விடுதலைப் புலிகள் தரப்பு (அருகில் இருக்கும் தலைவரைப் பார்த்து) : மார்ச் 8 க்கு என்ன முக்கியத்துவம் தெரியுமா..?
அருகில் இருப்பவர் : தெரியும். சர்வதேச மகளிர் தினம்.
விடுதலைப் புலி : பிப் 14 க்கு என்ன விசேஷம் தெரியுமா..?
அருகில் இருப்பவர் : காதலர் தினம்.
விடுதலைப் புலி : இன்னொருவரைப் பார்த்து : ஜனவரி 1
இரண்டாமவர் : ஆங்கிலப் புத்தாண்டு தினம்.
விடுதலைப் புலி : ஜூலை 24..?
பதில் தெரியாமல் முழிக்கிறார்.
விடுதலைப் புலி : ஆயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட தினம். லட்சக்கணக்கான தமிழர்கள் அகதிகளாக அலைய ஆரம்பித்த தினம். கறுப்பு ஜூலை...
விடுதலைப் புலி : மே 31..?
உதட்டைப் பிதுக்குகிறார்கள்.
விடுதலைப் புலி : யாழ் நூலகம் எரிக்கப்பட்ட தினம். தமிழ் இனத்தின் தலைமுறை தலைமுறையாக கைமாறப்பட்ட, இனி ஒருபோதும் திரும்பக் கிடைக்க முடியாத அறிவுச் செல்வம் சிங்கள நாய்களால் எரியூட்டப்பட்ட நாள்.
செப் 26..?
பதில் தெரியாமல் முழிக்கிறார்.
விடுதலைப் புலி : செப் 15
பதில் தெரியாமல் முழிக்கிறார்.
விடுதலைப் புலி : மாவீரன் திலீபன் உண்ணாவிரதம் ஆரம்பித்த நாள்... செப் 26 அவன் உயிர் துறந்த தினம். அவன் உயிர் துறந்தபோது நான் அருகில் இருந்தேன். உண்ணாவிரதமிருந்து உயிர் துறப்பது என்பது எவ்வளவு கொடுமை தெரியுமா... காலையில் வயிறு முட்டத் தின்றுவிட்டு ஏர் கூலரைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு மாலையில் பழரசம் குடித்து முடிக்கும் சங்கதி அல்ல... நீச்சல் தெரிந்தவனால் நீரில் மூழ்கி இறக்க முடியாது... கடைசி நேர மூச்சுமுட்டலைத் தாங்க முடியாமல் எப்படியும் நீரை விட்டு வெளியேறிவிடுவான் என்று சொல்வார்கள். உணவை மறுத்து உயிரை விடுவதும் அப்படியான ஒரு மரண வேதனையைத்தான் தரும்.
உயிரைப் போக்கிக் கொள்வதில், இருப்பதிலேயே மிகவும் கொடுமையானது பட்டினி கிடந்து உயிர் துறப்பதுதான். சயனைட் தின்று இறப்பதற்கு பெரிய வீரம் தேவையில்லை. கழுத்தில் இருக்கும் குப்பியைக் குனிந்து கடித்தால் போதும். அடுத்த நொடியில் மரணம். வெடிகுண்டை உடலில் கட்டிக்கொண்டு தாக்கி இறப்பதிலும் அதிக வலி கிடையாது. ஒரு ஸ்விட்சை இப்படி அழுத்தினால் போதும் அடுத்த விநாடியில் அனைத்தும் முடிந்துவிடும். ஆனால், பட்டினி கிடந்து இறப்பது அப்படியல்ல... முதலில் கண்கள் இருட்டிக் கொண்டுவரும். கால்கள் தளர்ச்சியுறும். கைகள் தளர்ச்சியுறும். உடல் உறுப்புகள் ஒவ்வொன்றாக செயல் இழக்கும். உடம்பின் ஒவ்வொரு அணுவிலும் ஓராயிரம் கற்களை ஏற்றி வைப்பதுபோல் ஒரு பாரம் அழுத்தும். கழுத்தை நெரிப்பதுபோல் கண்கள் பிதுங்கும். ஒரு துளி நீருக்காக... ஒற்றை பருக்கைக்காக உடல் ஏங்கும்.
