இருட்டில் இருந்து வெளிச்சத்தை நோக்கி...

Monday, August 16, 2010

புத்தம் சரணம் கச்சாமி - 3

காட்சி : 3

(தூரத்தில் ஒருவர் காவல் துறைக்கு போன் செய்வது கேட்கிறது. எஸ்.கே. வீங்கிய முகத்துடன் கேமரா முன்னால் நின்று கொண்டிருக்கிறார்).

எஸ்.கே. : நாலு பேர் வந்தாங்க…இலங்கைப் பிரச்னை தொடர்பா ஒரு நிகழ்ச்சியை ஒளிபரப்பணும்னு சொன்னாங்க. முடியாதுன்னு சொன்னதும் என்னை அடிச்சுப் போட்டுட்டு எம்.டி.யைக் கடத்திட்டுப் போயிட்டாங்க.

எல்லா தொலைக்கட்சிகளில் ஃபிளாஷ் நியூஸாக முன்னணி தொலைக்காட்சியின் அதிபர் கடத்தப்பட்ட செய்தி ஓடத்தொடங்குகிறது.

தொலைக்காட்சி நிலைய வாசலில் குழுமியிருக்கும் காவல் துறையினரை தொலைக்காட்சி கேமராக்கள் மொய்க்கின்றன.

தப்பி ஓடிய சுமோவைத் துரத்தும் வேட்டை ஆரம்பிக்கிறது.

காட்சி : 4

காவல்துறை அதிகாரி : யோவ் சிவப்பு சுமோய்யா… நம்பர் டி.என்.2367. வண்டியைப் பார்த்ததும் ஃபாலோ பண்ணு. வெப்பன்ஸ் வெச்சிருக்காங்க. தனியா கிட்ட போயிடாத. ஆனா, கண்ணுல இருந்து தப்பவிடாத.

டிராஃபிக் கான்ஸ்டபிள் : சார்… என்ன நம்பர் சொன்னீங்க.

அதிகாரி மீண்டும் சொல்கிறார்.

அதிகாரி : டி.என்.2367.

சிவப்பு சுமோ தூரத்தில் வருகிறது. அதன் நம்பர் தானாகவே2367 என்பதில் இருந்து 3478 என்று மாறுகிறது.

டிராஃபிக் கான்ஸ்டபிள் : சுமோவின் நம்பரை உற்றுப் பார்க்கிறார். தான் தேடும் வண்டி அது இல்லை என்றதும் நிறுத்தாமல் போக விடுகிறார். (அதிகாரியிடம்) ஒரு சிவப்பு சுமோ போகுது சார். ஆனா நீங்க சொன்ன நம்பர் இல்லை.

அதிகாரி : யோவ் அந்த வண்டியை நிறுத்துய்யா.. நம்பர் பிளேட்டை மாத்தறதா கஷ்டம். அடுத்த பீட்ல வண்டிய நிறுத்தச் சொல்லுய்யா…

பதறியபடியே டிராஃபிக் கான்ஸ்டபிள் அடுத்த பீட்டுக்கு தகவல் கொடுக்கிறார். சிவப்பு சுமோவை ஓரங்கட்டுகிறார்கள். கான்ஸ்டபிள்கள் உள்ளே எட்டிப் பார்க்கிறார்கள். அனந்தன், குட்டி, செல்வா, அழகன் மட்டுமே வண்டியில் இருக்கிறார்கள். சுற்றிச் சுற்றி வந்து பார்க்கிறார் கான்ஸ்டபிள்.

கான்ஸ்டபிள் (வாக்கி டாக்கியில்): வண்டில நாலு பேர் இருக்காங்க சார்.

அதிகாரி : நாலா… ஐஞ்சு பேர் இருக்காங்களான்னு பாருய்யா… கோட் சூட் போட்டுட்டு யாராவது இருக்காங்களா பாரு.

கான்ஸ்டபிள் : நாலு பேர்தா இருக்காங்க. கோட் போட்ட யாருமே இல்லை சார்.

