இருட்டில் இருந்து வெளிச்சத்தை நோக்கி...

Sunday, August 22, 2010

புத்தம் சரணம் கச்சாமி-6

காட்சி - 13
அந்த பிருமாண்ட மாளிகை சூரியனை மறைத்தபடி வானுயர உயர்ந்து நிற்கிறது. அதன் முன்னால் எண்ணற்ற கம்பங்கள் ஊன்றப்பட்டிருக்கின்றன. சில கம்பங்கள் உடைந்து கிடக்கின்றன. சில கம்பங்கள் பாதி பூமியில் புதைந்து கிடக்கின்றன. ஒவ்வொரு கம்பத்துக்கு முன்னாலும் சிலர் விறைப்பாக நடந்து வந்து நிற்கின்றனர். தங்கள் கைகளில் இருந்த கொடிகளைக் கம்பத்தில் கட்டுகின்றனர். அவர்கள் கட்டி முடித்த சிறிது நேரத்தில் சங்கொலி கேட்கிறது. உடனே அனைவரும் தத்தமது கொடிகளை ஏற்ற ஆரம்பிக்கின்றனர். சில கொடிகள் கம்பீரமாக பட்டொளி வீசிப் பறக்கின்றன. சில கொடிகள் ஏராளமான ஒட்டு வேலைபாடுகளுடன் இருக்கின்றன. சில கொடிகள் பொத்தல் பொத்தலாக இருக்கின்றன. எனினும் ஒவ்வொரு கம்பத்துக்கு முன்னால் இருக்கும் நபர்களும் தத்தமது கொடிகளை ஏற்றி கம்பீரமாக சல்யூட் அடிக்கின்றனர்.
உள்ளே ஒரு பரந்து விரிந்த அரங்கில் உலக நாடுகளின் மினியேச்சர் வடிவம் தத்ரூபமாக இடம் பெற்றிருக்கிறது. ஒரு பகுதியில் மக்கள் கம்பளி ஆடை உடுத்திக் கொண்டு விறகைக் கூட்டி எரித்து குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றனர். இன்னொரு பகுதியில் பாலைவன வெய்யிலில் ஒற்றை ஈச்ச மரத்தின் நிழலில் ஒட்டகத்தை அவிழ்த்துவிட்டு களைப்புடன் சிலர் அமர்ந்திருக்கின்றனர். சில இடங்களில் அதி நவீன கட்டடங்களில் கம்ப்யுட்டர் முன் அமர்ந்து கொண்டு விண்வெளிக் கலத்தின் பாகங்களை ஆராய்ச்சி செய்து கொண்டிருக்கின்றனர். இன்னொரு பகுதியில் ஆதிவாசிகள் இலை தழைகளைக் கட்டிக் கொண்டு ஈட்டியால் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருக்கின்றனர். உலகின் ஒரு பகுதி வெளிச்சத்தில் இருக்கிறது. இன்னொரு பகுதி இருளில் மறைந்திருக்கிறது.
ஒரு பகுதியில் கூச்சலும் குழப்பமும் மிகுதியாகக் கேட்கிறது. இருளும் வெளிச்சமும் கலந்து காணப்படும் அந்தப் பகுதியை குழந்தைகள் கூர்ந்து பார்க்கின்றனர். அது ஈழம்..! மெள்ள மெள்ள புதை மணலில் அழுந்திக் கொண்டிருக்கிறது. இலங்கையும் நீரில் பனிக்கட்டி பாதி முங்கி பாதி மிதந்தபடி இருப்பதுபோல் அமிழ்ந்து அமிழ்ந்து மேலே மிதந்தபடி இருக்கிறது. அங்கு இருக்கும் மக்கள் உயிரைக் கையில் பிடித்தபடி இங்குமங்கும் ஓடுகின்றனர். பிற பகுதியில் இருக்கும் மக்கள் மங்கலான விளக்கொளியில் காதல் பரிசுகளைப் பகிர்ந்து கொள்கின்றனர். திராட்சை ரச குப்பிகளை உயர்த்தி சியர்ஸ் சொல்லிக் குடிக்கின்றனர். விமான நிலையங்களில் வாழ்த்துச் சொல்லி வழியனுப்புகின்றனர். ஈஸி சேரில் நன்கு சாய்ந்தபடி தேநீர் அருந்தியபடியே பேப்பர் படிக்கின்றனர். கால் பந்து போட்டிகளை ஆரவாரத்துடன் ரசிக்கின்றனர்.
