காட்சி - 1
சாக்கடை நதி கரை புரண்டு ஓடிக் கொண்டிருக்கிறது. சூரியனின் பிம்பம் சேற்று நீரின் அலைகளில் மாட்டித் தவித்துக்கொண்டிருக்கிறது. குயில் குஞ்சு ஒன்றை காக்கைக் கூட்டம் விரட்டி விரட்டிக் கொத்திக் கொண்டிருந்தது. காக்கைகளை எதிர்க்க வலுவில்லாத தாய்க் குயில் மரக்கிளையில் தத்தளித்ததபடி சோகமாகக் கதறிக் கொண்டிருந்தது. முகம் மட்டும் வெளியில் தெரியும் வகையில் எருமைகள் சாக்கடை நீரில் மெய்மறந்து மிதந்து கொண்டிருந்தன. பன்றிகள் கரையோரத்தில் வாலைச் சுழட்டியபடி மேய்ந்து கொண்டிருந்தன. கிழிந்த உடை அணிந்த சிறுவர்கள் சாக்குப் பையுடன் குப்பை மேட்டைக் கிளறிக் கொண்டிருந்தனர். கரையை ஒட்டிக் கட்டப்பட்ட பிரமாண்ட கட்டடத்தின் மேல் தள கண்ணாடி ஜன்னல் திறக்கப்பட்டு ஒருவர் பாதி குடித்த சிகரெட்டை அணைத்து வீசுகிறார். அதைப் பார்க்கும் ஒரு சிறுவன் அதை எடுக்கப் பாய்கிறான். மற்றவர்களும் பாய்கிறார்கள். சண்டை ஆரம்பிக்கிறது.
மேலே இருந்து சிகரெட்டை வீசியவர் : ஏய்… ஏய்… சண்டை போடாத…
சிறுவர்கள் சண்டை போடுவதை சிறிது நேரம் நிறுத்துகிறார்கள். சட்டென்று ஒருவன் பாய்ந்து துண்டு சிகரெட்டை எடுக்கவே அனைவரும் அவன் மீது பாய்ந்து அமுக்குகிறார்கள்.
மேலே இருப்பவர் : ஏய்… சண்டை போடாதன்னு சொல்றேன்ல…
சிறுவன் : அப்ப எல்லாருக்கும் ஒரு சிகரெட் கொடு.
மேலே இருப்பவர் சிரித்தபடியே பாக்கெட்டில் இருந்து ஐந்தாறு சிகரெட்களை ஒவ்வொன்றாக வீசுகிறார். சிறுவர்கள் பாய்ந்து சென்று பொறுக்கிக் கொள்கின்றனர். ஒருவன் சிகரெட்டைப் பற்றைவைத்து மேலே நிற்பவருக்கு ஸ்டைலாக சல்யூட் அடிக்கிறான். மற்றவர்களும் அவனிடம் வந்து பற்றவைத்துக் கொள்கின்றனர். மேலே நிற்பவர் சிரித்தபடியே கண்ணாடி கதவை மூடுகிறார். அப்போது, அவர் அருகில் ஒரு ஊழியர் வந்து : சார்…உங்களுக்கு செக்யூரிட்டியிடமிருந்து போன் வந்திருக்கிறது என்கிறார்.
சார் : என்னவாம்..?
ஊழியர் : ஃபாதர் அனுப்பினதா சொல்லி நாலுபேர் உங்களைப் பார்க்க வந்திருக்காங்க.
சார் (கைக் கடிகாரத்தைப் பார்க்கிறார்): வரச்சொல்லு.
சரி என்று சொல்லிவிட்டு ஊழியர் செல்கிறார். நீண்ட வராண்டாவில் அவருடைய ஷூ சத்தம் மட்டுமே கேட்கிறது. அவர் கண் பார்வையில் இருந்து மறைந்ததும் சட்டென்று ஏதோ நினைவு வந்தவராக ஊழியரைக் கூப்பிடுகிறார்.
சார் : ரவி…
பார்வையில் இருந்து மறைந்த ஊழியர் மீண்டும் கண் முன் தோன்றுகிறார்.
சார் : எஸ்.கே.யை என் ரூமுக்கு வரச் சொல்லு. வரும்போது நேத்து நான் கொடுத்த ஃபைலையும் எடுத்துட்டு வரச் சொல்லு.
ரவி : சரி சார் .
சொல்லிவிட்டு மறைகிறார்.
சார், தன் கோட்டை சரி செய்துகொண்டு எம்.டி. என்ற போர்ட் மாட்டப்பட்ட அறைக்குள் நுழைகிறார்.
