எம்.டி. அசட்டுச் சிரிப்பு சிரித்தபடியே : எங்கே?
அனந்தன் : நீங்கதான சொன்னீங்க, உங்களைக் கடத்தினாத்தான் நிகழ்ச்சியை ஒளிபரப்ப முடியும்னு.
அதைக் கேட்டதும் எம்.டி. விழுந்து விழுந்து சிரிக்கிறார். எஸ்.கே-யும் கொஞ்சம் கலவரமான முகத்துடன் சிரிக்கிறார். அனந்தனும் சிரிக்கவே, மற்ற மூவரும் சிரிக்கிறார்கள்.
எம்.டி. : போராளிகள்னா ஏதோ ரொம்பவும் சிடு சிடுன்னு இருப்பாங்கன்னு நினைச்சேன். உங்களுக்கும் நகைச்சுவை உணர்ச்சி இருக்கத்தான் செய்யுது இல்லையா..? (என்றபடியே தன் அருகில் இருப்பவர்களின் தோளில் கையைப் போட்டபடி அவர்களை வெளியே அனுப்ப முயற்சி செய்கிறார். யதேச்சையாக அவர் திரும்பிப் பார்க்கும்போது அனந்தன் கையில் ஒரு ரிவால்வருடன் நின்று கொண்டிருக்கிறார். எம்.டி. நிஜமாகவே அதிர்கிறார்.)
அனந்தன் (சாவதானமாக ரிவால்வரின் லாக்கை ரிலீஸ் செய்து எஸ்.கே.யிடம் காட்டி) : எத்தனை புல்லட்கள் இருக்கு. எனக்கு கொஞ்சம் கண்ணு சரியா தெரியலை.
எஸ்கே. (நடுங்கியபடியே) : ஆறு
அனந்தன் ரிவால்வரை சரியாகப் பொருத்தி எம்.டிக்கு வெகு அருகில் குண்டு பாய்ந்து செல்வதுபோல் சுடுகிறார். எம்.டி. அதிர்ந்து தலையைக் குனிந்துகொள்கிறார். ரகசிய கேமராவின் மெயின் ஹார்ட் டிஸ்க் தூள் தூளாகிறது.
அனந்தன் (எஸ்.கே. பக்கம் திரும்பி) : இப்ப எத்தனை குண்டு..?
எஸ்.கே. : ஐந்து.
அனந்தன். நீங்க எத்தனை பேர்..?
எஸ்.கே. : ரெண்டு பேர்.
அனந்தன் : ரெண்டு பேருக்கு எத்தனை குண்டு தேவைப்படும்?
எஸ்.கே. தயங்குகிறார். அனந்தன் துப்பாக்கியை அவரது நெஞ்சுக்கு நேராகக் குறிவைக்கிறார்.
எஸ்.கே (பதறியபடியே) : ரெண்டு போறும்.
அனந்தன் : ஆனா எங்க கிட்ட 24 குண்டுகள் இருக்கு. மன்னிக்கணும் 23 குண்டுகள் இருக்கு.
மற்ற மூவரும் தங்கள் துப்பாக்கிகளை வெளியே எடுக்கிறார்கள். எம்.டி.யின் இரண்டு காதுக்கருகில் இரண்டு பேர் துப்பாக்கியை வைத்து அழுத்துகிறார்கள்.
எம்.டி. : நீங்க செய்யறது நல்லா இல்லை. ஃபாதர் சொல்றதைக் கேட்டு நடக்ககூடியவங்கறதுனாலதான் உங்களை உள்ளயே வர விட்டோம்.
அனந்தன் : நாங்க ஃபாதர் சொல்றதையும் செய்வோம். அவர் சொல்லாததையும் செய்வோம்.
இரண்டு பேரும் எம்.டி.யை துப்பாக்கி முனையில் தள்ளிக் கொண்டு போகிறார்கள். கொஞ்சம் மெதுவாகப் பதுங்கும் எஸ்.கே. சட்டென்று பாய்ந்து துப்பாக்கியைத் தட்டிவிடுகிறார். அந்த நேரத்தில் அனந்தன் சட்டென்று துப்பாக்கியால் எஸ்.கேயின் கன்னத்தில் ஓங்கி அடிக்கிறார். அடிபட்ட இடம் கன்றிப் போய் வீங்கிவிடுகிறது. வலி தாங்க முடியாமல் கீழே சுருண்டு விழுகிறார். செல்வா, துப்பாக்கியுடன் முன்னால் போய் யாரும் வருகிறார்களா என்று பார்த்தபடி செல்கிறார். குட்டியும் அழகனும் எம்.டி.யை துப்பாக்கி முனையில் அழைத்துச் செல்கிறார்கள். அனந்தன், பின்னால் யாரும் வருகிறார்களா என்று பார்த்தபடி வருகிறார். எங்கெல்லாம் ரகசிய கேமராக்கள் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் சுட்டு வீழ்த்தியபடியே முன்னேறுகிறார்கள். அலுவலகத்தில் எதிரில் வருபவர்கள் அலறி அடித்தபடி ஒதுங்குகிறார்கள். எம்.டி.யைக் காப்பற்ற பாய்ந்து முன்னால் வருபவர்கள் முழங்காலுக்குக் கீழ் சுடப்பட்டு ரத்த வெள்ளத்தில் மிதக்கிறார்கள்.
நேராக லிஃப்டுக்கு எம்.டி.யை அழைத்துச் செல்கிறார்கள். லிஃப்ட் அடுத்த தளத்தில் நிற்கிறது. அங்கு நிற்பவர்கள் சாவதானமாக லிஃப்டை நெருங்குகிறார்கள். லிஃப்ட் கதவு திறக்கிறது. உள்ளே எம்.டி. துப்பாக்கி முனையில் நிற்பதைப் பார்த்ததும் அதிர்ந்து பின் வாங்குகிறார்கள். லிஃப்ட் கதவு மூடிக் கொள்கிறது. தரைத்தளத்தை அடைந்ததும் ஒரு சிவப்பு நிற சுமோ சீறிக் கொண்டு வந்து நிற்கிறது. செல்வா டிரைவர் ஸீட்டில் பாய்ந்து ஏறுகிறார். அனந்தன் முன் இருக்கையில் அமர்ந்து கொள்கிறார். குட்டியும் அழகனும் எம்.டி.யை தரதரவென வண்டிக்குள் இழுத்துச் செல்கிறார்கள். செக்யூரிட்டிகள் கேட்டை அவசர அவசரமாக மூடுகிறார்கள். கதவைத் திறக்கவில்லையென்றால் எம்.டி.யை கொன்றுவிடுவேன் என்று மிரட்டவே செக்யூரிட்டி கதவை வேகமாக திறந்துவிடுகிறார். சுமோ
புகையைக் கக்கியபடி பாய்ந்து வெளியேறுகிறது.
(தொடரும்)
No comments:
Post a Comment