இருட்டில் இருந்து வெளிச்சத்தை நோக்கி...

Tuesday, August 17, 2010

புத்தம் சரணம் கச்சாமி - 4

காட்சி - 7

பிணைக்கைதியான டி வி.அதிபரின் வேண்டுகோளுக்கு இணங்க ஐ.நா. அதிகாரிகள், இந்திய இலங்கை அரசு உயரதிகாரிகள், மத்திய மந்திரிகள், முக்கிய கட்சிகளின் தலைவர்கள், நிகழ்ச்சியில் பங்குபெற ஒப்புக் கொள்கிறார்கள். ஒவ்வொரு அதிகாரியும் விமான நிலையத்தில், ரயில் நிலையத்தில் இருந்து மாலை அணிவிக்கப்பட்டு அழைத்து வரப்படுகிறார்கள். தொலைக்காட்சி அலுவலகத்தில் பரபரப்பாக வேலைகள் நடக்கின்றன. மொட்டை மாடியில் அரங்கு வடிவமைக்கப்படுகிறது. சிறப்பு விருந்தினர்கள் அனைவரும் விருந்து ஒன்றில் கலந்து கொள்கின்றனர். விருந்து முடிந்ததும் யார் குற்றவாளி..? என்ற தலைப்பில் நிகழ்ச்சி ஆரம்பமாகிறது.

தொகுப்பாளர் : நிகழ்ச்சிக்கு வந்திருக்கும் தலைவர்களை நிலையம் சார்பில் அன்புடன் வரவேற்கிறோம். (இரண்டு பெண்கள் ஒவ்வொருவருக்கும் பூங்கொத்து கொடுக்கிறார்கள்) உலக வரலாற்றிலேயே இவ்வளவு உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், தலைவர்கள் பங்கு பெறும் முதல் நிகழ்ச்சி இதுதான். (அரங்கில் இருக்கும் பார்வையாளார்களைப் பார்த்து) இவர்கள் எல்லாரையும் உங்களுக்கு நன்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன். (ஆமாம்… என்று குரல்கள் எழுகின்றன).

இதைப் பார்க்கும்போது எனக்கு ஒரு கதை நினைவுக்கு வருகிறது. பெர்னாட்ஷா ஒரு ஊரில் பேசுவதற்குப் போயிருந்தாராம். கூட்டத்தினரைப் பார்த்து, நான் என்ன பேசப் போகிறேன் என்று தெரியுமா என்று கேட்டாராம். கூட்டத்தினரும் உற்சாகமாக, தெரியும் தெரியும் என்று சொல்லியிருக்காங்க. உடனே ஷா உங்களுக்குத்தான் நான் பேசப் போவது தெரிந்திருக்கிறதே. எதற்குப் பேச வேண்டும் என்று சொல்லிவிட்டுப் போய்விட்டாராம்.

அடுத்தமுறை அந்த ஊருக்குப் பேசப்போன போது அதே கேள்வியைக் கேட்டாராம். உடனே மக்கள் ரொம்பவும் ஜாக்கிரதையாக, தெரியாது தெரியாது என்று சொல்லியிருக்காங்க. ஷா உடனே, தெரியாதவர்களிடம் பேசி ஒரு பயனும் இல்லை என்று சொல்லிவிட்டு மேடையில் இருந்து இறங்கிப் போய்விட்டாராம். மக்களுக்கு ஒரே அதிர்ச்சியாகிவிட்டது.

அடுத்தமுறை அந்த ஊருக்கு பேச வந்தபோதும் அதே கேள்வியைக் கேட்டார். கூடியிருந்தவர்கள் ரொம்பவும் ஜாக்கிரதையாக பாதிபேர் தெரியும் என்றும் மீதி பேர் தெரியாது என்றும் சொன்னார்கள். பார்த்தார் பெர்னாட் ஷா. பாதிபேருக்கு தெரிஞ்சிருக்கு. பாதி பேருக்குத் தெரியலையா..? அப்ப ஒன்ணு பண்ணுங்க. தெரிஞ்சவங்க எல்லாம் தெரியாதவங்களுக்கு சொல்லிக் கொடுத்துடுங்க என்று சொல்லிவிட்டு போய்விட்டாராம். எப்படி இருக்கு கதை… இப்ப சொல்லுங்க, சிறப்பு விருந்தினர்களை உங்களுக்குத் தெரியுமா..? தெரியாதா..?

