இருட்டில் இருந்து வெளிச்சத்தை நோக்கி...

Thursday, August 26, 2010

புத்தம் சரணம் கச்சாமி - 9

அடிப்படையில் இந்த பிரச்னை இந்த அளவுக்கு மோசமாக யார் காரணம் தெரியுமா..? விடுதலைப் புலிகள்தான். ஜெயவர்தனேயுடன் ராஜீவ் காந்தி 1987-ல் ஒரு ஒப்பந்தம் செய்தார். அதில் இலங்கைத் தமிழர்களுக்கு சம உரிமை கிடைக்க எல்லா வழிகளும் செய்யப்பட்டிருந்தன. சுய ஆட்சிக்கான அருமையான வாய்ப்பு தரப்பட்டது. இவ்வளவுதான் செய்ய முடியும். அது தான் நியாயமும் கூட. பிரிவினை வாதம் என்பதை ஒருபோதும் ஊக்குவிக்க முடியாது. காஷ்மீரில் தனிநாடு வேண்டும் என்று கேட்டுத்தான் போராடிவருகிறார்கள். இந்திய ராணுவம் அதை எதிர்த்துத்தான் போராடுகிறது. அப்படி இருக்க இலங்கையிடம் போய் தமிழர்களுக்கு தனி நாடு கொடு என்று எப்படிச் சொல்ல முடியும்..? நாளை அவர்கள் அப்படியானால் காஷ்மீர் மக்களுக்கு தனி நாடு கொடுக்க வேண்டியதுதானே என்று முகத்தில் அடித்தாற்போல் கேட்பார்களே..? ஊருக்கு ஒரு நீதி உனக்கு ஒரு நீதியா என்று காறி உமிழ்வர்களே... இந்தியா இந்த விஷயத்தில் நடுநிலை வகிப்பதைத் தவிர வேறு என்னதான் செய்ய முடியும்..?

அதோடு அந்த ஒப்பந்தத்தில் முதலில் நிலைமை மோசமானால் இந்தியா தன்னுடைய படையை அனுப்பும் என்ற நிபந்தனை சேர்க்கப்படவே இல்லை. அந்த ஒப்பந்தம் கையெழுத்தாக இருந்த அன்று காலையில் ஜெயவர்த்தனேயை எதிர்த்து அங்கிருந்த தீவிரவாத சிங்களர்கள் கடும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டை பிரித்துக் கொடுக்க வழி செய்வதாக அவர்கள் கோபப்பட்டனர். அதனால் அவர் வீட்டைக்கூடக் கொளுத்தினார்கள். இதனால் யாழ்ப்பாணத்தில் இருந்த தன் படைகளை சிங்களர்கள் கலகம் செய்யும் இடத்துக்கு அனுப்ப வேண்டிய தேவை ஏற்பட்டது. அப்போதுதான் இலங்கையில் சட்டம் ஒழுங்கு சீர்பட சிறிது காலத்துக்கு இந்தியப் படையினரை அனுப்பி உதவுங்கள் என்று ஜெயவர்த்தனே கேட்டுக் கொண்டார். ராஜீவ் காந்தி கூட நீங்கள் யோசித்துத்தான் சொல்கிறீர்களா என்று ஒருதடவைக்கு இரண்டு தடவை கேட்டிருக்கிறார். இந்தியாவுக்கு இன்னொரு தேசத்துக்கு ராணுவத்தை அனுப்புவதில் எந்த விருப்பமும் இருந்திருக்கவில்லை.

இன்னொரு கோணத்தில் பார்த்தால் விடுதலைப் புலிகளின் தலைமையில் ஈழத்தில் தனி நாடு அமைந்தால் அடுத்ததாக அவர்கள் தமிழ் நாட்டுத் தலைவர்களுடன் ஒன்று கூடி இந்தியாவில் இருந்து தமிழ் நாட்டைப் பிரித்துக் கொண்டு போகமாட்டார்கள் என்று என்ன நிச்சயம்..? ஏற்கெனவே தனி திராவிட நாடு என்று முழங்கியவர்கள்தான் அவர்கள்... எனவே, இந்தியா தனது இறையாண்மைக்கு ஊறு விளைவிக்கும் ஒரு செயலைச் செய்ய முடியாது.

