இருட்டில் இருந்து வெளிச்சத்தை நோக்கி...

Sunday, September 5, 2010

புத்தம் சரணம் கச்சாமி - 12

நெவர் அகெய்ன்… நெவர் அகெய்ன்
ஈழ தேவியைச் சிறையெடுத்த ராவணனா நீ
விபீஷண கருணம்மானுடன் சேர்ந்து உனை வீழ்த்திய ராமனா அவன்

மீளும் வழி தெரியாமல் சர்வதேச வியூகத்தில் மாட்டிக் கொண்ட அபிமன்யுவா நீ
ஒரு பிடி மண்கூடத் தரமாட்டேன் எனச் சினந்து கருவறுத்து வென்றும்விட்ட
துரியோதனனா அவன்

வாக்களிக்கப்பட்ட பூமிக்கு கூட்டிச் செல்ல தவறிய மீட்பரா நீ..?
வன்முறையின் இன்னிசை கேட்டுப் பின்னால் திரண்ட எலிகளை ஆற்றில் முழ்கடித்த நவீன பைப்பரா நீ?

ஆக்கிரமிப்பாளனை வீரத்துடன் எதிர்த்துப் போரிட்ட புருஷோத்தமனா நீ
மக்களின் உயிரைப் பணயம் வைத்து சாகசம் புரிய முயன்ற டான் க்விசாட்டா நீ

தமிழ் இனப் படுகொலையில் ஈடுபட்ட புதிய ஹிட்லரா அவன்
சுதந்திரப் போரை ஆயுதமேந்தி நடத்தித் தோற்ற புதிய சுபாஷ் சந்திர போஸா நீ..?

நோயுற்ற குழந்தைக்கு கசப்பு மருந்தைத் தேனில் பொடித்துக் கொடுக்க முயன்ற தாதியா நீ
மயக்க மருந்து கொடுக்காமலேயே அறுவை சிகிச்சை செய்த மருத்துவனா நீ

உன் மந்தைக் கூட்டத்தை விஷப் புல்வெளிக்கு ஓட்டிச் சென்ற மேய்ப்பனா நீ
அல்லது வழி தவறிய வெள்ளாடா நீ

மதங்கொண்ட யானையை மத்தகத்தில் அடித்து அடக்கிய பாகனா அவன்
புல்வெளியில் வலைவிரித்து பறவைக் கூட்டத்தைப் பிடித்த வேடனா

குஞ்சுகளைக் காப்பாற்ற கழுகை எதிர்த்த கோழியா நீ
மனித உருவில் திரியும் ஓநாயா அவன்

மென் விலங்கு தின்று பசியாற விதிக்கப்பட்ட சிம்மமா அவன்
தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொண்ட களிறா நீ

நீ தோற்றுப் போன தெய்வமா..? அல்லது தோற்றுப் போன சாத்தானா..?

அவன் வெற்றி பெற்ற சாத்தானா..? அல்லது வெற்றி பெற்ற தெய்வமா..?

அல்லது
இரண்டு சாத்தான்களுக்கிடையில்
தெய்வத்தின் குழந்தைகள் சிக்கிக் கொண்டனரோ

ஒரு கட்டத்தில் ரத்தமும் இன்னொன்றில் கண்ணீரும் தேங்கிக் கிடக்க
உலகம் கூடி வேடிக்கை பார்க்க
தலைகளை உருட்டி நீங்கள் ஆடிய சதுரங்க ஆட்டமா..?

நீங்கள் இதற்கு முன்னும் இருந்தவர்கள்தானா..?
இனியும் வரப் போகிறவர்கள்தானா..?

காலமெல்லாம் தமிழனாகவும் சிங்களனாகவும் வாழ முயன்றவர்கள்
கண நேரம் கூட மனிதனாக வாழ மறந்துவிட்டனரே…

எது நடந்ததோ அது நன்றாக நடக்கவில்லை
எது நடக்கிறதோ அதுவும் நன்றாக நடக்கவில்லை
எது நடக்கப் போகிறதோ அதுவாவது நன்றாக நடக்க என்னதான் வழி..?

கடல் சூழ் இலங்கையின் கண்ணீர் காவியம்
ஆழி சூழ் உலகுக்கு அறியத் தரும் பாடம்தான் என்ன..?

No comments:

Post a Comment