தொகுப்பாளர் (பார்வையாளார் ஒருவரின் அருகில் போய் செல்லமாக மிரட்டி) : தெரியுமா தெரியாதா..?

பார்வையாளர் : தெரியும்… ஆனா தெரியாது…

கூட்டம் சிரிப்பில் மூழ்குகிறது. விருந்தினர்களும் சிரிக்கிறார்கள்.

ஓ.கே. நான் எல்லாரையும் அறிமுகப்படுத்திவிடுகிறேன். முதலில் ஐ.நா.செயலாளர் மாண்புமிகு பான் கி மூன்…

கூட்டம் கை தட்டி வரவேற்கிறது. அவர்கள் கைதட்டி முடிந்த பிறகும் படபடவென ஏதோ ஒரு சத்தம் கேட்கிறது. என்ன என்று எல்லாரும் சுற்று முற்றும் பார்க்கிறார்கள். இருளில் இருந்து நான்கு பக்கமும் நான்கு ஹெலிகாப்டர்கள் வந்து நிற்கின்றன. தொலைக்காட்சி நிலைய விளக்குகளின் ஒளி பட்டு அதன் உலோக உடல்கள் மின்னுகின்றன. ஒரு ஹெலிகாப்டரில் இருந்து நூலேணி ஒன்று இறக்கப்படுகிறது. அதில் துப்பாக்கியுடன் இறங்கும் ஒருவர் மொட்டை மாடிக்கு உள்ளே நுழையும் கதவுப் பக்கம் போய் நிற்கிறார். ஏற்கெனவே, எந்தத் தொந்தரவும் இருக்ககூடாது என்பதற்காக அது உள்பக்கம் தாழிடப்பட்டுத்தான் இருக்கிறது.

துப்பாக்கியுடன் இறங்கியவர் தன் கையில் இருந்த இன்னொரு பெரிய பூட்டை எடுத்து பூட்டுகிறார். பார்வையாளர்களும் சிறப்பு விருந்தினர்களும் நிலையக் குழுவினரும் அதிர்ச்சியில் உறைகின்றனர். சரசரவென நான்கு பக்க ஹெலிகாப்டர்களில் இருந்தும் ஆட்கள் இறங்கி அனைவரையும் சுற்றி வளைக்கிறார்கள். அரங்கத்தினர் சிறப்பு விருந்தினரைச் சுற்றி பாதுகாப்புக் கவசமாக நிற்கிறார்கள். துப்பாக்கியுடன் இறங்கியவர்கள் அவர்களை விலகும்படிச் சொல்கிறார்கள். ஆனால், அவர்களோ முடியாது என்று கைகளைக் கோர்த்தபடி தடுக்கிறார்கள். சரமாரியாக அரங்கில் இருப்பவர்களின் காலுக்கு அருகில் சுட ஆரம்பிக்கிறார்கள். அனைவரும் பயத்தில் விலகி ஓடவே சிறப்பு விருந்தினர்கள் நனைந்த கோழிக் குஞ்சுகள் போல் நடுங்கியபடி நடுவில் இருப்பது தெரிகிறது. ஒவ்வொருவராக ஹெலிகாப்டர்களில் துப்பாக்கி முனையில் மிரட்டி ஏற்றுகிறார்கள். கேமரா மேன் எல்லாவற்றையும் பதிவு செய்து கொண்டிருக்கிறார். அதைப் பார்க்கும் ஒரு போராளி கேமராவை நோக்கிப் போகிறார். கேமராமேனை முறைத்துப் பார்க்கிறார். கேமரா மேன் பயந்து நடுங்கியபடியே கேமராவை அணைத்துவிட்டு கேஸட்டை எடுத்து போராளியிடம் நீட்டுகிறார்.

போராளி (சிரித்தபடியே) : அது எங்களுக்குத் தேவையில்லை. நீ ஷூட் பண்ணு.

கேமராமேன் : இல்லை நீங்க என்னை ஷூட் பண்ணிடுவீங்க.