நான் பக்கத்தில் தான் நின்று கொண்டிருந்தேன். 11 உதயமும் 12 அஸ்தமனங்களும் வந்து வந்து போயின. திலீபன் உயிருக்குப் போராடினான். இல்லை இல்லை... சுதந்திரத்துக்காகப் போராடினான். இந்த உலகில் காடு அழித்து கழனியாக்கப்பட்ட பகுதிகளில் எல்லாம் செழித்துக் கிடந்தன உணவு தானியங்கள், காய்கள், கனிகள்... ஆனால், திலீபனின் ஒற்றை நேர உணவுக்கான தானியம் மட்டும் இந்த உலகில் இருந்திருக்கவில்லை. அவன் சுதந்திர தேசத்தில் விளைந்த ஒற்றை நெல் மணியைக் கேட்டான். பெரும்பான்மையால் சிறுபான்மை அழித்து ஒழிக்கப்படாத நாட்டில் ஓடும் நதியில் இருந்து ஒரு துளி நீர் கேட்டான்... நான் பக்கத்தில்தான் நின்று கொண்டிருந்தேன். சாகும் தறுவாயில் அவனது கண்களில் ஒரு ஒளி. பிரகாசமான ஒளி. ஈழம் மலரப் போவதை அவன் முன் கூட்டியே கண்டான் போலிருக்கிறது. செப் 15-ல் ஆரம்பிக்கப்பட்ட அவனது உண்ணாவிரதம் முடிந்த நாள் செப் 26.
உங்கள் நாட்காட்டிகள் வேறு... எங்கள் நாட்காட்டிகள் வேறு... நீங்கள் வாழும் உலகம் வேறு. நாங்கள் வாழும் உலகம் வேறு. உங்கள் உலகில் இறக்கும் தந்தையின் உடலுக்கு மகன்கள் எரியூட்டுவார்கள். எங்கள் உலகில் கொல்லப்படும் மகன்களுக்கு தந்தைகள் எரியூட்டுவார்கள். குடும்பத்தில் ஒரு நபர் அகால மரணமடைந்தாலே ஒருவரால் தாங்கிக் கொள்ள முடியாது. அங்கே ஒரு இனமே அகால மரணமடைந்து கொண்டிருக்கிறது... ஈழத்தில் யாரும் மரிப்பதில்லை. கொல்லப்படுகிறார்கள்.
உங்கள் உலகில் ஒருவர் நிமிர்ந்து பார்த்தால் வானில் நிலவு தெரியும்... நட்சத்திரங்கள் தெரியும்... குளிர்ந்த காற்று எங்கோ கூவும் குயிலின் ஓசையைச் சுமந்துவரும். எங்கோ மலரும் மலரின் வாசம் உங்கள் நாசியை நிரப்பும். எங்கள் வானில் நிமிர்ந்து பார்த்தால் ஏவுகணைகள் சீறிப் பாய்வது தெரியும். ஷெல்கள் வேகமாக பூமியை நோக்கி வருவது தெரியும். நள்ளிரவில் குளிர் காற்று எங்கள் பூமியில் மரண ஓலத்தை சுமந்தபடி அலையும். அநாதையாகக் கிடந்தழுகும் பிணத்தின் வாடை அல்லது வெடித்துச் சிதறிய உடலின் பச்சை ரத்த வாடை உங்கள் நாசியை வருடிச் செல்லும். உங்கள் உலகம் வேறு... எங்கள் உலகம் வேறு. உங்கள் வானம் வேறு எங்கள் வானம் வேறு.
