இருட்டில் இருந்து வெளிச்சத்தை நோக்கி...

Tuesday, August 24, 2010

புத்தம் சரணம் கச்சாமி - 8

இந்திய உள் துறை அமைச்சர் : என்ன செய்வது… ஆற்றில் எவ்வளவோ வெள்ளம் பாய்ந்துவிட்டது. இப்போது இந்தியா அப்படி ஒரு முயற்சியை முன் வைத்திருந்தால், சரி… நல்லது, தீவிரவாதிகளை விட்டுவிட்டு அப்பாவிகளை மட்டும் அழைத்து வந்துகொள்ளுங்கள் என்று இலங்கை அரசு சொல்லியிருக்கும். அது எப்படி சாத்தியம்? அது மட்டுமல்லாமல் அந்த முயற்சிக்கு புலிகளும் எதிர்ப்புத் தெரிவித்திருப்பார்கள். ஏனென்றால், மக்களைக் கவசமாக வைத்துக் கொண்டுதான் அவர்கள் பதுங்கி இருந்தார்கள். மக்கள் போய்விட்டால் ராணுவம் புலிகளை எளிதில் துவம்சம் செய்துவிட்டிருக்கும். அதனால் இந்த முறை எதுவும் செய்ய முடியாமல் போய்விட்டது.

ஆயுதப் போராட்டம் வளர்வதற்கு முன்பாகவே இந்தியா பல சமாதான முயற்சிகளை மேற்கொண்டுதான் வந்தது. கச்சத்தீவை விட்டுக் கொடுத்து இலங்கை அரசுடன் நல்லுறவை வளர்த்துக் கொண்டது. போராளிகள் இயக்கத்துக்கு பயிற்சி கொடுத்து அவர்களிடமும் நன் மதிப்பைப் பெற விரும்பியது. இலங்கையில் பிரச்னை பெரிதானால் இரு தரப்புமே நாம் சொல்வதைக் கேட்டு நடக்க வேண்டும் என்று இந்தியா விரும்பியது. ஆனால், என்றைக்கு அண்டை நாட்டு ஆதரவையோ, சொந்த நாட்டு மக்களின் உயிரையோ மதிக்காமல் ஆயுதங்களை நம்பி களத்தில் இறங்கினார்களோ அன்றே அழிவின் விதைகள் ஆழமாக ஊன்றப்பட்டுவிட்டன. இந்தியாவும் சூடுபட்ட பூனையாகத் தன் வாலை ஒடுக்கிக் கொண்டுவிட்டது.

இரு தரப்பினருமே ஆயுதங்களைக் கீழே போட வேண்டும். போர் நிறுத்தம் வரவேண்டும் என்றுதான் ஆரம்பம் முதலே இந்தியா சொல்லிவந்தது. யாரும் அதைக் கேட்கவில்லை. இந்தியா என்னதான் செய்ய முடியும். சிங்கள அரசால் மட்டுமல்லாமல், விடுதலைப் புலிகளாலும் பெரும் இழப்பைச் சந்தித்துவந்த ஈழத் தமிழர்களைப் பார்த்த போது மிகவும் வேதனையாகத்தான் இருந்தது.

அனந்தன் : கடைசி கட்ட போரில் இவ்வளவு வன்முறை தலை விரித்து ஆடியபோது நீங்கள் எதுவுமே செய்யாமல் இருந்தது பெரிய தப்பு இல்லையா..?