ஈழத்தில் மனிதர்கள் இங்குமங்கும் ஓடுகிறார்கள். கதறுகிறார்கள். புதைகிறார்கள். ஒவ்வொருவரும் தான் தப்பிப்பதற்காக அடுத்தவரை காலுக்குக் கீழே போட்டு மிதிக்கிறார்கள். அப்படிச் செய்தும் எந்தப் பலன் இன்றி அவர்களும் புதைகிறார்கள். நாற்காலியில் அமர்ந்து மது அருந்தியபடி அதை வேடிக்கை பார்க்கும் சிலர் சிறு கட்டைகளையும் சின்ன கயிறுகளையும் எடுத்துப் போடுகிறார்கள். புதைகுழியில் சிக்கியவர்கள் அதைப் பிடிக்க முயன்று மேலும் குழியில் புதைகிறார்கள். கரையேறும் சிலரையும் ராணுவ வீரர்கள் துப்பாக்கியால் சுட்டு புதைமணலில் வீசுகிறார்கள்.
காட்சி : 14
அனந்தன் : உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடு… கத்தியின்றி ரத்தமின்றி நவீன போர் முறையை உலகுக்குக் காட்டிய உத்தமர் காந்தி பிறந்த நாடு… பக்கத்து நாடுகளில் சர்வாதிகாரிகளுக்கு ஆதரவு கொடுத்துவிட்டு உள்நாட்டில் ஜனநாயகத்தைக் காப்பாற்ற முயலும் நாடு… உங்களை ஏன் உயிருடன் கொளுத்தக்க்கூடாது?
இந்திய உள் துறை அமைச்சர் : இலங்கை பிரச்னைக்கு இந்தியாதான் காரணம்னு ஒரு விசித்திரமான குற்றச்சாட்டு கொஞ்சகாலமாக முன்வைக்கப்பட்டுவருகிறது. காக்கா உட்காரப் பனம் பழம் விழுந்த கதை மாதிரித்தான் இது. ஒரு மனுஷனோட தலை ஒரு பக்கம் பார்த்துக்கிட்டு இருக்குது. கால் வேறொரு பக்கம் பார்த்துகிட்டு இருக்குது. தலை சொல்ற திசையில நடந்தா கால்ல அடிபடும். கால் போற திசையில போனா தலைல அடிபடும். இந்த விசித்திர மனுஷனோட பிரச்னைக்கு கோக்குமாக்கா இருக்கற அவனோட உடம்புதான் காரணமே ஒழிய பக்கத்துல நடந்து வர்றவன் எப்படி காரணமா இருக்க முடியும்?
இலங்கை, இந்த சிறுபான்மை பெரும்பான்மை பிரச்னையை ஆரம்பத்துல இருந்தே சரியா கையாளலை. இந்தியாவையே எடுத்துக்கோங்களேன். அதுல 29 மாநிலங்கள் இருக்கு. அதாவது 29 இலங்கைகள் இருக்கு. இன்னும் சரியாச் சொல்லணும்னா 29 ஈழங்கள் இருக்கு. எத்தனை மொழி… எத்தனை மதம்… எத்தனை இனம்… எத்தனை சாதிகள்… எல்லாமே எப்படா பிரிஞ்சு போகலாம்னு காத்துக்கிட்டிருக்காங்க. ஆனாலும் இதை நாங்க எவ்வளவு அழகா கட்டிக் காத்துக்கிட்டு வர்றோம் பாத்தீங்களா… அதுக்குக் காரணம் என்ன… அஹிம்சை... பொறுமை…ஆக்கறவனுக்குப் பல நாள் வேலை அழிக்கறவனுக்கு ஒரு நாள் வேலை.
அனந்தன் : இலங்கை இந்தியாவோட இன்னொரு மாநிலம் மாதிரித்தான இருக்குது. போதாத குறையா நிறைய இந்தியர்கள் வேற அங்க இருக்காங்க. மலையகத் தமிழர்களுக்கு அதாவது இந்தியால இருந்து போன தமிழர்களுக்கு ஏற்பட்ட சோகத்தைத் தீர்க்க நீங்க அக்கறை காட்டியிருந்தாலே பிரச்னை அடுத்த கட்டத்துக்கு போயிருக்காதே… பத்து லட்சம் பேர்… நின்னுட்டிருக்கற காலடி நிலம் பிளந்து அப்படியே பாதாளத்துல விழற மாதிரி பத்து லட்சம் பேர் ஒரே ஒரு நாள்ல நாடற்றவர்களாக ஆக்கப்பட்டபோது நீங்க கூப்பிட்டு இப்படியெல்லாம் செய்யக்கூடாதுன்னு தட்டி வெச்சிருந்தா பிரச்னை பெரிசாகியிருக்காதே. சிங்கள அரசு இவ்வளவு வெறித்தனமா நடந்துக்கிட்டதுக்கு உங்களோட ஆதரவுதான முக்கிய காரணமா இருந்திருக்கு.