சுதந்திரம் வேண்டும் என்று கேட்டதால் தீவிரவாதிகளாக அறிவிக்கப்பட்டவர்கள் நாங்கள். மானமாக உயிர் வாழும் உரிமையைக் கேட்டதால் படுகொலை செய்யப்பட்டவர்கள் நாங்கள். எங்கள் குழந்தைகளுக்கு நாங்கள் விளையாட பொம்மைத் துவக்குகளைத் தருவதில்லை. எங்கள் பச்சிளம் குழந்தைகளைக் கொன்று குவித்த சிங்கள அமைச்சன் என்ன சொன்னான் தெரியுமா... நாங்கள் குழந்தைகளைக் கொல்லவில்லை. எதிர்காலத் தீவிரவாதிகளைத்தான் கொன்றோம்.
கொதிக்கும் தாரில் உயிருடன் போடப்பட்ட குழந்தைகள் விறைத்துச் சாவதை நீங்கள் பார்த்ததுண்டா..? இறந்தது தெரியாமல் தாயின் மார்பில் வாய்வைத்து பால் குடிக்க முயலும் குழந்தையை நீங்கள் பார்த்ததுண்டா..? பிறந்த ஓரிரு மாதங்களில் உடம்பில் ஊடுருவிய ஷெல் துண்டுகளை எடுப்பதற்காக ஆப்பரேஷன் செய்யப்பட்ட குழந்தையை நீங்கள் பார்த்ததுண்டா..? களங்கமற்ற சிரிப்புடன் அதன் உடம்பில் மாட்டப்பட்ட குளுகோஸ் டியூபை பிடித்து விளையாடிய பிஞ்சுக் கரங்களை நீங்கள் பார்த்ததுண்டா..?
நாங்கள் சொல்லவில்லை. அவர்களுடைய புனித நூல்தான் சொல்கிறது சிங்களர்களுக்கு முன்பே அங்கு வாழ்ந்தவர்கள் தமிழர்கள் என்று. இந்தியாவின் கலிங்க தேசத்தில் தவறுகள் செய்ததற்காக தண்டிக்கப்பட்டு நாடுகட்டத்தப்பட்டது ஒரு கூட்டம். அதில் அதிர்ஷ்டவசமாகக் கரையொதுங்கியவர்கள்தான் இலங்கையின் முதல் சிங்களக் குடியேற்றத்தினர். ஆனால், அவர்கள் அங்கு கரையொதுங்கிய காலத்திலேயே பூர்வகுடிகளாக வாழ்ந்து வந்தவர்கள் தமிழர்கள். இலங்கையில் 1956-ல் அதை நினைவுகூரும்விதமாக ஒரு தபால் தலைகூட வெளியிடப்பட்டது. முதன் முதலாகக் கால் பதிக்கும் இளவரசனுக்கு கை கொடுக்கும் வேடர் மகள்! பின்புலத்தில் அவர்கள் ஓட்டி வந்த படகு. சோழர்கள் காலத்தில் வந்த தமிழர்கள், ஆங்கிலேயர் காலத்தில் வந்த தமிழர்களுக்கும் அராபிய தமிழர்களுக்கும் முன்பாகவே அங்கு இருந்திருக்கின்றனர் ஆதி தமிழர்கள்.
ஆளற்ற தீவு யாருக்கு சொந்தம் என்றால் முதலில் காலடி எடுத்து வைத்தவனுக்குத்தான் என்பது உலக நியதி. ஐரோப்பியர்களின் வருகைக் காலம் வரை தமிழ் சாம்ராஜ்ஜியம் தனித்து, தலை நிமிர்ந்தே இருந்து வந்திருக்கிறது. ஈழப் புரவிகள் இலங்கைத் தேரை ஒருபோதும் இழுத்ததில்லை. ஆங்கிலேயர்கள் நிர்வாக வசதிக்காக இரண்டு தேசங்களை ஒன்றாக்கினார்கள். அதுதான் உண்மை. இந்தியாவைத் துண்டாக்கி ரத்த ஆறைப் பெருக வைத்தான். இலங்கையை ஒன்றாக்கி பிணக்காடாக்கிவிட்டிருக்கிறான். இலங்கையின் இறையாண்மை குறித்துப் பக்கம் பக்கமாக உலகம் பேசுகிறது. ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு ஈழத்தின் இறையாண்மையை அழித்துத்தான் அது உருவாக்கப்பட்டதென்ற உண்மையை யாரும் சொல்வதேயில்லை.