அதிகாரி : சரி... அந்த வண்டியைப் போகச் சொல்லு.

கான்ஸ்டபிள் (வண்டியை மீண்டும் ஒருமுறை நன்கு சோதித்துவிட்டு டிரைவரிடம் நெருங்கி): நீங்க போகலாம் சார்.

சிறிது தூரம் போனதும் காலுக்குக் கீழே ஒரு பட்டனை குட்டி அழுத்துகிறான். படுக்க வைக்கப்பட்ட லிஃப்ட் கதவு திறப்பதுபோல் திறக்கிறது. அதனுள் எம்.டி. கைகள் கட்டப்பட்டு வாய் பொத்தப்பட்டு படுக்கவைக்கப்பட்டிருக்கிறார்.

கடற்கரை சாலையில் சுமோ சீறி பாய்கிறது.

சிறிது தூரம் வந்ததும் நெடுஞ்சாலையில் சுமோ தயங்கியபடி ஒரு இடத்தில் நிற்கிறது. செல்வா ரியர் வியூ மிரரில் பார்க்கிறார். தூரத்தில் ஒரு கார் வருவது தெரிகிறது. சுமோவை ஸ்டார்ட் செய்து மெதுவாக போகிறார். நெடுஞ்சாலையின் ஓரத்தில் முள் செடிகளால் ஆன வேலி ஒன்று கதவுபோல் திறந்து கொள்கிறது. சுமோ உள்ளே நுழைந்ததும் மீண்டும் முள் செடிகள் மூடிக் கொள்கிறது. சுமோ சவுக்குத் தோப்பில் சிறிது தூரம் சென்றதும் தரையில் இருந்து பெரிய கதவு செங்குத்தாகத் திறந்து கொள்கிறது. சுமோ கீழே இருக்கும் சுரங்கப் பாதையில் வழுக்கிக் கொண்டு செல்கிறது. அது சென்றதும் கதவு தரையோடு தரையாக மூடிக் கொள்கிறது. இரண்டுபேர் சருகுகளையும் மண்ணையும் போட்டு தடம் தெரியாமல் மூடுகிறார்கள்.

காட்சி : 5

எஸ்.கே. காயம்பட்ட இடத்தை பஞ்சால் ஒற்றிக் கொண்டபடியே மாடியில் இருந்து பரபரப்பான சாலையைப் பார்த்துக் கொண்டிருக்கிறார். காவல் துறை உயர் அதிகாரி தேநீர் அருந்தியபடியே அவருக்கு அருகில் நின்று கொண்டிருக்கிறார். எஸ்.கே. காவல்துறை அதிகாரியைத் திரும்பிப் பார்த்தபடியே பேச ஆரம்பிக்கிறார்.

எஸ்.கே : நேத்து ஒரு ஃபைலைக் கொடுத்து அதுல இருக்கற ப்ரபோசலைப் படிச்சுப் பாக்கச் சொன்னாரு. இலங்கை பிரச்னை பற்றி ஒரு டாக் ஷோ மாதிரி ஒண்ணு நடத்தணும்னு அதுல சொல்லியிருந்தாங்க.

அதிகாரி : அந்த ஃபைல் எங்க இருக்கு.

எஸ்.கே. : வந்தவங்க அதைக் கையோட எடுத்துட்டுப் போயிட்டாங்க.

அதிகாரி : அதோட காப்பி எதாவது இருக்கா..?

எஸ்.கே. : ப்ராஜெக்ட் ஓ.கே. ஆனாத்தான் காப்பி எடுத்து வெச்சுப்போம். இது அந்த ஸ்டேஜுக்கு வரலைங்கறதால எடுக்கலை.

அதிகாரி : இதுக்கு முன்னால அவங்களை நீங்க பாத்திருக்கீங்களா..?

