இருட்டில் இருந்து வெளிச்சத்தை நோக்கி...

Monday, August 30, 2010

புத்தம் சரணம் கச்சாமி - 11

காட்சி : 15

அனந்தன் (தமிழகத் தலைவரை உற்றுப் பார்த்து) : உங்களை ஏன் தீ வைத்துக் கொளுத்தக்கூடாது?

தமிழ் (லேசாக அதிர்ந்து பிறகு சுதாரித்துக் கொள்கிறார்) : இலங்கைப் பிரச்னையின் அடிப்படையான காரணமே சகோதரச் சண்டைதான். மலையகத் தமிழர்கள் ஒரு பிரிவாக இருந்தார்கள். இஸ்லாமியத் தமிழர்கள் ஒரு பிரிவாக இருந்தார்கள். ஈழத்திலும் வடக்கு கிழக்கு என்று தனித்தனியாக இருந்தார்கள். இந்த ஒவ்வொரு பிரிவுகளுக்குள்ளுமே மேலும் பல பிரிவுகள். போதாத குறைக்கு பிரபாகரன், தன் கொடியைத் தவிர ஈழத்தில் வேறு ஒரு கொடியையும் பறக்க அனுமதிக்கவில்லை. எருதாக இருந்தாலும் ஒன்று சேர்ந்தால் சிங்கத்தையே விரட்டிவிட முடியும். இங்கோ புலிகள் தமக்குள் மோதிக் கொண்டதால் நயவஞ்சக நரிகள் கூட ஏய்த்துவிட்டன.

அனந்தன் : தமிழகத்தில் உங்களுக்குள் பிரிவுகள் இல்லையா… சகோதரச் சண்டை இல்லையா என்ன..?

தமிழ் : தமிழகத்திலும் இந்தியாவிலும் ஆயிரக்கணக்கான பிரிவுகள் பிளவுகள் உண்டு. ஆனால், எதில் பிரிந்து செயல்படலாம். எதில் ஒன்று சேர்ந்து போராடவேண்டும் என்பதில்தான் புத்திசாலித்தனம் இருக்கிறது. ஆங்கிலேயரை எதிர்த்து நடந்த போரில் அனைவரும் ஒரே குரலில் விடுதலை என்று முழக்கமிட்டதால்தான் வெற்றி கிடைத்தது. ஈழத்தில் ஆளாளுக்கு பிரிந்து நின்று முழங்கினார்கள். பொதுக்களம் ஒன்றில் அவர்களை ஒன்றிணைக்க நாங்கள் எடுத்த முயற்சிகள் எல்லாம் முறிந்துபோயின. இலங்கையில் கூட்டாட்சிக்கு சிலர் ஒத்துக் கொண்டார்கள். சிலர் தனி நாடு என்றார்கள். சிலர் கூடுதல் அதிகாரம் என்றார்கள். ஒருவர் இன்னொருவரை துரோகி என்றார். கோழை என்றார். எதிரியைவிட்டு விட்டு தமக்குள் சண்டையிட்டனர். என்னதான் ஆனாலும் நாங்கள் மூன்றாவது மனிதர்கள்தானே. ஏதாவது ஒன்றை அழுத்திச் சொல்லவோ, ஒரு திசைக்கு மற்றவர்களை இழுக்கவோ எங்களுக்கு பலமோ அதிகாரமோ கிடையாதே… அதோடு, ஒன்று எங்களுக்கு ஆதரவாகப் பேசு. இல்லையேல் பேசாமல் இருந்துவிடு என்ற மிரட்டல் அல்லவா விடப்பட்டது.

அனந்தன் : இலங்கைப் பிரச்னை தீர அப்படி என்ன பெரிய முயற்சி எடுத்துவிட்டிருக்கிறீர்கள்.