தமிழர்கள் இலங்கையின் மக்கள் தொகையில் 22 சதவிகிதம்தான் இருக்கிறார்களாம். அரசு பணிகளில் அதற்கும் மேல் இருக்கிறார்களாம். ஈழத்தை மட்டும் எடுத்துக் கொண்டால் 95%க்கும் மேலானவர்களாயிற்றே அவர்கள். தமிழ் நாட்டில் தமிழர்கள் 90 சதவிகிதம் இருக்கிறார்கள். தென்னிந்தியாவில் அவர்களுடைய பங்கு வெறும் 30%தான் இருக்கும். தென்னிந்தியா முழுவதையும் ஒரு தனி தேசமாக அறிவித்துவிட்டு தமிழர்களை ஒடுக்க ஆரம்பித்தால் அது நியாயமாக இருக்குமா..? தேசத்தின் எல்லையை யார், எப்படி வரையறுப்பது..? 50%க்கும் மேலாக உயர் பதவிகளில் இருந்தனராம். அது கண்களை உறுத்திவிட்டிருக்கிறது. நாங்கள் உயர் பதவிகளில் இருந்தது என்பது எங்கள் திறமையின் அடிப்படையிலான ஒன்றுதான். எந்தத் தந்திரத்தின் மூலமும் நாங்கள் முன்னணிப் பதவியை எட்டவில்லை. ஒருமுகப்பட்ட, கடின உழைப்பு. அதுவே எங்கள் வெற்றிக்கு வழி வகுத்தது. ஆக, சரித்திர நிகழ்வுகளின் அடிப்படையில் பார்த்தாலும் சரி சமகால நிகழ்வுகளின் அடிப்படையில் பார்த்தாலும் சரி ஈழத் தமிழனுக்கு மானமுள்ள வாழ்க்கை வாழ தனித்துப் போவதே ஒரே தீர்வாக இருந்திருக்கிறது.
ஏதோ புலிகள் தனி நாடு கேட்டதால்தான் பிரச்னை இந்த அளவுக்கு மோசமானதாகச் சொல்கிறார்கள் பலர்.
சுதந்திரம் கிடைத்ததும் சிங்கள அரசின் அராஜகங்கள் படிப்படியாக அதிகரித்தன. சுதந்திரம் பெற்றதும் முதன் முதலாகக் கையெழுத்திடப்பட்ட அரசு உத்தரவு எது தெரியுமா..? இந்திய வம்சாவளித் தமிழர்களை நாடு கடத்தும் உத்தரவுதான்.
10 லட்சம் மலையகத் தமிழர்கள் ஒரு இனிய அதிகாலையில் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டனர். இரவில் வீட்டுக் கதவைப் பூட்டிக் கொண்டு தன் அறையில் படுத்த ஒருவர் எழுந்து பார்க்கும்போது வெட்டவெளியில் அம்மணமாக நிற்பது போன்ற அதிர்ச்சி. ஒரு நாட்டில் வேறு நாட்டவர் பத்திருவது வருடங்கள் வாழ்ந்துவிட்டால் அந்த நாட்டின் குடிமகனாக முடியும் என்று சட்டங்கள் சொல்கின்றன. நூறு வருடங்களுக்கு மேல் மூன்று நான்கு தலைமுறைகள் வாழ்ந்துவிட்டிருந்தனர் இந்திய வம்சாவளியினர். ஒருவர் இருவர் அல்ல... 10 லட்சம் பேர். அவர்கள் இலங்கைத் தேயிலைத் தோட்டங்களில் பணி செய்வதற்காக ஆங்கிலேயர்களால் அழைத்துவரப்பட்டவர்கள். காடுகளை அழித்துக் கழனிகளாக்கியவர்கள். தேயிலை உற்பத்தியில் இன்று இலங்கை உலகில் முதல் இடத்தில் இருக்கிறது என்றால் அதற்கு முதலும் கடைசியுமான காரணம் இந்த மலையகத்தமிழர்கள் சிந்திய ரத்தமும் வேர்வையும்தான். மரம்தான் பிரமாண்டமாக வளர்ந்துவிட்டதே... இனி வேர் எதற்கு என வெட்டினர் மூடர்கள்.
