இருட்டில் இருந்து வெளிச்சத்தை நோக்கி...

Friday, August 27, 2010

புத்தம் சரணம் கச்சாமி - 10

இறந்தவர்களைப் புதைத்தல்
நன்கு பரிச்சயமாகித்தான் இருந்தது எங்கள் காலகட்டத்தில்
(அது எதைக் குறிப்பதாக இருந்தாலும்
எங்கள் மன நல நிபுணர்கள்
மனதின் சமநிலையைத் தக்க வைக்க உதவி புரிந்திருக்கிறார்கள்)

ஏதோ அரிதாக நடக்கும் சம்பவம் போல்
இது ஒன்றும் அவ்வளவு தெளிவாக
மனதில் பதிந்து கிடக்க எந்தக் காரணமும் இல்லைதான்

ஒன்றைத் தெளிவாகச் சொல்லிவிடுகிறேன்
நான் உணர்ச்சி வசப்படுபவன் அல்ல.
ஒருபோதும் மனம் தளர்ந்துபோனது கிடையாது

உணர்ச்சிகளை வெளியில் காட்ட மிகவும் கூச்சப்படுவேன்
உங்களைப் போலவே,
அன்றாடக் கடமைகளை அழகாகப் பார்த்துக் கொண்டு செல்வேன்

மிகவும் விசுவாசமானவன்.
’மறந்துவிடு’ என்று அரசு சொல்லும்போது
அப்படியே செய்துவிடுவேன்.
மறந்துவிடும் என் திறமை என்றுமே
சந்தேகிக்கப்பட்டது கிடையாது
அது பற்றி நான் எந்தப் புகார் தெரிவித்ததும் கிடையாது

இருந்தும்
அந்தக் கும்பல் அந்த காரைத் தடுத்தி நிறுத்தியவிதம்
என் நினைவில் இப்போதும் இருக்கிறது.
காரில் நான்கு பேர் இருந்தனர்.
ஒரு பையன், ஒரு சிறுமி,
ஒரு ஆண், ஒரு பெண்
குழந்தைகளின் பெற்றோர் என்று நினைக்கிறேன்
(நான்கோ ஐந்தோ பேர்தான் இருந்ததுபோல் தெரிந்தது)
பிற கார்களைத் தடுத்து நிறுத்தியது போலத்தான்
இந்த காரையும் தடுத்து நிறுத்தினார்கள்.
எந்த வித்தியாசமும் அதில் இல்லை.

சில வழக்கமான கேள்விகள் கேட்கப்பட்டன.
தவறுதலாக எதுவும் நடந்துவிடக்கூடாது அல்லவா..?

அதன் பிறகு, காரியத்தில் இறங்கினார்கள்.
வழமை போலவே எல்லாமும்
கதவை மூடுதல்
பெட்ரோல் ஊற்றுதல்,
சுற்றி நின்று கொள்ளுதல்
எல்லாமே வழமை போல்

அப்போது யாரோ
எதுவோ வித்தியாசமாக உணர்ந்தார்கள் போலிருக்கிறது.
இடதுபக்க இரண்டு கதவுகளையும் திறந்தார்கள்.
இரண்டு குழந்தைகளையும்
பெற்றோரிடமிருந்து வெளியே இழுத்தார்கள்.

குழந்தைகள் கதறி அழுதன

குழந்தைகளின் நன்மைக்காக
அவர்களுடைய விருப்பத்தை மீறி
சில செயல்களைச்
சில நேரங்களில் செய்யத்தானே வேண்டியிருக்கிறது.
அவர்கள் அப்படி நினைத்திருக்கக்கூடும்

காரியத்தில் கண்ணான இன்னொருவன்
சட்டென்று நெருப்பை
திறமையாகப் பற்ற வைத்தான்.
குப்பென்று தீ பரவியது
சுற்றிலும் எரிந்து கொண்டிருந்தவற்றின் எண்ணிக்கையில்
மேலும் இன்னொன்றாகச் சேர்ந்தது

நன்கு எரிய ஆரம்பித்ததும் கூட்டம்
புதிய சாசகத்தைத் தேடி நகர ஆரம்பித்தது
சிலர் கலைந்து சென்றனர்.
உள்ளிருந்த இருவர்
என்ன நினைத்திருப்பார்கள்
என்ன உணர்ந்திருப்பார்கள்
யாருக்கும் கவலையில்லை.

அமைதியை விரும்பும் மக்கள்
தங்கள் வீடுகளை நோக்கி
நடக்க ஆரம்பித்தனர்

அப்போது
திடீரென்று
காருக்குள் இருந்த மனிதர்
கார் கதவை உடைத்துத் திறந்தார்.
அவருடைய சட்டையும் தலைமுடியும்
ஏற்கெனவே தீயில் கருக ஆரம்பித்திருந்தன

பாய்ந்து குனிந்து தன்னிரு குழந்தைகளைப் பிடுங்கிக் கொண்டார்
திட்டமிட்ட செயல் ஒன்றை முடிப்பதுபோல்
எந்தப் பக்கமும் திரும்பாமல்
காருக்குள் குழந்தைகளுடன் புகுந்தார்.

உள்ளே
கார் கதவை
அழுத்தமாகத் தாழிட்டுக் கொண்டார்.
அந்தச் சத்தத்தை
வெகு துல்லியமாக
நான் கேட்டேன்.
- பஸில் ஃபெர்னாண்டோ

No comments:

Post a Comment