காட்சி - 2
நீண்ட வராண்டாவில் நான்கு பேர் நடந்து வருகிறார்கள். சீருடை அணிந்த ஒரு பணியாளர் அவர்களை வழி நடத்திக் கொண்டு வருகிறார். நான்கு பேரும் ஜிப்பா அணிந்திருக்கின்றனர். சீருடைப் பணியாளர் அவர்களை ஒரு சோபாவில் உட்காரச் சொல்லிவிட்டு போகிறார். நால்வரும் உட்கார்கிறார்கள். அந்த பிரமாண்டமான வராண்டவில் அவர்கள் மட்டுமே இருக்கின்றனர். அப்போது வெளியே படபடவென்று ஏதோ வெடிக்கும் சத்தம் கேட்கிறது. நான்கு பேரும் சட்டென்று மறைவிடம் தேடி ஒளிகிறார்கள். சோபாவுக்குப் பின்னல் ஒளிந்து கொள்ளும் இருவர் இடுப்பில் இருந்து துப்பாக்கியை எடுத்துக் கொள்கிறார்கள். வேறொரு மேஜைக்குப் பின்னால் ஒளிந்திருந்தவர் மெள்ள எட்டிப் பார்க்கிறார். வெடிச் சத்தம் கேட்டதும் காவலர் ஒருவர் என்ன என்று பார்க்க வருகிறார். அவர் கையில் துப்பாக்கி இருப்பதைப் பார்த்ததும் மறைந்திருந்தவர்களில் ஒருவருடைய கை அநிச்சையாக கழுத்தில் இருக்கும் குப்பியை நோக்கி வேகமாக நகர்கிறது.
காவலாளி : யாருப்பா அது ஆபீஸ்ல வந்து பட்டாசு வெடிக்கறது என்று கேட்டபடியே சத்தம் வந்த திசை நோக்கிப் போகிறார்.
குப்பியை நோக்கிப் போன கை மெதுவாக கீழே இறங்குகிறது. வெளியே வந்த துப்பாக்கிகள் இடுப்புக்குள் போகின்றன. பயந்து ஒளிந்து கொண்ட நால்வரும் ஆசுவாசப்பட்டு வெளியே வருகிறார்கள். எதுவும் நடக்காதது போல் அமைதியாக சோஃபாவில் உட்கார்ந்து கொள்கிறார்கள்.
சீருடைப் பணியாளர் எம்.டி.யின் அறையின் கதவை நாசூக்காகத் தட்டுகிறார். உள்ளே இருந்து, கமின் என்ற குரல் கேட்டதும் கதவை லேசாகத் திறந்து தலையை மட்டும் உள்ளே நுழைக்கிறார்.
சீருடை : உங்களைப் பார்க்க ஃபாதர் அனுப்பின…
எம்.டி., குறுக்கிட்டு, அவர்களை வரச் சொல்லும்படி சைகை செய்கிறார்.
சார் : அப்பறம் 4 காஃபி…
பணியாளர் சரி என்பதுபோல் தலை ஆட்டிவிட்டு தலையை வெளியே இழுத்துக் கொள்கிறார். நால்வர் அமர்ந்திருக்கும் அறைக்கு வருகிறார். ஏ.ஸி.அறையிலும் வியர்வை வழிந்தபடி இருக்கும் அவர்களை விசித்திரமாகப் பார்க்கிறார். அவர்களை அழைத்துக் கொண்டு எம்.டி. இருக்கும் அறைக்குப் போகிறார். உள்ளே போகச் சொல்லிவிட்டு திரும்பிச் செல்கிறார். நால்வரும் ஒவ்வொருவராக நுழைகிறார்கள். கடைசியாக நுழைபவர் எம்.டி. இன் - அவுட் என்று எழுதப்பட்டிருக்கும் போர்டில் இன் என்பதை மறைத்து அவுட் என்று ஆக்கிவிட்டு உள்ளே செல்கிறார்.
கர்ப்பக்கிரஹத்தில் கடவுள் சிலை இருப்பதுபோல் எம்.டி. நடுநாயகமாக அமர்ந்திருக்கிறார். அறையின் மங்கலான மஞ்சள் நிற வெளிச்சம் அந்த அறைக்கு ஒருவித கம்பீரத்தையும் ரகசியத்தன்மையையும் கொடுக்கிறது. புற உலகின் சத்தங்கள், நிகழ்வுகளில் இருந்து துண்டிக்கப்பட்ட மர்ம அறைபோல் அது தோற்றமளிக்கிறது.
