அனந்தன் : இலங்கையில் நடந்த சிறுபான்மை, பெரும்பான்மை பிரச்னை இப்படியான கொடூரமான நிகழ்வுகளால் நிரம்புவதற்கு மறைமுகமாக முக்கியமான காரணம் அங்கிருந்த இரண்டாவது வலுவான சமூகமான இஸ்லாமிய தமிழர்கள்தான். நீங்கள் மட்டும் தமிழீழத்துக்கு ஆதரவாக நின்றிருந்தால் சிங்களப் பெரும்பான்மை இந்த அளவுக்கு வன்முறையைக் கையில் எடுத்திருக்காது. அது தமிழர்களை விளிம்புக்குத் தள்ளியிருக்காது. தமிழர்களின் பேரம் பேசும் சக்தியும் அதிகரித்திருக்கும். இரு தரப்புமே ஒரு சுமுகமான தீர்வுக்கு வந்திருக்க முடியும். நீங்கள் எடுத்த பிழையான நிலைப்பாடுதான் எல்லா பிரச்னைக்கும் காரணம் என்று நான் சொல்கிறேன். மறுக்க முடியுமா உங்களால்.
இஸ்லாமியர் : துப்பாக்கி முனையில் மிரட்டிக் கூட்டி வந்திருக்கும் உங்களால் எது வேண்டுமானாலும் சொல்ல முடியும். என்னால், மறுக்க முடியாதுதான். ஆனால், சில உண்மையை உங்களுக்கும் உலகுக்கும் சொல்லிப் புரியவைக்க விரும்புகிறேன்.
உலக மக்களுக்கு இலங்கைப் பிரச்னை என்றால் அங்கு பெரும்பான்மையாக இருக்கும் சிங்களர்களுக்கும் சிறுபான்மையாக இருக்கும் தமிழர்களுக்கும் இடையிலான பிரச்னை என்று தான் தெரியும். தமிழ் ஈழம் என்பதுதான் ஒட்டு மொத்த தமிழர்களின் இலக்கு என்றே பெரும்பாலான ஊடகங்களில் சித்திரிக்கப்படுகின்றன. ஆனால், அங்கு இஸ்லாமியத் தமிழர் என்றொரு தனிச் சிறுபான்மை இனமும் இருக்கிறது. அதன் தேவைகள், கனவுகள், உரிமைகள், இலக்குகள் எல்லாம் முற்றிலும் வேறுபட்டவை என்ற விஷயம் யாருக்கும் தெரிவதில்லை. அதனால்தான் ஒரு லட்சம் இஸ்லாமியர்களை போட்டது போட்டபடி தலைமுறை தலைமுறையாக தாங்கள் வாழ்ந்து வந்த நிலத்தைவிட்டுவிட்டு இரண்டு மணி நேரத்துக்குள் வெளியேற வேண்டும் என்று துரத்தியடித்தவர்களை சுதந்திரப் போராளிகள் என்று தலையில் தூக்கி வைத்துக்கொண்டு கொண்டாடுகிறது. அல்லாவைத் தொழுதுவிட்டு வருகிறேன் என்று சொல்லிவிட்டுப் போன குழந்தைகளை அல்லாவின் சன்னிதியிலேயே கொன்று குவித்தவர்களை வீரர்கள் என்று போற்றுகிறது.
