஈழ வசந்தம் வரும் என்ற நம்பிக்கையில் இருந்த இலைகளையெல்லாம் உதிர்த்தன தமிழ் மரங்கள். கண்ணுக்கெட்டிய தூரம் வரையிலும் பட்டுப் போய் நிற்கும் இன்றைய மரங்களைப் பார்க்கையில் எங்கள் மனம் ‘ஐய்யகோ…’ என்ற ஒற்றை வார்த்தையை மட்டுமே உச்சரிக்கிறது.

அதிலும் போரின் உச்சகட்டத்தில் நடந்த கொடூரங்களை நினைத்துப் பார்க்கும்போது புத்தனை வணங்கும் என் புத்தி பேதலித்தே போய்விடுகிறது. கழுத்தை நெரிக்கத் தொடங்கிய சிங்கள ராணுவத்தை தடுத்து நிறுத்த பொய்யான செய்திகளை இணைய நதிகளில் பெருக்கெடுக்கச் செய்தனர். அதைப் பார்க்கும் சர்வதேச சமூகம் எப்படியும் போர் நிறுத்தத்தைக் கொண்டுவந்துவிடும் என்று தப்புக் கணக்குப் போட்டனர். ஆனால், சாத்தான் ஓதிய இந்த வேதம் சர்வதேச சமூகத்தின் செவிகளில் எட்டவில்லை. சரியாகச் சொல்வதானால், வேதம் ஓதுவது சாத்தான் தான் என்பது நன்கு தெரிந்துவிட்டதால் அது மவுனம் காத்தது. சிங்கள ராணுவத்தின் டாங்கிகள் தார்ச்சாலையில் தன் இரும்பு நகங்களைப் பதித்தபடி முன்னேறத் தொடங்கியது. ஏழு குதிரைகள் பூட்டிய தேரில் கதிரவன் வருகையில் இருள் அரக்கன் ஓடி ஒளிவதுபோல் புலிகள் ஒடுங்கினர். ஆனால், கதிரவனின் முன் காரிருள் தப்ப முடியுமா..? உண்மையில் நெருங்கி வந்த அந்த வெளிச்சத்தில்தான் மக்களுக்கு தாங்கள் இதுவரை தொழுதது தெய்வத்தை அல்ல என்பது தெரிய வந்தது. ஆனால், என்ன செய்ய… அதற்குள் காலம் கடந்துவிட்டிருந்தது. சாத்தான் தன் கடைசி ஆயுதமாக தன்னை நம்பியிருந்தவர்களையே கவசமாகப் பிடித்துக் கொள்ள ஆரம்பித்தது. தப்பி ஓட முயன்றவர்களை கொடூரமாக கொன்று குவித்தது. அப்படிக் கொலை செய்யப்பட்டவர்களை சிங்கள அரசு கொன்றதாக பொய்யுரையைப் பரப்பியது. கூப்பிட்ட இடத்துக்கெல்லாம் கூட வரமாட்டேன் என்று சொல்லி பதுங்குகுழிக்குள் பதுங்கினார்கள் சிலர். அந்த பதுங்கு குழியைச் சுற்றி கண்ணிவெடியைப் பதித்து வைத்தார்கள் புலிகள். நான் நினைக்கிறேன், தனி ஒருவனுக்காக ஒரு இனமே அழிய வேண்டுமா என்று கோபப்பட்ட ஒரு சொரணையுள்ள தமிழனுடைய துப்பாக்கி குண்டுதான் அநாதைப் பிணமாக ஆற்றோரம் அவனைக் கிடக்க வைத்திருக்கும்.

சர்வதேச நீதி மன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டிருந்தால் தெரிந்திருக்கும் கதை. ஒவ்வொரு தவறுக்கும் குறைந்த பட்ச தண்டனையாக மரண தண்டனை கொடுக்கப்பட்டு, அவருக்கு பதிலாக அவருடைய இனத்தில் இருந்து ஒவ்வொருவரையாக தூக்கிலிடுவதாக இருந்தால் ஒட்டு மொத்த தமிழினத்தைத் தூக்கிலிட்டாலும் தண்டனையின் பட்டியல் முடிவுக்கு வந்திருக்காது. இலங்கைப் பிரச்னையில் கொல்லப்பட்ட அனைவரையும் உயிர்த்தெழ வைத்து ஒற்றை நபரைக் காரணம் காட்டும்படிக் கேட்டுக் கொள்ளப்பட்டால் அனைத்துச் சுட்டு விரல்களும் வல்வெட்டித்துறையை நோக்கியே நீண்டிருக்கும். உயிர்த்தெழுபவர்கள் உண்மையே பேசுவார்கள் என்ற நம்பிக்கையில் இதைச் சொல்கிறேன்.

(தொடரும்)

No comments:

Post a Comment