விடுதலைப் புலிகள் தனி நாடு கோரிக்கையைக் கைவிட்டுவிட்டு ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தால் நிச்சயம் பிரச்னை எப்போதோ தீர்ந்துவிட்டிருக்கும். கூட்டாட்சி அமைப்பு ஒன்றுதான் இந்தப் பிரச்னைக்கான ஒரே தீர்வு. இந்த உண்மையைப் புரிந்து கொண்டதால்தான் ராஜீவ் காந்தி அப்படி ஒரு உடன்படிக்கையை ஜெயவர்த்தனேவுடன் செய்துகொண்டார். அதன் அடிப்படையில்தான் இந்திய அமைதிப்படையை அனுப்பிவைத்தார். ஆனால், இந்த உடன்படிக்கையில் கையெழுத்துப் போட்டுவிட்டு அதன் பிறகு தவறான பாதையில் போக ஆரம்பித்தனர் விடுதலைப்புலிகள். ஒப்பந்தம் கையெழுத்தான ஒன்றரை மாதத்துக்குள் திலீபன் உண்ணாவிரதம் இருந்து இறந்தார். அமைதி திரும்பிவிடக்கூடாது என்பதில் அத்தனை அக்கறை.

சக போராட்டக் குழுக்களின் தலைவர்களைக் கொன்று குவித்தனர். சிங்களர்களுக்கு உதவுவதாகச் சொல்லி தமிழ் முஸ்லிம்களைக் கொன்று குவித்தனர். எண்பதாயிரம் இஸ்லாமியர்களை 2 மணி நேரக் கெடு விதித்து வீடு வாசல், நில புலன் அனைத்தையும் விட்டுவிட்டு ஓடும்படித் துரத்தினர். தமிழர்களிலேயும் கூட்டாட்சி அமைப்புக்கு ஆதரவு தெரிவித்தவர்கள் அனைவரையும் அநியாயமாகக் கொன்று குவித்தனர். புலிகளை விமர்சித்தவர்களைக் கொன்றனர். புலிகளை ராணுவம் சுற்றி வளைத்த போதெல்லாம் மக்கள் கூட்டத்தையும் துப்பாக்கிமுனையில் மிரட்டி தங்களோடு இடம் பெயர வைத்தனர். தனது பிழையான அரசியலின் மூலம் இலங்கைத் தமிழ் சமூகத்துக்கும் சிங்களர்களுக்கும் இப்படியான ஒரு பேரிழப்பை ஏற்படுத்தியது விடுதலைப் புலிகள்தான்.

ஆனால், அதையெல்லாம் மறைத்துவிட்டு இந்திய அரசின் மீது இவ்வளவு குற்றச்சாட்டுகளை சுமத்தும் தமிழ் அரசியல் தலைவர்களைப் பார்த்து நான் சில கேள்விகள் கேட்க விரும்புகிறேன். கடைசிகட்டப் போரில் பிரபாகரன் சுற்றி வளைக்கப்பட்டபோது இவ்வளவு கூக்குரல் இட்ட நீங்கள் அதற்கு முன்னால் என்ன செய்தீர்கள்... ஈழத் தமிழர்கள் என்பவர்கள் உங்களுடைய தொப்புள் கொடி உறவு என்று சொல்கிறீர்களே... அவர்களுடைய பிரச்னை தீர நீங்கள் என்ன செய்து கிழித்திருக்கிறீர்கள்... உண்ணாவிரதம் நடத்துவது, தந்தி கொடுப்பது, மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்துவது, பத்திரிகைகளில் அடுத்தவர் மீது பழியைப் போடுவது என்பதைத் தவிர உருப்படியாக என்ன செய்திருக்கிறீர்கள்..?