இலங்கையில் சிறுபான்மையினராக தமிழர்கள் மட்டுமல்ல... இஸ்லாமியர்களும் இருக்கிறார்கள். இலங்கை முழுவதும் பரவலாக வசிப்பதோடு கிழக்குப் பகுதியில் பெரும்பான்மையினராகவும் வசித்துவருகிறார்கள். இன்று நேற்று அல்ல... தமிழர்கள் இந்த இலங்கையில் வாழும் காலந்தொட்டே இஸ்லாமியரும் வாழ்ந்துவருகிறார்கள். தமிழ் பேசுகிறோம் என்ற ஒரே காரணத்தினால் நாங்கள் தமிழர்கள் ஆகிவிடுவதில்லை. எங்களுக்கென்று ஒரு தனி அடையாளம் இருக்கிறது. அதைக் காப்பாற்றிக் கொள்ளும் உரிமை எங்களுக்கு இருக்கிறது. தாயும் பிள்ளையும் என்றாலும் வாயும் வயிறும் வேறு என்று சொல்வார்கள். தாயுக்கும் பிள்ளைக்குமே அந்த கதி... இங்கோ தனித்தனியான இரு நபர்களுக்கும் சேர்த்து ஒருவரே சாப்பிட்டுக் கொள்கிறேன் என்றார். உன் சிறகுகளை வெட்டிக் கொடுத்துவிடு... நான் உன்னைச் சுமந்துகொண்டு பறக்கிறேன் என்றார்கள். எதற்கு..? உங்களுக்காவும் சேர்த்து நாங்களே சவப்பெட்டி தயாரித்துத் தருகிறோம் என்றார்கள். எதற்கு..? எங்களுக்காக யாரும் போராட வேண்டாம். எங்கள் எதிரிகளை நாங்களே தீர்மானித்துக் கொள்கிறோம் என்று நாங்கள் சொன்னோம்.
பிரச்னையின் ஆணிவேரே அதில்தான் இருக்கிறது. விடுதலைப் புலிகள் தாங்கள்தான் ஒட்டுமொத்த தமிழ் சமூகத்தின் பிரதிநிதிகள் என்று சொல்லிக் கொண்டார்கள். அது முதலாவது தவறு. இரண்டாவதாக அவர்கள் மிகவும் தவறான கோரிக்கைகளை முன்வைத்துப் போராடினார்கள். இரண்டுமே இஸ்லாமிய தமிழ் சமூகத்துக்கு உடன்படான விஷயம் அல்ல. இதை நான் சற்று விளக்கிச் சொல்கிறேன்.
விடுதலைப் புலிகள் மொழியை முதன்மைப்படுத்திப் போராடினார்கள். இஸ்லாமியரான எங்களுக்கு தேசம், இனம், மொழி இவையெல்லாமே இரண்டாம்பட்சமானவைதான். நாங்கள் அல்லாவை மட்டுமே வணங்குவோம். வேறு எந்த ஒன்றின் அடிப்படையிலும் அணிதிரளமாட்டோம். நாங்கள் முதலில் இஸ்லாமியர்கள். அதன் பிறகுதான் தமிழர்கள்.
அதுமட்டுமல்லாமல் இலங்கை விஷயத்தில், இரண்டாவது பெரிய சிறுபான்மை இனத்தவரான எங்களுக்கு நியாயம் எது என்பது தெரிந்திருக்கிறது. நாங்கள் எத்தனை சதவிகிதம் இருக்கிறோமோ அதற்கு உரிய பிரதிநிதித்துவம் தரவேண்டும் என்று மட்டுமே கேட்கிறோம். அதனால்தான் பதினைந்து சதவிகிதம் மட்டுமே இருந்த தமிழர்கள் ஆரம்பத்தில் 50-50 சதவிகித அதிகாரப் பகிர்வு கேட்டபோதே நாங்கள் அவர்களை ஆதரிக்கவில்லை. தனி நாடு வேண்டும் என்று கேட்டதை எப்படி ஆதரிப்போம்? சிறுபான்மையான நாங்கள் பயந்துவிட்டோம் என்று பழித்தார்கள். உண்மைக்கு நெருக்கமாக இருப்பதைக் கோழைத்தனம் என்று சொல்வீர்கள் என்றால் நாங்கள் கோழைகளாக இருப்பதையே விரும்புகிறோம். துரோகிகள் என்று தூற்றினார்கள். மாற்றுக் கருத்து கொண்டு எதிரில் நிற்பவர்களையும் எதிரிகளாக்கிக் கொண்டு தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொள்வதுதான் வீரம் என்றால் அத்தகைய வீரம் எங்களுக்குத் தேவையில்லை.