எம்.டி. (ஸீட்டில் இருந்து எழுந்து நின்று): வாங்க… வாங்க…
நால்வருடனும் கை குலுக்குகிறார். வந்தவர்களில் ஒருவர் மற்றவர்களை அறிமுகம் செய்துவைக்கிறார்.
இது செல்வா… இது குட்டி… இது அழகன்… என் பேரு உங்களுக்குத் தெரியும் நினைக்கறேன்… அனந்தன்
எம்.டி. : தெரியும் தெரியும். உட்காருங்க (இருக்கையை நோக்கிக் கையைக் காட்டுகிறார்)
எம்.டி. : ஃபாதர் வரேன்னு சொல்லி இருந்தாங்களே…
அனந்தன் : வர்றதாத்தான் இருந்தாங்க. கடைசி நேரத்துல பேட்டி எடுக்கன்னு ஏதோ பத்திரிகைல இருந்து வந்தாங்க. நீங்க போயிட்டு வாங்கன்னு சொல்லிட்டாரு.
எம்.டி. : ஹி ஈஸ் ரியலி கிரேட். சர்ச் வேலைகள்… அரசியல் வேலைகள்… எழுத்து வேலைகள்… எப்படித்தான் ஒருத்தரே சமாளிக்கறாரோ…
அனந்தன் : அவர் தூங்கி நாங்க பார்த்ததேயில்லை. உலகமே இருண்டு கிடந்தாலும் அவரோட அறையில மட்டும் எப்பவும் விளக்கு எரிஞ்சுக்கிட்டே இருக்கும்.
எம்.டி : அன்பு, அறிவு, அர்ப்பண உணர்வு... எதுதான் இல்லை அவர்கிட்ட?
அனந்தன் : அதிகாரம் மட்டும் இல்லை…
எம்.டி., சட்டென்று ஏதோ கவலையில் தோய்ந்தவராக பெருமூச்சுவிடுகிறார்.
எம்.டி. : என்ன பண்ண… உலகம் அப்படித்தான் இருக்கு. நல்லவங்க கிட்ட அதிகாரம் இல்ல. அதிகாரத்துல இருக்கறவங்க நல்லவங்களா இருக்கறதில்ல. (மேஜையில் இருக்கும் அழைப்பு மணியை அழுத்துகிறார். பதில் எதுவும் வராமல் போகவே, இண்டர்காம் போனை எடுக்கிறார். அப்போது அவருடைய செல்போன் ஒலிக்கிறது.
எம்.டி. : என்ன எஸ்.கே. எங்க போய்த் தொலைஞ்ச. பத்து மணிக்கு என் ரூம்ல நீ இருக்கணும்னு சொன்னேன்ல.
எஸ்.கே. : நீ மொதல்ல எங்க இருக்க. நான் உன் ரூம் முன்னாலதான் இருக்கேன்.
எம்.டி. : ரூம் முன்னால இருக்கியா..? ஏன் தொறந்துட்டு வரவேண்டியதுதான. ரிப்பன் வெட்டி, திறப்பு விழா நடத்திட்டுத்தான் வருவியா..?
எஸ்.கே. : நான் திறப்புவிழா நடத்தறது இருக்கட்டும் நீ எங்க இருக்க..?
எம்.டி. : என்னடா வம்பாப் போச்சு. உள்ளதான் இருக்கேன்.
எஸ்.கே. : உள்ள இருக்கியா..? தூக்கிட்டாங்களா..? சொல்லவே இல்லையே.
எம்.டி. : உன்னை பக்கத்துல வெச்சுகிட்டிருக்கறதுக்கு இவ்வளவு நாள் விட்டுவெச்சிருக்கறதே அதிசயம்தான்... ரூம்லதான் இருக்கேன். சீக்கிரம் வா.
எஸ்.கே. : ரூமுக்குள்ள இருந்துட்டுத்தான் அவுட்- னுபோட்டு வெச்சிருக்கியா..? என்றபடியே கதவைத் திறந்து பார்க்கிறார்.
எம்.டி. : அவுட்னு போட்டிருக்கா…எழவு கண்ணும் அவுட்டாயிருச்சா…
(அனந்தன், சட்டென்று குட்டியைப் பார்க்கிறார். குட்டி தலையைக் குனிந்து கொள்கிறார்)
எஸ்.கே. : வா வந்து பாரு… யாருக்கு கண்ணு அவுட்டுன்னு தெரியும்.
எம்.டி. : ஓ.கே. அதைவிடு. இவங்கதான் நான் சொன்னேனே…
எஸ்.கே. : என்ன சொன்ன?