தமிழகத் தலைவர் : என்ன இப்படிக் கேட்டு விட்டீர்கள். நாங்கள் எவ்வளவோ முயற்சிகள் எடுத்திருக்கிறோம். மலையகத் தமிழர்கள் நாடற்றவர்களாக ஆக்கப்பட்டபோதே ஐ.நா. சபையில் அதை எதிரொலித்தோம். தமிழகத்துக்கு வந்த அகதிகளுக்கு முகாம்கள் அமைத்துக் கொடுத்தோம். கோடிக்கணக்கில் நிவாரணங்கள் கொட்டிக் கொடுத்தோம். கடையடைப்புகள், கறுப்புக் கொடி ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள், தீக்குளிப்புகள் என எங்கள் தார்மிக ஆதரவைத் தொடர்ந்து வெளிப்படுத்தி வந்தோம். ஆனால், வந்தாரை வாழ வைத்த தமிழ் மக்களால் சொந்த பந்தங்களின் சோகத்தில் பங்கெடுக்க முடியாமல், அதைத் துடைக்க முடியாமல் போய்விட்டது. எங்கள் உணர்வுகள் மதிக்கப்படவில்லை. எங்கள் ஆலோசனைகள் காது கேட்காதவனிடம் சொன்ன ரகசியங்களைப் போல் வீணாகிவிட்டன. எங்கள் உதவிகள் தரிசு நிலத்துக்குப் பாய்ச்சிய தண்ணீராகப் போய்விட்டது.

அனந்தன் : ஆனால், தமிழக அரசியல் தலைவர்கள் ஆட்சியில் இருந்தபோது ஒருவிதமாகவும் எதிர்க்கட்சியில் இருந்தபோது ஒருவிதமாகவுமே நடந்து கொண்டிருக்கிறீர்கள். இலங்கைப் பிரச்னை என்பது உங்களைப் பொறுத்தவரையில் உங்கள் அரசியல் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பயன்படுத்தப்பட்ட ஒன்று மட்டும்தானே.

தமிழ் : அது உண்மையல்ல. நாங்கள் அரசியல் சதுரங்கத்தில் பல காய்களை உருட்டிவிளையாடுவதுண்டு. ஆனால், இலங்கைத் தமிழருக்கு ஆதரவு தந்ததும் அடக்கி வாசித்ததும் அவர்களுடைய நடத்தைகளின் அடிப்படையில் மட்டுமே. உண்மையில் ஆதரவாளர்களாக இருந்த எங்களை எதிர்நிலைக்குக் கொண்டு சென்றதே அவர்கள்தான்.

நாங்களும் தனி நாடு கேட்டுப் போராடியவர்கள்தான். இந்தி மொழி கட்டாயமாகத் திணிக்கப்பட்டபோது நாங்களும் அதை எதிர்க்கத்தான் செய்தோம். இந்தி இருக்குமானால் இந்தியா இருக்காது என்று முழங்கத்தான் செய்தோம். வடக்கு வாழ்கிறது. தெற்கு தேய்கிறது என்று போர்ப்பறை கொட்டத்தான் செய்தோம். ஆனால், கூட்டாட்சிக்குள்ளேயே தனி நாட்டாட்சிக்கு வாய்ப்பு கிடைத்தபோது நாங்கள் அதை தொலைநோக்குப் பார்வையோடு ஏற்றுக் கொண்டோம். தனி நாடு கோரிக்கையை தவறென்று தெரிந்ததும் விட்டுவிட அரசியல் முதிர்ச்சி வேண்டும். ஆறரை கோடித் தமிழினம் இன்று நூறரைக் கோடி இந்திய தேசியத்தை வழி நடத்தும் நிலைக்கு உயர்ந்திருக்கிறதென்றால் அது எங்கள் பொறுமையினாலும் சாதுரியத்தினாலும்தான். தனியாகப் போவதல்ல. தலைமைப் பதவியை ஏற்பது… அதுவே சாதுரியம். எந்த இந்திய அரசு இந்தியைத் திணிக்க விரும்பியதோ அதே அரசு இன்று தமிழை செம்மொழி என்று உலகறிய உயர்த்திப் பிடித்திருக்கிறது. ஈழப் புலி, பாய்ந்து சாதிக்காததைத் தமிழ்ப் புலி பதுங்கியே சாதித்திருக்கிறது.