எஸ்.கே : இல்லை. நான் பார்த்ததில்லை. ஒருவேளை எம்.டி.க்குத் தெரிஞ்சிருக்கலாம்.

அதிகாரி : எதைவெச்சு அப்படிச் சொல்றீங்க.

எஸ்.கே. : பொதுவா யார், எந்தவொரு ப்ராஜெக்ட் சப்மிட் பண்ணினாலும் ப்ராசஸ் பண்ணி ஒரு முடிவு சொல்ல குறைஞ்சது ரெண்டு வாரமாவது ஆகும். அதுவும்போக நான் பார்த்ததுக்கு அப்பறம்தான் எம்.டிக்கே போகும். ஆனா இது நேரா அவர்கிட்ட போயிருக்கு. அதனால அவங்களை அவருக்கு முன்னாலயே தெரிஞ்சிருக்கணும். அல்லது தெரிஞ்சவங்க மூலமா வந்திருக்கணும்.

அதிகாரி : யார் மூலமா வந்திருப்பாங்கன்னு ஏதாவது ஐடியா இருக்கா..?

எஸ்.கே. : இலங்கை விஷயத்துல அக்கறை கொண்ட நிறையபேரை அவருக்குத் தெரியும். யார் மூலம் வந்திருப்பாங்கன்னு சொல்ல முடியலை.

அதிகாரி : அவங்க கொடுத்த ஃபைல்ல அவங்களைப் பத்தி கூடுதல் தகவல் ஏதாவது இருந்ததா..?

எஸ்.கே. : இல்லை. அது வெறும் பிளைன் பேப்பர்லதான் இருந்தது. லெட்டர் ஹெட் மாதிரியோ வேற எந்த அட்ரஸோ, போன் நம்பரோ எதுவுமே இல்லை.

அதிகாரி : நல்லா யோசிச்சுப் பாருங்க.

எஸ்.கே. : இதுல சந்தேகத்துக்கே இடமில்லை. ஏன்னா, என்கிட்ட ஒரு ஃபைல் வந்ததும் நான் மொதல்ல செய்யறது, அதனோட அட்ரஸ், போன் நம்பரை என் டேட்டா பேஸ்ல ஸ்டோர் பண்றதுதான். இதுல அப்படி எதுவுமே இல்லை. விசிட்டிங் கார்டு கூட இல்லை.

அதிகாரி : ரகசிய கேமராக்கள் எல்லாத்தையும் குறிபார்த்து சுட்டுட்டுப் போயிருக்காங்க. உங்க ஆபீஸ் பத்தி நல்ல தெரிஞ்ச யாரோ ஒருத்தரோட உதவி இல்லாம இது நடந்திருக்க வாய்ப்பில்லை. இல்லையா..?

எஸ்.கே. : நிச்சயமா.

(அப்போது அவசரமாக ஒருவர் செல்போனைக் கையில் பிடித்தபடி கதவைத் திறந்து கொண்டு உள்ளே நுழைகிறார்).

வந்தவர் : சார். எம்.டி. ஈஸ் ஆன் லைன்

எஸ்.கேயும் அதிகாரியும் துள்ளி எழுந்திருக்கிறார்கள்.

எஸ்.கே. போனை வாங்கிக் கொள்கிறார். காவல்துறை அதிகாரி அதை அவரிடம் இருந்து வாங்கி ஸ்பீக்கரை ஆன் செய்து கொடுக்கிறார்.

எஸ்.கே. : பாஸ் எங்க இருக்கீங்க?

எம்.டி. : அதெல்லாம் தெரியலை. நான் சொல்றதை கேளு. என்னை எதுக்காகக் கடத்தியிருக்காங்க… அவங்களோட டிமாண்ட் என்ன அப்படிங்கறது பத்தி இன்னும் அரை மணி நேரத்துல ஒரு அனவுன்ஸ்மெண்ட் பண்ணப்போறாங்க. அதை உடனே டெலிகாஸ்ட் பண்ணு.