சிங்களர்கள் அப்படி ஒன்றும் சிறுபான்மையினரைத் தரக்குறைவாக நடத்திவிடவில்லை. எங்களுக்கும் சரி தமிழர்களுக்கும் சரி... உரிய அங்கீகாரம் கொடுத்தே வந்திருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால், தமிழர்களுக்கு அவர்கள் எத்தனை சதவிகிதம் இருக்கிறார்களோ அதற்கு அதிகப்படியான பிரதிநிதித்துவம் கிடைக்கத்தான் செய்திருந்தது. சிங்களர்கள், அதிகாரம் தங்கள் கையில் இல்லாதபோது கைவிட்டுப் போன ஒன்றை அதிகாரம் கையில் கிடைத்ததும் சரி செய்ய முயன்றார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது? திருட்டுத்தனம் செய்தவரைப் பிடித்து திருடியதை எல்லாம் திருப்பிக் கொடுத்துவிடு என்று சொன்னால் அவருக்குக் கோபம் வரத்தான் செய்யும். அதற்காக திருட்டை ஆதரிக்க முடியுமா என்ன..? நேற்றுவரை நான் திருடிக் கொண்டிருந்தேன்... இனியும் தொடர்ந்து திருட அனுமதித்துத்தான் ஆக வேண்டும் என்று சொன்னால் யார்தான் அதற்கு சம்மதிப்பார்கள்?
சிங்களர்கள் அதிகமாக இருக்கும் ஒரு நாட்டில் சிங்களத்தை ஆட்சி மொழியாக அறிவித்தார்கள். இதில் என்ன தவறு இருக்கிறது? நாங்கள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் என்பதால் எங்களுக்கு தமிழும் தெரிந்திருந்தது. சிங்களமும் தெரிந்திருந்தது. எனவே, நாங்கள் சிங்கள வழிக் கல்வியை ஏற்றுக் கொண்டோம். இதில் துரோகம் எங்கே வந்தது?
தமிழர்கள் அனைத்து துறைகளிலும் அவர்களுடைய இருப்புக்கு மீறிய அங்கீகாரத்தைப் பெற்றிருந்தார்கள். எனவே, கல்வித்துறையில் சில சீர்திருத்தங்கள் கொண்டுவரப்பட்டன. அந்த சட்டத்தைக் கொண்டுவந்தது எங்கள் கல்வி அமைச்சர்தான். இதற்காக நாங்கள் வெட்கப்படவில்லை. வேதனைப்படவில்லை. ஒரு நியாயமான செயலை துணிச்சலுடன் செய்தோம். அவ்வளவுதான். உண்மையைச் சொல்லப்போனால் அந்த சட்டத்தினால் நகர்ப்புற சிங்களர்கள்தான் தமிழர்களை விட அதிகம் பாதிக்கப்பட்டார்கள். அது உண்மையில் இலங்கையின் பின் தங்கிய பகுதியில் வசித்த மக்களுக்கு முன்னுக்கு வர ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க முயன்றது. ஆனால், தமிழர்கள் அதை இன அடிப்படையில் பார்த்து அய்யோ... பெரும்பான்மை சிறுபான்மையை நசுக்குகிறது... நாங்கள் பிரிந்து போகிறோம் என்று கூக்குரலிட ஆரம்பித்தார்கள். அமைதியாகப் போராடினோம். பலன் கிடைக்கவில்லை... அதனால் ஆயுதத்தை எடுத்தோம் என்றார்கள். ஒரு தவறை அமைதியாகச் செய்தால் மட்டும் அது சரியாகிவிடுமா.?