இந்திய உள் துறை அமைச்சர் : கடைசி நேரப் போர் எதனால் இவ்வளவு முக்கியத்துவம் பெற்றது? ஊடகங்கள் எப்படி இதை ஊதிப் பெரிதாக்கின என்பதையெல்லாம் எத்தனை நாள்தான் மறைத்துவைக்க முடியும்? பிரபாகரன் என்ற ஒரு தீவிரவாதியை சிங்கள ராணுவம் சுற்றி வளைத்ததும் அவர்களுடைய சர்வதேச ஊடகச் செல்வாக்கை வைத்து, உலகமே இடிந்து விழுவதுபோல் மாயத் தோற்றம் உருவாக்கப்பட்டது. சிங்கள ராணுவம் அப்பாவிகளைக் கொன்று குவிப்பதாக தமிழகப் பத்திரிகைகளில், இணைய தளங்களில் பெரும் பீதி கிளப்பப்பட்டது. இப்படிச் செய்தால் சர்வதேச சமூகம் தலையிட்டு சிங்கள ராணுவத்தைப் பின்வாங்க வைக்கும்; பிரபாகரன் தப்பிவிடலாம் என்று ஒரு தப்புக் கணக்குப் போடப்பட்டது. ஆனால், அது பொய் என்பது தெரிந்ததால் சர்வதேச சமூகம் மவுனம் சாதித்தது. இந்தியாவும் மவுனம் சாதித்தது. ஏன், தமிழகத்தின் முக்கிய தலைவர்களும் உண்மை என்ன என்பது தெரிந்ததால் நாடாளுமன்றத் தேர்தல் தீவிரம் பெற்ற நிலையிலும் அமைதியாக இருந்தனர்.

சிங்கள ராணுவம் போர் விலக்கு பெற்ற பகுதிகளில் குண்டு மழை பொழிந்ததாக பொய்யான பரப்புரைகள் ஈழ ஆதரவு ஊடகங்களால் இடைவிடாது மேற்கொள்ளப்பட்டது. ஆனால், உண்மையில் என்ன நடந்தது... பஞ்ச பாண்டவர்கள் போன்ற ஐந்து மருத்துவர்கள் உண்மையை உலகுக்கு எடுத்துரைத்துவிட்டார்கள் அல்லவா..? அப்பாவி மக்களைக் கேடயமாக வைத்துக்கொண்டு தப்பிக்கப் பார்க்கும் கயமைதான் நடந்தது. சர்வதேச சமூகம் கருணையுடன் அனுப்பிய நிவாரணப் பொருட்களைக்கூடப் புலிகள் தட்டிப் பறித்து பதுக்கி வைத்திருக்கிறார்கள். இலங்கை அரசு உரிய நிவாரணப் பொருளை தரவில்லை என்று பழி வேறு.

அனந்தன் : போராளிகளைக் கொன்றதில் வேண்டுமானால் நியாயம் இருக்கலாம். ஆனால், அப்பாவிகள் மேல் குண்டு வீசி அவர்கள் சிகிச்சைக்கு வந்த மருத்துவமனையிலும் குண்டு வீசிக் கொன்றதெல்லாம் மிகவும் கொடூரம் அல்லவா..?

இ.உ.அ : போராட்டக் குழுக்களின் தந்திரமே அதுதான். நேருக்கு நேர் நின்று சண்டை போடமாட்டார்கள். வழிபாட்டுத்தலங்கள், மருத்துவமனை என்று ஒளிந்து கொண்டு தாக்குதல் நடத்துவார்கள். அவர்களைக் கொல்ல வேண்டுமானால் அவர்கள் இருக்கும் இடத்தில்தான் குண்டு வீசியாக வேண்டும். விமானங்கள் தங்களை நோக்கி ஏவுகணை எறியப்படும் இடங்களைக் குறிவைத்துத் தாக்கும். அதற்கு கோவிலும் தெரியாது, மருத்துவமனையும் தெரியாது. மருத்துவமனையில் ஆயுதங்களைக் குவிக்காதீர்கள் என்று சொல்லி எத்தனை செஞ்சிலுவை சங்க மருத்துவர்கள் தங்கள் முகாம்களைக் காலி செய்துவிட்டுப் போயிருக்கிறார்கள் தெரியுமா..?

அவ்வளவு ஏன்… இத்தனை நாள் பயந்து கிடந்த மக்கள், விடுதலைப் புலிகளால் தங்களை இனியும் அடக்கி வைக்க முடியாது என்பது தெரிந்ததும் என்ன செய்தார்கள்..? கிணற்றுக்குள் விழுந்து கிடப்பவர் வீசப்படும் கயிறைப் பிடித்துக் கொண்டு சரசரவென மேலேறுவதுபோல் சிங்கள ராணுவத்திடம் அடைக்கலம் தேடி ஓடினார்கள். பாதூகாப்புக் கோட்டைச் சுவரின் செங்கல்கள் ஒவ்வொன்றாக உதிர ஆரம்பித்ததும் எந்தவொரு போராளி இயக்கமும் கனவில்கூட நினைத்துப் பார்க்க முடியாத வகையில் தன் மக்களைத் தானே கொல்லும் அநியாயம் அரங்கேறியது. நினைத்துப் பாருங்கள் மணல் மூட்டைகளுக்குப் பின்னால் பதுங்கியிருந்து தாக்கிய போராளிகள் அதற்கு பதிலாக மக்களைக் கேடயமாகப் பிடித்தார்கள். அதுவும் எந்த மக்களுக்காக இயக்கத்தை ஆரம்பித்தார்களோ அந்த மக்களையே கேடயமாக்கிய கொடூரம்.