எஸ்.கே. : உனக்கு ஒண்ணும் ஆபத்தில்லையே…

எம்.டி. கவலையேபடாத. அவங்களோட நோக்கம் அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பறது மட்டும்தான். அது முடிஞ்சதும் நேரா என்னை போலிஸ் ஸ்டேஷன்ல கொண்டு வந்து ஒப்படசிச்சுட்டு தானே சரண்டர் ஆயிடறதா சொல்லியிருக்காங்க. என்னை ரொம்ப நல்லவிதமா நடத்தறாங்க. யாரும் பயப்பட வேண்டாம். வீட்டில உள்ளவங்களுக்குச் சொல்லிப் புரிய வை. இது வெறும் ஒரு பிஸினஸ் டூர் மாதிரித்தான். பத்து நாள்ல நான் ஜம்னு வீட்டுக்கு வந்துடுவேன்னு சொல்லு. போலீஸ் கிட்ட சொல்லிட்டியா..?

எஸ்.கே : ஆமா. டி.எஸ்.பி. சார் கூட இங்கதான் இருக்காங்க.

எம்.டி. : போனை அவர் கிட்டக் கொடு.

எஸ்.கே. செல்போனை டி.எஸ்பி.யிடம் கொடுக்கிறார்.

எஸ்.பி : சொல்லுங்க சார். நீங்க சொன்னதைக் கேட்டுட்டுத்தான் இருந்தேன்.

எம்.டி.: நல்லது. ரெண்டு நாளைக்கு முன்னால ஒரு நிகழ்ச்சியோட ப்ரபோசல் கொண்டுவந்து கொடுத்தாங்க. அது கொஞ்சம் சிக்கலான மேட்டர் அப்படிங்கறதால நாங்க ஒளிபரப்ப முடியாதுன்னு சொல்லிட்டோம். அதை நாங்க நேரடியா ஓ.கே. சொல்லியிருந்தா இந்தப் பிரச்னையே வந்திருக்காது. ஓ.கே. இப்பவும் ஒண்ணும் கெட்டுடலை. ஒரு வாரத்துக்கு அவங்களோட நிகழ்ச்சி ஒளிபரப்பணும்னு விரும்பறாங்க. அது முடிஞ்சதும் என்னை ஒரு கீறல் கூடப் படாம கொண்டு வந்து விட்ருவாங்க. நீங்க கவலையே பட வேண்டாம்.

அதிகாரி : அவங்களை பேசச் சொல்லுங்க

எம்.டி. (எதிர்முனையில் யாருடனோ): உங்களைப் பேசச் சொல்றாங்க.

எதிர்முனையில் : இன்னும் அரை மணி நேரத்துல உலகத்துக்கிட்டயே பேசப் போறோம். அவர் கிட்ட தனியா பேச ஒண்ணும் இல்லை.

எம்.டி. : சார் அப்பறம் பேசறேன்னு சொல்றாங்க.

டக்கென்று இணைப்பு துண்டிக்கப்படுகிறது.

அதிகாரி : ஓ.கே. இந்த செல் என் கிட்டயே இருக்கட்டும். காலை டிரேஸ் பண்ணிட்டுத் தர்றேன்.

காட்சி - 6

அனந்தன் கேமரா முன்னால் வந்து நிற்கிறார்.

கேமரமேன் கவுண்ட் டவுன் சொல்கிறார்.

4…

3…

2…

1…

தம்ஸ் அப் காட்டுகிறார்.

அனந்தன், கேமராவையே வெறித்துப் பார்க்கிறார். கேமராமேன் பேச ஆரம்பிக்கும்படி கையைக் காட்டுகிறார். அனந்தன் அவரை சட்டென்று முறைக்கிறார். கேமரா மேன் பயந்து பின் வாங்குகிறார்.

(பெருமூச்சுவிட்டபடியே) அனந்தன் : இந்த உலகத்துல மரணத்தை விடக் கொடியது மறக்கப்படுவது. காயத்தை விட வலி மிகுந்தது புறக்கணிக்கப்படுவது.