வந்தவர்கள் லேசாக அதிர்கிறார்கள்.
எம்.டி. : நேத்துகூடச் சொன்னேனே…
எஸ்.கே. : நேத்துங்கறது 24 மணி நேரம் கொண்ட கால அளவு… நீ காலைல இருந்து பகல் பூரா எவ்வளவோ சொன்ன…ராத்திரில அதைவிட அதிகமா என்னென்னமோ சொன்ன…
எம்.டி. : உன் கிட்ட பேசி பிரயோஜனம் இல்ல. நான் சொன்ன ஃபைலை எடுத்துட்டு வந்தியா..?
எஸ்.கே. : ஆமாம். கொண்டு வந்திருக்கேன்.
எம்.டி. : அந்த ப்ரபோசலை சப்மிட் பண்ணினது இவங்கதான்.
எஸ்கே. : அப்படி தெளிவா சொல்லு. நேத்து சொன்னேனே… முந்தா நேத்து சொன்னேனேன்னு மொட்டையா சொன்னா.
எம்.டி: சரி. தப்புத்தான். நீ மொதல்ல உட்காரு.
சுற்றுமுற்றும் பார்க்கிறார். நாற்காலி எதுவும் இல்லை.
எம்.டி. : உட்காருப்பா…
எஸ்.கே. : எங்க உட்கார..? உன் தலை மேலயா..?
(எம்.டி. அப்போதுதான் சேர் எதுவும் இல்லை என்பதைக் கவனிக்கிறார்.
அப்போது காஃபி எடுத்துக் கொண்டு பணியாளர் உள்ளே வருகிறார். எல்லாருக்கும் கொடுக்கிறார்.
எம்.டி. தன் ஃபிளாஸ்கில் இருந்து இரண்டு கோப்பையில் ஊற்றுகிறார். ஒன்றை எஸ்கேயிடம் தருகிறார்)
எம்.டி (பணியாளரைப் பார்த்து) : பாஸ்… நல்ல நாற்காலி ஒண்ணு எடுத்துட்டு வாங்களேன். உட்கார்ந்தா உடையற மாதிரி, நம்ம எஸ்.கே.க்கு.
பணியாளர் லேசாகச் சிரித்தபடியே காஃபி டிரேயை கக்கத்தில் இடுக்கிக் கொண்டு செல்கிறார். சிறிது நேரத்தில் நாற்காலியுடன் வருகிறார். எஸ்.கே. அதை வாங்கி, எம்.டி.க்கு அருகில் போட்டுக் கொள்கிறார். எல்லாரும் காஃபி குடித்து முடிக்கிறார்கள்.
எம்.டி. : சரி… சொல்லுங்க. என்ன பண்ணலாம்.
அனந்தன் : நீங்கதான் சொல்லணும்.
எம்.டி. : நீங்க சொன்ன கான்செப்ட் நல்லத்தான் இருக்கு. ஆனால், எல்லா ஸ்லாட்டும் ஃபுல்லாகி இருக்கு. எதையுமே இன்னும் நாலைஞ்சு மாசத்துக்கு மாத்த முடியாது. வேணுமானா ஒரு ஆறு மாசம் கழிச்சுப் பார்ப்போமா..?
அனந்தன் : இல்லை. இது இப்பவே செஞ்சாகணும்.
எம்.டி. நீங்க சொல்றதும் கரெக்டுதான். (எஸ்.கே. பக்கம் திரும்பி) ஆனா, விஷயம் ரொம்ப சென்சிட்டிவானது. நிறைய பிரச்னைகள் வரலாம் இல்லையா…
எஸ்.கே. : வரலாம் இல்லை. வரும். நிச்சயமா வரும். அது மட்டுமில்லாம, ஐ.நா. செகரெட்டரி, இந்திய உள்துறை அமைச்சர் இவங்களைக் கூட வர வெச்சிடலாம். ஆனால் தமிழக ஆளுங்கட்சி எதிர்கட்சி பிரதிநிதிகளை ஒரே மேடைல உட்காரவைக்கறது சாத்தியமே இல்லை. ஒண்ணு தெக்க இழுத்தா இன்னொண்ணு வடக்க இழுக்கும்.
அனந்தன் : ஆனா எல்லாரும் வரணும். சொல்றதுக்கு ஒண்ணும் இல்லைன்னா அதையாவது வந்து சொல்லிட்டுப் போகணும்.