அகதிகளாக தமிழகத்துக்கு எத்தனைபேர் வந்திருக்கிறார்கள்? கூப்பிடு தூரத்தில் இருக்கும் உங்களிடம் வராமல் அனைவரும் ஆஸ்திரேலியா, கனடா, ஃபிரான்ஸ் என்று மேலைநாடுகளுக்குத்தானே போயிருக்கிறார்கள். நீங்கள் என்ன செய்திருக்க வேண்டும்..? ஈழத் தமிழர்களே நீங்கள் அகதிகள் அல்ல... எங்கள் விருந்தாளிகள் என்று வரவேற்று தமிழகத்தில் தங்க இடமும் உழைத்துப் பிழைக்க கவுரவமான வேலையும் உரிமையும் தந்திருக்க வேண்டும். வெளி நாடுகளுக்குப் புலம் பெயர்ந்தவர்கள் கூட நாலைந்து ஆண்டுகளில் அந்த சமூகங்களில் சுமுகமாகக் கலந்துவிட முடிந்திருக்கிறது. ஆனால், இங்கு பதினைந்து வருடங்களாக தமிழக முகாம்களில் இருப்பவர்கள் அகதிகளாகத்தானே இருந்துவருகிறார்கள். இப்போது காலங்கடந்த ஞானோதயமாக நூறு கோடி தருகிறேன் என்றூ ஒரு கண் துடைப்பு அறிக்கை வேறு. 1983லிருந்தே அகதிகள் தமிழகத்தில் இருந்து வருகிறார்கள். திபெத்திய, பங்களாதேஷிய அகதிகளுக்கு இருந்த உரிமைகள் கூட இலங்கைத் தமிழர்களுக்குத் தரப்பட்டிருக்கவில்லை.

கடந்த ஒரு வருடத்துக்கு முன்னால் வரை தமிழகத்தில் இருந்த அகதிகள் முகாம்களின் நிலை என்ன என்பது ஊருக்கே தெரியுமே..? தமிழ் தலைவர்களில் யாராவது ஒருவர் அங்கு போய் அவர்களுடைய குறை என்ன என்பதைக் கேட்டிருப்பீர்களா..? இந்தியா கைவிட்டுவிட்டது... என்று இப்போது கூக்குரல் இடுகிறீர்களே... நீங்கள் என்ன செய்தீர்கள்..?

திராவிடக் கட்சிகள் இலங்கைத் தமிழர் பிரச்னையை தங்கள் வோட்டுப் பொறுக்கி அரசியலுக்கு உதவும்வகையில் பயன்படுத்திக் கொண்டதைத் தவிர வேறு என்ன செய்தார்கள்?

போர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில் இந்திய உள்துறை அமைச்சர் இலங்கைக்குப் போகவேண்டும்... இந்திய பிரதமர் இலங்கைக்குப் போகவேண்டும் என்று வாய் கிழியக் கத்தினார்கள்... தமிழகத்தில் இருந்து தலைவர்கள் வந்து பேச வேண்டும் என்று இலங்கை அதிபர் கேட்டுக் கொண்டதும் அடுத்த நிமிடமே வாயை மூடிக் கொண்டு ஓடிவிட்டார்கள்... ஏன்..? உங்கள் வீரமெல்லாம் வீட்டுக்குள் இருந்து வசனம் பேசுவதில்தான் அடங்கி இருக்கிறது இல்லையா..? இலங்கை அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தப் போனால் விடுதலைப் புலிகள் உங்களையும் போட்டுத் தள்ளிவிடுவார்கள் என்ற பயம் இல்லையா..?

ராஜீவ் கொலையை மட்டுமே வைத்து இலங்கைப் பிரச்னையை அணுகக்கூடாது என்று சொல்கிறார்கள். அது எப்படி சரியாக இருக்க முடியும். ராஜீவ் காந்தி இலங்கையில் அமைதி திரும்ப ஆத்மார்த்தமாக முயற்சிகள் எடுத்தவர். அவரைக் கொன்றதன் மூலம் இலங்கையில் அமைதி திரும்பக்கூடாது என்று ரத்தால் அடிக்கோடிட்டுக் காட்டினார்கள் விடுதலைப் புலிகள் இயக்கத்தினர். இலங்கை சரித்திரத்தில் அந்த அத்தியாயத்தை மூடிவிட்டு படி என்று சொன்னால் என்ன அர்த்தம். நாளை சிங்கள அரசின் வன்முறைகளை மறந்துவிட்டு இலங்கை பிரச்னையைப் பாருங்கள் என்று ஒருவர் சொன்னால் எவ்வளவு முட்டாள்தனமாக இருக்குமோ அது போன்றதுதான் இதுவும்.