தமிழ் பகுதியில் வாக்கெடுப்பு நடத்தினால் தமிழர்களுக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பு கிடைக்கும். அதை வைத்துக் கொண்டு நாட்டைப் பிரித்துக் கொடு என்று கேட்பது எந்தவகையில் நியாயம்..? நாளைக்கே சைவப் பிள்ளைமார்களிடையே ஒரு வாக்கெடுப்பு நடத்தினால் அவர்கள் அவர்கள் சாதிக்கு ஆதரவாகத்தான் வாக்களிப்பார்கள். கரையார்களிடம் கேட்டால் அவர்கள் தங்கள் சாதிக்கு ஆதரவாகத்தான் வாக்களிப்பார்கள். உடனே அவர்களுக்கென்று கொஞ்சம் பங்குபோட்டுக் கொடுக்க முடியுமா.? அண்டையில் இருக்கும் இந்தியா முதல் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா என எந்த நாட்டை எடுத்துக் கொண்டாலும் விடுதலைப் புலிகளின் தனி நாடு கோரிக்கைக்கு ஒருவருமே ஆதரவு தெரிவிக்கவில்லை. உலகில் எங்கு ஒடுக்குமுறை நடந்தாலும் அந்தப் போராளியைத் தன் சக தோழராக நினைக்கும் க்யூபாவே ஆதரவு தரவில்லை. ஏனென்றால் அது தர்மமல்ல. அப்படி தர்மமாகாத ஒரு செயலுக்கு இஸ்லாமியர் துணை போகாதது எப்படி தவறாகும்?
சிறுபான்மை பெரும்பான்மை உறவு என்பது கணவன் மனைவி உறவைப் போன்றது. கணவன் கொடுமைப்படுத்தினால் அப்போது கூட மனைவி முதலில் அவனைத் திருத்தி குடும்பம் சரிவர நடக்க முயற்சி செய்யவேண்டும். முடியவே முடியவில்லை என்றால்தான் விவாகரத்துக் கோரி மனு தாக்கல் செய்யலாம். அதைவிட்டுவிட்டு கணவன் எந்த கொடுமையும் செய்யாதபோதே, நாளைக்கு நான் தூங்கிக் கொண்டிருக்கும்போது என் தலையில் கல்லைப் போடமாட்டாய் என்பது என்ன நிச்சயம்... என்னைக் கிணற்றில் தள்ளமாட்டாய் என்பதற்கு என்ன உத்தரவாதம்..? என்று அதீதமாகப் பயந்து அவனை அடிக்க ஆரம்பித்தால் அவனும் வேறு வழியின்றி கையை ஓங்கத்தான் செய்வான். ஆம்பளை அடிச்சா கொஞ்சம் வலி கூடுதலாகத்தான் இருக்கும். என்ன செய்ய இந்த இடத்தில் அவன் ஆணாயிற்றே... அப்படி உனக்கு அவனுடன் வாழ முடியவில்லை என்றால் ஓடிப் போய்விடு. அதைவிட்டுவிட்டு கணவனின் சொத்தில் பங்கு வேண்டும்... அது வேண்டும்... இது வேண்டும் என்று கேட்டால்..? தமிழர்கள் அதைத்தான் செய்தார்கள்.
அவர்களுடைய அதிகப்பிரசங்கித்தனமான செயல்களினால் அவர்களுக்கு அதிக இழப்பை சந்திக்க நேர்ந்தது. நாங்கள் அப்படி செய்யவில்லை என்பதால் சிங்களர்கள் எங்களை ஒன்றும் செய்யவில்லை. இதை வைத்துக் கொண்டு நாங்கள் சிங்களர்களுக்கு துணை போகிறோம் என்று எப்படிச் சொல்லமுடியும்? நாங்கள் நியாயத்தின் பக்கம் நின்றோம். நடுநிலை வகித்தோம். அதற்காக விடுதலைப் புலிகளால் நாங்கள் பட்ட வேதனை இருக்கிறதே சொல்லி மாளாது. நாளை ஈழம் என்ற ஒன்று மலர்ந்ததென்றால் இன்று சிங்களர்களிடம் சிறுபான்மையினரான தமிழர்கள் படும் துயரத்தைவிட அதிக துயரத்தை தமிழர்களிடம் நாங்கள் பட வேண்டியிருக்கும்.