நாங்கள் இறந்து கொண்டிருக்கிறோம். இந்த உலகம் எங்கள் மரணத்தை மறந்து கொண்டிருக்கிறது.

நாங்கள் காயங்களின் வலியில் கதறுகிறோம். எங்கள் கதறல் புறக்கணிக்கப்படுகிறது.

அராஜகவாதியின் கொடூரங்களைவிட நடுநிலையாளர்களின் மவுனமே எங்களைப் பெரிதும் கலங்க வைக்கிறது.

அந்த மவுனத்தை நாங்கள் கலைக்க விரும்புகிறோம்.

உங்கள் வீட்டின் ஒரு மூலையில் ஒரு அப்பாவியை நான்குபேர் சுற்றி நின்று அடித்துக் கொல்கிறார்கள். அவரது அலறல் வீட்டின் அனைத்து சுவர்களிலும் பட்டு எதிரொலிக்கிறது. நீங்களோ வாக்மேனை காதில் மாட்டுக் கொண்டு ஆடிக் கொண்டிருக்கிறீர்கள். முற்றத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் பிணங்களின் மீது கால் பட்டுவிடாமல் கவனமாகப் பார்த்துக் கொண்டு துளசி மாடத்தைச் சுற்றி வருகிறீர்கள். வீட்டின் நடுக்கூடத்தில் ஒரு பெண்ணை நான்கு பேர் கதறக் கதற கற்பழித்துக் கொண்டிருக்கிறார்கள். நீங்களோ உங்கள் குழந்தையின் பள்ளிச் சீருடையை அயர்ன் செய்து கொண்டிருக்கிறீர்கள். உங்களைச் சுற்றி கையில் தட்டேந்தி, காலி வயிற்றில் தட்டிக் காட்டி ஒரு வாய் சோற்றுக்காக உங்களிடம் மன்றாடிக் கொண்டிருக்கிறார்கள். நீங்களோ உண்ட அறுசுவை உணவு செரிக்க வெற்றிலையின் காம்பு கிள்ளி சுண்ணாம்பு தடவிக் கொண்டிருக்கிறீர்கள்.

சிங்கம், புலி மீது பழி போடுகிறது. புலி, நரி மீது பழி போடுகிறது. நரி, ஓநாய் மீது பழி போடுகிறது. முடிவற்றும் நீளும் பச்சிளம் கன்றுகளின் கதறல் செவிப்பறையை அதிரச் செய்கிறது.

தொடரும் எங்கள் வேதனை முடிவுக்கு வர வேண்டுமானால், நீடிக்கும் உங்கள் புறக்கணிப்பு முடிவுக்கு வரவேண்டும். உங்கள் கவனம் எங்கள் பக்கம் திரும்பியாக வேண்டும். நிஜ உலகில் இருந்து தப்பித்து தொலைக்காட்சி வழியாக புதிய உலகங்களுக்குப் போய்க் கொண்டிருக்கும் உங்களை அந்த நுழைவாயிலிலேயே மடக்குவதற்காகத்தான் இந்த முயற்சியை எடுத்திருக்கிறோம். எங்கள் கண்ணீரை நீங்கள் பார்த்தாக வேண்டும். அது தொலைக்காட்சி நடிகர்கள் உகுப்பதைவிடச் சூடானது. எங்கள் ரத்தங்களை நீங்கள் பார்க்க வேண்டும். அது திரைப்பட நடிகர்கள் சிந்தும் ரத்தத்தைவிட சிவப்பானது. இந்த பிரச்னைகளுக்கெல்லாம் உண்மை காரணம் யார் என்பதை நீங்கள் தெரிந்துகொண்டாக வேண்டும். உங்கள் பங்கு என்ன என்பதை நீங்கள் புரிந்துகொண்டாக வேண்டும்.