இந்திய உள் துறை அமைச்சர் : ஒரு இறையாண்மை மிகுந்த நாடு, இன்னொரு இறையாண்மை மிகுந்த நாட்டின் விஷயத்தில் எவ்வளவு தலையிட முடியுமோ அவ்வளவு தலையிட்டிருக்கிறோம். இலங்கை அதிபருடன் ஒப்பந்தம் செய்துக்கிட்டோம். ஐ.நா. சபைல கூடக் குரல் எழுப்பினோம். ஆனா, எதுவுமே முடியலையே…பெரும்பான்மை சிறுபான்மை அப்படிங்கற பிரச்னை உலகத்துல எல்லா இடத்துலயும் இருக்கத்தான் செய்யுது. பெரும்பான்மையின் சம்மதத்தோடு சிறுபான்மையின் நலன்… அதுதான் நடக்கணும். சில விஷயங்கள்ல இவங்க விட்டுக் கொடுக்கணும். பல விஷயங்கள்ல அவங்க புரிஞ்சு நடந்துக்கணும். அது ஒரு பரஸ்பர நல்லெண்ணத்தின் நம்பிக்கையின் அடிப்படையில் நடக்கணும்.
சிங்கள மொழி படிச்சுத்தான் ஆகணும்னு சொன்னாங்களாம். இவங்களுக்குக் கோவம் வந்திருச்சாம். ஏன் ஆங்கிலேயர் ஆட்சில இருந்தபோது அரசு வேலைல சேரணும்னா ஆங்கிலம் தேவைன்னு போய் விழுந்து விழுந்து படிக்கத்தான செஞ்சாங்க. சிங்களம் படிக்கச் சொன்னா படிச்சிட்டுப் போக வேண்டியதுதான. ஆங்கிலம் படிச்சி அழியாத தமிழ் அடையாளம் சிங்களம் படிச்சா அழிஞ்சிடுமா..? அப்படிப் பூஞ்சையா ஒரு அடையாளம் இருக்கும்னா அது அழியறதுல எந்தத் தப்பும் இல்லை.
அதே நேரம் சிங்கள அரசும் அப்பாவி ஒண்ணும் இல்லை. தீவிரவாதிகளை அழிக்கறதை விட்டுட்டு ஒட்டு மொத்த இனத்தையே கொல்றதுங்கறது ரொம்பத் தப்பு. பத்து கெட்டவங்க இருக்காங்கங்கறதுக்காக மத்த 90 அப்பாவிங்களை அழிக்க முற்பட்டது ரொம்பத் தப்பு. இப்ப சீக்கியர்கள் கூட காலிஸ்தான் கேட்டு போராடினாங்க. வளமான வாழ்க்கைக்கு வழி ஏற்படுத்திக் கொடுத்ததும் அவங்க துப்பாக்கியைக் கீழ போட்டுட்டு கலப்பையைத் தூக்கிட்டு வயல்ல இறங்கி பாடுபட ஆரம்பிக்கலையா..? ஒட்டு மொத்த சீக்கியர்களை அழிக்கவா செஞ்சோம். இஸ்லாமியத் தீவிரவாதம் இந்தியால தலைவிரிச்சுத்தான் ஆடுது. அதுக்காக எல்லா இஸ்லாமியர்களையும் கொல்ல ஆரம்பிச்சிட்டோமா என்ன.?
அதிருப்தி குழுவை சமயோசிதமா வழிக்குக் கொண்டுவரணும். ஈழப் பகுதியில வளர்ச்சித் திட்டங்களை ஆரம்பிச்சு, போராட்டத்துக்கான காரணங்களை சரி செஞ்சு, போராளிகள் குழுக்களை பலவீனம் அடைய வெச்சு, சுமுகமா தீர்வை கண்டுபிடிச்சிருக்கணும். முள்ளுல விழுந்த சேலையை கிழியாம எடுக்கறதுதான் புத்திசாலித்தனம். அதைத்தான் நாங்க செஞ்சோம். இலங்கைல செய்யலை.