மெள்ள மெள்ள வெறுப்பின் அணையில் நீர்மட்டம் உயரத் தொடங்கியது.
ஆரம்பத்தில் தமிழர்களுக்கு சொந்தமான இடங்களில் விவசாய வளர்ச்சி பணி என்ற பெயரில் சிங்களர்களைக் குடியேறவைத்தனர். தமிழ் நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு சிங்களர்களுக்கு தாரைவார்க்கப்பட்டன. அவர்கள் வந்து பவுத்த விகாரைகளைக் கட்டினர். தமிழர்களின் கோயில்களின் கோபுரங்களில் அமைதியாகத் தூங்கிக் கொண்டிருந்த புறாக்கள் பவுத்த விகாரைகளின் வெண்கல மணிச் சத்தத்தைக் கேட்டு அஞ்சி நடுங்கத் தொடங்கின. அந்த வெண்கல மணிகளின் சத்தம் கேட்கும் பகுதிகள் அனைத்தும் சிங்களர்களுக்கு சொந்தமானது என கொக்கரிக்க ஆரம்பித்தனர். தாயைப் பிரிந்த கோழிக் குஞ்சின் மீது கழுகின் நிழல் கவிழ்வதுபோல் பவுத்த விகாரைகளின் வெண்கல மணி நாதம் இலங்கை முழுவதும் கவிழத் தொடங்கியது.
ஆட்சி மொழியாக இனி சிங்களம் மட்டுமே இருக்கும் என அறிவிக்கப்பட்டது. இலங்கையின் இரண்டு பிரதான சிங்களக் கட்சிகளிடையே தமிழர்களை அடக்குவதில் யாருக்கு முதலிடம் என போட்டி நடக்கத் தொடங்கியது. அரசாங்க அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள் ஆகியவற்றின் பிரமாண்டக் கதவுகள் தமிழர்களின் கண் முன்னே தாமாக மூடிக் கொண்டன. இலங்கைத் தமிழ் சமூகம் உண்ணாவிரதங்கள், சத்தியாகிரகப் போர், பேச்சுவார்த்தை என அற வழிகளில் தன் எதிர்ப்பை வெளிப்படுத்திவந்தது. சிங்கள அரசு போராட்டக்காரர்களைக் கொன்று குவித்தது. கொல்லப்பட்டவர்களின் நினைவாக மண்டபங்களும் ஸ்தூபிகளும் எழுப்பி மவுன அஞ்சலி செலுத்தினர் தமிழர்கள். சிங்கள அரசு அந்த நினைவிடங்களையும் தரைமட்டமாக்கினர். அப்போதுதான் தமிழர்களுக்குப் புரிந்தது கொல்லப்படுபவர்களுக்கு நினைவிடங்கள் எழுப்பி மவுன அஞ்சலி செலுத்துவதில் எந்தப் பயனும் இல்லை. அராஜகவாதிகளுக்கு அவர்கள் மொழியில் பதில் சொன்னால்தான் புரியும் என்று. ஈழத் தமிழனின் கையில் ஆயுதம் வந்தது அப்படித்தான். தமிழனுடைய முதல் துப்பாக்கியில் இருந்து முதல் குண்டு பாய்வதற்கு முன்னால் சிங்களத் துப்பாக்கியில் இருந்து ஓராயிரம் குண்டுகள் தமிழ் சமூகத்தின் மீது பாய்ந்துவிட்டிருந்தது. தமிழர்கள், தாக்குவதற்காக ஆயுதம் ஏந்தவில்லை... தற்காத்துக் கொள்ளவே ஆயுதத்தை ஏந்தினர். அதிலும் கூட சிங்கள ராணுவம், அராஜக அரசியல்வாதிகள், உளவாளிகள் ஆகியோரையே புலிகள் கொன்று குவித்தனர். தமிழர்களை அடித்துத் துரத்திவிட்டு