யாழ் நிலத்தில் இருந்த எங்கள் விளை நிலங்கள் முழுவதும் விடுதலைப் புலிகளால் கையக்கப்படுத்தப்பட்டன. எங்கள் வீடுகள், கடைகள் சூறையாடப்பட்டன. எங்கள் மசூதிகள் தரைமட்டமாக்கப்பட்டன. எங்களில் பலர் வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தனர். இதனால் எங்களுக்கு இலங்கை முழுவதும் சென்றுவர வேண்டியிருந்தது. அந்த ஒரு காரணத்தினாலேயே நாங்கள் ஒற்றர்கள் என்று முத்திரை குத்தப்பட்டோம். எங்களில் சிலர் இலங்கை ராணுவத்தில் பணி புரிந்திருக்கக்கூடும். சிலர் உளவு வேலை பார்த்திருக்கக்கூடும். அதைச் சாக்காக வைத்துக் கொண்டு யாழ்பாணத்தில் இருந்த இஸ்லாமியர் அனைவரும் துரத்தியடிக்கப்பட்டது எந்த வகையில் நியாயம்? அழுத்திக் கேட்டால் நாங்கள்தான் மன்னிப்புக் கேட்டுவிட்டோமே என்று ஒரு அசட்டுத்தனமான பதில். அவர்கள் மன்னிப்புக் கேட்டுவிட்டால் நாம் எல்லாவற்றையும் மறந்துவிட வேண்டுமாம்.
அந்த நாள் எனக்கு நன்கு நினைவிருக்கிறது. புலிகளின் வாகனம் அமைதியாக இருந்த தெருக்களுக்குள் பேரிரைச்சலை ஏற்படுத்தியபடியே நுழைந்தது. அதன் கூரையில் ஒலிப்பெருக்கி கட்டப்பட்டிருந்தது. எல்லா இஸ்லாமியர்களும் ஓஸ்மானியா கல்லுரி வளாகத்துக்கு வரும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஏதோ முக்கிய செய்தி சொல்லப் போகிறார்கள்… ஈழம் மலர்ந்துவிட்டது போலிருக்கிறது என்று ஆவலாக எல்லாரும் கூடினோம். இரண்டு மணி நேரத்துக்குள் எல்லா இஸ்லாமியரும் ஓடிப் போய்விடுங்கள்... என்று ஒற்றை வரியில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தலைமுறை தலைமுறையாக வாழ்ந்து வந்த வீடு வாசல், நில புலன், கடை கண்ணிகள் அனைத்தையும் விட்டுவிட்டு சுமார் ஒரு லட்சத்துக்கும் அதிகமான இஸ்லாமியர்கள் என்றென்றைக்குமாக தங்கள் பூர்விக மண்ணை விட்டு இடம் பெயர்க்கப்பட்டார்கள். கையில் வெறும் 150 ரூபாய் மட்டுமே எடுத்துக் கொள்ள அனுமதி தரப்பட்டது. சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளாக வாழ வேண்டிய கொடூரம். ஒரு வருடம் இரண்டு வருடம் அல்ல... சுமார் 20 வருடங்கள் ஆகிவிட்டது. அன்று துரத்தப்பட்டவர்கள் இன்னும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவில்லை. நகரமே கல்லறைத் தோட்டமாகிவிட்டிருக்கும் சூழலில் அகதிகள் முகாம் வீடாகியிருக்கும் கதையைப் பெரிதாகச் சொல்லவந்துவிட்டாயே என்கிறீர்களா? அது சரிதான்.
அதோடு போயிருந்தால் உயிரோடு வாழ விட்டிருக்கிறார்களே அதுவே பெரிதென்று நினைத்து பெரிய கும்பிடு ஒன்றைப் போட்டிருக்கலாம். ஆனால் அப்படி நடக்கவில்லையே.