இதன் முதல் கட்டமாக நாங்கள் சொல்லும் எல்லாரும் கலந்து கொள்ளும் மாதிரியான விவாதம் ஒன்றை தொலைக்காட்சியில் ஒளிபரப்ப வேண்டும். இலங்கை ராணுவ அமைச்சர், விடுதலைப் புலிகள், கிழக்குப் பகுதி இஸ்லாமியர், ஐ.நா.செயலர், இந்திய உள் துறை அமைச்சர், தமிழக முதல்வர், எதிர்கட்சித் தலைவர், காங்கிரஸ், பி.ஜே.பி, தி.மு.க, அதிமுக, மதிமுக எல்லா தரப்பிலிருந்தும் தலைமைப் பதவியில் இருப்பவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வேண்டும். என்ன நடந்தது..? இனி என்ன நடக்க வேண்டும் என்று சொல்ல வேண்டும். இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பாக இருக்க வேண்டும். இன்று வெள்ளிக் கிழமை. வரும் திங்கட்கிழமையே இதை ஆரம்பிக்க வேண்டும்.

யாரையோ வரும்படி கை அசைத்துக் கூப்பிடுகிறார். குட்டியும் செல்வாவும் தொலைக்காட்சி அதிபரை துப்பாக்கி முனையில் அழைத்து வருகிறார்கள்.

அனந்தன் : சொன்னதெல்லாம் கேட்டீங்கல்ல. உங்க நிறுவனத்துல இருக்கறவங்களுக்கு நீங்களே சொல்லுங்க.

அதிபர் (நடுங்கியபடியே) : இவங்க சொன்ன மாதிரியே ஏற்பாடுபண்ணிடுங்க. செலவெல்லாம் பாக்காதீங்க. என்ன கஷ்டம் பட வேண்டியிருந்தாலும் பரவாயில்லை. ரெண்டு நாள்ல நிகழ்ச்சிக்கு ஏற்பாடு பண்ணிடுங்க. நம்ம பில்டிங்கோட மொட்ட மாடிலயே நிகழ்ச்சியை ஏற்பாடு பண்ணுங்க. ஐ.நா. செயலர், இந்திய அமைச்சர்கள், இலங்கை அமைச்சர்கள் எல்லார்கிட்டயும் நான் கெஞ்சிக் கேட்டுக்கறேன். தயவு செஞ்சு நிகழ்ச்சில கலந்துக்கோங்க. இல்லைன்னா என்னைக் கொன்னுடுவாங்க. உங்க எல்லாருக்கும் நிறைய வேலைகள் இருக்கும் இருந்தாலும் ஒரே ஒரு நாளை எனக்காக ஒதுக்குங்க. வீடியோ கான்ஃபிரன்ஸிங் மூலமோ டெலிபோன்லயோ பேசறதெல்லாம் கூடாதாம். நேர்லயே கலந்துக்கணும்னு சொல்றாங்க. தயவு செஞ்சு சிரமத்தைப் பாக்காம வந்திருங்க. என் உசிரு உங்க கைலதான் இருக்கு.