போராளி : நீ ஷூட் பண்ணலைன்னாத்தான் நான் ஷூட் பண்ணுவேன். உன் வேலையை நீ சரியா பாரு. (சிறப்பு விருந்தினர்கள் பக்கம் திரும்பி) உன்னை மாதிரியே இவங்களும் தங்களோட வேலையை ஒழுங்கா செஞ்சிருந்தா எங்களுக்கு வேலையே இருந்திருக்காது. என்ன செய்ய… உலகத்துல உன்னை மாதிரி டெடிகேஷன் உள்ளவங்க ரொம்ப கம்மியாத்தான் இருக்காங்க.

கேமராமேன் கேஸட்டை திரும்பப் போட்டு ஆன் செய்கிறார்.

போராளி அவர் தோளில் தட்டிக் கொடுத்துவிட்டு சிறப்பு விருந்தினர்களை ஹெலிகாப்டரில் ஏற்றிவிட்டு தானும் ஏறிக் கொள்கிறார். நூலேணிகள் மேலே இழுக்கப்படுகின்றன. ஹெலிகாப்டர்கள் இருளில் மறைகின்றன.

காட்சி - 8

சிதிலமடைந்த பங்களாவில் அனந்தனும் குட்டியும் நின்றுகொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முன்னால் எம்.டி. கைகள் கட்டப்பட்டு நாற்காலியில் உட்காரவைக்கப்பட்டிருக்கிறார்.

அனந்தன் : அப்ப நீ என்னதான் சொல்ல வர்ற..?

குட்டி : எடுத்த எடுப்பிலேயே நார்க்கோ அனாலிசிஸுக்குப் போகவேண்டாம்.

அனந்தன் : ஏன் வேண்டாங்கற. சாதாரணமா பேசவிட்டா, இதுவரை பத்திரிகைகள்லயும் டி.வி.லயும் சொன்னதையேதான் சொல்லுவானுங்க.

குட்டி : அது என்னமோ உண்மைதான். ஆனா, இந்த நிகழ்ச்சி இந்த விஷயத்தைப் பற்றி தெரியாதவங்களுக்கும் போகப் போகுது. அதுமட்டுமில்லாம இந்த விஷயத்துல ஒவ்வொருத்தர் தரப்புல இருக்கற நியாயம் சொல்லப்படணும். அப்பத்தான் சிக்கல் எவ்வளவு எளியது; அதை எப்படியெல்லாம் சுய லாபங்களுக்காக சின்னாபின்னமாக ஆக்கியிருக்காங்கன்னு பாக்கறவங்களுக்கு அழுத்தமா புரியும். சார் கிட்டயே வேணும்னா கேட்டுப் பாரு.

குட்டி (எம்.டி. பக்கம் திரும்பி) : நீங்க என்ன நினைக்கறீங்க..? உங்களுக்கு ஒரு நிகழ்ச்சியை எப்படி பிரசெண்ட் பண்ணினா மக்களுக்குப் பிடிக்கும்ங்கறது எங்களைவிட நல்லாத் தெரியும் இல்லையா..?

எம்.டி : நார்க்கோ அனாலிஸுக்கு உட்படுத்தப் போறீங்களா..?

அனந்தன் : ஆமாம்.

எம்.டி : எல்லாரையுமா..?

அனந்தன் : ஏன். அதுல உங்களுக்கு ஏதாவது ஆட்சேபனை இருக்கா..?

எம்.டி. : இது எங்க போய் முடியுமோன்னு தெரியலையே..?

அனந்தன் : ஆல் வில் பி வெல் இஃப் இட் எண்ட்ஸ் வெல். சரி நீங்க என்ன நினைக்கறீங்க. எனக்கு என்னமோ அவங்களை மொதல்லயே நார்க்கோ அனாலிசிஸுக்கு உட்படுத்தி அதை அப்படியே நேரடியா ஒளிபரப்பிடறதுதான் சரின்னு தோணுது. இவன் அது வேண்டாங்கறான். மொதல்ல எல்லாரையும் சாதாரணமா பேச வெக்கலாம். அதுக்கு அப்பறம் உண்மையைப் பேச வைக்கலாம் அப்படின்னு சொல்றான். நீங்க என்ன நினைக்கறீங்க.

எம்.டி.சிறிது நேரம் மவுனமாக இருக்கிறார்.