எம்.டி : அதெல்லாம் சரிதான். நிச்சயமா எல்லா தரப்பும் பங்கெடுத்தாத்தான் உண்மையை கண்டுபிடிக்க முடியும். அதெல்லாம் கூட எப்படியாவது ஏற்பாடு செஞ்சிடலாம். பிரைம் டைமை ஒதுக்கறதிலகூட பெரிய பிரச்னை எதுவும் இல்லை. ஆனா, இது ஹை வோல்டேஜ் ஒயர். தொட்டா தூக்கி எறிஞ்சிடும்.
அனந்தன் : ஆனா, கட்டாயம் நாலைஞ்சு நாளுக்குள்ள ஒளிபரப்பியாகணும். விளம்பரங்கள் போடாம ஒளிபரப்பறதுனால ஏற்படற இழப்பை நாங்க ஈடுகட்டிடறோம். ஒன் டைம் செட்டில்மெண்ட்டா நிகழ்ச்சி ஆரம்பிக்கறதுக்கு முன்னாலயே கொடுத்துடறோம். நிகழ்ச்சியோட சீரியஸ்னெஸை விளம்பரங்கள் கெடுத்துடும். அதனாலதான் வேண்டாங்கறோம்.
எம்.டி. : பணம் ஒரு பிரச்னையே இல்லை. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரம் வர்ற பணத்தை இந்த விஷயத்துக்காக விட்டுக் கொடுக்கறதுல எந்த வருத்தமும் கிடையாது. உலக மக்கள் முன்னால, இலங்கைல திரைமறைவுல நடந்த விஷயங்களை அம்பலப்படுத்தறதுங்கறதுக்காக எவ்வளவு காசை வேணும்னாலும் இழக்கலாம். தப்பே இல்லை. அதுவும்போக தொலைகாட்சிலயும் திரைப்படங்கள்லயும் பொழுதுபோக்குக்கே அதிக முக்கியத்தும் தந்துட்டு வர்றதா நிறைய புகார்கள் இருந்துட்டுத்தான் இருக்கு. நீங்கள் சொல்ற மாதிரி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பறது அந்தக் கெட்ட பெயரை கொஞ்சம் குறைக்க உதவும். அதுல எந்த சந்தேகமும் இல்லை. ஆனா, என்ன பிரச்னைன்னா இந்த நிகழ்ச்சில எல்லாருமே வெளிப்படையா பேசணும்னு எதிர்பார்க்கறீங்க. ஒருத்தர் அப்படி பேசினா இன்னொரு கூட்டத்துக்கு கோபம் வரும். ஸ்டேஷனையே அடிச்சி நொறுக்கிடுவாங்க. அதுதான் யோசிக்க வேண்டியிருக்குது. நாட்டுல சண்டை சச்சரவு பெரிசானா அப்பறம் அது சட்ட ஒழுங்கு பிரச்னையாகிடும். ஃபாதர் கிட்ட எல்லாம் தெளிவா சொன்னேனே… அவர் உங்ககிட்ட எதுவும் சொல்லலையா..?
அனந்தன் : சொன்னாங்க. ஆனா, எங்களுக்கு இந்த நிகழ்ச்சி இந்த வடிவத்துலதான் எப்படியாவது நடந்தாகணும்.
எஸ்.கே. : உங்களோட நிலைமையும் வேதனையும் எங்களுக்குப் புரியுது. ஆனா, எங்க நிலைமையையும் கொஞ்சம் யோசிச்சுப் பாருங்க. நீங்க தப்பா நினைக்கலைன்னா ஒண்ணு கேட்கட்டுமா..? இப்போ போய் இதை ஒளி பரப்பறதுல என்ன பிரயோஜனம் இருக்கும்? ஒருவேளை பெரிசா எதுவும் நடக்கறதுக்கு முன்னாலயே இதை ஏற்பாடு செஞ்சிருந்தா ஏதாவது பலன் இருந்திருக்கலாம்.
அனந்தன் : அப்போ நாங்க இருந்த நிலமை உங்களுக்குத் தெரிந்திஞ்சிருக்கும்னு நினைக்கறேன்.
எம்.டி. : அது சரிதான். அதை எனக்குப் புரிஞ்சிக்க முடியுது. ஆனா இப்போ உலகம் வேகமா வேற திசையில ஓட ஆரம்பிச்சிடிச்சு. கடிகாரத்தைத் திருப்பி பின்னால கொண்டு போறது ரொம்பக் கஷ்டம்.
அனந்தன் : எல்லாம் முடிஞ்சிருச்சுன்னு நினைக்கறீங்களா..?
எம்.டி. : நான் அந்த அர்த்தத்துல சொல்லலை. இப்போ இதை ஒளிபரப்பறதுன்னா அதுக்கு ஒரு காரணம் ஏதாவது வேணுமே...