அனந்தன் : விடுதலைப் புலிகள் செய்த தவறுக்காக அப்பாவிகள் கொல்லப்பட வேண்டுமா..? ஒரு பக்கம் போராளிகள்… இன்னொரு பக்கம் ராணுவம். இரண்டுக்கும் நடுவில் அப்பாவிகள் சிக்கிக் கொண்டிருந்தார்களே… அவர்களைக் காப்பாற்ற நீங்கள் ஏதாவது செய்திருக்கலாமே…

இந்திய உள்துறை அமைச்சர் : என்ன செய்ய... புலிகள்தான் மக்கள்... மக்கள்தான் புலிகள் என்று அல்லவா அங்கு நிலைமையை ஆக்கியிருந்தார்கள். ஒரு தவறான தலைவனுடைய முட்டாள்தனமான செயல்பாடுகளினால் ஒரு இனம் அழிய நேர்வதைப் பார்த்துக் கொண்டு எதுவும் செய்ய முடியாமல் இருக்கும் நிலையில்தான் இந்தியா இருந்தது, மகாபாரதத்தில் பீஷ்ம பிதாமகர் இருந்தது போல். குருக்ஷேத்திர யுத்தத்தில் கவுரவர்கள் அதிகமாக இருந்தார்கள். பாண்டவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தார்கள். இருந்தும் பாண்டவர்களால் வெல்ல முடிந்தது. ஏனென்றால், அவர்கள் பக்கம் நியாயம் இருந்தது. நீதி இருந்தது. தர்மம் இருந்தது. ஆனால், இன்றைய இலங்கை யுத்தத்தில் தமிழர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருக்கிறார்கள். சிங்களர்கள் அதிகமாக இருக்கிறார்கள். ஆனால், என்ன செய்ய..? இன்று தர்மம் பெரும்பான்மையின் பக்கமல்லவா இருக்கிறது.

பிரபாகரன் தவறான பாதையில் வெகு துரம் வரை போனார். இனி மீள்தல் சாத்தியமில்லை என்னும் அளவுக்குப் போனார். அவரைத் தலைவராக ஏற்றவர்களுக்கும் அதுதான் கதி... என்ன செய்வது மூளை போடும் தவறான திட்டங்களுக்கு அடியும் உதையும் வாங்குவது காலும் கையும் தானே..?

அனந்தன் : தமிழகத்தில் இருந்து யாராவது ஏதாவது செய்ய விரும்பினால் உடனே தேச விரோதச் செயல் என்று அவர்களை அச்சுறுத்தி அடக்கித்தானே வந்திருக்கிறது இந்தியா..?

இந்திய உள் துறை அமைச்சர் : அப்படியில்லை. தமிழகத்தில் இருந்த தலைவர்கள் இந்தப் பிரச்னையில் உண்மையான அக்கறையை ஒருபோதும் காட்டியதில்லை. தம்பிக்கு ஒரு துன்பமென்றால் அண்ணனல்லவா விழுந்தடித்து ஓடிச் சென்று காப்பாற்றியிருக்க வேண்டும். அதைச் செய்யாமல் இருந்துவிட்டு அடுத்தவர் மேல் பழி போட்டால் என்ன நியாயம்..? கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். வெறும் இருபத்து நாலு கிலோமீட்டர் இடைவெளிதான் தமிழகத்துக்கும் இலங்கைக்கும். கடல் அமைதியாக இருந்தால் வெறும் ஐந்தே மணி நேரப் பயணம்தான். பிரிவினைவாதத்துக்கு ஆதரவு கொடுத்தவர்கள் விடுதலைப் புலிகளுக்கு அடிப்படைத் தேவையான டீசல், உணவுப் பொருட்கள், மருந்துகள், ஆடைகள் என ஆரம்பித்து ஆயுதங்கள்வரை கடத்திக் கொண்டு சென்று கொடுத்திருக்கிறார்கள். கள்ளப் பணம் கை மாறி இருக்கிறது. மருத்துவர்கள், மீனவர்கள், அரசியல்தலைவர்கள், பத்திரிகையாளர்கள், வியாபாரிகள், கடத்தல்காரர்கள் என மிகவும் வலுவான வலைப்பின்னல் உதவி புரிந்திருக்கிறது. அழிவின் மர்மச் சுரங்கத்தில் ஆயிரம் காலடித் தடங்கள். இங்கிருந்து அங்கும் அங்கிருந்து இங்குமாக. ஆனால், அன்பின் நெடுஞ்சாலையிலோ ஒற்றைக் கால் தடம் கூடப் பதிக்கப்படவில்லை. அது ஏன்..?