எம்டி : ஒரு நிகழ்ச்சின்னு பார்த்தா மொதல்ல நல்ல அறிமுகம்னு இருக்கறது அவசியம்தான். அதுவும் இந்த விஷயத்துல ஒவ்வொரு தரப்பிலயும் ஒவ்வொரு நியாயம் இருக்கத்தான் செய்யுது. அதைச் சொல்ல அனுமதிக்கறதுதான் நல்லது. அப்பத்தான் மக்களுக்கு ஒருதெளிவான சித்திரம் கிடைக்கும்.

அனந்தன் : இவங்களைப் பேச விட்டா பேசிக்கிட்டே போவானுங்க. அதுமட்டுமில்லாம போலீஸ் ரவுண்ட் அப் பண்றதுக்குள்ள நாம் எல்லாத்தையும் முடிச்சாகணும். ஐ.நா. செயலரை வேற பிடிச்சி வெச்சிருக்கோம். இண்டர்நேஷனல் ஃபோர்ஸ் வந்தா சமாளிக்கறது ரொம்ப கஷ்டம்.

குட்டி : அது ஒரு பிரச்னையே இல்லை. இந்த இடத்தையே சுத்தி உலகத்துல இருக்கற எல்லா படைகளும் வந்து குவிஞ்சாலும் கவலையே படவேண்டாம். நம்ம கிட்ட இருக்கற பிணைக் கைதிகள் எல்லாருமே வி.வி.ஐ.பிங்க. அவங்களுக்கு ஒண்ணுன்னா உலகமே துடிச்சிப் போயிடும். இப்ப நம்ம சாரையே எடுத்துக்கோ… தமிழ் நாட்டுலயும் இந்தியாலயும் ரொம்ப முக்கியமான ஆளு. இவரோட கையையோ காலையோ வெட்டி எடுத்துக் காட்டினோம்னா பதறிப்போயிடமாட்டாங்களா என்ன..? நான் சொல்றது சரிதான சார்..?

எம்.டி. மிரண்டு போய் இருவரையும் மாறி மாறிப் பார்க்கிறார்.

குட்டி (அவரது கன்னத்தை செல்லமாகக் கிள்ளி) : பயந்துட்டீங்களா… இரண்டரை மூணு லட்சத்துக்கும் மேல் இருக்கும் சார். கை போயி கால் போயி முகம் சிதைஞ்சு... இன்னும் இருக்காங்க சார். செத்தே போயிருக்கலாமேன்னு ஒவ்வொரு நாளும் கதறித் துடிச்சிக்கிட்டு திறந்தவெளிச் சிறையில நடமாடும் பிணமா இருக்காங்க. ஆனா உங்கள்ல யாராவது ஒருத்தருக்கு ஒரு சின்ன கீறல் விழுந்ததுன்னா உலகமே பதறும் இல்லை சார்.

எம்.டி. தலை குனிகிறார்.

காட்சி - 9

அமைச்சர் ஒருவருடைய மகளின் திருமண விருந்து ஒன்று விமரிசையாக நடந்து கொண்டிருக்கிறது. முதலமைச்சர், காவல்துறை உயரதிகாரிகள், நீதிபதிகள் என எல்லாரும் கூடியிருக்கிறார்கள். காவல் துறை உயரதிகாரி கையில் மதுக்கோப்பையுடன் சிரித்து பேசிக் கொண்டிருக்கிறார். தூரத்தில் இருந்து அதைப் பார்க்கும் முதலமைச்சர் தன் பி.ஏ.விடம் ஏதோ சொல்கிறார். பி.ஏ. காவல் துறை உயரதிகாரியை சந்தித்து சிறிது ஓரமாக அழைத்துச் செல்கிறார்.

பி.ஏ. : ஐயா உங்க கிட்ட ஒரு விஷயம் கேட்கச் சொன்னாங்க.

ஐ.ஜி : சொல்லுங்க என்ன செய்யணும்.

பி.ஏ : இருந்து சாப்பிட்டுத்தான போவீங்க..?

ஐ.ஜி : ஆமாம்.

பி.ஏ. : ஐயா கூட சாப்பிட வர முடியுமான்னு கேட்கச் சொன்னாங்க.

ஐ.ஜி. : இதுல கேட்க என்ன இருக்கு. வாடான்னு சொன்னா வந்துட்டுப் போறேன்.

பி.ஏ. : ஐயா சாப்பிட கொஞ்ச நேரம் ஆகும். அதான் கேட்டுட்டு வரச் சொன்னாங்க.