ஈழத் தமிழருக்கு தந்த வெளிப்படையான ஆதரவு காரணமாக தமிழகத்தில் ஆட்சிகள் கலைக்கப்பட்டிருக்கின்றன. எத்தனையோ பேர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சமூகத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதைக் கண்டெல்லாம் மனம் கலங்கவில்லையே. ஆதரவை ஒருபோதும் பின்வாங்கவில்லையே. தேசம் வேறென்றாலும் இனம் ஒன்றல்லவா..? அழையா விருந்தாளியாக நாங்கள் அவர்கள் வீட்டின் முன் எத்தனை முறை போய் நின்றிருக்கிறோம் தெரியுமா… இன்னொரு நாட்டின் பிரச்னையைத் தீர்க்க எங்களால் எவ்வளவு முடியுமோ அதற்கும் மேலாக செய்து வந்திருக்கிறோம்.

இன்னொரு விஷயத்தையும் நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். நாமெல்லாரும் நாகரிக மனிதர்கள். கடந்த காலங்களில் மன்னர்கள் தங்களுடைய விருப்பு வெறுப்புகளை ஒட்டுமொத்த மனித சமூகத்தின் மீதும் திணிப்பார்கள். ஒரு ராஜா இன்னொரு ராஜாவுடன் சண்டைக்குப் போவார். அதற்குப் பெரிய காரணமெல்லாம் இருக்காது. இந்த ராஜாவுக்கு அந்த ராஜாவைப் பிடிக்காது. அவ்வளவுதான். அதற்காக ஆயிரக்கணக்கில் அடித்துக் கொண்டும் வெட்டிக் கொண்டும் மடிவார்கள். மக்களுடைய தரப்பு என்று ஒன்று அதில் இருக்கவே இருக்காது. மன்னருக்கு எதிரான மாற்றுக் கருத்துக்கு அங்கு இடமே கிடயாது. ஆனால், நாம் அதையெல்லாம் கடந்து வந்துவிட்டோம். இது மக்களாட்சி காலம். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்யக்கூடாது. ஜனநாயகப் பாதையில் போகிற நாம் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு நமது எதிர்ப்பை முதலில் சாத்விகமான போராட்டங்கள் மூலம் தெரியப்படுத்துவோம். அதில் எந்த பதிலும் கிடைக்கவில்லையென்றால் அதே போராட்டத்தை விரிவுபடுத்தி தீவிரப்படுத்துவோம். பேச்சுவார்த்தைகள் நடத்துவோம். கேட்டது எல்லாமே கிடைக்கவில்லையென்றாலும் கிடைத்ததை வைத்துக் கொண்டு நம்மை பலப்படுத்திக் கொள்வோம். இறுதிக் குறிக்கோளை மேலும் வலுவோடு வலியுறுத்துவோம். அப்படியாக கொஞ்சம் கொஞ்சமாகத்தான் லட்சியத்தை அடைவோம். மக்களை மையமாகக் கொண்ட அரசியல் போராட்டம் என்பது அப்படித்தான் நடக்க வேண்டும். அப்பாவிகளின் உயிரை பணயம் வைக்கும் அதிகாரம் எவ்வளவு பெரிய கொம்பனுக்கும் எந்தப் புனிதக் கோட்பாடுக்கும் கிடையாது. இதுதான் ஜனநாயக உலகின் அடையாளம். ஆரம்பத்தில் அமைதியாகப் போராடிப் பார்த்தோம். எதுவும் கிடைக்கவில்லை. எனவே ஆயுதத்தைக் கையில் தூக்கினோம் என்று சொல்வதில் எந்த நியாயமும் கிடையாது. சாத்விக ஜனநாயகப் போராட்டம் என்பது இலக்குக்கான வெறும் வழிமுறை மட்டுமல்ல. ஒருவகையில் இலக்கைவிட அதுவே மேலானது. விடுதலைப் புலிகள் ஒருபோதும் மக்கள் இயக்கமாக, அரசியல் தளத்தில் செயல்பட்டதே இல்லை. அது ஒரு சிறிய கொரில்லா அமைப்பாக உதித்து அப்படியே அஸ்தமித்தும்விட்டது.