(எம்.டி.யை சற்று ஓரமான அழைத்துச் செல்கிறார்கள். அனந்தன் கேமரா முன்னால் வருகிறார்) : இந்த நிகழ்ச்சியை நாங்கள் நடத்த விரும்புவதற்கு இரண்டு காரணங்கள் இருக்கின்றன. நேற்று நடந்ததைக் கண்டு நாங்கள் பேசாமல் இருந்தோம். எனவே, இன்று எங்களுக்கு நடக்கிறது. இன்று எங்களுக்கு நடப்பதைப் பார்த்து நீங்கள் பேசாமல் இருந்தால் நாளை உங்களுக்கும் நடக்கும். இறைவனின் அருளால் அப்படி ஒன்று நடக்காமல் இருக்கவேண்டும். ஆனால், நம் தெய்வங்கள் முதுமையடைந்துவிட்டன. நம் பிரார்த்தனைகளைக் கேட்கும் சக்தியை இழந்துவிட்டன. நம் வேதனைகளைப் பார்க்கும் சக்தியை இழந்துவிட்டன. இந்தப் பரந்து விரிந்த பூமியில் நமக்கானதை நாமே பார்த்துக் கொள்ளும்படி தனித்துவிடப்பட்டிருக்கிறோம். இன்று நம்மைத் தாங்கி நிற்கும் நிலம் நம்மை ஒன்றிணைக்கிறது. நாளை நம் வேதனைகள் ஒன்றிணைக்கும். மலைச் சரிவில் உருளும் பாறைபோல் ஆகிவிட்டது நம் பூமி. இன்று அழுந்திக் கிடப்பது நாங்கள். நாளை அது நீங்களாக இருப்பீர்கள். நாங்கள் பட்டுத் தெரிந்து கொண்டதை நீங்களாவது பார்த்துத் தெரிந்து கொள்ள வேண்டும். இது முதல் காரணம்.

இரண்டாவதாக, இந்தப் பிரச்னை இந்த அளவுக்கு மோசமானதுக்கு யார் காரணம் என்பது தெரியவரவேண்டும். அவர்கள் கட்டாயம் தண்டிக்கப்படவேண்டும். எங்கள் பாணியில் அவங்களுக்கு தண்டனை கொடுப்பது ரொம்பவும் எளிது. ஆனால், இந்த சமூகத்துக்கு உண்மை தெரிய வேண்டும். இந்த சமூகமே அந்த தண்டனையைத் தர வேண்டும். அதுதான் முக்கியம். அதற்காகத்தான் இந்த நிகழ்ச்சி. நிகழ்ச்சியைத் தவறாமல் பாருங்கள். உங்கள் கருத்துகளை தபாலில் எல்லாம் அனுப்ப வேண்டாம். அதுக்கெல்லாம் நேரம் இல்லை. எஸ்.எம்.எஸ் அனுப்புங்கள். இ.மெயில் அனுப்புங்கள். இலங்கை பிரச்னை பற்றி உங்களிடம் புகைப்படங்கள் இருந்தால் அனுப்புங்கள். வீடியோ கிளிப்பிங்க்ஸ் இருந்தால் அனுப்புங்கள். பொன் ஆபரணத்தில் பதிக்கப்பட்ட வைரக் கல்போல் இருந்த இலங்கை ஒரு சயனைட் குப்பி போல் ஆகிவிட்டது. தாமரை மொட்டுபோல் குவிந்திருந்த இலங்கை இன்று தூக்குக் கயிறுபோல் தொங்கிக் கொண்டிருக்கிறது. கடலில் கலந்த கண்ணீர் துளிபோல் உருத்தெரியாமல் ஆகிக்கொண்டிருக்கிறது. சூரியனின் கதிர்கள் பட்டு கடல் நீர் ஆவியாகி மேகமாகி, குளிர்ந்து காற்றில் மிதந்து, மலைகளில் பொழிந்து நன்னீர் ஆறாக மாறுவதுபோல், அந்த ஒற்றைக் கண்ணீர் துளி கடலில் இருந்து மேலெழ வேண்டும். உலகம் முழுவதற்குமான படிப்பினையின் கரு மேகமாக அது சூல் கொள்ள வேண்டும். சரித்திரத்தின் காற்றில் மிதந்தபடி அலையும் அது நம் மன சாட்சியின் மலைகளால் தடுக்கப்பட்டு சகோதரத்துவத்தின் முடிவற்ற துளிகளைப் பொழிய வேண்டும். அலட்சியத்தின் தரிசு மண்டிக் கிடக்கும் மண்ணில் மனிதாபிமானத்தின் மழை பெய்தாக வேண்டும். அராஜகத்தின் பாறையைப் பிளந்து தன்மானம் தன் தளிரிலைகளை உயிர்ப்பித்தாக வேண்டும்.

(தொடரும்)

No comments:

Post a Comment