ஐ.ஜி. கேட்கவே வேண்டாம். எவ்வளவு நேரம்னாலும் காத்திக்கிட்டுருப்பேன்னு சொல்லுங்க.

விருந்து தொடர்கிறது. ஓரிரு மணி நேரம் கழிந்த பிறகு, முதல்வரும் அமைச்சர்களும் சாப்பிடச் செல்கிறார்கள். ஐ.ஜியும் கலந்து கொள்கிறார்.

முதல்வர் ஐ.ஜி.யைத் தனக்குப் பக்கத்தில் உட்காரச் சொல்கிறார். ஐ.ஜி. சந்தோஷத்துடன் அமர்கிறார். உணவு பரிமாறப்படுகின்றன. எல்லாரும் சாப்பிட ஆர்மபிக்கிறார்கள்.

முதலமைச்சர் : சமீபத்துல ஸ்விட்சர்லாந்து போயிருந்தேன். அங்கெல்லாம் ஏதாவது ஒரு கேஸ் வந்துருச்சுன்னா அது துப்பு துலங்கி முடியறவரை உயர் அதிகாரிங்க பசி, தூக்கம் எதையும் பொருட்படுத்த மாட்டாங்களாம். குடும்ப விழா, விருந்து எதிலயும் கலந்துக்க மாட்டாங்களாம். அதெல்லாம் டெடிகேஷனோட இருக்கறவங்க செய்யறது இல்லையா ஐ.ஜி. நீங்க சாப்பிடுங்க. வெயிட்டர்… சாருக்கு என்ன வேண்டும்னு கேட்டு போடுங்க.

ஐ.ஜி.க்கு லேசாக சுருக்கென்று தைக்கிறது. தலையைக் குனிந்தபடியே இருக்கிறார். எல்லாரும் சாப்பிடவே, சிறிது நேரம் கழித்து தயக்கத்துடன் ஒரு சிக்கன் துண்டை ஃபோர்க்கால் எடுத்து வாயில் போட்டுக் கொள்கிறார்.

முதலமைச்சர் : விண்வெளிக்குப் போறவங்க தூக்கம் பசி எடுக்காம இருக்க ஏதோ மாத்திரை எல்லாம் சாப்பிடுவாங்களே அதுமாதிரி தங்களுக்கும் ஏதாவது தர முடியுமான்னு கேட்கறாங்களாம். சாப்பிடறதுக்குன்னு நேரம் வீணாகுதேன்னு அவங்களுக்குக் கவலையாம். அதெல்லாம் நமக்கு எதுக்கு இல்லையா..? நாலு பேர் நாக்கைப் பிடுங்கற மாதிரி கேள்வி கேட்பாங்களேன்னு சூடு சொரணை உள்ளவங்க அப்படி யோசிப்பாங்க. நமக்கு எதுக்கு அதெல்லாம்… நீங்க சாப்பிடுங்க ஐ.ஜி.

ஐ.ஜி. வாயில் இருக்கும் சிக்கன் துண்டை துப்பவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கிறார்.

முதல்வர் : யார் எக்கேடு கெட்டா நமக்கென்ன. நாடு என்ன குட்டிச் சுவரானா நமக்கு என்ன. மாசம் பொறந்தா சம்பளம்… வாரம் பொறந்தா கிம்பளம். வாங்கிப் போட்டுக்கிட்டு போய்கிட்டே இருக்க வேண்டியதுதான… நீங்க சாப்பிடுங்க ஐ.ஜி.சார்.

ஐ.ஜி. எதுவும் பேசாமல் தலை குனிந்தபடி இருக்கிறார். எல்லாரும் சாப்பிட்டு முடித்து எழுந்திரிக்கிறார்கள். முதல்வரும் புறப்பட்டுப் போகிறார். ஐ.ஜி. உணவு மேஜையைவிட்டு எழுந்திரிக்காமல் அப்படியே அமர்ந்திருக்கிறார்.

விருந்து முடிந்து ஒவ்வொருவராக விடை பெற்றுச் செல்கிறார்கள். அரங்கில் விளக்குகள் ஒவ்வொன்றாக அணைக்கப்படுகின்றன. ஐ.ஜி. பரிமாறப்பட்ட உணவை வெறித்துப் பார்த்தபடி தனியாக அமர்ந்திருக்கிறார்.