அந்தப் பகுதிகளில் குடியேறிய சிங்களர்களையும் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்திய இஸ்லாமியர்களையும் தான் கொன்று வந்திருக்கின்றனர். நூறு வசவுகளைப் பொறுத்துக் கொண்டு அதன் பிறகே சக்ராயுதத்தை பிரயோகித்த கிருஷ்ணனைப் போல் புலிகள் ஒருவரைக் கொல்வதற்கு முன் அவருடைய பல்வேறு துரோகங்களை இன்னல்களைப் பொறுத்துக்கொண்டே வந்துள்ளனர். தங்களால் கொல்லப்படவேண்டியவர் எவரோ அவரை மட்டுமே கொல்லும் அவதாரமாகவே புலிகள் இருந்துவந்துள்ளனர். அவர்களுக்குக் கிடைத்த பட்டமோ பயங்கரவாதிகள்!
உங்கள் வீடுகளில் அழைப்பு மணி ஒலித்தால் அதிகாலையாக இருந்தால் பால்காரர் பால் போட்டதைத் தெரிவிக்க என்று நிம்மதியாகத் தூக்கத்தைத் தொடர்வீர்கள். அல்லது பேப்பர்காரர் தினசரியை கொண்டுவந்திருப்பார் என்று சோம்பல் முறித்தபடியே எழுதுவந்து கதவைத் திறப்பீர்கள். பகல் நேரத்தில் என்றால் தபால்காரர் என்று விரைந்துவந்து கதவைத் திறப்பீர்கள். ஒருவேளை அகாலத்தில் இரவின் நிசப்தத்தைக் கிழித்தபடி அது ஒலித்தால் வேண்டுமானால் நீங்கள் லேசாக கலவரப்படக்கூடும்... ஆனால், எங்கள் வீடுகளில் ஒலிக்கும் அழைப்பு மணிகள் அப்படிப்படவை அல்ல. எந்த நேரத்தில் ஒலித்தாலும் எங்கள் ஈரக்குலையை நடுங்க வைக்கும். வாசலில் வந்து நிற்பது எங்கள் வீட்டு ஆண்களை விசாரணை என்ற பெயரில் அழைத்துச் செல்ல வந்திருக்கும் சிங்களக் காவலராக இருக்கலாம். எங்களை போட்டது போட்டபடி வீட்டை விட்டுவிட்டு ஓடச் சொல்லும் சிங்களக் காடைகளாக இருக்கலாம். பெண்களைக் கதறக் கதறக் கற்பழித்துக் கொல்ல வந்திருக்கும் கலவரக் கும்பலாக இருக்கலாம்...
அழைப்பு மணிதான் என்றில்லை. வீட்டை நெருங்கும் வாகனங்களின் ஓசை... மாடிப்படிகளில் ஏறிவரும் காலடி ஓசை... ஏன் கோவில்களில் ஒலிக்கும் மணியோசைகூட எங்களைக் குலை நடுங்க வைக்கும்.
தமிழகத்தில் இருந்து உறவினர்கள் விடுமுறைக் காலங்களில் எங்கள் வீடுகளுக்கு வரும்போது அவ்வப்போது கேட்கும் துவக்குச் சத்தத்தையும் வெடி குண்டுச் சத்தத்தையும் கேட்டு உங்கள் குழந்தைகள் தீபாவளி நெருங்குகிறது என்றெண்ணி துள்ளிக் குதிக்கும். தமிழகத்துக்கு நாங்கள் வரும்போது உங்கள் வானில் பறந்த விமானங்களின் ஒலி கேட்டு கட்டிலின் அடியில் ஒளிந்து கொண்ட எங்கள் குழந்தைகளைப் பார்த்து உங்கள் குழந்தைகள் கைகொட்டிச் சிரிக்கும். உங்கள் குழந்தைகள் வேறு... எங்கள் குழந்தைகள் வேறு...