ராணுவம் பிடியை இறுக்க ஆரம்பித்ததும் பயந்து பின் வாங்கிய புலிகள் போகும் இடத்துக்கெல்லாம் மக்களையும் வலுக்கட்டாயமாக துப்பாக்கி முனையில் மிரட்டி கொண்டு சென்றிருக்கிறார்கள். இல்லை, நாங்கள் உங்களுடன் வரவில்லை. குழிகளில் பதுங்கிக் கொள்கிறோம் என்று அப்பாவி மக்கள் சொன்னபோது அப்படியா… எங்களை விட்டுவிட்டு ராணுவத்திடம் சரணடையப் போகிறீர்களா..? என்று இழித்துப் பேசிவிட்டு பதுங்குகுழியைச் சுற்றி கண்ணி வெடிகளைப் பதித்துவிட்டுப் போயிருக்கிறார்கள். தமிழ் பெண்களே… உங்கள் கற்பை சிங்களவனுக்குக் காணிக்கையாக்கப் போகிறீர்களா..? என்று உணர்ச்சிபூர்வமாக பிளாக் மெயில் செய்து வலுக்கட்டாயமாக தங்களோடு இழுத்துச் சென்றிருக்கிறார்கள். இவ்வளவு ஏன்… தப்பிக்க முயன்ற பலரை நேருக்கு நேராக சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். அதிகார சதுரங்கத்தில் ராஜாவுக்காக சிப்பாய்கள் பலியிடப்படுவது ஒன்றும் வியப்பில்லைதான். விடுதலைப் போராட்டம் ஒன்றில் இப்படியான நிகழ்வு இதுவரை சரித்திரத்தில் இடம்பெற்றதேயில்லை. ஆனால், மக்களைக் கேடயமாகப் பிடிப்பது என்பது விடுதலைப் புலிகளுக்கு ஒன்றும் புதிதல்ல. அவர்கள் போரை ஆரம்பித்த அன்றிலிருந்தே அதைத்தான் செய்து வருகிறார்கள். கடைசி காலத்தில் அது கொஞ்சம் துலக்கமாகத் தெரிந்திருக்கிறது. அவ்வளவுதான்.

உண்மையில் இந்தப் போர் தமிழ் மக்களின் சம்மதத்துடன் நடந்த ஒன்றே அல்ல. ஆயுதம் ஏந்திய ஒரு சிலரால் முன்னெடுக்கப்பட்ட ஒன்று அவ்வளவுதான். இன்னும் சரியாகச் சொல்வதானால், ஒரு சர்வதேசக் கடத்தல்காரன், விடுதலைப் போராளி என்ற போர்வையில் ஊரை ஏமாற்றி உலையில் போட்டிருக்கிறார். இதுதான் உண்மை. அதனால்தான் தனி நாடு கேட்ட வடக்கு - கிழக்கு பகுதியில் எவ்வளவு தமிழர்கள் இருந்தார்களோ அதே அளவுக்கு தமிழர்கள், சிங்களர்கள் பெரும்பான்மையாக இருக்கும் தெற்குப் பகுதியில் இதே போர்க் காலகட்டம் முழுவதிலும் சந்தோஷமாக வாழ்ந்து வந்திருக்கிறார்கள். பாதிக்கு மேற்பட்டவர்கள் ஆளை விட்டால் போதும் என்று அயல் நாடுகளுக்குத் தப்பி ஓடிவிட்டார்கள். வடக்கு - கிழக்கு பகுதியில் இருப்பவர்கள் கூட தாமாக விரும்பி அங்கு இருக்கவில்லை. வேறு வழியில்லாத காரணத்தாலும் பயத்தினாலும்தான் அங்கு இருந்து வந்திருக்கிறார்கள்.