காட்சி - 10

நள்ளிரவில் லாக்கப் ரூமில் பனியனுடன் ஐ.ஜி. மேஜையில் தலை கவிழ்ந்தபடி அமர்ந்திருக்கிறார். மேலே தொங்கும் விளக்கு இங்கும் அங்குமாக ஆடிக் கொண்டிருக்கிறது. பின்னணியில் குரல்கள் எதிரொலிக்கின்றன. நீங்க சாப்பிடுங்க ஐ.ஜி… அதெல்லாம் சூடு சொரணை உள்ளவங்களுக்கு. யார் எக்கேடு கெட்டா நமக்கு என்ன… நாடு எப்படி குட்டிச் சுவரானா நமக்கு என்ன..?

சட்டென்று ஆவேசம் வந்து எழுந்திருக்கும் ஐ.ஜி. சட்டை கூடப் போட்டுக் கொள்ளாமல் ஜீப்பை நோக்கி விரைகிறார். துணைகாவலர்கள் பதறி அடித்து பின்னால் ஓடுகிறார்கள். ஐ.ஜி. ஜீப்பை எடுத்துக் கொண்டு பறக்கிறார். காவலர்களும் தங்கள் பைக், ஜீப்பில் பின் தொடருகிறார்கள். வாகனங்கள் நேராக அகதிகள் முகாமை நோக்கிச் செல்கிறது. மூடப்பட்ட கேட்டுக்கு முன்னால் ஹார்னை அலறவிடுகிறார் ஐ.ஜி. கோபத்துடன் திட்டியபடியே வரும் காவலாள், ஐ.ஜி.யைப் பார்த்ததும் ஒடுங்கிப் போகிறார்.

கிரில் கேட் திறக்கப்படுவதற்கு முன் கிட்டத்தட்ட மோதிவிடுவதுபோல் ஜீப் உள்ளே நுழைகிறது. தூங்காமல் வராண்டாவில் உட்கார்ந்திருந்தவர்கள் திடீரென்று பாய்ந்த ஹெட்லைட் வெளிச்சத்தில் பதறி சுவரோரம் ஒடுங்குகிறார்கள். தூங்குவதுபோல் படுத்திருந்தவர்கள் அலறி அடித்து எழுந்திரிக்கிறார்கள். ஐ.ஜி. வெறி பிடித்த மிருகம் போல் உள்ளே நுழைகிறார். கண்ணில் படுபவரையெல்லாம் கன்னத்திலும் பிடரியிலும் அடிக்கிறார். இள வயதினராகப் பார்த்து தரதரவென இழுத்துச் சென்று ஒரு அறைக்குள் போட்டு கையில் கிடைத்தவற்றையெல்லாம் எடுத்து அடித்து துவம்சம் செய்கிறார். அகதிகள் எல்லாரும் பயந்து வெளிறிய முகத்துடன் ஒரு மூலையில் ஒடுங்கியபடி எல்லாவற்றையும் பார்க்கிறார்கள். எதற்கு அடிக்கிறார்கள் என்று கேட்க சற்று முன்னால் வருபவர்களை பிற காவலர்கள் லத்தியால் அடித்து விரட்டுகிறார்கள். குழந்தைகள் பயத்தில் அலறுகின்றன.

சொல்றா… சொல்றா… கடத்திட்டுப் போனது யாரு… எல்லாரையும் எங்க கொண்டு வெச்சிருக்கான்… என்று கேட்டபடியே ஒவ்வொருவரையும் சுவரில், கதவில் மோதவைத்து அடிக்கிறார்.

எங்களுக்கும் அவங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அவங்களை எங்களுக்கு தெரியாது என்று அடிபடுபவர்கள் கெஞ்சிக் கதறுகிறார்கள்.

முதியவர் ஒருவர் : கொழும்பு அகதிகள் முகாமில்தான் இப்படி அநியாயம் நடக்கும். புலிகள் பகலில் ஏதாவது தாக்குதல் நடத்தினால் ராத்திரியில் ஆர்மிகாரன்கள் முகாமில் புகுந்து சந்தேகம் என்ற பெயரில் எல்லாரையும் போட்டு துவம்சம் செய்வான்கள். இங்கயும் அதே கதிதானா..?

இன்னொருவர் : எந்த ஊரானாலும் நாயென்றால் கடிக்கத்தான் செய்யும்.

(தொடரும்)

No comments:

Post a Comment