அனந்தன் : அப்போ காஷ்மீர்ல ஏன் பிரச்னை தீரலை? நாகாலாந்துல ஏன் பிரச்னை தீரலை..? வட கிழக்கு மாநிலங்கள்ல ஏன் பிரச்னை இன்னும் தீரலை.
இந்திய உள் துறை அமைச்சர் : ஏன்னா பாகிஸ்தான்ல இருந்து சீனால இருந்து அதை தூண்டி விட்டுட்டு இருக்காங்க. காஷ்மீர் பிரச்னை அப்படிங்கறது காஷ்மீர் மக்களுக்கும் இந்தியாவுக்குமான பிரச்னை இல்லை. இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்குமான பிரச்னை. பக்கத்து வீட்டுக்காரன் படுபாவியா வாய்ச்சிட்டா ரொம்பக் கஷ்டம் நண்பரே..? அது அனுபவிச்சுப் பார்த்தாதான் தெரியும்.
அனந்தன் : எங்களுக்கும் உங்க மூலமா அந்த அனுபவம் இருக்கே…
இந்திய உள் துறை அமைச்சர் : என்னது இது இப்படி அபாண்டமா பழி போடறீங்க. பாகிஸ்தான் இந்தியால தலையிடறதுல நூத்துல பத்து பங்குகூட நாங்க உங்க நாட்டு விஷயத்துல தலையிடலையே. நாங்க தலையிடலைங்கறதுதான பெரும்பாலானவங்களோட குற்றச்சாட்டா இருக்கு.
அனந்தன் : ஆனா, போராளிகளுக்கு ஆரம்பத்தில் பண உதவியும் ஆயுதப் பயிற்சியும் தந்தது இந்தியர்கள்தானே… கடைசி யுத்தத்தின் போது இலங்கை அரசுக்கு ஆயுதங்கள் கொடுத்து வந்திருக்கிறீர்களே…
இந்திய உள் துறை அமைச்சர் : இந்தியாதான் இலங்கையில் போரை நடத்தினதுன்னு கூட அவதூறுப் பிரசாரங்கள் செய்யப்பட்டுவருகின்றன. அது மிகவும் பிழையானது மட்டுமல்ல பயங்கரமான ஒன்றும் கூட. சிங்கள ராணுவத்துக்கு இந்தியா கொடுத்த ஆயுதங்கள் என்பது ஐந்து சதவிகிதம் கூட இருக்காது. பெரும்பாலும் ரேடார் கருவிகள் போன்ற துணை ராணுவக்கருவிகள்தான் தரப்பட்டன. சீனா, பாகிஸ்தான், ரஷ்யா, இஸ்ரேல் என எத்தனையோ நாடுகளில் இருந்து ஏராளமான ஆயுதங்களை இலங்கை அரசு வாங்கி இருக்கிறது. தெற்காசிய நாடுகள் மட்டுமல்ல உலக நாடுகள் அனைத்துமே ஒவ்வொரு துறையிலும் தமக்குள் பரஸ்பரம் பரிமாற்றம் செய்து கொள்வது என்பது மிகவும் இயல்பான ஒரு விஷயம்தான். மருத்துவத்துறை, கல்வித்துறை, விவசாயத்துறை என ஒவ்வொரு துறையிலும் ஒவ்வொரு நாடுகளிலும் என்னென்ன முன்னேற்றங்கள் வந்துள்ளன... நம் நாட்டுக்கு என்னென்ன தேவை என்ற அளவில் இத்தகைய பரிமாற்றங்கள் நடப்பது இயல்புதான். ராணுவத் துறையிலும் அப்படியான பரஸ்பர உதவிகள் செய்து கொள்ளப்படுவதுண்டு. அதுவும் போக ஒரு நாட்டில் தீவிரவாதம் தலைதூக்கும்போது உலக நாடுகள் அதை அடக்க பரஸ்பரம் உதவிக் கொள்வது மிகவும் அவசியம். அந்த வகைலதான் இலங்கை ராணுவத்துக்கு சில உதவிகள் செய்து தந்தோம்.
அனந்தன் : ஆனால், ஆரம்பத்துல நீங்க போராட்டக் குழுக்களுக்குத்தான ஆதரவு கொடுத்தீங்க…?