மூத்தோரின் நல்வாக்குகளும் முதிர்ந்த நெல்லிக்காயும் முதலில் கசக்கும். பிறகு இனிக்கும். லேசாகக் கசந்தபோதே துப்பிவிட்ட குழந்தையைப் பார்த்து மவுனமாக அழத்தான் முடியும்.

பிரபாகரனின் சர்வாதிகார மாளிகையின் அராஜக ஜன்னல்களில் மோதி மோதி எங்கள் ஆதரவின் புறாக்கள் துடிதுடித்து விழுந்தன. அதன் கால்களில் கட்டப்பட்ட புரிந்துணர்வுக் கடிதங்கள் பிரிக்கப்படாமலேயே போயின. கள்ளத் தோணிகள் பல போய் வந்தன. ஆனால், நல்ல தோணி ஒன்று கூட அனுமதிக்கப்படவில்லை. உண்மையான அக்கறை கொண்டவர்களுக்கும் இலங்கையில் இருந்தவர்களுக்கும் இடையிலான இணைப்பு நதி உறைந்தேகிடந்தது. இக்கரையில் நட்பின் பதாகையைக் கையில் பிடித்தபடி கால் கடுக்கக் காத்து நின்றோம். அக்கரையில் அந்த அக்கறை இருந்திருக்கவில்லை. சகோதரத்துவத்தின் பரிசல்கள் பயணிக்க, இறுதி வரை உருகவேயில்லை இடையில் இருந்த தவறான புரிதலின் பனிப்பாளங்கள்.

அனந்தன் : பங்களாதேஷ், திபெத் அகதிகளுக்கு இருந்த உரிமைகளோ சலுகைகளோ கூட இலங்கைத் தமிழர்களுக்கு இருந்திருக்கவில்லையே… தமிழகம் எங்களை மாற்றாந்தாய் மனப்பான்மையோடுதானே நடத்தியிருக்கிறது. அடைக்கலம் தேடிவந்த அகதிகளுக்கே இதுதான் கதி. ஆறு மணியாகிவிட்டதென்றால் முகாமுக்குத் திரும்பி விட வேண்டும். அவ்வப்போது காவல் நிலையத்தில் தகவல் தெரிவிக்க வேண்டும். சொத்து வாங்க முடியாது. வாடகைக்குக் கூட வீடுகள் கிடைக்காது. வேலைகள் சுலபத்தில் கிடைக்காது. இவையெல்லாம் கூலிக்கு மாரடிக்கும் கூட்டமாக, எந்தவித ஒட்டுறவும் இல்லாமல் ஒப்புக்குத்தான் செயல்பட்டு வந்திருக்கிறீர்கள் என்பதைத்தானே எடுத்துக் காட்டுகிறது.

தமிழ் : இல்லை. அகதிகள் விஷயத்தில் அவர்களை ஆரம்ப காலத்தில் தங்கத் தாம்பாளத்தில் வைத்துத்தான் தாங்கினோம். ஆனால், உண்ட வீட்டுக்கே ரெண்டகம் செய்ய நினைத்தால்? மலர் செண்டுகள் மட்டுமே கண்டிருந்த விமான நிலையத்தில் வெடி குண்டுகள் வெடித்தன. மழை பெய்து மட்டுமே சேறான எங்கள் சந்தைகள் முதன் முறையாக ரத்தத்தால் நனைந்தன. இவ்வளவு ஏன்… மாலைகளும் பொன்னாடைகளும் மட்டுமே போர்த்தப்பட்ட தமிழகத்தில் முதல் முறையாக உயிருடன் இருந்தவருக்கு மலர் வளையம் சுமத்தப்பட்டது. அமைதிப் பூங்காவுக்குள் நச்சுப் பாம்புகள் ஊடுருவ ஆரம்பித்தன. வேலியைப் பலப்படுத்துவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும்?