அனந்தன் : காயம் ஆறாம இருக்கற வரைக்கும் சிகிச்சைக்கான அவசியம் இருந்துட்டேதான் இருக்கும். இந்தப் பிரச்னை இவ்வளவு சிக்கலாகறதுக்கு என்ன காரணம்னு யோசிச்சுப் பாருங்க. ஒவ்வொருத்தரும் அவங்க தரப்பு நியாயத்தை மட்டுமே பேசிட்டு இருந்திருக்காங்க. பொதுவா, நடந்து முடிச்ச, நடந்துகிட்டிருக்கற சம்பவங்களையெல்லாம் அலசி ஆராய்ஞ்சு, அதுக்கு அப்பறம்தான் ஒருத்தர் ஒரு அரசியல் நிலைப்பாடை எடுக்கணும். ஆனால், இங்க என்ன நடக்குதுன்னா அரசியல் நிலைப்பாடை சொந்த விருப்பு வெறுப்பு, சூழல் சார்ந்து மொதல்லயே எடுத்துடறாங்க. அதுக்கு அப்பறம் கண்ணைக் கட்டிவிட்ட குதிரைதான். தன்னோட ஆட்கள் செஞ்சது எல்லாமே சரி... அடுத்தவங்க செய்யறது எல்லாமே தப்பு அப்படின்னு செயல்பட ஆரம்பிச்சிடறாங்க. அதனால உண்மை என்பது தெரியவராமலேயே போயிடுது. அது சிக்கலை ரொம்பவும் பெரிசாக்கிடுது. அதனாலதான் நாங்க இந்த நிகழ்ச்சியில எல்லா தரப்பையும் பேசவிடலாம்னு முடிவு செஞ்சிருக்கிறோம். மக்களுக்கு உண்மை அப்பத்தான் தெரியவரும். சம்பந்தப்பட்டவங்களுமே கூட தங்களோட நிலையை மறுபரிசீலனை பண்ணிக்க ஒரு வழி கிடைக்கும்.
எம்.டி. (சிரித்தபடியே) : மக்கள் கிட்ட சொல்ல வேண்டிய பதிலை அழகா சொல்லிட்டீங்க. என்கிட்ட உண்மையைச் சொல்லுங்க.
அனந்தன் (சிறிது சுதாரித்தபடியே) : உங்களுக்கும் இதே பதில்தான்.
எம்.டி. : எனக்கு உங்களை நல்லா தெரியும். ஃபாதரை அதைவிட நல்லாவே தெரியும்.
அனந்தன் (குழம்பியதுபோல் நடித்து) : நீங்க சொல்ல வர்றது எனக்குப் புரியலையே...
எம்.டி. : ஃபாதர் ஏதோ ரகசிய டைரி ஒண்ணு கிடைச்சதா சொல்லிட்டிருந்தாரே.
அனந்தன் (சிறிது அதிர்ந்து) : டைரியா..?
எம்.டி. : ஆமாம். ரொம்ப ரொம்ப முக்கியமான ஒருத்தரோட டைரி. கூடவே மரண வாக்குமூலமும் கூட பதிவு செஞ்சதா சொன்னாரே.
அனந்தன் (மற்றவர்களைப் பார்த்தபடியே) : எங்ககிட்ட எதுவும் சொல்லலியே.
எம்.டி. : அப்படியா. நீங்க சொல்றதை நான் நம்பிட்டேன்.
அனந்தன் சிரிக்கிறார். மற்றவர்களும் லேசாகப் புன்னகைக்கிறார்கள். சிறிது நேரம் அனைவரும் ஆழ்ந்த சிந்தனையில் ஆழ்ந்ததுபோல் எதுவும் பேசாமல் இருக்கிறார்கள்.
அனந்தன் (மெள்ள இருமிவிட்டு) : மரண வாக்குமூலம் இல்லை. கன்ஃபெஷன்.
எம்.டி (உற்சாகத்துடன் சற்று முன் பக்கம் குனிந்து) : அதைக்கொண்டு வாங்க. மத்த எல்லா நிகழ்ச்சியையும் அடியோட நிறுத்திட்டு 24 மணி நேரமும் அதை மட்டுமே ஒளிபரப்பறேன். உலகத்துல ஒரு சேனல்விடாம ஒளிபரப்பாக ஏற்பாடும் செய்யறேன்.