இலங்கை முழுவதிலும் இஸ்லாமியர்கள் சிறு சிறு குழுக்களாக வசித்து வந்தனர். ஒவ்வொரு சிறு குழுவுக்கும் ஒரு சிறிய மசூதி இருந்தது. காட்டாங்குடியிலும் ஒரு மசூதி இருந்தது. உலகிலேயே மக்கள் நெருக்கடி மிகுந்த பகுதிகளில் அதுவும் ஒன்று. ஒரு நாள், தென்றல் காற்று மாலை நேரப் பிரார்த்தனைக்கான பாங்கு ஒலியைச் சுமந்தபடி இதமாகத் தவழ்ந்து சென்றது. அது அவர்களுக்கான மரண அழைப்பு என்பது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. செய்து கொண்டிருந்த பணிகளை அப்படியே நிறுத்திவிட்டு இஸ்லாமிய சமூகத்தினர் அனைவரும் மசூதி நோக்கி நடந்தனர்.
தெருக்களில் எல்லா ஊர்களையும் போலவே கூக்குரலும் கும்மளமுமாக விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களும் விளையாட்டை நிறுத்திவிட்டு மசூதிக்கு உற்சாகத்துடன் ஓடினர். அக்ரம் அவர்களில் மிகவும் குட்டிப் பையன். ஆறு வயதுதான் ஆகியிருந்தது. அஜ்மல், ஜரூன், ரிஸ்வான் ஆகியோருக்கு பத்து வயதாகியிருந்தது. ஆஸ்ரஃபுக்கு 11 வயது. தல்ஹன், ஃபவுஸர் ஹஸன், ஆரிஃப், மகீன், கமாலுதீன், இம்தியாஸ் ஆகியோருக்கு 12 வயது. அன்ஸ், ஜவாத்க்கு வயது 13. ஜாஃபர், மொகம்மத் ஃபவுஸர், சஃபர் ஆகியோரின் வயது 14. 15 வயதான ஃபல்சான் தான் அந்தக் குழுவிலேயே அதிக வயது ஆனவன். இவர்கள் அனைவரும் ஒரே பள்ளியில் படித்து வந்தனர். எப்போதும் சேர்ந்தேதான் பள்ளிக்குச் செல்வார்கள். திரும்பி வருவார்கள். தெருவில் ஒன்றாகத்தான் விளையாடுவார்கள். ஒன்றாகத்தான் மசூதிக்குச் செல்வார்கள். அதனால்தானோ என்னவோ கடைசியில் ஒன்றாகவே படுகொலையும் செய்யப்பட்டார்கள்.
வழக்கம்போல் அன்று தொழுகைக்கு மசூதிக்குப் போனதும் கை, கால் கழுவிக் கொண்டு தங்கள் இடத்துக்குச் சென்று முழந்தாளிட்டு அமர்ந்தனர். அப்போது திடீரென்று மின்சாரம் போய்விட்டது. படுகொலை நிகழ்த்தத் திட்டமிட்டிருந்த புலிகளின் வேலை அது. ஆனால், அன்று தொழுகைக்கு வந்திருந்த யாருக்கும் அது தெரிந்திருக்கவில்லை. மெழுகுவர்த்தியை ஏற்றிவைத்துக்கொண்டு மண்டியிட்டனர். தலை தாழ்த்தி வணங்கிவிட்டு நிமிர்ந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இறைவன் இருக்கவேண்டிய சுவரில் கையில் துப்பாக்கிகளுடன் சாத்தான்களின் முரட்டு நிழல்கள். என்ன ஏது என்று உணர்ந்து கொள்வதற்குள் சரமாரியாகச் சுடத் தொடங்கினர் புலிகள். தொழுகையில் ஈடுபட்டிருந்த நிராயுதபாணிகளான அந்த இஸ்லாமியர்கள் அல்லாவின் சன்னிதியில் அவர் முன்னாலேயே மரணத்தைத் தழுவினர். 147 பேர்... அல்லாவைத் தொழுது கொண்டிருந்தது மட்டுமே அவர்கள் செய்த தவறு.