ஆறு கோடித் தமிழர்கள் அருகில் இருந்தும் கடலின் அக்கரையில் இருந்த ஈழத் தமிழர்கள் அநாதைகளாக மடிய நேர்ந்ததேன்? தமிழகத்தில் இருந்த தலைவர்களில் சிலர் ஈழப் போராளிகளைத் தவறாக வழி நடத்தினார்கள். மற்ற தலைவர்கள் தங்களுடைய அரசியல் ஆதாயத்தைக் கருத்தில் கொண்டு இன்றைக்கு ஒன்று நாளைக்கு ஒன்று என்று வேடிக்கை காட்டினார்கள்.

தவறான வழியில் போன தம்பியைத் தண்டித்து திருத்தியிருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். கோரிக்கையும் சரியில்லை. வழிமுறையும் சரியில்லை. ஆண்ட பரம்பரை இன்னொருமுறை ஆள நினைப்பது தவறா..? என்றொரு அபத்தமான கோஷம்… ஆங்கிலேயன் நம்மை ஆண்டவன்தான். இன்னொரு தடவை ஆள விடலாமா..? அதுமட்டுமல்லாமல், நீ யாராக இருந்தாய் என்பதை வைத்து அல்ல…யாராக இருக்கிறாய்… யாராக இருக்க வேண்டும்… என்பதை வைத்துத்தான் மற்றவர்கள் உன்னை மதிப்பார்கள் என்று போராளிகளுக்குப் புரிய வைத்திருக்க வேண்டும். அதைவிட்டுவிட்டு வாய்ச்சவடாலில் தேர்ந்த தமிழ் தலைவர்கள் ஈழப் போரளிகளை பகடைக்காயாக வைத்து கொடிய சூதாட்டத்தை ஆடியுள்ளனர்.

ஒரு விஷயத்தை நீங்கள் மனதில் வைத்துக் கொள்ளவேண்டும்… இந்தியாவில் தனிநாடு கேட்டு ஆர்ப்பாட்டம் செய்தவர்கள் அந்த கோஷங்களை அழகாக ஆழக் குழி தோண்டி அடக்கம் செய்துவிட்டார்கள். ஆனால், இலங்கையில் அதைத் தூண்டிவிட்டு வந்துள்ளனர். இலங்கையில் போர் தொடர்ந்து நடந்தால் தமிழகம் ஸ்தம்பிக்கும்… ரத்த ஆறு ஓடும்… ஆயுதத்தை ஏந்தி போர் களத்துக்குள் பாய்வேன் என்றெல்லாம் வீரவசனங்கள் பேசியவர்களின் தலையில் இருந்து ஒரு ரோமம் கூட உதிரவில்லை என்பதை யாரும் மறந்துவிட வேண்டாம். எனவே, இந்தப் பிரச்னையில் முக்கியமான முதல் காரணம் புலிகள். இரண்டாவது காரணம் தமிழகத் தலைவர்கள்தான். இந்தியா வெறும் ஒரு நடுவர்தான். அதிலும் பாதிக்கு மேல் விலகிக் கொண்ட, விலக நிர்பந்திக்கப்பட்ட அப்பாவி நடுவர். நீங்கள் வேண்டுமானால், என்னை உயிருடனே தீ வைத்துக் கொல்லலாம். ஆனால், உண்மையை அப்படிக் கொல்ல முடியாது.
(தொடரும்)

No comments:

Post a Comment