அனந்தன் : அதை எப்படி வெளிய சொல்ல முடியும். முதலாவதா அது கன்ஃபெஷனா சொல்லியிருக்கார். எனவே, ஃபாதரால அதை வெளிய சொல்லவே முடியாது. ரெண்டாவது அப்படியே அவர் சொன்னாலும் யாரும் நம்பமாட்டாங்க. அதுக்கு எந்த ஆதாரத்தை கொடுக்க முடியும் சொல்லுங்க. அதுமட்டுமில்லாம அது ஒரு பஸ்மாசுரன் கதை. இதுக்கு மேல இதைப் பத்தி எதுவும் சொல்ல முடியாது. இந்த நிகழ்ச்சியை இந்த வடிவத்துலதான் செய்யணும். தயவு செஞ்சு காரணத்தை மட்டும் கேட்காதீங்க. ஆனா, எங்களை நம்புங்க. இப்ப இதைச் செஞ்சாகணும். மக்கள் ரொம்பவும் சோர்ந்து போயிருக்காங்க. சில கணக்குகளை வேற தீர்க்க வேண்டியிருக்கு. நெட்வொர்க்கை பலப்படுத்தியாகணும்.
எம்.டி.: நான் இன்னொரு விஷயம் சொன்னா தப்பா நினைக்கமாட்டீங்களே. வேற சேனலை வேணும்னா அப்ரோச் பண்ணிப் பாருங்களேன். அவங்களுக்கு எங்க அளவுக்குப் பிரச்னை வராது. நாங்க வேணும்னா ரெகமண்ட் பண்றோம்.
அனந்தன் : வேற சேனல் தயாராத்தான் இருக்காங்க. ஆனா, உங்களுக்கு மக்கள் மத்தில இருக்கற செல்வாக்கு அவங்களுக்கு கிடையாது. அந்த நிகழ்ச்சியை உலகத்துல இருக்கற எல்லாரும் பாக்கணுங்கறதுதான் எங்க நோக்கமே.
எம்.டி. : எங்க சேனலுக்கு நல்ல ரீச் இருக்குங்கறது உண்மைதான். ஆனா, இந்த மாதிரியான விஷயங்களை உட்கார்ந்து பார்ப்பாங்களான்னுதான் சந்தேகமா இருக்கு.
அனந்தன் : அதுக்குத்தான் சில கிம்மிக்ஸெல்லாம் பண்ணறோமே. உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக ஒருவர் தீக்குளித்து எரிவதை நேரடி ஒளிபரப்பாகக் காட்டப்போகிறோம்னு விளம்பரமே தரப்போறோமே. அது அவங்களை கட்டிப்போடாதா என்ன..? அவங்களுக்கான வேடிக்கை, திரில்லர் அம்சம் அதுல இருக்கே. நிச்சயம் உட்கார்ந்து பார்ப்பாங்க.
எஸ்.கே. : ஆமாம் நான் அது பத்தித்தான் கேட்கணும்னு நினைச்சேன். நிகழ்ச்சில குற்றவாளியா அறிவிக்கப்படுகிறவரை நிஜமாவே தீ வெக்கப் போறோமா..?
அனந்தன் : அவங்கல்லாம் பாவம்னு நினைக்கறீங்களா..? அப்படி தண்டிக்ககூடாதுன்னு நினைக்கறீங்களா..?
எஸ்.கே. : அப்படியில்லை... நான் என்ன சொல்றேன்னா... இந்த விஷயத்துல எல்லாருமேதான் தப்பு பண்ணியிருக்காங்க. வேடிக்கை பார்த்த மக்கள் உட்பட. அதனால, உங்களில் பாவம் செய்யாதவர் முதலில் கல் எறியுங்கள் அப்படின்னு க்ளைமாக்ஸ்ல சொல்லிட்டு நிகழ்ச்சியை சாத்விகமா முடிச்சிடுவோம். ஒரு பரபரப்பு வேணுங்கறதுக்காக வேணும்னா தீவைத்துக் கொல்வோம் அப்படிங்கறதை விளம்பரங்கள்ல மட்டும் பயன்படுத்திப்போம். இதை மொதல்ல பங்கெடுக்க வர்றவங்ககிட்ட சொல்லிடுவோம்.
அனந்தன் (குறுக்கிட்டு) : மொத்தம் 80,000 பேர் துள்ளத் துடிக்கப் படுகொலை செய்யப்பட்டிருக்காங்க. ரெண்டு லட்சத்துக்கும் மேல படு காயம். பத்து லட்சத்துக்கு மேல அகதிகள்… புள்ளிவிவரங்கள் உங்களுக்குத் தெரியாதா என்ன..?