இந்திய உள் துறை அமைச்சர் : இலங்கைப் போராளிகளுக்கு இந்தியா கொடுத்த பயிற்சி என்பது மிகவும் வேடிக்கையானது. பெரும்பாலும் நீச்சல் பயிற்சி, ஓட்டப் பயிற்சி போன்ற உடல் ஆரோக்கியம் சம்பந்தமான பயிற்சிகள்தான் வழங்கப்பட்டன. கொடுத்த பணமும் கூட யானைப் பசிக்கு சோளப்பொரி அளவுக்குத்தான் இருந்தது. அதுவும் போக அப்போது பிரச்னை இந்த அளவுக்கு வளரவில்லை.
இந்திய வம்சாவளியினருக்கு ஏற்பட்ட இன்னலைப் பார்த்து தான் இலங்கை விஷயத்தில் இந்தியா தலையிடவே ஆரம்பித்தது. 1958ல கொழும்புல தமிழர்களுக்கு எதிரா பெரும் கலவரம் வெடித்தபோது நிறைய கப்பல்களை அனுப்பி அங்க இருந்த தமிழர்களை பத்திரமா யாழ்பாணத்துக்கு கொண்டு வந்து சேர்த்தோம்.
அனந்தன் : இப்ப நாலாம் ஈழப் போர்ல சிக்கின மக்களை அப்படி ஏன் காப்பாத்த முயற்சி செய்யலை..
இந்திய உள் துறை அமைச்சர் : என்ன செய்யறது… ஆற்றில் எவ்வளவோ வெள்ளம் பாய்ந்துவிட்டது. இப்போது இந்தியா அப்படி ஒரு முயற்சியை முன் வைத்திருந்தால், சரி… நல்லது, தீவிரவாதிகளை விட்டுவிட்டு அப்பாவிகளை மட்டும் அழைத்து வந்துகொள்ளுங்கள் என்று இலங்கை அரசு சொல்லும். அது எப்படி சாத்தியம்? அது மட்டுமல்லாமல் அந்த முயற்சிக்கு புலிகளும் எதிர்ப்புத் தெரிவித்திருப்பார்கள். ஏனென்றால், மக்களைக் கவசமாக வைத்துக் கொண்டுதான் அவர்கள் பதுங்கி இருந்தார்கள். மக்கள் போய்விட்டால் ராணுவம் புலிகளை எளிதில் துவம்சம் செய்துவிட்டிருக்கும். அதனால் இந்த முறை எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது.
ஆயுதப் போராட்டம் வளர்வதற்கு முன்பாகவே இந்தியா பல சமாதான முயற்சிகளை மேற்கொண்டுதான் வந்தது. கச்சத்தீவை விட்டுக் கொடுத்து இலங்கை அரசுடன் நல்லுறவை வளர்த்துக் கொண்டது. போராளிகள் இயக்கத்துக்கு பயிற்சி கொடுத்து அவர்களிடமும் நன் மதிப்பைப் பெற விரும்பியது. இலங்கையில் பிரச்னை பெரிதானால் இரு தரப்புமே நாம் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் என்று இந்தியா விரும்பியது. ஆனால், என்றைக்கு அண்டை நாட்டு ஆதரவையோ, சொந்த நாட்டு மக்களின் உயிரையோ மதிக்காமல் ஆயுதங்களை நம்பி களத்தில் இறங்கினார்களோ அன்றே அழிவின் விதைகள் ஆழமாக ஊன்றப்பட்டுவிட்டன. இந்தியாவும் சூடுபட்ட பூனையாகத் தன் வாலை ஒடுக்கிக் கொண்டுவிட்டது.
இரு தரப்பினருமே ஆயுதங்களைக் கீழே போட வேண்டும். போர் நிறுத்தம் வரவேண்டும் என்றுதான் ஆரம்பம் முதலே இந்தியா சொல்லிவந்தது. யாரும் அதைக் கேட்கவில்லை. இந்தியா என்னதான் செய்ய முடியும். சிங்கள அரசால் மட்டுமல்லாமல், விடுதலைப் புலிகளாலும் பெரும் இழப்பைச் சந்தித்துவந்த ஈழத் தமிழர்களைப் பார்த்த போது மிகவும் வேதனையாகத்தான் இருந்தது.
(தொடரும்)

No comments:

Post a Comment