உங்கள் குழந்தைகள் கிட்டிபுள் விளையாடுவார்கள். கபடி விளையாடுவார்கள். எல்லைக் கோட்டை தொடுபவன் வெல்வான். எங்கள் நாட்டிலும் விளையாட்டுகள் நடக்கும். பள்ளியில் படித்துக் கொண்டிருப்பவர்கள் வானில் விமானம் வட்டமிட்டதும் யார் முதலில் சென்று பதுங்கு குழிக்குள் இறங்குகிறார்கள் என்று. எங்கள் உலகத்தில் குழந்தை விளையாட்டுகளில் கூட தோற்பவர்களுக்கு இன்னொரு வாய்ப்பு கிடையாது.
ஒரே வானத்தின் கீழ் வசித்தாலும் உங்கள் சூரியனும் எங்கள் சூரியனும் ஒன்றல்ல... உங்கள் கடல்கள் சாதுவானவை... மீன் பிடிக்கச் செல்பவர்களை மீனுடன் திருப்பி அனுப்பிவைத்துவிடும். எங்கள் கடல்களைப் போல் காணாமல் போகச் செய்துவிடாது யாரையும். எங்கள் நாட்டில் கொல்லப்படுபவர்களுக்கு சற்றும் குறையாதது காணாமல் போகிறவர்களின் எண்ணிக்கையும். ஒருவர் காணாமல் போய்விடுகிறார் என்றால் என்னதான் செய்யமுடியும் அவரை நம்பி இருக்கும் ஒரு குடும்பம். வருவான் வருவான் என வழி மேல் விழிவைத்துக் காத்திருப்பதா..? ஒருவேளை இறந்திருந்தால் மேலுலகில் அவர் ஆத்மா ஒரு வாய் சோறு கிடைக்காமல் கதி கெட்டு அலைவயுமே என்று பதறி காணாமல் போனவருக்கு நீத்தார் சடங்கு செய்வதா..? ஒருவேளை உயிருடன் இருந்துவிட்டால்… உயிருடன் இருப்பவனுக்கு பிண்டம் வைப்பதா..? அய்யகோ…
கற்பழிக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டு, சுடப்பட்டு, வெட்டப்பட்டு கண் முன்னே கொல்லப்படுவர்களின் பெற்றோர்கள் பாக்கியவான்கள். அந்தத் திசையில் இனி அடியெடுத்து வைக்க முடியாது என முடிவு செய்து கொண்டு திரும்பிவிடலாம். ஆனால், காணாமல் போகிறவர்களின் பெற்றோர்களின் நிலை இருக்கிறதே அது இந்த உலகில் எதிரிகளுக்குகூட நேரக்கூடாது ஆண்டவனே... எங்கெல்லாம் அடையாளம் தெரியாமல் அழுகும் சடலம் கிடக்கிறதோ அங்கெல்லாம் இவர்கள் ஒடிச் சென்று பார்க்க வேண்டிவரும். மருத்துவமனைக்கு ஒவ்வொரு முறை குற்றுயிரும் குலையுயிருமாக ஒவ்வொரு உயிர் கொண்டுவரப்படும்போதும் அது தன் மகனாக இருக்குமோ என தவிக்கவைக்கும். செய்தித் தாள்களில் அச்சிடப்படும் போராளிகளின் சிதறிய உடலுடன் தன் மகனது உடலைப் பொருத்திப் பார்த்து கலங்க வைக்கும். கண் முன்னே மரிப்பவன் ஒரு முறை மரிக்கிறான். காணாமல் போகிறவனோ..?
(தொடரும்)
No comments:
Post a Comment