எஸ்.கே. : அது சரிதான். ஆனா, நிகழ்ச்சிக்குக் கூப்பிட்டுட்டு வர்றவங்களைக் கொல்றது எல்லாம் ஏதோ உங்களுக்கு விளையாட்டா ஆகிப் போச்சு. நிகழ்ச்சில் பங்கெடுக்க எங்களை நம்பி வர்றவங்களை இப்படி நடத்தறதை என்னால நினைச்சே பாக்க முடியலை. உடம்பெல்லாம் பதறுது.
அனந்தன் : இதைத்தான் நாங்களும் எதிர்பாக்கறோம். இலங்கைல ஆயிரக்கணக்கானவங்க செத்தபோது ஏற்படாத வலி, உங்களை நம்பி வர்ற ஒருத்தர் இறந்தா ஏற்படுதுன்னு சொல்றீங்க பாருங்க. அதுதான் நாங்க ஏற்படுத்த விரும்பற பாதிப்பே.
எம்.டி. : அதெல்லாம் சரிதான். ஆனா இப்ப நாங்க இருக்கற நிலைமையையும் நாடு இருக்கற நிலைமையையும் பார்க்கும்போது இந்த ப்ராஜெக்டை நாங்க எடுத்துக்க முடியாது. சாரி. தப்பா நினைச்சுக்காதீங்க.
அனந்தன் : அப்ப இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்ப வேற வழியே கிடையாதா..?
எம்.டி. : ஒண்ணு நான் நாளைக்கே ஒளிபரப்புத் துறை அமைச்சராகவோ பிரதமராகவோ ஆகிட்டா, அது முடியலாம். அது கூட சந்தேகம்தான். ஆனா, இன்னொரு வழி இருக்கு.
அனந்தன் : என்ன வழின்னு சொல்லுங்க. எவ்வளவு கஷ்டம்னாலும் செஞ்சு முடிச்சிடலாம்.
எம்.டி. : கஷ்டமெல்லாம் படவே வேண்டாம். நீங்க என்னைக் கடத்திட்டுப் போயிட்டீங்கன்னா அதை வெச்சு மிரட்டியே இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பிடலாம். (எஸ்.கே. பக்கம் திரும்பி) என்னை கொன்னுடுவேன்னு மிரட்டினா இவங்க சொல்ற நிகழ்ச்சியை போட்டுருவல்ல…
எஸ்.கே. (லேசாகச் சிரித்தபடியே) போடுவேன். ஆனா, மொதல்ல கொல்லுங்க. அப்பத்தான் போடுவோம்ன்னு சொல்லுவேன்.
எம்.டி. (எஸ்.கே.யை அடிக்கப் போவதுபோல் கையை ஒங்கி): அடப்பாவி… ரெடியாத்தான் இருக்கியா..?
அப்போது எம்.டி.யின் செல்போன் ஒலிக்கிறது. வந்தவர்களிடம் மன்னிப்புக் கேட்டபடி எழுந்து பின்னால் சென்று மெதுவாக பேசுகிறார். சிறிது நேரம் கழித்து திரும்புகிறார்.
எம்.டி : சரி… உங்களைச் சந்திச்சதுல ரொம்ப சந்தோஷம். வேற ஏதாவது உதவி தேவைப்பட்டா தயங்காம சொல்லுங்க. அப்பறம் தமிழ்நாட்டுக்கு வந்தா கட்டாயம் எனக்கு தகவல் சொல்லுங்க. (கை குலுக்கி வழி அனுப்பும் நோக்கில் கோட்டை சரி செய்து கொள்கிறார்).
நால்வரும் அசையாமல் அவரையே உற்றுப் பார்க்கிறார்கள். எம்.டி. லேசாக தர்மசங்கடப்பட்டபடியே எஸ்.கே.யைப் பார்த்து கண்ணைக் காட்டி அழைத்துச் செல்லும்படிச் சொல்கிறார். எஸ்கே.யும் எழுந்திருக்கிறார்.
நால்வரில் இருவர் மட்டும் எழுந்துகொள்கிறார்கள். கை குலுக்கத்தான் வருவதாக நினைத்து எம்.டி. கையை நீட்டுகிறார். ஆனால், அவர்கள் இருவரும் எம்.டி.க்கு இரண்டு பக்கத்தில் போய் நிற்கிறார்கள். அவருடைய தோளில் கையைப் போடுகிறார்கள். லேசாக எரிச்சலும் அதிர்ச்சியும் அடையும் அவர் கையை தட்டிவிட முயலுகிறார்.
குட்டி : வாங்க பாஸ். போகலாம்.
(தொடரும்)
No comments:
Post a Comment