ஆனால், அதையெல்லாம் மறைக்கத்தான் இந்தியா மீது அவதூறு அம்புகள் அடுக்கடுக்காக எய்யப்படுகின்றன.

அனந்தன் : இன்னொரு நாட்டின் இறையாண்மையை மதிப்பதால் தலையிட முடியவில்லை என்று சொன்ன நீங்கள் பங்களாதேஷ் விஷயத்தில் என்ன செய்தீர்கள்...? உங்களால்தானே அது தனி நாடானது. அப்படி நீங்கள் ஈழத்தைப் பெற்றுத் தருவீர்கள் என்ற நம்பிக்கையில்தானே இந்தப் போரே ஆரம்பிக்கப்பட்டது.

இந்திய உள் துறை அமைச்சர் : ரொம்பத் தப்பான கேள்வி இது. கிழக்கு பாகிஸ்தானுக்கும் மேற்கு பாகிஸ்தானுக்கும் இடையில் நில ரீதியிலான தொடர்ச்சி என்று எதுவுமே கிடையாது. ஒரு தேசம் என்று சொல்ல வேண்டுமானால் அதன் முக்கியமான அம்சம் நில ரீதியிலான தொடர்ச்சிதான். இரண்டுக்கும் இடையில் இன்னொரு நாடு வரவே கூடாது. அப்படி வந்தால் அது காலனி ஆட்சி போன்ற ஒன்றுதான். அதுமட்டுமல்லாமல் ஜின்னா ஒரு தேசத்துக்கு மதம் அடைப்படையாக இருந்தால் போதும் என்று சொன்னார். கிழக்கு பாகிஸ்தான் மக்கள் தங்கள் மொழிக்கும் தங்கள் கலாசாரத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்தனர். மதம் இரண்டாம் பட்சம் என்றனர். எனவே, தனியாகப் பிரியவேண்டும் என்று போராடினர். இந்தியா அவர்கள் கோரிக்கையில் இருந்த நியாயத்தைக் கவனத்தில் கொண்டு செயலாற்றியது. ஈழத்தின் கதை அப்படிபட்டதல்லவே. எதை எதனோடு ஒப்பிடுவது என்றொரு விவஸ்தை வேண்டாமா..? தேசம் என்பது கடலை மிட்டாய் அல்ல… கேட்பவர்களுக்கெல்லாம் காக்காய் கடி கடித்துக் கொடுப்பதற்கு.

அனந்தன் : கூட்டாட்சி முறையில் சுய நிர்ணய உரிமை கேட்டு அமைதியான முறையில் போராடியும் அது கிடைக்காததால்தானே தனி நாடு கேட்க வேண்டி வந்தது.

இந்திய உள் துறை அமைச்சர் : என்னவொரு விநோதமான பதில் இது. 50 ரூபாய் கேட்டு அமைதியாகப் போராடினேன். அது கிடைக்கவில்லை. எனவே 500 ரூபாய் கேட்டு அதிரடியாகப் போராடினேன் என்று சொல்வதுபோல் இருக்கிறது. 50 ரூபாய் கொடுக்கவே யோசித்துக் கொண்டிருந்தவரிடம் 500 ரூபாயை அதட்டிக் கேட்டால் எப்படிக் கொடுப்பார்..? இலங்கை அதிபர் ஒரு விஷயத்தை அழகாகச் சொன்னார்… இது சிறுபான்மையினர் பெரும்பான்மையினர் என்ற பிரச்னையே இல்லை. தேசத்தை நேசிப்பவர்கள், சீர் குலைக்க நினைப்பவர்களுக்கு இடையிலான பிரச்னை.