அனந்தன் : அமைதிப் பேச்சு வார்த்தைக்கான பொறுப்பை இந்திய அரசிடம் விட்டுக் கொடுத்த நீங்கள் அந்தக் குழுவில் இடம் பெற்றிருக்க வேண்டுமல்லவா..? பிற மாநிலத்தவர்களிடம் பொறுப்பை விட்டது தவறுதானே… அதுவும்போக, இந்திய உளவுத்துறைதான் போராளி இயக்கங்களிடையே சண்டையை மூட்டிவிட்டதாக தகவல்கள் வந்த பிறகும் அவர்களை நம்பி சும்மா இருந்தது உங்கள் தவறுதானே..?

தமிழ் : இந்திய உளவுத்துறை சில சதிகளில் ஈடுபட்டது என்னவோ உண்மைதான். ஆனால், ஊசி இடம் கொடுக்காமல் இருந்திருந்தால் நூல் நுழைந்திருக்க முடியுமா என்ன… அதுவும்போக, இந்திய அரசின் உத்தரவுப்படிதானே நாங்கள் அதில் நடக்க முடியும். தமிழர்கள் அந்தக் குழுவில் இடம்பெற்றால் உணர்ச்சிவசப்பட்டு ஏதாவது செய்துவிடுவார்கள் என்ற எண்ணத்தினால்தான் பிற மாநிலத்தவரிடம் பொறுப்புகள் ஒப்படைக்கப்பட்டன. ஆனால், அவர்கள் செய்த ஒவ்வொன்றும் எங்களிடம் கேட்ட பிறகே செய்யப்பட்டன. தமிழகம் தன்னால் முடிந்ததைச் செய்தது. இந்தியா தன்னால் முடிந்ததைச் செய்தது.

அனந்தன் : முடிந்ததைச் செய்வதா முக்கியம். வேண்டியதைச் செய்வதல்லவா அவசியம்.

தமிழ் : அது சரிதான். ஆனால், அதற்கு வாய்ப்பு எங்கே தரப்பட்டது..? ஒரு தலைவன் என்பவன் தன் பின்னால் நடுநிலையாளர்களும் இன்ன பிறரும் ஏன் எதிரணியினரில் சிலரும்கூட அணிவகுத்து நிற்க போதிய நியாயங்களை ஏற்படுத்திக் கொடுப்பவனாக இருக்க வேண்டும். விமர்சன மழைத்தூறல்கள் இடைவிடாமல் பொழியும்போது தாங்கிக் கொள்ளவொரு தார்மிகக் குடையைக் கொடுக்க வேண்டும். ஆனால், எங்களை முடிவற்றுப் பெய்யும் மழையில் நனையவிட்டார்கள். அடுத்தவருக்காக எவ்வளவு நேரம்தான் ஒருவர் மழையில் நனைவது..?

அனந்தன் : நாங்கள் உங்களுக்கு அடுத்தவர்தான் இல்லையா..?