விவசாயிகள், பள்ளி ஆசிரியர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் என போருக்கும் வன்முறைக்கும் எந்த சம்பந்தமும் இல்லாத இஸ்லாமியர்கள் ஆயிரக்கணக்கில் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். பிரபாகரன் என்ற ஒற்றை மனிதனின் மனதில் மையங்கொண்டிருந்த பிரிவினைவாதப் புயலானது இலங்கையை நிர்மூலமாக்கிவிட்டிருக்கிறது. ரத்தமழையை முடிவற்றுப் பொழியும் வன்முறை மேகங்களை அது தொடர்ந்து அனுப்பிவந்தது. அமைதிக்கான பெருமரங்களை அது வேரோடு வீழ்த்தியது. சகோதரத்துவத்துக்கான கேணிகளை அது மண்ணைப் போட்டு மூடியது. ஸ்நேகத்தின் மின் இணைப்புகளை ஒரேயடியாகத் துண்டித்துவிட்டது. பரஸ்பர நம்பிக்கை எனும் பாலங்களை தரைமட்டமாக்கிவிட்டது. ஒருமைப்பாடு எனும் நெடுஞ்சாலைகளை நிரந்தரமாகத் தூர்த்துவிட்டது. புயல் கரையைக் கடந்துவிட்டது. ஆனால், வெள்ளம் இன்னும் வடியவில்லை.
சிங்களர்களின் அராஜகங்கள் குறித்து மட்டுமே பெருமளவில் பேசப்பட்டுவந்துள்ளது. விடுதலைப் புலிகளின் அட்டூழியங்கள் எதுவும் வெளியே தெரியவந்ததில்லை. இன அழித்தொழிப்பு என்பது சிங்கள அரசால் மட்டுமல்ல... புலிகளாலும் செய்யப்பட்டது. புலிகள் அமைப்பு இந்த நாசகாரச் செயல்கள் அனைத்தையும் செய்துவிட்டு, தமக்கு இதில் எந்தப் பங்கும் இல்லை. மூன்றாவது சக்தி ஒன்று இப்படிச் செய்கிறது. தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே விரோதத்தை வளர்க்க முயல்கிறது என்று பொய்யுரைகளைப் பரப்பி வந்தது.
அதுமட்டுமா... இத்தனை நடந்த பிறகும் அமைதிக்கான பேச்சுவார்த்தைகளில் இஸ்லாமியர் தரப்பாக யாரையும் பேச அனுமதிக்கவிடாமல் தடுத்தும் வந்தது. சுனாமி தாக்குதல் நடந்தபோது அதில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டது இஸ்லாமிய சமூகத்தினர்தான். உலக நாடுகள் கொடுத்த நிவாரணப் பொருட்களை பகிர்ந்துகொள்வது தொடர்பான ஒப்பந்தத்தில் இஸ்லாமியர் தரப்பும் பங்கெடுக்க வேண்டும் என்று விரும்பினோம். சிங்கள அரசு இஸ்லாமியர் தரப்பும் பங்கெடுக்க வேண்டும் என்று நார்வே தூதுக் குழுவிடம் தெரிவித்திருந்தது. ஆனால், புலிகள் அமைப்போ, எல்லாவற்றையும் நாங்களே பார்த்துக் கொள்கிறோம்... தமிழர்கள் வேறு... இஸ்லாமியர்கள் வேறு அல்ல என்று சொல்லிவிட்டது. ஒப்பந்தத்தில் கையெழுத்திட இஸ்லாமியர் தரப்பையும் அழைப்போம் என்று வாக்குறுதி கொடுத்திருந்த சிங்கள அரசும் எங்களை ஏமாற்றிவிட்டது. ஏமாற்றங்களை நாங்கள் அமைதியாக சகித்துக் கொண்டுவந்திருக்கிறோம். எமது வருங்காலத் தலைமுறையும் அப்படியே சகித்துக் கொண்டு இருக்கும் என்று யாரும் எண்ண வேண்டாம். இனியும் ஓட முடியாது என்றொரு நிலைவருமானால் திரும்பி நின்று தாக்க ஆரம்பிப்பார்கள் எங்கள் இளைய தலைமுறையினர்.
(தொடரும்)
No comments:
Post a Comment