அதுமட்டுமில்லாமல் இலங்கைல மக்கள் படும் துன்பங்களைப் பார்த்து பொறுக்க முடியாமல், ஏதாவது செய்தாக வேண்டும் என்று ஆத்மார்த்தமான ஆர்வம் காட்டிய ராஜீவ்ஜிக்குக் கிடைத்த பரிசு என்ன என்பது உங்கள் எல்லாருக்குமே நன்கு தெரியும். 1987-ல் இலங்கை அரசு யாழ்ப்பாணத்தை முற்றுகையிட்டிருந்தது. அந்த மக்களுக்கு உணவும் மருந்துப் பொருட்களும் மண்ணெணெயும், ஆடைகளும் ஏற்றிக் கொண்டு 19 இந்திய கப்பல்கள் இலங்கைக்குப் போனது. அதை இலங்கை அரசு தன் எல்லைக்குள் அனுமதிக்கவில்லை. உடனே, அங்கு தவித்த மக்களுக்கு எப்படியும் உதவ வேண்டும் என்ற எண்ணத்தில் போர் விமானங்களின் துணையோடு உணவுப் பொட்டலங்களை சுமந்து சென்று பூமாலை ஆப்பரேஷன் நடத்தப்பட்டது. வெறும் மனிதாபிமான அடிப்படையில் நடத்தப்பட்ட செயல் அது. அதோடு போராளிகளுக்கு ஆதரவாக அண்டை நாட்டைப் பகைத்துக்கொண்டு செய்த பெரிய காரியம். அதற்கு என்ன கைமாறு கிடைத்தது..?

இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்று இரு தரப்புக்கும் இசைவான ஒரு நியாயமான ஒப்பந்தத்தை இந்தியா செய்து கொடுத்தது. இந்தியாவில் மாநில அரசுக்கு சில அதிகாரங்கள்; மத்திய அரசுக்கு சில அதிகாரங்கள் இருப்பதுபோல் இலங்கையில் ஒரு ஏற்பாடு செய்ய ஆத்மார்த்தமாக ராஜீவ் முயற்சிகள் எடுத்தார். தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதி தனி மாநிலமாக அறிவிக்கப்படும். இரண்டு தரப்பினரும் ஆயுதத்தைக் கீழே போட்டுவிட வேண்டும் என்று நடைமுறை சாத்தியமான ஒரு திட்டத்தை முன்வைத்தார். நோய்வாய்ப்பட்ட குழந்தைக்கு ஊசி கூட இல்லை… தேனில் குழைத்து லேசான கசப்பு மருந்தைக் கொடுத்தார். ஆனால், கோபம் கொண்ட குழந்தை, மருத்துவரையே கொன்ற கொடூரம்தான் நடந்தது. உலகில் எங்காவது இதைக் கேள்விப்பட்டதுண்டா நீங்கள். எதிரியைவிட்டுவிட்டு மத்யஸ்தம் செய்ய வந்தவரைக் கொன்ற சோகம் எங்காவது நடந்ததுண்டா..?

இந்தியா மீது தொடுக்கப்பட்ட போர் என்றே அதைச் சொல்லலாம். உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் முன்னாள் பிரதமர் மட்டுமல்ல... அடுத்த பிரதமராக ஆகவிருந்த ராஜீவ் காந்தியை மிகவும் மோசமான முறையில் படுகொலை செய்தார்கள். இருந்தும் தியாகத்தின் திருவுருவான அன்னை சோனியா காந்தி தன் கணவனைக் கொன்ற பாவிகளை மன்னித்துதான் வந்திருக்கிறார். ஒரு குடும்பத்தலைவியாக, ஒரு தேசத்தின் அரசியல் தலைவியாக அவர் கருணையே உருவாகத் திகழ்கிறார். இலங்கையில் அமைதி திரும்ப வேண்டும் என்பதில் உலகில் இருக்கும் எந்த பிரிவைச் சேர்ந்த ஒருவரைவிடவும் அதிக அக்கறை கொண்டவர்தான் அன்னை சோனியா... இலங்கை பிரச்னை என்பது அவரைப் பொறுத்தவரையில் ஏதோ அண்டை நாட்டுக் கலவரம் அல்ல... அவரை நேரடியாக மிக மோசமாக பாதித்த நிகழ்வும் கூட. ஆனால், அவராலும் ஒரு குறிப்பிட்ட அளவுக்குத்தான் இந்த விஷயத்தில் தலையிட முடியும். அதை ஒருவர் நன்கு புரிந்து கொள்ள வேண்டும்.
(தொடரும்)

No comments:

Post a Comment