தமிழ் : என்ன செய்வது தாயும் பிள்ளையும்னாலும் வாயும் வயிறும் வேறுதானே..? ஒருவர் தனக்கு நேரும் இழப்புகளை முன் வைத்து நியாயம் கேட்க வேண்டுமென்றால், அவர் எந்த தவறும் இழைக்காமல் இருக்க வேண்டும். நான் ஐம்பது தவறுகள்தான் செய்திருக்கிறேன். எதிரி 100 தவறுகள் செய்திருக்கிறாரே. என் பக்கம் அணி வகுத்து நிற்க வேண்டியதுதானே என்ற வாதத்தில் எந்த நியாயமும் இல்லை. உனது காலை ஒருவர் வெட்டிவிட்டார் என்று வழக்கு தொடுத்தால் உன் பக்கம் ஜெயிக்க வேண்டுமென்றால் நீ ஒடிந்த காலுடன் நீதி மன்றம் ஏற வேண்டும். பதிலுக்கு நீ போய் அவருடைய கையை வெட்டி விட்டு ஒரு கையில் அருவாளையும் இன்னொரு கையில் வெட்டப்பட்ட எதிரியின் கையையும் எடுத்துக் கொண்டுவந்து நீதி கேட்டால்… புலிகள் செய்த ஒவ்வொரு கொலையும் சிங்கள ராணுவத்தினரின் ஒன்பது கொலைகளை நியாயப்படுத்திவிட்டன. போர் என்று வந்துவிட்டால் நான் ஒருவரை கொன்றால் நீயும் ஒருவரைத்தான் கொல்ல வேண்டும் என்று கணக்குப் பேச முடியாது. யானைக்கு தரையில் பலம். முதலைக்கு நீரில் பலம். யானையை வெட்டவெளியில் எதிர்கொண்டார்கள். முதலையைப் பார்த்ததும் முண்டாவை தட்டிக் கொண்டு பாய்ந்து நீரில் குதித்து சண்டை போடப் போனார்கள். சிங்கத்தை அதன் குகைக்குள்ளே சென்று தாக்குவது வீரமும் அல்ல; விவேகமும் அல்ல. பலம் குறைந்தவர்கள், பலம் மிகுந்தவர்களை எதிர்க்க மிகவும் சரியான வழி அமைதியான வழியிலான போராட்டம்தான். கொரில்லா தாக்குதல் போராளிகளுக்கு வெற்றியைத் தரலாம். ஆனால், மக்களுக்கு அது அழிவையே தரும்.

தமிழகத்தில் இருந்த அகதிகள் முகாமில் வசதிகள் குறைவாக இருப்பது பற்றிச் சொன்னீர்கள். அதில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. அதை கனத்த மனதுடன்தான் செய்தோம். புருஷனிடம் கோவித்துக் கொண்டு தாய்வீட்டுக்கு வந்துவிடும் மகளிடம் உண்மையான பாசத்தை வெளிக்காட்டினால் எங்கே மகள் பிறந்தவீட்டிலேயே இருந்துவிடுவாளோ என்ற பயத்தில் கொஞ்சம் பாராமுகமாக நடந்து கொள்ளும் தந்தையை உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த நிலையில்தான் இருந்தோம். இனி ஈழம் சாத்தியமில்லை என்பது தெரிந்த மறுகணமே இங்கு தங்கியிருக்கும் ஈழத் தமிழர்களுக்கு இந்தியக் குடியுரிமை வாங்கித் தருவதாக அறிவித்திருக்கிறோம். 100 கோடி நிவாரணம் ஒதுக்கியிருக்கிறோம்.

நேசத்துக்குரியவன் தன் தலையில் தானே மண்ணள்ளிப் போட்டுக் கொண்டு செய்த மோசத்தால் எங்கள் கைகள் கட்டப்பட்டுவிட்டன.

ஒரு நிரபராதி, தவறான வக்கீலைத் தேர்ந்தெடுத்ததன் மூலம் தண்டனை பெற வேண்டிவந்துவிட்டது. பார்வையாளர் நாற்காலிகளில் முன் வரிசையில் அமர்ந்தபடி மவுன சாட்சியாக நாங்கள் பார்த்த வழக்கு விசாரணை, நாங்கள் பார்க்க விரும்பிய ஒன்றல்ல. கறை படியாத கரங்களுக்குச் சொந்தக்காரர்களாகிய எங்கள் கைகளில் படிந்த ரத்தம் எம் கண்களில் இருந்து கசிந்ததுதான்.

ஓநாய்களிடமிருந்து தப்பிப்பதற்காக ஒதுங்கிய மந்தை ஆடுகளை விஷப் புல்வெளிக்கு ஓட்டிச் சென்றான் ஒரு மேய்ப்பன். ஆடுகள் குறித்து நாங்கள் அழுவதைத் தவிர வேறெதையும் செய்ய முடியாமல் போய்விட்டது. யாமோ கள்வர்..? சொல்லுங்கள்... யாமோ கள்வர்..?


(தொடரும்)

No comments:

Post a Comment